09 ஜூலை 2021

அமெரிக்காவின் தண்டல் வேலை: மலாயாவுக்கு கோடிகளில் இழப்பு

தமிழ் மலர் - 09.07.2021

ஜப்பானியரின் மலாயா ஆக்கிரமிப்பு (1942 – 1945)
(கட்டுரைத் தொடரின் இரண்டாம் பாகம்)

1942-ஆம் ஆண்டு தொடங்கி 1945-ஆம் ஆண்டு வரை மலாயா மக்களுக்கு ஜப்பானியர்கள் இழைத்தது மாபெரும் கொடுமை. அந்த அதிகார வக்கிரமக் கொடுமையில் அப்பாவிச் செம்மறியாடுகளாய் ஆயிரக் கணக்கான உயிர்ப்பலிகள். உயிர்மை பாய்ந்த அந்த உயிர்ப்பலிகள் அனைத்தும் ஜப்பானிய ஏகாதிபத்திய வரலாற்றின் மற்றொரு பக்கம்.

’வர்றான் வர்றான் சப்பான்காரன் ஆள்பிடிக்க வர்றான்’ என்பது அந்தக் காலத்து மலாயாத் தமிழர்களின் வாய்மொழிப் பாடல். அதில் கசிந்து வழிவது எல்லாம் வரலாற்றின் வேதனை விசும்பல்கள். வரலாற்றின் வேதனை வலிகள்.

அந்த வேதனை வலிகளில் சாத்துயர் மரண ஓலங்கள் ஓங்காரமாய் ஒப்பாரி வைப்பதை இன்றும் நன்றாகவே கேட்க முடிகின்றது. ஜப்பானியர் காலத்தில் நம் இனத்தவர்கள் எப்பேர்ப்பட்ட வேதனைகளை அனுபவித்து இருப்பார்கள். நினைத்துப் பார்ப்போம்.


அந்த வேதனைகளுக்கும் அந்த விசும்பல்களுக்கும் ஜப்பானியர்கள் பின்னர் காலத்தில் போர் இழப்பீடு (நஷ்டயீடு) எனும் பெயரில் இழப்பீடு கொடுத்து இருக்கிறார்கள். 270 பில்லியன் ரிங்கிட் இழப்பீடு என்று ஊடகங்களில் பரவலாகி வருகிறது. இந்த நஷ்டயீடு எந்த அளவிற்கு உண்மை என்பதைப் பற்றி ஆராய்கிறது இந்தக் கட்டுரைத் தொடர்.

சயாம் பர்மா மரண இரயில் பாதை அமைப்பில் பாதிக்கப்பட்ட மலாயா மக்களின் குடும்பங்களுக்கு ஜப்பானிய அரசாங்கம் 270 பில்லியன் போர் இழப்பீடு வழங்கியதாகவும்; அந்தப் பணம் எங்கே போனது எனும் கேள்விகள் பரவலாகி வருகின்றன.

1967-ஆம் ஆண்டில் ஜப்பானுக்கும் மலேசியாவுக்கும் இடையே ஒரு போர் இழப்பீட்டு ஒப்பந்தம் செய்து கொள்ளப் பட்டது. அந்த ஒப்பந்தத்தின்படி  மலாயாவுக்கு கிடைத்த இழப்பீடு: 


1. ஜப்பானிய தொழிற்சாலைகள்; இயந்திரங்கள்; உபகரணங்கள்; தளவாடங்கள். (5 விழுக்காடு).

2. ஜப்பானியக் கடற்படையைச் சேர்ந்த 23 போர்க் கப்பல்கள்.

அந்தத் தளவாடப் பொருட்களை விற்ற பணம் எல்லாம் மலேசிய மக்களுக்குப் போய்ச் சேர்ந்து இருக்க வேண்டும்.

ஆனால் மலாயா பிரிட்டிஷ் அரசாங்கம் அப்படிச் செய்யவில்லை. ஜப்பான் வழங்கிய இழப்பீட்டில் பெரும் தொகையை மலாயாவில் இருந்த ரப்பர் தோட்டங்களைச் சீர் செய்யவும்; மலாயாவில் இருந்த ஈயச் சுரங்கங்களைச் செப்பனிடவும் பயன்படுத்தியது.

1951 செப்டம்பர் 8-ஆம் தேதி அமெரிக்கா, சான் பிரான்சிஸ்கோ நகரில் ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதற்குத்தான் சான் பிரான்சிஸ்கோ ஒப்பந்தம் அல்லது ஜப்பான் சமாதான ஒப்பந்தம் (Treaty of San Francisco) என்று பெயர். 48 நாடுகள் கையெழுத்து போட்டன. அந்த ஒப்பந்தத்திற்குப் பிறகு ஜப்பான் போர் இழப்பீடுகளை வழங்கத் தொடங்கியது. 


இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போடுவதற்கு மலாயா மக்களின் பிரதிநிதிகள் எவரும் அழைக்கப்படவில்லை. மலாயா காலனித்துவ ஆங்கிலேயர்களின் பிரதிநிதிகள் மட்டும் மலாயாவைப் பிரதிநிதித்துச் ‘சைன்; போட்டு வந்து விட்டார்கள்.

மலாயாவுக்கு 1967-ஆம் ஆண்டு வரையில் 2.94 பில்லியன் யென் அதாவது 90 மில்லியன் ரிங்கிட் மட்டுமே கிடைத்தது. மற்ற மற்ற நாடுகளுக்குத் தாராளமாகக் கிடைத்து இருக்கிறது.

எ.கா: சிங்கப்பூர். ஒரு குட்டி நாடு. அதற்கு 87 மில்லியன் ரிங்கிட் கிடைத்து இருக்கிறது. பர்மாவிற்கு 1500 மில்லியன் ரிங்கிட்; பிலிப்பைன்ஸிற்கு 1590 மில்லியன் ரிங்கிட்; இந்தோனேசியாவிற்கு 1910 மில்லியன் ரிங்கிட்; கொரியாவிற்கு 2160 மில்லியன் ரிங்கிட்; வியட்நாமிற்கு 420 மில்லியன் ரிங்கிட்; தாய்லாந்திற்கு 165 மில்லியன் ரிங்கிட். 


அந்த வகையில் மலாயாவுக்குத் தான் மிகக் குறைவாகக் கிடைத்து இருக்கிறது.

மலாயா மக்களின் பிரதிநிதிகள் எவரும் சான் பிரான்சிஸ்கோ மாநாட்டிற்குப் போகவில்லை. அதனால் வாலும் தெரியவில்லை. காலும் தெரியவில்லை. ஆக இழப்பீடு வழங்கப்பட்ட பின்னர் மலாயா மக்களால் கூடுதலாகக் கேட்க முடியாமல் போய் விட்டது.

நல்லவேளை. இந்தக் காலத்து அரசியல்வாதிகள் இல்லாமல் போய் விட்டார்கள். இருந்து இருந்தால் வெள்ளைக்காரர்களின் மண்டையை நல்லாவே டெட்டோல் போட்டுக் கழுவி இருப்பார்கள். ஆளாளுக்கு ஆட்டைய போட்டு அப்படியே பச்சைக் கொடியைக் காட்டி; அப்படியே பச்சைப் புனிதம் பேசி; அப்படியே நாலு பெண்டாட்டிகளுக்குப் பேரம் பேசி; ஆளாளுக்கு 25 பிள்ளைகளைப் பெற்று இருப்பார்கள்.

ஜப்பானியர்கள் மலாயாவுக்கு வழங்கிய போர் இழப்பீட்டுத் தொகை மனநிறைவு அளிப்பதாக இல்லை. அதனால் மலாயா மக்களுக்கு அப்போது இருந்தே பொதுவான இறுக்கமான மனக்கசப்புகள். ஜப்பான்காரன் எத்தனை கப்பல்களை அனுப்பினாலும் ஏற்றிச் செல்ல முடியாத அளவிற்கு மனக் கசப்புகள்.


கூட்டிக் கழித்துப் பார்த்தால், ஜப்பான்காரர்கள் மலாயா மக்களுக்கு ஒரு சிட்டிகை தான் கொடுத்து இருக்கிறார்கள். அதற்குக் காரணம் அமெரிக்கா.

அப்போதே அமெரிக்கா உலகப் போலீஸ்காரர் வேலையை ஆரம்பித்து விட்டது. அமெரிக்கா என்ன சொல்கிறதோ அதற்குத் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை இங்கிலாந்து. அந்த இங்கிலாந்திற்கு ஜால்ரா பக்க வாத்தியங்கள் மஞ்சள் கலர் ரஷ்யா; சிவப்புக் கலர் சீனா. ஆக இவர்களுக்கு அமெரிக்காதான் அசத்தல் உசுப்பல் பெரிய மண்டோர்.

ஜப்பானின் பொருளாதாரத்தைக் காக்க வேண்டும் என்று சொல்லி மலாயாவுக்குக் கிடைக்க வேண்டிய பெரிய அளவு தொகையைத் தடுத்து நிறுத்தியது. முறைப்படி மலாயாவுக்குக் கிடைத்து இருக்க வேண்டியது என்ன தெரியுங்களா?

60 மில்லியன் அமெரிக்க டாலர் கிடைத்து இருக்க வேண்டும். அதோடு 319 கப்பல்களில் இயந்திரங்கள்; உபகரணங்கள்; தளவாடங்கள் ஜப்பானில் இருந்து வந்து சேர்ந்து இருக்க வேண்டும். 60 மில்லியன் அமெரிக்க டாலர் அப்போதைய காசிற்கு ஏறக்குறைய 150 மில்லியன் ரிங்கிட். இது 1951-ஆம் ஆண்டு கணக்கு.

அதாவது ஜப்பானில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்த தளவாடப் பொருட்கள் 319 கப்பல்களில் வந்து சேர்ந்து இருக்க வேண்டும். கிடைத்து இருந்தால் மலாயாவுக்கு ஒரு பொருளாதார மலர்ச்சி கிடைத்து இருக்கலாம். ஆனால் அமெரிக்கா, கறுப்புக் கங்காணி வேலை பார்த்து மலாயாவை மொட்டை அடித்து கரும்புள்ளி செம்புள்ளி குத்தி விட்டது. 


இருந்தாலும் மலாயா பிரிட்டிஷ் அரசாங்கம் விடவில்லை. மலாயா மக்களுக்காகப் போராடி இருக்கிறது. கூடுதலாக இழப்பீடு கேட்டு இருக்கிறது. ஜப்பானில் இருந்த ஜப்பானிய சொத்துகளைப் பங்கு கேட்டு இருக்கிறது. ஜப்பானிய மத்திய வங்கியில் சேமிப்பில் வைத்து இருந்த தங்கப் பாளங்களையும் கேட்டு இருக்கிறது. ஆனால் அமெரிக்கா மறுத்து விட்டது.

’பசிபிக் பெருங்கடலில், ஹவாய் பேர்ல் துறைமுகத்தில் எங்களுக்கு ரொம்பவும் இழப்பு. தங்கப் பாளங்கள் எங்களுக்கு வேண்டும்’ என்று மலாயா மக்களுக்கு அமெரிக்கா பை பை சொல்லி விட்டது. கடைசியில் மலாயாவுக்கு ஒரே ஒரு போர்க் கப்பல் மட்டுமே கிடைத்தது. மலாயாவை ஆட்சி செய்த வெள்ளைக்காரர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

அதன் விளைவு. சயாம் பர்மா மரண இரயில் பாதை நிர்மாணிப்புச் சேவையில் பாதிக்கப்பட்ட மலாயா மக்களுக்கு, அப்போதைய காலத்தில் இழப்பீடு கொடுக்க முடியாத நிலை.

இது இப்படி இருக்க அதே 1960-ஆம் ஆண்டுகளில் ’இரத்தக் காசு’ (blood debt) வேண்டும் என்று இந்தோனேசியா, பர்மா நாடுகள் ஜப்பானை நெருக்கின. போர் இழப்பீடு வழங்கப்பட்ட பின்னர் இந்த நெருக்குதல். இந்தோனேசியா 9 பில்லியன் ரிங்கிட் இரத்தக் காசு கேட்டது. பர்மா 5 பில்லியன் ரிங்கிட் இரத்தக் காசு கேட்டது. கிடைத்தும் விட்டது. வாய் உள்ள பிள்ளை பிழைத்துக் கொள்ளும். சரி.

1957-ஆம் ஆண்டு மலாயாவுக்கு சுதந்திரம் கிடைத்தது. அந்தக் கட்டத்தில் ஜப்பானிய பிரதமர் நோபுசுகே கிஷி (Nobusuke Kishi) மலாயாவுக்கு வருகை புரிந்தார். அப்போது துங்கு அவர்கள் மலாயாவின் பிரதமர். சயாம் பர்மா மரண இரயில் பாதையைப் பற்றி பேசி கூடுதலாகப் பணம் கேட்கச் சொன்னார்கள். 


மலாயா சீனர்களின் வணிகச் சம்மேளனம் நெருக்குதல் கொடுத்தது. 50 மில்லியன் இரத்தக் காசு வேண்டும் என்று நெருக்குதல் கொடுத்தது. இருப்பினும் துங்கு அவர்கள் ஜப்பானுடன் நெருக்கமாக உறவு வைத்துக் கொள்ள விரும்பினார்.

பணத்தைக் கேட்டு வாங்குவதால் போன உயிர்கள் திரும்பி வரப் போவது இல்லை என்று சமாதானம் சொன்னார். இப்போது ஜப்பானை ’கச்சாவ்’ பண்ண வேண்டாம் என்றும் சொல்லி விட்டார். அந்தக் கட்டத்தில் ஜப்பானின் தொழிநுடபச் செயல்பாடுகள் மலாயாவுக்கு அதிகமாகத் தேவைப் பட்டன.

மலாயா மக்களின் வேதனைக் குரல் கேட்டு ஜப்பான் வருந்தியது, நல்லிணக்கத்தின் அடையாளமாக இன்னும் கொஞ்சம் கூடுதலாக இழப்பீடு கொடுக்க அதுவாகவே முன் வந்தது.

1960-ஆம் ஆண்டுகளின் நடுப்பகுதியில், மலேசியாவுக்கு 25 மில்லியன் ரிங்கிட் ரொக்கமாகக் கொடுக்க ஜப்பான் முன்வந்தது. மேலும் 25 மில்லியன் ரிங்கிட் சேவைத் துறைகளின் வழியாக வழங்கப்படும் என்றும் ஓர் உடன்படிக்கை செய்து கொண்டது.

அப்போது துங்கு அவர்கள்தான் பிரதமராக இருந்தார். இந்தப் பணப் போக்குவரத்து நல்ல முறையில் நடந்து முடிய நான்கு ஆண்டுகள் பிடித்தன. ஆக துங்கு காலத்திலேயே 50 மில்லியன் ரிங்கிட் வாங்கியாச்சு.

1970-ஆண்டுகளில் மலேசியாவில் ஜப்பானின் தொழில்துறை முதலீடுகள் துரித வளர்ச்சி அடைந்தன. அதே சமயத்தில் அவர்களின் ஆதிக்கத் தன்மையும் சுரண்டலும் கூடவே பயணித்தன. அவை மலேசிய மக்களுக்கு ஒரு கலக்கத்தை ஏற்படுத்தின. மலேசிய மக்கள் அச்சம் அடையத் தொடங்கினார்கள். பழையபடி ஜப்பானிய ஆதிக்கம் வந்து விடுமோ என்று பயந்தார்கள்.

அந்த நேரத்தில், மலேசியாவில் உள்ள ஜப்பானிய வணிகர்களும் உள்ளூர் மக்களுடன் பழகுவதில் பாரபட்சம் காட்டினார்கள். ஆங்காங்கே அவர்களின் முரட்டுத் தனமான போக்குகள். மலேசிய மக்களை தரம் குறைவாகப் பார்த்தார்கள்.

அந்த நேரத்தில் மலேசியாவில் இருந்த ஜப்பானிய வணிகர்களும் உள்ளூர் மக்களுடன் பழகுவதில் முரட்டுத் தனம் காட்டினார்கள். அவர்கள் உள்ளூர் மக்களைத் தரம் குறைவாகப் பார்ப்பது போல் தோன்றியது.

கூட்டிக் கழித்துப் பார்த்தால் ஜப்பான் மலேசியாவுக்குக் கொடுத்ததைவிட அதிகமாகவே சுரண்டிக் கொண்டு இருந்தது. இந்தக் கையில் பத்தைக் கொடுத்து அந்தக் கையில் முப்பதை வாங்கிக் கொண்டு இருந்தது.

1971-ஆம் ஆண்டு துன் ரசாக் பிரதமரானதும் இதே ஆதங்கத்தை வெளிப்படையாக்வே சொன்னார். இருந்தாலும் ஜப்பானைப் பகைத்துக் கொள்ள விரும்பவில்லை. சரி.

1960-ஆம் ஆண்டுகளின் நடுப்பகுதியில், நல்லிணக்கத்தின் அடையாளமாக இன்னும் கொஞ்சம் கூடுதலாக 25 மில்லியன் ரிங்கிட் கொடுக்க ஜப்பான் முன்வந்தது என்று சொன்னேன். அந்தப் பணத்தில் ஒரு காசுகூட சயாம் இரயில் பாதையில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்படவில்லை.

துன் மகாதீர் காலத்தில் என்ன நடந்தது என்பதைப் பின்னர் சொல்கிறேன். அதற்கு முன்னர் ஒரு சின்ன செருகல்.

1992-ஆம் ஆண்டில், நெகிரி செம்பிலானைச் சேர்ந்த சூன் கியான் செங் (Soon Kian Seng) என்பவர் 238 குடும்பங்களைப் பிரதிநிதித்து ஜப்பானிய அரசாங்கத்தின் மீது ஒரு கோரிக்கை வைத்தார். சயாம் இரயில் பாதையில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக அந்தக் கோரிக்கை.

200 மில்லியன் அமெரிக்க டாலர் (800 மில்லிய ரிங்கிட்) இழப்பீட்டை ஜப்பான் வழங்க வேண்டும்; அவர்களுக்காக மலேசியாவில் ஒரு நினைவுச் சின்னத்தைக் கட்டித் தர வேண்டும் எனும் கோரிக்கை. அந்தக் கோரிக்கை, கோலாலம்பூரில் இருந்த ஜப்பானிய தூதரகம்; ஐக்கிய நாட்டுச் சபை; ஆகிய அமைப்புகளிடம் வழங்கப் பட்டது.

ஜப்பானியத் தூதரகத்தைச் சேர்ந்த மிச்சியோ ஹரடா (Michio Harada} அந்தக் கோரிக்கையை வாங்கிக் கொண்டு தோக்கியோவிற்கு அனுப்பி வைக்கிறேன் என்று சொன்னார். அம்புட்டுத்தான். கடிதத்தைக் கொண்டு சென்ற கப்பல் கொரியாவில் மூச்சு திணறி மூழ்கி விட்டதாம். கப்பலை இன்னும் தேடிக் கொண்டு இருக்கிறார்கள்.

ஐக்கிய நாட்டுச் சபை அதற்கும் ஒரு படி மேலே ஏறிப் போய் ‘ஐயா சாமி... எங்களுக்கும் இரண்டாம் உலகப் போருக்கும் சம்பந்தமே இல்லீங்கோ… அப்படி ஒரு போர் நடக்கவே இல்லீங்கோ’ என்று இருகரம் கூப்பிக் கையை விரித்து விட்டது. அதன் பிறகுதான் முன்னாள் பேராக் மந்திரி பெசார் நிஜார் ஜமாலுடீன் வந்தார்.

1967-ஆம் ஆண்டில் ஜப்பானும் மலேசியாவும் ஒரு போர் இழப்பீட்டு ஒப்பந்தம் செய்து கொண்டன. அதில் மலேசியாவுக்கு 270 பில்லியன் ரிங்கிட் போர் நஷ்டயீடு வழங்கப் பட்டதாக 2013-ஆம் ஆண்டில் நிஜார் ஜமாலுடீன் அறிவித்தார். அன்றைக்கு அவர் மூடிய அமேசான் புகைச்சல் இன்றும் புகைகிறது. சரி.

அடுத்து ‘கிழக்கை நோக்கி’ (Look East Policy) எனும் துன் மகாதீரின் தடாலடிப் பார்வை வருகிறது. ஜப்பானைப் பாருங்கள். ஜப்பானை நேசியுங்கள். ஜப்பானைக் கட்டிப் பிடியுங்கள் எனும் பிரசாரம். அதன் பாவனையில் ஜப்பானின் நிதியுதவிகள் கிடைத்தன.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
09.07.2021

(பின்குறிப்பு)

இந்தக் கட்டுரையில் உள்ள புள்ளி விவரங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் கட்டுரையாளரின் பெயரைக் குறிப்பிடுங்கள். அதுதான் நீங்கள் காட்டும் ஒரு நன்றிக்கடன். மிகவும் சிரமப்பட்டு எழுதப்பட்ட கட்டுரை.

சான்றுகள்:

1. PRESS RELEASE UNITED NATIONS COMPENSATION COMMISSION PAYS OUT US$270 MILLION" (PDF). United Nations Compensation Commission. 23 July 2019.

2. RESOLUTION 687 (1991)" (PDF). U.S. Department of the Treasury. 9 April 1991. Archived (PDF)

3. Japan's Records on War Reparations, The Association for Advancement of Unbiased View of History

4. War Responsibility, Postwar Compensation, and Peace Movements and Education in Japan

பின்னூட்டங்கள்

Sathya Raman: வணக்கம் சார். இரண்டு கட்டுரைகளுமே பல ஆதாரங்களோடு சிரமப்பட்டு எழுதியவை என்று குறிப்பிட்டு இருந்தது எவ்வளவு உண்மை என்று இந்தக் கட்டுரையைப் படித்து முடித்த போது உணர முடிந்தது.

சயாம், பர்மா ரயில்வே பாதை நிர்மாணிப்பில் பாதிக்கப் பட்டவர்களுக்காக எந்தவொரு இழப்பீடும் கொடுக்காமல் போனது கொடூரத்தின் உச்சம்.

இந்த நிர்மாணிப்புப் பணியில் கலந்து பாதிக்கப்பட்ட மற்ற நாடுகள் இழப்பீட்டை பெற்ற போது மலேசிய ஊழியர்களுக்கு மட்டும் அந்த உதவிகளை உதறி தள்ளிய புண்ணியவான்கள் இந்த நாட்டு அன்றைய அரசியல் வாதிகளாகத்தான் இருக்கும்.

மற்ற நாடுகள் போராடி இழப்பீடுகளைக் கோரி அவற்றைப் பெற்றிருப்பதை தெரிந்தும் மலேசியா அந்த உரிமையை விட்டுக் கொடுத்தது கண்டிக்கத் தக்கது.

அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரிட்டிஷ் ஆகிய நாடுகளின் குறுக்கீடு இருந்த போது இந்த நாட்டு ஊழியர்களின் உதிரம் சிந்திய உழைப்பிற்காக அன்றைய அதிகாரத்தில் உள்ளவர்கள் அக்கறையோடு இழப்பீடுகளைப் பெற்றுக் கொடுத்திருக்க வேண்டுமே ஒழிய வேஷம் போட்டு இருக்கக் கூடாது.

அன்றே இந்த அதி மேதாவிகளின் பிரித்தாளும் போக்கும், தமிழர்களுக்கு எதிராக திட்டமிட்டு செய்த சதியும் புரியவே செய்கிறது. அன்றே நம்மைக் கழுதைகளாக எண்ணிய களவாணிப் பயல்களை நினைக்கையில் கோபம் கோபுர உச்சிக்கு செல்கிறது.

ஆக, நமக்கு எதிரான சுரண்டல்களை அறுபதிலேயே ஆரம்பித்து விட்டார்கள் போலிருக்கிறது. வேதனை மிகுந்த பதிவுகள் சார். பிரிட்டிஷ்காரர்கள் மலேசியாவில் ஆண்ட போது ஜப்பான்காரர்களின் ஆதிக்கம் என்பது எனக்கு புது தகவல்.

நீங்கள் இதற்கு முந்தைய பதிவில் எழுதியதைப் போல் நம்மை வந்தேறிகளாக அடையாளப் படுத்திய முதல் பெருமை துங்குதான் என்பது இப்போது நிதானமாக, நூதனமாகப் புரிகிறது.

தண்ணீர் வெந்நீரானாலும் மாறவே மாறாது. அப்படித் தான் இந்த நன்றி கெட்ட நாடும். இதயத்தை வெம்ப வைத்த பதிவுகள், மனதையும் வியர்க்கவே வைத்தது சார். எல்லா கொம்பன்களும் சுயநலவாதிகளாகவே அன்றே அவதரித்து விட்டார்களே என்பதும் வேதனைக்குரியது

Muthukrishnan Ipoh >>> Sathya Raman
மிக நீளமான பதிவு. சில நாட்களாக அன்பர்களின் பின்னூட்டங்களுக்குப் பதில் தரவில்லை. நேரப் பற்றாக்குறைதான். பின்னர் பதில் தர முயற்சி செய்கிறேன். வலைத்தளத்தில் தங்களின் கருத்துகள் கண்டிப்பாக இடம் பெறும்.

Parthiban Apparu: துரோகம்... இந்திய மக்களுக்கு விளைத்த துரோகம் நமக்காக யார் வாதாடுவது? வருத்தம்…

Bobby Sinthuja: ஐயா அருமையான தகவல்...

Kumar Murugiah Kumar's: பதிவு சிறப்பு ஐயா, வாழ்த்துகள் ஐயா!

Banu Linda: புதைந்து போன உண்மைகளைத் தோண்டி எடுத்து மக்களின் முன் வைக்கிறீர்கள்... நன்றி ஐயா..



 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக