21 ஆகஸ்ட் 2021

தீண்டாமைக் கொடுமையில் திருவாங்கூர் தமிழ்ப்பெண்கள்

தமிழ் மலர் - 21.08.2021

பார்ப்பதும் தீட்டு. பழகுவதும் தீட்டு.
தொடுவதும் தீட்டு. படுவதும் தீட்டு.


இப்படி ஒரு தீண்டாமைக் கொடுமை முன்பு காலத்தில் இருந்தது. எங்கே… உலகத்திற்கு உத்தமம் பேசிய அக்கரை மண்ணில் தான். இப்போது அந்தக் கொடுமை இல்லை. புதைத்து விட்டார்கள்.


இருந்தாலும் அங்கே இங்கே சில பல இடங்களில், அரசல் புரசலாகத் தேய்த்துக் கொண்டு முளைத்துக் கொண்டு தான் இருக்கிறது. அதையும் பார்த்து உத்தமச் சீலர்கள் புன்னகை பூத்துக் கொண்டுதான் வருகிறார்கள் போகிறார்கள். வெள்ளை வேட்டியை இழுத்து இடுப்பில் இறுக்கமாய்க் கட்டிக் கொள்கிறார்கள். பெருச்சாளிக்கு எட்டு முழம் வேட்டி கட்டினால் எப்படி இருக்கும். கற்பனை செய்து கொள்ளுங்கள்.

தீண்டாமைக்குச் செக்கு இழுத்த சிறுநில மன்னர்கள் இருந்தார்கள். அரசு முத்திரை குத்தி அரச மரியாதை வழங்கிய சமீன்தாரர்கள் இருந்தார்கள். பட்டுப் பீதாம்பரம் வீசிய பசப்புச் செம்மல்கள் இருந்தார்கள். சாமியின் பெயரைச் சொல்லி சிறிசு பெரிசுகளைச் சீரழித்த பெரிய மனுசர்களும் இருந்தார்கள். மன்னிக்கவும்… இருந்தன. சின்ன ஒரு மரியாதை கொடுப்போம்.

அந்த மாதிரி வக்கிரம் படைத்தவர்களைப் பற்றி எழுதுவதற்கு மனசு வரவில்லை. என்ன செய்வது. தமிழர்களின் வரலாற்றைத் தமிழர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். ஆக எழுதியே ஆக வேண்டும் என்கிற ஒரு கட்டாய நிலை. அதனால் எழுத வேண்டி உள்ளது.


ஒரு காலத்தில் தமிழ் மண்ணில் வாழ்ந்து மறைந்த ஒவ்வொரு தமிழர்ப் பிரிவினர் மீதும் ஒரு வகையான அடக்குமுறை திணிக்கப் பட்டது. உயர்ச் சாதி என்று சொல்லிக் கொண்டவர்கள் போட்ட அத்துமீறிய சடங்குச் சம்பிரதாயங்கள். ஏராளம் ஏராளம்.

அந்த உயர்ச் சாதியினரிடம் தமிழர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும். எந்த மாதிரியான ஆடைகளை உடுத்த வேண்டும். அவர்களுக்கு எப்படி மரியாதைகள் செய்ய வேண்டும். எவ்வளவு தூரம் தள்ளி நிற்க வேண்டும். இவை எல்லாம் தமிழர்கள் மீது சொல்லாமல் எழுதி வைக்கப்பட்ட ஒடுக்கு முறைத் திணிப்புகள்.

ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்னால் வரையில் தமிழர்களைச் சாதி சாதியாகப் பிரித்து வைத்து இருந்தார்கள். அவன் அந்த சாதி. இவன் இந்த சாதி. நான் பெரியவன். நீ சின்னவன் என்று சூடம் கொளுத்தி சாம்பிராணி வேறு போட்டுக் காட்டினார்கள்.

’சாதியைச் சாக்கடையில் வீசு’ என்று சொன்னவர்களுக்குச் சவுக்கடி கொடுத்தார்கள். சவர்க்காரத் தொட்டிகளில் போட்டு அமுக்கிக் குளம் குட்டைகளில் தூக்கி வீசியும் இருக்கிறார்கள்.


சரி. இந்தச் சாதிச் சடங்குகள் எப்படி வந்தன. அதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். ஆரியர்கள் இந்தியாவிற்குள் காலடி வைத்த காலக் கட்டத்தில் இருந்து அந்தச் சடங்குச் சம்பிரதாயங்கள் தொடங்குகின்றன. இந்திய வரலாற்றை ஆழமாகப் படித்தால் தெரியும்.

ஆரியர்கள் யார்? அவர்கள் எங்கு இருந்து வந்தார்கள். தொடர்ந்து படியுங்கள். சுருக்கமாகச் சொல்கிறேன்.

ஆரியர் எனும் சொல் ஈரானிய மொழிச் சொல். ஆர்யா (Arya) எனும் சொல்லில் இருந்து மருவி வந்தது. இந்தச் சொல்லை ரிக் வேத நூலிலும் பார்க்கலாம். 2500 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே ஆர்யா எனும் சொல் பயன்பாட்டில் இருந்து வந்து இருக்கிறது.

(சான்று: https://ta.wikipedia.org/s/o2d)

தவிர இந்த ஆர்யா எனும் சொல் அய்ரிய (Ayrya) எனும் ஈரானிய மொழிச் சொல்லுடன் இணைந்து வரும் சொல்லாகும். இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மனி நாசிகளின் இனவாதக் கொள்கையில் ஒரு வெறுப்புக்குரிய சொல்லாகவும் மாறியது.

(Gershevitch, Ilya (1968). "Old Iranian Literature". Handbuch der Orientalistik, Literatur I. Leiden: Brill. பக். 1–31)


ஆரியர்கள் என்பவர்கள் துருக்கி, ஈராக், ஈரான் நாடுகளில் இருந்து இந்தியாவிற்குள் புலம் பெயர்ந்தவர்கள். இவர்களின் பூர்வீகம் ரஷ்யா. அங்கு இருந்த சைபீரியா பனிப் பிரதேசங்களில் வாழ்ந்து வந்தார்கள். சைபீரியா பூர்வீக மக்களுடன் பிரச்சினை. தவிர்க்கப் பட்டார்கள். அதனால் புலம் பெயர்ந்தார்கள்.

(Aryans originated in the southwestern steppes of present-day Russia or Scandinavia, or at least that in those countries the original Aryan ethnicity had been preserved.)

ஜெர்மனிக்கு புலம் பெயர்ந்து அப்படியே ஐரோப்பாவில் வலது காலை எடுத்து வைத்து ஈரானில் இடது காலை வைத்தார்கள். கடைசியில் இரண்டு கால்களையும் சேர்த்து வைத்து இந்தியாவிற்குள் தஞ்சம் அடைந்தார்கள்.

(சான்று:https://en.wikipedia.org/wiki/Aryan_race#19th-century_physical_anthropology


சிந்து சமவெளியின் சிந்து பைரவிகள் பாடிய சிந்து மக்களைத் தங்களின் ஆன்மீகப் பாதையில் ஈர்த்துக் கொண்டார்கள். சங்கீத அரகோணத்தில் சிந்து மக்களும் காம்போதிகளாக மாறிப் போனார்கள் என்று கூட சொல்லலாம். தப்பில்லை. அங்கு வாழ்ந்த வெள்ளந்திச் சிந்து மக்களைத் தொழிலுக்கு ஏற்றவாறு பிரித்து வைத்தார்கள்.

அந்தப் பிரிவினைக் கோலம் தமிழ்நாட்டில் இருந்து கப்பலேறி இங்கேயும் வந்தது. இப்போது இந்த மலைநாட்டிலுகூட சில இடங்களில் காம்போதி ராகங்களை இசைத்துக் கொண்டு இருக்கிறது.

இங்கே கொஞ்சம் பரவாயில்லை. இருந்தாலும் சமயங்களில் சில இடங்களில் சாதிக்குச் சுண்ணாம்பு அடித்து அழகு பார்க்கிறார்கள். சின்ன ஒரு கொசுக்கடி. சின்ன ஒரு மௌனராகம். அவ்வளவுதான். விடுங்கள்.
 
ஒரு காலக் கட்டத்தில் தமிழர்கள் மீது எண்ணற்ற அடக்கு முறைகள். எல்லாம் தமிழகத்தில் நடந்தவைதான். அந்த மாதிரியான சாதியக் கொடுமைத் தடங்களில் ஒன்றுதான் 18-19-ஆம் நூற்றாண்டுகளில் நடந்த தோள் சீலைப் போராட்டம்.


தமிழ்ப் பெண்கள் ரவிக்கை அணியக் கூடாது. திறந்த மார்புடன் நடக்க வேண்டும். மூஞ்சுறு முகாரிகளின் ஓர் அடக்குமுறை.

அன்றைய கேரளப் பகுதியான தென் திருவிதாங்கூர், தமிழக எல்லைப் புறங்கள், கன்னியாகுமரி பகுதிகளில் அந்தப் போராட்டங்கள் நடைபெற்றன. அங்கு வாழ்ந்த தமிழர்கள் ஆதிக்க வர்க்கத்தினரின் கடுமையான ஒடுக்கு முறையில் தனித்துப் பிரித்து வைக்கப் பட்டனர்.

எத்தனை அடி தூரத்தில் நின்று பேச வேண்டும் என்று கணக்கு வேறு போட்டு வைத்து இருந்தார்கள். பாருங்கள். தீண்டாமையை எப்படி எல்லாம் போற்றி போற்றி வளர்த்து இருக்கிறார்கள்.

தமிழர்களில் ஒரு பிரிவினர் கண்ணில்படக் கூடாத சாதி மக்கள் என்றும் தூற்றப் பட்டு இருக்கிறார்கள். நாம் பிறந்து வளர்ந்த இந்தப் பூமியில் எங்கேயும் இப்படி ஒரு கொடுமை நடந்து இருக்குமா. தெரியவில்லை. தெரிந்தால் சொல்லுங்கள்.

முன்பு கலத்தில் பெந்தோங்; கோலா கிள்ளான்; சுங்கை பட்டாணி; நிபோங் திபால்; பாகன் செராய்; தஞ்சோங் மாலிம், சிகாமட் போன்ற இடங்களில் சாதி சடங்குகள் ஐஸ்கிரீம் வியாபாரம் செய்து இருக்கின்றன. ஆனால் இப்போது இல்லை. ஐஸ்கிரீம் கம்பெனி ’பேங்க்ரப்’ ஆகிவிட்டதாம்.


இந்திய மண்ணில்தான் தீண்டாமைக்கு முதல் மரியாதை வழங்கபட்டு உள்ளது. ஆக, வரையறுக்கப்பட்ட இந்தத் தீட்டுத் தூரத்தை எவரேனும் மீறினால் அவர்களுக்குக் கடுமையான தண்டனையும் கொடுக்கப் பட்டது.

அப்பேர்ப்பட்ட இட்லர்கூட வேண்டாத யூதர்களை விசம் கொடுத்துதான் கொலை செய்து இருக்கிறான். தூய தமிழில் சொன்னால் ஊதாப்பூ ஊதர்கள். அவர்கள் இத்தனை அடி தூரத்தில் நின்றுதான் பேச வேண்டும் என்று இட்லர் சட்டம் போட்டது இல்லை. ஆனால் தமிழ்நாட்டில் நடந்து இருக்கிறது.

ஒரு காலக் கட்டத்தில் தமிழ்நாட்டின் கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களின் சில பகுதிகள் திருவாங்கூர் சமஸ்தானத்து ஆட்சியின் கீழ் இருந்தன. அங்கு சாணார் எனும் ஒரு தமிழ்ப் பிரிவினர் இருந்தனர். அந்தப் பிரிவைச் சேர்ந்த பெண்கள் மேலாடை அணிவதற்குத் தடை விதிக்கப் பட்டது.

இவர்கள் மார்பகத்தைத் திறந்து போடுவதுதான் உத்தமம்; உயர் சாதியினருக்குத் தரும் மரியாதை என்று திருவாங்கூர் நாடு ஒரு சட்டத்தையும் போட்டது.

சாணார், பள்ளவர், ஈழவர், முக்குவர், புலையர் போன்ற பிரிவினர் தமிழர்ச் சமூகத்தில் இருந்து ஒதுக்கி வைக்கப் பட்டார்கள். அந்த வகையில் 18 சாதிகளைச் சேர்ந்த பெண்கள் மேலாடை அணியத் தடை விதிக்கப்பட்டது. 


அணியக் கூடாது என்று சொன்னால்தான் சரியாக இருக்கும். மேலாடை அணிவது பெரும் குற்றம். திறந்த மேனியோடுதான் நடமாட முடியும். மனுதர்மம் அப்படிச் சொல்வதாக ஒரு சாணக்கியச் சட்டத்தை எடுத்துப் போட்டு, அதைச் சம்பிரதாயச் சட்டமாக மாற்றியும் காட்டினார்கள்.

தமிழர்ச் சமூகத்துப் பெண்கள் தங்கள் மார்பகத்தை எப்பொழுதும் திறந்து காட்டி மரியாதை செய்ய வேண்டும் என்று உயர்ச் சாதியினர் பிடிவாதமாக இருந்தனர். அந்த வகையில் குழந்தையில் இருந்து இறக்கும் நிலையில் இருக்கும் பாட்டிமார்கள் வரை அந்த மரியாதைக்கு கட்டுப்பட்டாக வேண்டும்.

ஒரு பெண் எவனுடைய மனைவியாகவும் இருக்கலாம். எவனுடைய மகளாகவும் இருக்கலாம். எவனுடைய சகோதரியாகவும் இருக்கலாம். எவனுடைய அம்மாவாகவும் இருக்கலாம். இல்லை பாட்டியாககூட இருக்கலாம். பிரச்சினை இல்லை.

ஆனால் மார்பகத்தைக் காட்டிக் கொண்டு தான் போக வேண்டும். வர வேண்டும். மார்பகத்தை மூடி வைக்கக் கூடாது. என்னே ஒரு மனுதர்மச் சட்டம். என்னே ஓர் அக்கப்போர். நான் சார்ந்த இந்து சமயத்தில் இப்படி எல்லாமா நடந்து இருக்கிறது. நம்பவே முடியவில்லை.


இந்த அசிங்கத்தை, இந்த அவமானத்தை, இந்த அவலத்தை, இந்த அடக்குமுறையைத் தமிழ்ப் பெண்கள் பலரும் எதிர்த்தனர். தங்களின் மார்பகத்தை அடுத்தவரின் பார்வையில் இருந்து மறைக்கப் பெரிதும் போராடி வந்தார்கள். தாங்க முடியல. அதனால் பல தமிழ்க் குடும்பங்கள் கிருத்துவ மதத்திற்கு மதம் மாறின.

பாவம் அந்தப் பெண்கள். மேலாடை அணியாமல் கூனிக் குறுகி வாழ்ந்து வந்தார்கள். அந்த அடக்கு முறையை எதிர்த்துப் போராட்டம் செய்தார்கள். அந்தப் போராட்டம் தான் தோள் சீலைப் போராட்டம். பல பத்து ஆண்டுகள் போராட்டம் செய்தார்கள். கடைசியில் வெற்றியும் பெற்றார்கள்.

இந்தத் தோள் சீலைப் போராட்டத்தைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது ஒவ்வொரு தமிழரின் கடமையாகும்.

இப்படி எல்லாம் நடந்து இருக்கின்றது இப்படி எல்லாம் தமிழர்கள் அவதிப்பட்டு இருக்கின்றார்கள் என்பதை நம் பிள்ளைகளும் தெரிந்து கொள்ள வேண்டும். அப்படி அறிந்து தெரிந்து கொள்வதுதான் பாதிக்கப்பட்ட நம் தமிழ்ப் பெண்களுக்கு நாம் செய்யும் ஒரு கைமாறு ஆகும்.


18-19-ஆம் நூற்றாண்டுகளில் திருவிதாங்கூர் நாட்டில் தீண்டாமை, காணாமை, நடவாமை போன்ற கோட்பாடுகள் ஆழமாகப் பதிந்து இருந்தன. சமூகத்தில் ஒதுக்கி வைக்கப்பட்ட ஒருவன் ஓர் ஆரியனிடம் இருந்து 36 அடி தொலைவில் நிற்க வேண்டும்.

புலையர் இனத்தைச் சார்ந்த ஒருவன் ஓர் ஆரியனிடம் இருந்து 96 அடி தள்ளி நிற்க வேண்டும்.

புலையன் ஒருவன் நாயர் இனத்தைச் சேர்ந்தவனிடம் இருந்து 60 அடி அப்பால் நிற்க வேண்டும்.

புலையன் இனத்தைச் சேர்ந்த ஒருவனை அப்படியே அந்த மேல்சாதிக்காரனைப் பார்க்க நேர்ந்தால் அந்த மேல்சாதிக்காரன் தீட்டுப் பட்டவனாகக் கருதப் படுவான்.

அப்படித் தீட்டுப் பட்டவன் ஆற்றில் அல்லது குளத்தில் மூழ்கி நீராட வேண்டும். தன்னைச் சுத்தப் படுத்திக் கொள்ள வேண்டும்.

அடுத்து ஒரு வேதனையான செய்தி. திருவிதாங்கூர்ப் பகுதிகளில் வாழ்ந்த சாணார் சமூக மக்களின் உழைப்பின் விளைச்சல்; அதிகார வர்க்கத்தினரால் சுரண்டப் பட்டது.

அவர்களுக்குக் கூலி மறுக்கப்பட்டது. அடிமைகளை விடக் கேவலமாக நடத்தப் பட்டனர். அரசுக்கும் ஆதிக்கச் சாதிகளுக்கும் அடங்க மறுத்தவர்களுக்கு கடுமையான தண்டனைகள்.

அது மட்டும் இல்லை. உழைக்கின்ற சாணார் சமூக மக்கள் குடை பிடிக்கக் கூடாது. செருப்பு அணியக் கூடாது. மாடி வீடு கட்டக் கூடாது. தங்க நகைகள் அணியக் கூடாது.

பெண்கள் தங்களுடைய மார்புகளை மேலாடைகளால் மறைக்கக் கூடாது. முழங்காலுக்குக் கீழே உடை உடுத்தி மறைக்கக் கூடாது. பசு மாடுகளை வளர்க்கக் கூடாது.

இப்படி ஏகப்பட்ட கூடாதுகள். இந்தக் கூடாதுகளைப் பற்றி வேறு ஒரு கட்டுரையில் கூடுதலாகத் தெரிந்து கொள்வோம்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
21.08.2021

பேஸ்புக் பின்னூட்டங்கள்:

Elangkumaran Jeevan >>>> Muthukrishnan Ipoh: I have given mine in English. If you really into feedbacks and not language, please read it and respond🙏🏽

Nagah Rajan >>>> Muthukrishnan Ipoh: நன்றி ஐயா 🌹

Vejayakumaran: ஓம் நமசிவாய

Khavi Khavi: #ஆரிய குடியேற்றம் தென்னிந்திய கரைகளை கடந்த தருணம், அங்கே ஆற்றுப் படுகைகளில், மலை அடிவாரங்களில், குகைகளில் குடில்களை அமைத்து தங்களின் ஆன்மீகப் பணிகளை மேற்கொண்டிருந்த முனிவர்கள், வேத விற்பனர்களிடம் தஞ்சமடைந்து, இவர்களின் சேவகர்களாகி, மெல்ல ஆகம வழிப்பாட்டு முறைகள், மந்திரங்கள், மற்ற பல சாங்கிய சம்பிரதாயங்களைக் கற்று பின் மெல்ல, அங்கிருந்த பெருங்கோயில்களின் மூலப் பொறுப்புகளைக் கைவசப் படுத்தியதாக இணையத்தில் படித்த நினைவு.

பார்ப்பணர்களாகத் தங்களை அடையாளப் படுத்தி கொண்டனர். வெளிர்த் தோல், பழுப்பு நிற கேசம் மற்றும் விழிகள் என இவர்களின் மரபு இன்றும், இன்னும் பாரத மண்ணின் படைப்போடு இரண்டற கலந்துவிட்டு இருக்கிறது..

Nages Nages >>>> Aiya Muthu Krishnan: I read your article, but I think it is biased, not fully facts based and bounded with emotional, in my opinion. Opinions may differ. Maybe you can verify further.
1. Arya race is Myth.
2. Are the so called Uyar Jatis are not Tamils?
3. in Manusmriti, which verse?
4. You mentioned breast tax but why never mentioned Xenddi tax?
5. etc Misleading Article by Aiya Muthu Krishnan?
https://sivasiddhi.blogspot.com/.../misleading-article-by...
Misleading Article by Aiya Muthu Krishnan?
SIVASIDDHI.BLOGSPOT.COM

Nages Nages >>>> Elangkumaran Jeevan: I agree with you sir. The tax and oppression were part of the slavery system practiced in Kerala. The so-called historians hide this part and came up with propaganda on blaming the Hindu varna system/ Brahmin and Arya. This kind of slavery is practiced throughout of world...

Bobby Sinthuja: ஐயா, சிறப்பான ஆய்வு பதிவுகள்.

Ravi Purushothaman: மாப்ளா கலவரம் பற்றி ஏதும் செய்தி உண்டா ஐயா?

Alagumani Mathivanan: நன்றி ஐயா

கொடுமுட்டி பால் பேக்கர்: இதில் இருக்கும் புகைப்படம் இலங்கை நாட்டை சேர்ந்தது. தவறான ஓரு ஆய்வு

Muthukrishnan Ipoh: அன்பர்களின் பதிவுகளுக்குப் பின்னர் பின்னூட்டங்கள் வழங்குகிறேன். நன்றி.

Muthukrishnan Ipoh >>>> Nages Nages இந்தக் கேள்விகளை எழுப்பியவர் மானுடவியல், மரபியல் ஆகிய துறைகள் சார்ந்த தெளிவு அல்லது புரிதல் இல்லாத வகையில் கேள்விகளை முன் வைத்து இருக்கின்றார்.

இதனை அவர் தெளிவு படுத்திக் கொள்ள அவர் பல நூல்களைப் படிக்க வேண்டாம். தற்போதைக்கு ஒரே ஒரு நூலை அவர் படிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

Early Indians எனும் ஆங்கில நூல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளது. நூல் பெயர்: ஆதி இந்தியர்கள். அமேசான் வலைத்தளத்தில் வாங்கி வாசிக்கலாம்.

தங்களால் பதில் கூற முடியவில்லை என்றால் உடனே ஆங்கிலேயர்கள் நம்மை முட்டாள்கள் ஆக்கி விட்டார்கள் என சொல்வதும் ஓர் அறியாமையின் வெளிப்பாடு தான்.

மனித இனத்தின் மரபியல் சோதனைகள் தீவிரப் படுத்தப்பட்டு மிகப் பெரும் துறையாக வளர்ந்து பல செய்திகளை உலகுக்கு அளித்து விட்டது.

இன்னமும் ஒரு சிறிய வட்டத்திற்கு உள்ளேயே இருந்து தனக்குத் தெரிந்ததை மட்டுமே பேசிக் கொண்டு இருப்பது என்பது ???? இந்த நூலை முதலில் வாசித்துப் பாருங்கள்.

சாதியின் பெயரால் கடந்த நூற்றாண்டுகளில் சில சமூகத்துப் பெண்கள் இந்திய சூழலில் பட்ட அவமானங்களும் துன்பங்களும் இப்படி மலேசியாவிலும் வெளிப்படையாகப் பேசப்பட வேண்டும்.

Sukavarman Sukavarman: இதற்கு முற்று புள்ளி வைத்த பெண் அவரைதெரியுமா

Malathi Nair: Anna 1st time hearing such story in Thiruvendram.

Mu Ta Neelavaanan Muthuvelu:
அதிகார வர்க்கம், அப்பாவி ஏழை மக்களை
வாட்டி வதைத்த கொடுமை.

Alagumani Mathivanan: எவ்வளவு கொடுமை

Senthil Kumar: தற்போது

Nadarajah Nagu: பெருங்கொடுமை

Raja Sundarrajan: பெண்கள் தங்கள் மார்பை மறைக்க வேண்டும் என்றால் மார்பின் அளவைப் பொறுத்து வரி செலுத்தினால் மார்பு சீலை அணியலாம். இதற்கு முலைவரி சட்டம் என்று பெயர்.



 




 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக