05 ஜனவரி 2022

1850-ஆம் ஆண்டில் பினாங்கு மலாக்கா மாநிலங்களில் தமிழ்ப் பள்ளிகள்

தமிழ் மலர் - 05.01.2021

மலேசியாவில் ஆட்சிகள் மாறுகின்றன. அரசாங்கம் மாறுகின்றன. அரசியல்வாதிகளும் மாறுகிறார்கள். அமைச்சர்களும் மாறிக் கொண்டே போகிறார்கள். இன்றைக்கு இருக்கும் அமைச்சர் நாளைக்கு இருப்பாரா என்பது தெரியாத ஒரு நிலைமையில் அரசாங்கம் மாறிக் கொண்டே போகிறது.


அப்படி இருக்கும் போது ஒரு சாமானிய மனுசனுக்குத் தெரியுமா. பில்லியன் டாலர் கேள்வி. இதுதான் இப்போதைக்கு மலேசியாவின் அரசியல் இராக பாவ தாளங்கள்.

இந்த இராக பாவங்களினால் அரசியல்வாதிகளின் கொள்கைகள் மாறுமா. இனவாதக் கொள்கைகள் மாறுமா. அரசாங்கத்தின் செயல் திட்டங்கள் மாறுமா. அரசாங்கத்தின் நடைமுறைச் செயல் திறன்கள் மாறுமா. நடைமுறைப் பண்புகள் மாறுமா.

மாறும் ஆனால் மாறாது என்று ஒரே வார்த்தையில் சொல்லி முடித்துக் கொள்ளலாம். மாறும் – மாறாது; இதில் எதை வேண்டும் என்றாலும் எப்படி வேண்டும் என்றாலும் எடுத்துக் கொள்ளுங்கள். பிரச்சினையே இல்லை.


பாசிர் கூடாங் நாடாளுமன்ற உறுப்பினர் அசன் அப்துல் கரீம் (Hassan Abdul Karim); ஊடகங்களில், பொருளாதாரச் சரிவை நோக்கி எனும் தலைப்பில் நேற்று ஒரு பதிவைப் பதிவு செய்து இருந்தார். அப்படியே வயிற்றில் புளியைக் கரைக்கிறார்.

அந்தப் பதிவுகளில் இருந்து:

1. தென் கொரிய ’ஹூண்டாய்’ நிறுவனம், ஆசிய பசிபிக் தலைமையகத்தை மூடிவிட்டு இந்தோனேசியாவிற்குச் செல்கிறது.

2. உலகப் பிரபலம் ’ஐ.பி.எம்’. குளோபல் டெலிவரி மையம். இந்த மையம் தன் தலைமையகத்தை மூடிவிட்டு சிங்கப்பூருக்குச் செல்கிறது.

3. ’ஷெல்’ என்கிற உலகளாவிய எண்ணெய் நிறுவனம். இந்தியாவிற்கு தனது செயல்பாடுகளை இடமாற்றம் செய்கிறது.

4. ’சிட்டி குரூப்’ வங்கிக் குழுமம். அதன் வங்கி வணிகத்தைச் சிங்கப்பூருக்கு மாற்றுகிறது.

5. ஜெர்மன் தொழில்நுட்ப நிறுவனம் ’டி-சிஸ்டம்’. தனது வணிகத்தை மூடுகிறது.

6. பேஸ்புக், லசாடா, டென்செண்ட், பைட் டான்ஸ், அலிபாபா போன்ற உலகப் பிரபலங்கள் தங்களின் தரவு மையங்களைச் சிங்கப்பூருக்கு மாற்றுகின்றன.

7. ’ஜூம்’ வீடியோ கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம், தன் தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்திற்கான புதிய தரவு மையத்தைச் சிங்கப்பூருக்கு மாற்றி உள்ளது.

இப்படி நிறைய புள்ளி விவரங்கள். மனசுக்கு வேதனையாக உள்ளது. நம் நாட்டுத் தலைவர்கள் என்ன சொல்லப் போகிறார்கள். மௌனம் ... மௌனம் என்கிற மனோபாவம் போதும். சமாளித்து விடலாம்.

மக்களின் தேவைகளை நிவர்த்திச் செய்வதற்காகத்தான் மக்கள் புதிய அரசாங்கத்தைத் தேர்வு செய்கிறார்கள். மக்களுக்காகத்தான் அரசாங்கம். மக்கள் தேர்வு செய்த அரசாங்கம் மக்களுக்காகத்தான். அரசியல்வாதிகளின் சுய விருப்பங்களுக்காக அல்ல.

புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததும் பழைய அரசாங்கத்தின் சில பல பழைய திட்டங்களை அப்படியே தூக்கிக் கொண்டு போய் ஊறுகாய் போட்டு விடுவார்கள். அனைவரும் அறிவோம். தெரிந்த விசயம்.

ஒரு டிரில்லியன் கடனில் நாடே தடுமாறிக் கொண்டு நிற்கிறது. இதில் பெரிய பெரிய மெகா திட்டங்கள் ரொம்ப முக்கியமா. தேவை தானா என்று சொல்லி எத்தனையோ திட்டங்களைத் தற்காலிகமாகவும் நிரந்தரமாகவும் நிறுத்தி வைத்து விட்டார்கள். மகிழ்ச்சி.

பிரச்சினை இப்போது அது இல்லை. நம்முடைய தமிழ்ப் பள்ளிக்கூடங்களைப் பற்றியது தான் பிரச்சினை.

பொதுவாக ஒரு நாட்டில் ஆட்சி மாறும் போது புதிதாக வரும் அரசாங்கம் பழைய அரசாங்கத்தின் வெளியுறவு கொள்கையிலும் சரி; கல்விக் கொள்கையிலும் சரி; கைவைக்க மாட்டார்கள். அது எழுதப் படாத சாசனம். பல நாடுகளில் அப்படித்தான் நடக்கிறது. நடந்தும் வருகிறது.

நம் நாட்டைப் பொருத்த வரையில் கல்விக் கொள்கைகள் இன மொழி அடிப்படையில் தான் இயங்கி வருகின்றன. சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து அப்படித்தான் நகர்ந்து வருகின்றன. உண்மையைச் சொல்வதில் தயக்கம் இல்லை.

புதிதாக எந்த ஓர் அரசாங்கம் வந்தாலும் சரி; வரையறுக்கப்பட்ட பழைய அரசாங்கக் கொள்கைகளில் சிற்சில மாற்றங்களை மட்டுமே செய்வார்கள். பெரிதாக எதையும் செய்ய மாட்டார்கள். செய்யவும் முடியாது.

பக்காத்தான் அரசாங்கம் ஆட்சிக்கு வந்தால், சொல்லி வைத்து 100 நாட்களில் அதைச் செய்வோம்; இதைச் செய்வோம் என்று ஒரு சாதனைப் பட்டியலையே தயாரித்துக் காட்டினார்கள். செய்ய முடிந்ததா. முடியாதுங்க. முந்திய அரசாங்கம் வாங்கிய கடனுக்கு வட்டிக் கட்டவே விழி பிதுங்கிப் போய் நின்றார்கள். அப்புறம் எப்படி?

அதன் பின்னர் ஐயா மொகைதீன் வந்தார். எப்படி வந்தார். விடுங்கள். அப்புறம் இப்போது ஐயா இஸ்மாயில் சப்ரியின் அரசாங்கம். சிறப்பாகச் செயலாற்றி வருகிறார். வெள்ளப் பேரிடர் பிரச்சினையைக் கையாண்ட விதத்தில் இருந்தே நிர்வாகத் திறமைகள் தெரிகின்றன.

இன்னும் ஒரு விசயம். வீட்டுக்குள் வந்து நுழைந்து பார்த்த பிறகுதான் தெரிகிறது ஊழல் பெருச்சாளிகள் பேரன் பேத்தி எடுத்த கண்கொள்ளா காட்சிகள். ஓர் அரசாங்கம் போய் இன்னோர் அரசாங்கம் வந்தால், பழைய அரசாங்கத்தின் வண்டவாளங்கள் அவிழ்த்து விடுவதிலேயே பாதி நேரம் போய் விடுகிறது.

புதிதாகப் பதவி ஏற்ற அரசாங்கம், பதவி ஏற்று, பழைய கோப்புகளைத் தூசு தட்டிப் பார்த்தால் மில்லியன் பில்லியன் கணக்கில் தேய்மானங்கள் தெரிய வரும். ஓர் அமைச்சு இல்லை.

பெரும்பாலான அமைச்சுகளில் பெருவாரியான பணம் காணாமல் போய் இருக்கலாம். எப்படி ஏது என்று அலசிப் பார்ப்பதற்குள் புதிய தேர்தல் புதிய அரசாங்கம் வந்துவிடும். அப்புறம் நேரம் இல்லை.

அந்த எலிகளை ஒவ்வொன்றாகப் பிடித்துக் கூண்டுக்குள் அடைப்பதற்குள் இன்னொரு புதிய அரசாங்கம் வந்து விடுகிறது. ஒன்றும் சொல்கிற மாதிரி இல்லை.

இந்தக் கோலத்தில் 72 அமைச்சர்கள்; துணை அமைச்சர்கள். அவர்களுக்குப் படி அளக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் அல்ல. மக்கள் வாங்கி வந்த வரம். அரசியலில் இது எல்லாம் சகஜம்பா என்று நாமும் போய்க் கொண்டே இருக்கிறோம். அப்புறம் எப்படிங்க? சரி. நம்ப கதைக்கு வருவோம்.

மலேசிய அரசியலமைப்புச் சாசனத்தின் 152-ஆவது பதிவில் (Article 152 Federal Constitution) தமிழ் சீன மொழிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டு இருக்கிறது. சட்டப் படியான அங்கீகாரம். ஆகவே அந்த மொழிகளைப் பயன்படுத்த முடியாது அல்லது பயன்படுத்தக் கூடாது என்று சொல்ல எவருக்கும் எந்த உரிமையும் இல்லை.

அப்படிச் சொன்னால் அது சட்டப்படி குற்றமாகும். மலேசிய அரசியலமைப்புச் சாசனத்தை அவமதிப்பது போலாகும். அது ஓர் அரச நிந்தனையாகும். புரிந்து கொள்ளுங்கள்.

மலேசிய அரசியலமைப்புச் சாசனத்தில் மாற்றம் அல்லது திருத்தம் செய்யாமல் தாய் மொழிகளின் உரிமையில் தலையிட முடியாது. அந்த வகையில் அரசியலமைப்புச் சாசனத்தில் தாய் மொழிகளுக்குத் தனி உரிமை உண்டு. மறுபடியும் சொல்கிறேன்.

மலேசிய அரசியலமைப்புச் சட்டத்தில் 152-ஆவது பதிவில், தாய்மொழி உரிமைகள் பற்றி நன்றாகவே தெளிவாகவே சொல்லப் பட்டு இருக்கிறது.

மலேசிய கல்விச் சட்டம் 1996 (The Education Act - Akta Pendidikan 1996). இதன் தற்போதைய வடிவம் 2012 ஜனவரி 1-ஆம் தேதி திருத்தி அமைக்கப்பட்டது. 16 பகுதிகள் 156 பிரிவுளைக் கொண்டது. 2 திருத்தங்கள் செய்யப்பட்டு உள்ளன.

200 ஆண்டுகளுக்கு முன்னர் மலாயா நாடு பிரிட்டிஷ் காலனியாக மாறியது. அப்போது மலாயாவில் நிறைய காபி, தேயிலை, கரும்புத் தோட்டங்கள். மலாயாவில் முதலில் தோன்றியவை காபித் தோட்டங்கள். அதன் பின்னர் அந்தி மந்தாரைக் காளான்களாக நூற்றுக் கணக்கான ரப்பர் தோட்டங்கள் பூக்கத் தொடங்கின. நன்றாகப் பூத்துக் குலுங்கின.

அந்தத் தோட்டங்களில் வேலை செய்வதற்குத் தென்னிந்தியாவில் இருந்து ஆயிரக் கணக்கான தமிழர்கள் இங்கே கொண்டு வரப் பட்டார்கள். அப்படி வந்தவர்கள் தங்களுடன் கூடவே தங்களின் தாய் மொழியான தமிழ் மொழியையும் கொண்டு வந்தார்கள்.

மலாயாவில் முதன்முதலாகப் பினாங்கில் 1816-ஆம் ஆண்டில் ஒரு பள்ளி தொடங்கப் பட்டது. ஆது ஓர் ஆங்கிலப் பள்ளி. அதன் பெயர் பினாங்கு பிரீ ஸ்கூல். அதே பள்ளியில் ஐந்து ஆண்டுகள் கழித்து 1821-ஆம் ஆண்டில் ஒரு தமிழ் வகுப்பு தொடங்கப் பட்டது.

அந்தக் கட்டத்தில் பினாங்குத் துறைமுகத்தில் நிறைய தமிழர்கள் வேலை செய்து வந்தார்கள். அவர்களின் பிள்ளைகளுக்காக அந்தத் தமிழ் வகுப்பு தொடங்கப் பட்டது. இருப்பினும் ஆதரவு குறைந்து குன்றிப் போனதால் அந்தத் தமிழ் வகுப்பு மூடப் பட்டது.

1850-ஆம் ஆண்டில் பினாங்கிலும் மலாக்காவிலும் தமிழ்ப் பள்ளிகள் தொடங்கப் பட்டன. 1870-ஆம் ஆண்டுகளில் ஜொகூர், சிங்கப்பூர் போன்ற இடங்களில் தமிழ்ப் பள்ளிகள் தோன்றின.

அதன் பின்னர் 1895-ஆம் ஆண்டில் கோலாலம்பூரில் ஆங்கிலோ தமிழ்ப்பள்ளி உருவானது. பின்னர் அந்தப் பள்ளி மெதடிஸ்ட் ஆங்கிலப்பள்ளி என்று உருமாற்றம் கண்டது.

1912-ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தார்கள். தோட்டத் தொழிலாளர்களின் நலத்தைப் பாதுகாக்கும் சட்டம். ஒரு தோட்டத்தில் பத்துக் குழந்தைகள் இருந்தால் போதும்; ஒரு தமிழ்ப் பள்ளியை உருவாக்க வேண்டும் எனும் சட்டம். மறுபடியும் சொல்கிறேன்.

ஒரு தோட்டத்தில் 7 முதல் 14 வயது வரை பத்து குழந்தைகள் இருந்தால் போதும்; ஒரு தமிழ்ப்பள்ளியை உருவாக்க வேண்டும் என்கிற சட்டம்.

இந்தச் சட்டம் அப்போது அந்தக் காலத்தில் உருவாக்கப்பட்ட சட்டம். ஆங்கிலேயர்கள் உருவாக்கிய சட்டம். இன்னும் அமலில் உள்ளது. காலனித்துவ ஆட்சியில் இருந்து மலாயா சுதந்திரம் அடைந்த போது பற்பல சட்டத் திருத்தங்கள் செய்தார்கள். ஆனால் மேலே சொன்ன அந்தச் சட்டத்தை மட்டும் மாற்றம் செய்யவில்லை. அதை அப்படியே விட்டு விட்டார்கள்.

பத்துக் குழந்தைகள் இருந்தால் ஒரு தமிழ்ப் பள்ளி எனும் அந்தச் சட்டம் 1912-ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட போது பள்ளிகளை எந்த இடத்தில் தொடங்குவது; எப்படி நடத்துவது என்பது ஒரு பெரிய பிரச்சினையாக இருந்தது.

தோட்டத்தில் இருந்த ஆயாக் கொட்டகைகள்; நாடக மண்டபங்கள்; பலசரக்குக் கடைகள்; கோயில்கள்; தொழிலாளர் வீடுகள் போன்றவற்றில் வகுப்புகளை நடத்தினார்கள். படித்துக் கொடுக்க ஆசிரியர்கள் வேண்டுமே. என்ன செய்வது. பார்த்தார்கள். வேறுவழி இல்லாமல் கோயில் பூசாரிகளைக் கொண்டு வந்து அவர்களை வாத்தியார்களாக மாற்றி விட்டார்கள்.

கோயில் பூசாரிகள் இல்லாத தோட்டங்களில் கங்காணிகளே வாத்தியார் வேலையைச் செய்தார்கள். கங்காணிகளுக்குப் பதிலாக சில இடங்களில் தோட்டத்துக் கிராணிமார்களும் வாத்தியார் வேலையைச் செய்து இருக்கிறார்கள். வாழ்த்த வேண்டிய விசயம்.

இப்படி கோயில் பூசாரிகளும் கங்காணிகளும் ஆசிரியர் வேலை செய்ததால் மாணவர்களின் கல்வித்தரம் எப்படி இருக்கும். தரம் குறைவாக இருந்தது. ஒரு தேக்க நிலை. இங்கே ஒன்றை நாம் மறந்துவிடக் கூடாது.

தென்னிந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட தொழிலாளர்களுக்குக் கல்வி அறிவைக் கொடுக்க வேண்டும்; அவர்களை அறிவாளிகளாகவும் அறிவு ஜீவிகளாகவும் மாற்ற வேண்டும் என்பது எல்லாம் ஆங்கிலேயர்களின் நோக்கம் அல்ல. நிச்சயமாக அப்படி இருக்காது.

வெள்ளைக்காரர்களுக்கு அவர்கள் போட்டு இருக்கும் சட்டைதான் வெள்ளை. மனசு எல்லாம் சொக்கத் தங்கமாய் கறுப்பு. அப்போது அவர்களுக்கு பிடித்தமான பாடல் என்ன தெரியுங்களா. கறுப்புதான் எனக்கு புடிச்ச கலரு.

படித்தவர்கள் இருக்கும் இடத்தில் அவர்களைக் கட்டி மேய்க்க முடியாது. அது ரொம்பவும் சிரமமான காரியம். கைநாட்டுப் போடுபவர்களுக்குக் கொஞ்சம் எழுதப் படிக்கத் தெரிந்தால் போதும். அப்படித்தான் வெள்ளைக்காரர்கள் நினைத்தார்கள். நம் இனத்தை ஒரு வழி பண்ணி விட்டார்கள். இப்போது கையேந்த வைத்து விட்டார்கள். நாளையும் இதன் தொடர்ச்சி இடம் பெறும்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
05.01.2021
 
சான்றுகள்:

1. R. Kurinjivendhan. Malaya Thamizhar Sarithiram. p. 126. ISBN 978-81-234-2354-8.

2. Global Research Forum on Diaspora and Transnationalism (GRFDT) http://www.grfdt.com/PublicationDetails.aspx?Type=Articles&TabId=7051

3. List of All Primary Schools in Each States in Malaysia, as at 31 Dec 2017. http://myschoolchildren.com/list-of-all-primary-schools-in-malaysia/#.W7mWmCQzbIU

4. Malaya Labour Ordinance in 1912 - https://lib.iium.edu.my/mom/services/mom/document/getFile/U0IAjWSBy5KgLs0Z0pwyhERuNbbFdcBr20070109162203671

5. The first Tamil class was conducted in Penang Free School on Oct 21, 1816. https://www.pressreader.com/malaysia/the-star-malaysia/20161013/282071981418159



 

1 கருத்து:

  1. கட்டுரை கண்டு சந்தோஷப்படவ அல்லது இந்த அரசாங்கத்தை எண்ணி சினம் கொள்வதா, ஒரே குழப்பம், தொடருங்கள் உங்கள் எழுத்து பணியை, நாங்களும் உங்களுடன் ❤

    பதிலளிநீக்கு