தமிழ் மலர் - 19.07.2021
கொரோனா கொரோனா என்று உலகமே கொதித்துப்
போய் நிற்கிறது. அந்தப் பக்கம் பார்த்தால் கொரோனா வைரஸ். இந்தப் பக்கம்
பார்த்தால் டெல்டா வைரஸ். இன்னும் கொஞ்சம் தள்ளிப் போனால் தென்னாபிரிக்கா
வைரஸ். ஆக எந்தப் பக்கம் திரும்பினாலும் கொரோனா கோவிட் கொக்கரிப்புகள்கள்.
அலைகள்
ஓய்வது இல்லை. மலைகள் சாய்வது இல்லை. அது அந்தக் காலத்துப் பொன்மொழி.
கொரோனா ஓய்வதும் இல்லை. கோவிட் சாய்வதும் இல்லை. இது இந்தக் காலத்துப்
பொன்மொழி. இரண்டிற்கும் பெரிய வேறுபாடு இல்லை.
அலைகள் ஆழமான கடலில்
ஆர்ப்பரிக்கின்றன. கொரோனா மனித உடலில் கொக்கரிக்கின்றன. அலைகளைக் கடல்
விடுவது இல்லை. அதைப் போல கொரோனா மனிதர்களை விடுவதாகவும் இல்லை.
எப்படி அலைகள் ஓய்வது இல்லையோ; அதே போல கொரோனாவும் அவ்வளவு சீக்கிரத்தில் அடங்கப் போவதும் இல்லை.
இருந்தாலும் கொரோனாவின் ஆட்டம் கண்டிப்பாக ஒரு முடிவிற்கு வரும். அதுவும் விரைவில் வரும். எதிர்பார்ப்போம்.
கொரோனாவினால்
ஆண்கள் தான் அதிகமாய் உயிர் இழக்கிறார்கள். பெண்களின் இறப்பு ஆண்களைவிட
குறைவு என்றும்; சராசரியாக ஒரு பெண்ணுக்கு மூன்று ஆண்கள் உயிர்
இழக்கிறார்கள் என்றும்; புதிய மருத்துவ ஆய்வுத் தகவல்கள் பரவலாகி
வருகின்றன.
இது எந்த அளவிற்கு உண்மையாக இருக்கும். ஆராய்ந்து
பார்த்ததில், உடலமைப்பு ரீதியில் பெண்களைவிட ஆண்கள் சற்றே பலவீனமானவர்கள்
எனும் உண்மை தெரிய வருகிறது.
உயிர் வாழும் முறை என்று வரும் போது
பெண்களைவிட ஆண்கள் சற்றே பலவீனமானவர்கள் (When it comes to survival, men
are the weaker sex.). அதற்குச் சில காரணங்கள் சொல்லப் படுகின்றன. என்ன
காரணங்கள் என்று பார்ப்போம்.
இப்போது ஏற்பட்டு இருக்கும் இந்தக்
கொரோனா தொற்று இருக்கிறதே, இது ஒன்றும் முதன்முறையாக ஏற்பட்ட உலகளாவியத்
தொற்று நோய் அல்ல. ஏற்கனவே பற்பல கொடிய நோய்கள் வந்து போய் விட்டன. பல கோடி
மக்கள் இறந்து போய் இருக்கிறார்கள்.
கறுப்பு மரணம் என
அழைக்கப்படும் பிளேக் நோய்; காலரா; ஸ்பானிஷ் காய்ச்சல் (Spanish flu);
சார்ஸ் (Severe Acute Respiratory Syndrome (SARS) போன்ற ’பெண்டமிக்’
தொற்றுகள் வந்து போய் இருக்கின்றன.
இதில் ஸ்பானிஷ் (Spanish Flu) காய்ச்சலுக்கு
ஸ்பானிஷ் ஈ (Spanish Fly) என்று பெயர் வைத்த உலக மகா அமைச்சர்களும் இருக்கவே
செய்கிறார்கள். ஒரு நாட்டின் சுகாதார அமைச்சருக்கு இதுகூட தெரியவில்லை
என்றால் எங்கே போய் முட்டிக் கொள்வது?
இப்போதைய உலக மக்களில் 100
வயது வரை வாழ்ந்து கொண்டு இருப்பவர்களில் 80 விழுக்காட்டினர் பெண்கள். 110
வயதை எட்டியவர்கள் 95 விழுக்காட்டினர் பெண்கள். ஆண்கள் சிலர் மட்டுமே
தட்டுத் தடுமாறி 100 வயதுகளைத் தொட்டுப் பார்க்கிறார்கள்.
இந்தப் பக்கம் இல்லாத கூத்துகள் பண்ணிக் கொண்டு இருக்கும், ஒரு மெகா மனிதரையும் அதில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
மனித
மரபணுக்களில் ஆண்களின் மரபணுக்கள்; பெண்களின் மரபணுக்கள்; இரண்டும் ஒன்று
தான். ஒரே மாதிரி தான். ஆனால் அவற்றின் பரிணாம வளர்ச்சியின் (evolutionary
growth) முறையில் தான், இரண்டுமே கொஞ்சம் கொஞ்சமாய் மாற்றம் கண்டு
இருக்கின்றன. பரிணாமத்தைப் பொறுத்த வரையில் அது லேசான மாற்றம்.
பரிணாமம்
என்றால் என்ன? வாழ்வியல் சூழலுக்கு ஏற்றவாறு கொஞ்சம் கொஞ்சமாக நம்மை நாமே
செதுக்கிக் கொள்வதைத் தான் பரிணாமம் என்கிறோம். உயிருடன் வாழும் ஓர்
உயிர்ப் பொருளை உயிரி என்கிறோம்.
அந்த உயிரி, பூமியின் காலச் சூழல்; சுற்றுச் சூழல் அமைப்புக்கு ஏற்றவாறு படிப்படியாகத் தன்னை மாற்றிக் கொள்கிறது. அது தான் பரிணாமம்.
உயிரினங்களில்
பல கோடிக் கோடி இனங்கள் உள்ளன. அந்த உயிரினங்களில் படிப்படியாக, மரபு
வழியாக, அடுத்த பரம்பரைக்கு மாற்றங்கள் கொண்டு போகப் படுகின்றன. கடத்தப்
படுகின்றன என்று சொன்னால் சரியாக இருக்கும்.
காலம் செல்லச்
செல்ல, பல்லாயிரம் ஆண்டுகள் கடந்து போக, உயிரினங்களின் மரபணுக்களில்
வெவ்வேறு பதிப்புகளின் (different alleles of genes) விகிதங்கள்
மாறுபட்டுக் கொண்டே போகும். அது தான் பரிணாமம்.
தனி ஓர் உயிர்ப்
பொருளில் மாற்றங்கள் ஏற்பட்டால் அது பரிணாமம் அல்ல. தனி ஓர் உயிர் தன்னம்
தனியாகப் பரிணாமம் அடைவது இல்லை. ஓர் உயிரினத்தைச் சார்ந்த ஒரு கூட்டமே
பரிணாமம் அடையும்.
ஆண்களின் மரபணுக்கள் ஆண்களுக்குக் கொஞ்சம்
கூடுதலான உடல் தசையைக் கொடுக்கிறது. உடலுக்குக் கொஞ்சம் கூடுதலாக
உயரத்தையும் கொடுக்கிறது. இது பல இலட்சம் பல கோடி ஆண்டுகளாக நடந்த
பரிணாமம்.
பரிணாமம் பற்றி மேலும் கொஞ்சம் கூடுதலான தகவல். மிக மிக எளிதாக விளக்கி இருக்கிறேன்.
பரிணாமங்களில் இரு வகை உள்ளன.
1. நுண் பரிணாமம் (microevolution)
2.
பெரும் பரிணாமம் (macroevolution)
நுண் பரிணாமம் என்பது ஒரே ஓர்
உயிரினக் கூட்டத்திற்குள் (within a particular species) நடக்கும்
மரபியல் மாற்றங்கள். பெரும் பரிணாமம் என்பது ஓர் உயிரினக்
கூட்டத்தையும் தாண்டி நிலையில் மற்ற உயிரினங்களிலும் மரபியல்
மாற்றங்கள் ஏற்படுத்துவது ஆகும் (above the level of species).
அதாவது ஓர் இனத்தில் இருந்து இன்னோர் இனத்தில் மரபியல் மாற்றங்களை உருவாக்குவது ஆகும்.
பொதுவாகவே
ஆண்களின் உடல் எடையும் உடல் வலிமையும் பெண்களைவிட கொஞ்சம் கூடுதலாகவே
இருக்கிறது. ஏன் ஆண்களுக்கு மட்டும் இப்படி தனிப்பட்ட மரபணுச் சலுகைகள்
என்று கேட்கலாம். நல்ல கேள்வி.
மனிதன் தோன்றிய காலத்தில் இருந்து
ஆண்களுக்கு உடல் ரீதியாகவே பற்பல கஷ்டங்கள்; எதிர்நீச்சல்கள்; சண்டைகள்;
கலவரங்கள்; திண்டாட்டங்கள்; தத்தளிப்புகள்; போர்கள்; போராட்டங்கள். சவாலே
சமாளி என்று சமாளிக்கும் தன்மையில் ரொம்பவுமே சவால்கள்.
குகைகளில்
வாழும் காலத்தில் குடும்பத்தைக் கொடிய விலங்குகளிடம் இருந்து காப்பாற்ற
வேண்டும். அங்கே ஒரு போராட்டம். உணவு தேடிப் போகும் போது காட்டு
விலங்குகளிடம் இருந்து உயிர் தப்பிக்க வேண்டும். அங்கே ஒரு போராட்டம்.
எதிரிக்
குழுக்களிடம் இருந்து குடும்ப உறுப்பினர்களைத் தற்காக்க வேண்டும். அங்கே
ஒரு போராட்டம். பயிர் பச்சைகளைப் பெரிய மிருகங்களிடம் இருந்து பாதுகாக்க
வேண்டும். அங்கே ஒரு போராட்டம்.
இப்படி எக்கச்சக்கமான போராட்டங்கள்.
பல இலட்சம் ஆண்டுகளாக இந்த மாதிரியான தப்பிப் பிழைக்கும் போராட்டங்களை,
ஆண்கள் நடத்தி வந்து இருக்கிறார்கள். அங்கே இருந்து தான் ஆணாதிக்கமும் தலை
தூக்கி இருக்கிறது.
அதனால் ஆண்களின் மரபணு பரிணாமத்தில் சற்றே
கூடுதலான வலிமை மாற்றங்கள். ஆண்களுக்குக் கொஞ்சம் கூடுதலான பலம் வந்ததற்கு
அதுதான் காரணம். புரியும் என்று நினைக்கிறேன். சரி.
தலைப்பிற்கு
வருவோம். கொரோனா நோயினால் பெண்களைவிட ஆண்கள் தான் அதிகமாய் உயிர்
இழப்பதாகத் தகவல்கள். என்ன காரணங்கள். இந்தக் கட்டத்தில் ஆண்கள் சில
கசப்பான உண்மைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
இதில் என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள். பெண்களை ஆராதனை செய்யும் ஆண்கள் கட்சி என்று வைத்துக் கொள்ளுங்களேன்.
முதல்
காரணம்: ஆபத்தான நேரங்களில் ஆண்களைவிட பெண்கள் அதிக மனவலிமையுடன்
செயல்படும் திறன் கொண்டவர்கள். அதே சமயத்தில் ஆண்களைவிட பெண்கள் அதிகமாக
மனத் துணிச்சல் கொண்டவர்கள்.
ஆபத்துகளை எதிர்கொள்வதில் ஆண்களைவிடப் பெண்களே துணிச்சல் மிக்கவர்கள் என்று சொல்லப் படுகிறது. இந்தக் காரணம் மனவலிமை தொடர்பானது.
இரண்டாவது
காரணம்: மது அருந்தும் பழக்கம். இந்தப் பழக்கம் ஆண்களுக்கு அதிகம்.
பெண்களைவிட ஆண்களே மதுப் பழக்கத்திற்கு அதிகமாய் அடிமையானவர்கள். இதுவும்
ஒரு பொதுவான கருத்து.
மூன்றாவது காரணம்: புகைபிடிக்கும் பழக்கம்
(Higher rates of tobacco consumption). புகைபிடிக்கும் பழக்கம்
உள்ளவர்களுக்குப் பொதுவாக நுரையீரல் பாதிப்பு ஏற்படுவது உண்டு.
கொரோனா
வைரஸ் மனிதர்களின் உடலுக்குள் மூக்கு வழியாக நுழைந்து மூச்சுக் குழாயை
முதலில் சேதப் படுத்துகிறது. அடுத்து நுரையீரலைச் சிதைக்கிறது. அதனால்
வைரஸ் தொற்று ஏற்பட்டதும் அவர்களின் நுரையீரல் அதிகமாய்ப் பாதிக்கப்பட்டு
உயிர் இழக்கிறார்கள்.
நான்காவது காரணம்: பெண்களின் ஹார்மோன்
(hormone) சுரப்பிகளில் எதிர்ப்புச் சக்தி அதிகமாக இருப்பது ஒரு காரணம்
(more aggressive immune system).
அதனால் கொரோனாவை எதிர்க்கும்
ஆற்றல் பெண்களிடம் அதிகமாக உள்ளது. வைரஸ் கிருமிகளை எதிர்த்துப் போராடும்
சக்தி பெண்களுக்கு அதிகம். அடடடா… நான் ஏன் பெண்ணாகப் பிறக்கவில்லை என்று
ஆண்கள் சிலர் யோசிக்கலாம். டூ லேட்.
ஆனாலும் பெண்களின் ஹார்மோன்
(hormone) சுரப்பிகளில் எதிர்ப்புச் சக்தி அதிகமாக இருப்பதால் அதுவே
சமயங்களில் அவர்களுக்கு ஆபத்தாகவும் முடியலாம். இது பெண்களுக்கு ஒரு
பின்னடைவு.
ஆக பெண்களே எச்சரிக்கை. அட்ரா சக்கை நாங்க ஆண்களை மிஞ்சிட்டோம் என்று சொல்லி ரொம்பவும் பெருமை வேண்டாமே.
முடக்கு
வாதம் (rheumatoid arthritis); தண்டுவட மரப்பு நோய் (multiple sclerosis};
கேடயச் சுரப்பியைத் தாக்கி அழிப்பது (autoimmune thyroiditis); ஜோக்ரன்
சிண்ட்ரோம் (Sjögren’s syndrome); தோல் அழிநோய் (lupus) போன்ற நோய்கள்
பெண்களுக்கு அதிகம்.
ஆக பெண்களின் நோய் எதிர்ப்புச் சக்திக்கு அவர்களின் ஹார்மோன்களே காரணம். ஆண்களுக்கு இந்தப் பாதிப்பு குறைவு.
பொதுவாகவே
உலகம் எங்கும் உள்ள ஆண்கள், பெண்களை விட குறுகிய காலமே உயிர்
வாழ்கிறார்கள். அது ஏன் என்று பொதுமக்களிடம் கேட்கப் பட்டது. அதற்குப்
பலவாறான பதில்கள்.
ஆண்கள் பெரிய பெரிய ஆபத்துகளை எதிர்நோக்குகிறார்கள். ஆண்கள் குடிக்கிறார்கள். அதிகமாகப் புகைக்கிறார்கள்.
ஆனால்
அது ஒரு பெரிய காரணம் அல்ல. புதிய ஆராய்ச்சிகளில் ஓர் உண்மையான காரணத்தைக்
கண்டுபிடித்து இருக்கிறார்கள். குரோமோசோம் தொடர்புடைய காரணங்கள்.
குரோமோசோம்
(Chromosome) என்றால் என்ன? மனித உடல் செல்களால் ஆனது. ஒவ்வொரு செல்லின்
மையத்திலும் ஒரு கரு உள்ளது. அந்தக் கருவுக்குள் இருக்கும் மரபணு
கட்டமைப்பு தான் குரோமோசோம்கள்.
கண் நிறம்; இரத்த வகை; உடல்
அமைப்பு; ஒருவரின் பண்பு; சிந்திக்கும் திறன் போன்றவற்றைத் தீர்மானிக்கும்
மகா தன்மைகள் மரபணுக்களிடம் உள்ளன. அந்த மரபணுக்களின் ஒருகூறு தான்
குரோமோசோம்கள்.
மனிதரின் செல் 23 ஜோடி குரோமோசோம்களைக் கொண்டு இயங்குகிறது. அதில் ஒரு ஜோடிக்கு எக்ஸ் - ஒய் (X - Y) என்று பெயரிடப்பட்டு உள்ளது.
இந்த
எக்ஸ் - ஒய் குரோமோசோம்கள் தான் ஒரு நபர் ஆணா பெண்ணா என்று
தீர்மானிக்கின்றன. இந்த எக்ஸ் - ஒய் குரோமோசோம்கள் ஆணிடம் மட்டுமே உள்ளன.
பெண்களிடம் இல்லை.
ஒரு பெண்ணுக்கு இரண்டு எக்ஸ் குரோமோசோம்கள்.
இரண்டுமே எக்ஸ் எக்ஸ் (XX) குரோமோசோம்கள். அதே சமயத்தில் ஓர் ஆணுக்கு
வெவேறான இரு குரோமோசோம்கள் உள்ளன.
ஒரு குரோமோசோம்: பெயர் எக்ஸ்
(X). மற்றும் ஒரு குரோமோசோம். அதன் பெயர் ஒய் Y. இரண்டையும் சேர்த்து எக்ஸ்
- ஒய் (X - Y) குரோமோசோம்கள் என்று சொல்வார்கள்.
சுருங்கச்
சொன்னால் ஆண்களின் மரபு அணுக்களில் ஒரே வகையில் இரு குரோமோசோம்(கள்) உள்ளன
(chromosome (XY). பெண்களின் மரபு அணுக்களில் இரு வகையில் இரு
குரோமோசோம்(கள்) உள்ளன (chromosomes (XX). சரிங்களா.
ஓர் ஆணும்
பெண்ணும் இணைந்த பின்னர் அந்த ஆணின் எக்ஸ் குரோமோசோம் பெண்ணின் கரு
முட்டையில் இணைந்தால் பெண் குழந்தை பிறக்கிறது. அதே ஆணின் ஒய் குரோமோசோம்
இணைந்தால் ஆண் குழந்தை பிறக்கிறது.
ஆக ஒரு குழந்தை ஆணாகப்
பிறப்பதற்கும் அல்லது பெண்ணாகப் பிறப்பதற்கும் ஓர் ஆணின் குரோமோசோம்கள்
தான் முடிவு செய்கின்றன. அது அப்படியே இருக்கட்டும். ஆணுக்கும்
பெண்ணுக்கும் உள்ள மரபணுக்களை ஆராய்ச்சி செய்து பார்த்தார்கள்.
அந்த ஆய்வின் மூலமாக ஆண்களைவிட பெண்கள் 15-இல் இருந்து 25 ஆண்டுகளாகக் கூடுதலாக வாழ முடியும் என்று கண்டுபிடித்து இருக்கிறார்கள்.
பெண்களின்
ஆயுட்காலம் கூடுதலாக இருப்பதற்கு மேலும் ஒரு காரணம். பெரும்பாலும் பெண்கள்
வீட்டிலேயே இருக்கிறார்கள். ஆதிகாலத்தில் இருந்து இந்தக் காலம் வரை
வீட்டிற்குள்ளேயே வாழ்க்கையை ஓட்டி விடுகிறார்கள்.
அண்மையில் ஒரு ஐம்பது ஆண்டு காலமாகத் தானே பெண்கள் வெளியே வந்து ஆண்களுக்கு நிகராகப் பெரிய பெரிய பதவிகளை வகிக்கிறார்கள்.
முன்பு
காலத்தில் பெண்களை ஆண்கள் அடக்கி வைத்து இருந்தார்கள். ஆணாதிக்கம் என்று
சொல்வார்களே அதுதான். பெண்களைப் பொறுத்த வரையில் அவர்கள் தங்களின் உடலை
எப்போதும் சுத்தமாகவும் தூய்மையாகவும் வைத்துக் கொள்கிறார்கள். பெண்களின்
காலா காலத்து இயல்பு.
ஆனால் ஆண்கள் அப்படி இல்லையே. அதிகமாய்
வெளியே போவது வழக்கம். அதனால் உடல் சுத்தம் கொஞ்சம் குறைவு. பெண்களுக்கு
வீடுதான் உலகம். ஆண்களுக்கு உலகமே வீடு.
இந்த மாதிரியான
காரணங்களினால் தான் கொரோனா உயிரிழப்பு விகிதத்தில் ஆண்களுக்கும்
பெண்களுக்கும் வேறுபாடுகள். ஆக என்னதான் வேறுபாடுகள் இருந்தாலும், ஆண்களின்
உயிரிழப்புகள் என்பது பெண்களையும் மறைமுகமாகப் பாதிக்கும்.
ஏன்
என்றால் பெண் இனம்; ஆண் இனத்தைச் சார்ந்து இருக்கிறது. ஆண் இனம்; பெண்
இனத்தைச் சார்ந்து இருக்கிறது. ஆண் இனத்திற்கு இழப்பு என்றால் அது பெண்
இனத்தையும் பாதிக்கும். நீ இல்லாமல் நான் இல்லை. நான் இல்லாமல் நான் இல்லை.
அப்போது 100%. இப்போது ஒரு கேள்விக்குறி.
(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
19.07.2021
வணக்கம், அருமையான கட்டுரை.
பதிலளிநீக்குஆணா...பெண்ணா...
என்ற கேள்விக்கே இடமில்லை..
இருவருக்குமே இறப்பு என்பது உண்டு...உடல்,மனம்,உருவம் எப்படிப்பார்தாலும் உணர்வுகள் ஒன்றுதான்...
இறுதியில் ஒரு கைப்பிடி சாம்பல்தான்...
ஆகமொத்தம் இருவருமே சம்மதான்...
கடைசியில் இருவருமே சவம்தான்...