14 November 2017

சிவப்பு சேலைகளும் முரட்டுக் காளைகளும்

சில வருடங்களுக்கு முன்னால் நடந்தது. மயிர் கூச்செறியச் செய்யும் ஒரு நிகழ்ச்சி. அவள் பெயர் சோமியா. நடமாடும் நாட்டியச் சிலை. ஆள் கொஞ்சம் சிவப்பு. அவளுக்குப் பிடித்தக் கலரும் சிவப்பு. அவள் விரும்பிப் பார்ப்பதும் சிவப்பு. விரும்பிப் பழகுவது சிவப்பு. எதிர்ப்பார்ப்பதும் சிவப்பு. கனவு காண்பதும் சிவப்பு. 


சும்மா சொல்லக்கூடாது. கறுப்பிலே பிறந்து கறுப்பிலே வளர்ந்தவள். ஆனால் என்ன. சிவப்பிலே மிதந்து சிவப்பிலே பறக்கிற மாதிரி மயக்க நிலை. இவள் மட்டுமா. இன்னும் எத்தனையோ சிவப்புக் கலர் மேனா மினுக்கிகள் இப்போதும் இருக்கவே செய்கிறார்கள்.

பிரிக்பீட்ஸ் பக்கம் போய்ப் பாருங்கள். தெரியும். அப்படியே போக ஆசைப் பட்டால் தயவு செய்து கையோடு ஒரு பிலாஸ்டிக் பையையும் எடுத்துச் செல்லுங்கள். ஒரு நாள் சோமியா சிவப்பு சேலையைக் கட்டிக் கொண்டு தோட்டத்துச் சிவப்பு செம்மண் சாலையில் நடந்து போனாள்.

திடீரென்று எங்கிருந்தோ ஒரு முரட்டுக் காளை. கயிறை அவிழ்த்துக் கொண்டு நாலு கால் பாய்ச்சலில் பாய்ந்து வருகிறது. அந்தக் காளை சோமியாவைப் பார்த்து பாய்ந்து வருகிறதா இல்லை அவள் கட்டி இருக்கிற சிவப்பு சேலையைப் பார்த்துப் பாய்ந்து பாய்கிறதா. தெரியவில்லை.

பாவம் சோமியா. அலறி அடித்துக் கொண்டு ஓடுகிறாள். சிவப்பு சேலை காற்றில் பறக்கிறது. காளையும் பறக்கிறது. சோமியா ஓட, காளை விரட்ட, சோமியா கத்த, காளை கர்ஜிக்க; அங்கே ஆடு புலி ஆட்டம். தேவர் பிலிம்ஸ் தோற்றது போங்கள்.அந்த நேரம் பார்த்து ஓர் அதிசயம். திடீரென்று ஒரு வாட்டம் சாட்டமான இளைஞன் எங்கேயோ இருந்து மின்னலைக் கிழித்துக் கொண்டு வந்தான். சமூகத்தின் கறைகளைத் துகில் உரிக்கின்ற கர்ம வீரன் கடையப்பா. அவன் எப்படி அங்கே வந்தான்?

அந்தக் கதை இதுவரை யாருக்கும் தெரியாது. அந்த ரகசியம் சிதம்பரத்தில் இருக்கும் நடராஜாவிற்குக் கூட தெரியாதாம். தொடர்ந்து படியுங்கள்.

காளையின் வேகம்; அதன் கால்களின் அழுத்தம்; இரண்டும் கலந்ததால் மண்ணில் தீச்சுவாலைகள். காற்று மண்டலத்தில் அக்கினிப் புகைச்சல். சுற்று முற்றும் சுனாமி பேரலைகளின் இரைச்சல்.மதம் பிடித்து விரட்டும் காளையின் கழுத்தில் தொங்கிய கயிற்றைத் தன் இடது காலால் ஒரே அழுத்தாக அழுத்துகிறான் கடையப்பா. அவ்வளவுதான். காளை கப்சிப். தலைகுனிந்து தடுமாறிப் போய் நிற்கிறது.

அப்புறம் என்ன. நாலு கால்களைத் தேய்த்துக் கொண்ட முரட்டுக் காளை தன்னுடைய முதுகை முருங்கை மரத்தில் தேய்த்துக் கொள்கிறது.  இரண்டு காலைத்  தேய்த்துக் கொண்ட மனிதக் காளை பெண்ணிடம் முறுக்கிக் கொள்கிறது. 

இது ஒரு தமிழ்ப் படத்தில் வந்த காட்சி மாதிரி இருக்கலாம். சத்தியமாக எனக்கு எதுவும் தெரியாது. 1960-களில் மலாக்கா காடிங் தோட்டத்தில் நடந்த நிகழ்ச்சியாக இருக்கலாம். அல்லது ஒரு திரைக் காட்சியாகவும் இருக்கலாம். எப்படி வேண்டும் என்றாலும் வைத்துக் கொள்ளலாம்.ஆனால் காலா காலத்திற்கும் இயற்கையின் நியதிகளை மிஞ்சிப் போகும் சில அதிசயமான படக் காட்சிகளின் பட்டியலில் அதையும் சேர்க்கலாம். சரிங்களா.

அது ஒரு சினிமாக் கதை என்றே வைத்துக் கொள்வோம்.. சினிமா ஒரு தொழில். அவர்கள் கதை சொல்கிறார்கள். நாமும் பதினெட்டு பட்டியைக் கூட்டிக் கொண்டு போய் பார்க்கிறோம், கேட்கிறோம். அவ்வளவுதான். அதில் உள்ள நல்லவற்றை ஏற்றுக் கொள்வோம். கெட்டவற்றை விட்டுத் தள்ளுவோம். இப்போதைக்கு கேள்வி இதுதான்.

கேள்வி: சிவப்புச் சேலை கட்டிய பெண்களை மாடுகளுக்கு ஏன் பிடிப்பது இல்லை?

பதில்: கண் பார்வை இல்லாத ஒருவருக்கு அமாவாசையும் தெரியாது. பௌர்ணமியும் தெரியாது. அந்த மாதிரி மாடுகளுக்கு நீல நிறம் தெரியும். பச்சை நிறம் தெரியும். மஞ்சள் நிறம் தெரியும். ஆனால், சிவப்பு நிறம் மட்டும் தெரியவே தெரியாது. இதைப் பற்றி பலர் பல கோணங்களில் பார்த்து விட்டனர். பல கருத்துகளைச் சொல்லியும் விட்டனர். ஆனால் இந்த முறை அறிவியல் கோணத்தில் போய் அது என்ன சொல்கிறது என்று சற்று ஆழமாகப் பார்ப்போம்.   

சிவப்பு சேலை அல்லது சிவப்பு பாவாடைகளைப் பார்த்து காளை மாடுகள் முட்ட வரும் என்பது எல்லாம் காலாவதியான நம்பிக்கை. மூட நம்பிக்கை என்று சொல்ல மாட்டேன். முற்றிலும் தவறான நம்பிக்கை என்று சொல்வதே சரி.

விலங்கினத்தில் மாடுகள் இனம் வித்தியாசமானது. மாற்றுப் பார்வை கொண்ட ஒரு விலங்கினம். மாடுகள் சிவப்பு, பச்சை நிறக்குருடு இனத்தைச் சேர்ந்தவை.  ஆங்கிலத்தில் Red-Green Color Blindness என்று சொல்வார்கள்.

அதாவது மாடுகளுக்கு சிவப்பு நிறமும் பச்சை நிறமும் சுத்தமாகத் தெரியவே தெரியாது. அவை பார்க்கும் எல்லாமே நீலம், மஞ்சள், சாம்பல் நிறத்தில் தான் தெரியும். அதனால் மாடுகளை Dichromacy எனும் உயிரியல் பிரிவில் சேர்த்து இருக்கிறார்கள். இன்னும் விளக்கமாகச் சொல்கிறேன். மாடுகளின் கண்களில் இருக்கும் விழித் திரையில்  சிவப்பு நிறமிகள் (retinal red pigment) இல்லை. சிவப்பு நிறமிகள் இல்லாததால் எந்த ஒரு சிவப்பு பொருளைப் பார்த்தாலும் அதற்குச் சாம்பல் கலந்த பச்சையாகத் தான் தெரியும். மறுபடியும் சொல்கிறேன். மாடுகளுக்கு சிவப்பு நிறம் தெரியவே தெரியாது. இது உயிரியல் அறிஞர்கள் கண்டுபிடித்த உண்மை.

ஆகவே மாடுகளை நிறக்குருடு இனத்தின் Protanopia அல்லது Deuteranopia எனும் பிரிவில் சேர்த்து இருக்கிறார்கள். சிவப்பு நிறத்திற்குப் பதிலாக பச்சை நிறம் தெரிவதால் மாடுகளை மேற்சொன்ன பிரிவில் சேர்த்து இருக்கிறார்கள். 

சில விலங்குகளுக்கு நீல நிறத்திற்குப் பதிலாக மஞ்சள் நிறம் மட்டுமே தெரியும். அவற்றை Dichromacy நிறக்குருடு இனத்தின் Tritanopia பிரிவில் இணைத்து இருக்கிறார்கள். 

  
Image result for color blindness

மனிதர்களிலும் சிவப்புக் குருடு, நீல நிறக் குருடு உள்ளவர்கள் இருக்கின்றனர். அவர்களில் சிலருக்கு போக்குவரத்து விளக்கில் உள்ள சிவப்பு நிறம் தெரியாது. சிவப்பு நிறம் மஞ்சளாகத் தான் தெரியும். சிலருக்குச் சாம்பலாகத் தெரியும். இது ஒரு வகையான பரம்பரை நோய்.

ஒரு குழந்தை ஆணாகப் பிறப்பதற்கும் அல்லது பெண்ணாகப் பிறப்பதற்கும் உள்ள மூலக்கூறு ஒரு தந்தையிடம் தான் இருக்கிறது. X - Chromosome, Y - Chromosome  எனும் X – Y நிறமிகள்.

இந்த நிறமிகளும் ஒரு தந்தையிடம் மட்டுமே இருக்கின்றன. தாயாரிடம் இல்லை. X நிறமி என்பது ஓர் ஆண் குழந்தையை உருவாக்குகிறது. Y நிறமி என்பது ஒரு பெண் குழந்தையை உருவாக்குகிறது.

தாயிடம் இருப்பவை இரண்டுமே X – X நிறமிகள். Y நிறமி என்ற எதுவும் இல்லை.

இதில் தந்தையின் X நிறமியும் தாயாரின்  X நிறமியும் சேரும் கட்டத்தில் தான் பிறக்கும் குழந்தைகளுக்கு நிறக் குருடு அல்லது நிறமாலை ஏற்படுவதாக ஆய்வுகள் சொல்கின்றன. 

Image result for color blindness

இந்த நிறக் குருடு எப்படி ஏற்படுகிறது என்பது தெரியும். ஆனால் ஏன் ஏற்படுகிறது என்பது மட்டும் தெரியவில்லை. புரியாத புதிர். இந்த நிறக் குருடு மனிதர்களில் பத்து பேரில் ஒருவருக்கு ஏற்படுகிறது.

ஆனால் விலங்குகளுக்கு அப்படி அல்ல. விலங்கினம் தோன்றிய காலக் கட்டத்தில் இருந்தே நிறக் குருட்டுத் தன்மை இருந்து வருகிறது. மாடுகளுக்குப் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே இந்த சிவப்பு நிறக் குருட்டுத் தன்மை இருக்கிறது.

ஆகவே சிவப்பு சேலை கட்டிய பெண்ணை மாடு முட்ட வருகிறது என்பது எல்லாம் ஒரு தவறான நம்பிக்கை.

சேலையின் அசைவுகளைப் பார்த்து தான் மாடு மிரள்கிறது. சேலையினால் தன் உயிருக்கு ஆபத்து வரும் என நினைத்து தன்னைத் தற்காத்துக் கொள்ள மாடு முட்ட வருகிறது. அவ்வளவுதான். மனதில் பட்டதைச் சொல்கிறேன். மன்னிக்கவும். இந்தச் சேலைகளினால் ஆடு மாடுகளுக்குப் பெரிய பிரச்சனை எதுவும் இல்லை. மனித இனத்தில் மட்டுமே இந்தச் சேலைப் பிரச்சனை. மனித இனத்தைச் சேர்ந்த ஆண்களுக்குத் தான் இந்த அடிதடி, வெட்டுக்குத்து என்று ஆயிரம் பிரச்சனைகள்.

மனிதனைவிட ஒரு சில பறவைகளுக்கும் தேனீக்களுக்கும் கண் பார்வை மிகத் தெளிவாக இருக்கும். மனிதக் கண்களுக்கு புலப்படாத Ultra Violet Rays எனும் புற ஊதா கதிர்களையும் அவற்றால் பார்க்க முடியும்.

நாய்கள், பூனைகள், எலிகள், முயல்கள் போன்ற பிராணிகளுக்கு கண் பார்வை மிகவும் குறைவு. நிறக் குருட்டுப் பிராணிகள். அவற்றுக்கு நீலம், மஞ்சள், சாம்பல் நிறங்கள் மட்டுமே தெரியும். அந்த நிறங்களை மட்டுமே கிரகிக்க முடியும்.

இதில் மனித இனத்திற்கு ஸ்பெஷல் அமைப்பு. அடிப்படை நிறங்களான நீலம், பச்சை, சிவப்பு மூன்று நிறங்களைக் கிரகிக்கும் தன்மை கொண்டவன். ஆகவே தான் மனிதனால் அனைத்து நிறங்களையும் பார்க்க முடிகிறது.


மனிதக் கண்களால் பத்து இலட்சம் நிறங்களைப் பார்க்க முடியும். சில வகை வண்ணத்துப் பூச்சிகள், தேனீக்கள் போன்றவை நூறு இலட்சம் நிறங்களைக்கூட பார்க்க முடியுமாம்.  
 

சிவப்பு நிறத் துணியை அல்லது சேலையை காளை மாட்டிற்கு முன் காட்டினால் அதற்கு அது கருமையாகவே தெரியும். அது கூட கடுமையான கறுப்பு நிறமாக தெரியாது. ஆக காளை மாடுகள் நீலம், பச்சை இரண்டு நிறங்களை மட்டுமே கிரகித்து உணரும் சக்தி கொண்டவை. சிவப்பு நிறத்திற்கு ‘சான்ஸே இல்லை’.

இனியும் யாராவது இந்த ’காளை மாடு சிவப்பு சேலை’ விவகாரத்தில் தர்க்க வாதம் செய்தால் மேலே சொன்ன அறிவியல் உண்மைகளைச் சொல்லுங்கள். அதையும் அவர்கள் நம்பாமல் எதிர்வாதம் செய்தால் கவலைப்பட வேண்டாம். 

அடுத்த பிறப்பில் ஒரு பூனையாக, ஓர் எலியாக, ஏன் ஒரு காளை மாடாக பிறப்பதற்கு இப்போதே டிக்கட் வாங்கி விட்டார்; எஞ்சிய காலத்திற்கு இங்கேயே ஒத்திகை நடத்துகிறார் என்று நினைத்துச் சமாதானம் அடையுங்கள்.

அந்த மாதிரியான மனிதர்களிடம் கொஞ்சம் எச்சரிக்கையாகவே இருங்கள். ஏன் என்றால் எங்கேயோ போகிற சிவப்பு சேலையைப் பார்த்து திசை மாறி உங்கள் மீதே பாய வரலாம். எதற்கும் கடையப்பாவின் டெலிபோன் நம்பரை ரெடியாக வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்!

No comments:

Post a Comment