19 செப்டம்பர் 2021

அக்கரையில் சினிமா அலப்பறைகள்

தமிழ் மலர் - 19.09.2021  

உலகில் ஏழு அதிசயங்கள். அண்மையில் எட்டாவது அதிசயம். ஒரு சினிமா நடிகருக்கு கட் அவுட் வைத்து; ஆடுவெட்டி அபிசேகம் செய்த அதிசயம். உலகிலேயே இப்படி ஓர் அதிசயம் வேறு எங்கும் நடந்ததாகச் சரித்திரமே இல்லை. தமிழ்நாட்டில் நடந்து இருக்கிறது. தமிழ் மண்ணின் அதிசயம் அல்ல. ஓர் உலக அதிசயம்.  

ஏற்கனவே ஓர் அதிசயம் நடந்தது. ஒரு நடிகைக்கு கோயில் கட்டி, பவளமாலை கட்டி, பட்டுச் சேலை உடுத்தி, நாலு வேலைக்கு மணி அடித்து, நாலு பேருக்கு அன்னதானம் பண்ணி; புனர் புஷ்காரம் செய்து; கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்கள். அது ஒரு வழியாக அடங்கிப் போனது. இப்போது வேதாளம் மறுபடியும் முருங்கைமரம் ஏறி இருக்கிறது.


ஆடு செத்தால் மனுசன் தின்றான். தப்பு இல்லை. மாடு செத்தால் மனுசன் தின்றான். தப்பு இல்லை. தோல் அறுத்து மேளம் கட்டினான். தப்பு இல்லை. மூக்குப் பிடிக்கத் தின்றுவிட்டு அட்ரா அட்ரா நாக்க மூக்கு பாடினான். தப்பு இல்லை.

ஆனால் அவனே இப்போது சினிமா நடிகர்களுக்கு ஆட்டு இரத்த அபிஷேகம் செய்கிறானே, அதுதாங்க ரொம்பவும் தப்பு. அக்கரையில் சினிமா அலப்பறைகள் இக்கரையில் தாங்க முடியலடா சாமி...

தமிழனைக் காட்டு மிராண்டிகள் என்று ஒரு பெரியவர் முன்பு சொன்னார். சொன்னதில் தப்பே இல்லை. சில ஜென்மங்களின் வெறித் தனமான மடத் தனமான செயல்களை முன்கூட்டியே அந்தப் பெரியவர் கணித்து விட்டார் போலும். அந்தப் பெரியவரைக் கை எடுத்து கும்பிடுகிறேன்.

ரஜினி ஒரு நடிகர். நடிக்கும் நடிப்பிற்காகப் பணம் பெறுகிறார். அவ்வளவு தான். ஒரு பக்கம் ஊழியம். மறுபக்கம் ஊழியத்திற்கு ஊதியம். பவுடர் பூசுவது ஓர் அவதாரம் என்றால் அது பவுடர் பூசுபவர்களின் வாழ்வாதாரம். புரியுதுங்களா. அவர் நடிக்கிறார். சம்பாதிக்கிறார். அவ்வளவுதான்.


ரஜினி நடித்த படங்கள் வெளியாகும் போது எல்லாம், அப்போது பதாகைகளுக்கு கேக் ஊட்டுதல்; பெண்கள் மண்சோறு சாப்பிடுதல்; காவடி எடுத்தல்; பால் குடம் தூக்குதல்; கட் அவுட் பாலாபிஷேகம் செய்தல். தற்போது ஆடு வெட்டி பலி கொடுத்து இரத்த அபிசேகம் செய்து இருக்கிறார்கள்.

இந்த 2021 செப்டம்பர் மாதம் விநாயகர் சதுர்த்தி. அன்றைய தினத்தில் அண்ணாத்த படத்தின் முதல் போஸ்டர் வெளியாகி இருக்கிறது. அதைப் பார்த்த ரசிகர்கள் சிலருக்கு மகிழ்ச்சிப் பிரளயம்.

திருச்சியில் ஆடு பலி செய்து ஆர்ப்பாட்டமாய்க் கொண்டாடி உள்ளனர். அதாவது கட் அவுட் முன் ஆட்டை வெட்டி இரத்த அபிசேகம் செய்து உள்ளனர்.

என்னங்க இது. முன்பு எல்லாம் ஐம்பது அடி உயரத்திற்கு போஸ்டர், கட் அவுட் வைத்தார்கள். அவற்றுக்கு கிரேன் வைத்து மாலை போட்டார்கள். அப்புறம் நூறு அடி உயர கட் அவுட் வைத்து, அதில் ஏறி கேக் ஊட்டினார்கள்.


அப்புறம் நூற்றைம்பது அடி உயரத்திற்கு கட் அவுட் போட்டுக் குடம் குடமாய்ப் பால் ஊற்றினார்கள். அப்புறம் நூற்று எண்பது அடி உயரத்திற்கு கட் அவுட் போட்டு முகத்தில் மஞ்சள் தடவி குங்குமம் வைத்தார்கள்.

இப்போது இருநூறு அடி உயரத்திற்கு கட் அவுட் போட்டு, மாலை போட்டு, கீழே ஆட்டை வெட்டி இரத்த அபிசேகம் செய்து இருக்கிறார்கள். வெட்கத் தனமான செயலாகத் தெரியவில்லையா? பைத்தியக்காரச் செயலாகத் தெரியவில்லையா? தலைகுனிய வைக்கும் விசயமாகத் தெரியவில்லையா?

அதே சமயத்தில் திரைப் பிரபலங்கள் சிலர், தங்களின் நிஜ வாழ்க்கையிலும் நல்லவர்களாக நாணயமானவர்களாக இருக்கின்றனர். மறந்துவிட வேண்டாம். அவர்களுக்கு எப்போதும் நம்முடைய தனி மரியாதை உண்டு.

கொஞ்ச நாட்களுக்கு முன்னர், தெலுங்கு நடிகர் கிச்சா சுதீப்பு என்பவருக்காக அவரின் ரசிகர்கள், எருமை மாட்டை வெட்டிப் பலி கொடுத்து சாதனை செய்தார்கள். அதற்கு அப்போதே பலத்த எதிர்ப்பு.

அதற்குப் போட்டியாக இப்போது ரஜினிக்காக ஆடு வெட்டி அலப்பறை செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே 2.0 எனும் படத்திற்காக ரஜினியின் ரசிகர்கள் ஆடு கோழி பலி கொடுத்தனர்.


பீட்டா விலங்குகள் நல அமைப்பு கண்டனம் (People for the Ethical Treatment of Animals) தெரிவித்து இருந்தது. இவை எல்லாம் அக்கரை சமாசாரங்கள் என்று ஒதுக்கிவிட முடியாது. கடல் காற்றின் சாரல் இங்கேயும் அடிக்கிறது.

இக்கரையைக் கொஞ்சம் பார்க்க வேண்டுமே. ராகங்கள் பதினாறு என்று சொல்வார்கள். இப்போது மலேசியாவில் ஒரு புதிய ராகம் உதயமாகி இருக்கிறது. மலேசிய ஒலிபரப்பு ஊடகத் துறையில் ஒரு வானொலியில் தான் அந்த ராகம்.

ஒரு பாட்டுப் போட்டால் ஒன்பது முறை ‘தலைவா தலைவா’ என்று ஒருதலை ராகம். அடுத்த ஒரு பாடல் போட்டால் ‘தலைவா தலைவா’ என்று இருதலை ராகம். அட கொக்கா மக்கா. அப்புறம் சின்னத் தலைவா ராகங்கள். எங்கே போய் முட்டிக் கொள்வதோ தெரியவில்லை.


மலேசியம் ஒரு வாட்ஸ் அப் சமூகப் புலனம். அதில் சாய் ராஜேந்திரன் என்பவர் ஒரு குரல் பதிவை நேற்றிரவு பதிவு செய்து இருந்தார். ஆழ்மனத்து ஆழ்கருத்துகள் கொண்ட சமயப் பக்தியாளர். பந்தா பகட்டு இல்லாத நல்ல மனிதர். அவர் என்ன சொல்கிறார். நீங்களும் கேளுங்கள்.

‘நம்ப மலேசியில் ஒரு வானொலி இருக்கிறது. பிரபலமான வானொலி. அந்த வானொலியில் அறிவிப்பாளர்களாகச் சேவை செய்பவர்கள் சிலர், ஒரு நடிகரைத் தங்களுடைய தலைவராகக் கொண்டாடுகிறார்கள்.

எந்த வகையில் அந்த நடிகர் ஒரு தலைவர் ஆனார் என்று எனக்குத் தெரியவில்லை. இன்னொருவர் சின்ன தலைவராம். காலையில் தலைவரோட பாட்டைப் போடுகிறோம் என்கிறார்கள்.

தலைவர் எனும் போது நாட்டுக்கு நல்லது செய்த யாரோ ஒரு தலைவர் என்று நினைத்துக் கொண்டேன். கடைசியில் பார்த்தால் தமிழ்நாட்டில் உள்ள பிரபலமான நடிகர்தான் அவர்களின் தலைவராம்.


சினிமா மோகத்தில் பொங்கி வழிகிறது அந்த வானொலி நிலையம். முதலில் இவர்கள் இங்கே அந்த வானொலி நிலைய அறிவிப்பாளர்கள் திருந்துகிறார்களா என்று பார்ப்போம்.

எத்தனையோ தடவை சொல்லியாச்சு. கண்டிச்சாச்சு. திரும்பத் திரும்ப நம் மலேசியத் தமிழர்களைத் தவறான ஒரு பாதைக்குக் கொண்டு போகிறார்கள். இவர்கள் தங்களின் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும்.  

சாய் இராஜேந்திரனின் கருத்துகளுக்கு சுங்கை சிப்புட் முருகன்; மலாக்கா மலையாண்டி; சித்தியவான் கணேசன்; தனசேகரன் தேவநாதன்; நாகராஜா; கடாரம் தேவிசர; வேலாயுதம்; வெங்கடேசன்; கோலாசிலாங்கூர் ராதா பச்சையப்பன் போன்றோர் ஆதரவு தெரிவித்து உள்ளார்கள்.


அவர்களில் ஒருவர் சுங்கை பூலோ கரு. ராஜா. அவர் ’அந்த நிலையத்தின் நிகழ்ச்சிகளை நான் கேட்பது இல்லை. இப்படி ஒரு வானொலி இயங்குவதை நான் மறந்து விட்டேன். இன்று திரும்பவும் ராஜேந்திரன் நினைவுப் படுத்திவிட்டார்’ என்று சொல்கிறார்.

கோணங்கிகளிடம் வாக்குவாதம் செய்வதில் எந்தப் பிரயோசனமும் கிடையாது என்று நினைக்கிறேன் என மற்றும் ஓர் அன்பர் பதிவு செய்து உள்ளார். சரி.

திரையில் தோன்றி வீரவசனம் பேசுபவரின் பிம்பத்தை உண்மை என்று சிலர் நம்பி விடுகிறார்கள். அவர் மட்டும் அல்ல. பொதுவாகவே ’செலிபிரிட்டி’ மோகம் கொண்டவர்கள் சிலர் ஊடகத் துறைகளில் இருக்கிறார்கள்.


உசுப்பேத்தி ரணகளம் பண்ணுவதற்கு சில ஊடக அல்லக்கைகள் என்று நான் சொல்ல மாட்டேன். தாங்க முடியலடா சாமி.

தமிழர்களைத் தவறான பாதைக்குக் கொண்டு செல்கிறார்கள் என்பதைச் சுட்டிக் காட்ட சாய் இராஜேந்திரன் போன்ற நல்ல உள்ளங்களும் இருக்கிறார்கள். நன்றி.

அன்பான வேண்டுகோள். எந்த ஒரு நடிகனையும் எப்படியாவது அர்ச்சனை செய்துவிட்டுப் போங்கள். அது உங்கள் உரிமை. ஆனால் பொது ஊடகங்களில் உங்களின் சுய விருப்பங்களை அர்ச்சனை பண்ணாமால் இருப்பதே நியாயம்.
சின்னவர்கள் பெரியவர்கள் குழந்தைகள் என்று பல இலட்சம் தமிழர்கள் வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்கிறார்கள். நினைவில் கொள்ளுங்கள்.


வானொலி ஊடகங்களில் ஒரு சினிமா நடிகரை ஒரு நாளைக்கு ஆயிரத்தெட்டு தடவை உச்சி முகர்ந்து உபநியாசம் செய்வது நல்லது அல்ல. சினிமாத் தலைவர் மோகம் அந்த அறிவிப்பாளருக்குள் மட்டுமே இருக்கட்டும். அதைப் பகிரங்கப் படுத்தி ரசிகர்களை வேதனைப் படுத்த வேண்டாம். ரசிர்களின் சிந்தனைகளில் நல்லதைப் பரப்புங்கள். புண்ணியம் சேரும்.

என்றைக்குமே என்னைச் சீண்டினால் தவிர, தனிமனிதத் தாக்குதலில்  ஈடுபடுவது இல்லை. ஆனால் ஓர் இனத்தையே சீண்டிப் பார்த்தால் சும்மா இருக்க முடியாது. கருத்துக்களைத் தெரிவிப்பதில் தவறு இல்லை. கோபப்படவில்லை. கொப்பளிக்கிறேன்.

சினிமா என்பது ஒரு பெரிய மாயை. அதில் சிக்கிக் கொண்டால் மீள்வது  கடினம். நம்மை ஆளக்கூடிய தகுதியை நடிகர், நடிகையின் கையில் ஒப்படைத்து விட்டால் அப்புறம் எப்படிங்க.


ஒரு வகையில் நாம் நம் கவலைகளை மறப்பது சினிமாவின் மூலமாகத் தான். அது கொடுக்கும் போதையில் தான் நாம் எதார்த்தத்தையும் விட்டு விலகிச் செல்கிறோம்.

யாராக இருந்தாலும் சரி. சாமான்ய மனிதராக இருக்கட்டும் அல்லது நன்றாக படித்தவராக இருக்கட்டும். பேதம் வாதம் பார்க்காமல் சினிமா மாயையில் சிக்கி விடுகிறார்கள். பின்னர் அவதிப் படுகிறார்கள்.

சினிமா மாயையில் சிக்கிக் கொண்டால் அவ்வளவு எளிதில் அந்த மாயையில் இருந்து விடுபட முடியாது. ஏன் தெரியுங்களா.

பணத்திற்காகப் பவுடர் பூசும் நடிகர், நடிகைகளை இறைத் தகுதிக்கு ஏற்றி வைத்துத் தெய்வமாகப் பார்ப்பது; பாயாசம் காய்ச்சி பால் அபிஷேகம் செய்வது; ஆட்டுக் கடா வெட்டி ஆட்டு இரத்ததில் ஆராதனை செய்வது; அசத்தல் போலியை அசல் உண்மை என்று உச்சி முகர்வது. சரி அல்ல.


அறிவைப் பக்குவமாகப் பயன்படுத்தினால் எல்லாம் சரியாக வரும். சினிமா என்பதை ஒரு பொழுது போக்கு அம்சமாகப் பார்க்க வேண்டும். அதை வாழ்க்கையோடு இணைந்த ஒரு விசயமாகப் பார்ப்பதுதான் தவறு. அதை குறைத்தால் மோகம் குறையும்.

நண்பர் ஒருவர் சொல்கிறார்: படம் பார்த்ததோட சரி. வெளிவந்தவுடனே அதை மறந்துவிட வேண்டும். அவ்வளவு தான். ஆனால் ஒரு சிலர் பண்ணுகின்ற அலப்பறை இருக்கே சாமி... முடியல.

பேனருக்கு பால ஊத்துறான். கேக் ஊட்டி விடுறான். நல்லவேளை. நடிகன் பின்பாகத்தைக் காட்டவில்லை. காட்டி இருந்தால் அதற்கும் அபிசேகம் செய்வானுங்க போல இருக்கிறது.


நடிகரின் பேனருக்கு போடும் மாலை ஒரு 2000 ரிங்கிட் இருக்கும். ஆனா அவர்களின் சொந்தகாரன் சாவுக்கு 10 ரிங்கிட் மாலைக்கு போடுவதற்கே கட்சி கட்டுவார்கள். ஒன்று இவர்களாகத் திருந்த வேண்டும். இல்லாவிட்டால் நடிகர்கள் களம் இறங்கி ரசிகர்களைத் திருந்த வைக்க வேண்டும்.

உஹும்... அது நடக்கிற மாதிரியாகத் தெரியவில்லை. ரசிகர்கள் இருந்தால் தானே படம் ஓடும். படம் ஓடினால் தானே நடிகர்களின் பிழைப்பும் ஓடும். புலிவாலை நிமிர்த்தவே முடியாது.

கூட்டிக் கழித்துப் பார்த்தால் சினிமா என்பது ஒரு வணிகப் பண்டம். அதன் மேல் மோகம் கொள்வதைப் போன்ற ஓர் அபத்தம் வேறு எதுமே இல்லை. திரைப்பட நடிகர்கள் மீது தமிழ்ச் சமூகத்திற்கு இருக்கும் முட்டாள்தனமான மோகம் என்று தணியும் என்று கேட்கலாம்.


என்றைக்கு ஒரு ரசிகனுக்கு அவடைய வாழ்க்கைக்கு எது முக்கியமான தேவை என்று தேடிப் போக ஆரம்பிக்கிறானோ அப்போதுதான், அன்றைக்குத்தான் தமிழ்ச் சமூகத்தில் இருக்கும் முட்டாள் தனமான சினிமா மோகம் குறையும். ஆனால் அதற்கு வாய்ப்பே இல்லை. நோ சான்ஸ்!

என்று தணியுமோ இந்தச் சுதந்திரத் தாகம் என்று பாரதியார் பாடினார். அவர் இப்போது இருந்தால் என்று தணியுமோ இந்தச் சினிமா சீரியல் மோகம் என்று பாடி இருப்பார். நல்ல வேளை அவர் இல்லை. நடிகைகளுக்கு கோயில் கட்டுவார்கள்; நடிகர்களுக்கு ஆடுவெட்டி சாமி கும்பிடுவார்கள் என்று தெரிந்தோ என்னவோ அவர் முன்கூட்டியே போய்ச் சேர்ந்து விட்டார்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
19.09.2021



 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக