11 July 2017

இந்திய ராஜாக்களின் சோக வாழ்க்கை 1

இந்திய மண்ணில் ஆயிரக் கணக்கான ராஜாக்கள் பிறந்தார்கள். வாழ்ந்தார்கள். வீழ்ந்தார்கள். அது வரலாறு. அந்த ராஜாக்களின் ராஜ வாழ்க்கையில் மதுரசங்கள் ஆறாய்ப் பெருகி ஓடின. மாதுரசங்கள் தேனாய் உருகிப் பாய்ந்தன. விதம் விதமான வண்டுகள் பள்ளி கொள்ள வந்தன. மன்மத வீணைகளை மீட்டிப் பார்த்தன. கின்கிணிக் குண்டலினியைக் கிண்டிவிட்டுச் சாய்ந்தன. 

அதையும் தாண்டிய நிலையில் சில சின்னஞ்சிறு மொட்டுகள் பட்டுக்குள் சிக்காமல் தப்பிச் சென்றன. பல மொட்டுகள் சிறகொடிந்து போயின.

அவற்றில் சில தொட்டுக் கொள்ளும் ஊறுகாய்களாய் உறைந்து மறைந்து காணாமலும் போயின.

மன்னரின் ஒரே ஒரு பார்வை போதும். ஓராயிரம் ராணிகள் ஓடி வருவார்கள். பல்லாயிரம் சுகங்களுக்குப் பாய் விரித்துப் போடுவார்கள். 
அந்தர்ப்புரம் ஒரு கந்தர்வ லோகமாகிச் சிணுங்கி நிற்கும். மங்கிய வெளிச்சத்தின் மயக்கங்களில் சொர்க்கத்தின் தலைவாசலுக்கே வெட்கம் வந்து வெலவெலத்துப் போகும்.

இப்படித்தான் அந்தக் காலத்து ராஜாக்கள் வாழ்ந்தார்கள் என்று பலர் நினைக்கிறார்கள். நினைத்துக் கொண்டும் இருக்கிறார்கள். அது தப்புங்க.  பாவங்க அந்த ராஜாக்கள்.

அவர்கள் ஒவ்வொரு நாளும் செத்து செத்துப் பிழைத்தவர்கள். இந்த விசயம் ரொம்ப பேருக்குத் தெரியாதுங்க! அதைப் பற்றிய தான் இந்தக் கட்டுரை.

மகாராஜாக்களின் வாழ்க்கை வசந்தங்கள் வேதனைகள் (Maharaja The Lives Loves & Intrigues Of The Maharaja Of India - Paperback – 2008) என்பது ஒரு வரலாற்றுப் பதிப்பு. இந்திய எழுத்தாளர் திவான் ஜர்மானி தாஸ் (Diwan Jarmani Dass) எழுதி இருக்கிறார். இன்னும் ஒரு நூல் இருக்கிறது. அதன் பெயர் இந்தியாவின் மொகலாயர்களின் அந்தரங்க வாழ்க்கை. அதிலும் பற்பல ரகசியங்கள். தலை சுற்றி விட்டது. பேராசிரியர் ஆர். நாத் (R. Nath) என்பவர் எழுதி இருக்கிறார். இணையம் மூலமாக இலவசமாகப் படிக்கலாம்.
(சான்று: http://pdfbookdb.com/2017/private-life-of-the-mughals-of-india-pdf - Private Life Of The Mughals Of India)

இன்னும் சில நூல்கள் உள்ளன. மொகலாய மன்னர்களின் அந்தரங்க வாழ்க்கையை அக்குவேர் ஆணிவேராய் அலசிப் பார்க்கின்றன. எல்லாவற்றையும் படித்து முடிக்க எப்படியும் ஒரு சில வாரங்கள் பிடிக்கும். சரி.

இந்தியாவின் மொகலாயர்களின் அந்தரங்க வாழ்க்கை எனும் நூலைப் படித்த பிறகு வெகு நாட்களாய் எனக்குள் மறைந்து நின்ற மயக்கமும் சற்றே நீர்த்துப் போனது. உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
ராஜ வாழ்க்கை என்பது காளிக் கோயிலில் பலிக்கடாவாகும் ஓர் ஆட்டுக் கடாவின் வாழ்க்கையைப் போன்றது. இப்படியும் சொல்லலாம்.

ஆசை ஆசையாய்ப் பார்த்து வளர்த்த ஆட்டுக் கடாவிற்கு மஞ்சள் பூசுவார்கள். பன்னீர் தெளிப்பார்கள். குங்குமம் வைப்பார்கள். சந்தனம் தடவுவார்கள். ரோசாப்பூ மாலை போடுவார்கள்.

அப்புறம் கத்தியைக் கழுத்தில் வைப்பார்கள். கொஞ்ச நேரத்தில் கூறு போட்ட ஆடுக்கடா சட்டியில் வெந்து கொண்டு இருக்கும். அதைச் சாப்பிட ஒரு படையே திரண்டு நிற்கும். பெருமூச்சு விட்டுக் கொள்ளுங்கள்.

ஆக அந்த மாதிரிதான் அந்தக் காலத்து ராஜாக்களும் வாழ்ந்து இருக்கிறார்கள். எந்த நேரத்திலும் கத்தி கழுத்திற்கு வரும் என்று பயந்து பயந்து வாழ வேண்டிய ஒரு திரிசங்கு நிலை. இதுதான் அந்தக் காலத்து ராஜாக்களின் ராஜ வாழ்க்கை. 
முக்கால் வாசி இந்திய நாட்டை ஒரே குடையின் கீழ் கொண்டு வந்த சக்கரவர்த்திகளுக்கும் கடைசி காலத்தில் ஒரு நல்ல அமைதியான சாவு கிடைக்கவில்லை என்பதுதான் வரலாற்று உண்மை.

காட்டிலே உயரமாக வளர்ந்துவிட்ட ஒரு மரத்தைப் பாருங்கள். மற்ற தாவரங்களில் இருந்து அது தனிமைப் பட்டு தனியாக நிற்கும்.

அதைப் பார்த்தால் என்னவோ விண்ணைத் தொடுவது போல பெருமையாகத் தெரியும். ஆனால் உணர்வுப் பூர்வமாகப் பார்த்தால் அது தனிமையில் வாடி நிற்பதுதான் தெரிய வரும்.

மேற்கத்திய நாட்டு அரசர்களை எடுத்துக் கொள்ளுங்கள். அவர்களின் அதீத ஆடம்பரமான வாழ்க்கையைப் பார்த்து இந்தக் காலத்து சாமான்ய மக்கள் நொந்து நலிந்து போவதும்  உண்டு.

இந்தியாவை ஆண்ட மொகலாய மன்னர்கள் ஒரு நல்ல காரியம் செய்து வைத்துவிட்டுப் போய் இருக்கிறார்கள். தூங்கி எழுந்ததில் இருந்து இரவில் சவ்வாது மேடையில் சிருங்காரப் பாடல்களைக் கேட்பது வரையிலும் எல்லா முக்கிய நிகழ்ச்சிகளையும் எழுதி வைத்துச் சென்று இருக்கிறார்கள்.

அவர்கள் ஒன்றும் எழுதவில்லை. எழுத அவர்களுக்கு எங்கே நேரம் இருக்கிறது. யாராவது ஒரு நம்பிக்கையான ஆளைக் கூப்பிட்டு குறிப்பு எடுக்கச் சொல்லி இருக்கலாம். 

அதுவே நாட்குறிப்பாகிப் பின்னர் காலத்தில் புத்தகமாக மாறிப் போய் இருக்கலாம். ராஜா புத்தகம் எழுதியதை நாம் என்ன பார்த்துக் கொண்டா இருந்தோம்.அப்போதைய மன்னர்களுக்கு பயம் என்ற ஒன்று தான் சாகும் வரையிலும் தொற்றி அவர்களுக்கு உற்றத் தோழனாக வலம் வந்து இருக்கிறது.

ஆனால் அதை அவர்கள் வெளிக்காட்டிக் கொண்டது இல்லை. அதை அப்படியே மறைத்து மறைத்து அப்படியே மறைந்து போய் விட்டார்கள்.

நண்பர்களைப் பக்கத்தில் வைத்துக் கொள். எதிரிகளை மிகவும் பக்கத்தில் வைத்துக் கொள். இந்த இருவர் மீதும் கவனமாக இரு. இருவரில் யார் வேண்டுமானாலும் உன்னைக் கொல்லலாம்

என்று மன்னர்களுக்கு பீர்பால், இபுன் பாத்துத்தா போன்ற அறிவுரைஞர்கள் ஆலோசனை சொல்வார்களாம். அதுதான் சரித்திரத்திலும் நடந்து இருக்கிறது.

மொகலாய அரசர்களில் ஜகாங்கீர் (Jahangir - Mirza Nur-ud-din Beig Mohammad Khan Salim)  என்பவர் மிக முக்கியமானவர். இவர் தான் அக்பருக்கு மகன். ஷா ஜகானுக்குத் தந்தையார். 
சலீம் அனார்கலி காதல் கதை தெரியும் தானே. அமரக் காதல், ஆத்மீகக் காதல், இந்திரக் காதல், இனிதான காதல், இனிக்கும் காதல், இனிக்காத காதல், இம்சைக் காதல், இஞ்சிப்புளிக் புளிக்காதல் என்று இப்படி எத்தனையோ காதல்கள் இருக்கின்றன. பார்த்து இருக்கிறோம். கேட்டு இருக்கிறோம்.

அவற்றில் சலீம் அனார்கலி காதல் இருக்கிறதே அது இமயத்தின் சிகரத்தையே உரசிப் பார்த்த நல்ல ஒரு காந்தர்வக் காதல். சும்மா சொல்லக் கூடாது. அந்தக் காலத்திலேயே சொக்கமான தங்கத்தையும் விலை பேசிய காதல்.

என்னடா வரலாற்றுக் கட்டுரைகளை எழுதிக் கொண்டு இருந்தவன் திடீரென்று காதல் பக்கம் வந்து விட்டானே என்று நினைக்க வேண்டாம்.

ஆமாம் அன்றாடம் தயிர்ச் சாதம் சாப்பிட்டு சலித்துப் போய் கொஞ்சம் வெங்காயக் குழம்பு சாப்பிடலாமே என்கிற ஆசைதாங்க. அந்த மாதிரி தான். வேறு ஒன்றும் இல்லீங்க. தப்பாக நினைக்க வேண்டாம்.

அந்தச் சலீம் தான் இந்த ஜகாங்கீர். அந்த ஜகாங்கீர் தான் இந்தச் சலீம். அக்பரின் மூத்த மகன். பிஞ்சிலே பழுத்த சின்னப் பையன்.

அக்பரின் அந்தர்ப்புர நாயகிகளில் ஒருவரான அனார்கலியைக் காதலித்து அதனால் ஜகாங்கீருக்குப் பற்பல பிரச்சினைகள். அக்பருக்கும் பிரச்சினைகள்.

அனார்கலி போன பிறகு ஜகாங்கீர் நிறைய பெண்களைத் திருமணம் செய்து கொண்டார். அது வேறு கதை.
(சான்று: http://creative.sulekha.com/what-is-the-truth-about-anarkali_460884_blog - Akbar who was smitten by her beauty first and gave her the name “Anarkali”)

ஜகாங்கீர் அரசரான பின்னர் என்ன செய்தார் என்பதைப் பற்றித் தான் தெரிந்து கொள்ளப் போகிறோம். நான் ரெடி நீங்க ரெடியா.

ஜகாங்கீர் ஒரு நாளைக்கு காலையில் இருந்து இரவு படுக்கும் வரை என்ன என்ன செய்வார் என்பதைப் பார்ப்போம்.

அதிகாலை 4 மணிக்கு, கோழி கூவுவதற்கு முன்னாலேயே எழுந்து விடுவார். அவரை எழுப்பி விடுவதற்கு என்றே மன்னருக்குப் பிடித்த ஒரு ராணி இருந்தார்.

மன்னர் எந்த மனைவியோடு எந்த அறையில் தூங்கினாலும் சரி வழக்கமாக அவரை எழுப்பிவிடும் அதே ராணிதான் ஒவ்வொரு நாளும் எழுப்ப வேண்டும்.

அந்த ராணியின் முகத்தில் விழித்தால் தான் காரியங்கள் நல்லபடியாக நடக்கும் என்பது அவருடைய ஐதீகம். இன்னும் ஒன்று. 
அந்தக் காலத்து ராஜாவுக்கு எத்தனை மனைவிகள் என்று என்னிடம் கேட்க வேண்டாம். ஏன் என்றால் அது அவருக்கே தெரியாத தில்லாலங்கடி ரகசியம்.

ஆக அவரை எந்த மனைவி எழுப்பி விடுவார் என்று எல்லாம் பெரிய பெரிய ஆராய்ச்சி எல்லாம் செய்ய வேண்டாம்.

உங்களிடம் இருப்பதை ஆராய்ச்சி செய்து அதில் கிடைக்கிற மகிழ்ச்சியே பெரிய பாக்கியம் என்று நினைத்தாலே போதும்.  அதுவே பெரிய புண்ணியம்.

மன்னருக்கு முதல் வேலையாக நல்ல ஒரு குளியல். குளியல் தொட்டியில் பன்னீரை ஊற்றி நிறைத்து வைத்து இருப்பார்கள். மன்னருக்குப் பிடித்தமான ரோஜாப் பூக்கள் மிதக்கும்.

ஈரான், ஈராக்கில் இருந்து கொண்டு வரப்பட்ட அரிய வாசனைத் திரவியங்கள் கலந்து இருக்கும். குளியல் கூடத்தில் ஏறக்குறைய 12 வேலைக்காரர்கள் இருப்பார்கள்.

மன்னர் குளிப்பதற்கான தண்ணீரை முதல்நாள் ராத்திரியிலேயே பத்திரமாக ஒரு பாத்திரத்தில் எடுத்து அதற்கு முத்திரையிட்டு பாதுகாப்பாக வைத்து இருப்பார்கள்.

எல்லாம் உஷார் நிலை தான். யார் கொண்டது. எவனாவது எருக்கம் பூவை இடித்துப் போட்டு இருந்தால் என்ன செய்வதாம்.

வெதுவெதுப்பான நீரில் தான் மன்னர் குளிப்பார். சூடு எவ்வளவு இருக்கிறது என்பதைப் பரிசோதனை செய்வதற்காகவே தனியாக ஓர் ஆள். 

மன்னரின் உடலுக்கு சந்தனம், ஜவ்வாது, வாசனைத் தைலங்களைத் தேய்த்துவிட 16 பணிப் பெண்கள். ஓர் ஆள் பற்றாதா என்று நீங்கள் கேட்கலாம். என்ன செய்வது. ஒரு பெருமூச்சு விட்டுக் கொள்ளுங்கள்.

குளியல் சடங்கு ஒரு மணி நேரம் பிடிக்கும். அடுத்து அங்க ஆபரணங்கள், அடுக்கடுக்காய் அவரின் பார்வைக்காக வைக்கப்பட்டு இருக்கும். அவற்றில் எதை அணிந்து கொள்வது என்பதை மன்னர்தான் முடிவு செய்வார்.

ஆடை ஆபரணங்களை மன்னர் அணிந்ததும் அரண்மனை வளாகத்தில் ஒரு சின்ன தம்பட்ட ஒலி எழுப்பப் படும். மன்னர் தனது நாளைத் தொடக்கி விட்டார் என்பதற்கான அறிவிப்பு.

அதன் பிறகு அரண்மனை மருத்துவர் மன்னருக்கு நாடி பிடித்து பரிசோதனை செய்து பார்ப்பார். 

மன்னரின் வயிற்றுப் பிரச்னைகள், உடல் வெப்பம், நாக்கின் நிறத் தன்மை, சிறுநீரின் நிறம், உடல் தோலின் நிற மாற்றம், அடிப் பாதங்களின் மிருதுத் தன்மை, சுவாசம் விடுவதில் ஏற்படும் ஏற்றத் தாழ்வு போன்றவற்றை எல்லாம் ஆராய்ந்து அறிந்து மன்னரிடம் பரிந்துரைகள் செய்வார்.

என்ன என்ன உணவுகளைச் சாப்பிட வேண்டும், எந்தப் பழ ரசங்களைத் தவிர்க்க வேண்டும். மருத்துவர் பரிந்துரை செய்தாலும் மன்னர் தான் முடிவு எடுப்பார். அதன் பிறகு, இறை வழிபாடு.

ஒவ்வொரு நாளும் அறிவுரைகளை வழங்க ஒரு ஞானி அரண்மனையிலேயே தங்கி இருப்பார். அன்றைக்கான ஞான உரையை மன்னருக்குச் சொல்வார். மன்னர் அதைப் பணிவாகக் கேட்டுக் கொள்வார். 

அது முடிந்ததும் சிறப்புப் பூசைகள். சமயப் பெரியவர்கள் காத்து நிற்பார்கள். அவற்றை மன்னர் ஏற்றுக் கொள்வார்.

அதிகாலையில் சூரிய தரிசனம் மிக முக்கியம். பாபர், அக்பர் காலத்தில் இருந்தே அந்த வழக்கம் இருந்து வருகிறது. மக்களைச் சந்திப்பதற்கு சிறப்பாக அமைக்கப்பட்ட ஓர் உயர்ந்த தனி மாடத்தில் மன்னர் வந்து நிற்பார்.

மதிய உணவுதான் மன்னரின் பிரதான உணவு. அதைத் தயாரிப்பதற்கு 30 சமையல்காரர்கள். மன்னரின் மத்தியானச் சாப்பாட்டைத் தயாரிக்க உதவியாளர்கள் 200 பேர்.

ஒவ்வொரு ராணிக்கும் ஒவ்வொரு தனிப்பட்ட ஐட்டம். சுத்தச் சைவமான ராணிகளும் இருந்தார்கள். அவர்களுக்குப் போட்டியாக அசைவத்தில் பிறந்து அசைவத்திலேயே வளர்ந்த ராணிகளும் இருந்தார்கள். இதைப் பற்றி நாளைய கட்டுரையில் பார்ப்போம்.

(தொடரும்)

3 comments:

  1. ​சுவாரஸ்யம். தொடர்கிறேன்.

    ReplyDelete
  2. நீங்கள் கொடுக்கும் அனைத்து சான்றுகளும் நேரடியாக கிளிக் செய்ய முடியவில்லை? காபியும் செய்ய முடியவில்லை? இப்போ இருக்கிற காலகட்டத்தில் இதுபோன்ற கட்டுரைகளை படிப்பதே பெரிய விடயம் இதுல சான்றுகளை டைப் பண்ணி தேடுவதுக்கு எங்க சார் நேரம் இருக்கு ? ஒருவேளை இந்த சான்றுகளைஎல்லாம் பார்க்க கூடாது என்பதற்காகவே இது போன்று செய்கிறீர்களா? இதை நான் பலமுறை சொல்லிவிட்டேன்!

    ReplyDelete