11 November 2017

ஜான்சிராணி வீராங்கனை கோவிந்தம்மாள்

இந்திய தேசிய இராணுவத்தில் பெண்களுக்கு ஜான்சி ராணி படை எனும் ஒரு தனிப் பிரிவை நேதாஜி தொடங்கினார். ஒரு முறை பர்மா இம்பால் எனும் இடத்தில் பெண்கள் தங்கி இருந்தனர். அவர்களின் கூடாரப் பகுதிக்குள் நேதாஜி போய் இருக்கிறார். இருள் நேரம். அப்போது கோவிந்தம்மாள் என்பவர் கடமையில் இருந்து இருக்கிறார்.ஒரு மர்ம வண்டியில் ஆண்கள் சிலர் முகாமிற்குள் நுழைவதைப் பார்த்த கோவிந்தம்மாள் அந்த வண்டியைத் தடுத்து நிறுத்தி இருக்கிறார். வண்டியின் உள்ளே நேதாஜி இராணுவ உடையில் அமர்ந்து இருந்தார். அவரை அடையாளம் தெரியாமல் வேறு யாரோ என்று கோவிந்தம்மாள் நினைத்து விட்டார்.

மாறு வேடத்தில் வந்த நேதாஜியைப் பார்த்து விட்டு கதவைத் திறந்து உள்ளே விட மறுத்து விட்டார். நான் நேதாஜி என்று கூறிய பின்னரும் கோவிந்தம்மாள் அவரை உள்ளே விடவில்லை. பின்னர் மாறுவேடத்தைக் கலைத்து முகத்தைக் காட்டிய பின்னரே கோவிந்தம்மாள் அவரை உள்ளே செல்ல அனுமதித்து இருக்கிறார். 
அடுத்த நாள் காலையில் வீராங்கனைகள் எல்லாரையும் நேதாஜி அழைத்தார். அவர்களிடம் 'நேற்றிரவு முகாம் வாசலில் பாதுகாப்புக்கு நின்றது யார் என கேள்வி எழுப்பினார். நான்தான் என கோவிந்தம்மாள் கூறி இருக்கிறார்.

'ஏன் என்னை உள்ளே விடுவதற்கு அனுமதி மறுத்தீர்கள்’ என நேதாஜி மறு கேள்வி கேட்டு இருக்கிறார். நேதாஜியின் கண்களை நேருக்கு நேராக பார்த்த கோவிந்தம்மாள் 'இது போர்க் காலம். எதிரிகள் கூட மாறு வேடத்தில் வர வாய்ப்பு இருக்கிறது. அதனால் தான் தங்களை அனுமதிக்கவில்லை. தாங்கள் மாறுவேடத்தைக் கலைத்த பிறகு தான் உங்களை உள்ளே விட்டேன்' என பதில் கூறினார்.

கோவிந்தம்மாளின் பதிலால் திருப்தி அடைந்த நேதாஜி, கோவிந்தம்மாளின் முதுகில் தட்டிக் கொடுத்தார். அந்தப் பெண்ணின் திடமான கடமை உணர்வைக் கண்டு வியந்து போனார் நேதாஜி.

இப்படிப்பட்ட பெண்கள் தான் இந்திய தேசிய இராணுவத்திற்குத் தேவை என்று புகழாரம் செய்தார். அதன் பின்னர் ஜான்சி ராணி படையின் உயரிய விருதான ‘லாண்ட்ஸ் நாயக்’ விருதை கோவிந்தம்மாளுக்கு வழங்கிப் பதவி உயர்வு செய்தார். அது ஜான்சி ராணி படையினருக்குப் பெருமை செய்த ஒரு வரலாற்றுச் சுவடு.
கோவிந்தம்மாள் 1927 பிப்ரவரி 22-ஆம் தேதி தமிழ் நாடு வேலூர் மாவட்டம் ஆம்பூரில் உள்ள கிருஷ்ணாபுரத்தில் பிறந்தவர். இவரின் தந்தையார் பெயர் முனுசாமி செட்டியார். நெசவு தொழில் செய்தவர். வடஆற்காட்டுப் பகுதியைச் சேர்ந்தவர்.

கோவிந்தம்மாள் பிறந்த மூன்று மாதங்களில் தன் குடும்பத்தோடு அப்போதைய மலாயாவுக்கு வந்தார். அவருக்குத் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம் போன்ற மொழிகள் தெரியும். மலாயா அஞ்சல் துறையில் பணியாற்றினார். நகைத் தொழிலையும் இதர தொழில்களிலும் ஈடுபட்டு வந்தார்.

கோவிந்தம்மாள் மலாயாவில் எட்டாம் வகுப்பு வரை படித்தார். 1940-ஆம் ஆண்டு அருணாச்சலம் செட்டியார் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். அருணாச்சலம் செட்டியார் ஓர் எழுத்தர். ஓர் இரப்பர் தோட்டத்தில் பணி புரிந்தார்.

அந்தக் கட்டத்தில் நேதாஜி செய்த பிரச்சாரம் கோவிந்தம்மாளின் வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையாக அமைந்து போனது.

இந்திய விடுதலைப் போரில் மலாயா இரப்பர் தோட்டத் தமிழ்த் தொழிலாளார்கள் அதிகமானோர் சேர்ந்தார்கள். அதை அப்போதைய பிரிட்டனின் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் கிண்டலாகப் பேசி இருக்கிறார்.
மலாயா இரப்பர் தோட்டங்களில் தமிழர்கள் பால் உறிஞ்சும் பாமரத் தொழிலாளர்கள். அவர்களின் இரத்தம் தான் நேதாஜியின் மூளையில் கட்டியாக உறைந்து போய்க் கிடக்கிறது என்று சொன்னார்.

அதற்கு நேதாஜி அந்தத் தமிழர்கள் தான் நாளைய ஆங்கில ஏகாதிபத்தியத்தின் இரத்தத்தை குடிக்கப் போகிறார்கள். அது தெரியாமல் ஒரு வெள்ளைச் சவர்க்காரக் கட்டி பேசுகிறது என்று பதிலடி கொடுத்தார்.

அந்த அளவிற்கு இந்திய தேசிய இராணுவப் படையில் மலாயா இரப்பர் தோட்டத் தொழிலாளர்கள் ஈடுபாடு கொண்டு இருந்தனர். அவர்களில் ஒருவர் தான் கோவிந்தம்மாள்.

ஒருமுறை மலாக்கா பிராந்தாவில் (Melaka Perintah) நேதாஜி பிரசாரம் செய்தார். நேதாஜியின் வீர உரையைக் கோவிந்தம்மாள் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படையின் நிதிக்காகத்  தன் ஆறு பவுன் வளையல்களைக் கழற்றிக் கொடுத்தார். திருமணச் சீதனமாகக் கிடைத்த ஓர் ஏக்கர் இரப்பர் தோட்டத்தையும் 1500 வெள்ளிக்கு விற்று அப்படியே அந்தப் பணத்தைத் தானமாகவும் கொடுத்து இருக்கிறார். எப்பேர்ப்பட்ட வீர தான உணர்வுகள்.
குடும்ப வாழ்க்கையில் இருந்து வெளியேறிய கோவிந்தம்மாள் இந்திய தேசிய இராணுவப் படையில் தன்னை இணைத்துக் கொண்டார்.1943-ஆம் ஆண்டு டிசம்பர் 13-ஆம் தேதி தன்னுடைய 16-ஆவது வயதில் ஜான்சி ராணிப் படையில் சேர்ந்தார்.

இந்தப் படை முதன்முதலில் 20 சிங்கப்பூர் பெண்களைக் கொண்டு கேப்டன் லட்சுமி சுவாமிநாதன் என்பவரால் அமைக்கப் பட்டது. அந்தப் படையில் 1500 பெண்கள் வரை சேர்ந்தனர். அந்த அணியில் முதலில் 100 பேர் தேர்ந்தெடுக்கப் பட்டனர். அவர்களுக்குப் பல வகையான துப்பாக்கிகளைச் சுடும் பயிற்சிகள் கற்றுத் தரப்பட்டன.

இந்திய தேசிய இராணுவப் படையில் கோவிந்தம்மாளின் எண் 4800. அதுவே கோவிந்தம்மாளின் அடையாளம். அவரிடம் திறமை; கடுமையான உழைப்பு; மனவலிமை இருந்தன. அதன் காரணமாக 1000 பேர் கொண்ட ஒரு பெண்கள் அணிக்குத் தலைவராகத் தகுதி உயர்த்தப் பட்டார்.

ஜான்சி ராணி படையில் இருந்த திறமையான 100 பெண்கள் தேர்வு செய்யப்பட்டு பர்மா அழைத்து செல்லப் பட்டனர். அங்கு அவர்களுக்கு உயர் ரக ஆயுதங்களைக் கையாளும் சிறப்பு பயிற்சிகள் கோவிந்தம்மாளுக்கு வழங்கப்பட்டன. அந்த வகையில் கோவிந்தம்மாளும் நவீன ரக ஆயுதங்களை ஏந்தி போர் செய்யும் அளவுக்குத் தேர்ச்சி பெற்றார்.

போர்முனையில் பெண்களையும் ஆண்களுடன் இணைந்து போரிட வைக்க வேண்டுமென்பது, நேதாஜியின் நோக்கம். ஆண்களுடன் சேர்ந்து போர்முனைக்கு செல்ல விருப்பம் தெரிவித்தவர்கள் மட்டுமே பர்மாவில் இந்த சிறப்பு பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.

இரண்டாம் உலகப் போர் உக்கிரமாக நடந்து கொண்டிருந்த போது ஜான்சிராணி படை இந்திய பர்மிய இம்பால் எல்லையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. அங்கு ஜான்சிராணி படையின் பெண்கள் கொரில்லாப் படையினரின் தாக்குதலைச் சமாளித்து எதிர்த் தாக்குதல் செய்ய வேண்டி வந்தது.
உணவு மற்றும் போர்ச் சாதனங்கள் சயாமிய இரயில் பாதை வழியாகத் தான் கொண்டு வரப்படும். அந்தப் பாதையும் தகர்க்கப்பட்டு விட்டது. பசியின் கொடுமையால் ஜான்சிராணி படையினர் காட்டில் கிடைத்த பழங்களைச் சாப்பிட்டனர்.

பழங்களின் நச்சுத் தன்மை காரணமாகப் பெரும்பாலோருக்கு வயிற்றுப் போக்கு; வாந்தி. இந்த நிலையில் பெண்கள் படை எதிரிகளிடம் சிக்கிக் கொள்ளும் ஓர் ஆபத்தான நிலையும் ஏற்பட்டது. எந்த ஒரு பெண்ணும் எதிரிகளிடம் சிக்கிவிடக் கூடாது என்று நேதாஜி நினைத்தார்.

ஜான்சிராணி படையினரை மலாயாவுக்குத் திரும்பி வருமாறு நேதாஜி கட்டளை பிறப்பித்தார். இருப்பினும் படையின் தலைவி கேப்டன் இலட்சுமி சுவாமிநாதன் நேதாஜியின்  கட்டளையை ஏற்க மறுத்து விட்டார். அதற்கும் காரணம் இருந்தது. நேதாஜியின் கட்டளை மீறப்பட்டது அதுவே முதன்முறையாகும்.

பெண்கள் பலர் பசி பட்டினியால் நடக்கக் கூட முடியாத நிலையில் இருந்தனர். இரயில் சேவையும் இல்லை. கடல் வழியாகவும் மலாயாவுக்குத் திரும்பிப் போக முடியாது. ஆங்கிலேயர்கள் வான்வழியாகவும் தாக்குதல் நடத்திக் கொண்டு இருந்தனர்.

காட்டு வழியாகத் தான் திரும்பி வர வேண்டும். அதுவும் இயலாத காரியம். கரடு முரடான காட்டுப் பாதை. காட்டு விலங்குகள் கடந்து போகும் காட்டுப் பாதை. அதனால் தான் நேதாஜியின் வேண்டுகோளைக் கேப்டன் லட்சுமி மறுத்தார்.

மருத்துவமனை என்பதைக் குறிக்க பொதுவாக அதன் கூரையில் செஞ்சிலுவைச் சங்க அடையாளம் குறிக்கப்பட்டு இருக்கும். எதிரி விமானங்கள் அதன் மீது குண்டுகளைப் போட மாட்டார்கள். அது நாடுகளுக்கு இடையே செய்து கொள்ளப்பட்ட ஒரு போர்க் கால சாசனம். ஓர் இரவு அந்த மருத்துவமனையின் மீது வானில் இருந்து ஆங்கிலேயர்கள் குண்டுகளை வீசினார்கள்.

மருத்துவமனை தரைமட்டமானது. அங்கே சிகிச்சை பெற்று வந்த இந்திய தேசிய இராணுவத் தளபதிகளில் ஒருவரான எல்லப்பா மிகக் கடுமையாகப் பாதிக்கப் பட்டார். அவர் ஏற்கனவே துப்பாக்கிக் குண்டுகள் பட்டு அங்கே தான் சிகிச்சை பெற்று வந்தார்.

ஆங்கிலேயக் கொரில்லப் படையின் குண்டு வீச்சுகளால் மேலும் பெண்கள் சிலர் கொல்லப் பட்டனர். அந்தச் சண்டையில் கோவிந்தம்மாள் தப்பித்துக் கொண்டார். ஆனால் அவரின் உயிர்த் தோழிகளான ஸ்டெல்லா என்பவரும் ஜாஸ்மின் என்பவரும் கொல்லப் பட்டார்கள். கோவிந்தம்மாள் இறக்கும் வரையில் அந்த நிகழ்ச்சியை அடிக்கடி சொல்லி வந்தார்.

1945-ஆம் ஆண்டு ஆகஸ்டு 16-ஆம் தேதி ஜான்சி ராணிப் படை கலைக்கப் பட்டது. 1945-ஆம் ஆண்டு அக்டோபர் 1-ஆம் தேதி வரை கோவிந்தம்மாள் ஜான்சி ராணிப் படையில் சேவை செய்தார். பின்னர் 1949-ஆம் ஆண்டில் தன் கணவர் மற்றும் 6 குழந்தைகளுடன் கோவிந்தம்மா தமிழகம் வந்தார்.

இந்திய மத்திய அரசின் தியாகி பட்டம் பெற்றார். ஆனால் மத்திய அரசு ஓய்வு ஊதியம் தர மறுத்து விட்டது. இருந்தாலும் மத்திய அரசிற்குப் பதிலாக 1970-ஆம் ஆண்டு தமிழக அரசு கோவிந்தம்மாளுக்குத் தியாகிகள் ஓய்வூதியம் வழங்கியது. பல முறை மனு செய்தும் மத்திய அரசின் மருத்துவ உதவி, இலவச வீட்டுமனை போன்ற உதவிகள் கோவிந்தம்மாளுக்குக் கிடைக்கவில்லை.

1960-ஆம் ஆண்டில் நடந்த ஒரு சாலை விபத்தில் கோவிந்தம்மாளின் கணவர் இறந்து போனார். அவரின் கணவர் ஒரு லாரி டிரைவர் ஆகும். வேறு வழி இல்லாமல் கோவிந்தம்மாள் கூலி வேலைகள் செய்தார். தன் 4 மகள்கள் 2 மகன்களையும் படிக்க வைத்தார். பின்னர் அவர்களுக்குத் திருமணம் செய்து வைத்தார்.

அதன் பின்னர் கோவிந்தமாள் ஒரு பள்ளியில் மதிய உணவு சமைப்பது; மாவு மில்லில் கூலி வேலை செய்வது என பல்வேறு பணிகளைச் செய்தார். ஒரு கட்டத்தில் வயோதிகம் காரணமாக எந்த வேலையும் செய்ய முடியாமல் போனது. மாநில அரசு வழங்கும் சொற்ப ஓய்வூதியத்தைப் பெற்று வாழ்ந்து வந்தார்.
வறுமையில் வாடிய கோவிந்தம்மாள் முதுமையின் காரணமாக 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 1-ஆம் தேதி மதியம் 3:00 மணிக்கு வேலூர் மாவட்டம் ஆம்பூரில் உள்ள கிருஷ்ணாபுரத்தில் காலமானார். அப்போது அவருக்கு வயது 89.

நாட்டின் விடுதலைக்காக தன்னுடைய சொத்துக்களை வழங்கியவர் தியாகி கோவிந்தம்மாள். கடைசி காலத்தில் தமிழக அரசு தனக்கு ஒரு வீடு கட்டி தர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். கடைசி வரை அந்த வேண்டுகோள் நிறைவேற்றப்படவே இல்லை என்பது ஒரு வரலாற்றுச் சோகம்.

தன்னுடைய சொத்துக்களை எல்லாம் இந்திய நாட்டின் தேசிய விடுதலைக்காக அர்ப்பணித்த கோவிந்தம்மாள் கடைசி வரையில் சொந்த வீடு இல்லாமலேயே வாழ்ந்தார். மரணிக்கும் தருவாயில் ஆறடி நிலம் கூட இல்லாமல் தான் மறைந்து போனார்!

இந்திய நாட்டின் விடுதலைக்காகத் தங்களின் உயிர்களைப் பணயம் வைத்த தியாக சீலர்கள் எப்படி எல்லாம் கஷ்டப்பட்டு இருக்கிறார்கள். கண்ணீரையும் செந்நீரையும் சிந்தி இருக்கிறார்கள். நினைத்துப் பார்க்கவே மனதிற்கு கஷ்டமாக இருக்கிறது.

அப்படி தியாகம் செய்தவர்களில் பலர் எப்போதும் நம்முடன் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் தான் கோவிந்தம்மாள்.

No comments:

Post a Comment