15 நவம்பர் 2019

சுகம் வந்தால் துக்கம் - இன்றைய சிந்தனை - 15.11.2019

ஒரு விவசாயி. வயதானவர். வயலில் கஷ்டப்பட்டு உழைத்து வந்தார். சொற்ப வருமானம். ஒரு நாள் அவருடைய குதிரை காணாமல் போய் விடுகிறது. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வருகிறார்கள். ’என்ன ஒரு துரதிர்ஷடம்’ என்று பரிதாபப் படுகிறார்கள்.


அனைவரிடமும் ’வருவது வரட்டும்’ என்று ஒரு வார்த்தையில் நன்றி சொல்லி முடித்துக் கொள்கிறார். ஆனால் ஓர் அதிசயம் நடந்தது.

தொலைந்து போன குதிரை இரண்டு நாட்கள் கழித்து வீடு தேடி வந்தது. வரும் போது கூடவே மூன்று குதிரைகளையும் கூட்டி வந்தது. இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினருக்கு வியப்பு.

’நீ ரொம்பவும் அதிர்ஷ்டசாலி. இப்போது உனக்கு  நாலு குதிரை... சந்தோஷம் தானே’ என்றனர்.

விவசாயி அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. மீண்டும் ’வருவது வரட்டும்’ என்று அதே அந்தப் பழைய வார்த்தையில் முடித்துக் கொண்டார்.

சில நாட்களுக்குப் பின்னர் விவசாயியின் மகன் குதிரையை வேகமாக ஓட்டிச் சென்றான். தவறிக் கீழே விழுந்து காலை உடைத்துக் கொள்கிறான்.

’என்னங்க இது... ஒரு நல்லது நடந்தால்  அடுத்து ஒரு கெட்டது நடக்குது. ரொம்ப கஷ்டமான நிலைமை’ என்று கூறி வருத்தப் பட்டனர். விவசாயி அதையும் பெரிது படுத்தவில்லை. ’வருவது வரட்டும்’ என்று மீண்டும் அமைதியாக அதே பதில்.

மறு வாரத்தில் நாட்டில் போர் வந்து விட்டது. எல்லா இளைஞர்களும் போரில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என்று அரசரின் கட்டளை. வீடு வீடாக இராணுவத்தினர் போகின்றனர். இளைஞர்களை அழைத்துச் செல்கின்றனர்.

அந்த ஏழை விவசாயின் மகனுக்குக் கால் உடைந்து இருந்ததால் அவனை மட்டும் அழைத்துச் செல்லவில்லை. இதைப் பார்த்த ஊர் மக்கள் அந்த விவசாயியின் அதிர்ஷ்டத்தைப் புகழ்ந்தனர். இதற்கும் அந்த விவசாயி ’வருவது வரட்டும்’ என்று பதில் கூறினார்.

ஏன் எல்லாச் சூழ்நிலைகளிலும் அந்த விவசாயி ஒரே மாதிரியான ஒரே சீரான மனநிலையில் ’வருவது வரட்டும்’ என்று இருந்தார்.

உண்மையில்... அந்த விவசாயி வாழ்க்கையின் அனைத்து இயல்புகளையும் தெரிந்து புரிந்து கொண்ட மனிதராக இருந்து இருக்கிறார்.

நாள்களில் நல்ல நாள்... கெட்ட நாள் என்று எதுவும் இல்லை. எல்லா நாள்களும் ஒரே மாதிரியான நாள்களே. அந்த எல்லா நாள்களும் மறைமுகமாக ஏதோ ஒரு பாடத்தை ஏதோ ஒரு வகையில் நமக்குச் சொல்லித் தருகின்றன.

நாணயத்திற்கு இரு பக்கங்கள். தெரியும் தானே. அது போல வாழ்க்கையிலும் நல்லது என்றும் கெட்டது என்றும் இரு பக்கங்கள் உள்ளன.

கஷ்டம் வந்தால்... அந்தக் கஷ்டம் நிரந்தரம் அல்ல... நாளை என்று ஒன்று இருக்கிறது. வந்த கஷ்டம் மறுநாளே கடந்து போகலாம். அதை மறக்க வேண்டாம்.

அந்த விவசாயின் மூலமாக நாம் தெரிந்து கொள்ளும் ஒரு முக்கியமான விசயம். சந்தோஷமான நேரத்தில் தலை கால் தெரியாமல் ஆடக் கூடாது. அதே சமயத்தில் கஷ்டமான நேரத்தில் மனம் உடைந்து போய்விடவும் கூடாது.

யாருக்கு எந்த நேரத்திலும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். சுகம் - துக்கம் இவை இரண்டும் ஒன்றுக்கு ஒன்று தொடர்பு உடையவை. ஒன்று போனால் ஒன்று.

சுகம் வந்தால் துக்கம் தயாராக நிற்கிறது என்று அர்த்தம். ஆக இந்த வாழ்வியல் கூற்றை அந்த விவசாயி நன்றாகவே உணர்ந்து இருக்கிறார். அதனால் ஒரே மாதிரியான ஒரே சீரான மனநிலையில் அவர் வாழ்க்கையைக் கடந்து போய்  இருக்கிறார்.

நமக்கும் அதுவே... சந்தோஷமான நேரத்தில் மனம் கலங்கக் கூடாது. கஷ்டமான நேரத்தில் மனம் உடைந்து போகவும் கூடாது.

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்
15.11.2019


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக