08 பிப்ரவரி 2021

மலேசிய அரசியல் கலையில் அதிசய ராகங்கள்

தமிழ் மலர் - 08.02.2021

ஆளாளுக்கு ஒரு கதை. ஆளாளுக்கு ஒரு விமர்சனம். ஆளாளுக்கு ஒரு கண்டனம். ஆளாளுக்கு ஒரு வரலாறு. இந்த நாட்டின் அரசியலில் இப்படித்தான் ஆளாளுக்கு ஓர் அரசியல் இராமாயணத்தைப் பாடிக் கொண்டு போகிறார்கள். வருகிறார்கள். என்னதான் நடக்கிறது என்று ஒன்றுமே புரியவில்லை. யார்தான் தலைவர் தலைவர்; யார் தான் அமைச்சர் என்பதும் தெரியவும் இல்லை.

இன்றைக்கு இருக்கிற அமைச்சர் நாளைக்கு இருப்பாரா தெரியவில்லை. நாளைக்கு வரும் அமைச்சர் என்ன ஆவார் என்பதும் தெரியவில்லை. எல்லாமே மர்மம். நூறு கோடி மக்கள் கொண்ட ஒரு துணைக் கண்டத்திற்கு 32 அமைச்சர்கள். ஆனால் மூன்று கோடி மக்கள் கொண்ட ஒரு நாட்டிற்கு 72 அமைச்சர்கள். அப்பாடா சாமி!

பிள்ளையைக் கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டுவது. பலருக்கும் தெரிந்த முதுமொழி. ஆனால் இப்போதைக்கு நாட்டைப் பொறுத்த வரையில் இது ஒரு பஞ்ச தந்திர அரசியல் கலை.

இதில் பெரிய வேடிக்கை என்ன தெரியுங்களா. நேற்றைக்கு கோழி முட்டை போட்டது. இன்றைக்கு வாத்து முட்டை போட்டது. நாளைக்கு கோழிக் குஞ்சு முட்டை போட்டது. என்னங்க இது. இந்த முட்டை விசயத்திலேயே ஆயிரத்து எட்டு கோளாறுகள். கோல்மால்கள். உருப்படியாக ஒன்றைச் சொல்ல வேண்டும். உருப்படியாக ஒரு முட்டை போட்டாலே பெரிய விசயம்.

நேற்று கோழி முட்டை போட்டது என்றால் அந்தக் கோழி முட்டையிலேயே அப்படியே நிற்க வேண்டும். இங்கே அப்படி இல்லையே. நாட்டு முட்டைக்குச் சாயம் அடித்து காட்டு முட்டையாக மாற்றுவதை ஒரு கலையாகப் பார்க்கிறார்கள். பேஷ் பேஷ்.

முன்னாள் மூத்த பிரதமர் ’பிரி மலேசியா டுடே’ (Free Malaysia Today) இணைய இதழுக்கு ஒரு பேட்டி கொடுத்து இருக்கிறார். இனக் கொள்கைகளுடன் மலாய்க்காரர் அல்லாதவர்களை விரட்ட வேண்டாம் (Don’t drive away non-Malays with racial policies) என்று ஒரு பேட்டி. அதாவது இனக் கொள்கைகளைத் தவிர்க்க வேண்டும் என்று சொல்ல வருகிறார். இந்தப் பேட்டி பழசு அல்ல. நேற்று 2021 பிப்ரவரி 7-ஆம் தேதி பேட்டி.

இதைப் பார்த்ததும் கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. அவரா சொன்னார் என்று கிள்ளிப் பார்த்துக் கொண்டேன். பத்து பட்டிக்கும் தண்டோரா போட்டு பதாகை கட்ட வேண்டும் போல தோன்றியது.

காலம் காலமாக இந்த நாட்டில் தமிழர் சிறுபான்மை இனத்தவர் ஒதுக்கப்பட்டு; ஓரம் கட்டப்பட்டு; மேலே வர முடியாமல் அமுக்கி அழுத்தி; நசுக்கிப் போடப் பட்டார்கள். பேராண்மை செழித்து வளர சூடம் சாம்பிராணி கொளுத்தி வைத்தார்கள். அந்தத் தலைவர் ஆட்சியில் இருந்த போது கெலிங்; பெண்டாத்தாங் என்று சொல்லிச் சொல்லியே தமிழர்களைச் சீண்டிப் பார்த்தார்.

சில வேளைகளில் திரைப்பட அறிமுகத்தில் ஒரே ஒருவர்தான் இயக்குநர்; தயாரிப்பாளர்; ஒளிப்பதிவாளர்; கதாசிரியர்; கதாநாயகர்; பாடலாசிரியர் எல்லாமே அவர்தான். அந்த மாதிரிதான் அந்தத் தலைவரும்.

முன்பு அதிகாரம் கையில் இருந்த காலத்தில் எல்லாமே அவர்தான். அதை நாம் தவறு என்று சொல்லவில்லை. திறமை இருந்தது. செய்தார். தப்பு இல்லை. பாராட்டுவோம்.

ஆனால் தமிழர் சிறுபான்மை இனத்தவர் நசுக்கப்பட்டு மேலே வர முடியாமல் செய்யப் பட்டார்கள். இதை எந்தக் கணக்கில் போய்ச் சேர்ப்பதாம்.

அந்தத் தலைவரின் பேட்டியைப் பார்ப்போம்.

1. மlலாய்க்காரர் அல்லாதவர்களை ஒதுக்கி வரும் நிலை தொடர்ந்தால் நாட்டின் வளர்ச்சிக்கு இடையூறுகள் ஏற்படலாம்.

(The government risks driving away non-Malays and hampering the growth of the country if it continues to pursue a racial narrative)

2. மலேசியாவின் பன்முகத் தன்மையை அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டும், மேலும் அதன் கொள்கைப் பயன்பாட்டில் அந்தத் தன்மை பிரதிபலிக்கப்பட வேண்டும்.

3. இனம் சார்ந்த நகர்வுகள் பின்பற்றப் பட்டால் நாடு நிலையற்ற நிலைமைக்கு தள்ளப்படும். மக்கள் இந்த நாட்டை விட்டு வெளியேறுவார்கள்.

4. மலாய்க்காரர்கள் அல்லாதவர்களைப் பற்றி நீங்கள் என்ன வேண்டும் என்றாலும் சொல்லலாம். ஆனால் அவர்கள் இந்த நாட்டின் வளர்ச்சிக்கு பங்களித்தார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. அவர்களை அகற்றினால், இந்த நாட்டின் வளர்ச்சி தடை படலாம். அதுவே ஓர் எதிர்மறை விளைவாகவும் மாறலாம்.

6. மலாய்க்காரர்கள் அல்லாதவர்கள் சிறுபான்மையினராக இருக்கலாம். இருந்த போதிலும் மலேசியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு அவர்களும் காரணமாக இருக்கிறார்கள். அவர்கள் மூலமாக, பொருளாதார ரீதியாக வெற்றி பெற முடிந்தது.

7. நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் இடைவெளி உருவாகி உள்ளது. மலாய்க்காரர்கள் அல்லாதவர்களுக்கும்; மலாய்க்காரர்களுக்கும் இடையில் நாட்டின் செல்வத்தைச் சமப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது. ஏன் என்றால், பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையில் மிகப் பெரிய ஏற்றத் தாழ்வு இருந்தால் இறுதியில் வன்செயல்கள் ஏற்படலாம். அது அவருடைய கருத்து.

இப்போது என் கருத்து. காலம் கடந்து ஏன் இப்போது சொல்ல வேண்டும். இதை அப்போதே சொல்லி இருக்கலாமே. செய்து காட்டி இருக்கலாமே. பதவியில் இருந்த போது ஏன் அந்த ஞானம் வரவில்லை. பதவியில் இல்லாத போது மட்டும் ஏன் வர வேண்டும். இது உலக மகா நடிப்புடா சாமி என்று நான் சொல்லவில்லை. புந்தோங் பக்கிரிசாமி புலம்புகிறார்.

இது சாணக்கியம் பேசும் நகர்வா? சமாதானம் பேசும் நகர்வா? அல்லது சந்தர்ப்பவாதமா? அல்லது அடுத்து வரும் தேர்தலில் ஓட்டுக்கு அடிபோடும் அம்சவர்த்தனமா? தெரியவில்லை.

மலாயா தமிழர்களுக்குச் செய்யப்பட்ட துரோகங்களை அந்த இனம் நிலைக்கும் வரையில் மறக்கவே மறக்காது.

நல்லா வந்து கொண்டு இருந்த ஓர் இனம். நாலு காசு சம்பாதித்து கால் வயிற்றை அரை வயிறாக நிரப்பிக் கொண்டு வந்த இனம். அந்த இனத்தை நாசமாக்கிய கதையை அந்த இனத்தின் தலைமுறைகள் காலா காலத்திற்கும் மறக்க மாட்டார்கள். மறக்கவே மாட்டார்கள். நான் செத்தாலும் என் சாம்பல்கள்கூட என் இனத்துக்குச் செய்யப்பட்ட துரோகங்களை மன்னிக்காது.

அஞ்சுக்கும் பத்துக்கும் இப்போது அந்த இனம் அல்லாடிக் கொண்டு இருக்கிறது. அதற்கு அந்தத் தலைவரும் ஒரு காரணம் என்று நான் சொல்லவில்லை. பலரும் சொல்கிறார்கள். பசார் மாலாமில் ஒரு நடை போட்டுப் பாருங்கள். கதை கதையாக ’குட்டி’ கதைகள் சொல்வார்கள்.

இதை எல்லாம் பார்க்கும் போது ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத கதை நினைவுக்கு வருகிறது. ஆளாளுக்குக் கதை சொல்லும் போது நானும் ஓநாய் கதையைச் சொல்கிறேன். அம்புட்டுத்தான். இங்கே சின்ன ஓநாயும் இல்லை. பெரிய ஓநாயும் இல்லை. இது தெனாலி ராமன் கதை.

ஒன்று மட்டும் சொல்வேன். மலாயா தமிழர்கள் என்பவர்கள் மலையூர் மண்ணின் வளப்பத்திற்கு மந்திரச் சொற்களை வாசித்துக் காட்டியவர்கள். வாசித்த அந்த மந்திரச் சொற்களின் சாரலில் நனைந்து கரைந்து கடைசியில் காணாமல் போனவர்கள்.

மலாயா தமிழர்கள் வாசித்த அந்த மந்திரச் சொற்கள் காலத்தால் மறக்க முடியாத உண்மைகள். அந்த உண்மைகளுக்குள் இன்னும் ஓர் உண்மை மறைந்து உள்ளது. அந்தக் கித்தா தோப்பு ஜீவன்களே இந்த நாட்டின் மறக்க முடியாத ஜீவகாருண்யங்கள். அதுதான் மறைந்து கிடக்கும் உண்மை. உண்மையிலும் உண்மை.

வரலாறு தெரியாதவர்கள்; அல்லது வரலாறு படிக்காதவர்கள்; அல்லது அந்த வரலாற்றையே மறைப்பவர்களின் பார்வையில், வேண்டும் என்றால் அந்த வாயில்லா ஜீவன்களுக்குப் பெயர் வந்தேறிகளாக இருக்கலாம்.

ஆனால் வரலாறு தெரிந்தவர்களின் பார்வையில் அவர்கள் வந்தேறிகள் அல்ல. சத்தியமான தியாகச் சீலங்கள்.

உண்மையில் பார்க்கப் போனால் அந்தக் கித்தா தோப்பு ஜீவன்கள் தான் அச்சு அசலான மைந்தர்கள். அம்சமான மண்வாசனைகள். வாய் இருந்தும் வாய்விட்டுப் பேச முடியாத அந்த வாயில்லா பூச்சிகளினால் தான் மலைநாட்டு மண்வாசனையை இன்னமும் பலர் சுவாசித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

உண்மையைச் சொன்னால் சிலருக்குக் கோபம் வரலாம். சண்டைக்கும் வரலாம். பிரச்சினை இல்லை. சபைக்கு உதவாத சோம்பேறிகளைப் பற்றி பேசுவதினால் யாருக்கும் எவருக்கும் எந்த நன்மையும் இல்லை.

கொட்டும் மழையிலும் கொக்கரிக்கும் வெயிலிலும் வெறும் வேட்டி முண்டாசு கட்டிக் கொண்டு மலாயாவின் கட்டுமானத்தில் முதுகெலும்பாய் வாழ்ந்து காட்டியவர்கள். அரசியல் கைதிகளாகவும் அற்றைக் கூலிகளாகவும் பரிணமிததவர்கள். இந்த நாட்டின் வளப்பத்திற்கும் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருந்தவர்கள். மலாயா தமிழர்களை மறுபடியும் முட்டாளாக்க நினைப்பது பெரிய தவறு.

எல்லோரையும் எல்லாக் காலத்திலும் முட்டாள்களாக நினைக்கக் கூடாது. முட்டாள்களாக மாற்ற முயற்சி செய்யவும் கூடாது.
மலாயா தமிழர்களை முட்டாளாக்கியது போதும்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
08.02.2021


சான்றுகள்:


1. Don’t drive away non-Malays with racial policies - https://www.freemalaysiatoday.com/category/nation/2021/02/07/dont-drive-away-non-malays-with-racial-policies-says-mahathir/

2. The contribution of ethnic groups to Malaysian scientific output, 1982–2014, and the effects of the new economic policy - https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC5124039/

3. Challenges to the Rights of Malaysians of Indian Descent - https://www.e-ir.info/2013/02/06/challenges-to-the-rights-of-malaysians-of-indian-descent/

4. Income inequality among different ethnic groups: the case of Malaysia - https://blogs.lse.ac.uk/businessreview/2019/09/11/income-inequality-among-different-ethnic-groups-the-case-of-malaysia/

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக