தமிழ் மலர் - 09.11.2020
மலாயா தமிழர்கள். மலையூர் மண்ணின் வளப்பத்திற்கு மந்திரச் சொற்களை வாசித்துக் காட்டியவர்கள். வாசித்த அந்த மந்திரச் சொற்களின் சாரலில் நனைந்து கரைந்து கடைசியில் காணாமல் போனவர்கள். அந்த வாயில்லா ஜீவன்களுக்கு முதல் வணக்கம். முதல் மரியாதை.
மலாயா தமிழர்கள் வாசித்த அந்த மந்திரச் சொற்கள் காலத்தால் மறக்க முடியாத உண்மைகள். அந்த உண்மைகளுக்குள் இன்னும் ஓர் உண்மை மறைந்து உள்ளது. அந்தக் கித்தா தோப்பு ஜீவன்களே இந்த நாட்டின் மறக்க முடியாத ஜீவகாருண்யங்கள். அதுதான் மறைந்து கிடக்கும் உண்மை. உண்மையிலும் உண்மை.
வரலாறு தெரியாதவர்கள்; அல்லது வரலாறு படிக்காதவர்கள்; அல்லது அந்த வரலாற்றையே மறைப்பவர்களின் பார்வையில், வேண்டும் என்றால் அந்த வாயில்லா ஜீவன்களுக்குப் பெயர் வந்தேறிகளாக இருக்கலாம். ஆனால் வரலாறு தெரிந்தவர்களின் பார்வையில் அவர்கள் வந்தேறிகள் அல்ல. சத்தியமான தியாகச் சீலங்கள்.
உண்மையில் பார்க்கப் போனால் அந்தக் கித்தா தோப்பு ஜீவன்கள் தான் அச்சு அசலான மைந்தர்கள். அம்சமான மண்வாசனைகள். வாய் இருந்தும் வாய்விட்டுப் பேச முடியாத அந்த வாயில்லா பூச்சிகளினால் தான் மலைநாட்டு மண்வாசனையை இன்னமும் பலர் சுவாசித்துக் கொண்டு இருக்கிறார்கள். உண்மையைச் சொன்னால் சிலருக்குக் கோபம் வரலாம். சண்டைக்கும் வரலாம். பிரச்சினை இல்லை. சபைக்கு உதவாத சோம்பேறிகளைப் பற்றி பேசுவதினால் யாருக்கும் எவருக்கும் எந்த நன்மையும் இல்லை.
மலேசியாவில் காபி என்று சொன்னதும் ஈப்போ வெள்ளைக் காபி (Ipoh White Coffee) நினைவுக்கு வரும்; காபித்தாம் (Kopitiam); காபி சாம் (Coffee Cham); காபி சி (Kopi-c); காபி ஓ (Kopi-o); காபி மின் தி (Kopi min-tim); இப்படி இன்னும் பல வகையான் காபிகள் நினைவுக்கு வரலாம். சாப்பிட்டால் சாப்பிட்டுக் கொண்டே இருக்கலாம் எனும் டிரெண்டில் குடித்தால் குடித்துக் கொண்டே இருக்கலாம் எனும் டயலாக் சேர்ந்து வரலாம்.
ஆனாலும் மலாயாவுக்குக் காபி வந்த கதை பலருக்குத் தெரியாது. அதோடு மலாயாவில் காபி பயிர் செய்யப்பட்ட கதையும் தெரியாது. ஒன் மினிட் பிளீஸ். இந்தக் காபி வருவதற்கு முன்னதாகவே தமிழர்கள் மலாயாவுக்கு வந்து விட்டார்கள். மெட்ராஸ் மாநிலம் தான் தமிழர்களை இலட்சக் கணக்கில் அனுப்பி வைத்த முதல் மாநிலம். இதுவும் ரொம்ப பேருக்குத் தெரியாது.
வரலாற்றைப் புரட்டிப் பாருங்கள். 1796-ஆம் ஆண்டில் பினாங்குத் தீவிற்குத் தமிழர்கள் கொண்டு வரப்பட்ட வரலாற்றுச் சுவடுகள் அப்போதைய பதிவுகளில் இருக்கும். இப்போது இருக்குமா தெரியவில்லை. அதிரசம் இடியப்பம் காணாமல் போனது மாதிரி அதுவும் அடிபட்டுப் போய் இருக்கலாம். சொல்ல முடியாது.
ஒரு திருத்தம். காபி பயிர் செய்வதற்காகத் தமிழர்கள் கொண்டு வரப்படவில்லை. முதலில் அதைத் தெரிந்து கொள்ள வேண்டும். காடுகளை வெட்டிச் சமப் படுத்தி மனிதர்களுக்கு ஏற்ற வகையில் குடியிருப்பு பகுதிகளை உருவாக்குவதற்காகத் தான் தமிழர்கள் கொண்டு வரப்பட்டார்கள்.
1786-ஆம் ஆண்டில் கெடா சுல்தானிடம் இருந்து பிரான்சிஸ் லைட் (Francis Light) ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டார். பினாங்குத் தீவைப் பெற்றுக் கொண்டார். இதுவும் ஒரு பெரிய வரலாறு.
பினாங்குத் தீவு ஆங்கிலேயர்களிடம் ஒப்படைக்கப்பட்ட போது அது ஒரு பெரிய காடாக இருந்தது. மனிதர்கள் எளிதாக நுழைந்து போக முடியாத காடுகள். ஓர் ஆள் உயரத்திற்கு நிரம்பி வழிந்த காட்டுப் புதர்கள். அந்தக் காடுகளிலும் அந்தப் புதர்களிலும் பல வகையான விலங்குகள் காட்டு தர்பார் செய்து கொண்டு இருந்தன.
அந்தப் பக்கம் காட்டு யானைகள். இன்னொரு பக்கம் காட்டுப் புலிகள். மற்றொரு பக்கம் மலைப் பாம்புகள். இந்தப் பக்கம் காண்டா கரடிகள். சும்மா சொல்லக் கூடாது. பல ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாகப் பேரன் பேத்திகள் எடுத்து பெரிய காட்டு இராஜியமே செய்து இருக்கின்றன. அந்தக் காடுகளை அழிப்பதற்கு ஆட்கள் தேவைப் பட்டார்கள்.
அப்போது பினாங்குத் தீவில் பெரும்பாலும் மீனவர்கள் வாழ்ந்தார்கள். எளிய வாழ்க்கை முறை. எளிமையான வாழ்வியல் அமைப்பு. ஒருபுறம் கடலிலும் ஆற்றிலும் கிடைத்த மீன்கள். இன்னொரு புறம் மணல் மேடுகளில் கிடைத்த மரவெள்ளிக் கிழங்குகள். சுட்டுப் பொசுக்கிச் சாப்பிடுவதில் மனநிறைவு. எளிதான வாழ்க்கை. ஆக அப்படி வாழ்ந்தவர்களுக்கு காடுகளை அழிக்கும் வேலைகள் சரிபட்டு வரவில்லை.
பக்கத்தில் இருந்த இந்தோனேசியா ஜாவா தீவில் இருந்து மக்களைக் கொண்டு வந்தார்கள். இவர்கள் நல்ல உழைப்பாளிகள். ஆனால் ஒரு பலகீனம். சம்பளம் போட்டதும் சில நாட்களுக்கு வேலைக்காட்டுப் பக்கமாய்த் தலை வைத்துப் படுக்க மாட்டார்கள். வேலைகள் அப்படி அப்படியே நின்று போகும்.
அதனால் தமிழர்கள் கொண்டு வரப் பட்டார்கள். ஒப்பந்தக் கூலிகளாக அல்ல. இந்தியாவை ஆட்சி செய்த வெள்ளைக்காரர்களின் அரசியல் கைதிகளாக வந்தார்கள். அதாவது நாடு கடத்தப் பட்டார்கள். அப்படி வந்தவர்கள் எல்லாம் அங்கே இந்தியாவின் விடுதலைக்காகப் போராடியவர்கள்.
ஆக அப்படிக் கொண்டு வரப்பட்ட தமிழர்கள் தான் பினாங்கு மலைக் காடுகளை வெட்டிச் சீர் செய்தார்கள். காண்டா காடுகளை வெட்டித் துப்புரவு செய்தார்கள். குடியிருப்புப் பகுதிகள் உருவாக்கித் தந்தார்கள்.
காடு மேடுகளாய்ப் பரந்து கிடந்த பினாங்கை மக்கள் வாழும் வசிப்பிடமாக மாற்றிக் காட்டினார்கள். அதன் பின்னர் தான் 1800-ஆம் ஆண்டுகளில் பினாங்கில் காபி பயிர் செய்யப் பட்டது.
ஏற்கனவே 1750-ஆம் ஆண்டுகளில் அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்குத் தமிழர்கள் நாடு கடத்தப்பட்டு வந்தார்கள். இந்தியாவில் வெள்ளையர்களை எதிர்த்தவர்கள் எல்லாம் அந்தமானுக்கு நாடு கடத்தப் பட்டார்கள். 1786-ஆம் ஆண்டு பினாங்குத் தீவு திறக்கப் பட்டதும் அங்கேயும் தமிழர்கள் நாடு கடத்தப் பட்டார்கள்.
ஆக அப்படி வந்த தமிழர்கள் தான் பினாங்கு தீவின் காடுகளை அழித்தார்கள். ரோடுகளைப் போட்டார்கள். மறுபடியும் சொல்ல வேண்டி வருகிறது. இல்லை என்றால் மறந்து போகும். அப்புறம் என்னாங்க. நேற்று என்ன சாப்பிட்டோம் என்பதையே மறந்து போகும் காலத்தில் ரொம்ப பேர் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். ஆக எல்லாவற்றையுமே இரண்டு மூன்று முறை சொல்ல வேண்டி வருகிறது.
மலாயாவுக்கு வந்த தமிழர்கள், மற்றவர்கள் சுகமாய் மகிழ்ச்சியாய் வாழும் அளவிற்கு நல்லது செய்துவிட்டுப் போய் இருக்கிறார்கள். அவர்கள் போட்டுக் கொடுத்த சாலைகளில் தான் பலரும் இப்போது சொகுசாய்க் கார் ஓட்டிக் கொண்டு இருக்கிறார்கள். என்னையும் பாருங்க என் அழகையும் பாருங்க என்று செல்பியும் எடுத்துக் கொள்கிறார்கள்.
அந்தச் சொகுசு ராசா ராசாத்திகளில் சிலர்; காடுகள் அழித்தவர்களைப் பார்த்து வந்தேறிகள் என்கிறார்கள். அந்தச் சொகுசு லூசுகளை நினைத்தால் வெட்கமாக இருக்கிறது. நோ சூடு. நோ சொரணை.
இன்னும் ஒரு விசயம். இங்கிலாந்தில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு நாடு கடத்தப்பட்ட ஆங்கிலேயர்கள் தான் இப்போது ஆஸ்திரேலியாவின் சொந்தக்காரர்களாக இருக்கிறார்கள். அவர்கள் தான் இன்றைக்கும் ஆஸ்திரேலியாவை ஆட்சி செய்கிறார்கள். ஆனால் பினாங்கிற்குக் கொண்டு வரப்பட்ட தமிழர்கள் என்ன ஆனார்கள். எங்கே போனார்கள். நீங்களே ஒரு முடிவு செய்து கொள்ளுங்கள்.
என்னைக் கேட்டால் அட்ரஸ் இல்லாமல் கழற்றிவிடப் பட்டார்கள். அதுவே ஒரு வரலாற்றுக் கொடுமை.
ஆக இப்படியும் சொல்லலாம். 1780-ஆம் ஆண்டுகளில் பினாங்கு தீவு மலாயா கட்டுமானத்தின் முன்வைப்பு. பினாங்கு முன்னோடி பிரான்சிஸ் லைட் அவர்களின் முன்னெடுப்பு. அதுவே தமிழர்களின் முதன்மைப் பங்களிப்பு.
இன்னும் ஒரு விசயம். பினாங்கு தமிழர்கள் தான் பினாங்கு கொடிமலையில் பாதை அமைத்துக் கொடுத்தார்கள். பினாங்கு கொடி மலையில் இருந்து குடி நீரை மாட்டு வண்டிகளில் தோம்பு கட்டிக் கொண்டு வந்தார்கள். ஜார்ஜ் டவுன் நகரத்தில் வாழ்ந்த எல்லா இன மக்களுக்கும் விநியோகம் செய்தார்கள். அவர்கள் கொண்டு வந்து கொடுத்த பச்சைத் தண்ணீரைக் குடித்து அவர்களுக்கே பச்சையாகத் துரோகம் நினைகலாமா?
பினாங்கு வனப்பூங்காவை 150 ஆண்டுகளுக்கும் மேலாக பராமரிப்புச் செய்தார்கள். அது மட்டும் அல்ல. குட்டித் துறைமுகமாக இருந்த பினாங்கு துறைமுகத்தைப் பெரிய பரிமாணத்தில் வார்த்து பெருமை செய்து இருக்கிறார்கள். பினாங்கு சாலைகளின் கட்டுமானத்தை அமைத்துக் கொடுத்தவர்களும் மலாயா தமிழர்கள் தான். ரொம்ப வேண்டாம்.
பாயான் லெப்பாஸ் விமானத் திடலை அமைத்துக் கொடுத்தவர்களும் மலாயா தமிழர்கள் தான். பினாங்கு ஜெட்டி துறைமுகத்தை அமைத்துக் கொடுத்தவர்களும் அவர்கள் தான். கொடிமலைக்கு இரயில் பாதையைப் போட்டுக் கொடுத்தவர்களும் அவர்கள் தான்.
1867-ஆம் ஆண்டு பினாங்கில் வாழ்ந்த தமிழர்கள் பற்றிய ஓர் அபூர்வமான புகைப்படம் உள்ளது. 1800-ஆம் ஆண்டுகளின் தொடக்கத்திலேயே தமிழர்கள் மலாயாவுக்குக் கொண்டு வரப் பட்டதைச் சித்தரிக்கும் படம்.
நமக்கு கிடைத்த சான்றுகளின் படி, 1837-ஆம் ஆண்டு 2000 தமிழர்கள் பினாங்கிற்கு கொண்டு வரப்பட்டு இருக்கிறார்கள். இது அதிகாரப்பூர்வமற்ற குடியேற்றம். மெட்ராஸ் அரசாங்கத்திற்குத் தெரியாமல் நடைபெற்றது. முன்னர் காலத்தில் சென்னை மாநிலத்தை மெட்ராஸ் அரசாங்கம் என்று அழைத்தார்கள்.
ஒரு கட்டத்தில் பினாங்கில் சமயப் பரப்புரைகள் செய்யப்பட்டன. அதையும் படம் எடுத்து இருக்கிறார்கள். அந்தப் பரப்புரையை பிரான்சிஸ் ஹப் (Father Francois Habb) என்பவர் செய்து உள்ளார். இவர் பிரான்ஸ் நாட்டில் இருந்து 1857-ஆம் ஆண்டு பினாங்கிற்கு வந்தார். 33 ஆண்டுகள் சேவை செய்தார்.
இந்தப் பரப்புரை நிகழ்ச்சி இல்லை என்றால் இந்தப் புகைப்படங்கள் நமக்குக் கிடைத்து இருக்கா. ஆக மதங்களுக்கு அப்பால்பட்டு ஒரு வரலாற்றுப் பதிவாகப் பார்ப்போம்.
அந்தப் புகைப்படங்களை எடுத்தவர் கிரிஸ்டன் பீல்பர்க் (Kristen Feilberg). இந்தப் புகைப்படங்கள் இந்தியத் தொல்பொருள் ஆய்வுத் தொகுப்பின் ஒரு பகுதியாகும். 1867-ஆம் ஆண்டு பாரிஸ் கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப் பட்டது.
இந்த மாதிரியான வரலாற்றுப் படங்கள் இல்லை என்றால் வந்தேறிகள் என்று சொல்கிறார்களே; அவர்களின் சீண்டல்கள் மேலும் அதிகரிக்கும். அவர்களின் வசைமொழிகளைத் தவிர்ப்பவதற்கு, எதிர்காலத்தில் இந்தப் படங்கள் துருப்புச் சீட்டுகளாக அமையட்டும்.
அந்த வகையில் இந்த மாதிரியான படங்களைச் சமயத்துடன் தொடர்பு படுத்திப் பார்க்காமல் தமிழர்களின் வரலாற்று ஆவணமாகப் பார்க்க வேண்டும். அதுதான் அறிவார்ந்த சிந்தனை. அறிவார்ந்த பார்வை.
இந்தப் படத்தில் உள்ள தமிழர்கள் மதம் மாறினார்களா இல்லையா என்பது வேறு. ஆனால் இப்போது மலேசியாவில் வாழ்ந்து கொண்டு இருக்கும் தமிழர்களுக்கு அபூர்வமான படங்கள் கிடைத்து இருக்கின்றனவே. அதற்காக அந்தப் பாதிரியாருக்கு நன்றி சொல்ல வேண்டும்.
ஒரு கட்டத்தில் மெட்ராஸ் மாநிலத்தில் இருந்த பிரிட்டிஷ் அதிகாரிகளுக்குத் தெரியாமல் தமிழர்கள் பினாங்கில் உள்ள கரும்புத் தோட்டங்களுக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கிறார்கள். இதுவும் ஓர் அரிய தகவல்.
1844-ஆம் ஆண்டில் தான் ஒப்பந்தத் தொழிலாளர்களாகத் தமிழர்கள் மலாயாவுக்கு கொண்டு வரப் பட்டார்கள். நூற்றுக் கணக்கான காபி, மிளகு, கொக்கோ, கரும்பு, ரப்பர் தோட்டங்களில் வேலைக்கு அமர்த்தப் பட்டார்கள்.
மலைக்காட்டு மலையகத்தைப் பொன் விளையும் பூமியாக மாற்றிக் காட்டிய மலாயா தமிழர்களுக்கு நாம் எப்போதும் மரியாதை செய்வோம்.
கொட்டும் மழையிலும் கொக்கரிக்கும் வெயிலிலும் வெறும் வேட்டி முண்டாசு கட்டிக் கொண்டு பினாங்கு தீவின் கட்டுமானத்தில் முதுகெலும்பாய் வாழ்ந்து காட்டியவர்கள். அரசியல் கைதிகளாகவும் அற்றைக் கூலிகளாகவும் பரிணமிததவர்கள். பினாங்குத் தீவின் வளப்பத்திற்கும் ஒட்டு மொத்த மாலாயாவின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருந்தவர்கள்.
இவர்களைப் போய் வந்தேறிகள் என்று சொல்கிறார்களே. என்னங்க சொல்வது. இதில் இப்போது ரவிக்கையும் சேலையும் பாரம்பரிய உடை என்று வேறு சொல்கிறார்கள். எங்கேயாவது மனுசன் இல்லாத காட்டுக்கு ஓடிப் போகலாம் போல இருக்கிறது. அங்கே ஓடினாலும் ரசமும் சாம்பாரும் எங்கள் பரம்பரை சொத்து என்று சொல்லி அங்கேயும் வரலாம். ஒன்றுமே புரியலீங்க.
(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
09.11.2020
சான்றுகள்:
1. In 1786, Francis Light established Penang the first British trading post in the Far East. - https://penangport.gov.my/en/public/history-penang-port
2. Penang Then & Now: A Century of Change in Pictures - https://arecabooks.com/product/penang-then-now-a-century-of-change-in-pictures/
3. Father Francois Hab was a French MEP priest based at St Francis Xavier Church, Penang from 1857 to 1879.
(Photo images published with permission granted per public interest. No part of this content may be reproduced, republished, or retransmitted by any means without the expressed written consent of author.)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக