07 ஜனவரி 2022

மலேசியக் கல்விச் சட்டவிதி 21 (2)

தமிழ் மலர் - 07.01.20220

ஆங்கில நூலாசிரியர் ரோலன் பிராடல் (Sir Roland Braddell) என்பவர் ஒரு வாசகம் சொல்லிவிட்டுச் சென்று உள்ளார். அதை நினைவு படுத்துகிறேன்.

’மலாயா எனும் பச்சை மண்ணுக்கு முதல் நாகரிகத்தைக் கொண்டு வந்தவர்கள் இந்தியர்கள். அவர்களின் மொழியால் தான் அந்த மண் ஏற்றம் பெற்றது.’ இதைக் கேட்டதும் சிலருக்குப் பற்றிக் கொண்டு வரலாம். பிரச்சினை இல்லை. கொட்டாங்கச்சிக்கு அடியில் நெருப்பு பற்றாது.

உலகில் வாழும் ஒவ்வொரு மனிதரின் பிறப்பு உரிமை அவரின் தாய்மொழி. அதே போல உலகில் வாழும் ஒவ்வொரு தமிழரின் உயிர் உரிமை அவரின் தமிழ்மொழி. அந்த வகையில் தமிழர்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் அதுவே அவர்களின் தனிச் சிறப்பு உரிமை.

அந்த உரிமைக்கு உயிர் கொடுக்க இன்று வரை தமிழர்கள் போராடிக் கொண்டு தான் இருக்கிறார்கள். இங்கேயும் அங்கேயும் எங்கேயும் அந்த உரிமைப் போராட்டம் தொடர்கிறது.


ஒரு மொழி அழிந்தால் அந்த மொழி சார்ந்த இனம் அழிந்து விடும். தெரிந்த விசயம். ஓர் இனத்தை அழிக்க வேண்டும் என்றால் அந்த இனத்தின் மொழியை அழித்தால் போதும். அந்த இனம் காலப் போக்கில் சன்னம் சன்னமாய் அழிந்துவிடும்.

வரலாற்றைப் புரட்டிப் பாருங்கள். இந்த உலகில் எத்தனையோ மொழிகள் அழிந்து விட்டன. அந்த மொழியைச் சார்ந்த இனங்களும் அழிந்து விட்டன. மற்ற மேலாண்மை மொழிகளின் அதிகார ஆதிக்க வலிமையினால் பல ஆயிரம் சிறுபான்மை இனத்தவர்களின் மொழிகள் அழிக்கப்பட்டு விட்டன.

2019-ஆம் ஆண்டு கணக்குப்படி இந்த உலகில் 195 நாடுகள் இருக்கின்றன. அந்த நாடுகளில் 2000-ஆம் ஆண்டு வரையில் 7000 மொழிகள் இருந்தன. 2019-ஆம் ஆண்டு இறுதி வாக்கில் 6500 மொழிகள் மட்டுமே இருக்கின்றன.


2020-ஆம் ஆண்டில் அந்தமான் தீவில் மட்டும் மூன்று மொழிகள் அழிந்து போயின. அக்கா போ (Aka-Bo); அக்கா கோரா (Aka-Kora); ஆ பூசிக்கார் (A-Pucikwar) மொழிகள். இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். அசுர வேகத்தில் மொழிகள் அழிந்து கொண்டு போகின்றன.

ஒரு மொழியைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை குறையும் போது அந்த மொழியின் உயிர்த் தன்மைக்குச் சாவுமணி அடிக்கப் படுகிறது. அதை நினைவில் கொள்வோம். சரி. மலாயா தமிழர்களின் கதைக்கு வருவோம்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே தமிழர்கள் மலாயாவில் தடம் பதித்து விட்டார்கள். வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் நன்றாகவே தெரிய வரும். பெரும்பாலும் வணிகம் செய்யவே மலாயாவிற்கு வந்தார்கள். திரைகடல் ஓடி திரவியம் தேடு எனும் வாசகமே அந்தக் காலத்துத் தமிழர்களுக்குப் பொன் வாசகமாக விளங்கி இருக்கிறது.

அப்படி மலையூர் மலாயாவிற்கு வந்தவர்கள் பலர் பினாங்கு, கிள்ளான், மலாக்கா போன்ற துறைமுக நகரங்களில் நிரந்தரமாகத் தங்கி இருக்கிறார்கள். அங்கு வாழ்ந்த உள்ளூர்ப் பெண்களைத் திருமணம் செய்து கொண்டார்கள். அவர்களுக்குப் பிறந்த பிள்ளைகளுக்குத் தமிழ் மொழியைக் கற்றுத் தந்து இருக்கிறார்கள்.

454-ஆம் ஆண்டு இந்தோனேசியா போர்னியோவில் மகாராஜா குதுங்க அனுமார்த்த தேவவர்மன் (Maharaja Kudungga Anumerta Devavarman) என்பவர் ஆட்சி செய்தார்.

அவர் காலத்தில் இருந்து இந்தியர்களின் தென்கிழக்காசியப் புலம்பெயர்வுகள் தொடர்கின்றன. 1025-ஆம் ஆண்டில் இராஜேந்திர சோழன் கடாரத்தின் மீது படை எடுத்த போது சுமத்திரா தீவில் வாழ்ந்த தமிழர்களைக் கணக்கில் சேர்க்கவில்லை.


தோட்டப் புறங்களில் தமிழ்ப்பள்ளிகள் தொடங்கப்பட்ட காலக் கட்டத்தில் நகர்ப் புறங்களிலும் தமிழ்ப் பள்ளிகள் தொடங்கப் பட்டன. பெரும்பாலானவை தனியார் தமிழ்ப் பள்ளிகளாகும்.

1850-ஆம் ஆண்டு மலாக்காவில் முதல் ஆங்கிலேயத் தமிழ்ப்பள்ளி நிறுவப்பட்டது (Malacca Anglo-Tamil School). அதுவே நமது மலேசிய நாட்டின் முதல் முழுநேரத் தமிழ்ப்பள்ளி ஆகும். ஏற்கனவே 1816-ஆம் ஆண்டு பினாங்கில் தமிழ் வகுப்பு தொடங்கப் பட்டது (Penang Free School Tamil class 1816). அதை நினைவில் கொள்வோம்.


1900-ஆம் ஆண்டில் ஆங்கிலேய அரசின் முதல் முயற்சியாகப் பேராக், பாகான் செராயில் முதல் அரசினர் தமிழ்ப்பள்ளி நிறுவப்பட்டது. இதற்கு பிரேங்க் சுவெட்டன்காம் பொறுப்பு வகித்தார். 1905-ஆம் ஆண்டில் கோலாலம்பூர் செந்தூல் பகுதியில் தம்புசாமிப் பிள்ளை தமிழ்ப் பள்ளி தொடங்கப் பட்டது. இந்தப் பள்ளியை ராஜசூரியா என்பவர் தோற்றுவித்தார்.

1906-ஆம் ஆண்டில் மலாயாவில் 13 அரசாங்கத் தமிழ்ப் பள்ளிகளும் ஒரு கிறிஸ்துவத் தமிழ்ப் பள்ளியும் இயங்கி வந்தன.

1908-ஆம் ஆண்டு நிபோங் திபாலில் ஒரு தமிழ்ப்பள்ளி தொடங்கப் பட்டது. அதன் பெயர் சங்காட் தோட்டத் தமிழ்ப்பள்ளி. பினாங்கு மாநிலத்தைப் பொறுத்த வரையில் அதுதான் முதல் தமிழ்ப்பள்ளி.

1914-ஆம் ஆண்டு கோலாலம்பூர் பிரிக்பீல்ட்ஸ் சாலையில் விவேகானந்தா தமிழ்ப்பள்ளி தோற்றுவிக்கப் பட்டது. நிறுவியர் தம்புசாமி பிள்ளை.


1924-ஆம் ஆண்டு செந்தூல் கத்தோலிக்க திருச்சபை, செயிண்ட் ஜோசப் பெண்கள் தமிழ்ப் பள்ளியை நிறுவியது. 1925-ஆம் ஆண்டில் மலாயாவில் 235 தமிழ்ப் பள்ளிகள் இருந்தன.

1930-ஆம் ஆண்டு செந்தூல் இந்திய வாலிபர் சங்கத்தின் சார்பில் சரோஜினி தேவி தமிழ்ப் பள்ளி தோற்றுவிக்கப் பட்டது. இருந்தாலும் இந்தப் பள்ளி 1958-ஆம் ஆண்டு மூடப்பட்டது.  

1937-ஆம் ஆண்டு கோலாலம்பூர் பத்து சாலையில் சுவாமி ஆத்மராம் அவர்களின் முயற்சியில் அப்பர் தமிழ்ப்பள்ளி தோற்றுவிக்கப் பட்டது. அதே காலக் கட்டத்தில் அரசாங்கமும் சில தமிழ்ப் பள்ளிகளைக் கட்டிக் கொடுத்தது.

1913-ஆம் ஆண்டில் கிள்ளான் சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளி;

1919-ஆம் ஆண்டில் செந்தூல் தமிழ்ப்பள்ளி;

1924-ஆம் ஆண்டில் கோலாலம்பூர் சான் பெங் தமிழ்ப்பள்ளி;

1937-ஆம் ஆண்டில் பங்சார் தமிழ்ப்பள்ளி போன்றவை குறிப்பிடத் தக்கவை.

1938-ஆம் ஆண்டில் தமிழ்ப்பள்ளி ஆசிரியர் தேவையை நிவர்த்தி செய்ய தமிழ்ப் போதானா முறை வகுப்புகள் தொடங்கப் பட்டன.

1942-ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போர். மலாயாவில் பல தமிழ்ப் பள்ளிகள் மூடப் பட்டன. 644-ஆக இருந்த தமிழ்ப் பள்ளிகள் 1943-ஆம் ஆண்டில் 292-ஆக குறைந்து போயின.


இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் 1946-ஆம் ஆண்டு தமிழ் ஏழாம் வகுப்பு தொடங்கப் பட்டது. ஈராண்டுகளுக்கு ஒரு முறை தேர்வு. ஏழாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் தமிழாசிரியர்களாகச் சேர்த்துக் கொள்ளப் பட்டார்கள். 1957-ஆம் ஆண்டு நாடு சுதந்திரம் அடைந்ததும் ஏழாம் வகுப்பு நிறுத்தப் பட்டது.

1957-ஆம் ஆண்டு நாடு சுதந்திரம் அடைந்த போது புதிய கல்விச் சட்டம் கொண்டு வரப்பட்டது. அதில் சட்டவிதி 3-இன் படி எல்லா இனங்களின் மொழியும் பண்பாடும் காக்கப்பட வேண்டும் என்று வரையறுக்கப்பட்டது. ஆனால் அதன்படி நடைமுறையில் உள்ளதா என்பது ஒரு கேள்விக் குறியே. மலாய்ப் பள்ளிகள் மட்டுமே இந்த நாட்டில் தேசிய ஒற்றுமையைக் கொண்டு வர முடியும் என்பது சிலரின் எண்ணமாகும்.

மலேசியக் கல்விச் சட்டவிதி 21 (2). இந்தச் சட்டவிதி ஒரு வகையில் தமிழ் சீனப் பள்ளிகளுக்கு ஒரு மருட்டலாக இருந்தது. மன்னிக்கவும். உண்மையே அதுதான். கொஞ்ச காலம் அப்படி ஒரு நிலைமை இருந்தது. அதாவது அந்தச் சட்டவிதி 21 (2)-யின் கீழ் கல்வியமைச்சருக்குச் சில கூடுதலான அதிகாரங்கள் வழங்கப் பட்டு இருந்தன. அவர் விரும்பினால் ஒரு சீனம் அல்லது ஒரு தமிழ்மொழிப் பள்ளியைத் தேசிய மொழிப் பள்ளியாக மாற்றம் செய்ய முடியும்.

இந்தச் சட்டவிதி சற்றே சலசலப்பை ஏற்படுத்தியது. இருந்தாலும் 1996-ஆம் ஆண்டு அந்தச் சட்டவிதியில் திருத்தம் செய்யப் பட்டது. இந்த விசயம் ரொம்ப பேருக்குத் தெரியாது.

ஓர் அரசியல்வாதி அந்த மலேசியக் கல்விச் சட்டவிதி 21 (2) பற்றி பேசி இருக்கிறார். இந்த நாட்டில் உள்ள தமிழ் சீனப் பள்ளிகளைச் சட்டவிதி 21 (2)-யின் படி மூடிவிட வேண்டும் என பேசி இருக்கிறார். பெரும் சர்ச்சையை உருவாக்கிய செய்தி. ஏன் தெரியுங்களா? டத்தோ நஜீப் ரசாக் பிரதமர் பதவியில் இருந்த போது கல்விச் சட்டத்தின் சட்டவிதி 21 (2)-யிலும் திருத்தம் செய்யப் பட்டு விட்டது.


அந்த வகையில் கல்விச் சட்டம் 1966-இன் கீழ் சீன தமிழ்ப் பள்ளிகளின் நிகழ்நிலை உறுதி செய்யப்பட்டது. அதாவது அப்பள்ளிகளின் தகுதி மறு உறுதி செய்யப் பட்டது.

(Education Act 1961 amended during the era of Datuk Seri Najib Razak, whereby Section 21 (2) was abolished and the status of SJKC and SJKT were guaranteed under the Education Act 1996)

அப்படி இருக்கும் போது தமிழ் சீனப் பள்ளிகளை மூட வேண்டும் என  அரசியல்வாதிகள் சிலர் சொல்வது சரியன்று. அரசியல் பிரசாரத்தில் தமிழ் சீனப் பள்ளிகளைப் பகடைக் காய்களாகப் பயன்படுத்துவது தவறு. அதாவது சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்ட பின்னரும்  தமிழ் சீனப் பள்ளிகளைப் பிரசார ஆயுதமாகப் பயன்படுத்துவது தவறு என்பதே பொதுவான கருத்து.

(https://www.thestar.com.my/news/nation/2019/03/03/barisans-fate-to-be-discussed-this-week/)

நம் நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின்படி தேசியக் கல்வி அமைப்பின் கீழ் இயங்கும் எல்லாப் பள்ளிகளும் சமமாக நடத்தப்பட வேண்டும். அவற்றின் மேம்பாட்டிற்கும் வளர்ச்சிக்கும் வழங்கப்படும் அரசாங்க நிதி ஒதுக்கீட்டில் வேறுபாடுகள் இருக்கக் கூடாது. ஆனால் நடைமுறையில் அப்படி இல்லை என்பதே வேதனையான செய்தி. வேறுபாடுகள் நிலவுகின்றன. அதனால் தமிழ் சீனப் பள்ளிகள் பாதிக்கப் படுகின்றன.

இதில் தமிழ்ப்பள்ளிகள் அனுபவிக்கும் வேதனைகள் சொல்லில் வடிக்க முடியா. சீனப் பள்ளிகள் பரவாயில்லை. வசதிமிக்க சீனர்கள் நிதியுதவி செய்து வருகின்றார்கள். தமிழ்ப்பள்ளிகளின் இந்த வேதனையான நிலையைச் சீர் செய்வதற்கு 2010-ஆம் ஆண்டுகளில் தமிழ் அறவாரியம் களம் இறங்கியது. தேசியக் கல்வி ஆலோசனை மன்றத்தின் கவனத்திற்கு சில முன்மொழிதல்களைக் கொண்டு போனது.

அந்த முன்மொழிதல்கள் வருமாறு:

1. தேசியக் கல்விக் கொள்கையில் உட்பட்ட சீன தமிழ்ப் பள்ளிகள் எல்லாம் சமமாக நடத்தப்பட வேண்டும்.

2. அரசாங்கம் தாய்மொழிப் பள்ளிகளுக்கு வழங்கும் நிதி ஒதுக்கீட்டில் வேறுபாடுகள் இருக்கக் கூடாது.

3. தாய்மொழிப் பள்ளிகளுக்குத் தேவைப்படும் தகுதி பெற்ற ஆசிரியர்கள்; கட்டடங்கள்; ஆய்வுக்கூடங்கள்; நூலகங்கள்; வசதியான வகுப்பறைகள்; திடல்கள்; போன்றவை உடனடியாக வழங்கப்பட வேண்டும்.

4. எல்லா தமிழ்ப் பள்ளிகளிலும் பாலர் பள்ளிகள் அமைக்கப்பட வேண்டும்

5. தாய்மொழிப் பள்ளிகள் கட்டுவதற்கான நிலம்; கட்டடம் தொடர்பான பிரச்சினைகளுக்கு அரசாங்கம் பொறுப்பு ஏற்க வேண்டும்

6. இடைநிலைப் படிப்பை முடித்த பின்னர் பட்டப்படிப்பு செல்வதற்கான மெட்ரிகுலேசன், எஸ்.டி.பி.எம். தொடர்பான பிரச்சினைகள் நீக்கப்பட வேண்டும்.

7. தகுதி பெற்ற மாணவர்களுக்கு வேறுபாடு இல்லாமல் அரசாங்கப் பல்கலைக்கழகங்களில் இடம் அளிக்க வேண்டும்.

8. உபகாரச் சம்பளம் வழங்குவதில் வேறுபாடு இருக்கக் கூடாது. அனைத்தும் வெளிப்படையாக இருக்க வேண்டும்.

9. மாணவர்களைச் சிறுமைப் படுத்தும் நோக்கம் இருக்கக் கூடாது. இனவாதத்தைத் தூண்டி விடுவதாக அமையக் கூடாது.

10. ஆரம்பத் தமிழ்ப் பள்ளிகள் தேசிய மாதிரி பள்ளிகள் என்று இருப்பதை தேசியப் பள்ளிகள் என மாற்றம் செய்ய வேண்டும்.

இந்தப் பரிந்துரைகள் ஏட்டளவில் அப்படியே நிலுவையில் உள்ளன. எப்போது இந்தப் பரிந்துரைகளுக்கு தீர்வு கிடைக்கப் போகிறது. இதுவும் ஒரு மில்லியன் டாலர் கேள்வியே. மலேசிய நாடு பல்லினப் பண்பாட்டைக் கொண்டது. ஆகவே தமிழ்க் கல்வி வழியாகத் தமிழரின் பண்பாடு பேணப் படுவது அவசியமாகும். இது நியாயமான கோரிக்கை. தமிழ்ப் பள்ளிகளுக்கு அரசாங்கத்தின் முழுமையான உதவி கிடைப்பது இல்லை. இந்தக் குறையை அரசாங்கம் தீர்க்க வேண்டும்.

மலேசிய அரசியலமைப்புச் சட்டத்தின் வழி மலேசியத் தமிழர்கள் மலேசிய நாட்டின் அனைத்து உரிமைகளையும் பெற்ற குடிமக்கள். அந்த வகையில் தமிழ்க் குழந்தைகள் தமிழ் மொழிக் கல்வி பெறுவதற்குச் சட்டபூர்வமான உரிமை பெற்று உள்ளார்கள் என்பதே என்னுடைய கருத்து.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
07.01.2022

சான்றுகளும் குறிப்புகளும்:

1. Formal Tamil education in Malaya was mainly by Christian missionaries.

2. The first Tamil class was held in Penang Free School.

3. After 1870, Christian missionaries began establishing Tamil schools in Penang, Province Wellesley and Perak, to cater for the children of Indian workers in the sugar and gambiar plantations.

4. In Bagan Serai in Perak, the Christian missions established schools where there were many Tamils.



 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக