20 நவம்பர் 2019

பக்காத்தான் தலைவர்களுக்கு பணிவான வேண்டுகோள்

தமிழ் மலர் - 20.11.2019

பக்காத்தான் தலைவர்களுக்குப் பணிவான வேண்டுகோள். உங்களுடைய தேனிலவு காலம் முடிந்து ரொம்ப நாளாகி விட்டது. கீழே இறங்கி வாருங்கள். கீழே இறங்கி வந்து மக்களைப் பாருங்கள். மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதைப் பிரதானமாக எடுத்துக் கொள்ளுங்கள். 



மூத்த தலைவர் பேசுவதற்கு எல்லாம் தலையை ஆட்டிக் கொண்டு தஞ்சாவூர் பொம்மைக்குச் சாயம் பூசும் காலம் எல்லாம் முடிந்து விட்டது. ஆட்சித் தலைமைப் பொறுப்பை மாற்றுங்கள். சொன்ன சொல்லைக் காப்பாற்றுங்கள்.

நாட்டிற்கு எது சரியானது என்பதில் முடிவு எடுக்க வேண்டிய ஓர் இக்கட்டான காலக் கட்டத்தில் பக்காத்தான் பயணிக்கின்றது. அந்த முடிவை உடனே எடுக்க வேண்டும். உடனடியாகச் செய்ய வேண்டும்.

தஞ்சோங் பியாய் இடைத்தேர்தலில் பாரிசான் கூட்டணிக்கு மக்கள் வாக்கு அளித்து வெற்றி பெறச் செய்தார்கள். பாரிசானை மீண்டும் கொண்டு வந்தார்கள். பாரிசானுக்கு மீட்சி தர வேண்டும் எனும் எண்ணத்தில் அவர்கள் அப்படிச் செய்தார்களா என்றால் அதுதான் இல்லை.

பக்காத்தான் மீது இருந்த விரக்தியைக் காட்டுவதற்காகத் தான் அப்படிச் செய்தார்கள். அவர்களின் அதிருப்தியையும் வெறுப்பையும் திசைத் திருப்பி பாரிசானிடம் ஆதரவாகக் காட்டி இருக்கிறார்கள். அவ்வளவுதான். இதில் ஒன்றும் பெரிய மோடி மஸ்தான் இரகசியம் இல்லை.



பாரிசானுக்கு வாக்கு அளித்தார்கள். ஏன் வாக்கு அளித்தார்கள்? விளக்கம் சொல்கிறேன்.

காலம் காலமாக பாரிசானின் கோட்டையாக விளங்கிய தஞ்சோங் பியாய் தொகுதியில் 2018-ஆம் ஆண்டு 14-ஆவது பொதுத் தேர்தலில் ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டு வர முயற்சி செய்தார்கள்.

அப்படி ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்த 18-ஆவது மாதத்தில் மறுபடியும் ஒரு மாற்றத்தைக் கொண்டு வர நினைத்து இருக்க மாட்டார்கள். நிச்சயமாக. அவ்வளவு சீக்கிரத்தில் ஒரு மாற்றம் தேவை இல்லை. விரும்பி இருக்க மாட்டார்கள். ஆனால் காலத்தின் கட்டாயம் அவர்களை அப்படிச் செய்யத் தூண்டி இருக்கிறது. அப்படி ஒரு மாற்றத்திற்கு வழி வகுத்து இருக்கிறது.

(People didn't really vote for BN. People just want Harapan to know their disappointment.)

இந்த முடிவு பக்காத்தான் ஆட்சிக்கு ஒரு முடிவைச் சொல்கிறது; அல்லது ஒரு முடிவைக் காட்டுகிறது என்று நான் சொல்ல மாட்டேன். அது சரி அல்ல. ஆனாலும் பக்காத்தான் ஆட்சி அப்படிப்பட்ட ஒரு மோசமான தோல்வியில் இருந்து மீண்டும் எழுந்து நிற்குமா அல்லது அப்படியே சரிந்து போகுமா என்பது பக்காத்தான் கூட்டணியின் தலைமைத்துவத்தைப் பொறுத்த விசயமாகும். பக்காத்தான் தலைவர்கள் உடனடியாக ஒரு முடிவை எடுக்க வேண்டும்.

பக்காத்தான் தலைவர்கள் இப்போதைக்கு ஒரே ஒரு நோக்கத்தில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். அதுவே இந்தப் பல்லின நாட்டின் நல்வாழ்வுக்கு அடிகோளும். தலைமைத்துவத்தில் மாற்றம் செய்ய வேண்டும் என்பதே அந்த நோக்கமாக இருக்க வேண்டும். வேறு வழி இல்லை.




பக்காத்தான் மீதான நம்பிக்கையை மக்கள் இழந்து வருகிறார்கள். அதற்கு நடந்து முடிந்த சில இடைத் தேர்தல்கள் சாட்சியாக அமைகின்றன. கடந்த நான்கு தேர்தல்களிலும் தோல்வி மேல் தோல்வி. பக்காத்தான் தலைவர்களே... ஆத்திரப் படாமல் அமைதியாய் அமர்ந்து உடனடியாக ஒரு முடிவை எடுங்கள்.

தஞ்சோங் பியாய் தொகுதி பாரிசானுக்கு ஒரு பெரிய அஸ்திவாரம். அசைக்க முடியாத கோட்டையாக விளங்கி இருக்கிறது.

2004-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தஞ்சோங் பியாய் தொகுதியில் அப்போதைய ம.சீ.ச. தேசியத் தலைவர் ஓங் கா திங் போட்டியிட்டார். 23,615 வாக்குப் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார். அதுதான் இதுவரையிலும் தஞ்சோங் பியாய் தொகுதியில் தேசிய முன்னணி பெற்ற மிக உச்சக் கட்டமான வெற்றி ஆகும்.

அடுத்து வந்த 2008-ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் ம.சீ.ச.வின் வீ ஜெக் செங் 12,371 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார். பக்காத்தான் கூட்டணி மலேசிய அரசியலில் சற்று ஆழமாய்த் தடம் பதித்து வந்த காலக் கட்டம்.

அடுத்து வந்த 2013-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் தஞ்சோங் பியாய் தொகுதியில் பெரிய பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லை.

ஆனால் 2018-ஆம் ஆண்டில் மலேசியாவில் ஒரு பெரிய பயங்கரமான மாற்றம். மகாதீர்  மறுபடியும் மலேசிய அரசியலுக்குள் கால் பதித்து விட்டார். பக்காத்தானுக்கு ஜொகூரில் மாபெரும் வெற்றி. ஜொகூரில் மட்டும் அல்ல. நாடளாவிய நிலையில் மலேசியா முழுமைக்கும் பக்காத்தான் அலை. அதன் விளைவாக நடுவண் ஆட்சியில் மாற்றம்.

அதே அந்தத் தாக்கம் தஞ்சோங் பியாய் தொகுதியையும் விட்டு வைக்கவில்லை. இப்போதைய இடைத் தேர்தலில் வெற்றிப் பெற்றாரே வீ ஜெக் செங், அவர் அந்தப் பொதுத் தேர்தலிலும் மூன்றாவது முறையாகப் போட்டியிட்டார். தோல்வி கண்டார்.  524 வாக்குகள் வித்தியாசம். 



வீ ஜெக் செங் ஏற்கனவே இரண்டு முறை அதே தஞ்சோங் பியாய் தொகுதியில் வெற்றி பெற்றவர். பொந்தியான் பகுதியில் ஒரு ஜாம்பவானாக ஊர்க்கோலம் போனவர். மக்களுக்கு நல்லபடியாக சேவைகள் செய்து இருக்கிறார். இவரை சீனர்களுக்குப் பிடிக்கும். இருந்தாலும் பாரிசான் மீது இருந்த ஆத்திரத்தினால் போன பொதுத் தேர்தலில் அவரைக் கழற்றிவிட்டு விட்டார்கள்.

ஆனால் சில தினங்களுக்கு முன்னர் நடந்து முடிந்த இடைத் தேர்தலில் வீ ஜெக் செங், அபாரமான வெற்றி கண்டார். கடந்த பொதுத் தேர்தலில் இந்த மாண்புமிகு வீ ஜெக் செங் அவர்களைத் தோற்கடித்த அதே வாக்காளர்கள் தான் 18 மாதங்களுக்கு பின்னர் மறுபடியும் அவரைக் கொண்டு வந்து ஆலாபனை செய்து இருக்கிறார்கள். ஏன் எதனால்?

மக்களுக்கு பக்காத்தான் மீது ஏற்பட்ட வெறுப்பு, விரக்தி, அதிருப்தி. இது தஞ்சோங் பியாய் தொகுதியில் மட்டும் அல்ல. மலேசியா முழுமைக்கும் இப்போது வியாபித்து நிற்கிறது.

தஞ்சோங் பியாய் இடைத்தேர்தல் முடிவு என்பது பக்காத்தான் தலைவர்களுக்கு ஓர் எச்சரிக்கை மணி என்பதை மனதில் கொள்ளுங்கள். அதே சமயத்தில் தஞ்சாங் பியாய் இடைத்தேர்தல் மலேசிய வரலாறு காணாத தோல்வி கண்டுள்ளது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். செம்மையான அடி என்பதையும் உணர்ந்து கொள்ளுங்கள்.

இப்போதைய அரசியல்வாதிகளில் சிலர் மலேசிய மக்களின் வியூகத் தன்மையை ரொம்பவும் தவறாகக் கணக்குப் போட்டு விட்டார்கள். குறிப்பாக மலேசிய இந்தியர்களைக் குறி வைத்துக் காய்களை நகர்த்தியது ரொம்பவும் தப்பு.

விடுதலைப் புலிகள் விவகாரம் என்று சொல்லி பழைய அதே சொஸ்மா சட்டத்தைக் கட்டு அவிழ்த்து விட்டு இருக்கிறார்கள். 12 மலேசிய இந்தியர்களைக் கைது செய்து காவலில் வைத்து இருக்கிறார்கள்.

அதுவே திருப்பித் தாக்குதலுக்கு வழி வகுத்து உள்ளது. ஆங்கிலத்தில்  Backfire என்று சொல்வார்கள். மலேசியர்கள் தங்களின் அதிருப்தியைத் தங்களின் வாக்குச் சீட்டுகள் மூலமாகக் காட்டி இருக்கிறார்கள்.

sஒல்ல மறந்து விட்டேன். அஸ்மின் அலி விவகாரம். அன்வாருக்கு எதிராக அஸ்மின் அலி பல தடவை முரண்பாடான கருத்துகள் சொல்லி இருக்கிறார். அவற்றை எல்லாம் மகாதீர் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. இருந்தாலும் அஸ்மினுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். இதுவும் பக்காத்தான் கட்சியில் பதற்றங்களை ஏற்படுத்தி வருகிறது.

அடுத்து இனவாத அரசியலையும்; மதவாத அரசியலையும் மலேசியர்கள் விரும்பவில்லை என்பதையும் தஞ்சோங் பியாய் தேர்தல் மூலமாக உறுதிப்படுத்தி இருக்கிறார்கள். மீண்டும் சொல்கிறேன். 



தஞ்சாங் பியாய் தேர்தலில் தேசிய முன்னணி வெற்றி அடைந்தது என்று சொல்வதைக் காட்டிலும் நம்பிக்கைக் கூட்டணியின் மீது வாக்காளர்கள் கொண்ட அதிருப்தியின் பிரதிபலிப்பு என்று தான் சொல்ல வேண்டும்.

கடந்த ஓராண்டு காலத்தில் பக்காத்தான் தலைவரின் பேச்சும் சரி; செயலும் சரி; நம்பிக்கையின் மீதான நம்பிக்கையில் ரொம்பவுமே அதிருப்தியை ஏற்படுத்தி விட்டது. குறிப்பாக மலேசிய இந்திய, சீன இனத்தவரின் நம்பிக்கையில் சரிவு காணச் செய்து விட்டது.

பக்காத்தான் தலைவர் மீண்டும் மக்களின் நம்பிக்கையை மீட்டு எடுக்க மாட்டார் என்றே தெரிகிறது. அவருக்கு வழங்கப்ட்டு வந்த மரியாதை அவருடைய சாதனைகளுக்காக அல்ல. அவருடைய வயதின் காரணமாகத் தான். அதையும் நினைவில் கொள்வோம்.

ஜ.செ.க. தலைவர்கள் கடந்த ஓராண்டு காலமாகத் தங்களின் வெளிப்படையான கொள்கைகளைப் புறம் தள்ளிவிட்டு பக்காத்தான் தலைவரின் இனவெறி, பிளவு படுத்தும் நிகழ்ச்சி நிரல்களுடன் இணைந்து போனதே வேதனைக்குரிய விசயமாகும்.

ஒரு நல்லாட்சியின் மீது செல்லரிக்கும் செயல்களைத் திணித்து இருக்கக் கூடாது என்பதே நம்முடைய ஆதங்கம்.

பக்காத்தான் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, அவர்களின் அப்போதைய தேர்தல் அறிக்கைக்கு மதிப்புக் கொடுக்கவில்லை. ஏன் என்று கேட்கப்பட்டது. அதற்கு கிடைத்த பதில் என்ன தெரியுங்களா.

தேர்தலில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று நினைக்கவில்லை. அதனால் தான் நம்பத் தகாத வாக்குறுதிகள் அளித்தோம். இப்படிச் சொன்னவர் வேறு யாரும் அல்ல. அதே பக்காத்தான் தலைவர் தான்.

அன்வார் விஷயத்திற்கு வருகிறேன். நஜிப் அழகாக ஒரு நிகழ்ச்சிக்கு வடிவம் அமைத்துக் கொடுத்தார். என்ன நிகழ்ச்சி என்று விளம்பரம் தேவை இல்லை. அதனால் அன்வார் இப்ராஹிம் தொடர்ந்து சிறையில் இருக்க வேண்டிய நிலைமை.

இந்தக் கட்டத்தில் தான் மகாதீர் இடைக்கால பிரதமராகப் பதவி வகிக்க வேண்டும் என்று மக்களிடம் சொல்லப் பட்டது. மக்களும் ஏற்றுக் கொண்டார்கள். இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் அன்வாரிடம் பதவியை ஒப்படைப்பேன் என்று மகாதீர் வாக்குறுதி கொடுத்தார். ஆனால் சொன்ன மாதிரி செய்வாரா. தெரியவில்லை. 



அன்வார் இப்ராஹிம் அவர்களிடம் தலைமைத்துவத்தை விட்டுக் கொடுப்பதில் உறுதியாக இல்லாமல் மகாதீர் தவிர்த்து தவிர்த்துச் செல்வது குழப்பத்தையே ஏற்படுத்தி வருகிறது.

இதில் இருந்து மகாதீர் இன்னும் தெளிவு பெறவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

அடுத்து மலாய் மேலாதிக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதில் முனைப்பு காட்டுகிறார். உண்மை தானே. இருந்தாலும் மலாய் அல்லாத மற்ற குடிமக்கள் இன்று வரையிலும் பொறுமை காட்டி வருகிறார்கள்.

முந்தைய பாரிசான் ஆட்சி எப்படிப்பட்ட ஆட்சி என்பதை மக்கள் அறிவார்கள். பாரிசான் தலைவர்களில் சிலர் ஏராளமான ஊழல் குற்றச் சாட்டுகளையும் எதிர்நோக்கி உள்ளார்கள்.

இருந்தாலும் தஞ்சோங் பியாய் இடைத்தேர்தலில் மக்கள் அவர்களை ஆதரித்து இருக்கிறார்கள். ஆக மக்கள் எந்த அளவிற்கு நொந்து போய் இருப்பார்கள். வேண்டாம் என்று சொன்னவர்களையே வேண்டிச் சென்று இருக்கிறார்கள்.

விக்கிரமாதித்தன் கதைகளில் ஒரு குட்டிக்கதை வரும். அந்தக் கதையில், இருந்த பிசாசைவிட இருக்கிற பிசாசு மோசமானது என்று விக்கிரமாதித்தன் பட்டியிடம் சொல்வார். அது ஒரு கதையில் வரும் கதை. தப்பாக நினைக்க வேண்டாம். சும்மா ஒரு செருகல் தான்.

இப்போதைய பக்காத்தான் தலைவர் இருக்கிறாரே இவர் யாரையும் மதப்பதாகத் தெரியவில்லை. வேதனையிலும் வேதனையான வரப்பிரசாதம்.

இருபது ஆண்டுகளுக்கு முன்னால் அன்வார் இப்ராஹிம் மீதான வழக்கை, சட்டு புட்டு என்று நடத்தி அவரைச் சிறைக்கு அனுப்புவதில் மகாதீர் நன்றாகவே தீவிரம் காட்டினார்.

ஆனால் இப்போது பிரதமர் பதவியை அன்வாரிடம் வழங்குவதில் ரொம்பவுமே சுணக்கம் காட்டுகிறார். அன்றைக்கு அவரைச் சிறைக்கு அனுப்புவதில் இருந்த இருந்த வேகம் இப்போது மட்டும் எங்கே போனதாம்?

அன்வாரிடம் பிரதமர் பொறுப்பை வழங்கும் சடங்கு அடுத்தப் பொதுத் தேர்தல் வரை நீடிக்குமா?



மகாதீர் ஏற்கனவே பதவி விலகிச் செல்லும் தேதியை ஒப்புக் கொண்டு இருக்கிறார். இரண்டு வருசத்தில் போய் விடுகிறேன் என்று சொல்லி இருக்கிறார். அதன்படி அடுத்து வரும் 2020-ஆம் ஆண்டு மே மாதத்திற்குள், அன்வார் அவர்களிடம் பிரதமர் பொறுப்பை ஒப்படைத்துச் செல்வதையே மக்களும் எதிர்பார்க்கிறார்கள்.

மகாதீரின் பெர்சத்து கட்சி ஒரு சின்ன கட்சி. 12 நாடாளுமன்ற இடங்களை மட்டுமே வைத்து இருக்கிறது. அதை வைத்துக் கொண்டு அம்னோ 2.0-ஐ உருவாக்கி விடலாம் என்று நினைப்பது எல்லாம் சரிபட்டு வருமா. தெரியவில்லை.

பக்காத்தான் தலைவர்களே உங்களுடைய தேனிலவு காலம் முடிந்து ரொம்ப நாளாகி விட்டது. கீழே இறங்கி வாருங்கள். மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதைப் பிரதானமாக எடுத்துக் கொள்ளுங்கள். மூத்த தலைவர் பேசுவதற்கு எல்லாம் தலையை ஆட்டிக் கொண்டு தஞ்சாவூர் பொம்மைக்குச் சாயம் பூசும் காலம் முடிந்து விட்டது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

நாட்டிற்கு எது சரியானது என்பதில் முடிவு எடுக்க வேண்டிய ஓர் இக்கட்டான காலக் கட்டத்தில் பக்காத்தான் பயணிக்கின்றது. அந்த முடிவை உடனே எடுக்க வேண்டும். உடனே செய்ய வேண்டும்.

இதற்கு எல்லாம் ஒரே வழி. பிரதமர் பொறுப்பை அன்வார் அவர்களிடம் ஒப்படைப்பதே… அது ஒன்றுதான் பக்காத்தானைக் காப்பாற்ற முடியும். இல்லை என்றால் அடுத்த 15-வது பொதுத் தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணி நம்பிக்கையை இழந்து விடும்.

(முற்றும்)

1 கருத்து:

  1. பக்காதான் அரப்பானின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டுமானால் டத்தோ சிறீ அன்வார் பிரதமர் ஆக வேண்டும்

    பதிலளிநீக்கு