15 மே 2019

கட்டடம் கட்டிடம் - எது சரி

இந்த இரு சொற்களில் பலருக்கும் குழப்பம். சமயங்களில் தலைவலிக் குழப்பம். சிலர் கட்டிடம் என்று எழுதுகிறார்கள். சிலர் கட்டடம் என்று எழுதுகிறார்கள். இதில் எது சரி என்று தெரியாமல் சிலர் இரண்டையும் போட்டு குழப்பத்தில் குழப்பியும் விடுகிறார்கள். தமிழ் இலக்கணம் இருக்கிறதே அதைத் தொட்டாலும் குற்றம். தொடாவிட்டாலும் குற்றம். சரி.

இங்கே இந்த இரு சொற்களின் கட்டுமானத்தைப் பிரித்துப் பார்க்க வேண்டும்.

முதலில் கட்டிடம் என்னும் சொல்லைப் பிரித்துப் பார்ப்போம்.

*கட்டு + இடம்* = *கட்டிடம்*

கட்டு இடம் என்றால் என்ன? இங்கே கட்டு எனும் சொல்லுக்குக் கட்டளைப் பொருள் வருகிறது. கவனித்தீர்களா. ஆக கட்டு எனும் சொல் ஒரு வினைத் தொகையாய்ப் பொருள் தருகிறது. கட்டுவதற்கு உரிய இடத்தைச் சுட்டிக் காட்டுகிறது.

கட்டு இடம் என்பது கட்டிய இடம் அல்லது கட்டுகின்ற இடம் அல்லது கட்டும் இடம் என மூன்று வகையாகப் பொருள் தருகின்றது.

கட்டிய இடம் என்பது கடந்த காலம். கட்டுகின்ற இடம் என்பது நிகழ்காலம். கட்டும் இடம் என்பது எதிர்காலம்.

ஆக அந்த மூன்றும் வினைத் தொகையாய் நிற்கின்றன. கட்டிய இடம் என்றால் அது கட்டுமானம் எழுப்பப் படுவதற்கான இடம் என்று பொருள் படுகிறது.

ஒரு கட்டுமானம் *தோன்றும்* இடத்தைத்தான் கட்டு இடம் = கட்டிடம் என்ற சொல்ல வேண்டும். ஆக கட்டிடம் என்பது கட்டிய இடத்தில் எழுந்து நிற்கும் கட்டுமான அமைப்பைச் சுட்டிக் காட்டவில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு *கட்டடம் கட்டப் போகும் இடம் தான் கட்டிடம்*.

அடுத்து வரும் சொல்லைக் கவனியுங்கள். அதன் சொல் கட்டுமானத்தையும் கவனியுங்கள்.

*கட்டு + அடம் = கட்டடம்*

இங்கே அடம் என்பது தொழில் பெயர் விகுதிகளில் ஒன்று என இலக்கணம் கூறுகிறது. கட்டளைப் பொருள் தரும் வினை வேர்ச் சொல்லுடன் ஈற்றில் ஒரு விகுதி சேர்ந்து தொழில் பெயர் உருவாகிறது. இவற்றைத் தான் விகுதி பெற்ற தொழில் பெயர் என்கிறார்கள்.

அந்த வகையில் அடம் என்பது தொழில் பெயர் விகுதி. கட்டடம் என்றால் கட்டும் செயலால் விளையும் பொருளைக் குறிப்பது.

ஆக கட்டடம் என்பதே கட்டுமானத்திற்குப் பொருத்தமான சொல். ஒற்றடம் எனும் சொல்லில் அடம் என்னும் விகுதி சேர்ந்த ஒரு தொழில் பெயர் (ஒற்று + அடம்) உருவாகிறது. ஒற்றியெடுத்தல் என்னும் செயலால் விளைவது ஒற்றடம்.

கட்டடம் என்பதே சரி. கட்டுமானத்தைக் குறிக்கும் சொல்.

கட்டிடம் என்பது கட்டுமானத்திற்கான இடத்தைக் குறிக்கும் சொல் என்ற ஒரு முடிவுக்கு வரலாம். கட்டுமான வானளாவிகளைக் குறிப்பதற்கு கட்டடம் என்ற சொல்லையே பயன்படுத்த வேண்டும்.

மலேசியாவின் இரட்டைக் கோபுரம் ஒரு கட்டடம். இங்கே ஒரு கட்டுமானம் நடந்து இருக்கிறது. அதனால் இரட்டைக் கோபுரம் என்பது ஒரு கட்டடம். அதே போலத் தான் நீங்கள் வசிக்கும் வீடு. அதுவும் ஒரு கட்டடம். பள்ளிக்கூடம் என்பதும் ஒரு கட்டடம். மாரியம்மன் ஆலயம் ஒரு கட்டடம்.

ஏதாவது கட்டுவதற்கு அல்லது கட்டப் படுவதற்கு ஓர் இடம் இருந்தால் அதற்குப் பெயர் கட்டிடம். கட்டுமானத்திற்காகக் காத்து இருக்கும் இடம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக