29 June 2017

அம்பிகா சீனிவாசன் 2

பாகம்: 2

அம்பிகா சீனிவாசன். அப்போது மலேசிய வழக்கறிஞர்கள் மன்றத்தின் அருந்தலைவர். இப்போது விழிப்புணர்வு மன்றங்களின் பெருந்தலைவர். நடப்பு ஆளுமைக்குச் சவால் விடும் ஓர் உருமாற்றம். துணிச்சல் மிக்கத் தமிழ்ப் பெண்ணாகப் பெருமாற்றம்.இப்படித்தான் டத்தோ அம்பிகாவைப் பற்றி நான்கே வரிகளில் சொல்ல முடிகிறது. சமூக விழிப்புணர்வுகளின் பரிணாமத்தில் எத்தனையோ வேதனைகள்; எத்தனையோ சோதனைகள். அந்த வேதனைகளிலும் சோதனைகளிலும் எத்தனையோ சாதனைகள்.

அம்பிகா எனும் சொல்லின் பின்னால் வந்து நிற்கின்ற ஓர் உயிரோட்டம் இருக்கிறன்தே அது எத்தனையோ அரசியல் சுனாமி  அலைகளைத் தாண்டிப் பயணித்து வருகின்றது. 


அதில் ஒன்றும் ஒரு பெரிய மந்திரம் இல்லை. பெரிய மர்ம ஜாலமும் இல்லை. எல்லாமே அர்ப்பணிப்புச் சுவடுகளின் பிரதிபிம்பங்கள் தான். சமூக விழிப்புணர்வுகளுக்கான காணிக்கைகள் என்றும் சொல்லலாம். தப்பில்லை.
 

இந்த இடத்தில் இனம், மொழி, சமயம் எல்லாமே கடந்து போய் விடுகின்றன. அங்கே ஒரு பெரிய தேசியமே உருவாகி விடுகின்றது.

அம்பிகாவின் வாழ்க்கையில் பற்பல அசம்பாவிதங்கள். பற்பல சில்லறைத் தனமான நிகழ்வுகள். அவரைச் சிறுமைப்படுத்திய சில பல குறுந் தகவல்கள். அவருக்கு எதிராக நாடு முழுமையும் பிரசாரங்கள். 


'அம்பிகா ஒரு பயங்கரவாதி எனும் போர்வையில் ஓர் இந்துப் பெண்' என்றும் வகைப் படுத்தப்பட்டார். அவற்றை எல்லாம் தாண்டி அம்பிகா பயணித்துக் கொண்டு இருக்கிறார்.

ஒரு சமயம் அம்பிகாவின் வீட்டிற்கு முன்னால் ‘பர்கர்’ கடைகள் திறக்கப் பட்டன. பெர்சே 3.0 பேரணியினால் பர்கர் வியாபாரிகளுக்கு 200,000 ரிங்கிட் நட்டம் என்று குற்றச்சாட்டுகள். வருவோர் போவோருக்கு எல்லாம் இலவசமாக, சுடச்சுட ‘பர்கர்கள்’ வழங்கப் பட்டன. 
அம்பிகாவிடமே நேரடியாகப் போய் ’பர்கர்’ கொடுத்து சாப்பிடச் சொல்லி இருக்கிறார்கள். அம்பிகா ஒரு சுத்தமான சைவம். புலால் உண்ண மாட்டார் என்று தெரிந்தும் அவரிடமே போய் அசைவத்தைக் கொடுத்தது சரியா தவறா. நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
(சான்று: http://www.thestar.com.my/news/nation/2012/05/11/traders-stage-burger-protest-in-front-of-ambigas-house/ - Traders upset over their loss of income a symbolic protest outside Bersih co-chairman Datuk S. Ambiga's house by giving away free burgers.)

அதன் பின்னர் சில நாட்கள் கழித்து 200 பேர் அடங்கிய ஒரு குழுவினர், அவருடைய வீட்டிற்கு முன்னால் ஒன்று கூடினர். தங்களின் பின்புறங்களைக் காட்டி அம்பிகாவை அசிங்கப் படுத்தினர். 


அந்த மனுஷியின் மனத்தை வேதனைப் படுத்தினர். அவரை மட்டும் அல்ல. அந்தக் குடியிருப்புப் பகுதியில் வாழ்ந்த அத்தனை பேரும் வேதனை அடைந்தனர்.

(சான்று:http://www.thestar.com.my/news/nation/2012/05/16/group-performs-butt-exercises-in-front-of-ambigas-home/ - A group of army veterans turned their backs and performed “butt exercises” in front her house in Bukit Damansara.)

இப்படிப்பட்ட செயல்களினால் தலைமைத் துவத்தின் மீது இருந்த விசுவாசம் பாதிக்கப் பட்டது. ஒரு பெண்ணுக்கு இந்த நிலை என்றால் மற்றவர்களுக்கு எப்படி என்று பலர் வேதனை அடைந்தனர். அது ஒரு பெரிய வேதனையான விசயம். 
அம்பிகா என்பவர் ஒரு முப்பதாயிரம் வழக்கறிஞர்களைக் கொண்ட மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் தலைவராக இருந்தவர். அதுவும் அவர் ஒரு பெண். 

அவர் மிக மிக மோசமான நிலையில் கொச்சைப் படுத்தப்பட்டார் என்பதுதான் வேதனையிலும் வேதனையான விசயம். அவருக்கு ஏற்பட்ட சம்பவங்களைப் பலரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

அது அப்படியே இருக்கட்டும். அமெரிக்காவில் நடந்த ஒரு நிகழ்ச்சியை நினைவு படுத்துகிறேன். 2009-ஆம் ஆண்டு டத்தோ அம்பிகாவுக்கும் மற்றும் உலக நாடுகளைச் சேர்ந்த எண்மருக்கும் சிறந்த துணிகரமிக்க பெண்மணிக்கான விருதுகள் வழங்கப் பட்டன.

அந்த விருது வழங்கும் நிகழ்வில் டத்தோ அம்பிகாவைப் பற்றி முன்னாள் அமெரிக்க அதிபரின் துணைவியார் ஹில்லரி கிலின்டன் இப்படி அடையாளப் படுத்தினார். 
“மலேசியாவில் அம்பிகா மிக விநோதமான ஓர் ஆளுமை படைத்தவர். மலேசியச் சூழலில் அவருடைய வித்தியாசமான அடைவுகள் கவனிக்கத் தக்கவை. புதிய சட்ட சீர்த் திருத்தங்களையும் புதிய செயல் ஆக்கங்களையும் உருவாக்கும் வல்லமை படைத்தவர்.

நிர்வாகத் திறமையிலும் சரி நீதித் துறையிலும் சரி புதிய மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு அம்பிகா தொடர்ந்து கடமையாற்றி வருகிறார். அவருடைய முயற்சிகள் மிகவும் பாராட்டத்தக்கவை.

பெண்களுக்கு மத்தியில் சட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். எல்லோர் மனங்களில் சமயச் சகிப்புத் தன்மையை விதைப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.

அவருடைய இந்தச் சேவைகள் அவரை உலகின் நல்ல சிறந்த பெண்மணியாக அடையாளப் படுத்துகிறது. ஆகையால் அவரின் பங்களிப்புகளையும் சேவைகளையும் அங்கீகரிக்கும் வகையில் அவர் இந்த மேடையில் கௌரவிக்கப் படுகிறார் என்று அம்பிகாவை அறிமுகம் செய்தார்கள். 
அது ஓர் உலகளாவிய கௌரவிப்பு நிகழ்ச்சி. ஒரு மனிதருக்கு நோபல் பரிசைக் கொடுப்பதும் சரி ஒரு பெண்மணிக்கு இந்த மாதிரியான வீரப் பெண்மணி என்கிறப் பரிசைக் கொடுப்பதும் சரி. இரண்டும் ஒன்றாகவே தெரிகின்றன.

இதில் ஒரு வேடிக்கையான விசயம் என்ன தெரியுங்களா. அந்த கௌரவிப்பு நிகழ்ச்சியைப் பற்றி மலேசிய ஊடகங்களுக்குத் தெரியாமல் போனதுதான். எப்படி என்றுதான் தெரியவில்லை. ’தி ஸ்டார்’ பத்திரிகையும் ‘சன்’  பத்திரிகையும் துணுக்குச் செய்திகளாகப் போட்டன.

ஒருக்கால் இப்படியும் நடந்து இருக்கலாம். ராய்ட்டர்ஸ், ஏ.பி, செய்தி நிறுவனங்களில் பணி புரிந்த பத்திரிகையாளர்களுக்கு அந்தச் செய்தி கிடைக்காமல் போய் இருக்கலாம். அல்லது  பத்திரிகையாளர்கள் அசந்து தூங்கிப் போய் அந்த நிகழ்ச்சிக்குப் போகாமல் இருந்து இருக்கலாம்.

அல்லது கொட்டாங்குச்சியில் சோறாக்கிக் குடும்பத்துக்குப் போடும் வேலை செய்து இருக்கலாம். வேண்டாங்க. நமக்கு ஏன் வீண் பொல்லாப்பு.

எது எப்படியோ அந்த நிகழ்ச்சிக்கு இந்தியாவில் உள்ள தலையாய இந்தியப் பத்திரிகைகள் முக்கியத்துவம் கொடுத்து பிரசுரித்தன. ஜப்பான், கொரியா நாட்டுப் பத்திரிகைகளும் பெரிது பெரிதாகச் செய்திகளை வெளியிட்டன.

ரொம்ப வேண்டாம். இருண்ட கண்டத்து நாடுகள் என்று சொல்கிறார்களே ஆப்பிரிக்க நாடுகள்; அந்த நாடுகளில் உள்ள நாளிதழ்கள் கூட அம்பிகாவின் செய்திகளைப் பிரசுரித்தன. 

 

இணையத்தின் வழியாகத் தெரிந்து கொண்டோம். ஏதோ ஒரு வகையில் உலக மக்களுக்குச் செய்திகள் போய்ச் சேர்ந்துவிட்டன. மகிழ்ச்சி.

அவரைப் பற்றிய சில விவரங்கள். டத்தோ அம்பிகாவின் முழுப்பெயர் அம்பிகா சீனிவாசன். அவர் 1956 நவம்பர் மாதம் 13-ஆம் தேதி சிரம்பானில் பிறந்தவர். 61 வயதாகிறது.

இவருடைய தகப்பனாரின் பெயர் டத்தோ டாக்டர் ஜி.ஸ்ரீநிவாசன். மலேசியாவில் பிறந்து வளர்ந்தவர். அம்பிகாவின் தாயார் தென் இந்தியாவைச் சேர்ந்தவர்.

அம்பிகாவின் தந்தைவழி தாத்தா, மலாயா ஆங்கிலேய ஆட்சியில் தொழிலாளர் இலாகாவில் ஆணையராகப் பணிபுரிந்தவர். 


அவருடைய கணவர் வழியாக ’ஆனந்தவிகடன்’ தாளிகையின் நிறுவனர் அமரர் ஸ்ரீநிவாசனுக்கு அம்பிகா பேத்தி ஆகின்றார்.
 

(சான்று: https://ta.wikipedia.org/s/2cey - தாய்வழி தாத்தா பெரும்பாலோர் அறிந்த ஆனந்த விகடன் வார இதழின் நிறுவனர் ஸ்ரீநிவாசன் ஆவார்.)

அம்பிகாவின் தகப்பனார் டாக்டர் ஜி. ஸ்ரீநிவாசன் 1974-இல் கோலாலம்பூர் பொதுமருத்துவமனையில் சிறுநீரகவியல் துறையை நிறுவியவர் (Dr.G.Sreenevasan, founder Hospital Kuala Lumpur - Urology and Nephrology Dept). 


அதன் தலைவராகவும் சேவை செய்தவர். அவருக்கு மூன்று பிள்ளைகள். அவர்களில் ஒருவர்தான் அம்பிகா. டத்தோ அம்பிகா 1979-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் உள்ள எக்ஸ்டர் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார் (University of Exeter, England, LLB Law, 1979). அவருடைய தகப்பனார் அவரை ஒரு மருத்துவராக்கிப் பார்க்க ஆசைப் பட்டார்.

ஆனால் கோலாலம்பூர் புக்கிட் நானாஸ் பள்ளியியில் படிக்கும் போதே சட்டம் பயில வேண்டும் என்கிற ஆசை அம்பிகாவிற்கு வந்துவிட்டது. அதுவே அவரைச் சட்டக் கல்லூரிக்கும் இழுத்துச் சென்றது. 1975-ஆம் ஆண்டு அந்தப் பள்ளியின் தலைமை மாணவராக (Head Prefect) இருந்தவர்.

சென்ற 2011-ஆம் ஆண்டு ஜூலை மாதம் அவர் படித்த அதே எக்ஸ்டர் பல்கலைக்கழகம் அவரை அழைத்து அவருக்குக் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கிச் சிறப்பு செய்தது.

ஒரு வழக்கறிஞர் நிலையில் அம்பிகா உயரிய சேவைகளை வழங்கி இருக்கிறார். அத்துடன் மூன்று ஆண்டுகளுக்கு வழக்கறிஞர் மன்றத்தின் தலைவராகவும் பணியாற்றி இருக்கிறார். அதற்காக அவருக்கு அந்தக் கௌரவ டாக்டர் விருது வழங்கப் பட்டது. 
1982 மார்ச் மாதத்தில் இருந்து அம்பிகா வழக்கறிஞராகச் சேவை செய்து வருகிறார். இப்போது சொந்தமாக ஒரு சட்ட நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

ஒரு நாட்டின் வழக்கறிஞர் மன்றத்தின் தலைவராகப் பொறுப்பு வகிப்பது என்பது மிக மிகச் சவால் நிறைந்தது. அதுவும் முப்பதாயிரம் வழக்கறிஞர்களுக்குத் தலைவராக இருந்து இருக்கிறார்.

அதுவும் ஆண் ஆதிக்கம் நிறைந்த ஒரு மன்றத்திற்குத் தலைவர் ஆவது என்பது சாதாரண விசயம் அல்ல என்று மேடையில் சொன்ன போது எல்லோருமே எழுந்து நின்று கைதட்டி  (Standing Ovation) பெருமை செய்தனர்.

இன்னும் ஒரு செய்தி. சென்ற 2011 செப்டம்பர் மாதம் 23-ஆம் தேதி இவருக்கு பிரான்ஸ் நாட்டின் மிக உயரிய விருதான செவாலியர் விருது (Chevalier de Legion d’Honneur) வழங்கிக் கௌரவிக்கப் பட்டது.

நடிகர் திலகம் சிவாஜிக்குச் செவாலியர் வழங்கினார்களே அதே விருது தான் அம்பிகாவுக்கும் வழங்கப் பட்டது. 

 

மலேசியாவில் மனித உரிமைகளுக்காகவும் சட்ட ஆளுமைக்காகவும் அம்பிகா போராடி வருகிறார். அதைச் சிறப்பிக்கும் வகையில் அந்த விருது வழங்கப் பட்டது.

இந்தச் செவாலியர் விருது மலேசியாவில் இதுவரையில் 20 பேருக்கு மட்டுமே கிடைத்து இருக்கிறது. அவர்களில் மாட்சிமை தங்கிய பேரரசர் துவாங்கு மிஷான் ஜைனல் அபிடின், டான்ஸ்ரீ டோனி பெர்னாண்டஸ், நடிகை மிச்சல் இயோ போன்றவர்கள் குறிப்பிடத் தக்கவர்கள்.

2008-ஆம் ஆண்டில் பேராக் சுல்தான் இவருக்கு DPMP எனும் டத்தோ விருதை வழங்கிச் சிறப்பு செய்துள்ளார்.

இவர் வாதாடிய வழக்குகளில் லீனா ஜோய் என்பவரின் வழக்கு தான் மிகவும் பிரசித்தி பெற்ற வழக்காகும். ஒரு முஸ்லீம் சமயத்தவர் அவருடைய விருப்பத்தின் பேரில் மற்ற சமயங்களுக்கு மாற முடியும் என்று அம்பிகா வாதாடினார். 

இந்த வழக்கு 2007-ஆம் ஆண்டு, மலேசிய உச்ச நீதிமன்றத்தில் நடந்தது. அது ஒரு நீண்ட வழக்கு. மலேசிய அரசியலமைப்பின் Article 121(1A) சட்டப் பிரிவின் கீழ் அந்த வழக்கு நடந்தது. இந்த வழக்கு உலகப் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது.

அந்த வழக்கைப் பற்றி விரிவாக எழுத முடியவில்லை. புரிந்து கொள்ளுங்கள்.

இருந்தாலும் அந்த வழக்கைப் பற்றிய விவரங்கள் கீழ்க்காணும் இணையத் தளத்தில் உள்ளன. விருப்பப் பட்டவர்கள் படித்துத் தெரிந்து கொள்ளலாம்.


(சான்று: https://www.worldwatchmonitor.org/2016/03/malaysian-court-upholds-right-to-convert-from-islam/ - Lina Joy who converted from Islam to Christianity in 1998 at the age of 26)

(தொடரும்)

No comments:

Post a Comment