18 June 2019

ஈழத் தமிழர்களின் வீர வரலாறு - 13

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தோற்றுவிக்கப்பட்ட தொடக்க காலத்தில் நிதி பற்றாக்குறை. நியாயமான முறையில் நீதியான வழியில் நிதி உதவி பெறுவதையே தமிழீழ விடுதலைப் புலிகள் குறிக்கோளாகக் கொண்டு இருந்தார்கள். ஆனால் உதவி செய்ய ஆள் இல்லாத நிலையில் நிறையவே  தடுமாற்றங்கள்.


ஒரு குடும்பத்தை நடத்துவதே பெரிய பாடு. இதில் ஓர் இயக்கத்தை நடத்துவது என்றால் என்ன சாதாரண விசயமா. அதுவும் அனுதினமும் புதுப் புது ஆதரவாளர்கள் இயக்கத்தில் சேர்ந்து கொண்டு இருந்தார்கள். நூறாக இருந்த இயக்கம் ஆயிரம் ஆயிரமாகிப் போனது.

எப்படியாவது இயக்கத்தை நடத்த வேண்டும். முன் வைத்த காலைப் பின் வைக்கக் கூடாது.

வெளியே போய் யாரிடமும் பணம் கேட்க முடியாது. கேட்டாலும் பெரிய அளவில் கிடைக்காது. ஆயிரம் நூறு என்றால் திரட்டி விடலாம். இது இலட்சக் கணக்கு விவகாரம். ஆகப் பெரிய அளவில் நிதி தேவை. என்ன செய்யலாம் என ரொம்பவும் யோசிக்க வேண்டிய கட்டம்.

சரி. இருக்கிறதே இருக்கிறது பணப் பட்டுவாடா கருவூலம். அதுதான் வங்கிகள். பணம் தான் அங்கே கொட்டி கிடக்கிறதே. அப்புறம் என்ன. போய் பொறுக்கிக் கொண்டு வர வேண்டிய வேலை தானே. சிரிக்க வேண்டாம். இல்லாத ஊரில் இருப்பது எல்லாம் இலுப்பை பூக்கள். கேள்விப்பட்டு இருக்கிறீர்களா. அந்த மாதிரி தான் பிரபாகரனின் நிலைமையும். தொடர்ந்து படியுங்கள்.

ஒரு முக்கியமான விசயத்தைச் சொல்லி விடுகிறேன். தமிழீழ விடுதலைப் புலிகள் என்பது உலக வரலாற்றில் ஒரு காலப் பதிவு. ஆக அந்த வரலாற்றை ஒரு வரலாறாகத் தான் பார்க்க வேண்டும். வேறு மாதிரியாக ஓர் இனத்தின் புரட்சித் தனமான பார்வையில் பார்க்க வேண்டாமே.

ஜெர்மனியில் ஹிட்லர் ஆட்சியின் போது யூதப் படுகொலை (Holocaust) என்பது ஒரு வரலாற்றுக் காலச் சுவடு. அதை வைத்து பத்துப் பதினைந்து படங்கள் எடுத்து விட்டார்கள். அதை உலகம் எப்படி பார்க்கிறது.

உகாண்டாவில் இடி அமின் என்கிற மனித மிருகம் இடி மின்னலாய் இறங்கி வந்து அந்த நாட்டின் சரித்திரத்தையே மாற்றிப் போட்டது. அதை எப்படி பார்க்கிறார்கள்.

கம்போடியாவில் போல் போட் எனும் சர்வாதிகாரி அங்கே இலட்சக் கணக்கான அப்பாவி ஜீவன்களின் கால் கைகளை வெட்டி வீசியதை மறக்க முடியுமா. அது வரலாறு இல்லையா.சைபீரியா காடுகளில் ஸ்டாலின் சுட்டுப் பொசுக்கிய வாயில்லா மனித உயிர்களை மறக்க முடியுமா. அது வரலாறு இல்லையா.

1914-இல் ஐந்து இலட்சம் கிரேக்கர்களை ஒட்டோமான் துருக்கிய சர்வாதிகாரி கொன்று போட்டானே... அது வரலாறு இல்லையா.

1994-இல் ஆப்பிரிக்கா ருவாண்டா நாட்டில் பத்து இலட்சம் துட்சி மக்கள் அநியாயமாகச் சாகடிக்கப் பட்டார்களே... அது வரலாறு இல்லையா. இன்னும் அடுக்கிக் கொண்டே போகலாம்.

ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மட்டும் என்னவோ சிலர் வீட்டுக்கு அழைக்காத விருந்தாளியாகப் பார்க்கிறார்கள். அந்தக் கோணல் பார்வையை விட்டு விட்டு தமிழனத்தின் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட விந்துகளாகப் பார்ப்போம். அதுவே அவர்களுக்கு நாம் செய்யும் கைமாறு. மரியாதை.

விடுதலைப் போராட்டம் என்றால் அப்படி இப்படி என்று கொஞ்சம் முன்னுக்குப் பின் இருக்கவே செய்யும். இஸ்ரேலியர்களுக்கு அமெரிக்காவும் பிரிட்டனும் இந்தா எடுத்துக்கோ என்று உதவி செய்தது போல விடுதலைப் புலிகளுக்கு உதவி செய்ய அப்போது எந்த நாடும் முன்வரவில்லை. பாலஸ்தீனத்திற்கு வாடா தம்பி வாடா என்று லெபனான் உதவி செய்தது போல விடுதலைப் புலிகளுக்கு உதவி செய்ய யாரும் இல்லை. பக்கத்தில் ஒரு துணைக் கண்டம் இருந்தது. ஆனால் அதுவா? எப்படா கொத்தித் திங்கலாம் என்று காத்துக் கொண்டு இருந்த வல்லாறு. அங்கே அந்தக் கதை அப்படி. பாவம் இந்த நிலையில் விடுதலைத் தமிழர்கள் என்னதான் செய்வார்கள் சொல்லுங்கள்.

1978-ஆம் ஆண்டு இறுதி வாக்கில் யாழ்ப்பாணத்துக் கிழக்குப் பகுதியில் இயற்கையும் கோரத் தாண்டவம் ஆடியது. சூறாவளி சுழன்று சுழன்று அடித்த அகோரம். திரிகோணமலையில் இருந்து அருகம் விரிகுடா வரை அட்டகாசமான புயல்காற்று.

ஆயிரம் பேர் உயிர் இழந்தார்கள். பத்து இலட்சம் பேர் பாதிக்கப் பட்டார்கள். இரண்டரை இலட்சம் வீடுகள் பாதிப்பு. 240 பள்ளிக்கூடங்கள் பாதிப்பு. 28 ஆயிரம் தென்னந் தோப்புகள் பதிப்பு. 600 மில்லியன் இலங்கை ரூபாய் சொத்துகள் அழிந்து போயின. அனைத்தும் தமிழர்களின் உடமைகள்.

ஆனால் அரச உதவிகள் எதிர்பார்த்த அளவிற்குப் போய்ச் சேரவில்லை. இது தமிழ் மக்களின் கோபத்தையும் வெறுப்பையும் மேலும் அதிகப் படுத்தியது.

இந்தக் கட்டத்தில் ஒரு வங்கிக் கொள்ளைக்குத் திட்டம் வகுக்கப் படுகிறது. அந்த வகையில் திருநெல்வேலி பல்கலைக்கழக வளாகத்திற்கு அருகில் உள்ள மக்கள் வங்கி கண்ணில் படுகிறது.

வெளியே இருந்து பணம் வங்கிக்கு எடுத்துச் செல்லப்படும் தகவல்கள் வந்து சேர்கின்றன. எதிர்பார்த்தபடி பணத்தை ஏற்றிக் கொண்டு போலீஸ் காவலுடன் ஒரு ஜீப் வண்டி வங்கியை நோக்கி வருகிறது. வழக்கம் போல ஜீப் வண்டி வங்கியின் முன்னால் நிறுத்தப் படுகிறது. அதில் இருந்து போலீஸ்காரர் இறங்குகிறார்.

அவர் இறங்கியதும் செல்லக்கிளியின் துப்பாகியில் இருந்து தோட்டாக்கள் பாய்கின்றன. எல்லாமே திட்டமிட்டபடி மின்னல் வேகத்தில் நடந்து முடிகிறது.

போலீஸாரிடம் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இன்னோர் இயந்திரத் துப்பாக்கி வந்து சேர்கிறது. பஸ்தியாம் பிள்ளை குழுவினரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட முதலாவது துப்பாக்கியோடு இப்போது இரண்டு இயந்திரத் துப்பாக்கிகள். பணப் பெட்டியை தங்கள் காரில் ஏற்றிக் கொண்டவர்கள் சிட்டாகப் பறக்கிறார்கள்.

12 இலட்சத்துக்கும் அதிகமான தொகை. 1978-ஆம் ஆண்டில் பெரிய தொகை.

போராட்டம் சூடு பிடிக்கிறது. கிட்டு என்கிற கிருஷ்ணகுமார்; மாத்தையா என்கிற மகேந்திர ராஜா; மற்றும் பலரும் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சேர்ந்தனர்.

இங்கேயும் கொஞ்சம் பிரச்சினை. இயக்கத்தின் முக்கியமானர்களைக் கேட்காமல் இவர்களைப் பிரபாகரன் கொண்டு வந்ததாகக் கொஞ்சம் கசப்புகள்.

கிட்டு வல்வெட்டித் துறையைச் சேர்ந்தவர். பிரபாகரனின் உறவினர். மாத்தையா என்பவர் பருத்தித் துறைக்காரர். இதில் ரகு என்பவர் போலீஸ் துறையில் சேர முயற்சி செய்தவர். தமிழர் என்ற காரணத்தில் இடம் கிடைக்கவில்லை. அதனால் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சேர்ந்தார். ஈழமே போராட்ட பூமியாக மாறிக் கொண்டு இருந்தது. தமிழீழ விடுதலைப் புலிகள்தான் தமிழர்களின் பிரதிநிதிகள்; அவர்கள் தான் தமிழருக்கான உரிமைப் போராளிகள் என ஈழத் தமிழர்கள் உணரத் தொடங்கினார்கள். அப்போது தான் புலிகளின் அமைப்பில் முதல் பிரிவினை ஏற்பட்டது.

போராட்டத்தில் பெரும் பங்கு வகித்தவர் உமாமகேஸ்வரன். இவரைப் பற்றிய ஒரு இடக்கு முடக்கான செய்தி. பிரபாகரனுக்குத் தெரிய வருகிறது. என்ன செய்தி?

கணவனை விவாகரத்து செய்த ஊர்மிளா தேவி எனும் பெண்ணும் உமா மகேஸ்வரனும் காதலிக்கிறார்கள்; கல்யாணம் செய்யாமல் கணவன் - மனைவியாக வாழ்கிறார்கள் எனும் செய்தி. உமா மகேஸ்வரன் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் முக்கியமான புள்ளி.

இந்தச் சமயத்தில் விடுதலைப் புலிகளில் பலர் சென்னை தண்டையார் பேட்டையில் இருந்தார்கள். பிரபாகரனும் சென்னையில் தான் இருந்தார்.

பலருக்கும் உமா மகேஸ்வரன் – ஊர்மிளா மீது சந்தேகங்கள். அதைப் பற்றி பிரபாகரனிடம் சொல்லி இருக்கிறார்கள்.

உமா மகேஸ்வரன் பாலஸ்தீன இராணுவப் பயிற்சிக்குச் செல்கின்ற சமயத்தில் விமான நிலையத்தில் அவர்கள் இருவரும் காதலர்கள் போல நடந்து கொண்டார்கள். அப்போது விமான நிலையத்தில் இருந்த நாகராஜா என்பவர் பிரபாகரனிடம் கூறி இருக்கிறார். அதைப் பிரபாகரன் நம்பவில்லை. அப்பேர்ப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பில் இந்த அற்பக் கொசுக்கடி காதல் பிரச்சினை ஒரு பெரிய பிரச்சினையா என்று கேட்கலாம்.

ஆமாங்க பெரிய பிரச்சினை தான். இந்தப் பிரச்சினை தான் பின்னர் காலத்தில் விஸ்வரூபம் எடுத்தது. பிரபாகரனும் உமா மகேஸ்வரனும் சென்னை நடு ரோட்டில் சுட்டுக் கொண்டதற்கும் மூல காரணம். புரியுதுங்களா. அதனால் தான் கொஞ்சம் விரிவாக எழுத வேண்டி வருகிறது.

ஒரு பெண் நினைத்தால் ஓர் ஆணை அணைக்கவும் முடியும். அவனை அப்படியே அழிக்கவும் முடியும். தெரியும் தானே.

உமா மகேஸ்வரனைப் பிரபாகரன் அழைத்து கேட்டு இருக்கிறார். உமா மகேஸ்வரன் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இதைத் தவிர நான் வேறு ஏதாவது தவறு செய்து இருந்தால் சொல்லுங்கோ என பிரபாகரனையே கேட்டு இருக்கிறார்.

உமா மகேஸ்வரனின் காதல் நடவடிக்கைகளும் அதற்கு அவர் பிரபாகரனிடம் கூறிய பதிலும் சக போராளிகள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. நல்ல ஒரு தலைமைப் பொறுப்பில் இருந்த உமா மகேஸ்வரனின் பதில் அவரின் காதல் உறவை உறுதிப் படுத்துவதாக இருந்தது.
ஒழுக்கமான ஓர் இராணுவ அமைப்பில் இந்த மாதிரியான பாலியல் குற்றச் சாட்டுக்கள் என்பது அனுமதிக்கப்பட முடியாத குற்றமாகக் கருதினார்கள்.

ஒரு சில மணி நேரம் கழித்து ஊர்மிளாவுடன் பேசிவிட்டுத் திரும்பி வருகிறார் உமா மகேஸ்வரன். அனைத்தையும் மறுக்கிறார். தன்மீது திட்டமிட்டுச் சுமத்தப்படும் பழி என்று சொல்கிறார்.

ஒரு சம்பவம். நேரில் பார்த்த  சாட்சிகள் இருக்கிறார்கள். அதையே உமா மகேஸ்வரன்  மறுக்கிறார். அதுவே அவர் மீதான வெறுப்பிற்கு மேலும் தூபம் போட்டது. அந்தக் கட்டத்தில்  அங்கே சென்னையில் இருந்த அனைத்துத் தமிழீழப் போராளிகளும் உமா மகேஸ்வரனுக்குப் பிடிக்காதவர்களாக மாறுகிறார்கள்.

பிரபாகரனுக்கு அதிர்ச்சி கலந்த கோபம். உமா மகேஸ்வரனை நேரில் அழைத்து விசாரிக்கலாம் என முடிவு எடுக்கிறார். விசாரணை முடிந்தது. உமா மகேஸ்வரன் செய்தது தப்பு என்று தெரிய வருகிறது. அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால் காதலித்தது தப்பு இல்லை. ஆனால் கல்யாணம் செய்து கொள். விட்டு விடுகிறோம் என்றார்கள். உமா மகேஸ்வரன் மறுத்து விட்டார். அதனால் தான் பிரபாகரனுக்குக் கோபம்.

இல்லை என்றால் பிரபாகரன் இந்தப் பிரச்சினையைப் பெரிதாக எடுத்து இருக்க மாட்டார். காதலித்தவளைக் கல்யாணம் செய்ய முடியாது என்று சொன்ன போது தான் பிரபாகரன் கோபமாகிப் போனார்.

பிரபாகரனும் ஏனைய உறுப்பினர்களும் உமா மகேஸ்வரனைப் பதவியில் இருந்து விலகிக் கொள்ளுமாறு சொல்கின்றனர். கசப்பான முடிவு. அதன் பின்னர் தான் உமா மகேஸ்வரன் தன் பழி வாங்கும் படலத்தைத் தொடங்குகிறார்.

(தொடரும்)

No comments:

Post a Comment