28 அக்டோபர் 2020

அசாம் தேயிலைக் காடுகளில் மணிப்பூர் தமிழர்கள்

தமிழ் மலர் - 28.10.2020

அசாம் தமிழர்கள் அசாம் தேயிலைக் காடுகளின் அசல் உழைப்பாளிகள். அசாம்  வரலாற்றில் அழியாத வரலாறு படைக்கும் அழகிய ஜீவன்கள். அசாம் பச்சை வெளிகளில் பால்மனம் மாறா அச்சாணித் தமிழர்கள். ஒரே வார்த்தையில் சொன்னால் அசாம் நரம்புகளின் தியாகச் சீலங்கள். உடல், பொருள், ஆவி அனைத்தையும் அசாம் தேயிலைச் செடிகளுக்கு அர்ப்பணிப்புச் செய்தவர்கள்.

தங்களின் ஒவ்வொரு துளி வியர்வையையும் அசாம் தேயிலைச் செடிகளுக்கு பசளைப் பச்சையாகப் பறைசாற்றியவர்கள். இவர்களில் மணிப்பூரில் இருந்து போன மணிப்பூர் தமிழர்களும் உள்ளார்கள். இவர்களும் மணிமணியாய் வரலாறு படைத்தவர்கள். படைத்தும் வருகிறார்கள்.

இந்தியாவின் வடகிழக்கில் ஏழு மாநிலங்கள். மிசோரம் (Mizoram); நாகலாந்து (Nagaland); திரிப்புரா (Sikkim Tripura); மணிப்பூர் (Manipur); அருணாச்சலப் பிரதேசம் (Arunachal Pradesh); அசாம் (Assam); மேகாலயா (Meghalaya). இவற்றை ஏழு சகோதரிகள் (Seven Sister) மாநிலங்கள் என்று அழைக்கிறார்கள்.

இந்த மாநிலங்களில் பர்மா எல்லையில் மிக ஒட்டி இருப்பது மணிப்பூர். இந்த மணிப்பூரில் இப்போது 17,000 தமிழர்கள் வாழ்கிறார்கள். இவர்களைத் தான் மணிப்பூர் தமிழர்கள் என்று அழைக்கிறோம். இவர்களில் மூவாயிரம் பேர் அசாம் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்கிறார்கள்.

மணிப்பூர் தமிழர்கள் அசாம் தேயிலை தோட்டங்களில் வேலைக்குப் போவதற்கு முன்னதாகவே தமிழ்நாட்டில் இருந்து தமிழர்கள் 1840-ஆம் ஆண்டுகளிலேயே அங்கே போய் விட்டார்கள்.

அசாம் தேயிலைத் தோட்டங்களில் சொர்க்க வாழ்வு கிடைக்கும் என்று அழைத்துச் செல்லப் பட்டவர்கள். 1837-ஆம் ஆண்டில் முதல் ஆங்கில தேயிலைத் தோட்டம் வட அசாமில் சாபுவா (Chabua, Upper Assam) எனும் இடத்தில் நிறுவப்பட்டது

ஆனாலும் இவர்கள் ஆங்கிலேய அதிகாரத்தில் மிகவும் கொடுமைப்படுத்தப் பட்டார்கள். இலங்கைத் தேயிலைத் தோட்டத் தமிழர்களுக்கு ஏற்பட்ட அதே வன்முறைகள் தான்.

மலாயா தமிழர்கள் மலாயா ரப்பர் தோட்டங்களில் எப்படி கொடுமை செய்யப் பட்டார்களோ அதே போல அசாம் தமிழர்களும் பற்பல கொடுமைகளுக்கு உள்ளானார்கள். சொல்லில் வடிக்க முடியா வேதனைகள்.

அசாம் தேயிலைத் தோட்டத் தமிழர்கள் கொடுமைப் படுத்தப்பட்ட கதையை பி. ஹெச். டேனியல் (Paul Harris Daniel) என்பவர் ரெட் டீ (Red Tea) எனும் பெயரில் 1969-ஆம் ஆண்டில் ஒரு நாவலில் எழுதினார்.

இந்த நாவலைத் தழுவி ஒரு திரைப்படம் உருவானது. அந்தப் படம் தான் ’பரதேசி’ எனும் தமிழ்ப்படம். 2013-ஆம் ஆண்டு தயாரிக்கப் பட்டது. 1930-ஆம் ஆண்டுகளில் நடந்த உண்மைச் சம்பவத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப் பட்ட திரைப்படம்.

தமிழில் இந்த நாவலை "எரியும் பனிக்காடு" என்ற பெயரில் இரா. முருகவேள் மொழிபெயர்த்து இருக்கிறார். இதற்கு முன்பு 1937-ஆம் ஆண்டிலேயே முல்க் ராஜ் ஆனந்த் (Mulk Raj Anand)  என்பவர் ஒரு நாவல் எழுதினார்.

அசாம் தேயிலைத் தோட்டக் கொத்தடிமை வாழ்க்கையை விவரிக்கும் நாவல். அதன் பெயர் இரண்டு இலைகளும் ஒரு மொட்டும் (Two Leaves and a Bud). அந்த நாவல்களைப் படித்து பார்த்தேன். மனம் கலங்கிப் போனது.

மலாயா தமிழர்கள்; அசாம் தமிழர்கள். இந்த இரு இன மக்களும் ஒரே குளத்தில் வாழ்ந்த மீன்கள் தாம். பிரித்துப் பார்க்க முடியவில்லை. மலாயாவில் தமிழர்கள் காண்டா போட்டு ரப்பர் பாலைத் தூக்கினார்கள். அங்கே அசாமில் தமிழர்கள் காண்டா போட்டு தேயிலைச் செடிகளுக்குத் தண்ணீர் பாய்ச்சினார்கள். அங்கேயும் இடுப்பில் வேட்டிக் கோவணம். இங்கேயும் வேட்டிக் கோவணம் தான்.

ஆக கூட்டிக் கழித்துப் பார்த்தால், அசாம் நாட்டு மக்களையும் பிரிட்டிஷ் முதலாளித்தும் விட்டு வைக்கவில்லை. அவர்களும் மலாயா தமிழர்களைப் போல அடிமைகளைப் போல பிழிந்து எடுக்கப் பட்டார்கள்.

மணிப்பூர் தமிழர்கலுளுக்குப் பின்னால் ஒரு பெரிய வரலாறே இருக்கிறது. அது ஒரு சோகமான வரலாறு. இதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.

பர்மா தமிழர்கள் செல்வச் செழிப்பில் கொழித்தவர்கள். மற்ற மற்ற பர்மிய இனங்கள் மலைத்துப் போகும் அளவிற்கு மலை மலையாய்ச் சொத்துகளைக் குவித்தவர்கள். விருந்தோம்பலில் சிகரம் பார்த்தவர்கள்.

பர்மா தமிழர்கள் ஐம்பது அறுபது கோயில்களைக் கட்டிப் போட்டு அழகு பார்த்தவர்கள். அறுபது எழுபது தமிழ்ப்பள்ளிகளைக் கட்டிப் போட்டு தமிழுக்கு உச்சம் பார்த்தவர்கள். ஊரும் உலகமும் வியக்கும் வண்ணம் வாழ்ந்தவர்கள். ஆனால் ஒரே ஒரு நாளில் நடுத்தெருவிற்குத் தள்ளப் பட்டார்கள்.

அறுபது வருடங்களுக்கு முன்பு நடந்தது. பர்மாவில் இராணுவ ஆட்சி. ஆயிரக் கணக்கான தமிழர்கள் தமிழ்நாட்டிற்கு நாடு கடத்தப் பட்டார்கள். தெரிந்த விசயம்.

தாய் மண்ணில் பிச்சைக்காரர்களாகப் போய் நின்றார்கள். அவர்கள் தான் பராசக்தி படக் கதையின் நிஜமான நிழல் பிம்பங்கள். வேதனை விளிம்புகளில் வேர் அறுக்கப்பட்ட விழுதுகள். விரக்தியின் உச்சத்தில் தற்கொலை செய்து கொண்டவர்கள் பலர். வேறு மாநிலங்களுக்கு ஓடிப் போனவர்கள் பலர்.

அவர்களில் சிலருக்குச் சென்னை வாழ்க்கை பிடிக்கவில்லை. செத்தாலும் நாங்கள் பர்மாவிலேயே செத்துப் போகிறோம் என்று சொல்லி பர்மாவிற்கே திரும்பிப் போனார்கள். வங்காள தேசம் வழியாகப் போனவர்கள் காடு மேடுகளையும் ஆறு மலைகளையும் கடந்து மணிப்பூர் - பர்மா எல்லை வரை சென்றார்கள்.

அதற்கு மேல் அவர்களால் போக முடியவில்லை. பர்மிய குடி நுழைவுத் துறையினர் அவர்களை எல்லையிலேயே தடுத்து நிறுத்தி விட்டார்கள். பர்மாவிற்குள் விடவில்லை. மணிப்பூர் - பர்மா எல்லைக் கிராமம் மோரே. அந்த இடத்தில் அப்படியே தங்கி விட்டார்கள். அவர்கள் தான் மணிப்பூர் தமிழர்கள்.

அங்கே தங்கிய தமிழர்களின் சந்ததிகள் தான் மணிப்பூரில் இன்றும் வாழ்ந்து வருகிறார்கள். ஒரு மினி தமிழகத்தையே உருவாக்கி இருக்கிறார்கள். மணிப்பூர் பகுதிகளுக்கு  நிறைய பேர் வருவது இல்லை. ஏதோ அந்த மாநிலம் அண்டை நாடான சீனாவில் இருப்பது போல பலருக்கும் ஒரு பயம். சரி.

இந்த மணிப்பூர் தமிழர்களின் வரலாற்றைப் பற்றி கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம். அதன் பின்னர் அசாம் தேயிலைத் தோட்டத் தமிழர்களைப் பற்றி தெரிந்து கொள்வோம். மணிப்பூருக்குத் தமிழர்கள் வந்த கதை சோகம் கலந்த வியப்பான கதை. மன்னிக்கவும். கதறக் கதறக் கதை சொல்லும் கதை.

நவீன வசதிகள் வந்துவிட்ட இன்றைய நாளில்கூட மோரே கிராமத்தைச் சென்று அடைவது அப்படி ஒன்றும் சாதாரண விசயம் அல்ல. ஆனால் பல பத்தாண்டுகளுக்கு முன்னர் எப்படி எல்லாம் தமிழர்கள் சிரமப்பட்டு மோரே பகுதியைச் சென்று அடைந்து இருப்பார்கள். நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது.

பிரிட்டனைச் சூரியன் அஸ்தமிக்காத நாடு என்று வெள்ளைக்காரர்கள் பெருமையாகச் சொல்லிக் கொள்வார்கள். எங்களைக் கேட்டுத்தான் ஆதவன் வரும் விழும் என்று வீரவசனம் பேசியவர்கள். கொடிகட்டி பறந்த நாடு. இப்போது கொஞ்சம் மங்கி விட்டது.

ஒரு காலக் கட்டத்தில் தென் ஆப்பிரிக்கா, இலங்கை, மலாயா, சிங்கப்பூர், பிஜி, மொரிஷியஸ், ரீ-யூனியன் தீவுகள், பர்மா போன்ற நாடுகளுக்குத் தமிழர்கள் புலம் பெயர்ந்தார்கள்.

அந்த நாடுகளில் இருந்த கரும்பு, தேயிலை, ரப்பர் தோட்டங்களில் ஆயிரக் கணக்கில் வேலை செய்தார்கள். சிலர் வியாபாரம் செய்தார்கள். சிறு சிறு குழுக்களாக; குடும்பம் குடும்பங்களாகத் தமிழர்கள் பல ஆண்டுகள் அங்கேயே தங்கினார்கள். சிறுகச் சிறுகப் பணம் சேர்த்தார்கள். சொத்துக்களை வாங்கிப் போட்டார்கள்.

ஒரு கட்டத்தில் இந்த நாடுகள் காலனி ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டுச் சுதந்திரம் பெற்றன. இரண்டு மூன்று தலைமுறைகளாக வாழ்ந்து வந்த தமிழர்களுக்குப் பல நாடுகள் குடியுரிமை வழங்கி சிறப்பு செய்தன.

ஆனால் சில வக்கிரப்புத்தி பிடித்த நாடுகளும் இருக்கவே செய்தன. தமிழர்களை அந்நியராக நினைத்தன. தங்கள் வாய்ப்புகளைப் பறிக்க வந்த சண்டாளர்களாகக் கருதின. அவர்களைத் துன்புறுத்தி நாடு கடத்தின. அதில் ஸ்ரீலங்கா, பர்மா போன்றவை தனித்துவம் பெற்ற அசுர புத்திகள்.

பர்மாவில் 1962-ஆம் ஆண்டு இராணுவப் புரட்சி. அதிகாரத்திற்கு வந்தவர்கள் தமிழர்களை நசுக்கிப் போட்டு விரட்டத் தொடங்கினார்கள். உழைத்துச் சம்பாதித்த தமிழர்களின் கோடிக் கோடியான சொத்துக்கள் பறிமுதல் செய்யப் பட்டன.  

தமிழர்கள் வலுக்கட்டாயமாக கப்பலில் ஏற்றப் பட்டார்கள். இந்தியாவிற்கு மறு ஏற்றுமதி செய்யப் பட்டார்கள். மூன்று இலட்சத்திற்கும் அதிகமான தமிழர்களுக்கு மன உளைச்சல்கள்; அலைக்கழிப்புகள்; அங்கலாய்ப்புகள்.

அந்த வகையில் தமிழ்நாட்டில் நிறைய பர்மா தமிழர் காலனிகள் தோற்றுவிக்கப் பட்டன. அவற்றில் ஒன்று தான் இன்றைய பர்மா பஜார். தாய்நாட்டிற்குத் திரும்பி வந்தவர்களில் சிலருக்குத் தங்களின் பழைய வாழ்விடம், சொத்துச் சூழல்களை மறக்க முடியவில்லை. ஒன் மினிட் பிளீஸ்.

அசாம் காட்டில் தொடங்கி பர்மா பஜாருக்கு வந்து விட்டதாகச் சபிக்க வேண்டாம். வரலாற்றைத் தொட்டால் அப்படித்தாங்க வரும். ஆனால் வராது என்று வடிவேலு கணக்கில் எதுவும் வராதுங்க. கொஞ்சம் சிரியுங்களேன். சரி.

மீண்டும் பர்மா செல்லும் முயற்சிகளில் இறங்கினார்கள். கால்நடையாகவும் போகிற வழியில் கிடைக்கிற போக்குவரத்துகளையும் பயன்படுத்திப் பர்மாவிற்குச் செல்வது என்று முடிவு செய்த்தார்கள்.

மூன்று மாதம் நடையாய் நடந்து இந்தியாவின் வடகிழக்கே இருக்கும் மணிப்பூர் மாநிலத்தின் எல்லையை அடைந்தார்கள். அங்கு இருந்து பர்மாவின் தலைநகரம் ரங்கூனுடன் இணைக்கும் பாலத்தின் வழியாக பர்மாவுக்குள் செல்ல முயற்சி செய்தார்கள்.

ஆனால் பர்மிய இராணுவம் அவர்களைப் பர்மாவிற்குள் விடவில்லை. எல்லையில் இருந்த இராணுவத்தினரும் குடிநுழைவுத் துறையினரும் அவர்களை விரட்டி அடித்தார்கள்.

அங்கு இருந்து திரும்பி மறுபடியும் தமிழ்நாட்டிற்குப் போக பலருக்கு விருப்பம் இல்லை. இருந்தாலும் ஒரு சிலர் தமிழ் நாட்டிற்கே திரும்பிச் சென்றார்கள். ஒரு சிலர் அந்த நுழைவு பாலத்தை ஒட்டிய மோரே என்கிற பழங்குடியினர் கிராமத்திலேயே தங்கினார்கள். அப்படியே  அவர்களின் பிழைப்பு ஓடியது. இந்த மோரே கிராமத்தின் பரப்புளவு 7.38 சதுர கி.மீ. ஒரு செருகல்.

இரண்டாம் உலகப் போர் நடந்த போது நேதாஜியின் இந்திய தேசிய இராணுவம் இந்த மோரே கிராமப்புற நகரில் தான் தங்கியது. இந்திய தேசிய இராணுவத்தில் மணிப்பூர் தமிழர்களும் இணைந்து இந்திய விடுதலைக்கு போராடினார்கள். அதை இங்குள்ள பாட்டிகள் இன்றும் கதை கதையாய்ச் சொல்கிறார்கள். சரி அசாம் தேயிலைத் தோட்டத் தமிழர்களின் கதைத் தொடர்ச்சியை நாளை பார்ப்போம்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
28.10.2020

சான்றுகள்:

1. William Harrison Ukers, The romance of tea: an outline history of tea and tea-drinking through sixteen hundred years, A.A. Knopf, 1936.

2. Sanyal, S (2008). Tea Tourism: A Concept That's Catching On. The Hindu Business.

3. Thuppakki Mozhi: Marudhan, Mugil, Sa.Na. Kannan, R. Muthukumar

4. Gait E.A. A History of Assam 2nd Edition 1926 Thackar, Spink & Co Calcutta page 303-311
 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக