05 செப்டம்பர் 2017

பரமேஸ்வரா மண்ணின் மைந்தர் - 6

மலாக்கா மன்னர்களின் பெயர்களையும் அவர்களின் ஆட்சி காலங்களையும் தெரிந்து கொள்வோம்.


•    ஸ்ரீ மகாராஜா பரமேஸ்வரா  1400–1414
•    ஸ்ரீ ராம விக்ரமா 1414–1424
•    முகமது ஷா 1424–1444
•    அபு ஷாகித் 1444–1446
•    முஷபர் ஷா 1446–1459
•    மன்சூர் ஷா 1459–1477
•    அலாவுடின் ரியாட் ஷா 1477–1488
•    முகமது ஷா 1488–1511
•    அகமட் ஷா 1511–1513



பரமேஸ்வராவின் மத மாற்றம் இந்த நாள் வரையில் ஒரு தெளிவற்ற நிலையில் இருந்து வருகிறது. அவர் சமய மாற்றம் செய்து கொண்டார் என்பதற்குச் சரியான ஆதாரங்கள் இன்னும் கிடைக்கவில்லை. ஆனால் பரமேஸ்வரா மதமாற்றம் செய்தார் என்று Malay Annals எனும் மலாய் காலச்சுவடுகள் சொல்கின்றன.

சீனாவில் கிடைத்த காலக் கணிப்புக் குறிப்புகளின் படி பரமேஸ்வராவின் மகன் ஸ்ரீ ராம விக்ரமா 1414-இல் சீனாவிற்குப் பயணம் செய்து இருக்கிறார். சரியான தேதி விவரங்களும் நம்மிடம் உள்ளன. அவர் பயணம் செய்தது 5-ஆம் தேதி அக்டோபர் 1414.

தன்னுடைய தந்தையாரைப் பரமேஸ்வரா என்று அறிமுகப் படுத்தி இருக்கிறார். அவர் இறந்து விட்டதாகவும் சொல்லி இருக்கிறார்.
(சான்று: National University of Singapore, http://epress.nus.edu.sg/msl/entry/1781.) 



பரமேஸ்வரா இறந்த அதே ஆண்டு இறுதி வாக்கில் அவருடைய மகன் ஸ்ரீ ராம விக்ரமா மறுபடியும் சீனாவிற்குப் பயணம் செய்து இருக்கிறார். அதையும் உறுதி படுத்துகிறேன்.

மேலே சொல்லப் பட்டது சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் பழஞ்சுவடிக் காப்பகத்தில் இருந்து மீட்கப் பட்டச் சான்றுகள். அந்த இணைய முகவரியில் மேலும் தகவல்கள் உள்ளன. நீங்களும் போய்ப் பார்த்து உறுதி செய்து கொள்ளுங்கள். 
(சான்று: National University of Singapore, http://epress.nus.edu.sg/msl/entry/1781.)

உள்நாட்டு வரலாற்றுப் பாடநூல் ஆசிரியர்கள் வழக்குப் பதிவு செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. மிகவும் கவனமாகக் கையாள வேண்டி உள்ளது.

பரமேஸ்வரா மலாக்காவை ஆட்சிப் செய்த காலத்தில் அவரைப் பலமேசுலா என்றே சீனர்கள் அழைத்து இருக்கிறார்கள். அழைத்தும் வந்தார்கள். இப்போதும்கூட மலேசியச் சீனர்கள் பலேமிசுலா… பலேமிசுலா… (Bai-li-mi-su-la) என்றுதான் அழைக்கிறார்கள்.

நமக்கும் வாய் தவறி வந்து விடுகிறது. சரி விடுங்கள். பரமேஸ்வராவைச் சீனர்கள் இஸ்கந்தார் ஷா என்று அழைக்கவே இல்லை. பலமேசுலா என்றுதான் அழைத்து இருக்கிறார்கள். (சான்று: Zhong-yang Yan-jiu yuan Ming Shi-lu, volume 12, page 1487 - 1489)



இந்திய நாட்டவர்கள் பரம ஈஸ்வரா அழைத்து இருக்கிறார்கள். அராபிய நாட்டு வணிகர்கள் பரமோ ஈஸ்வரா என்று அழைத்து இருக்கிறார்கள். பின்னர் வந்த சீன வணிகர்கள் பலமோஸ் லா என்று அழைத்து இருக்கிறார்கள். ரகரம் ஒரு லகரமாக மாறிப் போவதையும் கவனியுங்கள். இங்கே தான் சரித்திரம் அழகாகப் பாரிய வீணை வாசிக்கின்றது.

மறுபடியும் சீன நாட்டின் மிங் அரச குறிப்பேடுகளுக்கு உங்களை அழைத்துச் செல்கிறேன். மலாக்கா நாட்டின் அரசர் பலேமிசுலா (Bai-li-mi-su-la, the king of the country of Melaka) என்றுதான் சீனப் பழஞ்சுவடிகள் சொல்கின்றன.
(Ming Shilu - also known as the Veritable Records of the Ming dynasty, has a comprehensive 150 records or more on Parameswara (Bai-li-mi-su-la) and Malacca.)

ஆக மலாக்கா வரலாற்றின் கதாநாயகன் பரமேஸ்வராவின் அசல் பெயர் ஸ்ரீ மகாராஜா பரமேஸ்வரா.

இன்னும் ஒரு விசயம். பரமேஸ்வராவின் மனைவியைப் பரமேஸ்வரி என்று தான் சீனாவின் மிங் அரசர் யோங் லே (Yong-lo Emperor) அழைத்து இருக்கிறார். அதாவது சீன மொழியின் பேச்சு வழக்கில் பர்மிசுலி (Ba-er-mi-su-li).

அடுத்து நீங்கள் கவனிக்க வேண்டிய இன்னும் ஒரு விசயம். அதாவது யோங் லே அரசர் சீனாவை 1402-ஆம் ஆண்டில் இருந்து 1424-ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்து இருக்கிறார் எனும் விசயம்.

இந்தக் காலக் கட்டத்தில் தான் மலாக்காவின் வாணிகம் வளர்ச்சி பெற்று வந்த காலக் கட்டம். இந்தக் கால இடுக்குகளில் தான் பரமேஸ்வரா கடல் பயணம் செய்து இருக்கிறார். அதாவது சீனாவிற்குப் பயணம் செய்து இருக்கிறார்.



ஆக சுருக்கமாக இப்படிச் சொல்லலாம். பரமேஸ்வரா என்பவர் வாழும் காலத்தில் பரமேஸ்வரா எனும் பெயரில் தான் வாழ்ந்து இருக்கிறார். இறக்கும் காலத்திலும் பரமேஸ்வரா எனும் பெயரில் தான் இறந்தும் போய் இருக்கிறார்.

அப்படி இருக்கும் போது எப்படி இஸ்கந்தார் ஷா என்பவர் வந்தார். எங்கே இருந்து சுல்கார்னாயின் என்பவர் வந்தார். எப்படி பரமேஸ்வராவின் பெயர் வசதிக்கு ஏற்றவாறு மாற்றம் செய்யப் பட்டது. உங்களுக்கே குழப்பம் ஏற்பட்டு இருக்கும்.

ஆக வரலாற்றுச் சித்தர்கள் எப்படி எல்லாம் வரலாற்றுச் சித்துகளைக் காட்டி வருகிறார்கள் பாருங்கள். போதுங்களா. எங்கே வருகிறேன்… அதையும் புரிந்து கொள்ளுங்கள்.

மலேசியாவில் வாழும் இந்திய வம்சாவளியினர் இப்போது இருந்தே பரமேஸ்வரா என்பவரின் வாழ்க்கை வரலாற்றை முன் எடுத்து வைக்க வேண்டும். இல்லை என்றால் பரமேஸ்வரா எனும் பெயரே வரலாற்றில் இருந்து அழிக்கப்பட்டு விடும். அதனால் தான் வலுவான சான்றுகளுடன் பரமேஸ்வராவின் சரிதையை முன்னெடுத்து வைக்க வேண்டி உள்ளது.

(தொடரும்)

2 கருத்துகள்:

  1. பெயரில்லா6/9/17, AM 11:57

    முதல் கட்டமாக நீங்கள் விக்கிபீடியாவில் வரலாற்றை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்
    விக்கியில் வரலாற்றை மாற்றி எழுதி இருக்கின்றார்கள் ... நீங்கள் திருத்தம் செய்யமுடியாமல் இருந்தால் விக்கிபீடியா தலைமையகத்துக்கு அறிவிக்கலாம்

    பதிலளிநீக்கு