25 July 2019

மலாயாவில் முதல் ரப்பர் மரம் - வயது 140

உலகத்திற்கே ரப்பரைப் பற்றி சொல்லிக் கொடுத்தது மலையூர் மலாயா. பல இலட்சம் குடும்பங்களுக்கு வாழ்வாதாரமாகச் சாணக்கியம் பேசியது இந்த மலையக மலாயா. புலம் பெயர்ந்து கரை தாண்டும் மனிதர்களையும் கட்டிப் போட்டது இந்த மண்ணுயிர் மலாயா. 

Malaya First Rubber Tree at Kuala Kangsar

இந்தப் பூமிக்கு வாழ்வு அளித்த ரப்பர் எனும் அந்த மந்திரப் புன்னகையைப் பலரும் மறந்து வருகிறார்கள். ரப்பர் என்றால் என்ன என்று தெரியாமல் இன்றும் சிலர் மலேசியாவில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். வேதனை.

மலேசியாவின் இத்தனை பெரிய சாதனைகளுக்கும் சோதனைகளுக்கும் ஒரே ஒரு ரப்பர் மரம் தான் காரணம் என்கிற விசயம் எத்தனை பேருக்குத் தெரியும்.

ஒரே ஒரு ரப்பர் மரத்தை வைத்துக் கொண்டு அதன் விதைகளை மட்டுமே நம்பி மலாயா முழுவதும் ரப்பர் தோட்டங்களைப் போட்டுச் சாதனை படைத்து இருக்கிறார்களே. அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள். ஒரே ஒரு மரம் தான். அந்தச் சாதனையைப் பற்றி கொஞ்சம் சொல்லலாம் என்று நினைக்கிறேன். இந்தக் கதை 1873-இல் நடந்தது. அமேசான் காட்டில் இருந்து முதன்முதலில் 12 ரப்பர் விதைகளை லண்டனுக்கு கொண்டு வந்தார்கள். அங்குள்ள கியூ அரச தாவரவியல் தோட்டத்தில் நட்டார்கள். அவற்றில் சில கன்றுகளை இந்தியாவுக்கு எடுத்துச் சென்றார்கள்.

முதன்முதலில் கல்கத்தாவில் நட்டுப் பார்த்தார்கள். மண்வாசனை ஒத்துக் கொள்ளவில்லையாம். எல்லாக் கன்றுகளுமே மடிந்து விட்டன.  அதன் பிறகு கேரளாவில் 1902-ஆம் ஆண்டு தாத்தேக்காடு எனும் இடத்தில் நட்டுப் பார்த்தார்கள். ஓரளவுக்கு வெற்றி கிடைத்தது.

இரண்டு ஆண்டுகள் கழித்து 1875-இல் ஹென்றி விக்ஹாம் (Henry Wickham) என்பவர் பிரேசில் நாட்டு அதிகாரிகளுக்குத் தெரியாமல் 70,000 ரப்பர் விதைகளை கள்ளக் கடத்தல் செய்தார். அந்த விதைகளில் 2,800 விதைகள் துளிர்விட்டுக் கன்றுகள் ஆகின. 


Sir Henry Wickham
இவற்றில் 2000 கன்றுகளைப் பக்குவமாகப் பிடுங்கி இலங்கையில் கொண்டு வந்து நட்டார்கள். அவற்றில் 22 கன்றுகள் மட்டும் சிங்கப்பூருக்கு கப்பலேறி வந்தன.

‘ரப்பர் ரிட்லி’ எனும்  எச்.என்.ரிட்லி (HN Ridley) என்பவரைப் பற்றி கேள்வி பட்டிருப்பீர்கள். அவர் தான் மலாயா ரப்பரின் தந்தை. ரப்பரின் மூலமாக மலாயாவை உலகத்திற்கே வெளிச்சம் போட்டுக் காட்டியவர்.

மலாயா என்கிற ஒரு நாடு உலகத்தில் எங்கோ ஒரு மூலையில் இருக்கிறது என்று உலக மக்கள் கற்பனை செய்து கொள்ளும் அளவிற்கு கடிவாளத்தை அவிழ்த்து விட்டவர்தான் அந்த மனிதர்.

தென்னிந்தியாவில் இருந்து தமிழர்களை மலாயாவுக்கு கொண்டு வருவதற்குப் பிள்ளையார் சுழி போட்டவரும் இதே இந்த மனிதர் தான். 


Father of Rubber - HN Ridley

எச்.என்.ரிட்லி சிங்கப்பூருக்கு வந்த 22 கன்றுகளில் ஒன்பது கன்றுகளை மலாயாவுக்கு கொண்டு வந்தார். மறுபடியும் சொல்கிறேன் 9 கன்றுகள். 1877-ஆம் ஆண்டு நடந்த நிகழ்ச்சி.

அந்தக் கன்றுகள் பேராக் மாநிலத்தில் உள்ள கோலாகங்சாரில் நடப்பட்டன. அவற்றில் எட்டு கன்றுகள் நட்டு வைத்த கொஞ்ச நாட்களில் அடையாளம் தெரியாமல் இறவாப் புகழ் பெற்றன.

எஞ்சியது ஒரே ஒரு கன்று. நாம் செய்த புண்ணியம். அதற்கு மட்டும் காம்போதி ராகம் எடுபடவில்லை. அந்தக் கன்றை ரொம்ப பதுவுசாக வளர்த்தார்கள். ஈ கடிக்காமல் கொசு கடிக்காமல் போற்றிப் போற்றி வளர்த்தார்கள் என்றுகூட சொல்லலாம்.

ஒரு சில ஆண்டுகளில் அந்த மரம்  பெரிதாகியது. பெரிய மனுசி மாதிரி பதினெட்டு அடிக்கு வளர்ந்து நின்றது. அந்தக் கன்று தான் மலாயாவின் சரித்திரத்தையே திசை மாற்றிப் போட்டது.

1890-ஆம் ஆண்டுகளில் போகிற இடங்களுக்கு எல்லாம் எச்.என்.ரிட்லி ரப்பர் விதைகளை எடுத்துச் சென்றார். அவருடைய சிலுவார் பாக்கெட்டுகளில் ரப்பர் விதைகள் எப்போதும் நிறைந்து இருக்கும். கிராமப்புற மக்களிடம் அந்த விதைகளைக் கொடுத்து நடச் சொன்னார்.

ரிட்லியின் தொல்லை தாங்க முடியாமல் மக்களும் வேண்டா வெறுப்பாக வாங்கிக் கொள்வார்கள். சிலர் நட்டுப் பார்த்தார்கள். அதில் சிலர் ரிட்லி அந்தப் பக்கம் போனதும் ‘மனுசன் உயிரை வாங்குறாண்டா’ என்று இந்தப் பக்கம் தூக்கி வீசினார்கள்.

1839-இல் சார்ல்ஸ் குட்யியர் என்பவர் ரப்பர் கெட்டியாக்கல் (Vulcanization ) முறையைக் கண்டுபிடித்தார். அதன் பின்னர் ரப்பரின் தேவைகள் அதிகரித்தன. உலகில் பல நாடுகளில் ரப்பர் பயிர் செய்யப்பட்டது.

சரி. மலாயாவில் பிழைத்துக் கொண்ட ஒரே ஒரு கன்றின் கதைக்கு வருகிறேன். அந்தக் கன்று வளர்ந்து இன்றும்கூட கோலாகங்சாரில் கம்பீரமாக, நல்ல ஒரு வரலாற்றுக் காவியமாக வசனம் பேசிக் கொண்டு நிற்கிறது.

மலாயாவுக்கு கொண்டு வரப்பட்ட ஒன்பது கன்றுகளில் அந்த ஒரே கன்றுதான் தப்பிப் பிழைத்தது. அந்த ஒரே கன்றுதான் பெரிதாகி மரமானது. பிறகு அதன் விதைகளின் மூலமாகத் தான் மற்ற கன்றுகள் உருவாகின.

அந்தக் கன்றுகளின் மூலமாக பல ஆயிரம் மரங்கள் பிறந்தன. அந்த மரங்களைக் கொண்டு 1887-இல் முதல் ரப்பர் தோட்டம் மலாயாவில் உருவானது. 1889-ஆம் ஆண்டு சிலாங்கூரில் முதல் ரப்பர் தோட்டம் உருவானது. அதன் பெயர் மிட்லண்ட்ஸ் தோட்டம். என்ன யோசிக்கிறீர்கள். சரி.

நீங்கள் கோலாகங்சார் பக்கம் போனால் அந்த மரத்தைப் பாருங்கள். அதற்கு வயது 140. கூட்டரசு நிலச் சுரங்கர அலுவலகத்திற்கு முன் இருக்கிறது. மரத்தைச் சுற்றிலும் அழகிய வேலிகளை அமைத்து பாதுகாப்பாக வைத்து  இருக்கிறார்கள்.

மரத்திற்கு முன் மலேசிய கொடியை 24 மணி நேரமும் பறக்க விட்டு இருக்கிறார்கள். வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாகப் போய்ப் பாருங்கள். மலேசியாவின் வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய ஓர் உயிரோவியம்.

சிங்கப்பூரில் நடப்பட்ட 13 கன்றுகளில் இன்னும் இரண்டே இரண்டு மரங்கள் மட்டும் தான் உள்ளன. ஒரு மரம் சுவான் ஹோ ஜப்பானிய நல்லடக்கப் பூங்காவில் இருக்கிறது. இன்னும் ஒன்று சிங்கப்பூர் தாவரவியல் பூங்காவில் இருக்கிறது. அவற்றுக்கும் நம்ப மலாயா மந்திரப் புன்னகை மாதிரி வயது 140 தான்.

இப்போது சொல்லுங்கள். எது எதற்காகவோ கையெடுத்து கும்பிடுகிறோம். மலேசியாவின் வாழ்வதாரமாக அமைந்த அந்தத் தெய்வத்திற்கு மரியாதை செய்வதில் தப்பு இல்லையே.

மலாயாவுக்கு வந்த அந்தப் புன்னகையை மந்திரப் புன்னகை என்று அழைக்கலாம் தானே! நமக்கு வாழ்வளித்த அந்தத் தெய்வத்தைக் கையெடுத்துக் கும்பிடலாம் தானே! தயவு செய்து போய்ப் பாருங்கள்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
@ copyrighted

No comments:

Post a Comment