21 செப்டம்பர் 2020

பத்தாங்காலி சுங்கை ரீமோ படுகொலை

தமிழ் மலர் - 15.05.2020

வியட்நாமில் ஒரு மை லாய் படுகொலை. அதே மாதிரி மலேசியாவில் பத்தாங்காலி படுகொலை. 24 நிராயுதபாணிச் சீனர்கள் அதிரடிக் கொலை. 1948 டிசம்பர் 12-ஆம் தேதி உலு சிலாங்கூர், பத்தாங் காலியில் பயங்கரமான படுகொலை. பத்தாங்காலி மக்கள் கண்ணீர்விட்டுக் கதறினார்கள். உலக மக்கள் விக்கித்துப் போனார்கள்.

மலாயா அவசரகாலத்தின் போது பிரிட்டிஷ் இராணுவம் செய்த ஓர் அட்டூழிய அட்டகாசம். மலேசியச் சீனர்ச் சமூகம் நீதி ஜெயிக்க வேண்டும் என்கிறது. இன்று வரைக்கும் போராடி வருகின்றது. பிரிட்டிஷ் அரசாங்கம் கவலைப் படுவதாகத் தெரியவில்லை. பற்பல சாக்கு போக்குகள். பற்பல சால்சாப்புகள். தட்டிக் கழித்துப் போய்க் கொண்டே இருக்கிறது.

மலேசியர்களும் விடுவதாக இல்லை. மலேசிய நாடாளுமன்றத்தில் மாண்புமிகு பான் இயூ தெங்கில் இருந்து குலசேகரன் வரை விவாதம் செய்து விட்டார்கள். முன்னாள் ஐ.ஜி.பி. ஹனீப் ஓமார் பக்க பலமாக நின்றார். ஆனால் லண்டன் அசைந்து கொடுப்பதாக இல்லை. சாகடிக்கப் பட்டவர்களின் உறவினர்களுக்கு இன்று வரை நியாயமும் கிடைக்கவில்லை.

மை லாய் (My Lai Massacre) படுகொலையைப் பற்றி முதலில் சொல்லி விடுகிறேன். 1960-களில் வியட்நாம் நாடு இரண்டு நாடுகளாக இருந்தது. கம்யூனிசப் பிடியில் வட வியட்நாம். மக்களாட்சிப் பிடியில் தென் வியட்நாம். வடக்கே இருந்து வியட்கோங் (Vietcong) போராளிகள் தென் வியட்நாமிற்குள் ஊடுருவிக் கொண்டு இருந்தனர். உலகப் போலீஸ்காரர் அமெரிக்கா சும்மா விடுவாரா.

‘நண்பேண்டா…’ என்று உதவிக்குப் போனார். ஆனால், என்ன ஆனது. கிணறு வெட்ட பூதம் கிளம்பியதுதான் மிச்சம். அது ஒரு வியட்நாமிய காப்பியம். ஒரு மாமாங்கத்திற்கு எழுதினாலும் எழுதி முடிக்க முடியாது. இப்போதைக்கு வேண்டாம்.

வியட்கோங்குகள் ஒரு கட்டத்தில் அமெரிக்காவின் சிம்ம சொப்பனமாக விளங்கினார்கள். போர் உச்சக் கட்டத்தில் இருந்த நேரம். 1968 மார்ச் 16-ஆம் தேதி. அமெரிக்க வீரர்கள் மை லாய் கிராமத்திற்குள் நுழைந்தனர்.

அங்கே கண்ணில் பட்ட ஆண்கள், பெண்கள், குழந்தைகள், சிசுக்கள் என்று 504 பேரைப் பாரபட்சம் இல்லாமல் வெட்டிக் கொன்றார்கள். ஒரு பூ புழுவைக்கூட விட்டு வைக்கவில்லை. கண்ணில் பட்டவை எல்லாம் அழித்து ஒழிக்கப் பட்டன. வீடு காடுகள் என்று ஒட்டு மொத்தமாகய்த் தீயிட்டு கொளுத்தப் பட்டன. இளம் பெண்கள் பலர் கற்பழிக்கப் பட்டனர். பின்னர் அவர்களின் உடல்கள் வெட்டி வீசப் பட்டன.

வியட்கோங் போராளிகளுக்கு கிராம மக்கள் அடைக்கலம் கொடுத்ததாகக் குற்றப் பத்திரிகை வாசிக்கப் பட்டது. விசயம் தெரிந்த உலக மக்கள் கொதித்து எழுந்தனர். ஐ.நாவில் விவாதிக்கிற அளவுக்கு விசயம் முற்றிப் போனது. அந்த மை லாய் படுகொலையைப் பற்றி வரலாறு இன்றும் பேசுகிறது. இனி என்றும் பேசிக் கொண்டுதான் இருக்கும். அது நிச்சயம். அப்பேர்ப்பட்ட ஒரு வரலாற்றுக் கொடுமை.

அதே அந்த மை லாய் படுகொலையைப் போல மலேசியாவிலும் ஒரு படுகொலை (Batang Kali Massacre). சிலாங்கூர் மாநிலத்தின் உலு சிலாங்கூர் மாவட்டத்தின் பத்தாங் காலியில் நடந்தது.

1948 டிசம்பர் 11-ஆம் தேதி மாலை மணி ஐந்து. பிரிட்டிஷ் இராணுவத்தின் 7-வது பிலாட்டூன் ‘ஜி’ கம்பனியைச் சேர்ந்த (7th Platoon, G Company, 2nd Scots Guards) இராணுவ வீரர்கள், பத்தாங் காலி சுங்கை ரீமோ (Sungai Rimoh) ரப்பர் தோட்டத்திற்கு வந்தார்கள். அங்கு இருந்த சீனத் தொழிலாளர்கள் அனைவரையும் ஓர் ஒதுக்குப் புறமான இடத்திற்கு அழைத்துச் சென்றார்கள். ஆண்கள் மட்டும் தனியாகத் தனித்து வைக்கப் பட்டார்கள்.

இன்னொரு பிரிவில் பெண்களும் குழந்தைகளும் தனியாக நின்றார்கள். அன்றைய தினம் நடுநிசி வரைக்கும் விசாரணைகள். அதற்கு முன்னதாக மாலை மணி ஆறு வாக்கில், லூ குவேய் நாம் என்பவர் சுட்டுக் கொல்லப் பட்டார். அவரிடம் பப்பாளிப் பழங்களை விற்றதற்கான ஒரு ரசீது இருந்தது. அந்த ரசீது போலியானது என்று குற்றம் சாட்டப் பட்டது. அடுத்த விநாடி அவருடைய நெற்றியில் தோட்டா துளைத்தது.

இரவு ஏழு மணிக்கு கிராம மக்கள் அனைவரும் நான்கு ஐந்து கொங்சி வீடுகளில் அடைத்து வைக்கப் பட்டார்கள். விசாரணை செய்யப் போவதாகச் சொல்லி ஆண்களை மட்டும் தனியாகப் பிரித்து ஒதுக்கி வைத்தார்கள்.

ஆண்களுடன் தாங்களும் சேர்ந்து இருக்கப் போவதாகப் பெண்கள் மன்றாடி இருக்கிறார்கள். ஆண்களுக்கு வரப் போகும் ஆபத்தைப் பெண்கள் உணர்ந்து இருக்கலாம். ஆண்களைக் காப்பாற்றுவதற்குப் பெண்கள் எவ்வளவோ முயற்சி செய்து இருக்கிறார்கள். எதுவும் எடுபடவில்லை. துப்பாக்கி முனையில் பலவந்தம் நடந்ததுதான் மிச்சம்.

பெண்களும் குழந்தைகளும் தனித் தனியாக அடைத்து வைக்கப் பட்டார்கள். மறுநாள் காலையில் ஒரு லாரி வந்தது. அதில் பெண்களும் குழந்தைகளும் ஏற்றப் பட்டார்கள். பெண்கள் சிலர் ஏற மறுத்தார்கள். அவர்களைக் குண்டுக் கட்டாய்த் தூக்கி லாரிக்குள் வீசினார்கள். லாரி நகர்ந்தது.

அந்தச் சமயத்தில் சீனர்கள் வாழ்ந்த கொங்சி வீடுகளில் துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள். நெட்ட நெடுமரமாய் ஆற்றங் கரையில் ஆண்கள் சாய்ந்து விழுகின்றார்கள். லாரியில் இருந்த பெண்களும் குழந்தைகளும் கத்திக் கதறுகின்றார்கள்.

அவர்கள் வாழ்ந்த வீடுகள் எல்லாம் தீப்பற்றி எரிகின்றது. ஆனால் ஒரு லாரி மட்டும் செம்மண் சாலையில் புழுதியைக் கிளப்பிக் கொண்டு மறைந்து போகின்றது.

இரண்டு நாட்கள் சென்று வந்து பார்க்கும் போது, ஆண்கள் சிலரின் தலைகள் தனியாக வெட்டப் பட்டு கிடந்தன. அவர்களின் ஆண் விதைகள் நசுக்கப் பட்டு கிடந்தன. உயிர்நாடிகள் அறுக்கப் பட்டுத் தொங்கின. மனிதச் சித்ரவதையின் உச்சக்கட்ட அலங்கோலக் காட்சிகள்.

அந்த நிகழ்ச்சியில் தப்பித்தவர் ஒரே ஒருவர். பெயர் சோங் ஹோங் (Chong Hong). படுகொலையை நேரடியாகப் பார்த்தவர். 2004-ஆம் ஆண்டு பி.பி.சி. வானொலிக்குப் பேட்டி கொடுத்தார்.

‘எங்களை வரிசையாக நிற்க வைத்தார்கள். நான் நடுவில் இருந்தேன். இந்தப் பக்கம் பத்து பேர். அந்தப் பக்கம் பத்து பேர். இரண்டு பக்கத்திலும் ஒரே சமயத்தில் ஒவ்வொருவராகச் சுட்டுக் கொண்டு வந்தார்கள். எல்லாம் நான்கு ஐந்து நிமிடங்களில் முடிந்து விட்டது.

எனக்குப் பக்கத்தில் இருந்தவரைச் சுடும் போது, நான் மயக்கம் அடைந்து கீழே விழுந்து விட்டேன். பக்கத்தில் இருந்தவர் சாயும் போது நானும் அவரோடு சேர்ந்து சாய்ந்து விட்டேன். மயக்கம் தெளிந்து பார்க்கும் போது, என் நண்பர்கள் எல்லோரும் பிணமாகக் கிடந்தார்கள். மனித நடமாட்டம் இல்லை. நான் மெதுவாக எழுந்து காட்டுக்குள் ஓடி விட்டேன்.

ராத்திரி பூராவும் அங்கேயே இருந்தேன். அவர்கள் மறுபடியும் வந்து விடுவார்களோ எனும் பயம். யாரும் வரவில்லை. இரண்டு நாள் கழித்து பெண்களும் பிள்ளைகளும் வந்தார்கள். எல்லாரும் அழுதார்கள்.

கொலை நடந்த இடத்தில் இதுவரையில் யாரும் வீடு கட்டவில்லை. ஆவிகள் உலாவுவதாக்ச் சொல்கிறார்கள்’ என்றார். வயது எழுபதுக்கும் மேல் ஆகிய நிலையில் அண்மையில் இறந்து போனார்.

ஒரு கிராமத்தின் ஆண்கள் எல்லோரும் ஏன் ஒட்டு மொத்தமாகக் கொலை செய்யப் பட்டனர். இரண்டு காரணங்கள் சொல்லப் படுகின்றன. முதலாவது காரணம்.

அவர்கள் பத்தாங் காலி காடுகளில் வாழ்ந்த கம்யூனிஸ்டுகளின் அனுதாபிகள். கம்யூனிஸ்டுப் போராளிகளுக்கு உணவு உடைகள வழங்கி ஆதரவு கொடுத்து இருக்கிறார்கள். கம்யூனிஸ்டுகளின் நண்பர்கள் என்பதால் அவர்கள் ஆங்கிலேயர்களின் எதிரிகள் ஆனார்கள்.  

அடுத்து இரண்டாவது காரணம். 1948 ஜூன் 16-ஆம் தேதி, பேராக் சுங்கை சிப்புட்டில் மூன்று பிரிட்டிஷ் தோட்ட நிர்வாகிகள் சுட்டுக் கொல்லப் பட்டதின் எதிர்வினை.

சுங்கை சிப்புட், எல்பில் (Elphil Estate) தோட்டத்தின் நிர்வாகி ஏ.இ.வால்கர் (A.E. Walker) என்பவர் அவருடைய அலுவலக அறையில் சுட்டுக் கொல்லப் பட்டார். முப்பது நிமிடங்கள் கழித்து இன்னும் இரு கொலைகள். சுங்கை சிப்புட்டில் இருந்து இரண்டு கி.மீ. தூரத்தில் பின் சூன் (Phin Soon Estate) தோட்ட நிர்வாகி ஜே.எம்.எலிசன் (John Alison) என்பவரும், அவருடைய துணை நிர்வாகி இயான் கிறிஸ்டியன் (Ian Christian) என்பவரும் சுட்டுக் கொல்லப் பட்டனர்.

இந்தச் சம்பவங்கள் மலாயாவை ஆட்சி செய்த ஆங்கிலேயர்களை ஆத்திரத்தின் எல்லைக்கே அழைத்துச் சென்றது. அதன் பின்னர்தான் மலாயாவில் அவசர காலம் பிரகடனம் செய்யப் பட்டது.

மலாயாச் சீனர்கள் மீது ஆங்கிலேயர்களுக்கு இருந்த வெறுப்பு உணர்வு திசை திரும்பியது. வாய்ப்பு கிடைத்தால் பழி வாங்கும் படலமும் கட்டு அவிழ்க்கப் பட்டது. இந்தியர்கள் நிலைமை ஓரளவுக்குப் பரவாயில்லை. அப்போது பெரும்பாலான இந்தியர்கள் தோட்டப் புறங்களிலேயே அடைபட்டு கிடந்தனர். அந்தத் தோட்டங்களை வெள்ளைக்காரர்கள் நிர்வாகம் செய்தார்கள்.

அதனால், அவர்களிடம் ஆதிக்கப் பிடிமானம் இருந்தது. சலாம் போட்டுச் சமாளித்துக் கொண்டார்கள். காலா காலத்திற்கும் இந்தியர்களின் எதிர்காலம் ஒரு கேள்விக் குறியாகவே இருந்து வந்தது.

அதன் பிறகு ஜப்பானியர்கள் வந்தனர். காந்தி நேதாஜி போன்ற பெயர்கள் அவர்களைக் கொஞ்சம் காப்பாற்றி விட்டன. இருந்தாலும் ஆயிரக் கணக்கானத் தமிழர்கள் சயாம் பர்மா காடுகளில் அனாதையாகச் செத்துப் போனார்கள். அதை நாம் அவ்வளவு சுலபமாக மறந்துவிட முடியாது.

மலேசியாவில் வாழும் அத்தனை இந்தியக் குடும்பங்களிலும், யாராவது ஒருவர் சயாம் பர்மா மரண இரயில் பாதையில் சம்பந்தப் பட்டு இருக்கலாம். அது மறைக்க முடியாத ஒரு வரலாற்று உண்மை. இந்த விசயம் உங்களுக்கே தெரியாமல்கூட இருக்கலாம்.

பத்தாங் காலி படுகொலை சம்பந்தமாக விசாரண நடத்த வேண்டும் என்று லண்டன் அரசாங்கம் கேட்டுக் கொண்டது. அப்போது மலாயாவின் தலைமை அரசு வழக்கறிஞராக சர் ஸ்டாபோர்ட் போஸ்டர் என்பவர் இருந்தார். விசாரணை என்ற பேரில் ஒரு கண் துடைப்பு. போதுமான சான்றுகள் இல்லை என்று விசாரணை கைவிடப் பட்டது.

அதன் பின்னர் 1970-இல் மறுபடி ஒரு விசாரணை. அதுவும் பிசுபிசுத்துப் போனது. 1992-ஆம் ஆண்டு பி.பி.சி. வானொலி நிலையம் ஓர் ஆவணப் படத்தைத் தயாரித்தது. உலகம் பூராவும் ஒளிபரப்பு செய்தது.  

அந்தக் கட்டத்தில் மலேசியாவின் தலைமை போலீஸ் அதிகாரியாக ஐ.ஜி.பி. டான்ஸ்ரீ ஹனீப் ஒமார் இருந்தார். அவர் அந்தப் பிரச்சினையைக் கையில் எடுத்துக் கொண்டார். பாதிக்கப்பட்ட குடும்பங்கள் போலீஸில் புகார் செய்யுமாறு கேட்டுக் கொண்டார். பூ மோய், தாம் யோங் (Tham Yong), சோங் பூங் என மூன்று பேர் புகார் செய்தார்கள். ஓர் உயர்மட்டப் போலீஸ் விசாரணைக் குழு அமைக்கப் பட்டது.

பிரிட்டிஷ் தூதரகத்திடம் ஒரு புகார் விண்ணப்பம் வழங்கப் பட்டது. அந்த விண்ணப்பத்தின் நகல் எலிசபெத் மகாராணியாருக்கும் அனுப்பி வைக்கப் பட்டது. அவ்வளவுதான். 45 வருடங்களுக்கு மேல் ஆகிறது. விண்ணப்பம் அப்படியே கிடப்பில் கிடக்கிறது.

2004-ஆம் ஆண்டு, ஜனநாயகச் செயல் கட்சி, இந்தப் பிரச்சினையை மலேசிய  நாடாளுமன்றத்திற்கு கொண்டு சென்றது. மாண்புமிகு குலசேகரன் பெரும் முயற்சி எடுத்துக் கொண்டார். விவாதம் செய்தார்கள். அவ்வளவுதான்.  பாதிக்கப் பட்டவர்களுக்கு இன்று வரை நியாயம் கிடைக்கவில்லை.

பாதிக்கப்பட்ட குடும்பங்கள் பணம் காசு எதையும் கேட்கவில்லை. நஷ்டயீடு எதையும் கேட்கவில்லை. அவர்கள் கேட்பது எல்லாம் நேர்மையான நியாயம் தான். சுடப்பட்டவர்கள் என்ன தப்பு செய்தார்கள். அவர்கள் செய்த அந்தக் குற்றத்தைச் சொன்னால் போதும். ஆக, பிரச்சினை தொடர்கிறது.

எப்போது நியாயம் கிடைக்கும் என்பது அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம். அதுவரையில், பத்தாங் காலி படுகொலையில் பாதிக்கப் பட்டவர்களுக்காக அனுதாபப் படுவதைத் தவிர வேறு வழி இல்லை.

சான்றுகள்:

1. Hale, Christopher (1 October 2013). Massacre in Malaya: exposing Britain's My Lai. Stroud: The History Press.

2. Bowcott, Owen (26 January 2012). "Batang Kali relatives edge closer to the truth about 'Britain's My Lai massacre'". The Guardian. London

3. "Malayan 'massacre' families seek UK inquiry". BBC NEWS. 7 May 2012

4.  "British court rules in favour of Batang Kali kin". The Star. 9 September 2011.



2 கருத்துகள்:

  1. கொடூரம் ஐயா! கர்வம் அதிக்கம் உள்ள வெள்ளையர்கள் அவர்கள்.ஒருபோதும் உண்மையை சொல்ல மாட்டார்கள்.வேதனை ஐயா !

    பதிலளிநீக்கு
  2. படிக்கும்போதே மனம் கனக்கிறது...

    பதிலளிநீக்கு