30 டிசம்பர் 2020

பத்துமலை தைப்பூசம் 2021 ஆரம்பிக்கலாமா?

தமிழ் மலர் - 30.12.2020

தை மாதம் தமிழர்களுக்குப் புனிதமான மாதம். அந்த மாதத்தில் தமிழர்களின் மாட்டுப் பொங்கல்; காணும் பொங்கல்; தை பௌர்ணமி; வாஸ்து நாள்; தை அமாவாசை; ரத சப்தமி; போன்ற திருநாள்கள் வருகின்றன.

அந்த மாதத்தில் தான் முருகப் பெருமானுக்கு உகந்த தைப் பூச திருநாளும் வருகிறது. தமிழர்களின் முன்னோர்களையும் மூதாதையர்களையும் நினைவுகூரும் தை அமாவாசையும் வருகிறது.

இப்படி சில முக்கியமான தினங்கள் தை மாதத்தில் வருகின்றன. தமிழர்களின் பாரம்பரிய உணர்வுகளுக்குப் பெருமை சேர்க்கின்றன.

அடுத்து தமிழர்களின் சோதிட நம்பிக்கைகளில் 27 நட்சத்திரங்கள். அந்த நட்சத்திரங்களின் வரிசையில் பூசம் எனும் நட்சத்திரம் எட்டாவது நட்சத்திரம்.

தை மாதத்தில் பூச நட்சத்திரமும் முழு நிலவும் ஒன்று கூடி வரும் காலத்தைப் புனிதமாகத் தமிழர்கள் கருதுகிறார்கள். முருகனுக்கு உகந்த நாள் என்பதும் தமிழர்களின் நம்பிக்கை. அந்த நன்னாளில் தைப்பூசம் கொண்டாடப் படுகிறது.

தைப்பூச நாளில் விரதம் இருந்து முருகப் பெருமானை வழிபட வேண்டும். முருகன் அருளால் முக்திப் பேறு கிட்டும் என்பது தமிழர்களின் ஐதீகம். ஆனால் அந்தத் தைப்பூச நாளில் எத்தனை பேர் விரதம் இருக்கிறார்கள். தெரியவில்லை.

அதில் என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள். தைப்பூச தினத்தில் அடியேன் விரதம் இருந்ததாகச் சரித்திரமே இல்லை. கணக்கு வழக்கு இல்லாமல் பலகாரங்களைச் சாப்பிட்டது தான் பெரிய சரித்திரம். சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டாம். சரி.

நம்ப 2021 பத்துமலை தைப்பூசப் பிரச்சினையை ஆரம்பிக்கலாமா. இந்த ஆண்டு பத்துமலைத் தைப்பூசம் பெரிய ஒரு பிரச்சினையாகவே பரிணமிக்கத் தொடங்கி விட்டது.

தைப்பூசத் திருவிழாவிற்கு இன்னும் சரியாக ஒரு மாதமே எஞ்சி இருக்கிறது. இந்தச் சமயத்தில் தைப்பூச விழா நடைபெறுமா நடைபெறாதா என்ற ஐயம் எழுந்து உள்ளது.

ஒரு பக்கம் கொண்டாடலாம் என்கிறார்கள். இன்னொரு பக்கம் வேண்டாம் என்கிறார்கள். என் முடிவு முக்கியம் அல்ல. முதலில் பொது மக்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.

இதற்கிடையில் தேசியப் பாதுகாப்பு மன்றம் ஆலோசனையின்படி 2021 தைப்பூச திருவிழா நடத்தப்படும் என்று ஶ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானம் அறிவித்து உள்ளது.

ஒற்றுமை துறை அமைச்சின் ஏற்பாட்டில் காணொலி வழியாக டிசம்பர் 21-ஆம் தேதி பேச்சு வார்த்தை நடத்தப் பட்டதாக ஶ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான செயலாளர் சேதுபதி குமாரசாமி தெரிவித்து உள்ளார். இதற்கு அரசாங்கத்திடம் இருந்து நல்ல ஒரு பதில் கிடைக்கும் என்கிறார்.

இந்தக் கட்டத்தில் நேற்றைய தினம், தேவஸ்தான தலைவர் டான்ஶ்ரீ நடராஜா ஒரு செய்தியாளர்கள் சந்திப்புக் கூட்டத்தை நடத்தினார். அதில் தைப்பூச இரத ஊர்வலத்தைத் தடை செய்ய வேண்டாம் என்று அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்து இருப்பதாகவும் தெரிவித்தார். நல்லது. அரசாங்கம் அனுமதி தரும் என்பது அவரின் எதிர்பார்ப்பு. சரி.

கொரோனா எனும் கொடும் தொற்றின் கொலைவெறி ஆட்டத்தினால் உலகம் இப்போது என்ன நிலையில் போய்க் கொண்டு இருக்கிறது. இந்த நாடு எந்த நிலையில் அலைமோதிக் கொண்டு இருக்கிறது. அதைக் கொஞ்சம் பார்ப்போம்.

தைப்பூசம் கொண்டாடுவதை யாரும் எதிர்க்கவில்லை. எதிர்ப்பு தெரிவிக்கவும் இல்லை. அது இந்த நாட்டில் வாழும் தமிழர்களின் பாரம்பரிய உரிமைத் தளம். தைப்பூசத் திருவிழாவை நடத்தக் கூடாது என்று சொல்வதற்கு எவருக்கும் உரிமை இல்லை. ஆனால் நாடு இருக்கும் நிலைமையில் நாமும் நல்ல ஒரு முடிவை எடுக்க வேண்டும்.  

இந்த 2020-ஆம் ஆண்டு ஒட்டு மொத்தமாக உலக மக்கள் மறக்க முடியாத ஓர் ஆண்டாக மாறி விட்டது. இந்த உலகத்தையே கோவிட் – 19 வைரஸ் தொற்று ஓர் உலுக்கு உலுக்கி விட்டது. 8 கோடி மக்களுக்கும் மேல் பாதிப்பு. 1.75 கோடி மக்கள் இறந்து விட்டார்கள். மலேசியாவில் இறந்தவர்கள் 454 பேர். பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 1 இலட்சத்தையும் எட்டி விட்டது.

மலேசிய அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருந்தாலும் நாட்டின் பொருளாதாரம் மிக மிக மோசமாகப் பாதிப்பு அடைந்து உள்ளது. ஏழு இலட்சம் பேர் வேலை இழந்து பரிதவிக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். பணப் புழக்கம் மிகவும் குறைந்து விட்டது.

அதே சமயத்தில் பொருள்களை வாங்கும் ஆற்றலும் குறைந்து விட்டது. பொருள்களின் விலை எல்லாம் கிடு கிடு என்று உயர்ந்து விட்டது. ஒரு காலத்தில் ஒரு கிலோ கத்தரிக்காய் ஒரு ரிங்கிடிற்கு கூவி கூவி விற்றார்கள். இப்போது புந்தோங் மார்க்கெட்டில் ஒரு கிலோ 13 ரிங்கிட்டிற்கு போட்டு விற்கிறார்கள். நிலைமை ரொம்ப மோசமாகி விட்டது..

பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன. அதனால் மாணவர்களின் கல்வி பாதிப்பு. கோயில்களில் திருமணங்களை நடத்த முடியவில்லை. திருவிழாக்களும் இல்லை. வழிபாடுகளும் இல்லை. ஒட்டுமொத்த மக்களின் அன்றாட வாழ்வியல் பாதிக்கப்பட்டு விட்டது.

இதில் சிலாங்கூர்; கோலாலம்பூர்; புத்ரா ஜெயா பகுதிகளில் நிலைமை ரொம்பவும் மோசமாகி விட்டது. ஓர் இடத்தில் இருந்து இன்னோர் இடத்திற்குப் போவதற்கும் வருவதற்கும் மக்கள் அஞ்சுகின்றார்கள்.

இந்த நிலையில் சிலாங்கூர்; கோலாலம்பூர்; புத்ரா ஜெயா பகுதிளைச் சிவப்பு மண்டலமாக அறிவித்து இருக்கிறார்கள்.

இப்படி ஓர் இக்கட்டான நிலையில் நமக்கு ஒரு திருநாள் மிக அவசியமா எனும் கேள்வியும் எழுகிறது. வாட்ஸ் அப் புலனங்களில் இதைப் பற்றி நிறையவே பேசப் படுகின்றன. மலேசியம் புலனத்தைச் சேர்ந்த அன்பர் கோலாலம்பூர் பெருமாள் இவ்வாறு கருத்து கூறுகிறார்.

இந்த ஆண்டு 2020 தீபாவளிக்குப் பொது நலன் கருதிக் கோவிலுக்குச் செல்வதைத் தவிர்த்தோம். இந்த ஆண்டு தைப்பூசத்தை அவ்வாறு தவிர்ப்பதே சிறப்பு.

நாம் நலமாக இருந்தால் நாடும் நலமா இருக்கும். இறைவனை எங்கு இருந்தும் எப்போதும் வணங்கலாம். இந்த வருடத் தைப்பூசம் எந்த நட்டத்தையோ அல்லது எந்த லாபத்தையோ அல்லது எந்தப் புதுமையையோ கொண்டு வரப் போவது இல்லை என்பது மட்டும் உறுதி் என்று சொல்கிறார்.

சுங்கை பூலோ கரு. ராஜா என்பவரின் கருத்து. நம் நாட்டில் 2021 தைப்பூசத் திருவிழாவைக் கொண்டாடலாமா வேண்டாமா என்பதற்கு என்னுடைய நிலைப்பாடு... வேண்டாம். மனிதன் உயிரோடு இருந்தால்தான் 2022 தைப்பூசம் கொண்டாட முடியும்.

தைப்பூசம் ஓடிவிடாது. ஜனவரி மாதம் வந்ததும் தைப்பூசம் யாரையும் கேட்காமல் தானாக வந்து போகும். மனிதனின் உயிர் தான் முக்கியம்.

வீடு பற்றிக் கொண்டு எரிகிறது... புகைபிடிக்க தீப்பெட்டி கேட்பது முட்டாள்தனம். 2022-ஆம் ஆண்டில் மீண்டும் தைப்பூசம் வரும். 2021-ஆம் ஆண்டில் விட்டதை எல்லாம் சேர்த்து டாம் டூம் என்று கொண்டாடி விடுவோம்.

இன்றைய பத்திரிக்கையைப் பாருங்கள்... சிலாங்கூர், புத்ரா ஜெயா, விலாயா கோலாலம்பூர் மூன்றையும் சிவப்பு மண்டலமாக அறிவித்து இருக்கிறார்கள்... அதையும் மீறி பத்துமலைக்கு போகணுமா என்று கேட்கிறார்.

ஜொகூர் லார்கின் பகுதியைச் சேர்ந்த அன்பர் சந்திரன் சொல்கிறார். 2021 தைபூசத்திற்கு ஒன்று கூடுவதைத் தள்ளி வைப்போம். மலேசிய இந்துக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு ஒரு வருடம் தள்ளி வைப்பதில் எந்த ஒரு தவறும் இல்லை.

வீட்டில் இருந்தவாறு முருகனைப் பிரார்த்திப்போம். இந்தக் கோவிட் காலத்தில்  முருகப் பெருமான் அதை ஏற்றுக் கொள்வார். இந்த நாட்டில் கோவிட் தொற்றினால் இந்துக்கள் பலர் உயிர் இழந்தார்கள் என்று வரலாற்றில் எழுதப்பட நாம் வழிவகுக்கக் கூடாது. சற்று ஆழமாக யோசித்து செயல் படுவோம் என்று சொல்கிறார்.

நாடு இருக்கிற நிலையில் தைப்பூசம் ரொம்ப அவசியமா... கொண்டாடவில்லை என்றால் அப்படியா குடி மூழ்கிவிடப் போகிறது என்று கெடாவைச் சேர்ந்த தேவி என்பவர் கேட்கிறார்.

மற்றும் ஓர் அன்பர் சற்றுக் கடுமையாகவே கருத்தை முன்வைக்கிறார். கொஞ்சம் பணம் சம்பாதிக்கணும்; கடை போடணும்; எவர்சில்வர் சாமான் விக்கணும்; பலகாரக் கடைகள் போடணும் என்று ஆசை கொண்டவர்கள் தான் வரிந்து கட்டிக் கொண்டு நிற்கிறார்கள். மக்களின் பொதுநலனைக் கருத்தில் கொள்ளவில்லை.

அடுத்தவன் குடும்பம் கொரோனா வந்து அழிஞ்சால் என்ன; குலை சரிஞ்சால் என்ன. நம்ப நல்லா இருந்தா சரி என்று நினைக்கக் கூடாது. ரொம்பவும் தப்பு. எந்தத் திருவிழாவாக இருந்தாலும், அதனால் பொதுமக்கள் பாதிப்பு அடையக் கூடாது.

இது ஒருவரின் தனிப்பட்ட கருத்து. மக்கள் என்ன சொல்கிறார்கள் என்று தான் பார்க்கிறோம்.

ஈப்போவைச் சேர்ந்த அன்பர் குமார் இப்படி கருத்துகளை முன் வைக்கிறார்.

கொரோனாவை அழிக்க நமது அறிவியல் ஆன்மீகம் துணை நிற்கவில்லையா என்பதைச் சிந்திக்க வேண்டும். பாம்பின் விசத்தில் இருந்து தம்மைக் காக்கத் தெரிந்த கீரிப் பிள்ளைக்குத் தெரிந்த அறிவு மனிதனுக்கு இல்லையா.

நாத்திகம் வளர்க்கிறோமா? கொரோனாவில் இருந்து காக்க வேண்டும். ஆலயங்களை மூடவேண்டும்; பிரார்த்தனைகள் கூடாது என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. இறைத் தத்துவங்களை மறுக்கக் கூடாது. ஆலயங்களை மூடக் கூடாது. பிரார்த்தனைகளுக்குத் தடை செய்யக் கூடாது. ஆலயங்களைக் கட்டியதன் நோக்கம் தான் என்ன.

இறைவனை நம்புவது தீது; மனுக் குலத்திற்கு எதிரானவர்களை நம்புவது புத்திசாலித் தனமானது எனும் நிலைக்கு தள்ளப் படுகிறோம். நான் சொல்வது பொது வாழ்க்கையில் பொதுவாக நினைத்துப் பார்க்கப்பட வேண்டியது.

எந்தக் காலத்திலும் ஆலயங்களை மூடக் கூடாது. கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப் படலாம். வழிபாடுகள் நடைபெற வேண்டும். தேவாலயங்களில் வழிபாடுகள் நடைபெறுவதாக அறிகிறேன் என்று சொல்கிறார் குமார்.

இதற்கு ஓர் அன்பர் இப்படி பதில் சொல்கிறார். கோயிலைத் திறந்து வையுங்கள். வேண்டாம் என்று சொல்லவில்லை. கொரோனாவிற்கு மாலை மரியாதை செய்யுங்கள். வேண்டாம் என்று சொல்லவில்லை. நூறு ஆயிரம் என்று கூடினால் பழையபடி உறுமி மேளம் வரும்.

எப்படித்தான் கட்டுப்பாடுகளை விதித்தாலும் யாராவது எங்கேயாவது எப்படியாவது குத்தாட்டத்தைத் தொடக்கி விடுவார். மறுபடி விசில்; மேளச் சத்தம்; கோஷ்டி பூசல்; அப்புறம் வழக்கம் போல வெட்டுக்குத்து; ஆஸ்பத்திரி. இந்தக் களேபரத்தை நடராஜா ஐயா எப்படி கையாளப் போகிறார்.

கொரோனா பெரும் தொற்றுக் காரணமாக சுங்கை பூலோ மருத்துவமனை நிரம்பி விட்டதாகத் தகவல். நோயாளிகளை வெவ்வேறு இடங்களுக்கு அனுப்பிக் கொண்டு இருக்கிறார்களாம். அந்த அளவிற்கு நிலைமை மோசமாகி விட்டது.

ஆக கூட்டம் என்று வந்து விட்டால் ஒரு மீட்டர் இடை வெளி என்பதை எல்லாம் கடைப்பிடிக்க முடியாது! தொற்று பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

தெலுக் இந்தான் நகரைச் சேர்ந்த அன்பர் சரவணன் தன் கருத்தை இப்படி முன்வைக்கிறார். ஐயா நடராஜா... ஒரு சந்தேகம். காவடி ஆடுபவர்கள் கூட முகக்கவசம் அனிந்து இருக்க வேண்டும் என்பது கட்டாயமா?

இரத ஊர்வலத்தைத் தூரத்தில் இருந்து பார்க்க வேண்டும். கோயில் வளாகத்தில் கடைகள் எதுவும் அமைக்கக் கூடாது. இரண்டு பேர்கள் மட்டும் பால் குடம் எடுக்க அனுமதி. காவடி எடுப்பவர்கள் கூட இரண்டு பேர்கள் மட்டும் அனுமதி. கோவில் நிர்வாகம் கெடுபிடியாக இருக்கும். இதில் இன்னொரு சந்தேகம் சார்...

இந்த நிலைமையில் அடிதடி வெட்டு குத்து வருமே... எப்படி சார் சமாளிக்கப் போறீங்க. பால் குடம் இரண்டும் பேர்கள் மட்டும் அனுமதி என்றால் கணக்கு எங்கேயோ போயிடுமே சார்...

ஒருவேளை... ஒரு வேளை... நடக்கக் கூடாது என்று வேண்டிக் கொள்வோம். தைப்பூச திரள் ஏற்படுமானால் அதற்கு நீங்களும் உங்கள் கோவில் நிர்வாகமும் முழு பொறுப்பு ஏற்க வேண்டும். முடியுங்களா சார். செலவுகளை எல்லாம் நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். முடியுங்களா சார். இந்த அலசல் நாளையும் வரும்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
30.12.2020
 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக