23 ஜூலை 2020

திரினிடாட் தொபாகோ பிரதமர் கமலா பிரசாத்

தமிழ் மலர் - 23.07.2020 - வியாழன்

(பதவிக் காலம்: 26 மே 2010 - 9 செப்டம்பர் 2015)

திரினிடாட் தொபாகோ (Trinidad and Tobago) என்பது வட அமெரிக்கா கண்டத்தில் கரிபியன் கடல் பகுதியில் சின்னஞ்சிறிய இரு தீவுகள். வெனிசூலா நாட்டிற்கு வடகிழக்கே உள்ள மிக அழகான தீவுகள்.

இயற்கை எழில் கொஞ்சும் அழகிய திட்டுகள். பச்சைப் பசேல் மழைக் காடுகள். பனிவிழும் வெண் தாமரை கடல் கரைகள். கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் அழகு அழகான இயற்கை வண்ணங்கள்.



1498-ஆம் ஆண்டில் கிறிஸ்தோபர் கொலம்பஸ் முதன்முதலாகல் காலடி எடுத்து வைத்தார். அந்தத் தீவுகளை ஸ்பெயின் நாட்டின் காலனியாக அறிவித்தார். அதற்கு முன்பு அங்கே பூர்வீக அமெரிக்க இந்தியர்கள் வாழ்ந்து வந்தார்கள்.

அதன் பின்னர் ஆங்கிலேயர்கள் அடித்துப் பிடித்து அந்த நாட்டைக் கைப்பற்றினார்கள். நிலங்கள் திறந்து விடப்பட்டன. ஆப்பிரிக்க அடிமைகள் வேலையாட்களாகக் கட்டி இழுத்து வரப்பட்டார்கள்.

1838-ஆம் ஆண்டில் திரினிடாட் தொபாகோவில் 17,439 அடிமைகள் இருந்தார்கள். அதே ஆண்டில் அமெரிக்கா ஐரோப்பாவில் இருந்த அடிமைகள் விடுதலையானார்கள். இங்கே திரினிடாட் தொபாகோ அடிமைகளுக்கும் விடுதலை.



அதனால் திரினிடாட் தொபாகோ நாட்டில் வேலை செய்ய ஆட்கள் இல்லை. அதனால் இந்தியாவில் இருந்து ஒப்பந்தக் கூலிகளாக இந்தியர்கள் கொண்டு போகப் பட்டார்கள். அப்படி வந்த இந்தியர்களின் வாரிசுகளில் ஒருவர்தான் அதே அந்த நாட்டின் பிரதமர் ஆனார். அவருடைய பெயர் கமலா பிரசாத் (Kamla Persad).

இவர் திரினிடாட் தொபாகோ நாட்டின் ஆறாவது பிரதமர். அது மட்டும் அல்ல. அவர் அந்த நாட்டின் முதல் பெண் பிரதமர். முதல் அட்டர்னி ஜெனரல். முதல் எதிர்க் கட்சித் தலைவர். காமன்வெல்த் நாடுகளின் முதல் பெண் தலைவர்.

இந்தியாவிற்கு வெளியே உள்ள நாடுகளில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதல் பெண் பிரதமர். இப்போது வயது 70.



இவரின் முப்பாட்டனார்கள் ஒப்பந்தத் தொழிலாளர் முறையில் (Indian indenture system) இந்தியாவில் இருந்து, 175 ஆண்டுகளுக்கு முன்னர் திரினிடாட் நாட்டிற்குச் சென்றவர்கள். பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இவரின் தாய்வழி முப்பாட்டனார்கள் சென்னையில் இருந்து கப்பல் ஏறியவர்கள்.

திரினிடாட் தொபாகோ நாட்டில் குடியேறிய இந்தியர்களில் அதிகமானோர் பீகார் மற்றும் கிழக்கு உத்திர பிரதேசத்தை சேர்ந்தவர்கள். தொடக்கத்தில் அதிகமான தமிழர்கள் குடியேறினார்கள். பின்நாட்களில் வட இந்தியர்களின் குடியேற்றம் அதிகமானது. அதனால் இப்போது தமிழர்கள் அங்கே ஒரு சிறு பான்மை மக்களாகி விட்டார்கள்.

திரினிடாட் தொபாகோ தீவுகளுக்கு வடக்கே பிரெஞ்சு காலனி தீவுகளாக குவாடிலோப் (Guadeloupe) தீவுகள் உள்ளன. இந்தத் தீவுகளில் குடியேறியவர்களில் 90 விழுக்காட்டினர் தமிழர்கள்.



அதே போல அங்கு இருக்கும் மற்றொரு தீவுக் கூட்டம் மார்த்தினிக் (Martinique). இந்தத் தீவுகளில் குடியேறிவர்களில் 50 விழுக்காட்டினர் தமிழர்கள். இவை எல்லாம் கரிபியக் கடல்கரைகள் சொல்லும் தமிழர்கள் வரலாறு. அதை மறந்துவிடக் கூடாது.

தொடக்கக் காலங்களில் கரிபியன் கடல் பகுதிகளில் தமிழர்களின் குடியேற்றம் அதிகமாக இருந்தது. ஏன் என்றால் பாண்டிச்சேரி என்பது தமிழ்நாட்டில் இருந்தது. அதனால் தமிழர்களைக் கொண்டு செல்வது ஆங்கிலேயர்களுக்கும்; பிரெஞ்சுக்காரர்களுக்கும் சிரமமாக அமையவில்லை.

காரைக்கால், மெட்ராஸ் (Madras Presidency), பாண்டிச்சேரி, கும்பகோணம் பகுதிகளில் இருந்து ஆயிரக் கணக்கான தமிழர்கள், கரிபியன் நாடுகளுக்கு ஒப்பந்தக் கூலிகளாக அழைத்துச் செல்லப்பட்டு இருக்கிறார்கள். இரண்டரை மாதம் கப்பல் பயணம். சரி.



1845 மே 30-ஆம் தேதி இந்தியாவில் இருந்து 225 ஒப்பந்த தொழிலாளர்கள் திரினிடாட் தொபாகோ தீவுகளுக்குக் கொண்டு செல்லப் பட்டார்கள். பயணித்த முதல் கப்பல் பேடல் ரசாக் (Fatel Razack). வருடத்தைக் கவனியுங்கள். 175 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த நிகழ்ச்சி.

இன்றைய திரினிடாட் தொபாகோ மக்கள் தொகையில் 42 விழுக்காட்டினர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். கமலா பிரசாத்தின் மூதாதயைர் தோட்டத் தொழிலாளர்களாகக் குடியேறியவர்கள்.

1952 ஏப்ரல் மாதம் 22-ஆம் தேதி, திரினிடாட் (Trinidad), சிபரியா (Siparia) எனும் இடத்தில் கமலா பிரசாத் பிறந்தார். தந்தையார் ராஜ் பிரசாத் (Raj Persad). தாயார் ரீதா (Rita).



கமலாவுக்கு பதினாறு வயதாக இருந்த போது, இங்கிலாந்துக்குப் போய் படிக்க விரும்பினார். ஆனால் அவரின் தந்தையார் மறுப்புத் தெரிவித்தார். உள்நாட்டிலேயே தங்கிப் படிக்க வேண்டும் என்பது தந்தையாரின் விருப்பம். இருப்பினும் அவரின் தாயார் தலையிட்டு, கமலாவை இங்கிலாந்திற்கு அனுப்பி வைத்தார்.

லண்டனில் மேற்கிந்திய தீவுகள் பல்கலைக்கழகத்தில் (University of the West Indies)  மேற்படிப்பு படித்தார். வழக்கறிஞராக வாழக்கையைத் தொடங்கி திரினிடாட் தொபாகோ நாட்டின் அரசு சட்டத் துறையின் தலைவராகப் பொறுப்பு ஏற்றார் (Attorney General). சட்டத்துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்தார்.

அதன் பின்னர் அரசியலுக்குள் வந்தார். எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவர். 1995-ஆம் ஆண்டு முதல் சிபரியா (Siparia) தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர். 2000-ஆம் ஆண்டில் திரினிடாட் தொபாகோ நாட்டின் கல்வியமைச்சராகப் பதவி வகித்தார்.



ஏப்ரல் 25, 2006-ஆம் தேதி அவர் வாழ்க்கையில் முக்கியமான நாள். நாட்டின் பெரும்பான்மை எதிர்க்கட்சி உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்று எதிர்க்கட்சித் தலைவரானார். 

2010-ஆம் ஆண்டு அந்த நாட்டில் பொதுத் தேர்தல். அப்போது பாட்ரிக் மானிங் (Patrick Manning) என்பவர் பிரதமர். இவருடைய ஆளும் கட்சியை எதிர்க்கட்சிக் கூட்டணி தோற்கடித்தது. அதைத் தொடர்ந்து கமலா பிரசாத் எனும் இந்திய வம்சாவழிப் பெண்மணி, திரினிடாட் தொபாகோ நாட்டின் ஆறாவது பிரதமர் ஆனார்.

இவருடைய கணவர் கிரிகாரி பிஸிசர் (Gregory Bissessar). மருத்துவர். இவருக்கு ஒரே மகன். பெயர் கிருஷ்ணா (Krisna).



இன்று அவர் பிரதமர் பதவியில் இல்லை. 09.09.2015-ஆம் தேதி வரையில் பதவி வகித்தவர். என்றாலும் இன சமத்துவத்திற்காகப் போராடுபவர்களை ஊக்குவித்து ஆதரவு வழங்கி வருகிறார்.

இங்கிலாந்தில் நோர்வூட் தொழில்நுட்பக் கல்லூரியில் மாணவியாக இருந்த போது இனவாதத்திற்கு எதிராகப் போராடியவர். ஆக இனவாதம் என்பது அவர் அரசியலுக்கு வந்த பின்னர் ஒரு புதிய கண்ணாம் மூச்சி ஆட்டம் அல்ல. பழகிப் போன பழைய காயா பழமா விளையாட்டு.

இங்கிலாந்தில் அவருக்கு நடந்த ஓர் இனவாத அச்சுறுதல் நிகழ்ச்சியைச் சொல்கிறார்.

“அப்போது எனக்கு பதினாறு வயது. நோர்வூட் தொழில்நுட்பக் கல்லூரியில் படித்துக் கொண்டு இருந்தேன். ஒரு நாள் பிற்பகல் நேரம். லண்டன் ஹைட் பூங்காவில் ஒரு வெள்ளைக்காரர் என்னை அவமானப் படுத்தி விட்டார்.



நடந்து கொண்டு இருந்த என்னை அவர் தடுத்து நிறுத்தினார். மோசமான, ஆபாசமான இனவெறிச் சொற்களில் ஏசினார். அதிர்ஷ்டவசமாக நான் தப்பித்தேன். அப்போது ஹைட் பூங்காவில் மக்கள் நிறைந்து இருந்தார்கள். 

ஆனால் யாரும் வந்து எனக்கு உதவி செய்ய முன்வரவில்லை. அப்போதும் இனவெறி பிடித்தவர்கள் இருக்கவே செய்தார்கள்.

இன்னொரு முறை இன்னொரு நிகழ்ச்சி. அதுவும் இனவெறி நிகழ்ச்சி தான். ஒரு வயதான வெள்ளை பெண்மணி நடந்து செல்கிறார். அப்போது கால் தடுமாறிதடுமாறி விழப் போகிறார். நான் விரைவாக அவர் கைகளைப் பிடித்து, அவர் விழுவதைத் தடுக்கிறேன். ஆனால் அவர் ஒரு நன்றி கூட சொல்லவில்லை. என்னை முறைத்துப் பார்த்து போய் விட்டார்.

மனிதர்களில் உயர்வு தாழ்வு எதுவும் இல்லை. எல்லோரும் சமம். ஒருவர் கறுப்பாக இருக்கிறார் என்பதற்காக அவரைப் புறக்கணிக்கக் கூடாது. அவரை கிண்டல் செய்யக் கூடாது. வெள்ளைக்காரர் என்பதற்காக அவர் உடலில் வெள்ளை இரத்தமா ஓடுகிறது’ என்கிறார் கமலா பிரசாத்.



1860-ஆம் ஆண்டுகளில் திரினிடாட் தொபாகோ தீவுகளில் இருந்த கரும்புத் தோட்டங்களில் வேலை செய்வதற்காக இந்திய மாநிலங்களில் வாழ்ந்த மக்களும் தமிழ்நாட்டில் இருந்து தமிழர்களும் கொண்டு செல்லப் பட்டார்கள்.

சொகுசுக் கப்பலில் எல்லாம் அவர்கள் பயணம் போகவில்லை. கட்டுச் சோறு; புளியோதரை; வத்தல் மிளகாய்; பருப்பு சாம்பார் என கட்டிக் கொண்டு தான் போய் இருக்கிறார்கள். இரண்டு மூன்று மாதக் கடல் பயணம். செத்துப் பிழைத்துப் போய் இருக்கிறார்கள்.

ஆப்பிரிக்காவில் இருந்து அமெரிக்காவிற்கு அடிமைகளைக் கொண்டு போனார்களே அந்த மாதிரி தான். இந்தியர்களை திரினிடாட் தொபாகோ தீவுகளுக்குக் கொண்டு போய்ச் சேர்த்து இருக்கிறார்கள். கப்பலில் இறந்தவர்களைக் கடலில் அப்படியே தூக்கி வீசி விடுவார்கள்.



தொடக்கக் காலங்களில் கரிபியன் தீவுகளுக்குச் சென்றவர்கள் மிகவும் சிரமப்பட்டு இருக்கிறார்கள். தமிழர்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள். அவர்கள் திரும்பி வர முடியாத ஒரு நிலை உருவாக்கப்பட்டது.

இந்தியர்களின் பயணப் பத்திரங்களை எல்லாம் ஆங்கிலேய முதலாளிகள் எரித்து விட்டார்கள். இந்தியாவில் இருந்து போனவர்களில் பலர் ஆவணங்கள் இல்லாத அனாதையானார்கள். தங்களின் அடையாளங்களை இழந்தார்கள். திரும்பி வர முடியாமல் அங்கேயே மறைந்து போனார்கள்.

தமிழர்களை எடுத்துக் கொண்டால் அங்கே போன தமிழர்களில் பெரும்பாலோருக்குப் படிப்பு குறைவு. அதுவே அவர்களின் பெரிய பலகீனமாக இருந்து உள்ளது.


இருந்தாலும் பரவாயில்லை. அவர்களின் பிள்ளைகள்; பேரப் பிள்ளைகள் இப்போது நல்ல நல்ல பதவிகளை வகிக்கிறார்கள். மகிழ்ச்சி அடைவோம். தமிழர்களும் சரி தமிழர்களைச் சார்ந்தவர்களும் சரி எங்கே இருந்தாலும் நன்றாக வாழ வேண்டும்.

கமலா பிரசாத் 2012-ஆம் ஆண்டு, இந்தியாவிற்குத் தன் வேர்களைத் தேடிச் சென்றார். பாட்னா நகருக்கு அருகில் இருக்கும் பேஹல்பூர் (Bhelupur) எனும் மிகச் சிறிய கிராமம். 122 வீடுகள். 1000 பேர் வசிக்கும் கிராமம்.

அதுதான் தன் மூதாதையர்களின் ஊர் என்பதை அறிந்து அங்கு சென்றார். ஹெலிகாப்படரில் வந்து இறங்கிய அவரை முதலில் அந்தக் கிராம மக்கள் கண்டு கொள்ளவில்லை. டில்லியில் இருந்து யாரோ ஓர் ஆறம் கட்டை அரசியல்வாதி வருகிறார் என்று நினைத்துக் கொண்டார்கள்.



பேஹல்பூர் கிராமத் தலைவருக்கு விசயம் தெரிந்து ஓடோடிப் போய் கமலா பிரசாத் குழுவினரை வரவேற்று இருக்கிறார்.

கமலா பிரசாத்தின் கொள்ளு தாத்தா ராம் லக்கன் (Ram Lakhan). அவர் 1889-ஆம் ஆண்டில் திரினிடாட் நாட்டிற்குச் சென்றதைப் பற்றி கிராம மக்களிடம் கிராமத் தலைவர் சொன்னார்.

இப்போது கமலா பிரசாத் ஒரு நாட்டின் பிரதமர் என்று சொன்னதும் மக்களுக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. ஒரே ஆரவாரம். கமலா பிரசாத்தின் சின்ன மாமா வழி தாத்தாவின் வீட்டை அடையாளம் காட்டினார்கள்.



கிராமத்தின் சந்து பொந்துகளில் நடந்து தாத்தாவின் வீட்டுக்குப் போனார் கமலா பிரசாத். தன் உறவினர்களை அடையாளம் கண்டு கண்ணீர் விட்டுக் கட்டிப் பிடித்து அழுது இருக்கிறார்.

அப்போது அவர் சொன்னார். ’இது என் வாழ்வின் மிக மகிழ்ச்சியான நாள். உலகில் நான் எங்கு இருந்தாலும் என் உடலில் ஓடுவது இந்தியர் இரத்தம் எனபதை நான் என்றைக்கும் மறக்க வில்லை’ என்றார்.

’இந்த மண்ணில் இருந்து என்னுடைய மூதாதையர்கள் திரினிடாட் நாட்டிற்கு வந்த போது தங்கம், வெள்ளி, பணம் எதையும் கொண்டு வரவில்லை. தங்கள் உழைப்பை மட்டுமே நம்பி வந்தார்கள். ஆனால் அப்படி வரும் போது இந்திய இரத்ததையும் இந்தியக் கலாசாரத்தையும் கொண்டு வந்தார்கள். அப்படியே எங்களுக்கு இந்திய நாட்டின் மாண்புகளையும் பண்புகளையும் சொல்லித் தந்தார்கள்.’


’ஒன்று மட்டும் சொல்வேன். உங்கள் குழந்தைகளை நன்றாகப் படிக்க வையுங்கள். என் பெறோர்கள் எங்களைப் படிக்க வைத்தார்கள். அதனால் தான் நான் இந்த நிலையில் இருக்கிறேன்’ என்று உணர்ச்சி ததும்பப் பேசினார். அதைக் கேட்டு மக்கள் நெகிழ்ந்து போனார்கள்.

ஊர் மக்கள் அனைவரும் ஹெலிகாப்டர் வரை வந்து கமலா பிரசாத்தை வழி அனுப்பி வைத்து இருக்கிறார்கள். போகும் போது தன் கொள்ளு தாத்தாவையும் திரினிடாட் தொபாகோ நாட்டிற்குத் தன்னுடன் அழைத்துச் சென்றதாகச் சொல்லப் படுகிறது.

திரினிடாட் தொபாகோ நாட்டில் இந்தியர்கள் சிறுபான்மை இனத்தவராக இருந்தாலும், அந்தச் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவர் பிரதமராக இருந்தார் என்பது பெருமைக்குரிய விசயம் தானே.



கமலா பிரசாத்தை இந்திய வம்சாவழியினர் எனும் பார்வையில் பார்க்கிறோம். இந்தியாவில் இருந்து அங்கு தொழிலாளர்களாகப் போன வாரிசுகளில் ஒருவர் பிரதமராகப் பொறுப்பு வகித்து இருக்கிறார். அதைத்தான் ஓர் உலக விசயமாகப் பார்க்கிறோம்.

எங்கு இருந்தாலும் இந்திய வம்சாவழியினர் கல்வியால் மட்டுமே முன்னேற்றம் காண முடியும் என்பதற்கு கமலா பிரசாத் நல்ல ஒரு சான்று.

2011-ஆம் ஆண்டில், உலகின் பதின்மூன்றாவது செல்வாக்கு மிக்க பெண் தலைவராக கமலா பிரசாத்தை டைம் பத்திரிக்கை தேர்வு செய்தது.

2012-ஆம் ஆண்டு இவருக்கு இந்தியாவின் உயரிய விருதான பிரவாசி பாரதிய சம்மன் விருது (Pravasi Bharatiya Samman) வழங்கப் பட்டது.

உலகின் பல நாடுகளில் வாழும் இந்திய வம்சாவழியினர்; குறிப்பாக தமிழர்கள் மற்றும் ஈழத்து வாரிசுகள்; அந்த அந்த நாடுகளின் அரசியல் பீடங்களில் கோலோச்ச ஆரம்பித்து விட்டார்கள். இந்தப் பாவனை தொடர வேண்டும்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
23.07.2020

சான்றுகள்:

1. https://en.wikipedia.org/wiki/Kamla_Persad-Bissessar.

2. https://www.chuvadugal.com/2012/11/blog-post_10.html.

3. https://caricom.org/saluting-our-women-trinidad-and-tobago-pm-kamla-persad-bissessar/

4. http://caribbeanelections.com/knowledge/biography/bios/persad_bissessar_kamla.asp.

5. Kamla makes call for keener focus on women". The Trinidad Guardian Newspaper. 13 March 2011.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக