23 ஆகஸ்ட் 2021

மார்பு இருந்தால்தானே மார்புவரி - வீரமங்கை நாஞ்செலி

தமிழ் மலர் - 23.08.2021

உலகத்தில் என்னென்னவோ வரிகள். பொன் வரி. பொருள் வரி. வசதி வரி. வருமான வரி. சேவை வரி. தேவை வரி என்று எத்தனை எத்தனையோ வரிகள். இதில் ஜி.எஸ்.டி. ஜிம்கானா வரியை மறந்து விட வேண்டாம். இந்த வரிகளுக்கு எல்லாம் ஐயா வரி ஆத்தா வரி என்று ஒரு பயங்கரமான வரி இருந்தது. அந்த வரியின் பெயர் மார்பு வரி. 


பெண்களுக்கு இருக்கும் இரண்டு மார்புகளுக்கும் போட்ட வரிதான் மார்பு வரி. சின்ன மார்பாக இருந்தால் சின்ன வரி. பெரிய மார்பாக இருந்தால் பெரிய வரி. கட்டத் தவறினால் சிறைத்தண்டனை. இதை எழுதும் போது மனம் வலிக்கிறது.

எதற்கு வரி போடுவது என்று விவஸ்தையே இல்லையா. மனிதத் தன்மை உள்ளவர்கள் தான் இதை எல்லாம் செய்தார்களா? நான் மனிதன்தானா என்று எனக்கே சந்தேகம். என்னையே கேட்டுக் கொள்கிறேன். கிள்ளிப் பார்த்துக் கொள்கிறேன். ஏன் என்றால் நானும் ஒரு மனிதன் தான். ஒரு தமிழன் தான்.

இந்தியாவின் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இப்படி ஒரு வரியைப் போட்டு கதிகலங்கச் செய்தார்கள், 1700-ஆம் ஆண்டுகளில் இந்தியா கன்னியாகுமரி பகுதியில் அரங்கேறிய அசிங்கமான வரி. நான் சொல்லவில்லை. வரலாறு சொல்கிறது.

இந்த மார்பு வரியை எதிர்த்துப் போராடி இரண்டு மார்புகளையும் வெட்டி வீசி எறிந்து உலகத்துக்கே ஒரு பாடம் சொன்ன ஓர் அழகிய பெண்மணியின் கதை வருகிறது.

படியுங்கள். படித்து விட்டு அந்தப் பெண்ணுக்கு ஒரு நிமிடம் அஞ்சலி செலுத்துங்கள். அதுவே அந்தத் தமிழச்சிக்கு நாம் செய்யும் பெரிய  மரியாதை.

முன்பு காலத்தில் அதாவது 1700-ஆம் 1800-ஆம் ஆண்டுகளில் கன்னியாகுமரி பகுதிகள் கேரளா, திருவிதாங்கூர் அரசிற்குச் சொந்தமான நிலப் பகுதிகளாக இருந்தன. அந்தச் சமயத்தில் அங்கே சாதி சங்கதிகள் தீவிரமாக இருந்தன.

மனுதர்ம விதிகள் ஆட்சி செய்த காலத்தில் மனிதர்களை மனிதத் தன்மையுடன் நடத்தாத கொடுமைகள். கன்னியாகுமரி பகுதிகளில் அரங்கேறி உள்ளன.

தற்போதைய தமிழகத்தில் உள்ள கன்னியாகுமரி மாவட்டம், குமரி மாவட்டம், திருநெல்வேலி, கேரளத்தில் உள்ள திருவனந்தபுரம் போன்ற மாவட்டங்கள் மன்னராட்சியின் கட்டுப்பாட்டில் இருந்தன. முன்பு திருவிதாங்கூர் சமஸ்தானம் என்று அழைக்கப்பட்டது. திருவிதாங்கூர் என்றாலும் திருவாங்கூர் என்றாலும் ஒன்றுதான். பெயர்தான் மாற்றம்.

அன்றைய காலத்தில் அங்கு சாதிக் கொடுமை மிகவும் கொடுமையானது. சாதி வர்ணத்தின் அடிப்படையில் பற்பல கொடுமைகள் நடந்து உள்ளன.


அந்தக் காலகட்டத்தில் சாதீயக் கொடுமைகளால் மக்கள் அதிக அடக்குமுறைக்கு ஆளாகி இருந்தனர். பனை மரம் ஏறும் தொழிலைச் செய்து வந்த பனையேறிகள்; நாடார், ஈழவர், புலையர் உட்பட 18 சமுதாயத்தைச் சார்ந்த பெண்கள் தங்கள் மார்பகத்தை மறைக்க முடியாது. மேலாடை அணிவதற்குத் தடை விதிக்கப்பட்டு இருந்தது.

இவர்கள் மார்பகத்தைத் திறந்து போடுவதுதான் உயர் சாதியினருக்குத் தரும் மரியாதையாம். அப்படி தரம் தாழ்ந்த எண்ணத்தில் திருவாங்கூர் நாடு ஒரு நடைமுறையை ஒரு சட்டத்தை வகுத்து வைத்து இருந்தது.

இதனால் தமிழ்ப் பெண்கள் மேலாடை அணியாமல் தலைகுனிந்து வாழ்ந்து வந்தனர். இந்த அடக்கு முறையைச் சீர்திருத்த கிறித்தவ மதத்தைச் சேர்ந்தவர்கள் எதிர்த்து நின்றார்கள். தங்கள் மதப் பெண்களுக்கு, மார்பை மறைத்துக் கொள்ள உரிமை வேண்டும் என்று போராட்டம் செய்தார்கள். அதற்குப் பெயர் தோள் சீலைப் போராட்டம்.

37 ஆண்டுகள் போராட்டத்துக்குப் பிறகு திருவிதாங்கூர் அரசு நாடார் கிருத்தவ பெண்களுக்கு மட்டும் தோள் சீலை அணியவும், மார்பகங்களை மறைக்கவும் உரிமை அளித்தது. மற்ற தமிழ்ப் பெண்களுக்கு முடியாதாம். என்னே கொடுமை.


ஆக அந்த வகையில் தாழ்த்தப்பட்ட பிரிவினரைச் சேர்ந்த பெண்கள் மேலாடை அணிய முடியாது. அப்படி அணிவது மாபெரும் குற்றமாம். அது மட்டும் இல்லை. தாழ்ந்த சாதியைச் சேர்ந்த பெண்களின் மார்புக்கு வரி விதிக்கும் முறையும் அமலுக்கு இருந்தது. இந்தக் கோணங்கித் தனமான வரிகள் எப்படி வந்தன என்பதை முதலில் பார்ப்போம்.

திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நம்பூதிரிகள் எனும் ஆரியர்கள் குடியேறிய பிறகு தான் சாதிக் கொடுமைகள் தலைதூக்கத் தொடங்கின. இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது.

கி.பி. ஏழாம் நூற்றாண்டு வாக்கில் கேரளப் பகுதியில் குடியேறிய நம்பூதிரிகள் பூமியில் உள்ள கடவுள்கள் என்பவர்கள் தாங்கள் தான் என்று சொன்னார்கள். அப்படிச் சொல்லி எல்லோரையும் நம்ப வைத்தார்கள். அரசர்களும் மற்றவர்களும் மதிக்கும் வண்ணம் உயர்வு பெற்றார்கள். நன்றாகவே பெயர் போட்டார்கள்.

மலையாள நாடு நம்பூதிரிகளுக்குத் தரப்பட்டது என்றும்; அரசர் முதல் யாவரும் தங்களுக்குத் தொண்டு செய்யக் கடமைப் பட்டவர்கள் என்றும் கூறி அதையே நடைமுறைப் படுத்தி வந்தார்கள். அதனால் நம்பூதிரிகள் எல்லாம் தெய்வத் தன்மை வாய்ந்தவர்கள் என்று மதிக்கப் பெற்றார்கள்.


நாடார், ஈழவர், முக்குவர், பரவர், புலையர் என சுமார் பதினெட்டு சமூகத்தவரை தாழ்த்தப் பட்டவர்களாக அறிவித்த நம்பூதிரிகள், அவர்களின் மீது கொடுமைகளைக் கட்டவிழ்த்து விட்டனர். இதற்கு திருவிதாங்கூர் சமஸ்தான ராஜாவும் உதவியாக இருந்தார்.

நம்பூதிரிகளில் வழிகாட்டுதலில் அமைந்த தமிழர்ச் சமூகத்தில் சாதிப் பிரிவுகளும்; தீண்டாமையும்; அடிமை வாழ்வும்; நிலைத்து நின்றன. தமிழர்கள் கோவில்களுக்குச் செல்லக் கூடாது. பொதுக் கிணறு, பொதுக் குளம் போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது என தீண்டாமைக் கொடுமைகள்.

தமிழர்கள் யாரும் மேலாடை அணியக் கூடாது. முட்டுக்கு கீழே ஆடைகள் அணியக் கூடாது என்று சட்டத்தைக் கொண்டு வந்தார்கள். நம்பூதிரிகளுக்கு முன்பாக நடந்து போகும் போது தமிழர்ப் பெண்கள் திறந்த மார்புடன் தான் போக வேண்டும்.

தமிழ்ப் பெண்கள் திறந்த மார்புடன் சென்றால்தான் அவர்கள் எங்களுக்கு அளிக்கும் மரியாதை என்றார்கள். அதனையும் மீறி மேலாடை அணிந்தால், அவர்கலின் ஆடை கிழிக்கப்பட்டது. அந்தப் பெண்ணுக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டது.

பெண்களுக்கு மட்டும் இல்லை. ஆண்கள் மீசை வைத்து இருந்தால் அதற்கும் வரி விதிக்கப்பட்டது. கைத்தடி வைத்து இருந்தால் அதற்கும் வரி. கைப்பிடி குடை வைத்து இருந்தால் அதற்கும் வரி. இப்படி பலவகையான வரிக் கொடுமைகள். சோறு என்ற வார்த்தையை கூட தமிழர்கள் சொல்லக் கூடாது; கஞ்சி என்று தான் சொல்ல வேண்டும்.

முன்பு காலத்தில் வர்ண தர்மம் எனப்படும் இந்து மதத்தில் நான்கு வர்ணங்கள் (பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன்) அடையாளம் காட்டப் பெற்றன. ஆனால் நம்பூதிரிகள் தங்கள் சுயநல நோக்கத்தில் அதை வேறுவிதமாக மாற்றி சவர்ணர், அவர்ணர் எனப் பிரித்து வைத்தனர்.

நம்பூதிரிகளின் தீண்டாமைக் கொள்கை, அரசு அனுமதியோடு 1850-ஆம் ஆண்டுகள் வரை தொடர்ந்தன. இதில் அதிகம் பாதிக்கப் பட்டவர்கள் பெரும்பான்மையினராக வாழும் பனையேறி சமுதாயத்தினர்; ஈழவ சமுதாயத்தினர்.

திருவிதாங்கூரில் மேலாடை (Upper cloth) என்பதை “மேல்முண்டு” என்று  அழைக்கின்றனர். அங்குள்ள பெண்கள் இன்றும் இந்த மேல் முண்டை சில சமயச் சடங்குகள் மற்றும் திருமணச் சடங்குகளில் கடைபிடித்து வருகின்றனர்.
இவர்கள் சாதாரணமாக மூன்று முண்டுகளை பயன்படுத்துகின்றனர்.

உடுமுண்டு அதாவது உடுத்திக் கொள்ளுகின்ற முண்டு, மார்பு துண்டு. அதாவது மார்பகங்களை மறைக்கின்ற கச்சை போன்ற வேட்டி. அதற்கும் மேலாக தோளோடு தோளில் இட்டு மறைக்கின்ற மேல்முண்டு. அதாவது மேலாடை போன்ற வேட்டித் துண்டுகளாகும்.

10-ஆம் 11-ஆம் நூற்றாண்டுகளில் நம்பூதிரிகளின் ஆதிக்கம் ஓங்கத் தொடங்கின. சாதிக் கட்டுப்பாடுகளும் உருவெடுத்தன. 12-ஆம் நூற்றாண்டில் இந்தக் கட்டுப்பாடுகள் அதிகரித்தன. மேல் சாதி இந்து என்றும், கீழ் சாதி இந்து என்றும் பாகுபாடுகள் உருவாகின. காணாமை, நடவாமை, தொடாமை போன்ற சமுதாய முறைகள் உருவாகின.

இந்த தீமைகளில் ஒரு பிரிவு தான் தாழ்த்தப்பட்ட மக்கள் இடுப்புக்கு மேலும், முட்டுக்கு கீழும் ஆடை அணியக்கூடாது என்றக் கட்டுப்பாடு. உயர்ந்த சாதி இந்துக்களின் முன்பு தாழ்த்தப்பட்ட பெண்கள் மறைக்கப் படாத மார்பகங்களுடன்தான் மரியாதை செலுத்த வேண்டும்.

நம்பூதிரிகளின் முன்பு தமிழ்ப் பெண்கள் மார்பகங்களை மறைக்கக் கூடாது. மார்பகங்களைத் திறந்து போட்டுத்தான் நடக்க வேண்டும். நாளாக நாளாக அப்படியே அதுவும் மரபாகிப் போனது. கட்டுப்பாட்டை மீறினால் மரணத் தண்டனை விதிக்கப்பட்டது.

கொத்தனாவிளை என்ற ஊரில், இந்த உடைக் கட்டுப்பாட்டுக்கு எதிராக 1822-ஆம் ஆண்டு ஒரு சிறிய போராட்டம் நடைபெற்றது. அதன் பிறகு அதே பேராட்டம் மூன்று கட்டங்களாக நடைபெற்றது. 37 வருட காலப் போராட்டம்.

முதல் கட்டப் போராட்டம் 1822 முதல் 1823 வரை;, இரண்டாம் கட்டப் போராட்டம் 1827 முதல் 1829 வரை; மூன்றாம் கட்டப் போராட்டம் 1858 முதல் 1859 வரையில் நடைபெற்றது.

பெண்களின் உரிமைப் போராட்டத்தில் ஒரு பெண்மணிதான் வீரமங்கை நாஞ்செலி. 30 வயதான நாஞ்செலி கேரளாவின் சேர்தலா என்ற பகுதியில் வசித்து வந்தார். பார்ப்பனர்களின் இந்தக் கொடுமையை எதிர்த்து மார்பு வரி செலுத்த முடியாது என்று போராடி வந்தார். என் மானத்தை காப்பது என் உரிமை என்றார்.

இந்த கொடுமையான வரி விதிப்பை எதிர்த்து கடுமையாகப் போராடி வந்தார். பல மாதங்களாக ஆகியும் அவள் வரி கட்டவில்லை. பல முறை அரசு கேட்டும் இணங்கவில்லை.

அதாவது தங்களின் மார்பை மறைக்க விரும்பும் பெண்கள் கட்ட வேண்டிய வரியை நாஞ்செலி கட்ட மறுத்தார். மார்பை மறைக்காமல் திறந்து போட்டால் என்றால் வரி கிடையாது. என்னே அக்கப்போரான வரி.

ஒரு நாள் திருவிதாங்கூர் அரசின் வரிவிதிப்பாளர்கள் அவளைத் தேடி வீட்டுக்கே வந்து விட்டார்கள். உன் மார்புக்கு வரி கட்டி விட்டாயா என்று கோபமாகக் கேட்டார்கள்.

கொஞ்ச நேரம் காத்து இருங்கள் என்றார் நாஞ்செலி. பணத்தை எடுத்து வருவாள் என்பது வரிவிதிப்பாளர்களின் எதிர்பார்ப்பு. உள்ளே சென்றவள் கையில் வாழை இலைகளை அறுக்கும் அரிவாளுடன் வெளியே வந்தாள்.

இது இருந்தால் தானே வரி கேட்பாய் என்று கத்தினாள். தன் இரு மார்புகளையும் அவர்களின் கண் முன்னாலேயே வெட்டி எறிந்தாள். அவளின் இரு மார்புகளும் உடலை விட்டு பிரிந்தன. அவளுடைய உயிரும் பிரிந்தது. மார்பகத்தை வெட்டியதால் அதிக இரத்தப் போக்கு ஏற்பட்டு நாஞ்செலி இறந்து போனார்.

அந்த காலத்தில் கேரளத்தையே அதிர வைத்த சம்பவம் இது. அது மட்டும் அல்ல. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊர் மக்கள் செய்த தொடர் போராட்டத்தால், வேறு வழி இல்லாமல் மார்பக வரியை ரத்து செய்தது திருவிதாங்கூர் சமஸ்தானம்.

கேரளத்தில் சேர்தலா அருகே ‘முலைச்சிபுரம் ‘என்ற இடத்தில் இந்த துயரச் சம்பவம் நடந்துள்ளது. அந்த ஊருக்குப் பெயர் வந்த காரணமும் அதுதான். ஆனாலும் பாருங்கள். நாஞ்செலியை நினைவு கூறும் வகையில் சேர்தலா உள்ளிட்ட கேரளத்தின் எந்தப் பகுதியிலும் ஒரு நினைவுச் சின்னம் இல்லை.

தற்போது நாஞ்செலியின் பரம்பரையில் ஒரே ஒருவர்தான் உயிரோடு உள்ளார். நாஞ்செலிக்கு பேத்தி முறை. அவருக்கு 67 வயதாகிறது. அவரின் பெயர் லீலாம்மா.

அந்தச் சம்பவம் குறித்து அவர் சொல்கிறார் ”நாஞ்செலிக்கு குழந்தைகள் இல்லை. நாஞ்செலியின் சகோதரியின் பேத்தி நான். என் முன்னோர்கள் நாஞ்செலியின் அழகைப் பற்றி கூறி உள்ளனர். அந்த துயரச் சம்பவம் குறித்தும் சொல்லி இருக்கிறார்கள். நாஞ்செலியின் துணிச்சலான செயல் அப்போதையை திருவாங்கூர் அரசையே அதிர வைத்தது என்றும் சொல்வார்கள்” என்றார்.

இந்தக் கொடுமைகளைப் பார்த்த விவேகானந்தர், குமரி முனைக்கு வந்த பொழுது, “திருவிதாங்கூர் சமஸ்தானம் பைத்தியக்காரர்கள் வாழும் இடம்” என்று சொல்லி இருக்கிறார்.

சாதியின் பெயரால் அடிமைப் படுத்தும் நிலை மாற வேண்டும். மானம் என்பது அனைவருக்கும் உண்டு என்பதை மனித குலம் அறிய வேண்டும். சமுக நலனுக்காக தன் உயிரிரையே தியாகம் செய்த நாஞ்செலி போன்ற இலட்சியப் பெண்களைத் தமிழர்கள் என்றைக்கும் நினைவில் கொள்ள வேண்டும்.

மார்பு இருந்தால் தானே மார்புவரி என்று சொல்லி தன் இரு மார்புகளையும் வெட்டி வீசியவர் வீரமங்கை நாஞ்செலி. வாழ்க அந்த அஞ்சலி. அநீதிக்கு எதிராக நின்று குரல் கொடுத்த நாஞ்செலியை நினைவு கூர்வோம். உங்களுக்கு ஓய்வு கிடைக்கும் போது அவரை நினைத்து அஞ்சலி செலுத்துங்கள்.  

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
23.08.2021

பின்னூட்டங்கள்

கலைவாணி ஜான்சன்: வணக்கம் ஐயா... உண்மை, சாதி சாதியோடு தான் சேர வேண்டும் என்னும் கொள்கை வளர்ப்பு பல இடங்களில் பரவலாக உள்ளது என்பதை மறுக்க முடியாது. சாதி வளர்ப்பில் வெறித் தனமாக இருக்கும் பலர் சில விவரங்களில் அந்த விடாப்பிடி குணத்தை தளர்த்திக் கொள்கிறார்கள். இது உண்மையில் வெட்கக் கேடான விசயம். உண்மை நிலையைத் தான் இங்கே பகிர்ந்து கொண்டேன்.

இரத்தினச் சுருக்கமாகச் சொன்னீர்கள் ஐயா. உண்மையிலும் உண்மை. 👌👌

முகில்: இன்னும் அந்த வர்ண வம்சத்திற்கு ஆதரவு தரும் ஆரியத் தன்மைகள் வலம் வரவே செய்கின்றன சகோதரி. கருத்துகளுக்கு நன்றி. மற்ற அன்பர்களின் பதிவுகளுக்குப் பின்னர் பின்னூட்டங்கள் வழங்குகிறேன். நன்றி.

மகாலிங்கம் படவேட்டான்: அரசியல்வாதிகள் மிகக் கச்சிதமாகச் சாதியை மூடி மூடி வளர்கிறார்கள். சாதியை மூலமாக வைத்து அரசியல் செய்பவர்கள் தான் அதிகம்... 🤦🏽‍♂️

முகில்:  மலேசிய சிவசித்தி ஆன்மீக நிறுவனம் (Sivasiddhi Spiritual Foundation). நான் எழுதிய தீண்டாமைக் கொடுமையில் திருவாங்கூர் தமிழ்ப்பெண்கள் (தமிழ் மலர் - 21.08.2021) கட்டுரைக்கு மறுப்புக் கருத்துகள் தெரிவித்து உள்ளார்கள். அன்பர்களின் பார்வைக்குக் கொண்டு வருகிறேன்.

Aiya Muthu Krishnan, I read your article, but I think it is biased, not fully facts based and bounded with emotional, in my opinion. Opinions may differ. Maybe you can verify further.

1. Arya race is Myth.

2. Are the so called Uyar Jatis are not Tamils?

3. in Manusmriti, which verse?

4. You mentioned breast tax but why never mentioned Xenddi tax?

5.etc Misleading Article by Aiya Muthu Krishnan?

https://sivasiddhi.blogspot.com/2021/08/misleading-article-by-aiya-muthu.html?fbclid=IwAR2D4Rya9les-HGxB-kf-dwPE55HWJ7EivT0PNezOPwYj1ouxuPRcwSA_C0

கலைவாணி ஜான்சன்: கொடுமைக்கு எல்லை இல்லா அந்தக் காலத்தில் வாழ்ந்த பெண் போராளி வீரமங்கை நாஞ்செலி; சரித்திரத்தில் இடம் பெறும் இந்தப் பதிவு என்று உணர்கிறேன் ஐயா. மனிதர்கள் இப்படி செய்ய மாட்டார்கள். இவர்கள் மனிதர்களே அல்ல. அரக்கர்கள். நேயம் இல்லா அரக்கர்கள். ஆகவே தான் இவ்வளவு கீழ்த் தரமான விசயத்தைச் செய்ய முடிந்தது.

தனநாதன் தேவேந்திரன்: வணக்கம் ஐயா. ஆரியர்கள் இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் என்ற கட்டுரைகளை அன்றைய ஆனந்த விகடன் கலைமகள் தீபாவளி மலர்களில் படித்துள்ளேன்.

1. மத்திய ஆசியாவில் ஆரியர்களின் எந்த அடிச்சுவடும் இல்லை என குறிப்பிட்டிருந்தது.

2. வர்ணாசிரமக் கொள்கை மனிதர்களின் குணாதிசிய அடிப்படையில் உள்ளதே தவிர ஏற்ற தாழ்வு உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற நோக்கில் அல்ல என பலர் பேசி எழுதியும் உள்ளனர்.

இந்துக்கள் இதை எதையும் பொருட்படுத்தாமல் வேறுபாடுகளை வளர்த்தனர். பல கொடுமைகளையும் செய்தனர். செய்து வருகின்றனர். தன் சமயத்தின் மாண்பைக் கெடுக்கிறோம் என்ற உணர்வே அவர்களுக்கு இல்லை.

சாதி உயர்வு தாழ்வுகளுக்கும் இறை வழிபாட்டிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்ற சிந்தனை வளர்வது எக்காலமோ கச்சி ஏகம்பனே

டாக்டர் சுபாஷிணி: தோழர்.. இக்கேள்விகளை எழுப்பியவர் மானுடவியல்,  மரபியல் ஆகிய துறைகள் சார்ந்த தெளிவு அல்லது புரிதல் இல்லாத வகையில் கேள்விகளை முன் வைத்து இருக்கின்றார். இதனை அவர் தெளிவு படுத்திக் கொள்ள அவர் பல நூல்களைப் படிக்க வேண்டாம். தற்போதைக்கு ஒரே ஒரு நூலை அவர் படிக்க வேண்டும் என வலியுறுத்துங்கள்.

English: Early Indians இதே நூல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வந்துள்ளது. நூல் பெயர்: ஆதி இந்தியர்கள். அமேசான் வலைத்தளத்தில் வாங்கி வாசிக்கலாம்.

தங்களால் பதில் கூற முடியவில்லை என்றால் உடனே ஆங்கிலேயர்கள் நம்மை முட்டாள்கள் ஆக்கி விட்டார்கள் என சொல்வதும் ஒரு அறியாமையின் வெளிப்பாடு தான்.

மனித இனத்தின் மரபியல் சோதனைகள் தீவிரப் படுத்தப்பட்டு மிகப் பெரும் துறையாக வளர்ந்து பல செய்திகளை உலகுக்கு அளித்து விட்டது. இன்னமும் சிறிய வட்டத்திற்குள்ளேயே இருந்து தனக்குத் தெரிந்ததை மட்டுமே பேசிக் கொண்டிருப்பது என்பது....... அவரை இந்த நூலை வாசிக்கச் சொல்லுங்கள்.

சாதியின் பெயரால் கடந்த நூற்றாண்டுகளில் சில சமூகத்துப் பெண்கள் இந்திய சூழலில் பட்ட அவமானங்களும் துன்பங்களும் இப்படி மலேசியாவிலும் வெளிப்படையாக பேசப்பட வேண்டும். நல்ல கட்டுரை.

தனநாதன் தேவேந்திரன் >>>> டாக்டர் சுபாஷிணி: நன்றி அம்மா விவேகமான ஆலோசனை.

முகில் >>>> கலைவாணி ஜான்சன்: சாதியின் பெயரைச் சொல்லி சம்பாதிக்கும் ஒரு கூட்டம் இருக்கும் வரையில் சாதியை எதிர்ப்பவர்கள் ஒன்றும் செய்ய முடியாது. உண்மை நிலையைத் பகிர்ந்து உள்ளீர்கள். நன்றிங்க சகோதரி.

முகில் >>>> மகாலிங்கம் படவேட்டான்:
அப்போதும் சரி இப்போதும் சரி. அரசியல் வளையத்திற்குள் சாதி வளர்க்கப் படுகிறது.

முகில் >>>> கலைவாணி ஜான்சன்: குமரி மாவட்டம் கேரளாவின் பிடியில் இருந்த போது தாழ்த்தப்பட்ட தமிழர்கள் மீது பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பெண்கள் மார்பு அளவிற்கு ஏற்ப மார்புவரி வசூலிக்கப்பட்டது. மார்பை மூடவும் அனுமதி இல்லை.

அந்த நிலையில் ஒரு சந்தையில் கேரளச் சண்டியர்கள் அமர்ந்து கொண்டு மார்பை மூடியுள்ள பெண்களின் முந்தானைகளை அறுத்து எறிந்து தாலியை அபராதம் என்று எடுத்துக் கொண்டு பரிகாசம் செய்து வந்தனர். அந்தச் சந்தை  இன்றும் தாலியறுத்தான் சந்தை என்று அழைக்கப்படுகிறது.

இந்த நாஞ்செலி எனும் தமிழ்ப்பெண் முலைவரி (மன்னிக்கவும். உலகத் தமிழர்கள் அறிந்த சொல் வரி) கட்ட முடியாமல் மார்பை அறுத்து கொடுத்ததால் பெரும் போராட்டங்கள்.

1950-களில் நேசமணி தலைமையில் போராடி கன்னியாகுமரி மலையாள மாநிலத்தில் இருந்து தமிழகத்துடன் இணைந்தது.

வெங்கடேசன்: கொடுமையான செயல் 😡

முகில் >>>> தனநாதன் தேவேந்திரன்: ஆனந்தவிகடன், குமுதம் வார இதழ்களை யார் வைத்து நடத்தினார்கள் என்பது தெரிந்த விசயம். அதனால் ஆரியர்களின் பூர்வீகம் இந்தியாவானது. இன்னும் சில தலைமுறைகளில் ஆரியர்கள் தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் என்று எழுதப் படலாம்.

ஆரியர்கள் மத்திய ஆசியாவைச் சேர்ந்தவர்கள். 2000 - 3000 ஆண்டுகள் முன்னால் புலம்பெய்ர்ந்தவர்கள். ஈரானில் தங்கிய ஆரியர்கள் ஈரானியர்கள் ஆனார்கள். பஞ்சாபில் தங்கிய ஆரியர்கள் பஞ்சாபி ஆனார்கள். கேரளாவுக்குப் போனவர்கள் நம்பூதிரிகள் ஆனார்கள்.

எப்படிக் கூட்டிக் கழித்துப் பார்த்தாலும் ஆரியர்கள் ரஷ்யா சைபீரியா காடுகளில் இருந்து புலம் பெயர்ந்தவர்கள் என்பதை மறுக்க முடியாது.  

ஒன்றும் ஒன்றும் சேர்ந்தால் இரண்டு. இது கணக்கியல். பத்து மாதங்களுக்குப் பிறகு மூன்று. இது மனிதவியல். ஆக ஆரியர்கள் விசயத்தில் அதுதான் நடந்து இருக்கிறது.

முகில் >>> டாக்டர் சுபாஷிணி: நன்றிங்க சகோதரி சுபாஷிணி. தக்க நேரத்தில் மிக்க உதவி. மறுப்புத் தெரிவித்தவரின் முதல் பத்தியிலேயே Arya race is Myth என்று எழுதி இருப்பதில் இருந்து இவரின் வரலாற்று அறிவைப் புரிந்து கொள்ள முடிகிறது.

மானிடவியல் பற்றிய அடிப்படைகள் தெரிந்து இருந்து இருந்தால் அத்தகைய பதிவை முன் வைத்து இருக்க மாட்டார்.

ஆக இப்படிப் போன்றவர்களிடம் நாம் வாக்குவாதம் செய்தால் நமக்குத்தான் நேரம் விரயம். மன உளைச்சல்.

தங்களின் மேற்கோள்களை அவருக்கு அனுப்பி இருக்கிறேன். பேஸ்புக் ஊடகத்திலும் தனிப் புலனத்திலும் தான் வாதம் பண்ணுகிறார். நான் கண்டு கொள்ளவில்லை. தூங்குகிறவனை எழுப்பலாம். தூங்குகிறவன் போல நடிக்கிறவனை எப்படிங்க எழுப்புவது. உதவிக்கு மீண்டும் நன்றி.

(பி.கு. இவருக்குப் பதில் கொடுத்தால் நமக்குத் தான் பிரச்சினை. நிம்மதியாக வேலை செய்ய முடியாது.) ✌️

தனநாதன் தேவேந்திரன் >>>> முகில்: நன்றி ஐயா. அந்தச் சந்தேகம் இருந்தது. உறுதிபடுத்தியமைக்கு மீண்டும் நன்றி ஐயா.

முகில் >>> டாக்டர் சுபாஷிணி: நம் பெண்கள் மட்டும் அல்ல ஆண்களும் அவமானப்பட்டு இருக்கிறார்கள். மீசை வைத்து இருந்தால் அதற்கு வரி கட்ட வேண்டும். தங்கி இருக்கும் வீட்டிற்கு கூரை வேய்ந்தால் அதற்கு வரி கட்ட வேண்டும். அது என்னங்க மார்பு வரி. எப்படிங்க மனசு வருது.

இந்த மாதிரி மறைக்கப்பட்ட உண்மைகளை மலேசியத் தமிழர்களும் தெரிந்து கொள்ள வேண்டும். கப்பலேறி வந்த கதை பெரிது அல்ல. கப்பலேறுவதற்கு முன்னால் அங்கே என்ன நடந்தது என்பதையும் மலேசியத் தமிழர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். தெரிந்து வைத்து இருக்க வேண்டும். இது காலத்தின் கட்டாயம் என கருதுகிறேன்.

பெருமாள் கோலாலம்பூர்: வரி விதித்தவன் மன்னன். தன் தாயின் மூடிய சேலையில் பால் குடித்தவன். குடி மக்களை வதைத்தவன், பாரத மாதா என போற்ற வேண்டிய தாய்மார்களின் மார்களுக்கோர் வரி.

கேவலமான மன்னனிடம் வதைப்பட்ட மக்களின் சொல்லொனா துயர் நம் மனதை வருடத்தான் செய்கிறது. தானாக வளர்ந்த மீசைக்கு வரி விதித்தவன் எப்பேர் பட்ட மன்னன்.😭

[7:41 pm, 23/08/2021] Perumal Kuala Lumpur: அவனது  சமஸ்தானத்தில் வீற்றிருந்த அமைச்சர் பெரு மக்கள் மாக்களாக வாழ்ந்திருக்கிறார்கள் போலும்

[7:42 pm, 23/08/2021] Perumal Kuala Lumpur: என்னங்க வருமானம் வருவதிலிருந்து வரி கேட்டால் நியாயம்.

[7:44 pm, 23/08/2021] Perumal Kuala Lumpur: முடிக்கு முடியுமட்டும் வரி விதித்தவன் முடி மன்னனா முடி சூடிய முட்டாள் மன்னனா

[7:47 pm, 23/08/2021] Perumal Kuala Lumpur: இப்பேர் பட்ட மன்னனை எங்க தோட்ட பெண்களைக் கொண்டு வசைபாட சொன்னால் மெட்ராஸ் பாஷை தோற்றுப் போகும்

தேவிசர கடாரம்: இவர்களை எல்லாம் விடுங்கள் ஐயா... மன்னனின் மனைவியின் மனம் என்ன இரும்பால் செய்யப்பட்டது போலும். தன்னைப் போலத் தானே மற்ற பெண்களும் மானத்தோடு வாழ நினைப்பார்கள் என்ற எண்ணம் இல்லாதவளா.... கணவனைக் கண்டித்திருக்க வேண்டும். அவளும் சேர்ந்து பெண்களுக்காக வாதாடி இருக்க வேண்டும். செய்யவில்லையே.

ராஜா சுங்கை பூலோ: இது போன்ற அரசர்களுக்கு தலிபான் சிப்பாய்கள் தான் சரியான தண்டனை கொடுப்பார்கள்.

இராதா பச்சையப்பன் கோலா சிலாங்கூர்: இன்றைய கட்டுரையைப் படித்தேன். சில நிமிடம் எதுவுமே தோன்ற வில்லை. மௌனமானேன். அந்தக் காலத்தில் பெண்கள்  பட்ட வேதனைகளையும், சோதனைகளையும்  கேட்கவும், படிக்கவும் முடியவில்லை.

நினைத்து பார்க்கவே பயமாகவும், அவமானவமாகவும் இருக்கிறது. வீரமங்கை நாஞ்செலியை நினைத்துக் கண்ணீர் தான் வருகிறது. நாஞ்செலி என்ற வீரமங்கையைச் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.

[5:22 pm, 23/08/2021] Ratha Patchiappan: சாதியத்தை எப்படித்தான் தவிர்க்க முயற்சி செய்தாலும் சில இடங்களில் சில நேரங்களில் அதன் பழைய விழுதுகள் தொக்கி வீழ்கின்றன....

[5:22 pm, 23/08/2021] Ratha Patchiappan: இதற்கு என் பதில், மௌனமே. ஜாதி  பிரச்சனைக்கு நான் வர விரும்பவில்லை. ஜாதி, ஜாதினு  சும்மா இருக்கிற ஜாதியை சங்கு ஊதி எழுப்பி ஊதி பெரிதாக்கி அதில் குளிர் காய சிலர் இருக்கிறார்கள்.  

இப்போது நாட்டில் என்ன என்னவோ பிரச்சனைகள் போய்க் கொண்டு இருக்கிறது. நோயிலிருந்து எப்படி விடு படலாம் என்று ஆய்வு செய்தால் அதில் நன்மை பயக்கும். ஜாதி பிரச்சினை, நண்பர்களிடையே பிரிவினை உண்டாக்கும். பகைமையை வளர்க்கும். இது என் தனிப்பட்ட கருத்து.

ராஜா சுங்கை பூலோ: கட்டுரையைப் படித்தேன். கட்டுரையைப் படிக்கும் போதே எனக்கு இரத்தம் சூடேறி விட்டது. இந்த மாதிரி கொடுமைகள் செய்த நபர்களை பெரிய சட்டியில் எண்ணெய் கொதிக்க வைத்து அந்தச் சட்டியில் உயிருடன் போட்டு விடனும்.

தேவிசர கடாரம்: பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை உலகிற்கு எடுத்துரைத்த தங்களுக்கு நன்றிப்பா. ஓர் ஆணாக தாங்கள் பெண்ணின் பெருமைகளையும், சேவைகளையும் மறக்காமல் மறைக்காமல் இந்த உலகிற்கு எடுத்துரைப்பது பெண்களாகிய எங்களுக்கு எல்லாம் பெருமை.

சொல்லொன்னா துயரங்களையும், கண்ணீர் வரலாறுகளையும் தங்கள் எழுத்தின் மூலம் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்ததில் எங்களுக்கு எல்லாம் தாங்கள் ஒரு இரச்சகனாக ஓளி வீசுகிறீர்கள்.

பாதிக்கப்பட்ட பெண்களின் சாபமும் அவர்களின் குடும்பத்தார் சாபங்களும் இன்னும் வாழுகின்றன.

முகில் >>> தேவிசர கடாரம்: மனதை வருடிச் செல்லும் வாசகங்கள்... நன்றிம்மா. தமிழர்களுக்கு தமிழ்நாட்டில் நடந்த கொடுமைகள் அங்குள்ள தமிழர்கள் பலருக்கும் தெரியாமல் உள்ளது.

இருப்பினும் மலேசியாவில் வாழும் தமிழர்கள் தெரிந்து வைத்து இருக்க வேண்டும். அதுதான் முக்கியம். அதற்காகத் தான் இயன்ற வரையில் தமிழ்ப் பெண்களின் தியாகங்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வருகிறோம்.

பேஸ்புக் பின்னூட்டங்கள்

Suresh Baabu: மிகவும் கொடுமையான ஒரு விஷயம் இது.. மனிதர்களிடையே ஏற்றத் தாழ்வை உண்டாக்கி, இழிவு படுத்தும் கொடூரத்தின் உச்சம். இந்தப் பதிவில் சொல்லப் படாத விஷயம். நான் சொல்கிறேன். இதனைச் செய்தவர்கள் கேரள பிராமணர்களாகிய நம்பூதிரிகள்.

இதனைச் செயல்படுத்தியவர்கள் நம்பூதிரிகளுடன் திருமண தொடர்பு வைத்திருக்கும் நாயர்கள் (வடுக திராவிடர்கள்).

கீழ் சாதி பெண்கள் மேலாடை அணிய தடை விதிக்கப் பட்டு இருந்தது. மேல் சாதியினர் சோதனை செய்து பார்க்கிறேன் என்ற பெயரில் முலையை தொட்டு விளையாடுவது வழக்கத்தில் இருந்துள்ளது.

Prabu Rajaiya >>> Suresh Baabu: கீழ்சாதினா எந்த சாதியென்று குறிப்பிட்டீங்கனா பதிவாளரின் நோக்கம் நிறைவேறிடும்..!

கொடுமுட்டி பால் பேக்கர்: எந்த வரலாறு சொல்லுகிறது கொஞ்சம் சொல்லுங்கள். கன்னியாகுமாரியில் எந்த ஊரில் நடந்தது கொஞ்சம் சொல்ல முடியுமா

Karventhan Alagaiah >>>> கொடுமுட்டி பால் பேக்கர்: அண்ணாச்சி இவனுக திருந்த மாட்டார்கள் போல 😄

கொடுமுட்டி பால் பேக்கர் >>>> Karventhan Alagaiah: ஆமா of fir போட்டால் தான் சரி ஆகுவனுக

Vimal Sandhanam: இது என்ன கொடுமை ஐயா? இப்படியுமா மனிதர்கள்?

Bobby Sinthuja: ஐயா, சாதி, சம்பிரதாயம் என்ற போர்வையில் அன்று முதல் இன்று வரை பெண்களை எவ்வளவு இழிவு செய்ய முடியுமோ அந்த அளவுக்கு செய்துள்ளனர் ... உங்களுடைய இந்தப் பதிவும் அதற்கு சான்று பகிர்கின்றது...

(இன்று இந்தப் புலனத்தில் *மார்பு இருந்தால்தானே மார்புவரி - வீரமங்கை நாஞ்செலி* எனும் பதிவிற்கு அன்பர்கள் வழங்கிய அனைத்துப் பதிவுகளும்; பின்னூட்டங்களும் வலைத்தளத்தில் பதிவாகி உள்ளன. மதியம் 12.08-க்கு கலைவாணி ஜான்சன் தொடக்கி வைத்தப் பின்னூட்டத்தில் இருந்து, இன்றிரவு 8.15-க்கு சுங்கை பூலோ கரு. ராஜாவின் பின்னூட்டம் வரை பதிவாகி உள்ளன.)








 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக