09 மார்ச் 2019

கண்ணீர் மழையில் காஷ்மீர் - 5

காஷ்மீர் என்று சொன்னதும் ஒட்டு மொத்த காஷ்மீரும் இந்தியாவிற்குச் சொந்தமானது என்று பலரும் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். அது தவறு. உண்மையைச் சொன்னால் காஷ்மீர் மூன்று பாகங்களாகப் பிரிக்கப்பட்டு மூன்று நாடுகள் சொந்தம் கொண்டாடிக் கொண்டு இருக்கின்றன. கிழக்குக் காஷ்மீர்; மேற்குக் காஷ்மீர்; மத்திய காஷ்மீர் என மூன்று பிரிவுகள். 


பாட்டி சுட்ட வடையை மூன்றாகப் பிரித்து அதில் ஒரு பகுதியை ஓநாய்க்கும்; இன்னொரு பகுதியைக் குள்ளநரிக்கும் கொடுத்துவிட்டு எஞ்சிய பகுதியைப் பிள்ளைக்குக் கொடுத்தது மாதிரி தான் காஷ்மீரின் கதை. அந்த மாதிரிதான் காஷ்மீரைப் பிய்த்துப் பேன் பார்த்து விட்டார்கள்.

கிழக்கு காஷ்மீர் என்பது வழிப்பிள்ளையார் கதை மாதிரி வருகிறது. பாகிஸ்தான் சீனாவிற்கு அன்பளிப்பு செய்தது தான் இந்தக் வடகிழக்கு காஷ்மீர். நம்ப பகாங் மாநிலம் அளவிற்குப் பெரியது.

கடைத் தேங்காயை எடுத்துப் பிள்ளையாருக்கு உடைத்த கதை மாதிரி வடகிழக்கு காஷ்மீர் சீனாவிற்கு அன்பளிப்பு செய்யப் ட்டது. இதற்குப் பக்கத்தில் இருப்பது லடாக் எனும் நிலப் பகுதி. இந்த நிலப் பகுதி நம்ப தீபகற்ப மலேசியா அளவிற்குப் பெரியது. 


இந்த லடாக் பகுதியில் தான் முதலாவது இந்தியா - சீனா போர் நடந்தது. உண்மையிலேயே லடாக் நிலப்பகுதி இந்தியாவிற்கு பல ஆயிரம் ஆண்டுகளாகச் சொந்தமாக இருந்த பகுதி. அந்தப் போருக்குப் பின்னர் அந்த லடாக் பகுதியும் போய்விட்டது. பறிகொடுத்த அந்த நிலப் பகுதியைக் கொண்டு வருவதற்கு கொஞ்சமும் இந்தியா அக்கறை படுவதாக இல்லை. மன்னிக்கவும்.

இந்திய சீனா எல்லைப் பகுதியில் கொட்டும் பனியில் பத்தாயிரம் இந்திய வீர்ர்கள் 24 மணி நேரமும் உயிர் கொடுத்து பாரத மண்ணைக் காத்து வருகிறார்கள். அவர்களில் 320 பேர் இதுவரையில் குளிர் தாங்க முடியாமல் இறந்து விட்டார்கள். அதைப் பற்றி யாரும் அக்கறை படவில்லை. ரொம்ப வேண்டாம். அதைப் பற்றி பலருக்குத் தெரியாது. அது இராணுவ ரகசியம் என்று பூசி மெழுகி வருகிறார்கள். வெளியே சொன்னால் அரசியல்வாதிகளின் பதவிகளுக்கு ஆபத்து.


ஆனால் ஒரே அபிநந்தன் பாகிஸ்தானில் மூன்று நாள் மாட்டிக் கொண்டார் என்பதற்காக எவ்வளவு பெரிய ஆர்ப்பாட்டம் செய்தார்கள். என்னமோ அணுகுண்டு போரை தடுத்து நிறுத்தி விட்டதாக ஒரு பில்டப் செய்து விட்டார்கள். ஒரு நாட்டையே காப்பாற்றி விட்டது போல நகர்வுகள். உலகத்தையே கிடுகிடுக்க வைத்து விட்டார்கள். தெரியாமல் தான் கேட்கிறேன்.

இந்தியா சீனா எல்லையில் இந்தியாவைப் பாதுகாக்கும் இந்தியப் போர் வீரர்கள் குளிர் தாங்க முடியாமல் பல நூறு பேர் செத்துக் கொண்டு வருகிறார்களே அது எல்லாம் அவர்களின் கண்ணில் படவில்லையா. எல்லையில் உயிரைப் பணயம் வைக்கும் அவர்களுக்குத் தாணே முதல் மரியாதை செய்ய வேண்டும். என்ன செய்வது. மறுபடியும் சொல்கிரேன். இராணுவ ரகசியம் என்று பூசி மெழுகி வருகிறார்கள்.

முதலாவது இந்தியா சீனா போரில் பழைய துப்பாக்கிகளை வைத்துக் கொண்டு இந்திய வீரர்கள் போர் முனையில் உயிர்த் தியாகம் செய்து கொண்டு இருந்தார்கள். அந்தச் சமயத்தில் ரோசாப்பூ அழகர் நேரு டில்லியில் மவுண்ட்பாட்டன் பிரபுவுடன் உற்சாகப் பானத்தில் திளைத்து கும்மாளம் போட்டதாக ஒரு செய்தி. இந்தியாவின் மூத்தப் பத்திரிகையாளர் தன் நூலில் எழுதி இருக்கிறார்.


இந்தக் கட்டுரைத் தொடரின் இரண்டாம் பகுதியில் நான்கு கில்லாடிகள் எனும் ஒரு குறிப்பு சொல்லி இருக்கிறேன். அதை மீண்டும் நினைவுபடுத்த வேண்டிய கட்டம்.

ஜவஹர்லால் நேரு, முகமது அலி ஜின்னா, ராஜாஜி, வல்லபாய் பட்டேல். இந்த நான்கு பெயரையும் நன்றாக மனதில் வைத்துக் கொள்ளுங்கள். இந்த நான்கு பேரும் இந்திய அரசியல் மேடையில் சர்க்கஸ் வித்தைகள் காட்டிய பலே கில்லாடிகள். இந்திய வரலாற்றில் இணைபிரியா நான்கு கில்லாடிகள் என்றுகூட சொல்லலாம். மன்னிக்கவும்.

அந்த நான்கு கில்லாடிகளும் பாவ்லாவாக பாவனைக் காட்டி பக்காவாக நடித்து நல்ல ஒரு நாடகத்தையே அரங்கேற்றம் செய்து விட்டார்கள். அதற்கு ஒரு சபாஷ் போட்டு கைதட்டலாமே. அந்த நாடகத்தின் பெயர் என்ன தெரியுங்களா. இந்தியாவைப் பிய்த்துப் பேன் பார்த்தான் கதை. அதாவது கொஞ்சம் நாகரிகமாகச் சொன்னால் இந்தியா – பாகிஸ்தான் பிச்சுப் பிடுங்கல் பிரிவினை. 


அந்தப் பிய்த்தல் பிடுங்கல் இல்லாமல் இருந்து இருந்தால் பாரத மண் இன்றைக்கு இவ்வளவு அவஸ்தைபட வேண்டிய நிலைமை வந்து இருக்காதே. இப்படி எழுதுவதற்காக பலர் திட்டலாம். திட்டிவிட்டுப் போகட்டும்.

இந்தியாவைப் பிரிக்காமல் இருந்து இருந்தால் பாகிஸ்தான் இன்றைக்கு இவ்வளவு சவடால் பேசுமா. அதை நினைத்துப் பாருங்கள். நேற்று முளைத்த குருத்து பழைய மட்டையைப் பார்த்து பல்லவி பாடுகிறதே. பற்றிக் கொண்டு வருகிறதே.

அந்த நான்கு கில்லாடிகளின் அரசியல் சுயநலக் காரணங்களுக்கு முன்னால் காந்திஜியின் சத்தியம் அடிபட்டுப் போனது. மனித நேயம், மனித உரிமைகள், சகோதரத்துவம் என்று சொல்கிற எல்லாமே அந்த நேரத்தில் பலிக்கடாவாகிப் போயின. அதனால் தான் இந்தியா சுதந்திரம் வாங்கிய தினத்தில் காந்திஜி அந்த நிகழ்ச்சிக்கு வரவே இல்லை.


கிழக்கு காஷ்மீரைத் தான் அக்சாய் சின் என்று சீனா பெயர் மாற்றம் செய்தது. பல மாமாங்கங்கள் கழிந்து விட்டன. பனிபடர்ந்த அக்சாய் சின் முழுக்க முழுக்க இந்தியாவிற்குச் சொந்தமானது. சீனா எல்லையைத் திருத்துகிறோம் என்று சொல்லி லடாக் எனும் அக்சாய் சின்னைத் தன் பகுதிக்குள் இழுத்துப் போட்டுக் கொண்டு அல்லி தர்பார் செய்து கொண்டு இருக்கிறது. 

1950s – China gradually occupies eastern Kashmir (Aksai Chin). 1962 – China defeats India in a short war for control of Aksai Chin. 1963 – Pakistan cedes the Trans-Karakoram Tract of Kashmir to China.

பாகிஸ்தான் தனிநாடாக அறிவிக்கப் பட்ட சில மாதங்களில் காஷ்மீரின் மேற்குப் பகுதி அடித்துப் பிடுங்கப்பட்டது. அதற்குப் பெயர் அசாத் காஷ்மீர். காஷ்மீரின் மையத்தில் இருக்கும் ஜம்மு காஷ்மீர் தான் இந்தியாவிற்குச் சொந்தம். சரி. காஷ்மீரின் வரலாற்றைச் சற்றே ஒரு மீள்பார்வை செய்வோம். அதன் பின்னர் காஷ்மீரில் நடந்த பாலியல் வன்மைகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

காஷ்மீர் என்பது இந்தியாவின் வடக்குப் பகுதியில் உள்ள ஒரு மாநிலம். இமயமலைத் தொடர்ச்சியில் அமைந்து உள்ளது. வடக்கிலும் கிழக்கிலும் சீனாவின் எல்லை. தெற்கில் இமாச்சலப் பிரதேசம்; பஞ்சாப் மாநிலங்கள். வடக்கிலும், மேற்கிலும் பாக்கிஸ்தான் கட்டுப்பாட்டில் இருக்கும் ஆசாத் காஷ்மீர்.


ஜம்மு, காஷ்மீர், லடாக் ஆகியவை மூன்று பெரும் பிரிவுகள். ஜம்மு பகுதியில் இந்து மதத்தினர் அதிகம். காஷ்மீர் பகுதியில் இஸ்லாமியர்கள் பெருபான்மை. லடாக்கில் பௌத்தர்களும் இஸ்லாமியரும் ஏறத்தாழ சம எண்ணிக்கை. காஷ்மீரைச் சுற்றிலும் இயற்கை அழகு நிறைந்த மலை மடுக்கள்.

1845-ஆம் ஆண்டில் காஷ்மீரில் முதலாம் ஆங்கிலேய - சீக்கியர் போர். அதில் சீக்கியர்கள் காஷ்மீரை ஆங்கிலேயர்களிடம் இழந்தார்கள். மறு ஆண்டு 1846-இல் 84,471 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட காஷ்மீர் பகுதியைக் குலாப் சிங் என்பவரிடம் ஆங்கிலேயர்கள் ரூபாய் 27 இலட்சத்திற்கு விற்று விட்டார்கள்.

தீபகற்ப மலேசியாவில் நான்கில் ஒரு பகுதி. விலை 27 இலட்சம் ரூபாய். இப்போது கிடைக்குமா. சொல்லுங்கள். அப்படி ஓர் ஏலம் வந்தால் அம்புட்டுத்தான். இங்கே நம்ப பெண்கள் கழுத்தில் ஒரு பொட்டு தங்கத்தைப் பார்க்க முடியாத நிலைமை வந்து இருக்கலாம். சொல்ல முடியாதுங்க. 


இருக்கிறதை எல்லாம் கொண்டு போய் பாசா கடையில் தள்ளிவிட்டு அப்புறம் ஏக்கர் கணக்கில் வாங்கிப் போட்டு அப்புறம் பாசா கடை சூராக்களை இடுப்பில் கட்டிக் கொண்டு போய்க் கொண்டே இருந்து இருப்பார்கள். என்னையும் சேர்த்து தான். நமக்கு மட்டும் ஆசை இருக்காதா. முடிந்தால் பேரன் பேத்தி நகைகளையும் பேரம் பேச வேண்டிய நிலைமை வந்து இருக்கலாம். சும்மா ஒரு கற்பனை. பெரிசா எடுத்துக் கொள்ள வேண்டாம்.

இன்னும் ஒரு கதை. அண்மையில் நடந்தது. சும்மா ஒரு நான்கு ஏக்கர் கோயில் நிலத்தை விற்று மேசைக்கு அடியில் 100 மில்லியன் வாங்கி சாதனை படைத்த ஒரு தலைவரை நினைத்துக் கொண்டேன். பாவம் அவர். டிவிட்டர் மன்னன் நஜீப் சாருக்கும் ரோசம்மா ரோசம்மாவுக்கும் ஒரு டன் மாலையைப் போட்டு சாதனை செய்து இருக்கிறாரே.

அதையும் நினைத்துப் பார்க்கிறேன். என்ன இருந்தாலும் நஜீப் சார் கழன்று கொண்டு விட்டாரே. உன்னை நம்பி நான் கெட்டேன். என்னை நம்பி நீ கெட்டாய் என்று இரண்டு பேரும் காம்போதி ராகங்கள் பாடிக் கொண்டு இருக்கிறார்கள். பாவம் இரு கில்லாடிகள். ஊர்வம்பு நமக்கு வேண்டாங்க.


அதன் பின்னர் குலாப் சிங்கிற்கு ஜம்மு காஷ்மீரின் அரசர் பதவி. 1857-இல் குலாப் சிங் இறந்தார். அதன் பின் அவருடைய மகன் ரன்பீர் சிங் காஷ்மீரை ஆட்சி செய்தார்.

ஜம்மு காஷ்மீர் முற்றிலும் வெவ்வேறான சமய மக்களைக் கொண்டதாக இருந்தது. இன்னமும் இருக்கிறது, கிழக்குப் பகுதியான லடாக்கில் உள்ள மக்களின் பண்பாடு திபெத்திய மண்வாசனை கொண்டது. பௌத்த சமயத்தைப் பின்பற்றுபவர்கள். ஜம்முவில் இந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள் மூவகைக் கலவை.

மக்கள் அதிகமாக வாழும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் பெருமளவில் சன்னி முஸ்லீம்கள். என்றாலும் ஓரளவுக்குச் சிறிய எண்ணிக்கையில் காஷ்மீரிப் பிராமணர்கள். செல்வாக்கு மிக்க சிறுபான்மை இந்து சமயத்தவர். மேற்குப் பகுதியில் அதிகமாக முஸ்லீம் மக்கள்.


1857-ஆம் ஆண்டு காஷ்மீர் ராஜா குலாப் சிங் மரணம் அடைந்தார். அவருக்குப் பின்னர் அவருடைய மகன் ரன்பீர் சிங். இவர் 1857 முதல் 1885 வரை ஆட்சி செய்தார். பின்னர் ரன்பீர் சிங்கின் மகன் பிரதாப் சிங் 1925-ஆம் ஆண்டு வரையிலும் ஆட்சி.

தாத்தா, மகன், பேரனைத் தொடர்ந்து குலாப் சிங்கின் கொள்ளுப் பேரன் ஹரி சிங் 1925-ஆம் ஆண்டில் இருந்து 1948 வரை ஆட்சி செய்தார். இவருடைய ஆட்சியில் நிறைய சமூகச் சமய உரிமை மீறல்கள். அவை மக்களிடையே பெரும் கொந்தளிப்புகளை உண்டாக்கின.

அதன் விளைவாக 1931-ஆம் ஆண்டு காஷ்மீரில் ஒரு மக்கள் கிளர்ச்சி. அந்தக் கிளர்ச்சியை மன்னர் ஹரி சிங் இராணுவத்தைப் பயன்படுத்திப் பலவந்தமாக அடக்கினார். இருந்தாலும் கிளர்ச்சிகள் தொடர்ந்தன.


மன்னர் ஹரி சிங்கின் அடக்குமுறைக்கு எதிராக பூஞ்ச் பகுதியில் கலகம் தொடங்கியது. பாகிஸ்தானோடு காஷ்மீரை இணைக்க வேண்டும் என்று ஆர்பாட்டங்கள். மக்கள் மீது மகாராஜா ஹரி சிங்கின் படைகள் துப்பாக்கிகளால் சுட்டன, பல கிராமங்கள் முழுமையாக எரிக்கப்பட்டன. பல அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். அதன் பின்னர் "ஆசாத்" காஷ்மீர் என்கிற தன்னிச்சையான அரசாங்கத்தை மக்கள் அறிவித்தார்கள்.

மன்னர் ஹரி சிங் அவசரம் அவசரமாக வர்த்தகம், பயணம் போன்ற சேவைகளை உறுதி செய்யும் வகையில் பாகிஸ்தானுடன் ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இந்தியாவுடன் செய்ய வேண்டிய ஒப்பந்தம் நிலுவையில் நின்றது. இருந்தாலும் 1947-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஜம்முவில் பெரும் கலவரங்கள் தொடங்கின.

பூஞ்ச் போராளிகள் வேறு கோணத்தில் பயணித்தார்கள். பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப் புற மாநிலத்தைச் சேர்ந்த பஷ்தூன் பழங்குடி இனத்தவரைக் கலகத்தில் உதவி செய்ய கேட்டுக் கொண்டார்கள். அப்புறம் என்ன. பழம் நழுவிப் பாலில் விழுந்த மாதிரி பஷ்தூன்கள் காஷ்மீர் மீது பாய்ந்து வந்தார்கள். பஷ்தூன்கள் பூஞ்ச் போராளிகளுடன் இணைந்து சக முஸ்லிம்களுக்கு எதிராகவே அட்டூழியங்களில் ஈடுபட்டார்கள்.

போர் என்று வந்துவிட்டால் அங்கே இனம் மதம் மொழி எல்லாமே அடிபட்டுப் போய்விடும். அந்த வகையில் இந்தப் பஷ்தூன் பழங்குடிகள் வழி எங்கும் கொலைகள், சூறையாடல்களில் ஈடுபட்டார்கள். போகிற வழிகளில் எல்லாம் மிருகத்தனமான வன்முறைகள். கிடைத்த பெண்கள் மீது வன்புணர்வுகள். காய்ந்த மாடுகள் கம்பு கொல்லையில் மேய்ந்த கதைதான். இதைப் பார்த்து ஹரி சிங் ஆடிப் போனார்.


உடனடியாக இந்திய அரசாங்கத்திடம் உதவி கேட்டார். அப்போது இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக லார்ட் மவுண்ட்பேட்டன் பிரபு இருந்தார். காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க முடியும் என்று சொல்லுங்கள். உதவி செய்கிறோம் என்றார்.

சரி என்று சொல்லி ஹரி சிங் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். அதன்பின் இந்திய வீரர்கள் காஷ்மீருக்குள் நுழைந்தார்கள். பாகிஸ்தான் ஆதரவு கொரில்லா போராளிகளை அடக்கி ஒடுக்கினார்கள். காஷ்மீரை இந்தியாவுடன் இணைப்பது என்பது ஓர் இடைக்கால ஏற்பாடு என்று சொல்லப்பட்டது. மக்களின் விருப்பமே இறுதியானது என்றும் சொல்லப்பட்டது. இன்றுவரை சொல்லிக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

இந்தக் கட்டத்தில் இந்தியா இந்த விவகாரத்தை ஐ.நா. சபைக்குக் கொண்டு சென்றது. ஐ.நா. தீர்மானத்தில் பாகிஸ்தான் அது கைப்பற்றிய பகுதிகளை விட்டு வெளியேற வேண்டும். காஷ்மீர் மக்கள் எந்த நாட்டுடன் வாழ விரும்புகிறார்கள் என்பதை அறிய வேண்டும். அந்த வகையில் ஐ.நா.வின் கண்காணிப்பில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று சொல்லப்பட்டது.

ஐ.நா. சொன்னதை பாகிஸ்தான் கொஞ்சம்கூட கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. நீங்கள் என்ன சொல்வது நான் என்ன கேட்பது என்று அடாவடித்தனமாக நெஞ்சை நிமிர்த்திக் காட்டியது. தட்டுத் தாம்பாளங்களைச் சந்தோஷமாக மாற்றிக் கொண்டார்கள்.

ஆனால் பழங்களைத் தான் காணவில்லை. அறுபது வருடங்களுக்கும் மேல் ஆகிறது. தட்டுத் தாம்பாளங்களும் இற்றுப் போய்விட்டன. ஆனாலும் இரு நாடுகளின் நீயா நானா ரோசத்திற்கு மட்டும் கொஞ்சமும் கொறைச்சல் இல்லை. அவதிப்படுபவர்கள் பாவம் காஷ்மீர் மக்கள். ஐ.நா.வின் தீர்மானம் ஒரு செத்தப் பாம்பாகிப் போனது தான் மிச்சம். அடுத்து இரண்டாவது இந்தியா - பாகிஸ்தான் போர். எப்படி என்று நாளைய கட்டுரையில் பார்ப்போம்.
(தொடரும்)

சான்றுகள்

1. Kochler, Hans. The Kashmir Problem between Law and Realpolitik. Reflections on a Negotiated Settlement. Keynote speech delivered at the "Global Discourse on Kashmir 2008. European Parliament, Brussels, 1 April 2008.

2. Irfani, Suroosh, ed "Fifty Years of the Kashmir Dispute": Based on the proceedings of the International Seminar held at Muzaffarabad, Azad Jammu and Kashmir 24–25 August 1997: University of Azad Jammu and Kashmir, Muzaffarabad, AJK, 1997.

3. Muhammad Ayub. An Army; Its Role & Rule (A History of the Pakistan Army from Independence to Kargil 1947–1999) Rosedog Books, Pittsburgh, Pennsylvania USA 2005. ISBN 0-8059-9594-3.

4. Blank, Jonah. "Kashmir–Fundamentalism Takes Root", Foreign Affairs, 78,6 (November/December 1999): 36–42.

5. Zutshi, Chitralekha (2004), Languages of Belonging: Islam, Regional Identity, and the Making of Kashmir, C. Hurst & Co. Publishers, ISBN 978-1-85065-700-2

6. Zutshi, Chitraleka (2008), "Shrines, Political Authority, and Religious Identities in Late-Nineteenth and Early-Twentieth-century Kashmir", in Rao, Aparna, The Valley of Kashmir: The Making and Unmaking of a Composite Culture?, pp. 235–258

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக