19 டிசம்பர் 2022

மஞ்சோங் கணேசன் சண்முகம்

தமிழ் மலர் - 19.12.2022

உன்னதமான இலட்சியங்களில் உயர்வான இலக்கணங்கள்; உயர்வான கொள்கைகளில் உண்மையான நோக்கங்கள்; இனிதான நகர்வுகளில் புனிதமான பண்புகள்; சிங்காரச் சித்தியவானில் சிறப்புமிகுச் சேவைகள்; மஞ்சோங் மண்ணில் மகிமை பேசும் ஒரு மைந்தர்; வாழ்த்துகிறோம் சண்முகம் கணேசன்.


மலேசியத் தமிழர் இனத்திற்கு சேவை செய்யும் தமிழர்களை அடையாளம் காண வேண்டியது நம் கடமை. சமயம் பேசும் இமயத்தில் வாழ்ந்தாலும் சரி; சரித்திரம் பேசும் கங்கா நகரத்தில் வாழ்ந்தாலும் சரி; சாதனைகள் பார்க்கும் கடாரத்தில் வாழ்ந்தாலும் சரி; தமிழர்ச் சேவையாளர்களை உலகளாவிய நிலையில் போற்ற வேண்டியது தமிழர்களின் கடமை அல்ல.

காலத்தின் கட்டாயம். வாழ்கின்ற தமிழர்ச் சேவையாளர்களைத் தட்டிக் கொடுத்து ஊக்குவிப்போம். உற்சாகப் படுத்துவோம். ஆதரவளிப்போம். அரவணைப்போம்.

நம் இனத்தின் எதிர்காலத் தலைமுறைகளுக்காக; நம் பிள்ளைகளுக்காக; நம் பேரப் பிள்ளைகளுக்காக; இயன்ற வரையில் நல்லதைச் செய்து விட்டுச் செல்வோம். மலேசியத் தமிழர்களுக்கு நம்மால் இயன்ற நல்சேவைகளைச் செய்த பெருமையில் மனச் சாந்தி கொள்வோம்.


மஞ்சோங் கணேசன் சண்முகம்

நம் நாட்டில் தமிழர்கள் சிலர் நல்ல நல்ல சேவைகளைச் செய்து வருகின்றார்கள். சமூக நலம் கருதும் நல்ல சேவையாளர்களாகவும் பயணிக்கின்றார்கள்.

அந்த வகையில் தமிழ்ச் சேவையாளர் ஒருவரை அறிமுகம் செய்கிறேன். அவர்தான் மஞ்சோங் கணேசன் சண்முகம். இன்றும் அன்றும் இனிகூறும் சமூகப் பார்வைகளில் இனிதாய்ப் பயணிக்கும் தமிழ்ச் சேவகர். சுருங்கக் கூறின்...

தமிழோடு வாழ்கின்ற தனித்துவமான தமிழர். மூச்சு பேச்சு எல்லாம் தமிழ்; தமிழர்; தமிழர் இனம்; தமிழ்ச் சமூகம்; தமிழ்ப்பள்ளிகள்; தமிழர் அமைப்புகள்.


மலேசியாவில் தமிழர்கள் சார்ந்த சமூக நிகழ்வுகளின் தலையாய ஆர்வலர்களில் ஒருவராய்ப் பயணிக்கின்றார் சண்முகம் கணேசன். நல்ல ஓர் இனிமையான தமிழர். பலருக்கும் அறிமுகம் இல்லாத மனிதர்.

பேரா மாநிலத்தில் மஞ்சோங் மாவட்டம் என்றாலே கடலும் ஆறுகளும்; மலைத் தொடர்களும்; பச்சைக் காடுகளும்; பச்சைப் பசும் புல்வெளிக் கோடுகளும் படர்ந்து ஊர்ந்து பாயும் சுற்றுலாக் களஞ்சியம் என்று சொல்வார்கள். உண்மைதான். அப்பேர்ப்பட்ட பச்சை மண் மஞ்சோங். அந்த மஞ்சோங்கில் வாழும் தமிழர்கள் அனைவரும் மணி மணியான மைந்தர்கள். மகத்தான சாதனைகள் படைக்கும் இனிதான அழகிய தமிழ் மக்கள்.

தமிழ்ச் சேவையாளர் கணேசன் சண்முகம். இவரைப் பலருக்கும் தெரிய வாய்ப்பு இல்லை. தெரிந்து கொள்வோம். மஞ்சோங் சித்தியவான் தமிழர்களுக்கு கிடைத்த நல்ல ஒரு சேவையாளர். பெரிதுபடுத்திப் பேசவில்லை. தெரிந்து கொள்வதில் தவறும் இல்லை. சரி.


இன்றைய காலக் கட்டத்தில் உலகம் முழுவதும் வாழும் தமிழர்களில் பெரும்பாலோருக்கு பல்வேறான வாழ்வியல் நெருக்கடிகள்; தனிமனிதச் சோதனைகள். தமிழர்களின் வாழ்வுரிமை; தமிழர்களின் மொழி; தமிழர்களின் கலைப் பண்பாடு; இவற்றுக்குப் பற்பல நெருக்குத்தல்கள். ரௌத்திரம் பழக வேண்டிய காலச் சூழல்.

இருப்பினும் அந்த இடர்பாடுகளுக்கு எதிராகக் குரல் கொடுத்து வரும் மலேசியத் தமிழர்கள் பலர் உள்ளனர். அவர்களை நாம் என்றும் மறக்கவில்லை. பெயர்கள் வேண்டாம். நீண்டு போகும்.

அவர்களில் ஒருவர்தான் மஞ்சோங் கணேசன் சண்முகம். இவரைச் சித்தியவான் கணேசன் என்றும் அழைக்கலாம். அல்லது கேஷ்வுட் கணேசன் என்றும் அழைக்கலாம். அழகிற்கு அழகு சேர்த்தால் அழகிற்குத்தான் அழகு!


தமிழுக்காகப் போராடுவோம்; தமிழர் நலன் கருதும் நற்சேவைகளை முன்னெடுப்போம்; இவை தமிழர் உணர்வுகள் மேலோங்கும் ஒரு தமிழரின் உளப் பாங்கு. இதுவே கணேசன் சண்முகத்தின் சமூகப் பாங்கு.

மஞ்சோங் பகுதிகளில் பற்பல சமூக அமைப்புகளுக்கு உதவிகள் செய்வதில் கணேசன் சண்முகம் சார்ந்துள்ள சமூகச் சேவைத் தளங்கள் முன்மாதிரியாய்த் தனித்து நிற்கின்றன; தார்மீகம் பேசுகின்றன.

கணேசன் சண்முகம் 15 வயதிலேயே கேஸ்வுட் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கத்தின் செயலாளராகப் பரிணமித்தவர். சின்ன வயதில் பெரிய பொறுப்பு. இப்படித்தான் இவரின் கல்வி யாத்திரைகள் அவதானிக்கின்றன.


மஞ்சோங் மாவட்டத்தில் கம்போங் தெலுக், கம்போங் தெலாகா நெனாஸ் என இரு மலாய்க்கார மீன் பிடி கிராமங்கள் உள்ளன. அதே போல இந்தியர் சீனர்கள் வாழும் இடங்களாகக் கம்போங் சுங்கை பாசிர் மற்றும் கம்போங் சங்காட் ரெசாம் கிராமங்கள்.

நான்கு கிராமங்கள் அமைந்த அந்தப் பகுதியில் தான் கேஸ்வுட் தோட்டம் இருக்கிறது. மலாயா வரலாற்றில் தடம் பதிக்கும் மற்றும் ஒரு தமிழர்க் கூடம். அங்கே மலாய்க்காரர்கள், சீனர்கள், இந்தியர்கள் என மூவினத்தவரும் ஒன்றாய் வாழ்ந்தார்கள். இங்கு தான் கணேசனின் வாழ்க்கைப் பயணமும் தொடங்கியது. அவரின் பால்ய சிருங்காரங்களும் அங்கேதான் ஐக்கியமாகிப் போயின. அங்குதான் அவர் பிறந்தார்.


அப்பா சண்முகம் நாராயணசாமி; தோட்டத்தில் பால் மரம் சீவும் தொழிலாளி. அம்மா ரெங்கநாயகி அண்ணாமலை; தோட்டத்தில் அவருக்கும் சாதாரண வேலை. உடன் பிறந்தோர் ஓர் அண்ணன்; இரு அக்காள்கள்.

தோட்டத்து வாழ்க்கையில் கிராம மக்களோடு வாழ்ந்தது ஒரு வசந்த காலம். அவர்களுடன் பழகியது ஓர் இளவேனில் காலம். அவை அன்றைய ஏகாந்த வேளையில் மௌனங்கள் தேடிய ஆனந்த ராகங்களின் ஆலாபனைகள்.

சிறு வயது முதலே, அவரின் தாத்தா மற்றவர்களுக்கு உதவிகள் செய்ததை, தான தர்மங்கள் செய்ததைப் பார்த்து பார்த்து வளர்ந்தவர் கணேசன். அதேபோல் அப்பாவின் கொடுக்கும் இயல்பும், உதவும் மனப்பான்மையும் கணேசனைப் பெரிதும் ஈர்த்துள்ளன.

அவரின் அண்ணன் முனியாண்டி சண்முகம் (முன்னாள் தமிழ்ப்பள்ளி தலைமை ஆசிரியர்) அவர்களின் நல்பண்புக் கூறுகளையும்; பொது இயக்க ஈடுபாடுகளையும் ஆழமாய்க் கவனித்து வளர்ந்துள்ளார் கணேசன் சண்முகம்.


அண்ணனின் நல்ல பல குணங்களை அப்போதே தனக்குள் விதைத்துக் கொண்டார். அந்தப் பண்பு நலன்கள் தான் இன்றுவரை கணேசனைத் தொடர்கின்றன. மற்றவர்களுக்கு உதவுவதற்கு முன்னோடியாகவும் திகழ்கின்றன.

கணேசனின் தொடக்கக் கல்வி கேஸ்வுட் தோட்ட தமிழ்ப்பள்ளியில் தொடங்கியது. பிறகு ஆயர் தாவார் அம்புரோஸ் இடைநிலைப்பள்ளி; சித்தியவான் அமாட் போஸ்தாமாம் உயர்நிலைப் பள்ளியில் ஆறாம் படிவம்; பினாங்கு மலேசிய தேசியப் பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பு; அதன் பிறகு சிரம்பான் இராஜா மெலாவார் ஆசிரியர் பயிற்சி கழகத்தில் ஆசிரியர்ப் பயிற்சி.

முதன்முதலாக பெருவாஸ் தமிழ்ப்பள்ளியில் ஆசிரியர்த் தொழிலைத் தொடங்கினார். அடுத்து சித்தியவான் மகா கணேச வித்தியாசாலை; அடுத்து லுமுட், முக்கிம் புண்டுட் தமிழ்ப் பள்ளி; தற்பொழுது சுங்கை வாங்கி தோட்டத் தமிழ்ப்பள்ளியில் புறப்பாடப் பிரிவு துணைத் தலைமை ஆசிரியராய்ப் பணிபுரிகிறார்.


பிறந்தோம் வளர்ந்தோம் வாழ்ந்தோம் என்பது முக்கியம் அல்ல. வாழ்கின்ற காலக் கட்டத்தில் என்ன செய்தோம் என்பது தான் முக்கியம். அந்த வகையில், கடந்த காலங்களில் சில பல சமூகச் செயல்பாடுகளில் ஈடுபட்ட பெருமை இவரையும் இவரின் நண்பரகளையும் சாரும். தமிழர் சார்ந்த இலக்குகளில்; தமிழர் சார்ந்த முன்னெடுப்புகளில், இவரும் இவரின் நண்பர்களும் முன் நின்று உதவிகள் செய்து வருகின்றனர்.

மணிமணியான உதவியாளர்கள். முத்து முத்தான முதன்மைச் சேவையாளர்கள். அனைவரும் சேவைப் பயணங்களின் மறுபக்கங்கள். கணேசன் சண்முகத்தின் செயல்பாட்டு விளிம்பு விழுமியங்களைப் மஞ்சோங்கில் காணலாம். சித்தியவான், ஆயர் தாவார், புருவாஸ், லூமுட் வட்டாரங்களில் காணலாம். பங்கோர் தீவில் காணலாம். ஏன் பேராக் வரையிலும் நீடித்துப் போகிறது. இப்போதைய ஆசிரியர்ப் பணிக் காலத்திலும் இவரின் பொது வாழ்க்கைப் பணிகள் தொடர்ந்து பனிக்கின்றன.

* 1992-ஆம் ஆண்டில் ஆயார் தாவார் துன் சம்பந்தன் கிராம மணி மன்றச் செயலாளராகப் பொதுச் சேவைகள்;


* அன்றைய நாடாளுமன்ற உறுப்பினர் டான் ஸ்ரீ குமரனை அழைத்து, வட்டார போட்டி விளையாட்டுப் போட்டிகளை நடத்திய சுவடுகள்;

* ஆயார் தாவார் துன் சம்பந்தன் கிராமத்தில் குடியிருப்போர் சங்கம் அமைத்து  செயலாளராகப் பணியாற்றிய காலத்தில், புறநகர் மேம்பாட்டு அமைச்சு அதிகாரிகளைப் புத்ராஜெயாவில் நேரிடையாகச் சந்தித்துப் பேசி, மூன்று ஆண்டுகளில் கால்வாய், தார் சாலை அமைப்பதற்காக ஏறக்குறைய 8 லட்சம் வெள்ளி பெற்று தந்த நினைவுகள்;

* 2006-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மூன்று இளைஞர்களை நேரிடையாக கோலாலம்பூர் புக்கிட் அமானுக்கு அழைத்துச் சென்று காவல் துறையில் வேலை வாய்ப்புகளைப் பெற்றுத் தந்த நேரங்கள்;

* முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக் அவர்கள் பிரதமராக இருந்த சமயத்தில் மெட்ரிகுலேசனில் சிறப்பு அடைவுநிலைப் பெற்று; மருத்துவத் துறை கிடைக்காத நம் இன மாணவி ஒருவருக்காக, நேரடியாகப் பிரதமரைச் சந்தித்து; மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயில இடம் பெற்றுத் தந்த தடங்கள்;

* அடையாள அட்டை பிரச்சனைகள்; நம் இன இளைஞர்களுக்கு ஆசிரியர்ப் பயிற்சி கல்லூரிகளில் இடம் பெற்றுத் தருதல்; இயலாதவர்களுக்கு சமூக இலாகா, சொக்சோ போன்ற உதவிகளைப் பெற்றுத் தருதல்;


* செமாராக் இயக்கத்தை மஞ்சோங் மாவட்ட அளவில் தோற்றுவித்து; எண்ணற்ற தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு பி.எஸ்.என். சேமிப்பு கணக்குத் திறந்து கொடுத்து உதவியது;

* பல தொடக்கப் பள்ளி மாணவர்கள்; மற்றும் இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்கு தன்முனைப்பு பட்டறைகள் நடத்தியது; இவை மஞ்சோங் கணேசன் சண்முகத்தின் சேவைப் பட்டியலில் சேர்கின்றது.
காலத்தால் செய்த நன்றி சிறிது எனினும் ஞாலத்தின் மானப் பெரிது என்பது ஒரு முதுமொழி. காலம் அறிந்து; சமூகத்தின் நிலை அறிந்து; சேவை செய்பவர்களைத் தெய்வத்திற்குச் சமமாக ஒப்பிடுவது வழக்கம்.

தற்பொழுது:- 1. சித்தியவான் ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலய செயலாளர்; 2. மஞ்சோங் மாவட்டப் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை இயக்கச்  செயலவை உறுப்பினர்; 3. மலேசிய என் குடும்பம் (My Family) இயக்கச் செயலவை உறுப்பினர்; 4. டிண்டிங்ஸ் இந்தியர் சங்கச் செயலவை உறுப்பினர்; 5. கம்போங் சித்தியவான் ருக்குன் தெத்தாங்கா செயலவை உறுப்பினர்.

அத்துடன், அப்துல் கலாம் செயற்குழுவினர் ஏற்பாட்டில், கடந்த 5 ஆண்டுகளாக மஞ்சோங் மாவட்டத்தின் 15 தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்குக் கையடக்க தமிழ் மொழி, மலாய் மொழி, ஆங்கில மொழி வாசிப்பு நூல்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பட்டியல் சரளமாய் நீள்கிறது.

இவரும் இவரின் நண்பர்களும்; மஞ்சோங் மாவட்ட மாணவர்களுக்கும், உடல் ஊனமுற்றவர்கள் சிலர் பலருக்கும், தங்களின் கழகங்களின் வழியாக உதவிப் பொருட்களை வழங்கி பலரின் மனங்களில் நீங்காத இடங்களைப் பெற்று உள்ளார்கள். நினைவு கூர்வோம்.

கணேசன் சண்முகம் அவர்களின் சேவை மனப்பான்மை தொய்வின்றித் தொடர வேண்டும். தமிழ் உலகில் இவர் உயர்ந்த இடத்தை எட்ட வேண்டும். இவரின் அரிய சேவைகள் வெளி உலகிற்கு மென்மேலும் தெரிய வேண்டும்.

உள்ளார்ந்த நல்ல எண்ணங்கள். ஏழை எளியோர்க்கு வழிகாட்டும் நல்பணிகள், பிறர் வாழ வகை செய்யும் பெரும் முயற்சிகள். அவற்றில் சேவைக் கலசமாய்ப் பயணிக்கின்றார் கணேசன் சண்முகம். இவரைப் போன்ற சேவையாளர்களின் செயல்பாடுகள் நல்ல புண்ணியமான சேவைகள். இவரைப் போன்ற மாந்தர்கள் பலரால் தான் மழையும் பெய்கின்றது. பூமியும் செழிக்கின்றது. செய்த தர்மம் தலைகாக்கும். தக்க சமயத்தில் உயிர் காக்கும். இது நான்மறை தீர்ப்பு. வாழ்த்துகள்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
19.12.2022



 

1 கருத்து: