தமிழ் மலர் - 11.04.2021
மலாயா வானொலியின் முதல் கலப்பட நிகழ்ச்சி. கோலாலம்பூரில் 1957-ஆம் ஆண்டு இறுதிவாக்கில் நடைபெற்றது. மலாயா சுதந்திரம் பெற்று களை கட்டிய நேரம். அப்போது துங்கு அவர்கள் பிரதமராக இருந்தார். இவருடைய அரிய பெரிய சேவைகளைப் போற்ற வேண்டும். மரியாதை செய்ய வேண்டும் எனும் நல்ல நோக்கத்தில் ஒரு கலப்பட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார்கள்.
மலேசிய வானொலியின் இந்தியப் பகுதி அந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது. ’இந்தியப் பகுதி’ என்று தான் முன்பு அழைத்தார்கள். தமிழ் மொழி பிரதான மொழியாக இருந்தாலும் தெலுங்கு மலையாளம் இந்தி மொழி நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. இந்தியப் பகுதி ஒரு கூட்டு ஒலிபரப்பு அமைப்பு.
1957-ஆம் ஆண்டு கலப்பட நிகழ்ச்சி, தேசிய அளவிலான மாபெரும் நிகழ்ச்சி; பிருமாண்டமான நிகழ்ச்சி. லேக் கார்டன் எனும் கோலாலம்பூர் மாநகர் பூஞ்சோலை நீர்க்குள வளாகத்தில் நடந்தது.
இப்போது தாசேக் பிரதானா தித்திவாங்சா என்று சொல்கிறார்கள். அப்போது லேக் கார்டன் என்று அழைத்தார்கள். 1960-களில் லேக் கார்டன் மிகவும் புகழ்பெற்ற இடமாகும். மாலை நேரங்களில் நூற்றுக் கணக்கில் மக்கள் வருவார்கள். போவார்கள்.
ஒரு சின்னத் திருடு; ஒரு சின்ன கொள்ளைச் சம்பவம் என்று எதுவுமே இல்லை. நாங்கள் பார்த்ததும் இல்லை. கேட்டதும் இல்லை. போலீஸ்காரர்களுக்கு வேலையே இல்லை என்றுகூட சொல்வார்கள்.
இப்போது பாருங்கள். போலீஸ் நிலையம் என்று சொல்லி அங்கே ஒரு பெரிய காவல் நிலையத்தையே கட்டிப் போட்டு வைத்து இருக்கிறார்கள். நிலைமை ரொம்பவும் மாறிவிட்டது. அதைப் பற்றி எழுதினால் அதுவும் ஒரு பெரிய கதையாகி விடும்.
லேக் கார்டன் என்கிற அதே பழைய இடம்தான் மலேசியத் தமிழர்களின் வரலாற்றிலும் ஒரு வரலாறு பதித்தது. மற்ற மற்ற மொழிப் பகுதிகளும் அந்தக் கலப்பட நிகழ்ச்சியில் கலந்து கொண்டன. திகட்டத் திகட்ட உதவிகள் செய்தன என்று மலேசியாவில் மூத்தப் பத்திரிகையாளர் ஒருவர் சொல்லி இருக்கிறார்.
அந்தக் காலக் கட்டத்தில் உண்மையிலேயே அது ஒரு பிருமாண்டமான தமிழர் நிகழ்ச்சி. 15,000 - 20,000 பேர் கண்டு களித்தனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இந்தியர்கள் மட்டும் அல்ல. மலேசியாவின் மூவின மக்களும் கலந்து சிறப்பித்தனர்.
அந்த நிகழ்ச்சி மலாயா வானொலியின் தமிழ்ப் பகுதிக்கு ஒரு பெரிய அறிமுகத்தைப் பெற்றுத் தந்தது. தமிழ்ப் பகுதிக்கு மட்டும் அல்ல. ஒட்டு மொத்த மலாயா வானொலிக்கே அது ஒரு பெரிய அங்கீகாரமாகவும் அமைந்தது.
சரி. மின்மினியாய் மின்னல் எப்.எம். என்று தலைப்பை வைத்துவிட்டு, எங்கே எங்கேயோ இழுத்துக் கொண்டு போவதாக நினைக்க வேண்டாம். மன்னிக்கவும்.
வரலாறு என்பது ஒரு பெரிய ஆறு. அதாவது வரல் ஆறு என்பதுதான் வரலாறாக மாறியது. சுருக்கமாகச் சொன்னால், வரலாறு என்றால் வந்த வழி. ஆக அந்த வழியில்தான் நானும் வந்து கொண்டு இருக்கிறேன். சரிங்களா. அதை இப்படியும் சொல்லலாம்.
ஒரு பிள்ளையைப் பெற்றாகி விட்டது. அதற்குப் பெயரும் வைத்தாகி விட்டது. இருந்தாலும், அந்தக் குழந்தை, தாயின் வயிற்றில் இருக்கும் போது, எப்படி எப்படி எல்லாம் முட்டி மோதி இருக்கும். எப்படி எப்படி எல்லாம் முறுக்கு பண்ணி இருக்கும். சுமந்தவளைச் சும்மா தூங்க விட்டு இருக்குமா.
அப்பனை விட்டுத் தள்ளுங்கள். அடுத்து வீட்டுக்கு கேட்கிற மாதிரி குறட்டை விட்டுத் தூங்கி இருப்பார். அந்த மாதிரியான கஷ்டங்களை எல்லாம், பெற்றவளே சொல்லும் போது எவ்வளவு பெரிய விசயங்கள் வெளியே வருகின்றன. எவ்வளவு பெரிய பிரமிப்புகள். ஆக அந்த மாதிரிதான் இங்கேயும். புரியுதுங்களா.
மலாயா வானொலி பிறந்து வளர்ந்த கதை ஒரு பெரிய வரலாற்றுக் கதை. அதை நான்கு வரிகளில் சொல்லி முடிக்க முடியாது. அந்த வரலாற்றில் ஒரு பச்சைச் சிசு தான் இந்த நம்முடைய மின்னல் எப்.எம். பண்பலை.
தொலைக்காட்சிச் செய்திகள். தெரியும் தானே. ஒரு முக்கியமான அன்றாட நிகழ்ச்சி. பார்ப்பவர்கள், கேட்பவர்கள் பெரும்பாலும் செய்தி வாசிப்பாளரின் முகத்தைத்தான் முக்கியமாகப் பார்ப்பார்கள். குரலின் தொனியைக் கேட்பார்கள். உச்சரிப்பைக் கவனிப்பார்கள்.
அப்புறம் அவர் அணிந்து இருக்கும் சேலை அல்லது மேலங்கியைப் பார்ப்பார்கள். அவருக்கு ‘மேச்’ பண்ணுகிறதா என்கிற ஒரு குட்டி ஆராய்ச்சி பண்ணுவார்கள். இந்த மாதிரி ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் வாங்காதவர்களும் இருக்கிறார்கள். ஒரு சிலரைத் தான் சொல்கிறேன். எல்லாரையும் சொல்லவில்லை.
ஆனால் அந்தச் செய்தி நிகழ்ச்சிக்குப் பின்னால், எத்தனை பேருடைய உழைப்பு, எத்தனை பேருடைய சுறுசுறுப்புகள், எத்தனை பேருடைய அர்ப்பணிப்புகள் தேங்கிப் புதைந்து கிடக்கின்றன. இது எத்தனைப் பேருக்குத் தெரியும்.
ஒரு செய்தி நிகழ்ச்சி தயாரிப்புக்குப் பின்னால் குறைந்த பட்சம் ஒரு இருபது பேரின் கடுமையான உழைப்புகள் மறைந்து கிடக்கும். இந்த விசயம் பலருக்குத் தெரியாது.
அதே போலத் தான் மின்னல் எப்.எம். வானொலியிலும் நடக்கிறது. செய்தி ஆசிரியர், வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு செய்திகளைத் தொகுக்க வேண்டும். ஒரு சின்ன ‘மிஸ்டேக்’. அவ்வளவுதான். எரிமலை வெடிக்கும். சுனாமி ஆர்ப்பரிக்கும். முள்வேலியில் நின்று கொண்டு வேலை செய்ய வேண்டிய ஓர் இக்கட்டான நிலைமை.
பெரும்பாலும், ஒரு செய்தி ஆசிரியர் தன்னுடைய துணை ஆசிரியர்களையும் மொழிப் பெயர்ப்பாளர்களையும் தான் முழுக்க முழுக்க நம்பி இருக்க வேண்டும். தெரியாமல் தவறுகள் நடந்து விடலாம். அவற்றுக்கு எல்லாம் ஆசிரியர்தான் முழுப் பொறுப்பு ஏற்க வேண்டும்.
ஆங்கிலத்தில் ‘டீட்’ (Deed) என்று ஒரு சொல் இருக்கிறது. தமிழில் ஆவணம் என்று பொருள். ஒரே ஓர் எழுத்தைத் தவறாகப் போட்டால் போதும். அவ்வளவுதான். ’டீட்’ என்பது ’டெட்’ (Dead) என்று மாறிப் போகும். ’டெட்’ என்றால் இறப்பு. அப்புறம் செய்தி ஆசிரியரின் கதையும் ஒரு ’டெட்’ செய்தியாகிவிடும்.
அதே மாதிரி ஒரு கதை இருக்கிறது. 1970-களில் தமிழ்ப்பகுதியில் ஒரு தவறு நடந்து விட்டது. யார் எவர் என்ன என்று கேட்க வேண்டாம். மலேசியத் தமிழ்ப் பத்திரிகை உலகில் தடம் பதித்த அருமையான பத்திரிகையாளர். செய்திப் பிரிவில், துணை ஆசிரியர்கள் எதிர்பாராமல் செய்த ஒரு சின்ன தவறு.
அதற்காக அந்தச் செய்தி ஆசிரியர் பதவி நீக்கம் செய்யப் பட்டார். இருந்தாலும், திறமைசாலிகளுக்கு எப்போதுமே மதிப்பும் மரியாதையும் உண்டு. பின்னர் காலத்தில் அவர் ஓர் ஆங்கிலப் பத்திரிகைக்குத் தலைமை ஆசிரியர் ஆனார். பல விருதுகளையும் பட்டங்களையும் பெற்றார் என்பது காலம் சொல்லும் உண்மை.
ஆக இனிமேல் வானொலியில் செய்திகளைக் கேட்கும் போது, யார் ’செய்தி ஆசிரியர்’ என்பதைத் தெரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். செய்தி வாசிப்பவர் அவர் பாட்டிற்குச் செய்தியை வாசிக்கட்டும்.
ஆனால், செய்தி வாசிப்பவருக்குப் பின்னால் எத்தனை பேருடைய உழைப்பு பின்னிப் பிணைந்து இருக்கிறது என்பதை நினைத்துப் பாருங்கள்.
அதுவே அந்த ஆசிரியருக்கு நீங்கள் செய்யும் மரியாதையாகும். முன்பு எல்லாம் செய்தி ஆசிரியரின் பெயரைச் சொல்ல மாட்டார்கள். இப்போது சொல்கிறார்கள். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
பத்து மாதம் கஷ்டப் பட்டவள் அம்மா. ஆனால் பிள்ளையின் பெயருக்குப் பின்னால் அப்பாவின் பெயர் வரும். என்ன செய்வது. அது மனிதயினம் எப்போதோ எழுதிக் கொடுத்த பழைய காசோலை. இருந்தாலும் கையெழுத்து இன்னும் காலாவதி ஆகவில்லை. ஆக அந்தப் பிள்ளையின் அம்மா யார் என்பதைத் தெரிந்து கொள்ள் முயற்சி செய்வதில் தப்பு இல்லையே.
மின்னல் எப்.எம். மலேசிய மக்களுக்குத் தேவையான தகவல்களையும், செய்திகளையும் வற்றாமல் வழங்கி வருகிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும் நிகழ்ச்சிகளை வழங்குவதில் முன்னணி வகிக்கிறது.
அரசாங்க நிறுவனம் என்பதால் அரசு சார்ந்த கொள்கைகளுக்கு முக்கியத்துவம் வழங்கப் படுகிறது. கொடுக்கப்பட்ட பொறுப்புகளை இதுநாள் வரைக்கும் நல்லபடியாகத் தான் செய்து வருகிறது.
மற்றபடி அரசாங்கத்தின் கொள்கைப் பிரசாரங்களுக்குப் பக்க பலமாகவும் நிற்கிறது. அந்தக் கொள்கைகள் மக்களுக்குப் போய்ச் சேர்கிறதா என்பதுதான் முக்கியம். மின்னல் எப்.எம். பண்பலையின் தலையாய நோக்கமும் அதுதான்.
ஒரு பந்தயத்தில் கலந்து கொள்ளும் குதிரை, அதன் கால்களில் சலங்கை கட்டி ஓடுகிறதா என்று பார்ப்பதில் அர்த்தம் இல்லை. கடிவாளத்தை யார் பிடித்து இருக்கிறார்கள் என்பதுதான் முக்கியம். ஏன் என்றால் மின்னல் எப்.எம். ஓர் அரசாங்க நிறுவனம் ஆகும்.
1950-களில் மலாயா வானொலியின் (Radio Malaya) செய்திகள், சிங்கப்பூரில் இருந்து ஒலிபரப்பு செய்யப் பட்டன. கோலாலம்பூர், பினாங்கு நிலையங்களில் இருந்து வட்டாரச் செய்திகள், பாரம்பரிய இசைகள், வானொலி நாடகங்கள் ஒலிபரப்பாகின. இதைப் பற்றி ஏற்கனவே சொல்லி இருக்கிறேன்.
பின்னர் 1951-இல், புடு சாலையில் உள்ள தாங் லிங் மருத்துவமனையில் ஓர் அறையில் இருந்து ஒலிபரப்புகள் தற்காலிகமாக நடைபெற்றன. அதற்கு முன்னர் சிங்கப்பூரில் கத்தே அரங்கத்தில் இருந்து தமிழ்ச் சேவைகள் தொடங்கப் பட்டன.
அதன் பின்னர் புடு சாலையில் இருந்து ஜாலான் யாங் எனும் இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. அந்த ஜாலான் யாங் இப்போது ஜாலான் சந்திரசாரி (Jalan Cenderasari) என்று அழைக்கப் படுகிறது.
அடுத்து 1956-ஆம் ஆண்டு கூட்டரசு மாளிகையில் (Federal House) இருந்து சேவைகள் தொடர்ந்தன.
1963-ஆம் ஆண்டு மலேசியா உருவானது. அதுவரை மலாயா வானொலி என்று அழைக்கப்பட்டது, அதன் பின்னர் மலேசிய வானொலி ஆனது. அதாவது ரேடியோ மலாயா என்பது ரேடியோ மலேசியா ஆனது.
சரவாக் சபா மாநிலங்களுக்கான ஒலிபரப்புச் சேவைகளும் கூட்டரசு மாளிகையில் இருந்துதான் தொடங்கப் பட்டன. 1960-ஆம் ஆண்டில்தான் முதன்முறையாக, தனியார் வர்த்தக விளம்பரங்கள் மலேசிய வானொலியில் இடம் பெற்றன. அரசாங்கத்திற்கு ஓரளவிற்கு வருமானத்தையும் கொண்டு வந்தன.
1963 செப்டம்பர் 16-ஆம் தேதி, இனிலா ரேடியோ மலேசியா (INILAH RADIO MALAYSIA) எனும் அறிமுக வாசகத்தைப் பயன்படுத்தத் தொடங்கினார்கள். மலாயா எனும் சொல்லைக் கேட்டு வந்தவர்களுக்கு, மலேசியா எனும் சொல் புதுமையாகவும் பெருமையாகவும் இருந்தது.
அறிவிப்பாளர்கள் சொல்லும் போதும் ஒரு கம்பீரமான தொனியும் இருக்கும். இன்றும் ஒருவருடைய குரல் எங்களுக்கு நன்றாக நினைவிற்கு வருகிறது.
அந்தக் காலக் கட்டத்தில் ரெ.கார்த்திகேசு, அறிவிப்பு செய்யும் போது ஓர் உயர்ந்த குரலில் மிக அழுத்தமாக இனிலா ரேடியோ மலேசியா என்பார். இன்னும் அந்தக் குரல் மனசுக்குள் ஒலிக்கிறது. ஒரு தெம்பு கிடைத்த மாதிரியும் இருக்கும். அது ஒரு கனாக்காலம்.
முனைவர் ரெ. கார்த்திகேசு, மலேசிய வானொலியில் 1961 முதல் 1976 வரை அறிவிப்பாளராக இருந்தவர். ஒரு பன்முகக் கலைஞர். இவர் ஓர் அறிவிப்பாளர் மட்டும் அல்ல. ஒரு தயாரிப்பாளர். வானொலி நிகழ்ச்சிகளின் ஒருங்கிணைப்பாளர்.
பின்னர் இவர் மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர். ஒலிபரப்புத் துறையின் தலைவர். பேராசிரியர். பல்கலைக்கழகச் செனட் உறுப்பினர் என பல பொறுப்புகள்.
ஓர் உண்மையைச் சொல்ல விரும்புகிறேன். 1960-களில் ரெ. கார்த்திகேசு செய்தி வாசிக்கும் போது அவரைப் பற்றி ஒரு பெரிய கற்பனையே செய்து வைத்து இருந்தேன். கடைசியில், இவர் ஓர் எளிமையான மனிதர் என்று தெரிய வந்ததும் திகைப்புகள் திசைக்கு ஒன்றாய் சிறகடித்துப் பறந்தன. நல்ல ஒரு நண்பராக வருவார் என்று கொஞ்சமும் நினைத்துப் பார்க்கவில்லை. கற்பனைகள் சில சமயங்களில் நிதர்சனமான உண்மைகளாகி விடுகின்றன. அதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு.
மலேசிய வானொலியின் வரலாற்றில் 1963 டிசம்பர் 28-ஆம் தேதி, மேலும் ஒரு மைல்கல். அன்றைய தினம்தான் மலேசியாவில் தொலைக்காட்சி ஒளிபரப்பு அறிமுகமானது.
வானொலி என்பது வேறு. தொலைக்காட்சி என்பது வேறு என்று நீங்கள் சொல்ல வரலாம். உண்மைதான். இல்லை என்று சொல்லவில்லை. இருந்தாலும், மலேசிய வானொலி அறிமுகமாகி ஒரு முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு தான் தொலைக்காட்சி சேவை வந்தது.
மலேசிய வானொலிதான் ஒரு முன்னோடி. மலேசிய மனங்களில் நெஞ்சுக்கு நேராக நின்று பேசிய ஒரு வான்சிறகு. வானொலி ஒரு தகப்பன் என்றால் தொலைக்காட்சி என்பது ஒரு மகன்.
ஆனால், இப்போது நிலைமை தலைகீழாக மாறி விட்டது. வானொலியை மிஞ்சி தொலைக்காட்சி எங்கோ போய்விட்டது. தந்தையை மிஞ்சிய தனயன் கதைதான் ஞாபகத்திற்கு வருகிறது.
(தொடரும்)
(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
11.04.2021
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக