26 நவம்பர் 2019

குனோங் தகான் அனுபவங்கள் - 2

தமிழ் மலர் - 26.11.2019

குனோங் தகான் மலைக்குப் போக வேண்டும் என்றால் முதலில் ஜெராண்டுட் நகருக்குச் செல்ல வேண்டும். அங்கு இருந்து 16 கி.மீ. தொலைவில் கோலா தெம்பிலிங் படகுத் துறை. இந்த இடத்தில் இருந்து தான் கோலா தகான் மலை அடிவாரத்திற்குப் படகுகள் செல்கின்றன. மூன்று மணி நேரப் பயணம். 



ஒரு வழி படகுப் பயணத்திற்குக் கட்டணம் 55 ரிங்கிட். சாலை வழியாகவும் செல்லலாம். 68 கி.மீ.

குனோங் தகான் மலைக்கு அடிவாரத்தில் கோலா தகான் எனும் ஒரு சிறு நகரம். ஒரு காலத்தில் மீன்பிடி கிராமம். இப்போது வணிகத் தளமாக மாறி, அப்படியே பணம் பார்க்கும் வணிகத் தளமாகவும் மாறி விட்டது. வேதனை.

இங்கு தாமான் நெகாரா வனவிலங்கு காட்டுத் துறை அலுவலகம் உள்ளது. (Taman Negara Pahang, Kuala Tahan). குனோங் தகான் மலையின் உச்சிக்குக் கொண்டு செல்லும் பொருட்களை எல்லாம் ஒரு பட்டியல் போட வேண்டும்.

மலை ஏறுவதற்கு முன்னல் அந்தப் பட்டியலைத் தாமான் நெகாரா வனவிலங்கு காட்டுத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும். 



உங்களுடைய முதுகுச்சுமைப் பையில் (haversack) உள்ள எல்லாப் பொருட்களையும் வெளியே எடுத்து அவர்களிடம் காட்ட வேண்டும். அனுமதி இல்லாமல்  எந்த ஒரு பொருளையும் மேலே மலை உச்சிக்கு எடுத்துச் செல்ல முடியாது.

ஒரு தீப்பெட்டி என்றாலும் அதற்கும் கணக்கு காட்ட வேண்டும். கத்தி, கோடாரி எதையும் கொண்டு போக முடியாது. ஆனாலும் ஒரு பத்து பேர் குழுவிற்கு இரண்டு பாராங் கத்திகளை அனுமதிப்பார்கள்.

ஆனால் அனுமதியின் பேரில் துப்பாக்கிகளை எடுத்துச் செல்லலாம். நாங்கள் போகும் போது ஒருவரிடம் ஒரு துப்பாக்கியும் 48 ரவைகளும் இருந்தன. உயிருக்கு ஆபத்து வரும் போது மட்டுமே துப்பாக்கியைப் பயன்படுத்த முடியும் என்கிற கட்டுப்பாடு இன்னும் இருக்கிறது.

அதற்கும் கையெழுத்து வாங்கிக் கொள்வார்கள். தவிர மலைக்கு எடுத்துச் செல்லும் எல்லாவற்றுக்குமே கணக்கு காட்ட வேண்டும். கைக்குட்டையில் இருந்து உள்ளாடைகள் வரை எல்லாமே அந்தக் கணக்கில் வருகின்றன.



பிலாஸ்டிக் பைகளை எடுத்துச் சென்றால் எத்தனைப் பைகள் என்பதையும் எழுதி வைத்துக் கொள்வார்கள். திரும்பி இறங்கி வரும் போது காலியான அந்தப் பிலாஸ்டிக் பைகளை அவர்களிடம் காட்ட வேண்டும். ஒரு பை குறைந்தது என்றாலும் அபராதம் கட்ட வேண்டி வரும்.

குனோங் தகான் மலைப் பகுதியில் பிலாஸ்டிக் பொருட்களைப் பார்ப்பது அரிது. அப்படி கண்டிசனாக இருந்தும் மேலே சில இடங்களில் குப்பைகளைப் பார்க்கலாம். ரொம்பவும் இல்லை. ஒன்று இரண்டு பிலாஸ்டிக் பைகள். சமயங்களில் ஒரு சில பிலாஸ்டிக் பாட்டில்கள்.

இருந்தாலும் சிலர் திருட்டுத் தனமாகப் பொருட்களை எடுத்தும் செல்வார்கள். அந்த மாதிரி தவறுகளைக் கண்டுபிடித்தார்கள் என்றால் அவ்வளவுதான். கறுப்புப் பட்டியல் தயார். அப்புறம் பல வருடங்களுக்கு அந்தப் பக்கம் தலைவைத்துப் படுக்க முடியாது. 



தாமான் நெகாரா காட்டுத் துறை அதிகாரிகள் மலை ஏறுபவர்களுக்கு அவர்களே வழிகாட்டிகளை நியமிப்பிப்பார்கள். அந்த வழிகாட்டிகளுக்கு மலை ஏறுபவர்கள் தான் ஊதியம் வழங்க வேண்டும். பொதுவாக ஒரு வழிகாட்டிக்கு 1200 ரிங்கிட்டில் இருந்து 1500 ரிங்கிட் வரை ஊதியம். அதாவது 10 நாட்கள் சம்பளம்.

எல்லாம் முடிந்த பிறகு மலை ஏறுவதற்கான ஓர் அனுமதிக் கடிதம் வழங்குவார்கள்.

தாமான் நெகாராவில் இருந்து 13 கி.மீ. தொலைவில் முதல் நிறுத்தம். அந்த இடத்தின் பெயர் மெலாந்தாய் (Melantai). அங்கே தான் முதல் நாள் இரவு தங்க வேண்டும். அந்த இடத்தை அடைவதற்கு முன்னால் ஐந்தாறு குன்றுகளை ஏறி இறங்க வேண்டும்.

மெலாந்தாய் நிறுத்தத்தை அடையும் போது லேசாக இருட்டிவிடும். நீங்கள் எவ்வளவு தான் வேகமாக நடந்தாலும், அடர்ந்த காட்டுப் பாதையில், ஒரு நாளைக்கு 15 கி.மீ. தூரத்திற்கு மேல் நடக்க முடியாது. பல ஆண்டுகள் காடு மேடுகளில் அலைந்து திரிந்த எங்களால்கூட 15 கிலோ மீட்டருக்கும் மேல் பேர் போட முடியாது. 



அதுவும் தாழ்வான பகுதிகளில் தான் 15 கி.மீ. தூரம். மற்றபடி மலை உச்சிக்குப் போகப் போக ஒரு நாளைக்கு 10 கி.மீட்டருக்கும் மேல் தாண்ட முடியாது. பத்து மணி நேரத்தில் பத்து கிலோ மீட்டர் நடந்தாலே பெரிய விசயம். அடர்ந்த காட்டில் பெரிய சாதனை.

இன்னும் ஒரு விசயம். மலையில் ஏறும் போது கால் வலிக்காது. இறக்கத்தில் இறங்கும் போது தான் கால் வலிக்கும். அதுவும் ஐந்தாவது ஆறாவது நாட்களில் சொல்லவே வேண்டாம். உயிர் போகிற மாதிரி வலிக்கும்.

இறக்கத்தில் கால் முட்டிகள் தொடர்ந்தால் போல இடித்துக் கொள்வதால் அந்த வலி ஏற்படும். ஐந்து நிமிடம் வேகமாக இறங்கினால் ஒரு நிமிடம் நிற்க வேண்டும்.

தொடர்ந்து நிற்காமல் இறங்கலாம். முடியாது என்று சொல்லவில்லை. ஆனால் கால் வீணாகிப் போய்விடும். அப்புறம் ஹெலிகாப்டருக்குப் போன் போட்டு வர்ச் சொல்ல வேண்டி இருக்கும்.



ஆபத்து அவசர நேரத்தில், உயிருக்கு ஆபத்தான நேரத்தில் வனவிலாகா அதிகாரிகளுக்குப் போன் செய்யலாம். மீட்புப் பணிகளுக்கு ஏற்பாடு செய்வார்கள். நிலைமை மிக மோசமாக இருந்தால் ஹெலிகாப்டரை அனுப்பி வைப்பார்கள்.

மெலாந்தாய் நிறுத்தத்தில் ஓர் ஆறு. அதன் பெயர் மெலாந்தாய் ஆறு. இந்த ஆற்று ஓரத்தில் தான் பெரும்பாலும் கூடாரம் போடுவார்கள். இந்த இடத்தில் தான் காட்டு யானைகளின் சாணங்களை அதிகமாகப் பார்க்கலாம். புதிய சாணமாக இருந்தால் துணிந்து கூடாரம் போடலாம்.

ஒன்பது நாட்கள் பயணத்தில் எங்கு எங்கு நீர் வசதி இருக்கிறதோ அங்கே கூடாரம் போடுவது வழக்கம். அங்கேயே சமைத்துக் கொள்வது. மறுநாளுக்கான மதிய உணவையும் விடியல் காலையில் சமைத்துக் கொள்வார்கள்.

கூடாரம் போடும் இடத்தில் மர வேர்கள், செடி கொடிகள் இல்லாமல் இருப்பதையும் பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் இராத்திரி முழுவதும் அந்த வேர்கள் உடலை உறுத்திக் கொண்டே இருக்கும். கிடைக்கிற கொஞ்ச நேரத் தூக்கத்தையும் கெடுத்து விடும்.



கட்டில், மெத்தை, தலையணை சகலமும் சொப்பனக் கனவுகளான பிறகு சற்று உருப்படியான தூக்கம் தேவை.

அன்றிரவு மழை வருமா என்று அதையும் யூகித்து அறிந்து கொள்ள வேண்டும். மழை வருவது உறுதியானால், கூடாரத்தைச் சுற்றிலும் மழைநீர் வழிந்தோட சின்ன வடிகால்களை வெட்ட வேண்டும்.

நாங்கள் போன போது அந்த இரவு ஓர் அசம்பாவிதம். கூடாரத்திற்கு அப்பால் ஓர் அரை கி.மீ. தொலைவில் ஒரு குன்று. அந்தக் குன்றில் இருந்து பயங்கரமான பிளிறல் சத்தம். மறுபடியும் சத்தம். இந்த முறை அந்தச் சத்தம் எங்களை நோக்கி வருவது போல இருந்தது.

பொதுவாகக் காட்டு யானைகள் வந்தால் ஒரு கூட்டமாக வரும். அவற்றுக்கு மனித வாடை அரை கி.மீ. தொலைவிலேயே தெரிந்துவிடும். ஆகவே எதற்கும் தயார் நிலையில் மரத்தில் ஏறி கயிறுகளைக் கட்டிவிட வேண்டிய நிலை.

ஓர் ஆள் கட்டி அணைக்கும் அளவிற்கு பெரிய மரம். தேக்கு மரத்தைச் சேர்ந்த மரம். சாதாரணமாக அந்த மரத்தை யானைகள் முட்டி மோதித் தள்ளிவிட முடியாது. 



ஏறுவதற்கும் சற்று சிரமம்தான். வேறு என்ன செய்ய முடியும். உயிருக்கு ஆபத்து வரும் நேரத்தில் இதை எல்லாம் பார்க்க முடியுமா. மல்லுக்கட்டிக் கயிற்றைப் பிடித்து மேலே ஏறி உட்கார்ந்து கொள்ள வேண்டும்.

எல்லோரும் மரத்தில் ஏறுவதற்குத் தயாராக இருந்தார்கள். எங்கள் அதிர்ஷ்டம். யானைகள் நாங்கள் இருந்த இடத்திற்கு வரவில்லை.

ஒரு பெரிய கற்பாறைக்கு அடியில் கூடாரம் போட்டு இருந்தோம். கற்பாறை என்றால் சாதாரண கற்பாறை அல்ல. ஐந்து மாடி உயரத்திற்கும் மேல் உயரமான கற்பாறை.

யானைகள் அந்தக் கற்பாறையின் மேலே இருந்து கீழே இறங்க முடியாமல் பாதையை மாற்றிக் கொண்டு வேறு இடத்திற்குச் சென்று விட்டன. கீழே இறங்கி வந்து இருந்தால் நல்லா தான் இருக்கும். துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று எல்லோரும் மரத்தில் ஏற வேண்டி வந்து இருக்கும். 


கொர்பு மலையில் - 2004


தலைக்கு வந்தது தலைப் பாகையோடு போனது. முதல் நாளே நல்ல சகுனம் இல்லை. அன்று இரவு யாருக்கும் சரியாகத் தூக்கம் வரவில்லை. மலை ஏறும் போது இந்த மாதிரியான சம்பவங்கள் நிறையவே நடக்கும். எல்லாவற்றையும் சமாளித்துப் பேர் போட வேண்டி இருக்கும்.

மலை ஏறுபவர்கள் சில சமயங்களில் தங்களின் கூடுதலான உணவுப் பொருட்களைப் பிலாஸ்டிக் பையில் கட்டி மரக் கிளைகளில் தொங்கவிட்டுப் போவார்கள்.

அதில் குறிப்பு எழுதி வைத்து இருப்பார்கள். பொருட்களை விட்டுச் செல்லும் குழுவின் பெயர், தேதி; மறுபடியும் திரும்பி வந்து மீட்டுக் கொள்ளும் நாள் போன்ற விவரங்கள் இருக்கும்.

அதனால் மற்ற மலையேறிகள் அந்தப் பொருட்களைப் பயன்படுத்த மாட்டார்கள். முடிந்தால் தங்கள் பொருட்களையும் கூடுதலாக வைத்து விட்டுப் போவார்கள். இது காடுகளில் மனிதர்களின் எழுதப் படாத நியதி.

போகும் பாதையில் காட்டு டுரியான் மரங்களைப் பார்க்கலாம். பழங்கள் கீழே கொட்டிக் கிடக்கும். அபூர்வமாக மரத்தின் அடி வரையிலும் காய்த்து இருக்கும். அதிர்ஷ்டம் இருந்தால் பார்க்கலாம். ஒரு முறை பார்த்து இருக்கிறேன். படம் பிடிக்க முடியவில்லை. காமிரா மழையில் நனைந்து விட்டது.

காட்டு டுரியான் பழங்கள், சீத்தா பழங்களைப் போல குண்டு குண்டாக இருக்கும். இவற்றுக்குப் போதை தரும் தன்மை உண்டு. இரண்டு மூன்று சுளைகளைச் சாப்பிட்டால் விஸ்கி, பிராண்டி குடித்தது மாதிரி, போதை தலைக்கு ஏறி விடும்.

யானைகள் அப்படி அல்ல. எல்லாச் சுளைகளையும் அப்படியே ஒரேடியாக உறிஞ்சிச் சப்பிக் கொட்டைகளைத் துப்பி விடுமாம். ஓராங் அஸ்லி வழிகாட்டி சொல்லி இருக்கிறார்.



சமயங்களில் கொட்டையோடு விழுங்கி விடுமாம். யானைகள் எங்கே எல்லாம் சாணம் போடுகின்றனவோ அங்கே எல்லாம் இந்தக் கொட்டைகள் முளைத்து பெரிய மரங்களாகி விடுகின்றன. அதனால் காடுகளில் நிறைய இடங்களில் காட்டு டுரியான் மரங்களைப் பார்க்க முடிகின்றது.

அடுத்து வருவது கோலா பூத்தே எனும் இரண்டாவது நிறுத்தம். இங்கே தான் தெமிலியான் (temelian), லம்பாம் (lampam) மீன்களை அதிகமாகப் பார்க்க முடியும்.

மலை உச்சியில் இருந்து கிளந்தான் பாதையில் இறங்கி வரும் போது ரேலாவ் எனும் ஓர் இடம் இருக்கிறது. அங்கே கெலா (kelah) எனும் தங்க நிறத்திலான மீன்களைப் பார்க்கலாம்.

ஓர் ஆச்சரியமான விசயம். மெலாந்தாய் ஆற்றில் கால்களை வைத்தால் தெமிலியான் மீன்கள் வேகமாக நீந்தி வந்து சின்னதாய்க் கடித்து விட்டுப் போகும். உடல் கூசும். அவை ராஜ தந்திரமான, சாணக்கியமான மீன்கள். எப்படி என்பதைப் பற்றி நாளைய கட்டுரையில் பார்ப்போம்.

(தொடரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக