25 June 2016

நடிகை நிஷாவின் உண்மைக் கதை

உலகப் புகழ்பெற்ற நாகூர் தர்கா நாகப்பட்டினத்தில் இருக்கிறது. வரலாறு படைக்கும் அந்தப் புண்ணிய பூமியில் இன்னொரு மனித வரலாறும் அரங்கேற்றம் காண்கிறது. 


மனநோய் முற்றிய அனாதைகள், நாதியற்ற முதியோர்கள், கைகால் விளங்காதவர்கள், ஊனமுற்றவர்கள், தீர்க்க முடியாத நோய் கண்டவர்களின் புகலிடமாகவும் நாகூர் தர்கா மாறி வருகிறது. அண்மைய காலங்களில் அதுவும் ஒரு வழக்கத்தில் ஒரு பழக்கமாகவும் பரிணாமம் கண்டு வருகிறது. 


முடியாத நிலையில் இருக்கும் அந்த ஜீவன்களுக்கு, நாகூர் தர்காவின் தர்மகர்த்தாக்களும் நிறைய உதவிகள் செய்கிறார்கள். செய்தும் வருகிறார்கள். அந்தப் பிரச்சினை அப்படியே இருக்கட்டும். அங்கே நடந்த வேறு ஒரு கதையைக் கொண்டு வருகிறேன். நெஞ்சைப் பிழிந்து எடுக்கும் கதை. படித்த பிறகு உங்கள் மனசும் கனத்துப் போகும்.

தமிழ்ச் சினிமாவில் கொடிகட்டிப் பறந்தவர்

கமலஹாசனுடன் டிக்…டிக்….டிக் (1981) படத்தில் கதாநாயகியாக நடித்த பிரபலமான நடிகை; ரஜினிகாந்தின் 100ஆவது படமான ஸ்ரீராகவேந்திரர் (1985) படத்தில் கதாநாயகியாக நடித்தவர்; பாலசந்தரின் கல்யாண அகதிகள் (1986); ஐயர் தி கிரேட் (1990); இளமை இதோ இதோ; முயலுக்கு மூணு கால் (1980); மானாமதுரை மல்லி; எனக்காகக் காத்திரு போன்ற பல தமிழ்ப் படங்களில் கதாநாயகியாக நடித்தவர். ஒரு காலத்தில் தமிழ்ச் சினிமாவில் கொடிகட்டிப் பறந்தவர். அப்படி புகழ் வெளிச்சத்தில் நனைந்த ஒரு கதாநாயகி, நாகூர் தர்கா வாசலில் ஈ, எறும்பு மொய்க்கச் சாகக் கிடந்தார் என்பதை உங்களால் நம்ப முடிகிறதா. அப்படி அனாதையாகக் கிடந்தவர் பிரபல நடிகை நிஷா என்கிற நூர் நிஷா. அவரை யாரும் அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. தவிர அவரை யாருக்கும் அடையாளம் தெரியவில்லை. அதுதான் சரி. ஆறுநாட்கள் அனாதையாகக் கிடந்து இருக்கிறார். இளமை இதோ இதோ என்று ஆடிப் பாடிய அவரின் இளமையை எய்ட்ஸ் நோய் உருக்குலைத்துச் சீரழித்து விட்டது.

நிஷா கேட்க ஆள் இல்லாமல் சாகக் கிடந்தது எங்கே தெரியுமா. அவர் பிறந்து வளர்ந்த அதே நாகூரில்தான். அது ஓர் அதிர்ச்சியான செய்தி. ஆனால் அதைவிட இன்னும் ஒரு பெரிய அதிர்ச்சி என்ன தெரியுமா.

அவருடைய அப்பா, அத்தை, பெரியப்பா என ஒரு பெரிய உறவுப் பட்டாளமே அந்த ஊரில் வசதியுடன் வாழ்ந்து வந்து இருக்கிறது. அதாவது அவர் சாகக் கிடக்கும் போது அவருடைய சொந்த பந்தங்கள் அவரை அனாதையாக விட்டுவிட்டு அதே நாகூரில் தான் வாழ்ந்து இருக்கிறார்கள்.

காய்ந்த கருவாடாகக் கட்டிலில் கிடந்த பிரபல நடிகை

இதைவிட வேறு என்ன அதிர்ச்சியான செய்தி வேண்டும்... சொல்லுங்கள். பின்னர் ஒரு முஸ்லிம் அமைப்பின் உதவியுடன் நிஷாவைச் சென்னை அரசு மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்து இருக்கிறார்கள்.

செய்தி அறிந்த பத்திரிகையாளர்கள் அவரைப் போய் பார்த்து இருக்கிறார்கள். காய்ந்த கருவாடாகக் கட்டிலில் கிடந்து இருக்கிறார். இளமைக் காலங்களில் நடித்த நிஷாவா இவர் என்று பத்திரிகையாளர்கள் திகைத்துப் போய் இருக்கிறார்கள்.

நடிகை நிஷா அவர்களைப் பார்த்ததும் “சார்! சார்! என்னை போட்டோ எடுங்க சார்! என் நிலையைப் பற்றி பத்திரிகையில் எழுதி என்னைக் காப்பாத்துங்க சார். நான் மறுபடியும் நடிக்கணும் சார்’ என்று கதறி அழுது இருக்கிறார். சினிமா ஒளி வெள்ளத்தில் குளித்த ஒரு ஜீவன், இப்படி தன்னை ஒரு போட்டோ எடுக்கும்படி கெஞ்சி இருக்கிறதே. நம்பவே முடியவில்லை.

அந்தப் பத்திரிகைகளின் செய்திகளையும் இணையங்களின் தகவல்களையும் நானும் இங்கே சான்றுகளாக உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

ஒரு நடிகை எப்படி வாழக் கூடாது என்பதற்கு இந்த இளம் நடிகை நிஷாவை ஓர் உதாரணமாகச் சொல்லலாம். நடிகர் விவேக் ஒரு வசனம் பேசுவார். எப்படி இருந்த நான்… இப்படி ஆயிட்டேன்... என்கிற வசனம். எந்தப் படம் என்று தெரியவில்லை. ஆனால் அந்த வசனம் இப்போதைக்கு நிஷா என்கிற அந்தச் சினிமா நடிகைக்கும் மிகச் சரியாகப் பொருந்தி வருகிறது. நிஷா இப்போது இல்லை. அவர் இறந்து விட்டார். இறந்து சில ஆண்டுகள் ஆகின்றன.

மருத்துவமனையில் எலும்பும் தோலுமாய்க் கிடந்த நிஷாவின் பேச்சில் ஒரு நடிகைக்கு உரிய நளினம் கொஞ்சமும் குறையவில்லை. கூடவே குரலில் சோகத்தையும் கொட்டிக் குழைத்துப் பேசி இருக்கிறார்.

அம்மா அப்பாவுக்குச் சின்ன சண்டை

”எனக்குச் சொந்த ஊர் இந்த நாகூர்தான். என் அப்பா பேர் அப்துல் ஜப்பார். அவருடைய முதல் மனைவிக்குப் பிறந்த பெண்தான் நான். என் அம்மாவின் பெயர் பேபி. நான் குழந்தையாக இருந்த போது, என் அம்மா அப்பாவுக்குச் சின்ன சண்டை. அதனாலே என் அம்மா என்னைத் தூக்கிட்டு சென்னைக்கு வந்துட்டாங்க. அப்புறம் என் அம்மா என்னை வளர்த்து சினிமாவில் நடிக்க வச்சாங்க. நானும் பல படங்களில் ஹீரோயினா நடிச்சேன்.

நடிகர் கமலோடு ‘டிக்…டிக்….டிக்’ படம்... ரஜினி சாரோட ‘ஸ்ரீராகவேந்திரர்’ படம்... பாலசந்தர் சாரோட ‘கல்யாண அகதிகள்’ படம். இன்னும் விசு சார் படம், சந்திரசேகர் சார் படங்களில் எல்லாம் நடித்து இருக்கிறேன்’’ என்று தொடர்ந்தார்.

அம்மா இறந்த பிறகு அந்தத் துக்கத்தில் சரியாகச் சாப்பிடாமல் இளைச்சுப் போயிட்டேன். நடிக்கிறதையும் விட்டுட்டேன். பேங்கில் சேமிச்சு வைச்சு இருந்த பணம் எல்லாம் கரைஞ்சு போயிடுச்சு. நிறைய பேர் சான்ஸ் தரேன் சான்ஸ் தரேன்னு சொல்லி நல்லா ஏமாத்திட்டாங்க. சென்னையில் உறவுன்னு சொல்லிக் கொள்ள எனக்கு இப்ப ஒருத்தரும் இல்லை. அனாதையாக இருக்கிற எனக்கு உதவி செய்யவும் ஒரு ஆள்கூட இல்லை.

நடிகர் சங்கத் தலைவராக இருந்த விஜயகாந்திடம் ஒரு தடவை உதவி கேட்டுப் போனேன். ‘உனக்கு சினிமாவில் சான்ஸ் கிடைக்கலேன்னா... பேசாம... டி.வி.யில் போய் நடிக்க வேண்டியது தானே... அப்படினு சொல்லி என்னை வெறும் கையோட திருப்பி அனுப்பி வச்சிட்டார். ஒரு பைசா கூட கொடுக்கலை சார்...’ குலுங்கிக் குலுங்கி அழுதார்.

நடிகர் சுமன், சந்திரசேகர், நடிகை ராதிகா எல்லோருமே என் மேல் ரொம்பப் பாசமா இருப்பாங்க. நான் இப்படி படுத்த படுக்கையாகக் கிடப்பது அவங்களுக்குத் தெரியுமோ என்னமோ தெரியலை” என்று சொல்லிக் கண்ணீர்க் கடலில் மிதந்தார்.

பெற்ற தகப்பனின் கண்ணுக்கு முன்னாலே

‘உங்கள் அப்பா, மற்ற சொந்தக்காரர்கள் ஏன் உங்களை ஏற்க மறுக்கிறார்கள்?’ என்று பத்திரிகையாளர்கள் கேட்டார்கள். அதைக் கேட்டதும் சற்று கோபப்பட்ட நிஷா ”நான் வசதியாக இருந்த காலத்தில் என்னிடம் நிறைய வாங்கிக் கொண்ட அவர்கள் இப்போது என்னைக் கண்டு கொள்ள மாட்டேன் என்கிறார்கள். பெற்ற தகப்பனின் கண்ணுக்கு முன்னாலே ரோட்டில் ஈ, எறும்பு மொய்க்க அனாதையாகக் கிடக்கிற நிலைமை என்னைத் தவிர வேறு யாருக்கும் வரக் கூடாது சார்... என்றவர் குரல் உடைந்து போய் அழத் தொடங்கினார்.

அதன் பிறகு ”சார் தப்பா நினைக்காதீங்க. என் கையில் சுத்தமாக காசே இல்லை சார்... ஒரு முட்டை புரோட்டா சாப்பிடணும் போல ஆசையாக இருக்கு சார்... ஒண்னு வாங்கிக் கொடுத்துட்டுப் போங்களேன் சார்... ப்ளீஸ்... என்று கெஞ்சி இருக்கிறார். இலட்சம் இலட்சமாகச் சம்பாதித்த ஒரு பெண், ஒரு புரோட்டா ரொட்டிக்காகக் கெஞ்சி இருக்கிற நிலைமையைப் பாருங்கள். அழுகை வருகிறது.

நடிகை நிஷாவிடம் பத்திரிகையாளர்கள் பேசிக் கொண்டு இருந்த போது நர்ஸ் ஒருவர் வந்து இருக்கிறார். அவர்களைத் தனியாக அழைத்தார். ‘‘அந்த அம்மாவுக்கு எச்.ஐ.வி. பாஸிட்டிவ்னு ரிசல்ட் வந்திருக்கு. அவங்களை தாம்பரத்தில் உள்ள எய்ட்ஸ் நோயாளி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கணும். முடிந்தால் நீங்கள் ஏற்பாடு செய்யுங்களேன்... என்று நர்ஸ் உதவி கேட்டு இருக்கிறார்.

அதன் பிறகு நிஷாவின் தந்தை அப்துல் ஜப்பாரைப் பத்திரிகையாளர்கள் சந்தித்துப் பேசி இருக்கிறார்கள். அதற்கு அவர் ‘நிஷா எனக்குப் பிறந்தவள்தான். அவளோட அம்மா பேபியை நான் காதல் பண்ணித் தான் கல்யாணம் பண்ணிகிட்டேன். அதனால் என் பெற்றோர் என்னை வீட்டை விட்டு விரட்டி அடிச்சிட்டாங்க. அப்ப பிறந்தவதான் நிஷா. ‘கொஞ்ச நாள் பொறுத்துக்கச் சொன்னேன். நான் சொன்னதைக் கேட்காமல் குழந்தையைத் தூக்கிக்கிட்டு ராத்திரியோட ராத்திரியா சென்னைக்கு ஓடிப் போயிட்டா.

மகள் நிஷாவை கண்ணில் காட்டவில்லை

அதன் பிறகு பேபியைத் தேடி அலைஞ்சு கடைசியில் கோடம்பாக்கத்தில் கண்டுபிடிச்சேன். எனக்குத் தெரியாமல் அடிக்கடி அவள் வீடு மாற ஆரம்பிச்சா. ஜலீல்னு ஒருத்தரை அவள் கல்யாணம் பண்ணிக்கிட்டதாகச் சொன்னாள். மகள் நிஷாவை என் கண்ணில் காட்டாமலே மறைச்சிட்டாள். பேபிக்கு பல பேரோட தவறான தொடர்பு இருந்து இருக்கிறது. எனக்குத் தெரிஞ்ச பிறகு நான் ஒதுங்கிட்டேன். அப்புறம் நிஷாவை சினிமாவில் நடிக்க வைச்சு இருக்கா. பணம் வர ஆரம்பிச்சு இருக்கு... என்று தொடர்ந்தார்.

ஒரு நாள் பேபி என்னைப் பார்த்து ‘‘உனக்கு ஊரில் பல பொம்பிளைங்க சகவாசம் இருக்கு. இனிமே இங்கே வராதேன்னு சொல்லி என்னை விரட்டி அடிச்சிட்டா... என்றார்.

மீண்டும் தொடர்ந்த அவர் ‘‘பேபி இறந்தபோது எனக்கு யாரும் தகவல் சொல்லவில்லை. என் அண்ணன் அங்கே ஒரு தடவை போய் இருக்கிறார். அப்போது ‘எனக்கு அப்பாவே வேண்டாம்னு சொல்லிட்டேன். அப்புறம் நீங்க பெரியப்பா எதுக்குன்னு சொல்லி அவரை நிஷா விரட்டி இருக்கா. இப்ப நோய் வந்து சொந்தம் கொண்டாட வந்தா அவளை யாருங்க ஏத்துக்குவாங்க. நானே என் தங்கச்சி வீட்டில் ஓசிச் சாப்பாடு சாப்பிடறேன். இதில் அவளையும் வச்சி எப்படிங்க காப்பாத்த முடியும்?’’ என்றார் அப்துல் ஜப்பார்.

நிஷாவின் பெரியப்பா அப்துல் ஹமீத் சென்னையில் இருந்தார். அவரையும் பத்திரிகையாளர்கள் விடவில்லை. சந்தித்து இருக்கிறார்கள். அவர் இப்படி சொல்லி இருக்கிறார். ‘‘சென்னை சாந்தோமில் சூப்பர் மார்க்கெட் வச்சிருக்கிற முகமது அலியும், ரபீக் என்பவரும் நிஷாவை ஆண்டு அனுபவிச்சிட்டாங்க... அப்புறம் இங்கே நாகூர்ல கொண்டாந்து விட்டுட்டுப் போயிட்டாங்க. இதுல நாங்க எதுவும் செய்ய முடியாதுங்க’’ என்றார்.

நாகூர் ஜமாத் தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான நிஜாமுதீன், ‘‘ஒரு நடிகை எப்படி வாழக் கூடாது என்பதற்கு உதாரணம் இந்த நிஷா. இப்போ வருத்தப்பட்டு எந்தப் புண்ணியமும் இல்லை’’ என்று சுருக்கமாக முடித்துக் கொண்டார்.

நிஷாவின் அம்மா இறந்த போது உறவுக்காரர்கள் வரவில்லை

‘சென்னை சாந்தோமில் சூப்பர் மார்க்கெட் வைத்து இருக்கும் அலிபாய் என்கிற முகமது அலியை கடைசியாகத் தொடர்பு கொண்டு கேட்டு இருக்கிறார்கள். அதற்கு அவர், ’அந்தப் பொண்ணும் அவங்க அம்மாவும் இங்கே அனாதைகளாக இருந்தார்கள். அப்போது உதவிகள் செய்தோம்.

நிஷாவின் அம்மா இறந்தபோது கூட உறவுக்காரங்க யாரும் வரவில்லை. இவர்களுக்கு உதவப் போய் இப்போது எங்களுக்குத் தான் கெட்ட பெயர். உடல்நிலை சரியில்லாத நிஷா அவருடைய நகை ஒன்றை அடகு வைத்து இருக்கிறார். அந்தப் பணத்தில்தான் நிஷாவை நாகூரில் இருக்கும் அவளோட அப்பாகிட்ட கொண்டு போய் விட்டுவரச் சொன்னோம்.

நாகூரில் உள்ள நிஷாவின் அப்பாவும் சொந்தக்காரர்களும் அவரை ஏற்க மறுத்து விட்டார்கள். அதனால் நிஷாவே தன்னை நாகூர் தர்காவில் விடச்சொல்லி இருக்கிறார். அதனால் தான் நாகூர் தர்காவில் விட்டு விட்டு வந்தோம்.

நிஷா பல்லாவரத்தில் இருந்த போது அவருடைய எதிர் வீட்டில் மகியம்மா என்பவர் ஒருவர் இருந்து இருக்கிறார். அவரிடம்தான் மீதி நகைகளை நிஷா கொடுத்து விட்டுச் சென்று இருக்கிறார்...’ என்று முகமது அலி சொன்னார்.

மகியம்மாவையும் பத்திரிகையாளர்கள் விடவில்லை. மகியம்மா சொன்ன பதில்கள். ‘என்னிடம் மொத்தம் மூணு பவுன் நகையைத்தான் நிஷா கொடுத்து வைத்து இருந்தார். அதற்கு பதினான்காயிரம் ரூபாய் பணம் கொடுத்து விட்டேன். அப்புறம் இருபத்து நான்கு புடைவைகளைக் கொடுத்தார். அதில் இருபது புடைவைகளை ஒரு புடைவை நூறு ரூபாய்க்கு விற்று, கிடைத்த காசை அவரிடமே கொடுத்து விட்டேன். மீதம் இருப்பது நான்கு புடைவைகள்தான்’’ என்றார்.

அநியாயமாக பெண்ணின் மீது பழியைப் போடக் கூடாது

கடைசியாகக் கிடைத்த தகவலின்படி, ஒரு முஸ்லிம் அமைப்பின் உதவியுடன் சென்னை அரசு மருத்துவமனைக்கு நிஷா கொண்டு போகப்பட்டு இருக்கிறார். பின்னர்  சென்னை தாம்பரம் நெஞ்சக நோய் மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். பின்னர் சில நாட்களில் நிஷா இறந்து விட்டதாகவும் தகவல் வருகிறது.

ஐயர் தி கிரேட் எனும் தமிழ்ப் படத்தைத் தயாரித்தவரான ஆர். மோகன் என்பவர், நடிகை நிஷாவை விபச்சாரத்தில் ஈடுபடுத்தினார் எனும் ஒரு குற்றச்சாட்டும் உலவுகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. என்னைப் பொருத்த வரையில், ஆதாரம் இல்லாமல் அநியாயமாக ஒரு பெண்ணின் மீது பழியைப் போடக் கூடாது. அது பெரிய பாவம். அப்படியே இருந்தாலும் கூட, முடிந்த வரையில் அதை மறைக்க முயற்சி செய்ய வேண்டும். அதுதான் அழகு.

நடிகை நிஷா 2007இல் இறந்து விட்டதாக, இன்னும் ஒரு செய்தி கசிகிறது. இறந்து போனது நிஷாவாக இருந்தால், பிறகு ஏன் இப்போது ஏழு வருடங்கள் கழித்து, செய்திகள் வர வேண்டும். இந்தச் செய்தி, அதாவது இப்போது நீங்கள் படிக்கிற இந்தச் செய்தி, 2013ஆம் ஆண்டு ஜூலை மாதத்திலேயே தெரிய வந்து இருக்கிறது.

கடைசி கட்டத்தில், இரண்டு வருட காலமாக எயிட்ஸ் நோயினால் பாதிக்கப் பட்டு இருக்கிறார். நோய் முற்றியதும், எல்லோரும் கைகழுவி நழுவி விட்டார்கள்.

பெற்ற அப்பனே கண்டு கொள்ளவில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். ஒரு மகள் என்னதான் தப்பு செய்து இருந்தாலும், உலகத்தையே எதிர்த்து அந்த மகளுக்காகப் போராட வேண்டும். அதுதான் ஒரு சுத்தமான அப்பனுக்கு அழகு. தன் விந்திற்குப் பிறந்த மகள் என்கிற உயிர் உணர்ச்சி கொஞ்சமாவது அந்த அப்பனுக்கு இருந்து இருக்க வேண்டும் இல்லையா. கடைசியில் அந்தப் பெண், தன்னந் தனியாகப் போராடி அனாதையாகவே செத்துப் போய் இருக்கிறாள். அப்போது அவளுக்கு வயது 42. வேதனையாக இருக்கிறது.

நெஞ்சைக் கிழிக்கும் நிதர்சனமான நெருடல்

நூர் நிஷா (Noor Nisha) என்ற அந்த நடிகை சந்தர்ப்பச் சூழ்நிலையினால், ஏமாற்றப்பட்டு இருக்கலாம். அவள் மீதும் தப்பு இருக்கிறது. ஒரு தகப்பன் என்கிற பார்வையில் அதைப் பார்க்க வேண்டும். நிஷா வயதில் நமக்கும் மகள்கள் இருக்கிறார்கள்.

காலம் என்பது ஒரு மோசமான வாத்தியார். முட்டிப் போட வைக்கும். தோப்புக் கரணம் போட வைக்கும். கொட்டுப் போட்டு தலையை வீங்க வைக்கும். ஒரு குறைந்த பட்ச ஒழுக்கத்தை மட்டுமே அது சொல்லிக் கொடுக்கும். அவ்வளவுதான். மற்றதை மனிதனாக வாழ்ந்து அறிந்து புரிந்து கொள்ள வேண்டும்.

கடைசியாக என் மனதில் பட்டது. நிஷா என்கிற நடிகை இறந்து விட்டார் என்பது முக்கியம் அல்ல. ஆனால், ஒரு பெண் ஓவியத்தின் பலகீனங்களை, ஆண்வர்க்கத்தின் பலகீனங்கள் பயன்படுத்திக் கொண்டன என்பதுதான் நெஞ்சைக் கிழிக்கும் ஒரு நிதர்சனமான நெருடல்.

1 comment:

  1. எப்பொழுதும் நடிகைகளின் உல்லாசமான,பகட்டான வாழ்க்கையையே பார்த்து பழக்கப்பட்டு விட்ட நமக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பணத்தையே பிரதானமாக மதிக்கப்படும் காலம் இது என்பதும் இங்கே உறவுகளுக்கோ மனிதத்துக்கோ இட்மில்லை என்பதும் நிஷாவின் வாழ்க்கை புலப்படுத்தி உள்ளது.

    ReplyDelete