12 மே 2018

மலேசிய இந்தியர்களின் மாற்றம்

மாற்றம் ஒன்றே மாறாதது. இரவு பகலாகிறது. பகல் இரவாகிறது. பூ காயாகிறது. காய் கனியாகிறது. கனி செடியாகிறது. செடி மரமாகிறது.

ஒரு குழந்தை பெண் ஆகிறாள். ஒரு பெண் தாய் ஆகிறாள். ஒரு தாய் பாட்டி ஆகிறாள். இளமை தேய்கிறது. முதுமை சாய்கிறது. அந்த முதுமை அப்படியே நலிந்து போய் மக்கி மண்ணாகிப் போகின்றது.


அந்த இடத்தில் புல்லும் பூக்கிறது. பூண்டும் பூக்கிறது. மறுபடியும் அங்கே ஒரு மாற்றம் மலர்கின்றது. இதைத் தான் மாற்றம் ஒன்றே மாறாதது என்று சொல்கிறோம்.

மலேசியவாழ் இந்தியர்கள் ஒரு மாற்றத்தை நோக்கிப் பயணிக்க வேண்டிய ஓர் இக்கட்டான சூழ்நிலையில் வாழ்ந்தார்கள்.

கடைசியில் தங்களின் இன உரிமைப் போராட்டத்தில் களம் இறங்க வேண்டிய ஓர் இறுக்கமான ஓர் இக்கட்டான சூழல். அவர்களின் எதிர்காலச் சந்ததியினருக்காக ஒரு மாற்றத்தைச் செய்ய வேண்டிய ஓர் அர்ப்பணிப்பு நிலை. ஒரு விழிப்புணர்வு நிலை.



ஆக மாற்றம் என்பதே நேற்று வரை மலேசிய இந்தியர்களின் ஒரு மாற்றுச் சிந்தனை இலக்காகவே இருந்தது. ஒரு நல்ல ஒரு மாற்றம் வர வேண்டும் என்று நம்பிக்கை வைத்தார்கள். மாற்றியும் காட்டி விட்டார்கள். மாற்றி அமைத்த மலேசிய மக்களுக்கு நன்றிகள் ஆயிரம்.

அவர்களின் கோப தாபங்கள்; அவர்களின் இனப் பின்புலங்கள்; அவர்களின் சமூகக் கோட்பாடுகள்; அவர்களின் தனிமனித உணர்வுகள்; இவற்றை எல்லாம் ஒதுக்கித் வைத்தார்கள்.

அரசியல்வாதிகள் அவ்வப்போது ஆங்காங்கே அள்ளித் தெளித்த அற்ப காசுக்கு விலைபோன வீரமற்ற விளம்பரக் கூஜா தூக்கிகளை நினைத்துப் பார்த்தார்கள்.


ஆண்மை இழந்த ஒரு சில சமூகத் தலைவர்களையும் நினைத்துப் பார்த்தார்கள். உல்லாச வாழ்க்கை வாழ்வதற்கு அப்பாவிப் பொது மக்களிடம் காட்டிய அநியாயங்களை அப்படியே மறைத்து அரசியல்வாதிகளுக்கு ஆலாபனை செய்த அந்த அடிவருடிகளை நினைத்துப் பார்த்தார்கள்.

வேசிகள் எப்படி தம் உடல்களை விற்றுப் பணம் சம்பாதிக்கிறார்களோ அதே போல் இந்தக் அடிவருடிகளும் பணம் சம்பாதித்தார்கள்.

அரசியல்வாதிகளின் அநியாயத்தை தட்டிக் கேட்க, பொதுமக்கள் அனைவரும் வீதியில் இறங்கினார்கள். செருப்பால் அடிக்காத குறை. எச்சில் உமிழ்ந்தது போல் ஆட்சியை மாற்றி அமைத்தார்கள்.



 22 ஆண்டுகள் ஆட்சி செய்த துன் மகாதீர் மட்டும் தப்பு செய்யவில்லையா என்று பலரும் கேட்டார்கள். எவர் தான் தவறு செய்யவில்லை. சொல்லுங்கள்.

தலையே போய்க் கொண்டு இருந்தது. இதில் அப்படி என்னங்க முழங்கால் போகிறது முண்டம் போகிறது என்கிற பேச்சு. அணை உடைந்து வெள்ளம் வீட்டு வாசல் வரை வந்து கதவைத் தட்டிப் பார்க்கின்றது. சும்மா இருக்கலாமா.

அந்தச் சமயத்தில் மழை ஏன் வந்தது எப்படி வந்தது என்று எல்லாம் ஆராய்ச்சி பண்ணலாமா. கடந்து போனதைப் பற்றி பேசுவதில் அர்த்தமும் இல்லை. இப்படி கேட்டுக் கொண்டே இருந்தால் ஆகப் போவது ஒன்றும் இல்லை. நிலைமை மேலும் மோசமாகிப் போகும் என்று முடிவு செய்தார்கள்.



 ஒன்று மட்டும் உண்மை. நஜீப் பிரதமராய் இருந்த காலக் கட்டத்தில் எக்கச் சக்கமான கொள்ளைக்காரர்கள். மலிந்து போய் கிடந்தார்கள். தடுக்கி விழுகிற இடத்தில் எல்லாம் திருட்டு மாங்காய்கள்.

மகாதீர் கொள்ளை அடித்தார். இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் நாட்டை நன்றாகப் பார்த்துக் கொண்டார். நஜீப் மாதிரி இப்படி ஒரு மோசமான நிலைக்கு நாட்டைக் கொண்டு செல்லவில்லை. விலைவாசியை ஏற்றி வைத்துச் சங்கை அறுக்கவில்லை.

இப்படியே விட்டால் இந்த நாடு விரைவில் திவாலாகி விடும். 100% உண்மை. காசு பணம் உள்ளவர்களுக்கே பிரச்சினை என்றால் பாவம் ஏழை எளியவர்கள் என்னங்க செய்வார்கள் என்று சொல்லி ஒட்டு மொத்த மலேசியர்களும் விழித்துக் கொண்டார்கள்.



மகாதீர் என்பவர் தன் தவற்றை உணர்ந்து விட்டார். தான் கண்ணை மூடுவதற்குள் இந்த நாட்டை மீட்டு எடுக்க வேண்டும் என்பதே அவரின் அப்போதைய தீர்க்கமான நோக்கம். அவரின் இந்த 93 வயதிலும் களம் இறங்கி உள்ளார் என்பதே ஒரு பெரிய விசயம். அவருக்கு உதவியாக மலேசிய மக்கள் ஆதரவு கரம் நீட்டினார்கள். வெற்றியும் பெற்றார்கள்.

அன்பான வாசகர்களே உங்களிடம் ஓர் அன்பான வேண்டுகோள். உங்கள் வீட்டில் அப்பா அம்மா, தாத்தா பாட்டி மற்ற எல்லோரிடமும் இப்போது நம் நாடு இருக்கும் உண்மையான நிலைமையை விவரமாக எடுத்துச் சொல்லுங்கள்.

இந்த நாட்டின் இப்போதைய அரசியல் நிலவரம் பற்றி சரியாகத் தெரியாமல் அந்தப் பெரியவர்கள் எஞ்சிய காலத்தை நகர்த்திக் கொண்டு இருக்கிறார்கள். உண்மை நிலையை எடுத்துச் சொல்லுங்கள்.



ஒன்றை மட்டும் நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள். மகாதீர் அரசியல் அனுபவம் இல்லாதவர் அல்ல. அவரின் பொறுப்பு ஏற்று இருக்கும் தலைமைத்துவத்திற்குத் துணிந்து தொடர்ந்து ஆதரவு வழங்குவோம்.

அவர் வந்தால் மட்டும் தான் இந்த நாட்டைக் காப்பாற்ற முடியும் என்று பெரும்பாலான சீனர்களும், மலாய்க்காரர்களும் அன்றும் இன்றும் திண்ணமாக திடமாக நம்பினார்கள்.

அவர் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்து அவருடன் அணிவகுத்துச் செல்ல தயாராகி விட்டார்கள். அவர்களைப் போல நாமும் மகாதீர் மீது நம்பிக்கை வைப்போம். செயல் படுவோம். அவருக்கு ஆதரவாக இருப்போம்.



நம் இந்திய இளையோர்களிடம் காணப்படும் நடைமுறை விழிப்புணர்வு நம் பெரியவர்களிடம் மிதமாகவே குறைந்து காணப் படுகிறது. சஞ்சிக்கூலிகளாய் வந்த காலத்தில் இருந்தே தாய்க் கட்சிக்குதான் ஆதரவு என்று சொல்கிறார்கள். இருக்கட்டும். வேண்டாம் என்று சொல்லவில்லை.

இப்போதைய சூழ்நிலையில் இப்போது நாடு இருக்கும் சூழலில் ஒரே ஒரு மாற்றத்தைச் செய்து காட்ட வேண்டும். அதுதான் நம்முடைய இப்போதைய பணிவான வேண்டுகோள். செய்து காட்டிவிட்டோம். ஆனால் தொடர வேண்டும்.

உயர் மட்டத்தில் இருக்கும் ஒரு சிலர் பொது மக்களை ஏமாற்றி அவர்களின் பணத்தைக் கொள்ளை அடித்து மாட மாளிகைகள் கட்டி நாட்டையே சீரழித்து விட்டார்கள். இந்த விசயம் அந்தப் பெரியவர்களுக்குச் சரியாகத் தெரியவில்லை. பட்டும் படாமல் இருக்கிறார்கள். ஆகவே உண்மையான நிலவரம் அவர்களுக்குத் தெரிய வேண்டும்.



 இனிமேலும் மகாதீரின் பழைய குற்றங்களைப் பார்த்து ஒன்றும் நடக்கப் போவது இல்லை. அவரை விட்டால் தலைமை தாங்க இப்பொதைக்கு வேறும் யாரும் இல்லை. இப்போதைக்கு மகாதீர் மட்டுமே சரியான நேரத்தில் சரியான தலைவர். இவரைத் தவிர வேறு யாரும் இப்போதைய நடைமுறை தலைமைத்துவத்தை வழிநடத்த முடியாது.

அன்வார் அவர்கள் சிறையில் இருக்கிறார். தலைமை ஏற்க முடியாது. வான் அசிசா அவர்களால் முடியும். ஆனால் இப்பேர்ப்ப்ட்ட களேபரத்தில் அவர் துணிய வேண்டும். முடியுமா என்பதும் ஒரு பெரிய கேள்விக்குறி.

அனேகமாக அன்வார் அவர்களுக்கு நாளை அரசு மன்னிப்பு கிடைக்கலாம்.

மகாதீர் அவர்கள் இப்போதைய அரசியல் நிலையை நன்றாகத் தெரிந்து கொண்ட பின்னர் தான் திரும்பவும் அரசியலுக்கு வருகிறார். ஆக மீண்டும் தவறு செய்ய மாட்டார் என்று நம்புவோம்.



முதலில் நாம் பிறந்த இந்தப் பச்சை மண்ணிற்காக ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும். தமிழர்கள், சீனர்கள், மலாய்க்காரர்கள் என்று பேதத்தை இப்போதைக்கு நினைத்துப் பார்க்க வேண்டாம். நம்முடைய இலக்கு என்பது ஒரு மாற்றம். அதை மட்டுமே கூர்ந்து அணுகிப் பயணிப்போம்.

ஒரு தடவை அல்ல ஆயிரம் தடவை யோசித்துப் பாருங்கள். நம் எதிர்காலத்திற்கும் நம் பிள்ளைகளின் எதிர்காலத்திற்கும் நாம் மாறித் தான் ஆக வேண்டும். வேறு வழி இல்லை.

இப்போதைய காலக் கட்டத்தில் நாம் சம்பாதிக்கும் பணத்தில் கொஞ்சம்கூட சேமிக்க முடியவில்லை. வேலை இடத்தில் நிம்மதியாக வேலை செய்ய முடியவில்லை. நிம்மதியாக சாப்பிட முடியவில்லை. நிம்மதியாக தூங்க முடியவில்லை. நாளைக்கு என்ன நடக்கப் போகிறதோ எனும் ஓராயிரம் கவலைகள்.

நாம் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு கணிசமான தொகை ஜி.எஸ்.டி. வரிக்கே போய்ச் சேர்கிறது. பொருட்களின் விலை அன்றாடம் ஏறிக் கொண்டே போகிறது.

எதைத் தொட்டாலும் பதை பதைக்கும் விலை. என்னதான் செய்வது என்று தெரியாமல் ஒவ்வொருவரும் விழிப் பிதுங்கித் தவித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

குடும்பத்திற்கு ஓர் ஆபத்து என்றால் என்ன செய்வது என்று தெரியாமல் வெம்பி வெதும்பி வேதனைப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

ஒன்று மட்டும் உண்மை. ஒரு சில உயர்மட்டப் பேர்வழிகள் பொது மக்களைத் தவிக்க விட்டு விட்டு அந்தப் பொது மக்களின் பணத்தில் ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருந்தார்கள். அநியாயம்.

அந்தப் பேர்வழிகளில் ஒருவர் தன் மனைவியின் அழகு சாதனங்களுக்கும்; அவரின் குடும்பத்தார் பயன்படுத்தும் விலையுயர்ந்த பொருட்களுக்கும்; மனைவியின் ஆடம்பரச் செலவுகளுக்கும் பொது மக்களின் பணத்தை விரயம் செய்து வந்தார்.

வியர்வையும் இரத்தமும் சிந்திய ஏழை மக்களின் வரிப்பணத்தில் இப்படியும் ஓர் ஆடம்பர வாழ்க்கையா. சொல்லுங்கள்.

நம்முடைய ஒவ்வொரு நாளின் அடிப்படை தேவைகளுக்கு நாம் இப்போது சம்பாதிக்கும் பணம் சத்தியமாகப் பற்றவில்லை. என்ன செய்வது. பட்டப் பகலிலேயே கொள்ளை அடிக்கும் கூட்டம் இருக்கும் வரையில் ஏழைகள் பரம ஏழைகளாகி வருகிறார்கள். இதுதான் சத்தியமான உண்மை.

ஆக ஒன்றை மட்டும் தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள். துன் மாகாதீர் தலைமை பீடத்தில் மட்டுமே நம் அனைவருக்கும் பாவ விமோசனம். அது ஒன்று தான் நம் எதிர்காலத்தின் தலையெழுத்தை மாற்றி அமைக்கும்.

நம் இந்தியச் சமுதாயத்திற்கு ஒரு மாற்றம் வேண்டும்; கண்டிப்பாக ஒரு மாற்றம் வரவேண்டும். இந்த நாட்டை பழைய நிலைக்கு கொண்டு வர வேண்டும்.

அதற்கு எப்படியும் குறைந்தது இன்னும் ஒரு பத்துப் பதினைந்து வருடங்களாவது பிடிக்கும். அந்தப் புனரமைப்பு பணி அப்படி ஒன்றும் எளிதான காரியம் அல்ல. நிர்வாகக் கட்டுக் கோப்பு மிக மிக அவசியம்.

வெளிநாட்டில் இருந்து வந்த வங்காளதேசிகளைப் பாருங்கள். இந்தோனேசியர்களைப் பாருங்கள். இந்த நாட்டிற்குக் கள்ளத் தனமாக வந்த ஆயிரக் கணக்கான பலர் இப்போது நீல நிற அடையாள அட்டைகளில் ஊர்க்கோலம் போகிறார்கள். ஞாயிற்றுக் கிழமையில் கோலாலம்பூர் வங்காளத் தேசிகளின் தலைநகரமாக மாறி விடுகிறது. போய்ப் பாருங்கள். தெரியும்.

இந்த வங்காளதேசிகள் நம் இனப் பெண்களிடமே அழகு காட்டி பல பெண்களின் வாழ்க்கையை நாசமாக்கி வருகிறார்கள். இன்னும் தொடர்கிறது. புத்தி கெட்ட நம் பெண்களும் பல்லைக் காட்டிக் கொண்டு போகின்றார்கள். எதைக் கழற்றி அடிப்பது என்று தெரியவில்லை.

அது மட்டும் இல்லீங்க. அப்படி ஒண்ட வந்த பிடாரிகளுக்கு எல்லாம் பணத்தை அள்ளிக் கொடுத்து ஓட்டுப் போட வசதியும் செய்து கொடுத்தார்களே. என்னங்க அநியாயம். என்னே கொடுமை.

ஆனால் இந்த நாட்டிலே பிறந்து இந்த நாட்டிற்கே தங்களின் உயிரையும் உடலையும் அர்ப்பணித்த இந்தியர்கள் பலருக்கு அடையாள அட்டை கொடுக்க வக்கு இல்லை. வெட்கம்.

நம்மவர்கள் பலர் இன்னும் சிவப்பு அட்டையில்தான் அழுது அழுது அழிந்து கொண்டு இருக்கிறார்கள்.

நமக்கும் சூடு சொரணை உண்டு. மலேசிய இந்தியர்கள் சோற்றில் உப்பு போட்டுத் தான் சாப்பிடுகிறார்கள் என்பதை நிரூபித்துக் காட்ட வேண்டும்.

நமக்கு கிடைத்த இந்த ஐந்தாண்டு கால வாய்ப்பை தவறவிட்டால் இன்னும் ஒரு வாய்ப்பு நமக்கு இனி நமக்கு கிடைக்கப் போவது இல்லை. ஆகவே மகாதீரின் பக்காத்தான் ஆட்சிக்கு ஆதரவு வழங்குவோம்.

ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். நீங்களும் நானும் போய் விடுவோம். நாம் போன பிறகு நம் பிள்ளைகள் அழுது அழுது நம்மைச் சபிக்க வேண்டுமா. சொல்லுங்கள்.

என் இந்திய இனம் இந்த மண்ணில் தலை நிமிர்ந்து நடக்க வேண்டும். என் சந்ததியினர் எதிர்காலத்தில் நெஞ்சை நிமிர்த்தி நடக்க வேண்டும். அதுதான் என்னுடைய நெஞ்சார்ந்த விருப்பம். இப்போதே ஒரு முடிவு செய்யுங்கள்.

மாற்றம் ஒன்றே மாறாதது

இந்த மண்ணின் எதிர்காலம்  சென்ற 9-ஆம் தேதி முடிவு செய்யப்பட்டு விட்டது. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று சொல்வார்கள். மலேசிய இந்தியர்கள் பலரும் தீர யோசித்து தீர்க்கமாக முடிவு செய்து விட்டார்கள்.

மக்களின் தீர்ப்பு தான் இந்த நாட்டின் தலையெழுத்தையே முடிவு செய்தது. நல்ல ஒரு முடிவை எடுத்து விட்டார்கள்.

மலேசிய இந்தியர்கள் எடுத்த முடிவு அவர்களின் எதிர்காலத்தை மட்டும் அல்ல; அவர்ளின் பிள்ளைகளின் எதிர்காலத்தை மட்டும் அல்ல, அவர்களின் பேரப் பிள்ளைகளின் எதிர்காலத்தை மட்டும் அல்ல; அவர்களின் எதிர்காலச் சந்ததியினரின் எதிர்காலத்தை மட்டும் அல்ல; இந்த நாட்டின் ஒட்டுமொத்த தமிழர்களின் எதிர்காலத்தையே மாற்றிப் போட்ட ஒரு முடிவாக அமைந்து போனது. மலேசிய இந்தியர்கள் எடுத்த முடிவை வாழ்த்துகிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக