18 ஜூலை 2021

லாவோஸ் பல்லவ அரசர் மகாராஜா ராஜாதரனா

தமிழ் மலர் - 16.07.2021

லாவோஸ் நாட்டு வரலாற்றில் பல்லவர்களின் தாக்கங்கள் மிகுதியாய் உள்ளன. குறிப்பாக லாவோஸ் நாட்டு எழுத்து வடிவங்களில் அந்தத் தாக்கங்களைக் காணலாம். அவர்களின் எழுத்து வரிவடிவங்களில் பல்லவ எழுத்து வரிவடிவங்களே இன்றும் பயன்படுத்தப் படுகின்றன. அந்த அளவிற்குப் பல்லவம் அங்கே வேர் ஊன்றி விழுதுகள் பாய்த்து உள்ளது.

Maharaja Brhat Rajadharana Sri Chudhana

லாவோஸ் நாட்டில் மட்டும் அல்ல. பாலி தீவு எழுத்து வரிவடிவங்களில் (Balinese) பல்லவ எழுத்து வரிவடிவங்கள் தான் பயன்படுத்தப் படுகின்றன.

தவிர பேபாயின் (Baybayin) பர்மியம்; ஜாவானியம்; காவி (Kawi); கெமர் (Khmer); லன்னா (Lanna) லாவோ; மோன் (Mon); புதிய தை லூ எழுத்துக்கள் (New Tai Lue alphabet); [14] சுண்டனியம் (Sundanese); தாய்லாந்து நாடுகளின் வரிவடிவங்களிலும் பயன்படுத்தப் படுகின்றன.

லாவோஸ் நாட்டின் அருகாமையில் சீனா நாடு. இருந்தாலும் பல்லவர்களின் தாக்கங்கள் சீனாவில் குறைவு என்று சொல்லலாம். மிக அருகாமையில் வியட்நாம். அங்கேயும் பல்லவத் தாக்கங்கள் குறைவு. 


லாவோஸ் நாட்டில் பெரும்பான்மை மக்கள் மகாபாரதம்; இராமாயணம் இந்தியப் புராண இதிகாசங்களைத் தெரிந்து வைத்து இருக்கிறார்கள். அந்த இதிகாசங்களின் தாக்கங்களை இன்றும்கூட லாவோஸ் நாட்டின் கிராமப் புறங்களில் நன்றாகவே உணர முடிகிறது.

2000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் இருந்து இந்தோசீனா நாடுகளுக்கு வணிகம் பார்க்கச் சென்ற பல்லவர்கள், இந்து மதத்தையும் தேரவாத புத்த மதத்தையும் கொண்டு சென்றார்கள் (Theravada Buddhism). அதில் புத்தம் மலர்ந்தது. இந்து மதம் சன்னம் சன்னமாய் மங்கியது.


9-ஆம் நூற்றாண்டில் இருந்து 13-ஆம் நூற்றாண்டு வரை கம்போடியாவின் கெமர் பல்லவ அரசர்கள் லாவோஸ் நாட்டின் பெரும் பகுதியை ஆட்சி செய்து வந்தார்கள்.

ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக லாவோஸ் நாடு, பகுதி பகுதிகளாகப் பிரிந்து சிதறிப் போய்க் கிடந்தது. அவற்றை எல்லாம் ஒன்று சேர்த்து ஓர் ஐக்கிய நாடாக உருவாக்கியவர் பா நிகும் (Fa Ngum) எனும் பல்லவர்.

இவரின் அசல் பெயர் ஸ்ரீ சதான கனயுதா மகாராஜா ராஜாதரனா ஸ்ரீ சுத்தான நகரன் (Somdetch Brhat-Anya Fa Ladhuraniya Sri Sadhana Kanayudha Maharaja Brhat Rajadharana Sri Chudhana Negara). ஏன் இவ்வளவு பெரிய நீண்ட பெயர் என்று தெரியவில்லை. 



அந்தக் காலத்து மன்னர்கள் தங்களின் வீர தீரப் பராக்கிரமங்களைப் பறைசாற்றுவதற்கு அப்படி நீண்ட பெயர்களை வைத்துக் கொண்டு இருக்கலாம். சொல்ல முடியாது.

பா நிகும் எனும் ஸ்ரீ சதான கனயுதா மகாராஜா ராஜாதரனா என்பவர் பல்லவ வம்சாவழியைச் சேர்ந்தவர். இருந்தாலும் பின்னாட்களில் இவரின் பெயர் பா நிகும் என்று மாற்றம் கண்டு லாவோஸ் வரலாற்றில் நிலைத்துப் போனது.

இவர் இப்போது பா நிகும் எனும் பெயரில் தான் லாவோஸ் வரலாற்றில் பிரபலம் அடைந்து உள்ளார்.

பா நிகும் எனும் பல்லவ மகாராஜா ராஜாதரனா தான், லாவோஸ் நாட்டில் லான் சாங் (Lan Xang) எனும் பேரரசை 1353-ஆம் ஆண்டில் உருவாக்கினார்.


மகாராஜா ராஜாதரனாவின் தந்தையார் பெயர் சம்மாத பிரகதிஞ்ச பைவாதம் (Samdach Brhat-Anya Phya Vath). இவர் ராஜதரணி ஸ்ரீ சுத்தானம் எனும் சிற்றரசின் (King of Rajadharani Sri Sudhana) அரசராக இருந்தார்.

மகாராஜா ராஜாதரனாவின் தந்தையார் சம்மாத பிரகதிஞ்ச பைவாதத்திற்கு இரு மனைவியர்.

மூத்தவர் கெமர் பேரரசின் இளவரசியார்.

இளையவர் தாய்லாந்தின் அயோத்தியா பேரரசின் இளவரசியார். அயோத்தியா அரசர் ராமாதிபதி (King Ramadipati of Ayudhaya) என்பவரின் மகள். இரு பெண்களும் இரு நாடுகளின் அரசகுலப் பெண்கள்.

மகாராஜா ராஜாதரனாவின் பாட்டனார் பெயர் சௌனா காம்புங் (Souvanna Khamphong). இவர் லாவோஸ் முவாங் சுவா (Muang Swa) நிலப் பகுதியின் ஆட்சியாளர். இந்த முவாங் சுவா நிலப் பகுதிதான் இப்போது லுவாங் பிரபாங் (Luang Prabang) என்று அழைக்கப் படுகிறது.  தாத்தா, மகன், பேரன் இவர்களின் சுருக்கம்.


1. மகாராஜா ராஜாதரனா ஸ்ரீ சுத்தான நகரன். லாவோஸ் நாட்டு மொழியில் பா நிகும் (Fa Ngum).

2. மகாராஜா ராஜாதரனா தந்தையாரின் பெயர் சம்மாத பிரகதிஞ்ச பைவாதம் (Samdach Brhat-Anya Phya Vath). லாவோஸ் நாட்டு மொழியில் சாவோ நிகியோ (Chao Fa Ngiao).

3. மகாராஜா ராஜாதரனா தாத்தாவின் பெயர் சௌனா காம்புங் (Souvanna Khamphong).

தாத்தா சௌனா காம்புங்கின் வைப்பாட்டிகளில் ஒருவருடன், மகாராஜா ராஜாதரனாவின் தந்தையார் சம்மாத பிரகதிஞ்ச பைவாதம் நெருக்கமாகப் பழகியதற்காகக் குடும்பத்தில் இருந்து வெளியேற்றப் பட்டார். 


இந்தப் பக்கம் 1399-இல் சிங்கப்பூரைப் பரமேஸ்வரா ஆட்சி செய்த போது இப்படித் தானே ஓர் அந்தர்ப்புரத்துப் பெண்ணால் பிரச்சினை ஏற்பட்டது. பெரிய போராக உருவெடுத்தது. பரமேஸ்வரா சிங்கப்பூரில் இருந்து மலாக்காவிற்குத் தப்பி வந்தது. ஆக லாவோஸ் நாட்டிலும் அப்படித்தான் 1320-இல் நடந்து இருக்கிறது.

மகாராஜா ராஜாதரனாவின் குடும்பம் கம்போடியத் தலைநகரான அங்கோர் வாட்டிற்குத் தப்பிச் சென்றது. கம்போடியாவில் மகாராஜா ராஜாதரனா வளர்க்கப் பட்டார். பின்னர் அவர் ஒரு கெமர் நாட்டு இளவரசியை மணந்தார்.

1350-ஆம் ஆண்டு வாக்கில் மகாராஜா ராஜாதரனாவும் அவருடைய தந்தையாரும் கம்போடியாவில் ஓர் இராணுவப் படையை உருவாக்கினார்கள். மீகோங் நதி பள்ளத்தாக்கில் ஏராளமான சண்டைகள். பற்பல வட்டார ஆளுமைகள் நிர்மூலம் ஆக்கப்பட்டன. பல குட்டி அரசுகள் அட்ரஸ் இல்லாமல் போயின. அந்தச் சமயத்தில் மகாராஜா ராஜாதரனாவின் தந்தையார் இறந்தார்.

பின்னர் மகாராஜா ராஜாதரனா தன் படைகளைக் கொண்டு தாத்தா சௌனா காம்புங்கைத் தோற்கடித்தார். அவரின் அரசு கைப்பற்றப்பட்டது. மகாராஜா ராஜாதரனா, அவர் கைப்பற்றிய நிலப் பகுதிகளை எல்லாம் ஒன்றிணைத்தார். 1353-ஆம் ஆண்டு லாவோஸ் எனும் நாட்டை உருவாக்கினார்.

பின்னர் காலத்தில் மகாராஜா ராஜாதரனா எனும் பெயர் பா நிகும் (Fa Ngum) என்று மாற்றம் கண்டு நிலைத்துப் போனது. அசல் மகாராஜா ராஜாதரனா எனும் பெயர் கரைந்து போனது. இருந்தாலும் லாவோஸ் மக்கள் தங்களின் பல்லவப் பின்புலத்தையும்; இந்தியப் பின்புலத்தையும் மறக்கவில்லை.

மகாராஜா ராஜாதரனா தான் லாவோஸ் நாட்டின் முதல் அரசர். இவருக்குப் பின்னர் நிறைய 78 அரசர்கள் லாவோஸ் நாட்டை ஆட்சி செய்து இருக்கிறார்கள்.

சம்சேனாதி (Samsenethai);

பூமாதா (Phommathat);

மகாராணி பிம்பா (Phimpha);

சக்கபதி (Chakkaphat);

சௌனா (Souvanna);

சோம்பு (Somphou);

விஷன் (Visoun);

போதிசாரதன் (Photisarath);

சீதாதீர்த்தன் (Setthathirath);

சௌளிந்தன் (Soulintha);

கோமான் (Koumane);

வீரவங்சன் (Voravongsa);

சௌரிகனம் (Sourigna);

இவரின் வாரிசுகளில் கடைசியாக வந்தவர் ஸ்ரீ சாவங்ச வதனா (Savangsa Vatthana). இவர்தான் லாவோஸ் நாட்டின் கடைசிப் பல்லவ அரசர். அவருடைய பெயரின் பொருள்: அண்டத்தின் கடவுளார் புத்தர் (The Buddha is the God of the universe).

இவருடைய முழுப் பெயரைக் கேட்டால் மயக்கம் வருகிறது. (Samdach Brhat Chao Mavattaha Sri Vitha Lan Xang Hom Khao Phra Rajanachakra Lao Parama Sidha Khattiya Suriya Varman Brhat Maha Sri Savangsa Vadhana)

அந்த அரசரின் பெயரில் வரும் ராஜநட்சத்திரம்; பரம சித்த சூரியா வர்மன்; மகா ஸ்ரீ வதனம் எனும் சொற்கள் மட்டுமே நமக்குத் தெரிந்த சொற்களாகத் தெரிகின்றன. அவை அனைத்தும் புத்தரைப் புகழ்ந்து உரைக்கும் சொற்களாகும்.

அந்தப் பெயரில் தமிழும் சமஸ்கிருதமும் கலந்து வருகின்றன. அவை லாவோஸ் மொழிச் சொற்கள். அதன் மூலம் இந்தியத் தாக்கத்தை நம்மால் ஓரளவிற்குக் கணிக்க முடிகின்றது.

லாவோஸ் ஓர் அழகிய நாடு. அற்புதமான நாடு. அமைதியின் அணிகலனாய் ஆசீர்வதிக்கப்பட்ட நாடு. இயற்கை அன்னை வஞ்சகம் இல்லாமல் சீர் சிறப்புகளைச் சீதனமாக வாரி இறைத்துவிட்டுச் சென்று இருக்கும் நாடு. வண்ணங்கள் கொழிக்கும் வசீகர நாடு.

எங்கு பார்த்தாலும் கரும் பச்சையில் கானகத்து மலைகள். இயற்கை எழில் கொஞ்சும் பனிச்சாரல் மேகங்கள். ஆழ்மஞ்சள் மீகோங் நதிக்கரைக் கரைகளின் (Mekong River) அழகிய செம்மண் காடுகள்.

இயற்கை அன்னை நேரம் காலம் பார்க்காமல் செதுக்கியச் சிற்பங்களாய் மலைக் குன்றுகள். சுவர்களில் புத்த ஜாதக ஓவியங்கள். மலை வாழ் மக்களின் மகத்தான படைப்புகள். காடுகளின் பரிசுகள். கானகத்தின் நிறை கொடைகள்.

இடை இடையே கோபுர வாசல்களாய் சுண்ணாம்புக் குகைகள். அக்கம் பக்கத்தில் பச்சை பசேல் கானகத்து ஓவியங்கள். நாடு முழுவதும் தோகை விரித்தாடும் வயல்காட்டுப் புல்வெளிகள். கூடவே தங்க ரத நெல்மணிக் கதிர்கள். வர்ணனை போதுங்களா. நேரில் பார்த்தால் உண்மை தெரியும்.

ஆனாலும் அங்கே வலிமிகுந்த கடந்த கால நினைவுகள். முதலில் பிரெஞ்சுக்காரர்களின் சுரண்டல்கள். அடுத்து ஜப்பானியர்களின் மிரட்டல்கள். அடுத்து வியட்நாம் போரின் வேதனைகள். அடுத்து பாத்தட் லாவோ கம்யூனிஸ்டுகளின் நரபலிகள். அந்த வேதனைகளை லாவோஸ் மக்கள் இன்றும் அனுபவித்துக் கொண்டு இருக்கிறார்கள். பாவம் அவர்கள்.

உலகில் அதிகமான குண்டுகளைத் தனக்குள் புதைத்துக் கொண்டு வாழும் நாடு லாவோஸ். அந்த நாட்டுத் துயரின் வேதனைத் துளிகள் அன்றாடம் கண்ணீர்க் கடலாய்க் காம்போதிகளைப் பாடிக் கொண்டு இருக்கின்றன. எங்கோ சில இடங்களில் அம்சவர்த்தனிகளைக் கேட்கலாம். சன்னமாய் பைரவிகளையும் கேட்கலாம். சரி.

1975-ஆம் ஆண்டில் பாத்தட் லாவோ (Pathet Lao) கம்யூனிஸ்டுகள் லாவோஸ் நாட்டைக் கைப்பற்றினார்கள். புதிதாக வந்த புரட்சி அரசாங்கம் அரச குடும்பத்தை ஒரு தடுப்பு முகாமில் அடைத்து வைத்தது. அத்துடன் லாவோஸ் நாட்டில் 600 ஆண்டுகால மன்னராட்சியும் முடிவிற்கு வந்தது.

1978-ஆம் ஆண்டில் லாவோஸ் மன்னர் ஸ்ரீ சாவங்ச வதனா; மகாராணி காம்பூய் (Queen Khamphoui); பட்டத்து இளவரசர் சாவாங் ஆகிய மூவரும் மலேரியா நோயினால் இறந்து விட்டதாகக் கம்யூனிஸ்டு அரசாங்கம் அறிவித்தது. ஆனால் அந்தச் செய்தி தவறானது என பின்னர் தெரிய வந்தது. கட்டாய உழைப்பு;  பட்டினியால் அவதிப்பட்டு அவர்கள் இறந்து இருக்கலாம்.

அதன் பின்னர் லாவோஸ் நாட்டில் அரச பரம்பரை மறைந்து போனது. இருந்தாலும் லாவோஸ் மக்கள் தங்களின் இந்தியப் பின்புலத்தை மறக்கவில்லை. இந்திய இதிகாசங்களின் பிரதான மாந்தர்களுக்கு மரியாதை மதிப்பு கொடுக்கும் வகையில் அஞ்சல் தலைகளை வெளியிட்டு இருக்கிறார்கள்.

அந்த நாட்டில் 67 விழுக்காடு புத்த மதம். 30 விழுக்காடு நாட்டுப்புற ஆன்மீகவாதங்கள் (animism). ஒரே ஒரு விழுக்காட்டு தான் இந்து மதத்தினர்.

இருந்தாலும் பாருங்கள்... இந்திய இதிகாசங்களான மகாபாரதம்; இராமாயணம் தொடர்பான கதாமாந்தர்களுக்கு அஞ்சல் தலைகளை வெளியிட்டு இந்து மதத்திற்குப் பெருமை செய்து இருக்கிறார்கள்.

இதில் ஒரு பெரிய ஆச்சரியம் என்னவென்றால் சரஸ்வதி தேவிக்குத் தான் அதிகமான அஞ்சல் தலைகளை வெளியிட்டு இருக்கிறார்கள். 1955-ஆம் ஆண்டில் இராமர், சீதை, இராவணன், அனுமான் ஆகியோரைச் சித்தரிக்கும் 6 அஞ்சல் தலைகளை வெளியிட்டார்கள்.

1969-ஆம் ஆண்டில் லாவோஸ் மீண்டும் 8 அஞ்சல் தலைகளின் தொகுப்பை வெளியிட்டது. அதில் இராமாயணத்தின் காட்சிகள் இடம் பெற்றன. 1971-ஆம் ஆண்டில் மற்றோர் அஞ்சல் தலையை வெளியிட்டது. அதில் விஷ்ணுவின் மீன் அவதாரம் அனுமனுடன் சண்டையிடுவதைச் சித்தரிக்கிறது.

1974-ஆம் ஆண்டில் சரஸ்வதி, இந்திரன் மற்றும் பிரம்மா ஆகியோரைச் சித்தரிக்கும் 3 அஞ்சல் தலைகளின் தொகுப்பை வெளியிட்டது. 2004-ஆம் ஆண்டில் இராமாயணத்தின் 4 காட்சிகளைக் கொண்ட 4 அஞ்சல் தலைகளின் தொகுப்பை வெளியிட்டது.

2006-ஆம் ஆண்டில் இலவகுசன், இராமர், சீதை, இராவணன் மற்றும் அனுமான் ஆகியோரைச் சித்தரிக்கும் 5 அஞ்சல் தலைகளின் தொகுப்பை வெளியிட்டது. அண்மையில் விநாயகர் படத்தையும் அஞ்சல் தலையாக வெளியீடு செய்து உள்ளது.

எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்னர் பல்லவர்கள் லாவோஸ் நாட்டிற்கு வந்தார்கள். வாழ்ந்தார்கள். வரலாற்றில் இருந்து மறைந்தும் போனார்கள். இருந்தாலும் அவர்கள் விட்டுச் சென்ற இதிகாசங்களையும்; இதிகாசப் படிமங்களையும்; இதிகாசப் பண்புகளையும் லாவோஸ் மக்கள் மறக்கவில்லை. மறக்காமல் மரியாதை செய்து வருகிறார்கள்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
16.07.2021

சான்றுகள்:

1. Coedes, George (1968). Walter F. Vella (ed.). The Indianized States of Southeast Asia. trans. Susan Brown Cowing. University of Hawaii Press. ISBN 978-0-8248-0368-1.

2. Sanda Simms, ch. 3, "Through Chaos to a New Order", in The Kingdoms of Laos (London: Taylor & Francis, 2013).

3. P.C. Sinha, ed., Encyclopaedia of South East and Far East Asia, vol. 3

4. Askew, Marc. (2010) [2007]. Vientiane : transformations of a Lao landscape. Logan, William Stewart, 1942–, Long, Colin, 1966–. London: Routledge.


பின்னூட்டங்கள்

Sathya Raman: வணக்கம் சார். உங்கள் பதிவுகளிலேயே அதிக சிரத்தை எடுத்துக் கொண்டு எழுதிய கட்டுரை இதுவாகத்தான் இருக்கும்.

கடந்த நூற்றாண்டுகளில் இந்த பெயர் வைப்பதில் ஏன் இவ்வளவு தூரம் என்று தெரியவில்லை. சின்னதாய், சிக்கனமாய் பெயர் வைக்க தெரியாத மனிதர்களே அன்று. அய்யய்யோ எவ்வளவு பெரிய நீளமான பெயர்கள் மனதில் ஒரு மண்ணும் பதியவில்லை போங்கள்.

எதுவாயிலும் லாவோஸ் மக்களின் நன்றியுணர்வை நினைக்கையில் மனம் மெய்சிலிர்க்கவே செய்கிறது.
 
நீண்ட பதிவு அதிக அக்கறை எடுத்து எழுதிய பதிவு. அதே சமயம் சில நீண்ட பெயர்களை சென்சார் செய்யுங்கள். வேண்டும் என்றால் நீங்களே நிக் நேம் வையுங்கள்.

ஒரு வரலாற்று பதிவில் இது கூடாதுதான். விதி மீறிச் செல்லும்தான். உங்கள் வாசகர்களின் ஞாபக சக்தியையும் கொஞ்சம் கவனத்தில் கொள்ளுதல் நல்லது.
இல்லாவிட்டால் "யப்பா இப்பவே கண்ணை கட்டுதேன்னு" வடிவேலு வசனத்தை முணுமுணுப்பார்கள்.

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்:
உண்மைதான் சகோதரி. இந்த மாதிரியான வரலாற்றுக் கட்டுரைகள் எழுதுவதற்கு முன்னால் நிறைய சான்றுகளைத் தேடி எடுக்க வேண்டும். இந்தக் கட்டுரைக்கான சில சான்றுகள் வியட்நாமிய மொழியில் இருந்தன.

ஆக வியட்நாமிய மொழியில் இருந்ததை கூகிள் மொழிபெயர்ப்பு கருவியின் மூலமாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து பின்னர் தமிழ் மொழிக்கு கொண்டு வந்தேன். சிரமம் தான். ஆனால் தமிழர்கள் சார்ந்த வரலாற்றை வெளிச்சத்திற்குக் கொண்டு வர வேண்டும் என்றால் சிரமத்தைப் பார்க்க இயலாது.

நம் இலக்கு, நம் இனம் வரலாற்றில் பின்தங்கிய இனம் அல்ல என்பதை உலகத்திற்குச் சொல்ல வேண்டும். அந்த இலக்கை நோக்கிப் பயணிக்கின்றோம்.

வியட்நாமிய பல்லவ அரசர்களின் பெயர்கள் மிக நீளமானவை. ஏன் அப்படி வைத்துக் கொண்டார்கள் என்று ஆராய்ந்து பார்த்தேன். ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்ல முடிகிறது.

எவ்வளவுக்கு எவ்வளவு பெயர் நீளமாக இருக்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு ஆயுள் கூடுதலாக இருக்கும் என்பது அவர்களின் நம்பிக்கையாக இருந்து உள்ளது. அதனால் பெயரை நீளமாக வைத்துக் கொண்டார்கள்.

தங்களின் கருத்துகளுக்கு மிக்க நன்றிங்க சகோதரி. மீண்டும் சந்திப்போம்.

Raghawan Krishnan: Awesome Mk..Great.keep up this momentum.

[6:19 am, 19/07/2021] Raghavan SRT 5: Dear SRT friends. Our Beloved Brother Muthu Krishnan has been doing a lot of Research in the field of our Indian History in a GLOBAL Atmosphere. We are very PROUD of him. During our Get together we shall be taking Fruitful Decisions pertaining his Wonderful RESEARCH. God Bless All of Us Long Life. BE SAFE all the time. Be United and be Cheerful SRTV.

[6:20 am, 19/07/2021] Raghavan SRT 5: SRTV is the Best.

[7:14 am, 19/07/2021] Vimala Nair: Wow.. Mr. MK, lots of research on Hindu civilazation. Need to print it in simple  English n Tamil also... Its our history.

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: வணக்கம் சகோதரர் ராகவன் அவர்களே...

பல்லவர் என்பவர் தமிழர்கள் என்று வரலாற்று ஆசிரியர்கள் உறுதி செய்து விட்டனர். 650 ஆண்டுகள் தமிழகத்தை ஆட்சி செய்தவர்கள். அந்த வகையில் தமிழர்கள் சார்ந்த உலக வரலாற்றை வெளிச்சத்திற்குக் கொண்டு வர வேண்டும்.

வியட்நாமில் பாண்டியர்களும் பல்லவர்களும் பல நூறு ஆண்டுகளாக ஆட்சி செய்து உள்ளனர். பலருக்கும் தெரியாத தகவல். தமிழ்நாட்டு வரலாற்று ஆசிரியர்கள் தமிழ்நாட்டைப் பற்றியே தீவிரமாக ஆய்வு செய்கின்றனர். குறை காணவில்லை.

இந்தப் பக்கம் இந்தோசீனா, இந்தேனேசியா போன்ற பகுதிகளைப் பற்றி ஆய்வு செய்வது குறைவு. ஆக மலேசியாவில் வாழும் தமிழர்கள் தான் ஆய்வு செய்ய முன்வர வேண்டும்.

நம் மலாயா தமிழர் இனம் வரலாற்றில் பின்தங்கிய இனம் அல்ல என்பதை உலகத்திற்குச் சொல்ல வேண்டும். அந்த இலக்கை நோக்கிப் பயணிக்கின்றோம். இயன்ற வரையில் தகவல்களைச் சேகரித்து நம் அடுத்த அடுத்த தலைமுறையினருக்கு விட்டுச் செல்வோம்.

மலாக்கா முத்துக்கிருஷ்ணன் >>>> Vimala Nair: தங்களின் அன்பான ஆதரவான சொற்களுக்கு நன்றிங்க சகோதரி. நூலாக வெளியிடுவோம்.

தனசேகரன் தேவநாதன்: நேற்று இரவு தான் கட்டுரையைப் படித்தேன். ஒரு கேள்வி ஐயா. நம்நாட்டு நிலை நாம் அறிந்ததே. தமிழ் நாட்டில் தற்சமயம் இந்த வரலாறுகள் மாணவர்களுக்கு போதிக்கப் படுகிறதா?

பேச்சாளர்கள் சிலர் இதைத் தொட்டுப் பேசுவது உண்டு. தமிழ்நாட்டுப் பாட நூல்கள் இந்தச் சரித்திரத்தை என்னதான் செய்கிறார்கள். சற்று விளக்க வேண்டுகிறேன் ஐயா. நன்றி.

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: பதிவிற்கு நன்றி தனா. அங்கே அவர்களுக்கு ஆயிரத்தெட்டு அரசியல் பிரச்சினைகள். இங்கே 74 அமைச்சர்களை வைத்துக் கொண்டு நாம் அவஸ்தை படவில்லையா.

அந்த மாதிரி அங்கே திண்ணைக்குத் திண்ணை அரசியல் வாக்குவாதங்கள். அதற்கே நேரம் சரியாக இருக்கும். இதில் நம்ப மலாயா தமிழர்களை நினைத்துப் பார்க்க நேரம் கிடைக்காது.

தவிர தென்கிழக்காசிய வரலாற்றைப் போதிக்கிறார்களா என்று தெரியவில்லை ஐயா. இருக்கிற தமிழ்ச் சொற்களைத் தூய்மை படுத்துகிறேன் என்று சொல்லி இல்லாமல் செய்வதற்கே அவர்களுக்கு நேரம் போதாமல் இருக்கலாம். பட்சி சொன்னது.

அடியேன் மலாயாவில் பிறந்தவன். மலேசியத் தமிழ்ப்பள்ளிகளும் என்னுடன் பிறந்தவை. என் வீட்டுக் குஞ்சுகள் எப்போதுமே பொன் குஞ்சுகள். நன்றிங்க ஐயா.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக