23 July 2018

மணிப்பூர் தமிழர்கள்

இந்தியாவின் வடகிழக்கில் ஏழு மாநிலங்கள். அருணாச்சலப் பிரதேசம், அசாம், மேகாலயா, மிசோரம், நாகலாந்து, திரிப்புரா, மணிப்பூர். இவற்றை ஏழு சகோதரிகள் (செவன் சிஸ்டர்ஸ்) மாநிலங்கள் என்று அழைக்கிறார்கள். 


இந்த மாநிலங்களில் பர்மா எல்லையில் மிக ஒட்டி இருப்பது மணிப்பூர். இந்த மணிப்பூரில் தான் இப்போது 17,000 தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களைத் தான் மணிப்பூர் தமிழர்கள் என்று அழைக்கிறோம்.

இத்தனை ஆயிரம் தமிழர்கள் எப்படி அங்கே போனார்கள். ஏன் போனார்கள். எதற்குப் போனார்கள். ஒரு பெரிய வரலாறே இருக்கிறது. அது ஒரு சோகமான வரலாறு. தொடர்ந்து படியுங்கள்.

பர்மா தமிழர்கள் செல்வச் செழிப்பில் கொழித்தவர்கள். மற்ற மற்ற பர்மிய இனங்கள் மலைத்துப் போகும் அளவிற்கு மலை மலையாய்ச் சொத்துகளைக் குவித்தவர்கள். விருந்தோம்பலில் சிகரம் பார்த்தவர்கள். 


ஐம்பது அறுபது கோயில்களைக் கட்டிப் போட்டு அழகு பார்த்தவர்கள். அறுபது எழுபது தமிழ்ப்பள்ளிகளைக் கட்டிப் போட்டு தமிழுக்கு உச்சம் பார்த்தவர்கள். ஊரும் உலகமும் வியக்கும் வண்ணம் வாழ்ந்தவர்கள்.

ஆனால் ஒரே ஒரு நாளில் நடுத்தெருவிற்குத் தள்ளப் பட்டவர்கள்.

அறுபது வருடங்களுக்கு முன்பு நடந்தது. பர்மாவில் இராணுவ ஆட்சி. ஆயிரக் கணக்கான தமிழர்கள் தமிழ்நாட்டிற்கு நாடு கடத்தப் பட்டார்கள். தெரிந்த விசயம்.

தாய் மண்ணில் பிச்சைக்காரர்களாகப் போய் நின்றார்கள். அவர்கள் தான் பராசக்தி படக் கதையின் நிஜமான நிழல் பிம்பங்கள். வேதனை விளிம்புகளில் வேர் அறுக்கப்பட்ட விழுதுகள். விரக்தியின் உச்சத்தில் தற்கொலை செய்து கொண்டவர்கள் பலர். வேறு மாநிலங்களுக்கு ஓடிப் போனவர்கள் பலர்.


அவர்களில் சிலருக்குச் சென்னை வாழ்க்கை பிடிக்கவில்லை. செத்தாலும் நாங்கள் பர்மாவிலேயே செத்துப் போகிறோம் என்று சொல்லி பர்மாவிற்கே திரும்பிப் போனார்கள். வங்காள தேசம் வழியாகப் போனவர்கள் காடு மேடுகளையும் ஆறு மலைகளையும் கடந்து மணிப்பூர் - பர்மா எல்லை வரை சென்றார்கள்.

அதற்கு மேல் அவர்களால் போக முடியவில்லை. பர்மிய குடி நுழைவுத் துறையினர் அவர்களை எல்லையிலேயே தடுத்து நிறுத்தி விட்டார்கள். பர்மாவிற்குள் விடவில்லை.

மணிப்பூர் - பர்மா எல்லைக் கிராமம் மோரே. அந்த இடத்தில் அப்படியே தங்கி விட்டார்கள். அவர்கள் தான் மணிப்பூர் தமிழர்கள். அங்கே தங்கிய தமிழர்களின் சந்ததிகள் தான் மணிப்பூரில் இன்றும் வாழ்ந்து வருகிறார்கள். ஒரு மினி தமிழகத்தையே உருவாக்கி இருக்கிறார்கள். மணிப்பூர் பகுதிகளுக்கு  நிறைய பேர் வருவது இல்லை. ஏதோ அந்த மாநிலம் அண்டை நாடான சீனாவில் இருப்பது போல பலருக்கும் ஒரு பயம். சரி.

இந்த மணிப்பூர் தமிழர்களின் வரலாற்றைப் பற்றி கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம். மணிப்பூருக்குத் தமிழர்கள் வந்த கதை சோகம் கலந்த வியப்பான கதை.

நவீன வசதிகள் வந்துவிட்ட இன்றைய நாளில்கூட மோரே கிராமத்தைச் சென்று அடைவது அப்படி ஒன்றும் சாதாரண விசயம் அல்ல. ஆனால் 1960 - 1970-களில் எப்படி எல்லாம் தமிழர்கள் சிரமப்பட்டு மோரேவை சென்று அடைந்து இருப்பார்கள். நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது.

பிரிட்டனைச் சூரியன் அஸ்தமிக்காத நாடு என்று வெள்ளைக்காரர்கள் பெருமையாகச் சொல்லிக் கொள்வார்கள். கொடிகட்டி பறந்த நாடு. இப்போது கொஞ்சம் மங்கி விட்டது. ஒரு காலக் கட்டத்தில் தென் ஆப்பிரிக்கா, இலங்கை, மலாயா, சிங்கப்பூர், பிஜி, மொரிஷியஸ், ரீ-யூனியன் தீவுகள், பர்மா போன்ற நாடுகளுக்குத் தமிழர்கள் புலம் பெயர்ந்தார்கள்.

அந்த நாடுகளில் இருந்த கரும்பு, தேயிலை, ரப்பர் தோட்டங்களில் பலர் வேலை செய்தனர். சிலர் வியாபாரம் செய்தனர். சிறு சிறு குழுக்களாக; குடும்பம் குடும்பங்களாகத் தமிழர்கள் பல ஆண்டுகள் அங்கேயே தங்கினார்கள். சிறுகச் சிறுகப் பணம் சேர்த்தார்கள். சொத்துக்களை வாங்கிப் போட்டார்கள்.ஒரு கட்டத்தில் இந்த நாடுகள் காலனி ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டுச் சுதந்திரம் பெற்றன. இரண்டு மூன்று தலைமுறைகளாக வாழ்ந்து வந்த தமிழர்களுக்குப் பல நாடுகள் குடியுரிமை வழங்கி சிறப்பு செய்தன.

ஆனால் சில வக்கிரப்புத்தி பிடித்த நாடுகளும் இருக்கவே செய்தன. தமிழர்களை அந்நியராக நினைத்தன. தங்கள் வாய்ப்புகளைப் பறிக்க வந்த சண்டாளர்களாகக் கருதின. அவர்களைத் துன்புறுத்தி நாடு கடத்தின. அதில் ஸ்ரீலங்கா, பர்மா போன்றவை தனித்துவம் பெற்ற அரக்க புத்திகள்.

பர்மாவில் 1962-ஆம் ஆண்டு இராணுவப் புரட்சி. அதிகாரத்திற்கு வந்தவர்கள் தமிழர்களை நசுக்கிப் போட்டு விரட்டத் தொடங்கினார்கள். உழைத்துச் சம்பாதித்த தமிழர்களின் கோடிக் கோடியான சொத்துக்கள் பறிமுதல் செய்யப் பட்டன.  தமிழர்கள் வலுக்கட்டாயமாக கப்பலில் ஏற்றப் பட்டனர். இந்தியாவிற்கு மறு ஏற்றுமதி செய்யப் பட்டனர். மூன்று இலட்சத்திற்கும் அதிகமான தமிழர்களுக்கு மன உளைச்சல்கள்; அலைக்கழிப்புகள்; அங்கலாய்ப்புகள்.

அந்த வகையில் தமிழ்நாட்டில் நிறைய பர்மா தமிழர் காலனிகள் தோற்றுவிக்கப் பட்டன. அவற்றில் ஒன்று தான் இன்றைய பர்மா பஜார். தாய்நாட்டிற்குத் திரும்பி வந்தவர்களில் சிலருக்குத் தங்களின் பழைய வாழ்விடம், சொத்துக்களை மறக்க முடியவில்லை.

மீண்டும் பர்மா செல்லும் முயற்சிகளில் இறங்கினார்கள். கால்நடையாகவும் போகிற வழியில் கிடைக்கிற போக்குவரத்துகளையும் பயன்படுத்திப் பர்மாவிற்குச் செல்வது என்று முடிவு செய்த்தார்கள்.

மூன்று மாதம் நடையாய் நடந்து இந்தியாவின் வடகிழக்கே இருக்கும் மணிப்பூர் மாநிலத்தின் எல்லையை அடைந்தார்கள். அங்கு இருந்து பர்மாவின் தலைநகரம் ரங்கூனுடன் இணைக்கும் பாலத்தின் வழியாக பர்மாவுக்குள் செல்ல முயற்சி செய்தார்கள். ஆனால் பர்மிய இராணுவம் அவர்களைப் பர்மாவிற்குள் விடவில்லை. எல்லையில் இருந்த இராணுவத்தினரும் குடிநுழைவுத் துறையினரும் அவர்களை விரட்டி அடித்தனர்.

அங்கு இருந்து திரும்பி மறுபடியும் தமிழ்நாட்டிற்குப் போக பலருக்கு விருப்பம் இல்லை. இருந்தாலும் ஒரு சிலர் தமிழ் நாட்டிற்கே திரும்பிச் சென்றார்கள். ஒரு சிலர் அந்த நுழைவு பாலத்தை ஒட்டிய மோரே என்கிற பழங்குடியினர் கிராமத்திலேயே தங்கினார்கள். அப்படியே  அவர்களின் பிழைப்பு ஓடியது. இந்த மோரே கிராமத்தின் பரப்புளவு 7.38 சதுர கி.மீ. ஒரு செருகல்.

இரண்டாம் உலகப் போர் நடந்த போது நேதாஜியின் இந்திய தேசிய இராணுவம் இந்த மோரே கிராமப்புற நகரில் தான் தங்கியது. இந்திய தேசிய இராணுவத்தில் மணிப்பூர் தமிழர்களும் இணைந்து இந்திய விடுதலைக்கு போராடினார்கள். அதை இங்குள்ள  பாட்டிகள் இன்றும் கதை கதையாய்ச் சொல்கிறார்கள்.

மோரே நகருக்கு அருகில் சூரஜ்சந்த்பூர் எனும் சிறுநகரம். இந்த இரு இடங்களிலும் இந்திய தேசியப்படை வீரர்கள் முகாம் போட்டார்கள். அப்படியே பிரிட்டிஷ் படைகளை எதிர்த்தார்கள். நாகலாந்து வரை போனார்கள். ஐ.என்.ஏ. கொடிகளை நட்டு விட்டு வந்தார்கள்.

மோரே என்பது ஒரு சிறு கிராமப்புற நகரம். அங்கே தங்கிய தமிழர்கள் காலப் போக்கில் தங்களின் உறவினர்களையும் நண்பர்களையும் அழைத்துக் கொண்டார்கள். அப்போது அந்தக் கிராமத்தில் குக்கீஸ் என்கிற பழங்குடி இனத்தவர் வாழ்ந்து வந்தார்கள்.தொடக்கத்தில் தமிழர்களுக்கும் குக்கீஸ் பழங்குடிகளுக்கும் சலசலப்புகள். 1990-களில் மணிப்பூர் பூர்வீக இனக் குழுக்களின் ஆயுதப் போராட்டங்கள். இடையில் சிக்கிய தமிழர்கள் பலர் கொலை செய்யப் பட்டனர். மீண்டும் தமிழ்நாட்டுக்கே பலர் அகதிகளாகப் போய்ச் சேர்ந்தனர்.

இருந்தாலும் காலப் போக்கில் சமரசமானது. இரு தரப்பினரும் இப்போது இணைந்து வாழ்கின்றனர். இவர்களுடன் நேபாளிகளும், பஞ்சாபிகளும் சேர்ந்து கொண்டனர். இவர்களின் எண்ணிக்கை 200-க்கும் மேல் போகாது.

தமிழகத்தில் இருந்து வந்த தமிழர்களுக்கு ஷொலிம் பெயிட் என்பவர் உதவிக் கரமாக இருந்தார். அதற்கு அங்குள்ள தமிழர்கள் செலுத்திய மண்  வரிதான் காரணம். இந்த வரியில் குறிப்பிட்ட பங்கை அவர் எடுத்துக் கொண்டு மீதியைப் பிரிட்டிஷ் அரசுக்கு செலுத்தி வந்தார்.

இப்போதைக்கு மோரே கிராமத்தின் மக்கள் தொகை ஏறக்குறைய 35,000. இதில் தமிழர் மட்டும் 17,5000 பேர். அனைவரும் சர்வ சாதாரணமாகத் தமிழிலும் பர்மிய மொழியிலும் பேசிக் கொள்கின்றனர்.பிரிட்டிஷ் ஆட்சியின் போது பர்மா நாடு இந்தியாவின் ஒரு மாநிலமாகத் தான் இருந்தது. 1948-க்கு முன்னால் நடந்ததைச் சொல்கிறேன். அந்தக் காலக் கட்டத்திலும் தமிழர்கள் அங்கே வாழ்ந்து இருக்கிறார்கள்.

பர்மாவின் தலைநகர் ரங்கூன் வரை போய் வியாபாரம் செய்து வந்து இருக்கிறார்கள். தடைகள் ஏதும் இல்லை. மோரே  நகரம் இந்தியா பர்மா நாடுகளுக்கு ஒரு முக்கிய நுழைவாயிலாகவும் செயல்பட்டது.

இப்போது மணிப்பூர் வழியாக பர்மாவிற்கு நூற்றுக் கணக்கான வாகனங்கள், சரக்கு லாரிகள் அன்றாடம் போய் வருகின்றன. அதே மாதிரி பர்மாவில் இருந்தும் தரைவழியாக இந்தியாவிற்கு வருகிறார்கள் போகிறார்கள். அங்கே இருந்து வருகிறவர்களின் தேவைகளை மோரே மக்கள் கவனித்துக் கொள்கிறார்கள். மோரேவில் நிறைய உணவகங்கள் இருக்கின்றன. சின்னச் சின்ன மளிகை கடைகளும் இருக்கின்றன.

1960-களில் தமிழர்கள் இங்கு குடியேறிய காலக் கட்டத்தில் மோரேவிற்கு அருகில் நாம்ப்லாங் என்று ஒரு சந்தை இருந்தது. அந்தச் சந்தையில் சிறிய அளவில் பண்டமாற்று வியாபாரம். சந்தையில் தமிழர்கள் தொழிலாளர்களாக வேலை செய்தனர். தமிழர்களின் புத்திசாலித்தனம்; கடும் உழைப்பு; இந்த இரண்டும் அவர்களுக்குப் புதிய கதவுகளைத் திறந்து விட்டன.திருமண விசயத்தில் மணிப்பூர் தமிழர்களிடம் படு சுதந்திரம். பெண் வீட்டார்களுக்கு வரதட்சணை பிரச்சினையே இல்லை. மாப்பிள்ளை வீட்டார்தான் பெண்வீட்டாருக்குத் திருமண சீர் செய்ய வேண்டும். இன்னும் ஒரு விசயம். ரொம்பவும் முக்கியம்.

ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒருவரை ஒருவர் பிடித்து இருந்தால் மட்டுமே திருமணம். பெண் பார்க்கும் படலத்தில் ஒரு பெண்ணுக்கு ஓர் ஆணைப் பிடிக்கவில்லை என்றால் அப்போதே நறுக்கென்று பிடிக்கவில்லை என்று சொல்லி விடுவார். அதோடு அடுத்த பேச்சு இல்லை.

வந்தவர்கள் வந்தவழியைப் பார்த்துத் திரும்பிப் போக வேண்டியது தான். மணப்பெண்ணின் மனசிற்குத் தான் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். உலகத் தமிழர்களிடம் காணப்படும் ஒரு வித்தியாசமான அணுகுமுறை. மணிப்பூரில் வாழும் குக்கீஸ் பூர்வீகக் குடிமக்களிடம் பெண்களுக்கு முக்கியத்துவம் வழங்கும் பழக்கம் தொன்று தொட்டு இருக்கிறது. ஒருக்கால் அதையே மணிப்பூர் தமிழர்கள் பின்பற்றி வரலாம். சொல்ல முடியாது.

அப்புறம் இன்னும் ஒரு நல்ல விசயம். காதலர்கள் வீட்டை விட்டு  ஓடிவிட்டால் பிரச்சினை ஒன்றும் பெரிதாக வரப்போவது இல்லை. நிறைய குடும்பங்களில் நடந்து இருக்கிறது. இரு தரப்பும் ஒன்றாகச் சேர்ந்து பேச்சு வார்த்தை நடத்துவார்கள். பின்னர் காதலர்கள் இருவரையும் அழைத்து வந்து திருமணத்தை நடத்தி வைப்பார்கள். ஆனால் ஒரே ஒரு கன்டிசன். புருசன்காரனிடம் சண்டை போட்டுக் கொண்டால் திரும்பி அப்பா அம்மா விட்டிற்குப் போக முடியாது. கதவைச் சாத்தி விடுவார்கள். நல்ல பழக்கம்.

முடிந்தால் நீங்களும் போய்ப் பாருங்களேன். போன வாக்கில் ஒரு பெண்ணைக் காதல் பண்ணி அப்படியே கொஞ்ச நாளைக்குத் தலைமறைவாக இருந்து விடுங்கள். பெண்ணின் அப்பா அம்மா தேடி வருவார்கள். நல்லபடியாக அழைத்து வந்து கல்யாணம் செய்து வைப்பார்கள்.

1 comment: