29 அக்டோபர் 2019

சோஸ்மா கலக்குகிறது மலேசியம் கலங்குகிறது

மலேசியாவில் வாழும் அனைவருமே நல்ல அருமையான மனிதர்கள். சகோதரத்துவம் பார்க்கும் நல்ல அற்புதமான மனிதநேயங்கள்; நல்ல அழகிய மனிதப் பண்புகள்; நல்ல அன்பான மனித இயல்புகள்.



இனம், சமயம், மொழி, கலை கலாசாரம் எல்லாவற்றையும் கடந்து போய் மனித நல்லிணக்கத்துடன் வாழ்ந்த அருமை அருமையான மனிதர்கள். ஊழியூழி காலத்திற்கும் வரலாற்றில் இடம் பெற வேண்டிய இனிமையான மனிதர்கள்.

ஆனால் அந்த நற்பண்புகள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாய்க் குறைந்து கரைந்து வருகின்றன. சகித்துப் போகும் சகிப்புத் தன்மைகள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாய்த் தகர்ந்து தரைமட்டமாகி வருகின்றன.

முரட்டுத் தனமும் மூர்க்கத் தனமும் குட்டிப் போட்டு, பேரன் பேத்திகள் எடுத்து, ஊழல் வியாதிகளில் சிக்கி விக்கித் தவித்துத் தகித்துக் கொண்டு இருக்கின்றன.

தொட்டதற்கு எல்லாம் இனம். தொட்டதற்கு எல்லாம் மதம். தொட்டதற்கு எல்லாம் ’பெண்டத்தாங்’... தொட்டதற்கு எல்லாம் ’பெர்கி பாலேக்...’ எங்கேங்க மலேசியம் போய்க் கொண்டு இருக்கிறது.

காடு மேடுகளில் கட்டிப் புரண்டு இந்த நாட்டைச் செல்வம் கொழிக்கும் ஒரு நாடாக மாற்றிய ஓர் இனத்திற்குச் செய்யும் கைமாறு இதுதானா?

வேதனையாக இருக்கிறது.




சிறுபான்மை இனத்தவருக்கு எந்த வகையிலாவது அழுத்தம் கொடுத்து, அப்படியே அவர்களை அடக்கி வாசிக்க வைக்க வேண்டும் எனும் இலக்கு நியாயம் இல்லாத வழக்கு.

அந்த இலக்கை நோக்கிப் பயணிப்பதால் எந்த வகையிலும் நாட்டிற்கும் வீட்டிற்கும் ஆரோக்கியமான வளப்பம் கிடைக்காது. வளர்ச்சியும் கிடைக்காது.

விவேகமான வியூகமான அரசியல்வாதிகள் தான் காலா காலத்திகு புகழப் படுவார்கள். கர்ம வீரர்களாக பூஜிக்கப் படுவார்கள். எல்லோரும் அவர்களைக் கை எடுத்துக் கும்பிடுவார்கள்.




இப்போது நம் நாட்டில் சோஸ்மா விவகாரம்... தலையாய விவகாரமாகத் தலைவிரித்து ஆடுகிறது.

ஆட்சிக்கு வந்தால் சோஸ்மாவை இல்லை இல்லாமல் ஆக்கி விடுவோம் என்று வீரவசனம் பேசினார்களே... அந்த அலங்கார ஆலாபனைகள் எல்லாம் என்ன ஆயின. அதுவும் ஆற்றில் ஓடும் நீர்தானா?

பதினெட்டுப் பட்டியில் ஆயிரத்தெட்டு உத்தரவாதங்கள். அவற்றில் அடுக்கடுக்காய் வயற்காட்டு வரப்பு மேனிகள். அதில் அந்த வீரவசனமும் ஒன்றுதானா? அப்படியே ஏற்று நீரில் அடித்துப் போகப் பட்டது தானா?

ஏற்கனவே பல பத்து ஆண்டுகளாக நாட்டில் ஊழல் வக்கிரம். இலட்சக் கணக்கில் இருந்த ஊழல் பெருச்சாளிகள் மில்லியன் கணக்கில் பெருகி பில்லியன் கணக்கில் பேரன் பேத்திகள் எடுத்து வந்தன. இதில் ரோசாப்பூ ரோசம்மாவின் பில்லியன் கணக்கு பேராண்மைகள் வேறு; வஞ்சகம் இல்லாமல் வசனங்கள் பேசின.




என்னைக் கேட்டால் நஜீப் சார் உண்மையிலேயே நல்ல மனிதர். மலேசிய இந்தியர்களுக்கு வேறு எவரும் செய்யாத உதவிகளைச் செய்து இருக்கிறார்.  நிறையவே செய்து இருக்கிறார். அள்ளிக் கொடுத்து இருக்கிறார்.

அவர் கொடுத்த பணத்தில்... கமிசன் கணக்கில், தாய்க் கட்சி குழந்தைக் கட்சி அரசியல்வாதிகளின் கணக்கில் போய்ச் சேர்ந்தது கணிசமான தொகை.
இது ஒன்றும் வஞ்சிக் கோட்டை வாலிப இரகசியம் இல்லை. மறுக்கவோ மறைக்கவோ முடியாத மலேசியக் காட்டு உண்மை. அப்படியே ஒரு மகிழ்ச்சியான செய்தி. கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெறவில்லை. சந்தோஷப் படுவோம்.

இருந்தாலும் ‘சரவாக் ரிப்போர்ட்’டில் இடம் பெற்று உலகத்தையே ஒரு கலக்கு கலக்கி விட்டது.

ஆக, மலேசிய மண்ணில் தலை விரித்தாடிய கொடுமையான ஊழல், கழுத்தை நெரித்த கடுமையான விலைவாசி உயர்வு, மேலோங்கி வந்த மிதமான மதவெறி, பாதாளத்திற்குள் துளைத்துக் கொண்டு போன பயங்கரமான பணவீழ்ச்சி.

ஆக எத்தனை நாளைக்குத் தான் மாட்டைக் காட்டி நாட்டை ஆள்வதாம்? சொல்லுங்கள்.

அதற்கு ஒரு ‘செக்’ வைக்கவே மக்கள் விரும்பினார்கள். ஒரு முற்றுப்புள்ளியும் வைத்தார்கள்.

நாலும் தெரிந்த ஒரு நல்ல மனிதரைத் தேர்வு செய்தார்கள். ஒரு நல்ல நாள் பார்த்து அரியாசனத்தில் ஏற்றி வைத்தார்கள். ரொம்பவும் நம்பிக்கை வைத்தார்கள். மாற்றம் ஒன்றே மாறாதது என்று சொல்லியே மாற்ற இயலாத மாற்றத்தை ஏற்படுத்திக் காட்டினார்கள்.

ஆனால் பத்தாவது மாசத்தில் எல்லாமே தலைகீழாக மாறிப் போனது. புலி என்றைக்கும் புல்லைத் தின்னாது என்பதும் உண்மையாகிப் போனது.

நாட்கள் செல்லச் செல்ல ஒரு புலி பதுங்கி இருந்த கதையும் சன்னம் சன்னமாய்த் தெரிய வந்தது. தெரிந்து என்ன பயன். எங்கு இருந்தோ வந்த ஒருவருக்காக ஒட்டு மொத்த இந்திய இனத்தையே தூக்கிப் பதம் பார்க்கும் நிலையும் ஏற்பட்டு விட்டதே.

நடந்தது எல்லாம் நம்பிக்கை துரோகம் அல்ல. பச்சை துரோகம். மன்னிக்கவும். ஒரு வாரிசை வைக்கும் இடத்தில் வைக்க வேண்டும் என்பதற்காக இரு சிறுபான்மை இனத்திற்குத் துரோகம் செய்யலாமா. நியாயமா.

ஆக இதற்காகவா ஓர் ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வந்தோம். இதற்காகவா தங்கத் தாம்பளத்தில் அந்தப் பெரியவரை உட்கார வைத்து ஆலாபனை செய்தோம். இதற்காகவா அந்தப் பெரியவருக்கு கோயில் குளங்களில் எல்லாம் பிரார்த்தனைகள் செய்தோம். இதற்காகவா கோயில் குளங்களில் மொட்டைப் போட்டு ஆராதனைகள் செய்தோம்.

எல்லாம் விழலுக்கு நீராகிப் போனதே. நினைக்கும் போது நெஞ்சம் பதறுகிறதே.

மலேசிய இந்தியர்கள் சிறுபான்மை இனத்தவர்கள். சொல்லப் போனால் வாயில்லா பூச்சிகள். அடித்தாலும் தடவிக் கொண்டு போகிறவர்கள். அரசாங்கத்தையோ அரசாங்க இயந்திரங்களையோ எதிர்த்துப் போகாதவர்கள். அப்படிப் பட்டவர்கள்.

அரசியல்வாதிகளைச் சமயங்களில் தட்டிக் கேட்டவர்கள். அவ்வளவுதான். மற்றபடி கொடுத்ததை வாங்கிக் கொண்டு அமைதியாகப் போகின்றவர்கள்.

மலேசிய இந்தியர்களில் ஒரு சில கழிசல்கள் இருக்கவே செய்கின்றன. விரல்விட்டு எண்ணி விடலாம்.  உறுமி மேளம் பட்டாசு அர்ச்சனைகள் செய்யும் சில அடாவடித் தனங்கள். அதற்காக அனைவரின் மீதும் பழி போடுவது தவறு.

என்றோ நடந்த ஒரு போரில் ஆயிரக் கணக்கான தமிழர்கள் இறந்து போனார்கள். அவர்கள் பிள்ளைக்குட்டிகள் இன்றும் தவிக்கின்றன. அவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையிலனுதாப்ம் காட்டியது தவறா. அதற்காக சோஸ்மாவிற்கு அபிஷேகம் செய்யலாமா.

பன்னிரண்டு பேர் கைது செய்யப் பட்டார்கள். அவர்களில் மூன்று பெண்கள் நடுத் தெருவில்... மழையிலும் பனியிலும் நனைந்து... அழுது புலம்பி அமைதி மறியல் செய்தார்கள். அவர்களும் தற்காலிகமாக தங்களின் உண்ணாவிரதத்தைக் கைவிட்டார்கள். வீட்டிற்குத் திரும்பிச் சென்றார்கள்.

நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (27.10.2019), கைது செய்யப் பட்டவர்களின் குடும்பத்தார், அவர்களை புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தில் சந்தித்து இருக்கிறார்கள்.

அது ஓர் உருக்கமான நிகழ்ச்சி. சோகம் கப்பிய வேதனையான நிகழ்ச்சி. அழுகை, விசும்பல், வெதும்பல் எனும் பற்பல சோக ராகங்கள்.

அனைத்துக் கைதிகளும் ஆரோக்கியமாக இருக்கிறார்கள். ஆனால் சற்றே  கலக்கமான சூழ்நிலையில் இருப்பதாகத் தெரிய வருகிறது.

மலாக்கா மாநிலச் சட்டமன்ற உறுப்பினர் ஜி.சாமிநாதன். இவரின் மனைவி வி.உமா தேவி. இவர் தன் கணவரைச் சந்தித்துப் பேச முடிந்ததாகக் கூறினார். தன் கைக்குழந்தையையும் கொண்டு சென்றார்.

தன் கணவர் சாமிநாதனுக்குப் பிடித்தமான தோசை மற்றும் முறுக்குப் பலகாரங்களைக் கொண்டு சென்றார். தன் கணவரின் உடல் எடை சிறிது குறைந்து விட்டதாக உமாதேவி கூறினார்.

12 கைதிகளின் குடும்ப உறுப்பினர்களின் பார்க்கும் நேரம்; காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை... ஒவ்வொருவருக்கும் ஒன்றரை மணி நேர பார்வை நேரம். கட்டம் கட்டமாக வழங்கப் பட்டது.

கைது செய்யப் பட்டவர்களில் ஒருவரின் குடும்பத்தாரில் இருவர் சிங்கப்பூரில் இருந்து வந்ததாகவும் தெரிய வருகிறது.

அந்தக் குடும்பத்தாரில் ஒருவர் பேசும் போது ‘என் தம்பி எங்களைப் பார்த்து அழுதான். தன்னை விரைவில் விடுதலை செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறான்’ என்று சொன்னார்.

இந்தச் சந்திப்பு நிகழ்ச்சிக்குப் பின்னர் மலாக்கா மாநிலத்தின், காடேக் சட்டமன்ற உறுப்பினரும் மாநில ஆட்சிக்குழு உறுப்பினருமான ஜி.சாமிநாதனின் மனைவி வி.உமா தேவி ஓர் உருக்கமான வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

எதிர்வரும் வியாழக் கிழமைக்கு முன்னர் தன் கணவர் நிலைமை குறித்து தீர்க்கமான ஒரு முடிவு எடுக்கப்பட்ட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

சோஸ்மா சட்டம் 2012 என்று அழைக்கப்படும் குற்றச் செயல் பாதுகாப்புச் சட்டம்; (Security Offences Special Measures Act 2012: Sosma) எனும் சட்டத்தின் கீழ், மலேசியாவில் 12 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்து இருந்ததாகக் கைது நடவடிக்கை.

’எதிர்வரும் வியாழக்கிழமை ஆள் கொணர்வு (ஹேபியாஸ் கார்பஸ்) குறித்து நீதிமன்ற விசாரணை நடைபெற உள்ளது. அது குறித்து நீதிமன்றம் முடிவு செய்ய வேண்டும் என்பது எங்களுக்கு வேண்டாம். இது தான் எங்களின் உறுதிப்பாடு’ என்று வி.உமா தேவி கூறினார்.

’பன்னிருவர் மீதான விசாரணை முடிந்தது என்றால் அதன் பின்னர் எந்தப் பிரச்சனையும் இல்லை. தயவுசெய்து அவர்களை வெளியே விடுங்கள்.’

கோலாலம்பூர் புக்கிட் அமான் தலைமையகத்தில் அந்த வேண்டுகோளை விடுத்தார். 

’வியாழக் கிழமைக்கு முன்னர், அதிகாரிகளிடம் இருந்து ஒரு நல்ல பதிலை எதிர்பார்க்கிறோம்’ என்று கூறினார்.

ஏறக்குறைய ஒன்றரை மணி நேரம் வி.உமா தேவி தன் கணவருடன் இருந்தார். சாமிநாதனின் உடன் பிறந்தோரும் உடன் இருந்தனர். கடந்த 17 நாட்களில் கைதிகள் சிலர் இளைத்து விட்டதாகவும் கூறினார்.

சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன்; மேலும் ஜ.செ.க., பி.கே.ஆர்., கட்சியின் உறுப்பினர்களும் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டு உள்ளனர்.

கைது செய்யப்பட்ட அனைவரும் விரைவில் விடுதலை செய்யப் படுவார்கள் என்று இன்றைய நன்னாளில் பிரார்த்திப்போம்.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக