13 நவம்பர் 2019

நாம் எப்படியோ - இன்றைய சிந்தனை - 13.11.2019

இன்று ஒரு சின்ன கதை. மத்தியான நேரம். கொளுத்தும் வெயில். ஒரு மரத்தின் அடியில் ஒருவன் நன்றாகத் தூங்கிக் கொண்டு இருந்தான். 


அந்த வழியாக ஒரு விறகுவெட்டி வந்தார். அவனைப் பார்த்தார். 'கடுமையான உழைப்பாளி. உழைத்தக் களைப்பு. அதனால் தான் இந்த வெயிலிலும் இப்படி தூங்குகிறார்' என நினைத்துக் கொண்டே சென்றார்.

அடுத்து ஒரு திருடன் வந்தான். 'இரவு முழுவதும் கண்விழித்து திருடி இருப்பான் போல தெரிகிறது. அதனால் தான் இப்படி அடித்துப் போட்டது போல் தூங்குகிறான்' என நினைத்துக் கொண்டே சென்றான்.

மூன்றாவதாக ஒரு குடிகாரன் வந்தான். காலையிலேயே நன்றாக குடித்து விட்டான் போல தெரிகிறது. அதனால் தான் குடி மயக்கத்தில் இப்படி விழுந்து கிடக்கிறான் என நினைத்துக் கொண்டே சென்றான்.

அடுத்து ஒரு துறவி வந்தார். இந்த வெயிலில் இப்படி உறங்கும் இவர் முற்றும் துறந்த ஞானியாகத்தான் இருக்க வேண்டும். வேறு யாரால் இப்படி ஒரு செயலைச் செய்ய முடியும் என அவரை வணங்கி விட்டுச் சென்றார்.

ஆக காட்சி ஒன்று தான்.  ஆனால் சிந்தனைகள் தான் வேறு வேறு. அதே போலத் தான் நாமும்... நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே...

ஒரு சூழலை வைத்து ஒருவரை எடை போடுவது தவறாகும். ஒருவரைப் பற்றி ஒரு முடிவு எடுப்பதற்கு முன்னால் அவர் என்ன மாதிரியான சூழ்நிலையில் இருக்கிறார் என்பதை முதலில் யோசிக்க வேண்டும். உங்கள் பார்வைக்கு உங்கள் மனதில் பட்டதை வைத்து ஒருவரை எடை போடுவது தவறாகும்.

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்
13.11.2019

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக