31 ஆகஸ்ட் 2021

மெர்டேகா 2021 நினைவலைகள் - கிள்ளான் தமிழர்கள் (1940)

தமிழ் மலர் - 31.08.2021

இனம், மொழி, சமயம், சடங்கு, சம்பிரதாயம் எதையும் பார்க்காமல் மக்களுக்காகப் போராடியத் தமிழர்கள் அப்போது இருந்தார்கள். இப்போதும் இருக்கிறார்கள். இல்லை என்று சொல்லவில்லை. ஒரு சின்னத் திருத்தம்.

அப்போது இருந்தவர்கள் நாட்டு மக்களுக்காக உழைத்தார்கள். இப்போது உள்ளவர்களில் சிலரும் பலரும் வீட்டுக் கடன்களுக்காக உழைக்கிறார்கள். மன்னிக்கவும்.


பெரிய வேறுபாடு ஒன்றும் இல்லை. இரண்டுமே சேவை மனப்பான்மைதான். ஒன்று நாட்டு மக்கள். இன்னொன்று மனைவி மக்கள்.

ஆக நாட்டைப் பார்ப்பவன் வீட்டைப் பார்ப்பது இல்லை. வீட்டைப் பார்ப்பவன் நாட்டைப் பார்ப்பது  இல்லை. சிலருக்கு வருத்தம் ஏற்படலாம். கவலை இல்லை. எரிமலைகள் நேரம் காலம் பார்த்துச் சீறுவது இல்லை.

விசயத்திற்கு வருகிறேன். அப்போது நல்ல நல்ல மனிதர்கள் வாழ்ந்தார்கள். நம்முடைய நெஞ்சங்களில் இப்போதும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

அவர்கள் எல்லாம் மனித உரிமைகளுக்காகத் தங்களின் உயிர்களைத் தியாகம் செய்தவர்கள். சுருங்கச் சொன்னால் அவதாரப் புருசர்கள்.

அப்படிப்பட்ட மனிதர்கள் சிலர் வரலாற்றில் இருந்து மறைந்து விட்டார்கள். ஒரு சிலர் அரசியல் சுயநலவாதிகளால் மறைக்கப்பட்டு விட்டார்கள். அதனால் இப்போதைய இளைஞர்களும் அவர்களை மறந்தும் விட்டார்கள். 


ஆனாலும் அவர்களை மறக்கலாமா. சொல்லுங்கள். அவர்களை நாம் மறக்கக் கூடாது. மறக்கவே கூடாது. அவர்களைப் பற்றிய சாசனங்களை வருங்காலச் சந்ததியினருக்காக விட்டுச் செல்ல வேண்டும். பெரிய புண்ணியம்.

ஆகஸ்டு 31-ஆம் தேதி. மலேசிய நாட்டின் விடுதலை நாள். மலேசிய மக்களின் நினைவு நாள். அந்த நாளில் மறக்கப்பட்ட மலாயாத் தமிழர்களை நினைவு கூருவோம். அதுவே அவர்களுக்கு நாம் செய்யும் நினைவார்ந்த கடமையாக நினைத்துப் பெருமை கொள்வோம்.

நமக்கு தெரிந்த சுதந்திரம் எது என்றால், அது நம்முடைய மலேசியத் தந்தை துங்கு. அடுத்து நம் மலேசியத் தமிழர்களின் தந்தை துன் சம்பந்தன். மெர்டேகா என்று சொன்னதுமே இவர்கள் இருவர் மட்டுமே நமக்கு நன்றாகத் தெரிகின்றார்கள்.

ஆனால் இவர்களுக்கு முன்னதாகவே மலாயாவில் பிரிட்டிஷ் காலனித்துவத்தை எதிர்த்தவர்கள் இருக்கிறார்கள். போராட்டங்கள் செய்தவர்கள் இருக்கிறார்கள்.


மோட் கூலாவ், தோக்கோ அங்கூட் போன்றவர்கள்; ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடியவர்கள். வெற்றிப் பெற்றார்களா இல்லையா என்பதைப் பற்றி கடந்த காலம் பதில் சொல்லும்.

ஆனால் அவர்களுடைய பெயர்கள் இன்றும் வெளிச்சமாய் பிரகாசிக்கின்றன. வரலாற்று ஏடுகளில் புகழராம் செய்யப் படுகிறார்கள். வாழ்த்துவோம்.

அதே சமயத்தில் மறக்கப்பட்ட தமிழர்கள் பலர் உள்ளனர். கூலிக்கு மாரடிக்கும் கம்பத்து மீன்களையும் வாழ வைக்க தங்களையே அர்ப்பணித்தவர்களை மறக்கலாமா?

ஒரு பட்டியலைத் தருகிறேன். இவர்களில் எத்தனைப் பேர் உங்களுக்குத் தெரியும். நினைவு படுத்திப் பாருங்கள்.

மலாக்கா ராஜா முதலியார்,
தம்புசாமி பிள்ளை,
தம்பிப் பிள்ளை,
காசிப்பிள்ளை,
டாக்டர் லட்சுமியா,
சிபில் கார்த்திகேசு,
பாஸ்தியான் பிள்ளை,
பி.சி. சேகர்,
மேரி சாந்தி தைரியம்,
பி.கே.எம்.மேனன்,
சுவாமி சத்தியானந்தா,
க. குருபாதம்,
ஜும்மாபாய்,
அப்புராமன்,
ஜானகி ஆதிநாகப்பன்,
ஜான் திவி,
தேவாசர்,
தேவகி கிருஷ்ணன்,
சத்யாவதி நாயுடு,
ஆர். ரமணி,
டான்ஸ்ரீ கே. ஆர். சோமசுந்தரம்,
ராசம்மா பூபாலன்,
பரம் குமாரசாமி,
அன்னை மங்களம்,
மகாதேவ் சங்கர்,
கா. அண்ணாமலை,
தனபாலசிங்கம்,
மணி ஜெகதீசன்,
ராஜாமணி,
ராம ஐயர்,
கெங்காதரன் நாயர்,
ஜி. சூசை,
புஷ்பா நாராயணன்,
கே.எஸ். மணியம்,
சங்கீதா கிருஷ்ணசாமி,
முத்தம்மாள் பழனிச்சாமி,
முர்பி பாக்கியம்,
பிரியா விஷ்வலிங்கம்,
ராணி மாணிக்கா,
மணியம் மூர்த்தி,
மோகன்தாஸ்,
மகேந்திரன்,
ஜோசப் ஹரிதாஸ் தம்பு,
டேவிட் ஆறுமுகம்,
அந்தோனி செல்வநாயம்.

பட்டியல் இன்னும் தொடர்கிறது. தொடர்ந்தால் ஏடும் கொள்ளாது. வீடும் கொள்ளாது.

அந்த வகையில் மலாயாத் தொழிலாளர்களின் நலன்களுக்காகப் போராடி உயிர்விட்ட இரு தமிழர்கள் இருக்கிறார்கள். இருவருமே நம் மனதை விட்டு நீங்காத வரலாற்றுக் காவியங்கள்.

ஒருவர் மலாயா கணபதி. இன்னொருவர் வீரசேனன். இவர்களுடைய பெயர்கள் விளங்க வேண்டும். வெளிச்சத்திற்கு வர வேண்டும். அதுதான் நம்முடைய ஆசை ஆதங்கம் எல்லாமே.

தொழிலாளர்ச் சமூகம் வஞ்சிக்கப் படக்கூடாது என்பதுதான் மலாயா கணபதி - வீரசேனன் இருவரின் தலையாய நோக்கமாக இருந்தது. அதற்காக அவர்களுக்கு கிடைத்த பரிசு என்ன தெரியுமா.

ஒருவருக்குத் தூக்குக் கயிறு. மற்றவருக்குத் துப்பாக்கிக் குண்டுகள். இந்தக் கட்டுரையில் மலாயா கணபதி அவர்களை அறிமுகம் செய்கிறேன். இவர்களுடன் போராடிய கிள்ளான் தமிழர்களையும் நினைவில் கொள்வோம்.

மலாயா கணபதி என்பவர் மலாயா கண்டெடுத்த மாபெரும் புரட்சித் தலைவர்களில் ஒருவர். வரலாற்றுச் சுவடுகளில் மறைந்தும் மறையாமல் வாழ்ந்து வரும் ஒரு மாமனிதர்.

அன்றைய மலாயாவில் துகில் உரியப்பட்ட தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் போராடியவர். மூன்று இனங்களுக்காக இரத்தம் சிந்திய ஒரு சமூக நீதியாளர். நல்ல ஒரு சமூகச் சிந்தனையாளர்.

இந்திய தேசிய இராணுவத்தில் துப்பாக்கிகளைத் தூக்கியவர். ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு எதிர்த்துப் போராட்டம் செய்தவர். முப்பது வயதிலேயே தூக்குமேடையை எட்டிப் பார்த்தவர். அவர்தான் எஸ். ஏ. கணபதி என்கிற மலாயா கணபதி. இன்றைய இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு வரலாற்றுச் சகாப்தம்.

தமிழ்நாடு, தஞ்சாவூர், தம்பிக்கோட்டை கிராமத்தில் 1912-ஆம் ஆண்டு பிறந்தவர். தந்தையாரின் பெயர் ஆறுமுகம். தாயாரின் பெயர் வைரம்மாள்.

கணபதிக்குப் பத்து வயதாக இருக்கும் போது சிங்கப்பூருக்கு வந்தார். தொடக்கக் கல்வியைச் சிங்கப்பூரில் பெற்றார். இளம் வயதிலேயே சமூகச் சேவைகளில் தீவிரமாக  ஈடுபாடு காட்டினார்.

ஜப்பானியர் காலம். இந்திய தேசிய விடுதலைக்காக நேதாஜி மலாயாவுக்கு வந்தார். இந்தியத் தேசிய இராணுவத்தை அமைத்தார். அப்போது சிங்கப்பூரில் ஆசாத் ஹிந்த் சர்க்கார் எனும் தற்காலிகச் சுதந்திர அரசாங்கம் அமைக்கப் பட்டது.

அந்த அரசாங்கத்தை இந்தியத் தேசிய இராணுவத்தினர் நடத்தி வந்தனர். அதில் கணபதி ஒரு பயிற்றுநராகச் சேவை செய்தார்.

இந்தச் சமயத்தில் தாப்பா, கம்பார் பகுதிகளில் ஆர்.ஜி.பாலன் என்பவர் பொதுவுடைமைக் கொள்கையின் தீவிரமான ஆதரவாளர். 1948 மே மாதம் 30-ஆம் தேதி பிடிபட்டு ஈப்போ சிறையில் அடைக்கப் பட்டார்.

சிறையில் இருக்கும் போதே மலாயா கம்யூனிஸ்டுக் கட்சி அவரைக் கட்சியின் துணைத் தலைவராகத் தேர்வு செய்தது. இது பலருக்குத் தெரியாத உண்மை. அப்போது சின் பெங் தலைமைச் செயலாளராக இருந்தார். சி.டி.அப்துல்லா என்பவர் மலாய்ச் சமூகப் பிரிவின் தலைவராக இருந்தார்.

மலாயா கம்யூனிஸ்டு கட்சியின் ஆகப் பெரிய பதவியை வகித்த ஒரே தமிழர் ஆர்.ஜி.பாலன் அவர்களே. கணபதி இரண்டாம் நிலையில் இருந்தார்.

மலாயா கம்யூனிஸ்டுக் கட்சியின் இந்தியப் பிரிவில் மேலும் இருவர் இருந்தனர். ஒருவர் சி.வி.குப்புசாமி. இவர் மலாயா கம்யூனிஸ்டுக் கட்சியின் தகவல் பிரசாரப் பிரிவுத் தலைவர். இன்னொருவர் குரு தேவன். இவர் கம்யூனிஸ்டுக் கட்சியின் இரகசியப் புலனாய்வுத் துறையின் தலைவர்.

மலாயாத் தொழிற்சங்கங்களின் பின்புலத்தைக் கொஞ்சம் பார்ப்பது நல்லது என்று நினைக்கிறேன். 1900-களில் மலாயா ரப்பர் தோட்டங்களில் வேலை செய்து வந்த தொழிலாளர்களில் 92 விழுக்காட்டினர் தென் இந்தியாவில் இருந்து வந்தவர்கள்.

தமிழர்கள், தெலுங்கர்கள், மலையாளிகள், மலபாரிகள் எல்லாம் ஒரே கப்பலில் வந்தவர்கள் தான். மச்சான் மாப்பிளே என்று ஒரே பாயில் படுத்துப் புரண்டவர்கள் தான்.

பினாங்கு புறமலையில் கரும்பை வெட்டி ஜுஸ் செய்து குடித்தவர்கள் தான். ரசுலா கப்பலில் ரசகுல்லா சாப்பிட்டவர்கள் தான். அவர்களில் சிலர் தோட்டத்து டஸ்மாக் கடைகளில் காஞ்சிப் போன கருவாட்டைச் சுட்டுத் தின்றவர்கள் தான்.

ஆனால் இப்போது என்ன. நான் உளுந்து நீ உளுத்தம் பருப்பு என்று சமூக வேறுபாடுகலுக்குச் சாயம் பூசிச் சந்தோஷப் படுகிறார்கள். என்ன செய்வது. காலம் செய்கிற கொடுமை. வேதனையாக இருக்கிறது. சரி.

அந்தக் கட்டத்தில் மலாயா கம்யூனிஸ்டுக் கட்சி தீவிரமாகச் செயல்பட்டு வந்தது. அந்தக் கட்சி “முன்னணி” எனும் தமிழ்த் தாளிகையை வெளியிட்டு வந்தது.

அதன் ஆசிரியராகவும் மலாயா கணபதி பணி புரிந்தார். இந்தச் சமயத்தில்தான் அகில மலாயா பொதுத் தொழிலாளர் சங்கத்தின் தலைவராக மலாயா கணபதி தேர்ந்தெடுக்கப் பட்டார்.

இந்தியப் பிரதமர் நேருவின் தலைமையில் ஆசிய நட்புறவு மாநாடு புதுடில்லியில் நடைபெற்றது. மலாயாப் பேராளர்களில் ஒருவராக மலாயா கணபதி கலந்து கொண்டார். அதன் பின்னர் 1948-ஆம் ஆண்டு மலாயா விடுதலைப் படையிலும் இணைந்தார்.

மலாயாத் தொழிலாளர்களின் உரிமைகள்; மலாயா மக்களுக்கு விடுதலை; இந்த இரண்டு விசயங்களுக்காகத் தான் அகில மலாயா தொழிற்சங்கச் சம்மேளனம் பெரும் போராட்டங்களை நடத்தியது. அப்போது மலாயா கணபதி அந்தச் சம்மேளனத்தின் தலைவராக இருந்தார்.

1928-ஆம் ஆண்டு முதல் 1937-ஆம் ஆண்டு வரை ரப்பர் தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக 50 காசு தரப் பட்டது. பின்னர் அந்தச் சம்பளம் 40 காசாகக் குறைக்கப் பட்டது. பிரச்னைகள் ஏற்பட்டன. அதனால் பழைய 50 காசு சம்பளத்தைக் கொடுக்க தோட்ட நிர்வாகங்கள் ஒப்புக் கொண்டன.

சீனத் தொழிலாளர்களுக்கு மட்டும் நாள் சம்பளமாக 60 காசில் இருந்து 70 காசு. அந்த வகையில் சீனர்களுக்கும் இந்தியர்களுக்கும் சம்பளத்தில் பாரபட்சம். இந்தியர்களுக்கு 40 காசு சம்பளம் என்றால் சீனர்களுக்கு 60 காசு சம்பளம். ஆனாலும் ஒரே மாதிரியான வேலை.

மஞ்சத் தோல் ஒசத்தியா. கறுப்புத் தோல் ஒசத்தியா. பருப்பு கலரும் மஞ்சள். சாம்பார் கலரும் மஞ்சள். அப்புறம் என்ன. பருப்பா? சாம்பாரா? போராட்டம் தொடங்கியது.

இதைக் கண்டித்து கிள்ளானில் வாழ்ந்த இந்தியர்கள் கிள்ளான் வட்டார இந்தியத் தொழிற்சங்கத்தை உருவாக்கினார்கள். இது 1940-இல் நடந்தது. மலாயாவின் முதல் இந்தியத் தொழிற்சங்கம்.

அதற்கு முழு ஆதரவாளராக விளங்கியவர் ஆர். எச். நாதன். இவர் 1938-இல் ’தமிழ் நேசன்’ நாளிதழின் ஆசிரியர்ப் பகுதியில் பணிபுரிந்தவர்.

அடுத்து கிள்ளான் இந்தியத் தொழிலாளர்கள் களம் இறங்கினார்கள். 10 காசு சம்பள உயர்வு கேட்டுப் போராட்டம். அப்புறம் என்ன. தோட்ட நிர்வாகங்கள் சும்மா இருக்குமா. தொழிலாளர்களுக்கு எதிராகக் கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்தன.

முதலாளியின் அனுமதி இல்லாமல் தொழிலாளர்களின் நண்பர்கள், உறவினர்கள் யாரும் தோட்டத்திற்குள் வரக்கூடாது. நிர்வாகி கிராணிகளுக்கு முன்னால் தொழிலாளர்கள் சைக்கிளில் போகக் கூடாது. அப்படியே போனாலும் அவர்களைப் பார்த்ததும் கீழே இறங்கி நடக்க வேண்டும்.

கறுப்புக் கங்காணிகளின் அட்டகாசமும் கொஞ்ச நஞ்சம் அல்ல. அடிமைத் தனமான கட்டுப்பாடுகள். ஆக இந்த மாதிரியான கட்டுப்பாடுகளைத் தளர்த்த வேண்டும். சம்பளத்தில் 10 காசு உயர்த்த வேண்டும் என்று கிள்ளான் இந்தியத் தொழிற்சங்கம் முழுமூச்சாகப் போராட்டத்தில் இறங்கியது.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
31.08.2021

சான்றுகள்:

1.  Di sebalik tabir’ sejarah politik Malaysia 1945-1957 (Penerbit USM) - by Azmi Arifin, Abdul Rahman Haji Ismail

2.  From Social Reformist to Independence Fighter - http://sahabatrakyatmy.blogspot.com/2016/03/sa-ganapathy-from-social-reformist-to.html -

3.  A Merdeka salute to martyr S.A. Ganapathy –
http://jameswongwingon-online.blogspot.com/2006/08/merdeka-salute-to-martyr-sa-ganapathy.html

 

28 ஆகஸ்ட் 2021

தாலிபான் ஆட்சியில் தடுமாறும் பெண் உரிமைகள்

தமிழ் மலர் - 28.08.2021

1996-ஆம் ஆண்டு, ஆப்கானிஸ்தானில் முதன்முதலாக தாலிபான்கள் ஆட்சிக்கு வந்தார்கள். அவர்கள் என்ன செய்வார்கள்; ஏது செய்வார்கள் என்று எவருக்குமே தெரியாது. அவர்களைக் கொண்டு வந்த அமெரிக்காவிற்கும் தெரியாது.

கடைசியில் பிளேட்டைத் திருப்பிப் போடுவார்கள் என்று அமெரிக்காவும் எதிர்பார்க்கவில்லை. ஆப்கானிஸ்தானும் எதிர்பார்க்கவில்லை. கணிப்பு வேறு. நகர்வு வேறு. நினைத்தது ஒன்று. நடந்தது ஒன்று.


தாலிபான்கள் ஆட்சிக்கு வந்ததும் அமெரிக்கா சொன்ன முதல் வார்த்தை ‘நல்ல பிள்ளையாக நடந்து கொள்ளுங்கள். நல்ல பேர் எடுங்கள். ரஷ்யாவை விரட்டி விட்டு உங்களைக் கொண்டு வந்து இருக்கிறோம். எங்களுக்கு விசுவாசமாக இருங்கள்’. இப்படிச் சொல்லித்தான் தாலிபான்களை அமெரிக்கா வளர்த்து விட்டது. ஆட்சியில் உட்கார வைத்தது.

தாலிபான்கள் ஆட்சிக்கு வந்ததும் கடுமையான சமயச் சட்டங்களை அமல்படுத்தினார்கள். தீவிரமான சமயப் பற்றை அமல் படுத்தினார்கள். ஒரு வகையில் அது அமெரிக்காவிற்குப் பிடிக்கவில்லை.

’நாட்டைப் பொருளாதாரத் துறையில் முன்னேற்றுங்கள் என்று சொல்லித்தான் உங்களை ஆட்சிக்குக் கொண்டு வந்தோம். ஆனால் நீங்கள் என்னடா என்றால் வேறு துறையை வளர்ப்பதில் தான் முனைப்பாக இருக்கிறீர்கள்’ என்று அமெரிக்கா கொஞ்சமாய்க் கோபித்துக் கொண்டது.

தாலிபான்களை ஆட்சியில் அமர்த்துவதற்கு பல கோடி கோடி டாலர்களை அமெரிக்கா செல்வு செய்து விட்டது. நவீன ஆயுதங்களைக் கொடுத்து; நன்றாகப் பயிற்சிகளைக் கொடுத்து; நன்றாகப் பழக்கியும் விட்டது. இருந்தாலும் போட்ட காசு திரும்பி வர வேண்டாமா. அதனால் செல்லமாய்க் கடிந்து கொள்வதைத் தவிர வேறுவழி தெரியவில்லை.


இப்போது தாலிபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்து உள்ளார்கள். அப்போதும் அதே பல்லவி. இப்போதும் அதே சரணங்கள் தான். அப்போது பெண்கள் கல்வி கற்க அனுமதி மறுக்கப்பட்டது. இப்போதும் மறுக்கப் படுகிறது.

பெண்களுக்கான பள்ளிகள் மூடப்பட்டன. பெண்கள் வேலைக்குச் செல்வதற்கு தடைகள் விதிக்கப்பட்டன. அப்போதும் அதுவே. இப்போதும் அதுவே.

பெண் குழந்தைகளுக்கு எட்டு வயது ஆகிவிட்டால், அதன்பிறகு சமயக் கல்வியைத் தவிர பொதுக் கல்விக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. பெண்கள் கல்வி கற்பதற்கே தடை என்றால் வேலை செய்வது எல்லாம் எப்படி?

(Ban on women studying at schools, universities or any other educational institution. Taliban have converted girls' schools into religious seminaries.)

முன்பு காலத்திய தாலிபான் ஆட்சியில் ஆண்கள் வேலை செய்யும் இடத்தில் பெண்கள் வேலை செய்யக் கூடாது. அப்போது அந்த மாதிரி ஒரு தடை. இப்போது பெண்கள் வேலைக்குப் போவதற்கும் தடை. ஆக பெண்கள் வேலை செய்வது என்பது கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாகி விட்டது.


முந்தைய ஆட்சியில், 1996 செப்டம்பர் 30-ஆம் தேதி, தலிபான்கள் அனைத்துப் பெண்களுக்கும் வேலைக்குச் செல்ல தடை விதித்தனர்.

அப்போது அரசு ஊழியர்களில் 25 விழுக்காட்டினர் பெண்கள் ஆகும். அந்த வகையில் பல்லாயிரக் கணக்கான பெண்கள் வேலை இல்லாமல் பாதிக்கப் பட்டனர்.

(Complete ban on women's work outside the home, which also applies to female teachers, engineers and most professionals. Complete ban on women's activity outside the home unless accompanied by a mahram (close male relative such as a father, brother or husband.)

(http://www.rawa.org/rules.htm - Some of the restrictions imposed by Taliban on women in Afghanistan)

ஆண் கடைக்காரர்களுடன் பெண்கள் பழகுவதற்கு தடை விதிக்கப் படுகிறது.

(Ban on women dealing with male shopkeepers.)

பெண்களின் கல்விக்குத் தடை விதிக்கப் படுவதால் பள்ளியில் பயின்ற பெண்பிள்ளைகளுக்கு மட்டும் பாதிப்பு இல்லை. அனைத்துப் பெண்கள் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களும் பெண்களாக இருந்ததால், அவர்களுக்கும் வேலை இழப்புகள்.

1996-ஆம் ஆண்டில் தாலிபான்கள் காபூல் நகரத்தை கைப்பற்றியதும், பெண் குழந்தைகள் பயிலும் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன.

அதன் விளைவாக, அந்தப் பள்ளிகளை நம்பி வாழ்ந்த ஆயிரக் கணக்கான குடும்பங்கள் காபூலில் இருந்து பாகிஸ்தானுக்குத் தப்பிச் சென்றன. பெண் ஆசிரியர்களின் குடும்பங்கள் தான் ஏராளம்.

இப்போது 2021-ஆம் ஆண்டு தாலிபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்து உள்ளனர். பழைய பாவனையில் எது நடந்துவிடக் கூடாது என்று நினைத்தார்களோ அதுவே நடந்தும் வருகிறது.

இதில் கருத்துச் சொல்ல நமக்குத் தகுதி இல்லை. அவர்களின் ஆட்சி. அவர்களின் அதிகாரம். அவர்களின் அரசு கொள்கைகள்.

இந்தப் பக்கம் மட்டும் என்னவாம். யார் யாரோ வருகிறார்கள். யார் யாரோ போகிறார்கள். என்னதான் நடக்கிறது என்று ஒன்றுமே புரியவில்லை. நம்ப வீட்டையே சுத்தம் பார்க்க முடியவில்லை. இதில் பக்கத்து வீட்டுச் சுத்தம் பற்றி பேசுவதில் என்னங்க நியாயம் இருக்கிறது. ஆனால் பெண்களின் அடிப்படை உரிமைகளில் துண்டு விழும் போது தான் பிரச்சினையே தோன்றுகிறது.

இப்போதைய தாலிபன்களின் ஆட்சியில் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும், அடிப்படையிலான உரிமைகளில் பாதிப்புகள் ஏற்படும் போது அதிகமாகவே கலக்கம்.

பெண்களுக்கு என்று தாலிபன்கள் வகுத்து வைத்து இருக்கும் சட்ட விதிமுறைகள், இந்த நவீனக் காலத்தில் கிரகித்துக் கொள்ளச் சிரமமாக உள்ளது. அவர்களின் சமய நம்பிக்கை ஆப்கானிஸ்தானிய பஸ்தூன் பூர்வீக மக்களின் சமய நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை ஆகும்.

தாலிபான்கள் இப்போது கடைப்பிடிக்கும் பெண்களுக்கான விதி முறைகள் 1992-ஆம் ஆண்டிலேயே நடைமுறைக்கு வந்து விட்டன. அந்த விதி முறைகள் ரஷ்யாவிற்கு எதிர்த்துப் போராடிய ரப்பானி - மசூத் அரசாங்கத்தால் வகுக்கப்பட்டவை ஆகும்.

தாலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு அதே விதி முறைகள் மறுபடியும் நடைமுறைக்கு கொண்டு வரப் பட்டன. அந்தச் சட்டங்களில் ஒரு சில சட்டங்கள் என்ன சொல்கின்றன என்று பார்ப்போம்.

அனைத்துலக ஊடகங்களின் வெளிவந்த தகவல்களின் சான்றுகளைக் கொண்டு இந்தக் கட்டுரை எழுதப் படுகிறது. மற்றபடி சொந்தக் கருத்துகள் எதுவும் இல்லை.

ஆப்கானிஸ்தானியப் பெண்கள் பொதுவில் நடமாடும் போது எல்லா நேரங்களிலும் கட்டாயமாகப் பர்தா (burqa) அணிய வேண்டும்.

’ஒரு பெண்ணுக்குச் சொந்தம் இல்லாத ஆண்கள், அந்தப் பெண்ணின் முகத்தைப் பார்க்கும் போது தீய எண்ணங்களுக்கு வழி வகுக்கலாம்’ என்று காரணம் சொல்லப் படுகிறது.

(Gohari, M. J. (1999). "Women and the Taliban Rule". The Taliban: Ascent to Power. Karachi: Oxford University Press. pp. 108–110)

பெண்கள் குதிக்கால் சப்பாத்து (high-heeled shoes) அணியக் கூடாது. நடக்கும் போது சப்பாத்தில் இருந்து வரும் சத்தம் ஆண்களின் கவனத்தைச் சிதறடிக்கலாம் என்று காரணம் சொல்லப் படுகிறது.

கணுக்கால் மூடப் படாமல் உடை அணிந்தால் பொதுவில் கசையடி கொடுக்கப்படும்.

(Whipping of women in public for having non-covered ankles. Ban on women wearing high heel shoes, which would produce sound while walking. A man must not hear a woman's footsteps.)

பொதுவான இடங்களில் பெண்கள் சத்தமாகப் பேசக் கூடாது. அந்நியர்கள் பெண்களின் குரலைக் கேட்கக் கூடாது. அதற்காக இந்த ஏற்பாடு என்று தாலிபான்கள் சொல்கின்றனர்.

ஒரு பெண் குழந்தைக்கு எட்டு வயது ஆகிவிட்டால், அவளுடைய நெருங்கிய இரத்த உறவு தவிர, வேறு எந்த ஓர் ஆண்களுடன் நேரடித் தொடர்பில் இருக்கக் கூடாது. இந்த விதிமுறையை இப்போது கொண்டு வந்து இருக்கிறார்கள்.

(Griffin, Michael (2001). Reaping the Whirlwind: The Taliban movement in Afghanistan. London: Pluto Press. pp. 6–11, 159–165.)

பெண்கள் தங்கள் தந்தை, சகோதரன் அல்லது கணவன் எனும் ஆண் துணையுடன் தான் வெளியில் செல்ல வேண்டும். தனி ஆளாகச் செல்ல முடியாது.

ஒரு வகையில் பார்த்தால் பெண்கள் வீட்டுக் கைதிகளாக வாழ வேண்டிய நிலை. ஒரு முறை ஓர் ஆப்கானியப் பெண்மணி தெருவில் தனியாக நடந்ததற்காகத் தலிபான்களால் கடுமையாகத் தாக்கப் பட்டார்.

அப்போது அந்தப் பெண் சொன்னது: ’என் தந்தை போரில் கொல்லப் பட்டார். எனக்கு கணவர் இல்லை. சகோதரர் இல்லை. மகன் இல்லை. இந்த நிலைமையில் நான் தனியாக வெளியே செல்ல முடியா விட்டால், நான் எப்படித்தான் வாழ்வது?’

பெண்கள் புர்கா அணியாமல் வெளியே போகக் கூடாது. அப்படி வெளியே  போவதாக இருந்தால் இரத்த உறவு கொண்ட ஆண்களின் துணையுடன்தான் சாலைகளில் நடக்க வேண்டும்.

ஒரு வீட்டில் தரைத் தளம் அல்லது முதல் தளத்தில் குடியிருப்பவர்கள் தங்கள் வீட்டின் சன்னல்களைத் திரைத் துணிகள் கொண்டு மூடி வைக்க வேண்டும்.
கண்ணாடி ஜன்னல்களாக இருந்தால் சாயம் அடித்து மறைக்க வேண்டும்.
வெளியில் உள்ளவர்கள் பார்த்தால் அறைக்குள் நடமாடும் பெண்களின் உருவங்கள் தெரியாமல் இருக்க வேண்டும்.

(Compulsory painting of all windows, so women can not be seen from outside their homes.)

பெண்களை வைத்துப் புகைப்படம் எடுக்கக் கூடாது. செய்தித் தாள்கள், புத்தகங்களில் பெண்களின் படங்களைக் காட்சிப் படுத்தக் கூடாது.

(Ban on women's pictures printed in newspapers and books, or hung on the walls of houses and shops. Photographing, filming and displaying pictures of females in newspapers, books, shops or the home was banned.)

நாடு முழுவதிலும் இருக்கும் அழகு நிலையங்களைத் தாலிபான்கள் மூடி விட்டார்கள். நெயில் பாலிஷ் என்று சொல்லப்படும் நகப்பூச்சு செய்து கொள்ள பெண்களுக்குத் தடை விதிக்கப் படுகிறது.

(Ban on the use of cosmetics. Many women with painted nails have had fingers cut off.)

கடைகளிலும் சரி; வீடுகளிலும் சரி; பெண்களைப் படம் எடுப்பதற்கும்; அந்தப் படங்களைக் காட்சிப் படுத்துவதற்கும் தடை செய்யப் படுகிறது. கடைகளில் பெண்களின் புகைப்படங்கள் அறவே இருக்கக் கூடாது.

(Latifa (2001). My Forbidden Face: Growing up under the Taliban. New York: Hyperion. pp. 29–107)

பெண்கள் எனும் சொல்லைக் கொண்டு எந்த ஓர் இடத்திற்கும் பெயர் இருந்தால் உடனடியாக மாற்றம் செய்யப் படுகிறது.

எடுத்துக்காட்டாக, பெண்கள் பூங்கா (women's garden) என்று பெயர் இருந்தால், அந்தப் பெயர் வசந்தப் பூங்கா (spring garden) என பெயர் மாற்றம் செய்யப் படுகிறது.

பெண்கள் தங்கள் குடியிருப்புகள் அல்லது வீடுகளின் முற்றத்தில் நிற்கக் கூடாது. தெரு நடமாட்டங்களைக் கவனிக்க தடை விதிக்கப் படுகிறது.

(Ban on women appearing on the balconies of their apartments or houses. )

வானொலி நிகழ்ச்சிகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், பொது நிகழ்ச்சிகள், மேடை நிகழ்ச்சிகள் போன்ற எந்த நிகழ்ச்சிகளிலும் பெண்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லை.

(Ban on women's presence in radio, television or public gatherings of any kind.)

திடலில் பெண்கள் தனியாக ஓடி ஆடி விளையாட முடியாது.

(Ban on women playing sports or entering a sport center or club.)

1998-ஆம் ஆண்டில் ஒரு நிகழ்வு. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல். அங்கு அரசு நடத்தும் மிகப் பெரிய அனாதை இல்லம். அதன் பெயர் டாஸ்கியா மஸ்கான் (Taskia Maskan).

அங்கு பணிபுரிந்த பெண் ஊழியர்கள் அவர்களின் கடமைகளில் இருந்து விடுவிக்கப்பட்டனர். அப்போது அந்த இல்லத்தில் வசித்த 400 சிறுமிகள் ஒரு வருடத்திற்கும் மேலாக வெளியே செல்ல அனுமதிக்கப் படாமல் உள்ளே அடைக்கப் பட்டு இருந்தனர். சரி.

சைக்கிள் அல்லது மோட்டர் சைக்கிள் போன்றவற்றைப் பெண்கள் பயன்படுத்தக் கூடாது. பயணிக்கவும் அனுமதி இல்லை.

(Ban on women riding bicycles or motorcycles, even with their mahrams.)

ஒரு பெண்ணுடன் கணவன் துணையாக வரவில்லை என்றால் டாக்சியில் பயணம் செய்ய முடியாது.

பேருந்து, டாக்சி போன்ற பொதுப் போக்குவரத்தில் ஆண்களும் பெண்களும் சேர்ந்து பயணம் செய்ய முடியாது. தாலிபான்களின் முன்னைய ஆட்சியில், பெண்களுக்கு என்று தனியாகப் பேருந்து, மினிபஸ் சேவைகள் இருந்தன. அந்த வழக்கம் மீண்டும் அமலுக்கு வருகிறது.

முந்தைய தாலிபன்களின் ஆட்சிக் காலத்தில், பெண்களின் உடல்நல விசயங்களில் கடுமையான பாதிப்பு.

அதாவது ஆண் மருத்துவர்கள் பெண்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க முடியாது. (Ban on women being treated by male doctors.) பெண் மருத்துவர்கள் தான் பெண்களுக்குச் சிகிச்சை அளிக்க முடியும்.

அதன் காரணமாக ஆபத்து அவசர வேளைகளில், முறையான மருத்துவ சிகிச்சைகள் கிடைக்காமல் பெண்கள் பலர் உயிரிழந்து உள்ளனர்.

இசை கேட்பது தடைசெய்யப்பட்டு உள்ளது. இது பெண்களுக்கு மட்டும் அல்ல. ஆண்களுக்கும் தான். திரைப்படம், தொலைக்காட்சி மற்றும் வீடியோக்களைப் பார்க்க அனைவருக்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

(Banned listening to music, not only for women but men as well. Banned the watching of movies, television and videos, for everyone.)

அரசு பெண் ஊழியர்கள்; ஆசிரியைகள் விசயத்தைப் பார்ப்போம். பெண் பிள்ளைகளுக்கான கல்வி நிறுத்தப் படுவதாலும்; பெண்கள் அரசு ஊழியர் சேவையில் இருந்து நீக்கப் படுவதாலும் 30,000 பெண்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதற்கு தாலிபான் தலைவர் முகமது உமார் சொல்கிறார்: ’பெண் அரசு ஊழியர்கள் மற்றும் பெண் ஆசிரியர்கள்; இவர்களின் சேவை நிறுத்தப் பட்டாலும் அவர்களுக்கு மாதந்தோறும் ஏறக்குறைய 5 அமெரிக்க டாலர்கள் (25 ரிங்கிட்) ஊதியம் வழங்கப் படுகிறது.

தாலிபான்கள் புதிய 2021 ஆட்சிக்கு வருவதற்கு முன்னர், ஆப்கானிஸ்தானில் ஓர் ஆசிரியையின் சராசரி சம்பளம் மாதத்திற்கு 1500 ரிங்கிட். ஆக இப்போதைய 25 ரிங்கிட்டை வைத்துக் கொண்டு அந்த ஆசிரியைகள் என்னதான் செய்யப் போகிறார்கள்.

பெண்களுக்கான வேலை வாய்ப்பு பாதிப்புகள்தான் பெரிதும் உணரப் படுகின்றன. காபூல் நகரத்தில் மட்டும், முந்தைய தாலிபான் ஆட்சியில் 106,256 மாணவிகள்; 148,223 மாணவர்கள்; மற்றும் 8,000 பெண் பல்கலைக்கழக இளங்கலை பட்டதாரிகள் பாதிக்கப்பட்டனர். 7,793 ஆசிரியைகள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். 63 பள்ளிகள் மூடப்பட்டன.

அண்மைய புள்ளி விவரங்களின்படி 90 இலட்சம் ஆப்கான் பெண் பிள்ளைகள் பள்ளிக்கூடங்களில் படிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

ஹெராத் நகரில் தாலிபான்கள் பல பள்ளிகளை அழித்து விட்டனர். அதனால் 20 இலட்சம் பெண் குழந்தைகள் தங்களின் கல்வியை இழந்து விட்டனர். ஒன்றும் சொல்கிற மாதிரி இல்லை.

இவற்றை எல்லாம் தாண்டிய நிலையில் முந்தைய ஆட்சியில், கட்டாயத் திருமணங்கள்; பாலியல் சித்ரவதைகள்; சந்தையில் பெண்கள் விற்பனை போன்ற கொடுமைகள் எல்லாம் நடந்து உள்ளன.

இது மட்டும் இல்லை. முந்தைய ஆட்சியில், இன்னும் எவ்வளவோ உள்ளன. ஒரு பெண் தன் விரல் நகங்களுக்கு நகப் பூச்சு வைத்துக் கொண்டாள் என்பதற்காக 1996-ஆம் ஆண்டு தாலிபான்கள், அவளுடைய கட்டை விரலையே வெட்டி விட்டார்கள்.

மிக அண்மையில், 2021 ஜூலை மாதம், தாலிபான்களின் கட்டுப்பாட்டில் இருந்த ஓர் இடத்தில், 21 வயது இளம்பெண் ஒருவர், இறுக்கமாகச் சிலுவார் போட்டதற்காகச் சுட்டுக் கொன்று இருக்கிறார்கள்.

முந்தைய ஆட்சியில் ஆப்கானியப் பெண்களின் உரிமைகள் தடுமாறின. இன்றைய ஆட்சியில் தடுமாறுகின்றன. இனி எப்படியோ தெரியவில்லை.
நல்லதே நடக்க வேண்டும்; பெண்களுக்கான உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டும்; பெண்கள் தங்களின் அடிப்படை உரிமைகளுடன் சுதந்திரமாக வாழ வேண்டும். வேண்டிக் கொள்வோம்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
28.08.2021
 
சான்றுகள்;

1. UN Secretary-General interim report on human rights in Afghanistan by Mr. Felix Ermacora, Special Rapporteur of the Commission on Human Rights, November 8, 1994 - http://www.rawa.org/gallery.html

2. Bureau of Democracy, Human Rights, and Labor (1998-01-30). "Afghanistan Country Report on Human Rights Practices for 1997". US Department of State.

3. Allan Nacheman (2001-05-03). "Afghan women tell tales of brutality, terror at hands of Taliban". AFP.

4. Amnesty International (1997-06-01). "Women in Afghanistan: The violations continue".

5. Revolutionary Association of the Women of Afghanistan (RAWA) (1997-03-30). "Afghan woman stoned to death for adultery".

6. World: South Asia, Albright warns Taleban on women - http://news.bbc.co.uk/2/hi/south_asia/466739.stm

7. Taliban Killed Young Woman For Wearing Tight Clothing - https://gandhara.rferl.org/a/afghanistan-taliban-woman-killed/31393873.html

8. Indian Author Sushmita Banerjee killed by Taliban in Afghanistan - https://news.biharprabha.com/2013/09/indian-author-sushmita-banerjee-killed-by-taliban-in-afghanistan/

நூல்கள்:

1. The Taliban's War on Women: A Health and Human Rights Crisis in Afghanistan (PDF). Physicians for Human Rights. 1998. ISBN 1-879707-25-X.

2. Skaine, Rosemarie (2002). The Women of Afghanistan under the Taliban. MacFarland & Company. ISBN 0-7864-1090-6.

3. Mehta, Sunita, ed. (2002). Women for Afghan Women: Shattering Myths and Claiming the Future. Palgrave Macmillan. ISBN 1-4039-6017-8.

4. Women of Afghanistan in the Post-Taliban Era: How Lives Have Changed and Where They Stand Today. MacFarland & Company. ISBN 978-0-7864-3792-4.








 

25 ஆகஸ்ட் 2021

ஆப்கானிஸ்தான் வரலாற்றில் தலிபான் தலைபீடங்கள்

தமிழ் மலர் - 21.08.2021

கொரோனா ஒரு பக்கம். வறுமை ஒரு பக்கம். அச்சம் ஒரு பக்கம். இதில் அம்னோ ஒரு பக்கம். நான் தான் பிரதமர்; நீதான் துணைப் பிரதமர் எனும் அரசியல் ஆவர்த்தனங்கள். இதில் இப்போது புதிய பிரதமர். இவற்றை எல்லாம் தாண்டிய நிலையில் அந்தப் பக்கம் தலிபான்கள். உலகமே அவர்களை அண்ணாந்து பார்க்கிறது. இப்போதைக்கு நம் நாட்டு அரசியல் வேண்டாம். ஆப்கானிஸ்தான் பக்கம் பொடிநடையாய்ப் போய்ப் பார்ப்போம்.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல். கடைசி கடைசியாக ஆப்கானிஸ்தானின் பெயரை இஸ்லாமிக் எமிரேட் ஆப் ஆப்கானிஸ்தான் (Islamic Emirate of Afghanistan) என மாற்றி உள்ளனர். இனிவரும் காலங்களில் ஆப்கானிஸ்தான் தாலிபான்களின் ஆட்சியில் தான் இருக்கும். அப்படித்தான் அனைவரும் பேசிக் கொள்கிறார்கள்.

இந்த நிலையில் தாலிபன்கள் என்பவர்கள் யார். எங்கு இருந்து வந்தார்கள். எப்படி ஒரு நாட்டையே பிடிக்க முடிந்தது என்பதைப் பற்றி பலருக்கும் தெரியாமல் இருக்கிறது. தெரிந்து கொள்வோம். அதற்கு முன்னர் ஆப்கானிஸ்தான் வரலாற்றைத் தெரிந்து கொள்வது சிறப்பு.

ஆப்கானிஸ்தான் ஓர் இஸ்லாமியக் குடியரசு. இதன் நாலா புறமும் நிலத்தால் சூழப்பட்டது. 1747 தொடங்கி 1973 வரை ஒரு மன்னராட்சி நாடாக இருந்தது. அதன் பின்னர் அரசியல் புரட்சி இராணுவப் புரட்சி என்று இன்றைய நாள் வரைக்கும் அவதிப்பட்டுக் கொண்டு இருக்கிறது.

ஆப்கானிஸ்தான் நாட்டை ஒரு சர்வ சாதாரணமான நாடாக நினைத்துவிட வேண்டாம். உலகத்துக்கே நாகரிகம் சொல்லிக் கொடுத்த நாடுகளில் ஒன்றாகும். பொன்னும் மணியும் கொட்டிக் கிடந்த நாடு.


உலகத்திலேயே எங்கள் இனம் தான் ஒசத்தி என்று ஓர் இனம் இப்போது பிதற்றிக் கொண்டு திரிகிறது. தெரியும் தானே. அந்த இனம் தோன்றுவதற்கு முன்னாலேயே ஆப்கானிஸ்தானில் நகர நாகரிகங்கள் தோன்றி விட்டன. சிந்து வெளி நாகரிகத்திற்கு இணையான வரலாற்றைப் பின்னணியாகக் கொண்ட நாடு தான் ஆப்கானிஸ்தான்.

வரலாற்றுக்கு முந்திய காலத்தில் இருந்தே ஆப்கானிஸ்தான் ஒரு  முக்கியமான நாடு. 50,000 ஆண்டுகளுக்கு முன்னரே ஆப்கானிஸ்தானில் பல நாகரிகங்கள் இருந்ததற்கான தடயங்கள் கிடைத்து உள்ளன.
 
ஐரோப்பாவுக்கும் ஆசியாவுக்கும் ஒரு சந்திப்பு மையமாக இருந்து உள்ளது. பல போர்க் களங்களையும் பார்த்து உள்ளது. ஆதிகாலம் தொடங்கி பற்பல புலம்பெயர்வுகள் அங்கே நடந்து உள்ளன. பல பேரரசுகள்; பல வம்சாவளியினர் ஆப்கானிஸ்தான் நாட்டை ஆட்சி செய்து உள்ளனர். ஒரு பட்டியல் கொடுக்கிறேன். பாருங்கள்.

கிரேக்கோ - பாக்டிரியன்கள் - Greco-Bactrians

இந்தோ - சித்தியர்கள் - Indo-Scythians

குசான்கள் - Kushans

கிடாரிட்சுகள் - Kidarites

ஹெப்தலைட்டுகள் - Hephthalites

அல்கான் - Alkhons

நெசாக்சுகள் - Nezaks

ஜுன்பில்சுகள் - Zunbils

துருக்கிய சாகிதுகள் - Turk Shahis

இந்து சாகிதுகள் - Hindu Shahis

லாவிக்குகள்- Lawiks

சபாரிட்கள் - Saffarids

சமனிட்சுகள் - Samanids

கஜனாவிட்சுகள் - Ghaznavids

குரிட்ஸ் - Ghurids

குவாரசுமியர் - Khwarazmians

கால்ஜி - Khaljis

கார்த்தி - Kartids

லோடி - Lodis

சுர்ஸ் - Surs

மொகலாயர்கள் - Mughals

ஹோதக் - Hotak

துரானி - Durrani


முதலில் ஆரியர்களின் புலம்பெயர்வு (Indo-Aryan migrations). ஆரியர்கள் என்று ஒட்டுமொத்தமாகச் சொல்கிறேன். இவர்களை இந்தோ - ஈரானியர்கள், இந்தோ - ஆரியர்கள், மேதாக்கள், பாரசீகர் என்றும் பிரிக்கலாம். அவர்களுக்குப் பின்னர் தான் கிரேக்கர் படை எடுத்தார்கள்.

கிரேக்க நாடு எங்கே இருக்கிறது. ஆப்கானிஸ்தான் எங்கே இருக்கிறது. அந்தக் காலத்தில் மோட்டார் காடியும் இல்லை. மோட்டார் சைக்கிளும் இல்லை. சைக்கிளும் இல்லை. எல்லாம் குதிரை ஒட்டகச் சவாரிகள்தான். நடடடா ராஜா கதைதான்.

நாலாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து குதிரையிலேயே வந்து நாடுகளை எல்லாம் பிடித்து இருக்கிறார்கள். பெரிய பெரிய ஆர்ப்பாட்டங்களை எல்லாம் செய்து இருக்கிறார்கள். வரலாற்றில் இடம் பிடிக்கிறார்கள்.

அந்தக் காலங்களில் அடுத்த நாடுகள் மீது படை எடுத்தார்கள். அந்த நாடுகளின் செல்வச் செழிப்புகளைக் கொள்ளை அடித்தார்கள். ஆனால் இந்தக் காலத்தில் வேறு மாதிரியான கொல்லைப்புற அணுகுமுறைகள்.

அதிலும் போட்டிகள். நீ தலைவனா நான் தலைவனா என்கிற போட்டி. அலிபாபாவும் நாற்பது திருடர்களும் கதை பரவாயில்லை போலும். கண்ணியமாகத் திருடினார்கள். நியாயமான திருடர்கள் என்று பேர் போட்டுப் போய் விட்டார்கள்.


கிரேக்கர்களுக்குப் பிறகு இந்தியாவைச் சேர்ந்த மௌரியர்கள் படை எடுத்தார்கள். அடுத்து குஷான்கள் (Kushans), ஹெப்தலைட்கள் (Hephthalites), அரேபியர்கள், மொங்கோலியர்கள், துருக்கியர்கள். அவர்களுக்கு எல்லாம் தலைமகன்களாக வந்தவர்கள் வெள்ளைத்தோல் பிரிட்டிஷார்.

இவர்களுக்குப் பிறகு சோவியத் ரஷ்யா கொஞ்ச நாட்களுக்கு சட்டாம்பிள்ளை வேலை பார்த்தது. அப்புறம் மிக அண்மைய காலத்தில் உலகப் போலீஸ்காரர் வந்தார். அமெரிக்கா என்றால் சும்மாவா என்று சொல்லி அந்த நாட்டை ஒரு வழி பண்ணிபட்டு சென்று விட்டார்கள்.

தலிபான்களின் தொல்லை பொறுக்க முடியாமல் ‘ஆளை விடுங்கடோ சாமி’ என்று தலைதெறித்து ஓடியே போய் விட்டார்கள். ஆகக் கடைசியாக ஆப்கானிஸ்தான் நாடு அமெரிக்காவின் பிடியில் இருந்தது.

ஆப்கானிஸ்தானில் தலிபான் பிரச்சினையைத் தீர்க்க அமெரிக்கா எடுத்துக் கொண்ட 20 ஆண்டு காலத்தில், 4 அமெரிக்க அதிபர்கள் பதவிக்கு வந்து போய் இருக்கிறார்கள். 2001 செப்டம்பர் 11-ஆம் தேதி தொடங்கி, ஆப்கானிஸ்தானில் $2 டிரில்லியன் (2,000,000,000,000) டாலருக்கும் அதிகமாகவே அமெரிக்கா செலவு செய்து உள்ளது.


டிரில்லியன் என்றால் பத்தாயிரம் கோடி. அதாவது 40 ஆயிரம் கோடி மலேசிய ரிங்கிட்.

ஒவ்வொரு நாளும் அமெரிக்கா $300 மில்லியன் டாலர்களை ஆப்கானிஸ்தானில் செலவு செய்து இருக்கிறது.

அதாவது ஒரு நாளைக்கு 30 கோடி டாலர்கள். அல்லது ஆப்கானிஸ்தானில் உள்ள 40 மில்லியன் மக்களுக்கும் ஆளாளுக்கு $ 50,000 டாலர்கள் செலவு செய்து உள்ளது.

இதில் நேரடியான போர்ச் சண்டைச் செலவுகள் $800 பில்லியன் டாலர்கள்.
ஆப்கான் இராணுவத்திற்குப் பயிற்சி அளிக்க $85 பில்லியன் டாலர்கள்.

அந்த 20 ஆண்டுகளில் மூன்று மில்லியன் உயிர்கள் பலி. மீண்டும் அதே பல்லவி. பழைய தலிபான் ஆட்சி. இப்படி கோடிக் கோடியாய்ச் செலவு செய்து ஒரு புண்ணியமும் இல்லாமல் போய் விட்டதே.


இப்படி பல நாடுகள் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமிப்புக்கு செய்து உள்ளன. ஆப்கானிஸ்தானின் செல்வங்களை எல்லாம் சுரண்டிச் சென்றன. மன்னிக்கவும். கொள்ளை அடித்துச் சென்றன.

இயற்கையிலேயே ஆப்கானிஸ்தான் ஒரு மலைப் பிரதேசமான நாடுதான். பெரும் விவசாயத்திற்கு ஏற்ற நாடு அல்ல. ஆனால் கனிவளங்கள் நிறைந்த நாடு.

அங்கே கறுப்புத் தங்கம் பெட்ரோல் கிடைக்கும் என்றுதான் அமெரிக்கா வியூகம் போட்டு களம் இறங்கியது. சோழியன் குடுமி சும்மா ஒன்றும் ஆடாது. எட்டு முழம் வேட்டியைக் கட்டிக் கொண்டு பெருச்சாளி ஓடுகிறது என்றால் சும்மாவா?

4000 ஆண்டுகளுக்கு முன்னர் மத்திய ஆசியாவைச் சேர்ந்த பல குழுக்கள் ஆப்கானிஸ்தானுக்குள் குடிபெயர்ந்து உள்ளன. இவ்வாறு வந்தவர்கள் பெரும்பாலோர் ஆரியர்கள்.

இதே காலக்கட்டத்தில் பாரசீகம் மற்றும் இந்தியாவிற்குள் ஆரியர்கள் குடிபெயர்ந்தனர். இவர்கள் குடியேறிய பகுதிகள் ஆரியானா என அழைக்கப்பட்டது. ஆரியர்களின் பூமி என்று பொருள்.

ஆரியர்கள் யார்? அவர்கள் எங்கு இருந்து வந்தார்கள். இவர்களைப் பற்றி சற்று விளக்கமாகச் சொல்கிறேன். நேற்றைய கட்டுரை ’தீண்டாமைக் கொடுமையில் திருவாங்கூர் தமிழ்ப்பெண்கள்'. அதில் இதைப் பற்றி விரிவாகச் சொல்லி இருக்கிறேன்.


ஆரியர் எனும் சொல் ஈரானியச் சொல். ஆர்யா (Arya) எனும் சொல்லில் இருந்து திரிந்து வந்தது. ஆரியர்கள் என்பவர்கள் துருக்கி, ஈராக், ஈரான் நாடுகளில் இருந்து இந்தியாவிற்குள் புலம் பெயர்ந்தவர்கள்.

இவர்களின் பூர்வீகம் ரஷ்யா. அங்கு இருந்த சைபீரியா பனிப் பிரதேசங்களில் வாழ்ந்து வந்தவர்கள். சைபீரியா பூர்வீக மக்களுடன் பிரச்சினை. ஒதுக்கப் பட்டார்கள். அதனால் புலம் பெயர்ந்தார்கள்.

ஜெர்மனிக்கு புலம் பெயர்ந்து அப்படியே கசக்ஸ்தான்; உஸ்பெகிஸ்தான்; துருக்கி; ஈராக்; ஈரான் வழியாக வந்து, கடைசியில் இந்தியாவிற்குள் தஞ்சம் அடைந்தார்கள்.

சிந்து சமவெளியின் சிந்து பைரவிகள் பாடிய சிந்து மக்களைத் தங்களின் ஆன்மீகப் பாதையில் ஈர்த்துக் கொண்டார்கள். சிந்து மக்களையும் காம்போதி ராகங்களாக மாற்றி அவர்களைத் தொழிலுக்கு ஏற்றவாறு பிரித்தும் வைத்தார்கள்.


சிந்து சமவெளி நாகரிகம் தோன்றுவதற்கு முன்னரே தமிழகத்தில் தமிழர் நாகரிகம் தோன்றி விட்டது. அதன் பின்னர் தான் ஆரியர்கள் தமிழகத்திற்குள் வந்து இருக்கிறார்கள். சாதி சடங்கு சம்பிரதாயம் எல்லாம் சம்மணம் போட்டு ஆரத்தி எடுத்தன.

கி.மு. 6-ஆம் நூற்றாண்டில் ஆப்கானிஸ்தான் பகுதியில் பாரசீகப் பேரரசான அச்செமினிட் (Achaemenid) பேரரசு பலமாக வலுவாக இருந்தது.

கி.மு. 300-ஆம் ஆண்டுகளில் மாவீரன் அலெக்சாந்தர் படை எடுத்து வந்தார். ஆப்கானிஸ்தானின் பல பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டார்.

கி.மு. 323-ஆம் ஆண்டில் அலெக்சாந்தர் மரணத்திற்குப் பின்னர் கிரேக்கர்களின் செலூசிட்ஸ், பாக்ட்ரியா, இந்தியாவின் மெளரியப் பேரரசு போன்ற பல பேரரசுகள், ஆப்கானிஸ்தானைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தன. மெளரியப் பேரரசினால் ஆப்கானிஸ்தானில் பௌத்த மதம் பரப்பப்பட்டது.


கி.பி. முதலாம் நூற்றாண்டில டோச்சானியன் குஷான்கள் (Tocharian Kushans) என்பவர்கள் ஆப்கானிஸ்தானைத் தம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார்கள்.

ஏழாம் நூற்றாண்டில் அரபு அரசுகள் ஆப்கானிஸ்தானின் பல பகுதிகளைக் கைப்பற்றின. பௌத்தம், இந்து மதங்களைப் பின்பற்றி வந்த பெரும்பாலான மக்கள் முஸ்லிம்களாக மாற்றப் பட்டார்கள்.

1299-ஆம் ஆண்டில் மங்கோலியப் பேரரசன் ஜெங்கிஸ் கான் என்பவரின் கொடுங்கோல் ஆட்சிக்குள் ஆப்கானிஸ்தான் தடுமாறிப் போனது. 1504-ஆம் ஆண்டில் மொகலாயப் பேரரசர் பார்பர் வந்தார். மொகலாயப் பேரரசு உருவாக்கப்பட்டது.

18-ஆம் நூற்றாண்டின் தொடக்கக் காலத்தில் காஸ்னாவிட் கான் நாஷர் (Ghaznavid Khan Nasher) என்பவரின் தலைமையின் கீழ் பாரசீகத்திற்கு எதிரான புரட்சி. ஆப்கானிஸ்தானில் இருந்து பாரசீகர்கள் துரத்தப் பட்டார்கள்.

1738-ஆம் ஆண்டில் பாரசீகத்தில் இருந்து நாடிர் ஷா என்பவரின் படையெடுப்பு. கந்தகார், காபூல், லாகூர், காஸ்னி போன்ற பகுதிகள் வீழ்ந்தன. நாடிர் ஷா பற்றி சில ஆண்டுகளுக்கு முன்னர் நான்கு கட்டுரைகள் எழுதி இருக்கிறேன்.


ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றிய பின்னர், நாடிர் ஷா, சிந்து ஆற்றை கடந்து, கைபர் கணவாய் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்தார். மொகலாய மன்னர் முகமது ஷாவின் படைக்கு எதிரான போர்.

1739-ஆம் ஆண்டில் நடந்தது. அந்தப் போரில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மொகலாய படைவீரர்களை, நாடிர் ஷாவின் படை கொன்று குவித்தது.

தோல்வி அடைந்த மொகலாய மன்னர் முகமது ஷா, நாதிர் ஷாவுடன் ஓர் உடன்படிக்கை செய்து கொண்டார்.

அந்த உடன்படிக்கையின் மூலமாக இந்தியாவின் கோகினூர் வைரம் பறிபோனது. விலை மதிப்பு சொல்ல முடியாத மயிலாசனம் பறிபோனது. கோடிக் கணக்கான ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளும் பறிபோயின.

இந்தியாவின் ஒட்டு மொத்தச் செல்வங்களும் கொள்ளை அடிக்கப்பட்டன. டன் கணக்கில் யானை, ஒட்டகங்கள் மீது ஏற்றி, ஈரானுக்குக் கொண்டு போகப் பட்டன.

1747ஆம் ஆண்டில் ஆப்கான்; பஸ்தூன் ஆகிய குழுவினர் கந்தகார் நகரில் கூடி அகமது ஷா என்பவருக்கு முடி சூட்டுகின்றனர். இவர் தன் கடைசிப் பெயரை டுரியோ என மாற்றிக் கொண்டார். டுரியோ என்றால் முத்துக்களின் முத்து என்று பொருள்.

இந்த டுரியோ எனும் பெயரில் தான் துராணிப் பேரரசு உருவானது. அந்தத் துராணிப் பெயரில் இருந்துதான் இன்றைய ஆப்கானிஸ்தான் நாடும் உருவானது.

19-ஆம் நூற்றாண்டில் அங்கே பல்வேறு உள்நாட்டு அரசியல் குழப்பங்கள். தவிர பாரசீகர் மற்றும் சீக்கியர்கள் பிரச்சினைகள்.

இவற்றின் காரணமாக ஒரு நூற்றாண்டு மட்டுமே அந்தத் துராணி பேரரசு நிலைத்து இருந்தது. ஆப்கான் வரலாற்றுத் தொடர் நாளையும் இடம்பெறுகிறது.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
21.08.2021




 

23 ஆகஸ்ட் 2021

மார்பு இருந்தால்தானே மார்புவரி - வீரமங்கை நாஞ்செலி

தமிழ் மலர் - 23.08.2021

உலகத்தில் என்னென்னவோ வரிகள். பொன் வரி. பொருள் வரி. வசதி வரி. வருமான வரி. சேவை வரி. தேவை வரி என்று எத்தனை எத்தனையோ வரிகள். இதில் ஜி.எஸ்.டி. ஜிம்கானா வரியை மறந்து விட வேண்டாம். இந்த வரிகளுக்கு எல்லாம் ஐயா வரி ஆத்தா வரி என்று ஒரு பயங்கரமான வரி இருந்தது. அந்த வரியின் பெயர் மார்பு வரி. 


பெண்களுக்கு இருக்கும் இரண்டு மார்புகளுக்கும் போட்ட வரிதான் மார்பு வரி. சின்ன மார்பாக இருந்தால் சின்ன வரி. பெரிய மார்பாக இருந்தால் பெரிய வரி. கட்டத் தவறினால் சிறைத்தண்டனை. இதை எழுதும் போது மனம் வலிக்கிறது.

எதற்கு வரி போடுவது என்று விவஸ்தையே இல்லையா. மனிதத் தன்மை உள்ளவர்கள் தான் இதை எல்லாம் செய்தார்களா? நான் மனிதன்தானா என்று எனக்கே சந்தேகம். என்னையே கேட்டுக் கொள்கிறேன். கிள்ளிப் பார்த்துக் கொள்கிறேன். ஏன் என்றால் நானும் ஒரு மனிதன் தான். ஒரு தமிழன் தான்.

இந்தியாவின் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இப்படி ஒரு வரியைப் போட்டு கதிகலங்கச் செய்தார்கள், 1700-ஆம் ஆண்டுகளில் இந்தியா கன்னியாகுமரி பகுதியில் அரங்கேறிய அசிங்கமான வரி. நான் சொல்லவில்லை. வரலாறு சொல்கிறது.

இந்த மார்பு வரியை எதிர்த்துப் போராடி இரண்டு மார்புகளையும் வெட்டி வீசி எறிந்து உலகத்துக்கே ஒரு பாடம் சொன்ன ஓர் அழகிய பெண்மணியின் கதை வருகிறது.

படியுங்கள். படித்து விட்டு அந்தப் பெண்ணுக்கு ஒரு நிமிடம் அஞ்சலி செலுத்துங்கள். அதுவே அந்தத் தமிழச்சிக்கு நாம் செய்யும் பெரிய  மரியாதை.

முன்பு காலத்தில் அதாவது 1700-ஆம் 1800-ஆம் ஆண்டுகளில் கன்னியாகுமரி பகுதிகள் கேரளா, திருவிதாங்கூர் அரசிற்குச் சொந்தமான நிலப் பகுதிகளாக இருந்தன. அந்தச் சமயத்தில் அங்கே சாதி சங்கதிகள் தீவிரமாக இருந்தன.

மனுதர்ம விதிகள் ஆட்சி செய்த காலத்தில் மனிதர்களை மனிதத் தன்மையுடன் நடத்தாத கொடுமைகள். கன்னியாகுமரி பகுதிகளில் அரங்கேறி உள்ளன.

தற்போதைய தமிழகத்தில் உள்ள கன்னியாகுமரி மாவட்டம், குமரி மாவட்டம், திருநெல்வேலி, கேரளத்தில் உள்ள திருவனந்தபுரம் போன்ற மாவட்டங்கள் மன்னராட்சியின் கட்டுப்பாட்டில் இருந்தன. முன்பு திருவிதாங்கூர் சமஸ்தானம் என்று அழைக்கப்பட்டது. திருவிதாங்கூர் என்றாலும் திருவாங்கூர் என்றாலும் ஒன்றுதான். பெயர்தான் மாற்றம்.

அன்றைய காலத்தில் அங்கு சாதிக் கொடுமை மிகவும் கொடுமையானது. சாதி வர்ணத்தின் அடிப்படையில் பற்பல கொடுமைகள் நடந்து உள்ளன.


அந்தக் காலகட்டத்தில் சாதீயக் கொடுமைகளால் மக்கள் அதிக அடக்குமுறைக்கு ஆளாகி இருந்தனர். பனை மரம் ஏறும் தொழிலைச் செய்து வந்த பனையேறிகள்; நாடார், ஈழவர், புலையர் உட்பட 18 சமுதாயத்தைச் சார்ந்த பெண்கள் தங்கள் மார்பகத்தை மறைக்க முடியாது. மேலாடை அணிவதற்குத் தடை விதிக்கப்பட்டு இருந்தது.

இவர்கள் மார்பகத்தைத் திறந்து போடுவதுதான் உயர் சாதியினருக்குத் தரும் மரியாதையாம். அப்படி தரம் தாழ்ந்த எண்ணத்தில் திருவாங்கூர் நாடு ஒரு நடைமுறையை ஒரு சட்டத்தை வகுத்து வைத்து இருந்தது.

இதனால் தமிழ்ப் பெண்கள் மேலாடை அணியாமல் தலைகுனிந்து வாழ்ந்து வந்தனர். இந்த அடக்கு முறையைச் சீர்திருத்த கிறித்தவ மதத்தைச் சேர்ந்தவர்கள் எதிர்த்து நின்றார்கள். தங்கள் மதப் பெண்களுக்கு, மார்பை மறைத்துக் கொள்ள உரிமை வேண்டும் என்று போராட்டம் செய்தார்கள். அதற்குப் பெயர் தோள் சீலைப் போராட்டம்.

37 ஆண்டுகள் போராட்டத்துக்குப் பிறகு திருவிதாங்கூர் அரசு நாடார் கிருத்தவ பெண்களுக்கு மட்டும் தோள் சீலை அணியவும், மார்பகங்களை மறைக்கவும் உரிமை அளித்தது. மற்ற தமிழ்ப் பெண்களுக்கு முடியாதாம். என்னே கொடுமை.


ஆக அந்த வகையில் தாழ்த்தப்பட்ட பிரிவினரைச் சேர்ந்த பெண்கள் மேலாடை அணிய முடியாது. அப்படி அணிவது மாபெரும் குற்றமாம். அது மட்டும் இல்லை. தாழ்ந்த சாதியைச் சேர்ந்த பெண்களின் மார்புக்கு வரி விதிக்கும் முறையும் அமலுக்கு இருந்தது. இந்தக் கோணங்கித் தனமான வரிகள் எப்படி வந்தன என்பதை முதலில் பார்ப்போம்.

திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நம்பூதிரிகள் எனும் ஆரியர்கள் குடியேறிய பிறகு தான் சாதிக் கொடுமைகள் தலைதூக்கத் தொடங்கின. இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது.

கி.பி. ஏழாம் நூற்றாண்டு வாக்கில் கேரளப் பகுதியில் குடியேறிய நம்பூதிரிகள் பூமியில் உள்ள கடவுள்கள் என்பவர்கள் தாங்கள் தான் என்று சொன்னார்கள். அப்படிச் சொல்லி எல்லோரையும் நம்ப வைத்தார்கள். அரசர்களும் மற்றவர்களும் மதிக்கும் வண்ணம் உயர்வு பெற்றார்கள். நன்றாகவே பெயர் போட்டார்கள்.

மலையாள நாடு நம்பூதிரிகளுக்குத் தரப்பட்டது என்றும்; அரசர் முதல் யாவரும் தங்களுக்குத் தொண்டு செய்யக் கடமைப் பட்டவர்கள் என்றும் கூறி அதையே நடைமுறைப் படுத்தி வந்தார்கள். அதனால் நம்பூதிரிகள் எல்லாம் தெய்வத் தன்மை வாய்ந்தவர்கள் என்று மதிக்கப் பெற்றார்கள்.


நாடார், ஈழவர், முக்குவர், பரவர், புலையர் என சுமார் பதினெட்டு சமூகத்தவரை தாழ்த்தப் பட்டவர்களாக அறிவித்த நம்பூதிரிகள், அவர்களின் மீது கொடுமைகளைக் கட்டவிழ்த்து விட்டனர். இதற்கு திருவிதாங்கூர் சமஸ்தான ராஜாவும் உதவியாக இருந்தார்.

நம்பூதிரிகளில் வழிகாட்டுதலில் அமைந்த தமிழர்ச் சமூகத்தில் சாதிப் பிரிவுகளும்; தீண்டாமையும்; அடிமை வாழ்வும்; நிலைத்து நின்றன. தமிழர்கள் கோவில்களுக்குச் செல்லக் கூடாது. பொதுக் கிணறு, பொதுக் குளம் போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது என தீண்டாமைக் கொடுமைகள்.

தமிழர்கள் யாரும் மேலாடை அணியக் கூடாது. முட்டுக்கு கீழே ஆடைகள் அணியக் கூடாது என்று சட்டத்தைக் கொண்டு வந்தார்கள். நம்பூதிரிகளுக்கு முன்பாக நடந்து போகும் போது தமிழர்ப் பெண்கள் திறந்த மார்புடன் தான் போக வேண்டும்.

தமிழ்ப் பெண்கள் திறந்த மார்புடன் சென்றால்தான் அவர்கள் எங்களுக்கு அளிக்கும் மரியாதை என்றார்கள். அதனையும் மீறி மேலாடை அணிந்தால், அவர்கலின் ஆடை கிழிக்கப்பட்டது. அந்தப் பெண்ணுக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டது.

பெண்களுக்கு மட்டும் இல்லை. ஆண்கள் மீசை வைத்து இருந்தால் அதற்கும் வரி விதிக்கப்பட்டது. கைத்தடி வைத்து இருந்தால் அதற்கும் வரி. கைப்பிடி குடை வைத்து இருந்தால் அதற்கும் வரி. இப்படி பலவகையான வரிக் கொடுமைகள். சோறு என்ற வார்த்தையை கூட தமிழர்கள் சொல்லக் கூடாது; கஞ்சி என்று தான் சொல்ல வேண்டும்.

முன்பு காலத்தில் வர்ண தர்மம் எனப்படும் இந்து மதத்தில் நான்கு வர்ணங்கள் (பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன்) அடையாளம் காட்டப் பெற்றன. ஆனால் நம்பூதிரிகள் தங்கள் சுயநல நோக்கத்தில் அதை வேறுவிதமாக மாற்றி சவர்ணர், அவர்ணர் எனப் பிரித்து வைத்தனர்.

நம்பூதிரிகளின் தீண்டாமைக் கொள்கை, அரசு அனுமதியோடு 1850-ஆம் ஆண்டுகள் வரை தொடர்ந்தன. இதில் அதிகம் பாதிக்கப் பட்டவர்கள் பெரும்பான்மையினராக வாழும் பனையேறி சமுதாயத்தினர்; ஈழவ சமுதாயத்தினர்.

திருவிதாங்கூரில் மேலாடை (Upper cloth) என்பதை “மேல்முண்டு” என்று  அழைக்கின்றனர். அங்குள்ள பெண்கள் இன்றும் இந்த மேல் முண்டை சில சமயச் சடங்குகள் மற்றும் திருமணச் சடங்குகளில் கடைபிடித்து வருகின்றனர்.
இவர்கள் சாதாரணமாக மூன்று முண்டுகளை பயன்படுத்துகின்றனர்.

உடுமுண்டு அதாவது உடுத்திக் கொள்ளுகின்ற முண்டு, மார்பு துண்டு. அதாவது மார்பகங்களை மறைக்கின்ற கச்சை போன்ற வேட்டி. அதற்கும் மேலாக தோளோடு தோளில் இட்டு மறைக்கின்ற மேல்முண்டு. அதாவது மேலாடை போன்ற வேட்டித் துண்டுகளாகும்.

10-ஆம் 11-ஆம் நூற்றாண்டுகளில் நம்பூதிரிகளின் ஆதிக்கம் ஓங்கத் தொடங்கின. சாதிக் கட்டுப்பாடுகளும் உருவெடுத்தன. 12-ஆம் நூற்றாண்டில் இந்தக் கட்டுப்பாடுகள் அதிகரித்தன. மேல் சாதி இந்து என்றும், கீழ் சாதி இந்து என்றும் பாகுபாடுகள் உருவாகின. காணாமை, நடவாமை, தொடாமை போன்ற சமுதாய முறைகள் உருவாகின.

இந்த தீமைகளில் ஒரு பிரிவு தான் தாழ்த்தப்பட்ட மக்கள் இடுப்புக்கு மேலும், முட்டுக்கு கீழும் ஆடை அணியக்கூடாது என்றக் கட்டுப்பாடு. உயர்ந்த சாதி இந்துக்களின் முன்பு தாழ்த்தப்பட்ட பெண்கள் மறைக்கப் படாத மார்பகங்களுடன்தான் மரியாதை செலுத்த வேண்டும்.

நம்பூதிரிகளின் முன்பு தமிழ்ப் பெண்கள் மார்பகங்களை மறைக்கக் கூடாது. மார்பகங்களைத் திறந்து போட்டுத்தான் நடக்க வேண்டும். நாளாக நாளாக அப்படியே அதுவும் மரபாகிப் போனது. கட்டுப்பாட்டை மீறினால் மரணத் தண்டனை விதிக்கப்பட்டது.

கொத்தனாவிளை என்ற ஊரில், இந்த உடைக் கட்டுப்பாட்டுக்கு எதிராக 1822-ஆம் ஆண்டு ஒரு சிறிய போராட்டம் நடைபெற்றது. அதன் பிறகு அதே பேராட்டம் மூன்று கட்டங்களாக நடைபெற்றது. 37 வருட காலப் போராட்டம்.

முதல் கட்டப் போராட்டம் 1822 முதல் 1823 வரை;, இரண்டாம் கட்டப் போராட்டம் 1827 முதல் 1829 வரை; மூன்றாம் கட்டப் போராட்டம் 1858 முதல் 1859 வரையில் நடைபெற்றது.

பெண்களின் உரிமைப் போராட்டத்தில் ஒரு பெண்மணிதான் வீரமங்கை நாஞ்செலி. 30 வயதான நாஞ்செலி கேரளாவின் சேர்தலா என்ற பகுதியில் வசித்து வந்தார். பார்ப்பனர்களின் இந்தக் கொடுமையை எதிர்த்து மார்பு வரி செலுத்த முடியாது என்று போராடி வந்தார். என் மானத்தை காப்பது என் உரிமை என்றார்.

இந்த கொடுமையான வரி விதிப்பை எதிர்த்து கடுமையாகப் போராடி வந்தார். பல மாதங்களாக ஆகியும் அவள் வரி கட்டவில்லை. பல முறை அரசு கேட்டும் இணங்கவில்லை.

அதாவது தங்களின் மார்பை மறைக்க விரும்பும் பெண்கள் கட்ட வேண்டிய வரியை நாஞ்செலி கட்ட மறுத்தார். மார்பை மறைக்காமல் திறந்து போட்டால் என்றால் வரி கிடையாது. என்னே அக்கப்போரான வரி.

ஒரு நாள் திருவிதாங்கூர் அரசின் வரிவிதிப்பாளர்கள் அவளைத் தேடி வீட்டுக்கே வந்து விட்டார்கள். உன் மார்புக்கு வரி கட்டி விட்டாயா என்று கோபமாகக் கேட்டார்கள்.

கொஞ்ச நேரம் காத்து இருங்கள் என்றார் நாஞ்செலி. பணத்தை எடுத்து வருவாள் என்பது வரிவிதிப்பாளர்களின் எதிர்பார்ப்பு. உள்ளே சென்றவள் கையில் வாழை இலைகளை அறுக்கும் அரிவாளுடன் வெளியே வந்தாள்.

இது இருந்தால் தானே வரி கேட்பாய் என்று கத்தினாள். தன் இரு மார்புகளையும் அவர்களின் கண் முன்னாலேயே வெட்டி எறிந்தாள். அவளின் இரு மார்புகளும் உடலை விட்டு பிரிந்தன. அவளுடைய உயிரும் பிரிந்தது. மார்பகத்தை வெட்டியதால் அதிக இரத்தப் போக்கு ஏற்பட்டு நாஞ்செலி இறந்து போனார்.

அந்த காலத்தில் கேரளத்தையே அதிர வைத்த சம்பவம் இது. அது மட்டும் அல்ல. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊர் மக்கள் செய்த தொடர் போராட்டத்தால், வேறு வழி இல்லாமல் மார்பக வரியை ரத்து செய்தது திருவிதாங்கூர் சமஸ்தானம்.

கேரளத்தில் சேர்தலா அருகே ‘முலைச்சிபுரம் ‘என்ற இடத்தில் இந்த துயரச் சம்பவம் நடந்துள்ளது. அந்த ஊருக்குப் பெயர் வந்த காரணமும் அதுதான். ஆனாலும் பாருங்கள். நாஞ்செலியை நினைவு கூறும் வகையில் சேர்தலா உள்ளிட்ட கேரளத்தின் எந்தப் பகுதியிலும் ஒரு நினைவுச் சின்னம் இல்லை.

தற்போது நாஞ்செலியின் பரம்பரையில் ஒரே ஒருவர்தான் உயிரோடு உள்ளார். நாஞ்செலிக்கு பேத்தி முறை. அவருக்கு 67 வயதாகிறது. அவரின் பெயர் லீலாம்மா.

அந்தச் சம்பவம் குறித்து அவர் சொல்கிறார் ”நாஞ்செலிக்கு குழந்தைகள் இல்லை. நாஞ்செலியின் சகோதரியின் பேத்தி நான். என் முன்னோர்கள் நாஞ்செலியின் அழகைப் பற்றி கூறி உள்ளனர். அந்த துயரச் சம்பவம் குறித்தும் சொல்லி இருக்கிறார்கள். நாஞ்செலியின் துணிச்சலான செயல் அப்போதையை திருவாங்கூர் அரசையே அதிர வைத்தது என்றும் சொல்வார்கள்” என்றார்.

இந்தக் கொடுமைகளைப் பார்த்த விவேகானந்தர், குமரி முனைக்கு வந்த பொழுது, “திருவிதாங்கூர் சமஸ்தானம் பைத்தியக்காரர்கள் வாழும் இடம்” என்று சொல்லி இருக்கிறார்.

சாதியின் பெயரால் அடிமைப் படுத்தும் நிலை மாற வேண்டும். மானம் என்பது அனைவருக்கும் உண்டு என்பதை மனித குலம் அறிய வேண்டும். சமுக நலனுக்காக தன் உயிரிரையே தியாகம் செய்த நாஞ்செலி போன்ற இலட்சியப் பெண்களைத் தமிழர்கள் என்றைக்கும் நினைவில் கொள்ள வேண்டும்.

மார்பு இருந்தால் தானே மார்புவரி என்று சொல்லி தன் இரு மார்புகளையும் வெட்டி வீசியவர் வீரமங்கை நாஞ்செலி. வாழ்க அந்த அஞ்சலி. அநீதிக்கு எதிராக நின்று குரல் கொடுத்த நாஞ்செலியை நினைவு கூர்வோம். உங்களுக்கு ஓய்வு கிடைக்கும் போது அவரை நினைத்து அஞ்சலி செலுத்துங்கள்.  

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
23.08.2021

பின்னூட்டங்கள்

கலைவாணி ஜான்சன்: வணக்கம் ஐயா... உண்மை, சாதி சாதியோடு தான் சேர வேண்டும் என்னும் கொள்கை வளர்ப்பு பல இடங்களில் பரவலாக உள்ளது என்பதை மறுக்க முடியாது. சாதி வளர்ப்பில் வெறித் தனமாக இருக்கும் பலர் சில விவரங்களில் அந்த விடாப்பிடி குணத்தை தளர்த்திக் கொள்கிறார்கள். இது உண்மையில் வெட்கக் கேடான விசயம். உண்மை நிலையைத் தான் இங்கே பகிர்ந்து கொண்டேன்.

இரத்தினச் சுருக்கமாகச் சொன்னீர்கள் ஐயா. உண்மையிலும் உண்மை. 👌👌

முகில்: இன்னும் அந்த வர்ண வம்சத்திற்கு ஆதரவு தரும் ஆரியத் தன்மைகள் வலம் வரவே செய்கின்றன சகோதரி. கருத்துகளுக்கு நன்றி. மற்ற அன்பர்களின் பதிவுகளுக்குப் பின்னர் பின்னூட்டங்கள் வழங்குகிறேன். நன்றி.

மகாலிங்கம் படவேட்டான்: அரசியல்வாதிகள் மிகக் கச்சிதமாகச் சாதியை மூடி மூடி வளர்கிறார்கள். சாதியை மூலமாக வைத்து அரசியல் செய்பவர்கள் தான் அதிகம்... 🤦🏽‍♂️

முகில்:  மலேசிய சிவசித்தி ஆன்மீக நிறுவனம் (Sivasiddhi Spiritual Foundation). நான் எழுதிய தீண்டாமைக் கொடுமையில் திருவாங்கூர் தமிழ்ப்பெண்கள் (தமிழ் மலர் - 21.08.2021) கட்டுரைக்கு மறுப்புக் கருத்துகள் தெரிவித்து உள்ளார்கள். அன்பர்களின் பார்வைக்குக் கொண்டு வருகிறேன்.

Aiya Muthu Krishnan, I read your article, but I think it is biased, not fully facts based and bounded with emotional, in my opinion. Opinions may differ. Maybe you can verify further.

1. Arya race is Myth.

2. Are the so called Uyar Jatis are not Tamils?

3. in Manusmriti, which verse?

4. You mentioned breast tax but why never mentioned Xenddi tax?

5.etc Misleading Article by Aiya Muthu Krishnan?

https://sivasiddhi.blogspot.com/2021/08/misleading-article-by-aiya-muthu.html?fbclid=IwAR2D4Rya9les-HGxB-kf-dwPE55HWJ7EivT0PNezOPwYj1ouxuPRcwSA_C0

கலைவாணி ஜான்சன்: கொடுமைக்கு எல்லை இல்லா அந்தக் காலத்தில் வாழ்ந்த பெண் போராளி வீரமங்கை நாஞ்செலி; சரித்திரத்தில் இடம் பெறும் இந்தப் பதிவு என்று உணர்கிறேன் ஐயா. மனிதர்கள் இப்படி செய்ய மாட்டார்கள். இவர்கள் மனிதர்களே அல்ல. அரக்கர்கள். நேயம் இல்லா அரக்கர்கள். ஆகவே தான் இவ்வளவு கீழ்த் தரமான விசயத்தைச் செய்ய முடிந்தது.

தனநாதன் தேவேந்திரன்: வணக்கம் ஐயா. ஆரியர்கள் இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் என்ற கட்டுரைகளை அன்றைய ஆனந்த விகடன் கலைமகள் தீபாவளி மலர்களில் படித்துள்ளேன்.

1. மத்திய ஆசியாவில் ஆரியர்களின் எந்த அடிச்சுவடும் இல்லை என குறிப்பிட்டிருந்தது.

2. வர்ணாசிரமக் கொள்கை மனிதர்களின் குணாதிசிய அடிப்படையில் உள்ளதே தவிர ஏற்ற தாழ்வு உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற நோக்கில் அல்ல என பலர் பேசி எழுதியும் உள்ளனர்.

இந்துக்கள் இதை எதையும் பொருட்படுத்தாமல் வேறுபாடுகளை வளர்த்தனர். பல கொடுமைகளையும் செய்தனர். செய்து வருகின்றனர். தன் சமயத்தின் மாண்பைக் கெடுக்கிறோம் என்ற உணர்வே அவர்களுக்கு இல்லை.

சாதி உயர்வு தாழ்வுகளுக்கும் இறை வழிபாட்டிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்ற சிந்தனை வளர்வது எக்காலமோ கச்சி ஏகம்பனே

டாக்டர் சுபாஷிணி: தோழர்.. இக்கேள்விகளை எழுப்பியவர் மானுடவியல்,  மரபியல் ஆகிய துறைகள் சார்ந்த தெளிவு அல்லது புரிதல் இல்லாத வகையில் கேள்விகளை முன் வைத்து இருக்கின்றார். இதனை அவர் தெளிவு படுத்திக் கொள்ள அவர் பல நூல்களைப் படிக்க வேண்டாம். தற்போதைக்கு ஒரே ஒரு நூலை அவர் படிக்க வேண்டும் என வலியுறுத்துங்கள்.

English: Early Indians இதே நூல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வந்துள்ளது. நூல் பெயர்: ஆதி இந்தியர்கள். அமேசான் வலைத்தளத்தில் வாங்கி வாசிக்கலாம்.

தங்களால் பதில் கூற முடியவில்லை என்றால் உடனே ஆங்கிலேயர்கள் நம்மை முட்டாள்கள் ஆக்கி விட்டார்கள் என சொல்வதும் ஒரு அறியாமையின் வெளிப்பாடு தான்.

மனித இனத்தின் மரபியல் சோதனைகள் தீவிரப் படுத்தப்பட்டு மிகப் பெரும் துறையாக வளர்ந்து பல செய்திகளை உலகுக்கு அளித்து விட்டது. இன்னமும் சிறிய வட்டத்திற்குள்ளேயே இருந்து தனக்குத் தெரிந்ததை மட்டுமே பேசிக் கொண்டிருப்பது என்பது....... அவரை இந்த நூலை வாசிக்கச் சொல்லுங்கள்.

சாதியின் பெயரால் கடந்த நூற்றாண்டுகளில் சில சமூகத்துப் பெண்கள் இந்திய சூழலில் பட்ட அவமானங்களும் துன்பங்களும் இப்படி மலேசியாவிலும் வெளிப்படையாக பேசப்பட வேண்டும். நல்ல கட்டுரை.

தனநாதன் தேவேந்திரன் >>>> டாக்டர் சுபாஷிணி: நன்றி அம்மா விவேகமான ஆலோசனை.

முகில் >>>> கலைவாணி ஜான்சன்: சாதியின் பெயரைச் சொல்லி சம்பாதிக்கும் ஒரு கூட்டம் இருக்கும் வரையில் சாதியை எதிர்ப்பவர்கள் ஒன்றும் செய்ய முடியாது. உண்மை நிலையைத் பகிர்ந்து உள்ளீர்கள். நன்றிங்க சகோதரி.

முகில் >>>> மகாலிங்கம் படவேட்டான்:
அப்போதும் சரி இப்போதும் சரி. அரசியல் வளையத்திற்குள் சாதி வளர்க்கப் படுகிறது.

முகில் >>>> கலைவாணி ஜான்சன்: குமரி மாவட்டம் கேரளாவின் பிடியில் இருந்த போது தாழ்த்தப்பட்ட தமிழர்கள் மீது பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பெண்கள் மார்பு அளவிற்கு ஏற்ப மார்புவரி வசூலிக்கப்பட்டது. மார்பை மூடவும் அனுமதி இல்லை.

அந்த நிலையில் ஒரு சந்தையில் கேரளச் சண்டியர்கள் அமர்ந்து கொண்டு மார்பை மூடியுள்ள பெண்களின் முந்தானைகளை அறுத்து எறிந்து தாலியை அபராதம் என்று எடுத்துக் கொண்டு பரிகாசம் செய்து வந்தனர். அந்தச் சந்தை  இன்றும் தாலியறுத்தான் சந்தை என்று அழைக்கப்படுகிறது.

இந்த நாஞ்செலி எனும் தமிழ்ப்பெண் முலைவரி (மன்னிக்கவும். உலகத் தமிழர்கள் அறிந்த சொல் வரி) கட்ட முடியாமல் மார்பை அறுத்து கொடுத்ததால் பெரும் போராட்டங்கள்.

1950-களில் நேசமணி தலைமையில் போராடி கன்னியாகுமரி மலையாள மாநிலத்தில் இருந்து தமிழகத்துடன் இணைந்தது.

வெங்கடேசன்: கொடுமையான செயல் 😡

முகில் >>>> தனநாதன் தேவேந்திரன்: ஆனந்தவிகடன், குமுதம் வார இதழ்களை யார் வைத்து நடத்தினார்கள் என்பது தெரிந்த விசயம். அதனால் ஆரியர்களின் பூர்வீகம் இந்தியாவானது. இன்னும் சில தலைமுறைகளில் ஆரியர்கள் தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் என்று எழுதப் படலாம்.

ஆரியர்கள் மத்திய ஆசியாவைச் சேர்ந்தவர்கள். 2000 - 3000 ஆண்டுகள் முன்னால் புலம்பெய்ர்ந்தவர்கள். ஈரானில் தங்கிய ஆரியர்கள் ஈரானியர்கள் ஆனார்கள். பஞ்சாபில் தங்கிய ஆரியர்கள் பஞ்சாபி ஆனார்கள். கேரளாவுக்குப் போனவர்கள் நம்பூதிரிகள் ஆனார்கள்.

எப்படிக் கூட்டிக் கழித்துப் பார்த்தாலும் ஆரியர்கள் ரஷ்யா சைபீரியா காடுகளில் இருந்து புலம் பெயர்ந்தவர்கள் என்பதை மறுக்க முடியாது.  

ஒன்றும் ஒன்றும் சேர்ந்தால் இரண்டு. இது கணக்கியல். பத்து மாதங்களுக்குப் பிறகு மூன்று. இது மனிதவியல். ஆக ஆரியர்கள் விசயத்தில் அதுதான் நடந்து இருக்கிறது.

முகில் >>> டாக்டர் சுபாஷிணி: நன்றிங்க சகோதரி சுபாஷிணி. தக்க நேரத்தில் மிக்க உதவி. மறுப்புத் தெரிவித்தவரின் முதல் பத்தியிலேயே Arya race is Myth என்று எழுதி இருப்பதில் இருந்து இவரின் வரலாற்று அறிவைப் புரிந்து கொள்ள முடிகிறது.

மானிடவியல் பற்றிய அடிப்படைகள் தெரிந்து இருந்து இருந்தால் அத்தகைய பதிவை முன் வைத்து இருக்க மாட்டார்.

ஆக இப்படிப் போன்றவர்களிடம் நாம் வாக்குவாதம் செய்தால் நமக்குத்தான் நேரம் விரயம். மன உளைச்சல்.

தங்களின் மேற்கோள்களை அவருக்கு அனுப்பி இருக்கிறேன். பேஸ்புக் ஊடகத்திலும் தனிப் புலனத்திலும் தான் வாதம் பண்ணுகிறார். நான் கண்டு கொள்ளவில்லை. தூங்குகிறவனை எழுப்பலாம். தூங்குகிறவன் போல நடிக்கிறவனை எப்படிங்க எழுப்புவது. உதவிக்கு மீண்டும் நன்றி.

(பி.கு. இவருக்குப் பதில் கொடுத்தால் நமக்குத் தான் பிரச்சினை. நிம்மதியாக வேலை செய்ய முடியாது.) ✌️

தனநாதன் தேவேந்திரன் >>>> முகில்: நன்றி ஐயா. அந்தச் சந்தேகம் இருந்தது. உறுதிபடுத்தியமைக்கு மீண்டும் நன்றி ஐயா.

முகில் >>> டாக்டர் சுபாஷிணி: நம் பெண்கள் மட்டும் அல்ல ஆண்களும் அவமானப்பட்டு இருக்கிறார்கள். மீசை வைத்து இருந்தால் அதற்கு வரி கட்ட வேண்டும். தங்கி இருக்கும் வீட்டிற்கு கூரை வேய்ந்தால் அதற்கு வரி கட்ட வேண்டும். அது என்னங்க மார்பு வரி. எப்படிங்க மனசு வருது.

இந்த மாதிரி மறைக்கப்பட்ட உண்மைகளை மலேசியத் தமிழர்களும் தெரிந்து கொள்ள வேண்டும். கப்பலேறி வந்த கதை பெரிது அல்ல. கப்பலேறுவதற்கு முன்னால் அங்கே என்ன நடந்தது என்பதையும் மலேசியத் தமிழர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். தெரிந்து வைத்து இருக்க வேண்டும். இது காலத்தின் கட்டாயம் என கருதுகிறேன்.

பெருமாள் கோலாலம்பூர்: வரி விதித்தவன் மன்னன். தன் தாயின் மூடிய சேலையில் பால் குடித்தவன். குடி மக்களை வதைத்தவன், பாரத மாதா என போற்ற வேண்டிய தாய்மார்களின் மார்களுக்கோர் வரி.

கேவலமான மன்னனிடம் வதைப்பட்ட மக்களின் சொல்லொனா துயர் நம் மனதை வருடத்தான் செய்கிறது. தானாக வளர்ந்த மீசைக்கு வரி விதித்தவன் எப்பேர் பட்ட மன்னன்.😭

[7:41 pm, 23/08/2021] Perumal Kuala Lumpur: அவனது  சமஸ்தானத்தில் வீற்றிருந்த அமைச்சர் பெரு மக்கள் மாக்களாக வாழ்ந்திருக்கிறார்கள் போலும்

[7:42 pm, 23/08/2021] Perumal Kuala Lumpur: என்னங்க வருமானம் வருவதிலிருந்து வரி கேட்டால் நியாயம்.

[7:44 pm, 23/08/2021] Perumal Kuala Lumpur: முடிக்கு முடியுமட்டும் வரி விதித்தவன் முடி மன்னனா முடி சூடிய முட்டாள் மன்னனா

[7:47 pm, 23/08/2021] Perumal Kuala Lumpur: இப்பேர் பட்ட மன்னனை எங்க தோட்ட பெண்களைக் கொண்டு வசைபாட சொன்னால் மெட்ராஸ் பாஷை தோற்றுப் போகும்

தேவிசர கடாரம்: இவர்களை எல்லாம் விடுங்கள் ஐயா... மன்னனின் மனைவியின் மனம் என்ன இரும்பால் செய்யப்பட்டது போலும். தன்னைப் போலத் தானே மற்ற பெண்களும் மானத்தோடு வாழ நினைப்பார்கள் என்ற எண்ணம் இல்லாதவளா.... கணவனைக் கண்டித்திருக்க வேண்டும். அவளும் சேர்ந்து பெண்களுக்காக வாதாடி இருக்க வேண்டும். செய்யவில்லையே.

ராஜா சுங்கை பூலோ: இது போன்ற அரசர்களுக்கு தலிபான் சிப்பாய்கள் தான் சரியான தண்டனை கொடுப்பார்கள்.

இராதா பச்சையப்பன் கோலா சிலாங்கூர்: இன்றைய கட்டுரையைப் படித்தேன். சில நிமிடம் எதுவுமே தோன்ற வில்லை. மௌனமானேன். அந்தக் காலத்தில் பெண்கள்  பட்ட வேதனைகளையும், சோதனைகளையும்  கேட்கவும், படிக்கவும் முடியவில்லை.

நினைத்து பார்க்கவே பயமாகவும், அவமானவமாகவும் இருக்கிறது. வீரமங்கை நாஞ்செலியை நினைத்துக் கண்ணீர் தான் வருகிறது. நாஞ்செலி என்ற வீரமங்கையைச் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.

[5:22 pm, 23/08/2021] Ratha Patchiappan: சாதியத்தை எப்படித்தான் தவிர்க்க முயற்சி செய்தாலும் சில இடங்களில் சில நேரங்களில் அதன் பழைய விழுதுகள் தொக்கி வீழ்கின்றன....

[5:22 pm, 23/08/2021] Ratha Patchiappan: இதற்கு என் பதில், மௌனமே. ஜாதி  பிரச்சனைக்கு நான் வர விரும்பவில்லை. ஜாதி, ஜாதினு  சும்மா இருக்கிற ஜாதியை சங்கு ஊதி எழுப்பி ஊதி பெரிதாக்கி அதில் குளிர் காய சிலர் இருக்கிறார்கள்.  

இப்போது நாட்டில் என்ன என்னவோ பிரச்சனைகள் போய்க் கொண்டு இருக்கிறது. நோயிலிருந்து எப்படி விடு படலாம் என்று ஆய்வு செய்தால் அதில் நன்மை பயக்கும். ஜாதி பிரச்சினை, நண்பர்களிடையே பிரிவினை உண்டாக்கும். பகைமையை வளர்க்கும். இது என் தனிப்பட்ட கருத்து.

ராஜா சுங்கை பூலோ: கட்டுரையைப் படித்தேன். கட்டுரையைப் படிக்கும் போதே எனக்கு இரத்தம் சூடேறி விட்டது. இந்த மாதிரி கொடுமைகள் செய்த நபர்களை பெரிய சட்டியில் எண்ணெய் கொதிக்க வைத்து அந்தச் சட்டியில் உயிருடன் போட்டு விடனும்.

தேவிசர கடாரம்: பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை உலகிற்கு எடுத்துரைத்த தங்களுக்கு நன்றிப்பா. ஓர் ஆணாக தாங்கள் பெண்ணின் பெருமைகளையும், சேவைகளையும் மறக்காமல் மறைக்காமல் இந்த உலகிற்கு எடுத்துரைப்பது பெண்களாகிய எங்களுக்கு எல்லாம் பெருமை.

சொல்லொன்னா துயரங்களையும், கண்ணீர் வரலாறுகளையும் தங்கள் எழுத்தின் மூலம் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்ததில் எங்களுக்கு எல்லாம் தாங்கள் ஒரு இரச்சகனாக ஓளி வீசுகிறீர்கள்.

பாதிக்கப்பட்ட பெண்களின் சாபமும் அவர்களின் குடும்பத்தார் சாபங்களும் இன்னும் வாழுகின்றன.

முகில் >>> தேவிசர கடாரம்: மனதை வருடிச் செல்லும் வாசகங்கள்... நன்றிம்மா. தமிழர்களுக்கு தமிழ்நாட்டில் நடந்த கொடுமைகள் அங்குள்ள தமிழர்கள் பலருக்கும் தெரியாமல் உள்ளது.

இருப்பினும் மலேசியாவில் வாழும் தமிழர்கள் தெரிந்து வைத்து இருக்க வேண்டும். அதுதான் முக்கியம். அதற்காகத் தான் இயன்ற வரையில் தமிழ்ப் பெண்களின் தியாகங்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வருகிறோம்.

பேஸ்புக் பின்னூட்டங்கள்

Suresh Baabu: மிகவும் கொடுமையான ஒரு விஷயம் இது.. மனிதர்களிடையே ஏற்றத் தாழ்வை உண்டாக்கி, இழிவு படுத்தும் கொடூரத்தின் உச்சம். இந்தப் பதிவில் சொல்லப் படாத விஷயம். நான் சொல்கிறேன். இதனைச் செய்தவர்கள் கேரள பிராமணர்களாகிய நம்பூதிரிகள்.

இதனைச் செயல்படுத்தியவர்கள் நம்பூதிரிகளுடன் திருமண தொடர்பு வைத்திருக்கும் நாயர்கள் (வடுக திராவிடர்கள்).

கீழ் சாதி பெண்கள் மேலாடை அணிய தடை விதிக்கப் பட்டு இருந்தது. மேல் சாதியினர் சோதனை செய்து பார்க்கிறேன் என்ற பெயரில் முலையை தொட்டு விளையாடுவது வழக்கத்தில் இருந்துள்ளது.

Prabu Rajaiya >>> Suresh Baabu: கீழ்சாதினா எந்த சாதியென்று குறிப்பிட்டீங்கனா பதிவாளரின் நோக்கம் நிறைவேறிடும்..!

கொடுமுட்டி பால் பேக்கர்: எந்த வரலாறு சொல்லுகிறது கொஞ்சம் சொல்லுங்கள். கன்னியாகுமாரியில் எந்த ஊரில் நடந்தது கொஞ்சம் சொல்ல முடியுமா

Karventhan Alagaiah >>>> கொடுமுட்டி பால் பேக்கர்: அண்ணாச்சி இவனுக திருந்த மாட்டார்கள் போல 😄

கொடுமுட்டி பால் பேக்கர் >>>> Karventhan Alagaiah: ஆமா of fir போட்டால் தான் சரி ஆகுவனுக

Vimal Sandhanam: இது என்ன கொடுமை ஐயா? இப்படியுமா மனிதர்கள்?

Bobby Sinthuja: ஐயா, சாதி, சம்பிரதாயம் என்ற போர்வையில் அன்று முதல் இன்று வரை பெண்களை எவ்வளவு இழிவு செய்ய முடியுமோ அந்த அளவுக்கு செய்துள்ளனர் ... உங்களுடைய இந்தப் பதிவும் அதற்கு சான்று பகிர்கின்றது...

(இன்று இந்தப் புலனத்தில் *மார்பு இருந்தால்தானே மார்புவரி - வீரமங்கை நாஞ்செலி* எனும் பதிவிற்கு அன்பர்கள் வழங்கிய அனைத்துப் பதிவுகளும்; பின்னூட்டங்களும் வலைத்தளத்தில் பதிவாகி உள்ளன. மதியம் 12.08-க்கு கலைவாணி ஜான்சன் தொடக்கி வைத்தப் பின்னூட்டத்தில் இருந்து, இன்றிரவு 8.15-க்கு சுங்கை பூலோ கரு. ராஜாவின் பின்னூட்டம் வரை பதிவாகி உள்ளன.)








 

22 ஆகஸ்ட் 2021

பெண்ணைப் போற்றிய புண்ணிய மண்ணிலே

22.08.2021


பெண்ணை ஒரு தெய்வமாகப் போற்றியது இந்திய மண். பெண்ணைப் புனிதமாகப் பார்த்தது இந்திய மண். பெண்ணைச் செல்வமாகப் புகழ்ந்தது இந்திய மண். பெண்ணைப் பெண்ணாகப் பார்க்காமல் ஒரு பாரத மாதா என்று உச்சத்தில் உயர்த்திப் பார்த்தது இந்திய மண்.

ஆனால் அதே அந்தப் புண்ணிய மண்ணில்தான்; அதே அந்தப் புனித மண்ணில்தான் பெண்களுக்கு எதிராகப் பற்பல வன்கொடுமைகள். பற்பல வக்கிர ராகங்கள். வான் மேகங்களையே கிழித்துச் சென்ற ஆணாதிக்கத்தின் அபூர்வராகக் கோலங்கள். அத்தனையும் பெண் பாவங்கள்.

மதம் எனும் பேரில் பல கோணங்கிக் கூத்துகளை விட்டுச் சென்று இருக்கிறார்கள். முகம் சுழிக்க முகாரி ராகங்களைப் பாடிச் சென்று இருக்கிறார்கள். அத்தனையும் பெண் பாவங்கள்.

புண்ணியம் பார்க்கும் கங்கை கரை ஓரத்தில் ஒரு பொட்டல் காடு. பார்க்கிற திசை எல்லாம் மக்கள் கூட்டம். அங்கே ஒரு புனிதமான சடங்கு. பிழியப் பிழிய கதைகள் பேசிக் கொள்கிறார்கள். என்ன கதை. ஓர் இளம்பெண் இறைவனிடம் சேரப் போகிறாள்.

இறந்து போன கணவனின் உடலோடு அவளும் நெருப்பில் விழுந்து சாகப் போகிறாள். அதுதான் அங்கே நடக்கப் போகும் புனிதமான காரியம். புனிதமான சமயச் சடங்கு. 




அப்போதைக்கு அங்கே தெரிவது எல்லாமே சமயச் சம்பிரதாயங்கள். செத்துப் போனவன் வயதாகிப் போன கணவன். அவனுக்கு வயது 82. போக வேண்டிய வயசு. போய்ச் சேர்ந்து விட்டான். உயிரோடு நெருப்பில் விழப் போகிறவள் அவனுடைய இளம் மனைவி. வாழ வேண்டிய வயசு. அவளுக்கு வயது 22.

இப்படி எல்லாம் மதத்தின் பேரில் கொடும் கொடூரங்கள் நடந்து இருக்கின்றன. பார்த்தும் பார்க்காமல் போய் இருக்கிறார்கள். துணிச்சல் இல்லாத ஆண் ஜென்மங்கள். ஒன்று மட்டும் உண்மை. தட்டிக் கேட்கத் துணிவு இல்லாத ஆண்கள் மத்தியில் பெண்களுக்கு நியாயங்கள் கிடைப்பது இல்லை.

சாவதற்கு ஆரத்தி எடுக்கிறாள். கூட்டிக் கழித்துப் பார்த்தால் அங்கே மனுக்குலத்தின் மனிதம் சாகப் போவது நன்றாகவே தெரிகிறது. அதையும் தாண்டிய நிலையில் அங்கே சமயத்தின் பேரில் காலாவதியான சாதி சமயங்கள் அழகாகவே தெரிகின்றன. மன்னிக்கவும்.

ஒரு சமயத்தின் பேரைச் சொல்லி ஓர் உயிரை எரித்துக் கொல்வது பாவம் இல்லையா. புருசன் செத்ததும் பெண்சாதியும் உடன் சாக வேண்டுமா. அப்படி என்று எந்தச் சமயமாவது சொல்கிறதா. இல்லைங்க. எந்தச் சமயமும் அப்படிச் சொல்லவே இல்லை. 





ஒரு சமயத்தின் பலகீனங்களைச் சிலர் பலர் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார்கள். அவ்வளவுதான்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் துருக்கியில் இருந்து ஈரான் வழியாக, சில நாடோடிகள் இந்தியாவிற்குள் வந்தார்கள். அப்படி வந்தவர்கள் சிந்து சமவெளியில் குடியேறி சில சாதி சம்பிரதாயங்களை நன்றாக ஆணி அடித்து இறக்கி விட்டுப் போனார்கள்.

புருசன் செத்துப் போனதும் பொம்பளையும் சாக வேண்டும். உடனே கட்டின புடவையோடு கட்டை ஏற வேண்டும். அப்போதையச் சம்பிரதாயச் சவுக்கடிகளில் ஒன்று.

சொல்லில் மட்டும் இல்லை. எழுதி வைத்தும் சென்று விட்டார்கள். அதன் பின்னர் வந்தவர்கள், உடன் கட்டை ஏறுதலை ஒரு புனிதச் சடங்காகப் போற்றிப் புகழ்ந்தார்கள். புகழ்ந்தது யார். அந்தக் காலத்துச் சில பல பெரிசுகள். அதாவது வேலை வெட்டி இல்லாத வெள்ளை வேட்டிகள்.




பெண்களுக்கு ஏற்பட்ட அந்த வன்கொடுமையை நூறு ஆண்டுகளுக்கு முன்னாலேயே சமூக ஆர்வலர்கள் இந்தியாவில் அழித்து ஒழித்து விட்டார்கள். இருந்தாலும் சாகடிக்கப் பட்ட அந்த ஆயிரக் கணக்கான பெண்களை உயிரோடு திருப்பிக் கொண்டு வர முடியுமா. சொல்லுங்கள்.

போன உயிர் போனதுதான். அதைப் பற்றி என்ன சொல்வது. கொஞ்ச நேரம் அவர்களை நினைத்துப் பார்த்தாலே போதும். அதுதான் இன்றைய கட்டுரை. படித்த பிறகு அவர்களுக்காகக் கொஞ்ச நேரம் மௌனமாக அஞ்சலி செலுத்துவோம். அந்தப் பெண்களின் ஆத்மா சாந்தி அடையட்டும்.

1823-ஆம் ஆண்டு நடந்த ஒரு நிகழ்ச்சி. கிட்டத் தட்ட ஒரு இருநூறு வருடங்களுக்கு முன்னால் நடந்தது. அந்தப் பெண் எப்படி உயிரோடு சாகடிக்கப் பட்டாள் என்பதை நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள். இப்படி எல்லாம் நடந்து இருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். 




பழைய இந்தியாவில் உடன்கட்டை ஏறியவர்கள் பல இலட்சம் பெண்கள். பெரும்பாலும் இருபது முப்பது வயசு இளம் பெண்கள். படுக்கையில் கிடக்கும் பாட்டி மார்களையும் சமயச் சஞ்சீவிகள் விட்டு வைக்கவில்லை. பாடை கட்டி, மூட்டைக் கட்டி அப்படியே எரியும் நெருப்பில் தூக்கி வீசி இருக்கிறார்கள்.

இந்தக் கதையில் வரும் பெண்ணுக்கு வயது 22. பன்னிரண்டு வயதில் அவளுக்குத் திருமணம். குழந்தைகள் இல்லை. கணவனுக்கு 82 வயது. வயசைப் பார்க்க வேண்டாம். அந்தக் காலத்தில் 80-க்கு 20-ஐ தேடினார்கள். 30-க்கு 10-ஐ தேடினார்கள். அவை எல்லாம் அந்தக் காலத்து வக்கிரமான சந்தோஷங்கள். காலமாகிப் போன காமச் சுவாலைகள்.

அந்தப் பெண்ணின் கணவன், பசு மாடு முட்டி இறந்து போனான். எமன் எப்போதுமே காளை மாட்டில் ஏறி வருவான் என்று சொல்வார்கள். ஆனால் அன்றைக்கு என்னவோ காளை மாடு ’மெடிக்கல் லீவு’ போட்டு இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அதனால் தான் பக்கத்தில் இருந்த பாவம் பசு மாடு மாட்டிக் கொண்டது போலும்.




ஆக அந்தக் காலத்து வழக்கப்படி கணவன் இறந்து போனால் மனைவியும் உடன் கட்டை ஏற வேண்டும். அதாவது நெருப்பில் விழுந்து சாக வேண்டும். அதை வடநாட்டுக்காரர்கள் சதி என்று சொன்னார்கள். தமிழ்நாட்டில் உடன் கட்டை ஏறுதல் என்று சொன்னார்கள். அந்த மாதிரியான ஒரு நிகழ்ச்சிதான் இப்போது அங்கே நடக்கப் போகிறது.

இந்தச் சடங்கு நடப்பதற்கு முதல்நாள், வெள்ளைக்கார நீதிபதியின் வீட்டுக்கு சாகப் போகிற அந்தப் பெண் போய் இருக்கிறாள். இறந்து போன கணவனுடைய உடலுடன் சேர்ந்து தானும் நெருப்பில் விழுந்து இறக்க வேண்டும். அனுமதி வேண்டும் என்று கேட்டு இருக்கிறாள். சட்டப்படி ஏற்றுக் கொள்ள முடியாது என்று நீதிபதி மறுத்து விட்டார். அந்தப் பெண் விடவில்லை. 




அனுமதி கொடுக்க மறுத்தால் நீதிபதியின் வீட்டிற்கு முன்னாலேயே தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொள்வேன் என்று நீதிபதியையே மிரட்டிப் பார்த்தாள். ‘உனக்கு பைத்தியமா’ என்ற நீதிபதி, அவளைத் திட்டி விரட்டி அடித்து விட்டார். திருநெல்வேலிக்கே அல்வா கொடுக்கப் பார்த்தாள். முடியவில்லை.

இருந்தாலும் ஒன்றை நாம் இங்கே மறந்துவிடக் கூடாது. சொந்த பந்தங்களின் நெருக்குதல் இல்லாமல் ஓர் இளம்பெண் அந்த அளவிற்குத் துணிந்து போய் இருக்க மாட்டாள். சொந்த பந்தங்கள் தான் அதற்கு மூல காரணம்.

நீதிபதியின் முடிவை குடும்பத்தார் ஏற்றுக் கொள்ளவில்லை. அந்தப் பெண் விரும்பிய படியே சாக அனுமதிக்க வேண்டும். அதுதான் இந்து மத சம்பிரதாயம் என்று நீதிபதிக்கே சவால் விட்டார்கள். இந்து சமய விவகாரங்களில் தலையிடுவதற்கு வெள்ளைக்காரர்களுக்கு உரிமை இல்லை என்றும் மிரட்டிப் பார்த்தார்கள்.  




நீதிபதிக்கு வேறு வழி தெரியவில்லை. கடைசியில் ’எக்கேடு கெட்டாவது போய்த் தொலையுங்கள்’ என்று சொல்லி கைகழுவி விட்டார். பாவம், அவர்தான் என்ன செய்வார். ஓர் உயிரைக் காப்பாற்ற முயற்சி செய்து பார்த்தார். சரிபட்டு வரவில்லை.

அவள் நெருப்பில் விழுந்து சாவதைப் பார்ப்பதற்காகக் கிராமத்து மக்கள் நூற்றுக் கணக்கில் கூடி நின்றார்கள். பற்றாக் குறைக்கு ஆயிரக் கணக்கில் வெளியூர் வாசிகள். இறந்து போன அவளுடைய கணவனின் உடல் சிதையில் வைக்கப் பட்டது. தீ மூட்டப் பட்டது.

அந்த இளம்பெண் 'ராம்... ராம்...’ என்று சத்தமாகக் கத்தியபடியே சிதையில் போய்ப் படுத்தாள். சில நிமிடங்களில் அவளுடைய உடலில் தீப்பற்றிக் கொண்டது. உடல் எரியத் தொடங்கியது. ஆனால் அடுத்த சில விநாடிகளில் யாரும் எதிர்பார்க்காத ஒன்று நடந்தது. அவள் அலறி அடித்துக் கொண்டு, நெருப்பில் இருந்து வெளியே ஓடி வந்தாள். 




ஓடி வந்த அவளை ஒருவன் தடுத்து நிறுத்தினான். ஒரு பெரிய தடியை எடுத்து வந்து அவளைப் பலமாக அடித்தான். அப்படி அடித்தால் அவள் மயக்கம் போட்டு விழுவாள்.

அந்த மயக்கத்திலேயே அவளைத் தூக்கிக் கொண்டு போய் மறுபடியும் நெருப்பில் போடலாம் என்பதே அவனுடைய திட்டம். ஆனால் அவள் திமிறினாள். இருந்தாலும் அவன் விடவில்லை.

அந்தத் தடியை அழுத்திப் பிடித்து அப்படியே அவளை மீண்டும் நெருப்புக்குள் தள்ளி விட்டான். அவள் பயங்கரமாகக் கத்தினாள். தடியோடு சேர்த்து மற்றவர்களும் சேர்ந்து கொண்டு அவளை நெருப்புக்குள் அமுக்கினார்கள்.

அடுத்து சில விநாடிகளில் அந்தப் பெண் சிதையை விட்டுத் தாவி எழுந்தாள். எரியும் உடலோடு கங்கை நதியை நோக்கி ஓடினாள். 




'அவளை விடாதீர்கள். கொல்லுங்கள்... கொல்லுங்கள்...’ என்று உறவினர்கள் சத்தம் போட்டார்கள். நான்கு பேர் துரத்திக் கொண்டு ஓடினார்கள். அதற்குள் அந்தப் பெண் தண்ணீருக்குள் மூழ்கினாள்.

இரண்டு பேர் கரையில் நின்று கொண்டார்கள். இரண்டு பேர் அவளைத் தண்ணீரில் விரட்டிச் சென்றார்கள். கறுகிப் போன கூந்தலை இறுக்கிப் பிடித்து இழுத்து வந்தார்கள். அவளுடைய கை கால்களில் இருந்த தோல் பிய்ந்து பிய்ந்து விழுந்தது.

முகம் நெருப்பில் வெந்து, தோல் வழுக்கிச் சுருண்டு அலங்கோலமாகக் தொங்கியது. அப்போதும் அவர்கள் விடவில்லை. 




அவளிடம் கால்வாசி உயிர்தான் மிஞ்சி இருந்தது. இவ்வளவையும் பார்த்துக் கொண்டு நின்ற வெள்ளைக்கார நீதிபதிக்கு கோபம் வந்து விட்டது. அவளை விட்டு விடச் சொல்லிச் சத்தம் போட்டார். ஆனால் உறவினர்கள் மறுத்தார்கள்.

’அவள் மறுபிறவி எடுத்து விட்டாள். ஆகவே, அவளைக் கட்டாயப் படுத்திச் சாகடிக்க முடியாது. இனிமேல் அவளைக் காப்பாற்ற வேண்டியது என்னுடைய பொறுப்பு. எங்களுடைய கம்பெனியின் பொறுப்பு’ என்று நீதிபதி மறுபடியும் உரக்கக் கத்தினார்.

இறந்து கொண்டு இருந்த அவளை மீட்டு எடுத்தார். சொந்தக்காரார்கள் போட்ட தடைகளையும் மீறி, அவளைத் தன்னோடு அழைத்துச் சென்றார். அவளுடைய உடலில் பாதி எரிந்து விட்டது. முகமும் பாதி எரிந்து விட்டது. 




இருந்தாலும் உயிர் பிழைத்து விட்டாள். கடவுள் வெள்ளைக்காரன் வடிவத்தில் வந்து நீதி பேசி இருக்கிறார். அப்படித் தான் சொல்ல வேண்டும்.

மருத்துவர்கள் வந்தார்கள். உடனடியான முதலுதவிகளைச் செய்தார்கள். யாரும் அவளைத் தொல்லை பண்ணக் கூடாது என்று காவல் போடப் பட்டது. அந்தப் பெண் ஒரு மாதம் படுத்தப் படுக்கையாய்க் கிடந்தாள்.

பெண்ணைக் காப்பாற்றிய ஆங்கிலேய நீதிபதிக்கு எதிராகப் பல கண்டனக் கூட்டங்கள். பல கண்டனக் கடுதாசிகள். அவற்றை எல்லாம் நீதிபதி சட்டை செய்யவில்லை. அவர்களை மனித மாமிசம் சாப்பிடும் காட்டுமிராண்டிகள் என்று திட்டித் தீர்த்ததுதான் மிச்சம்.

அந்தப் பெண் பின்னர் வேறு ஊருக்கு இரகசியமாக அனுப்பி வைக்கப் பட்டாள். அங்கே போய் கூலி வேலை செய்தாள். ஐம்பது வயது வரை உயிர் வாழ்ந்தாள். கடைசியில் ஓர் அனாதையாக இறந்தும் போனாள். இதை எழுதும் போது என் கண்கள் கல்ங்குகின்றன.




நாடு பிடிக்க வந்த ஒரு வெள்ளைக்காரனுக்கு இருந்த ஒரு மனிதம், ஒரு மனிதநேயம், ஓர் ஈவு இரக்கம், நம்ப சாதி சனங்களுக்கு இல்லாமல் போய் விட்டதே. வேதனையாக இருக்கிறது. சமயத்தின் பேரில் இப்படியும் ஓர் அநியாயமா. நெஞ்சு அடைக்கிறது.

பின்னர் சில நாட்கள் கழித்து அந்த நீதிபதி தம் வேலையை பதவிதுறப்பு செய்துவிட்டு இங்கிலாந்திற்கே போய்ச் சேர்ந்து விட்டார். இனிமேல் அந்த ஜென்மங்களின் கண்ணிலே படக் கூடாது என்று போயே போய்ச் சேர்ந்து விட்டார். நல்ல மனிதர்.

இந்த நிகழ்ச்சியை ஒரு வெள்ளைக்காரப் பெண் நேரில் பார்த்து இருக்கிறார். அதை அப்படியே ஒரு செய்தியாக இங்கிலாந்தில் உள்ள பத்திரிகைக்கு எழுதி அனுப்பியும் விட்டார். அந்தப் பத்திரிகை ஆவணம் இன்னும் இருப்பதால்தான் இந்தக் கதையையும் உங்களால் படிக்க முடிகிறது.

சில ஆண்டுகளுக்கு முன் அந்த ஆவணத்தைப் படித்து இருக்கிறேன். லண்டன் பல்கலைக்கழகத்தில் டிஜிட்டல் முறையில் ஆவணப் படுத்தி வைத்து இருக்கிறார்கள். என்றைக்காவது ஒரு நாள் எழுத வேண்டும் என்று நினைத்தேன். இன்றைக்கு நினைப்பு வந்து விட்டது. 




சதி என்பதை உடன் கட்டை ஏறுதல் என்று சொல்வார்கள். அப்படி இல்லை. அது கொச்சையான மூடப் பழக்கம் என்றுதான் நான் சொல்வேன். அந்த மாதிரியான சமயப் பழக்கங்கள் எந்த அளவிற்கு இந்தியாவை ஆக்கிரமித்து இருந்து இருக்கின்றன பாருங்கள். மேலே சொன்ன அந்த ஒரு காட்டுமிராண்டி நிகழ்ச்சியே போதும்.

இந்தியாவைத் தவிர வேறு சில நாடுகளிலும் அந்த மாதிரியான பழக்கம் இருந்து இருக்கிறது. ஆனால் தூபம் போட்டது யார் தெரியுங்களா. சாட்சாத் இந்தியா. அந்தப் புனித மண்ணின் சமய ஜீவிகள்தான்.

இந்தியா என்கிற பாரத மாதாவைக் குறை சொல்ல வேண்டாம். வந்தாரை வாழ வைக்கும் புண்ணிய பூமி. ஆனால் அந்தப் புண்ணிய பூமியில் வாழ்ந்த சந்தர்ப்ப சமயவாதிகள் தான் அந்த மண்ணிற்கு மாசையும் மருவையும் சீதனங்களாகக் கொடுத்து விட்டுச் சென்று இருக்கிறார்கள்.

பெண்ணை ஒரு தெய்வமாகப் போற்றியது இந்திய மண். பெண்ணைப் பாரத மாதா என்று புகழ்ந்து பாடியது இந்திய மண். ஆனால் அதே அந்தப் புண்ணிய மண்ணில் வாழ்ந்த மனிதர்கள் தான், பெண்களுக்கு எதிராகப் பற்பல வன்கொடுமைகளை வாரி இறைத்துவிட்டுச் சென்று இருக்கிறார்கள்.

ஓர் ஆண்டு இல்லை. ஈராண்டுகள் இல்லை. பற்பல நூறு ஆண்டுகள். அந்தக் கொடுமைகள் தொடர்ந்து பயணித்து இருக்கின்றன. சொல்லில் மாளாது.

பல இலட்சம் பெண்கள் சின்ன வயதிலேயே சாகடிக்கப்பட்டு இருக்கின்றனர். எல்லாம் எதனால் வந்தது. தான் பாவித்த பொருளை அடுத்தவன் பாவிக்கக் கூடாது என்கிற அல்ப புத்தி. இன்னும் தெளிவாகச் சொன்னால் புரையோடிய சின்ன புத்தி. 

அந்த விசயத்தில் அந்தக் காலத்துப் பெரிசுகளைச் சும்மா சொல்லக் கூடாது. படும் போக்கரிகளாகப் பேர் போட்டு இருக்கின்றன. என்ன மாதிரியான கீழ்த்தரமான எண்ணங்கள்.

மொகலாயப் பேரரசர்கள் பாபர், ஹுமாயூன், அக்பர், ஜகாங்கீர், ஷாஜகான், ஔரங்கசிப் போன்றவர்கள், இந்த உடன் கட்டை ஏறுதலைக் கண்டித்து சட்டங்களைக் கொண்டு வந்தார்கள். அந்தச் சட்டங்கள்கூட செல்லுபடி ஆகாமல் போயின.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
21.05.2020

சான்றுகள்:

1. Sangari, K., & Vaid, S. (1981). Sati in Modern India.
2. Trinath, Mishra (2010). The Hindu book of the dead. Penguin Books.
3. The Commission of Sati (Prevention) Act, 1987.
4. Nagendra Kr. Singh(2000).
5. Saroj Gulati, Women and society: northern India in 11th and 12th centuries.
6. Goa Continuity and Change; Narendra K. Wagle. George Coelho. University of Toronto.