29 நவம்பர் 2019

குவாந்தான் ஜெராம் கொள்கலன் தமிழ்ப்பள்ளி

அத்தாப்புக் குடிசையில் ஒரு தமிழ்ப்பள்ளி; ஆயாக் கொட்டகையில் ஒரு தமிழ்ப்பள்ளி; இரும்புக் கிடங்கில் ஒரு தமிழ்ப்பள்ளி; ஈச்சம் ஓலைக் குடிசையில் ஒரு தமிழ்ப்பள்ளி. 


இந்த மாதிரியான நிலையில் மலேசியாவில் நிறையவே தமிழ்ப்பள்ளிகள். அந்த வகையில் அந்தக் காலத்துக் காலனித்துவச் சீமைத் துரைகளுக்கு முதல் மரியாதை செய்வோம்.

மலேசியா சுதந்திரம் அடைந்து 63 ஆண்டுகள் ஆகி விட்டன. நாட்டிற்குச் சுதந்திரம் கிடைத்து விட்டது. இருந்தாலும் மலேசியத் தமிழ்ப் பள்ளிகளுக்கு மட்டும் சுதந்திரம் கிடைத்ததாகத் தெரியவில்லை. இது ஒருபுறம் இருக்க...

எப்படியாவது தமிழ்ப்பள்ளிகளும் தமிழ்ப்பள்ளி மாணவர்களும் தலை நிமிர்ந்து வீரவசனம் பேசிக் கொண்டுதான் வருகிறார்கள். ஊட்டி ஊட்டி வளர்க்கப் பட்டவர்களுக்கு உதறல் எடுத்துக் காய்ச்சல் வரும் அளவுக்கு தமிழ்ப்பள்ளிகளின் சாதனைகள் தொடர்கின்றன. 



ஒரு பக்கம் தமிழ்ப் பிள்ளைகளின் புதுப் புது அறிவியல் கண்டுப்பிடிப்புகள். புதுப் புதுச் சாதனைகள். இன்னொரு பக்கம் தீராத விளையாட்டுப் பிள்ளையின் கறுப்பு வெள்ளை சப்பாத்து ஆராய்ச்சிகள். பாவம் அந்தக் கல்விமான்.

சாதனைகள் செய்து வரும் தமிழ்ப்பள்ளிச் செல்லங்களுக்கும்; தமிழாசிரியர்ச் செல்வங்களுக்கும் அன்பு வாழ்த்துகள்.

ஓர் அதிர்ச்சியான தகவல். ஓர் இரும்புக் கொள்கலனில் ஒரு தமிழ்ப்பள்ளி 22 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இது எத்தனைப் பேருக்குத் தெரியும். மலேசிய இந்தியர்களின் வரலாற்றில் இதுவும் ஒரு பெரிய சாதனை. 



பகாங் மாநிலத்தின் தலைநகரம் குவாந்தான். அந்த நகரில் இருந்து ஏறக்குறைய 30 கிலோமீட்டர் தொலைவில் ஒரு தமிழ்ப்பள்ளி. அதன் பெயர் ஜெராம் தோட்டத் தமிழ் பள்ளி (SJKT Ladang Jeram).

கடந்த 22 ஆண்டுகளுக்கும் மேலாகக் கொள்கலன் எனும்  ‘கொண்டெய்னர்’க்குள் (Container) இயங்கி வருகிறது. இது எப்படி இருக்கு என்று கேட்க வேண்டாம். அது மலேசியத் தமிழர்களின் தலையெழுத்து. தொடர்ந்து படியுங்கள்.

இந்த மாதிரி  ‘கொண்டெய்னர்’களைப் பெரும்பாலும் கட்டடங்கள் கட்டும் கட்டுமானப் பகுதிகளில் பார்த்து இருக்கலாம். தற்காலிக அலுவலகங்களாகச் செயல்படும். வேலை முடிந்ததும் கழற்றி எடுத்துக் கொண்டு போய் கசாப்புக் கடைகளில் கடாசி விட்டுப் போய் விடுவார்கள்.

ஆனால் இந்த மாதிரி ஒரு ‘கொண்டெய்னர்’ கொள்கலனில் ஒரு தமிழ்ப்பள்ளி கடந்த 22 ஆண்டுகள் இயங்கி வந்து இருக்கிறது என்றால் அதிர்ச்சியான விசயம் தானே. அதுவே மலேசியத் தமிழர்களின் வரலாற்றில் ஒரு கரிசல் காட்டுச் சுவடு தானே.



19521-ஆம் ஆண்டில் இந்த ஜெராம் தோட்டத் தமிழ் பள்ளி தோற்றுவிக்கப் பட்டது. Jeram Estate Sdn Bhd என்கிற நிறுவனம் கட்டிக் கொடுத்தது.  தகரக் கூரைகள் வேய்ந்த சாதாரணப் பலகைப் பள்ளி. அவ்வளவுதான்.

வாழையடி வாழையாக வந்த மலேசியத் தமிழ்க் கல்வியின் பழைய ஒரு பரிமாணங்களில் ஒன்று. பெரிசாகச் சொல்லிப் பெருமைப் பட்டுக் கொள்ள எதுவும் இல்லை.

(The original wooden structure of the school, built by Jeram Estate Sdn Bhd in 1952, was torn down when the estate was sold to Pasdec for a residential project in the mid 1990s.)

1997-ஆம் ஆண்டு. 40 ஆண்டுகளுக்குப் பின்னர் அந்தப் பள்ளிக் கட்டடம் பழுது அடைந்து போனது. சீர் செய்ய முடியாத நிலை. புதிதாக ஒரு பள்ளிக்கூடம் கட்ட வேண்டும் என்கிற நிலை. அதனால் கொள்கலனுக்குள் தற்காலிகமான வகுப்புகள் என்று சொல்கிறார்கள். ஆனால் உண்மை அது அல்ல.



கொள்கலனில் முதலாம் வகுப்பில் இருந்து மூன்றாம் வகுப்பு வரை வகுப்பு அறைகள். ஒவ்வொரு கொள்கலனிலும் ஒரு வகுப்பு. மூன்று கொள்கலன்களின் நீளம் 40 மீட்டர். அகலம் 30 மீட்டர்.

1990-களில் ஜெரம் தோட்டம் பாஸ்டெக் (Pasdec) எனும் வீடமைப்பு  நிறுவனத்திடம் விற்கப்பட்டது. அப்போது அங்கே இருந்த பள்ளிக்கூடம் உடைக்கப்பட்டது. அதில் இருந்து மாணவர்கள் கொள்கலன் பள்ளியில் படித்து வருகிறார்கள்.

அந்த நிறுவனம் பயன்படுத்திய கொள்கலன் அலுவலகத்தில் 4-ஆம் வகுப்பில் இருந்து 6-ஆம் வகுப்பு வரையிலான வகுப்பு அறைகள். மொத்தம் 49 மாணவர்கள்.  12 ஆசிரியர்கள். இதுதான் உண்மை.

1998-ஆம் ஆண்டில் இருந்து பல தடவைகள் புதிய பள்ளி கட்ட வேண்டும் என்பதற்காக பெற்றோர்களும், ஆசிரியர்களும், சமூகத் தலைவர்களும், தமிழ் ஆர்வலர்களும் நடயாய் நடந்து அவர்களின் முட்டிக் கால்கள் தேய்ந்து போனதுதான் மிச்சம். 



பள்ளி வாரியத்தின் தலைவர் டத்தோ நடேசன்; பெற்றோர் ஆசிரியர்ச் சங்கத் தலைவர் கே. ஜனார்த்தனம். இவர்களின் தலைமையில் கட்டிட முயற்சிகள் நல்ல முறையில் நடந்து வருகின்றன. இவர்களும் இவர்களின் குழுவினரும் விடாமல் போராடிக் கொண்டு தான் இருக்கிறார்கள்.வாழ்த்துகள்.

ம.இ.கா.வும் தன் அரசியல் பலத்தைப் பயன்படுத்தி இருக்கிறது. தங்களால் இயன்றதைச் செய்து இருக்கிறார்கள்.

புதிய கட்டடம் கட்டுவதற்கான பனிப்போர் நடந்து கொண்டு இருந்த போது கல்வித் துணையமைச்சராகக் கமலநாதன் இருந்தார் என்பதை நினைவில் கொள்வோம். 



அவரும் முடிந்த வரையில் காய்களை நகர்த்தி இருக்கிறார். எப்படித் தான் நகர்த்தினாலும் மேலிடத்தில் நிறையவே இழுபறிகள். பழைய குருடி கதவைத் திறடி கதைதான். இழுபறி நிலை தொடர்ந்தது.

மண்ணின் மைந்தத்தின் தலையாய மேலிடங்கள் கண்டு கொள்வதில் பிணக்கங்களில் சுணக்கங்கள். சக்களத்தி வீட்டுப் பிள்ளை சாக்கடையில் விழுந்தால் என்ன. சடக்கு ரோட்டில் புரண்டால் என்ன.

கொள்கலன் பள்ளியில் வேலிப் பாதுகாப்பு மட்டும் இல்லை. மற்றபடி மின்சாரம், நீர், இணைய வசதிகள் உள்ளன. பாதுகாப்பு காவலர்கள் இருவர் உள்ளனர்.

புதிய பள்ளிக்கூடத்தைக் கட்டுவதற்கு ’தெண்டர்’ (Tender) எடுத்த குத்தகையாளருக்கும் பிரச்சினை. அவருக்கும் ஒரு சட்டச் சிக்கல். சமயங்களில் ஆள் அட்ரஸ் இல்லாமல் போனார். பள்ளிக்கூடம் கட்ட முடியாத இழுச்சான் பறிச்சான் நிலை.

இப்போது இயங்கிவரும் கொள்கலன் பள்ளியில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் புதிய கட்டடத்திற்கான இடம் தேர்வு செய்யப்பட்டது. 2003-ஆம் ஆண்டு நிலம் ஒதுக்கப்பட்டது. மொத்தச் செலவுத் தொகை 14.8 மில்லியன் ரிங்கிட். இடத்தின் நில உரிமையிலும் பிரச்சினை.

2016-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதமே கட்டி முடிக்கப்பட்டு இருக்க வேண்டும். நில உரிமை இழுபறிகள் தொடர்ந்தன. பின்னர் 2018-இல் முடிய வேண்டியது. அப்படி இப்படி என்று கட்டிடப் பணிகள் இன்னும் தொடர்கின்றன. இதை எழுதும் போது புதிய தகவல்கள் கிடைக்கவில்லை. கிடைத்தால் பதிவு செய்கிறேன்.

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்
29.11.2019

1 கருத்து: