12 ஜூலை 2017

பட்டு ஒரு சகாப்தம்



குண்டு குழிகள் மலிந்து நிறைந்த அரசியல் நெடுஞ்சாலை. அரசியல் பெரிசுகள் நலிந்து மறைந்த அதிகார விரைவுச்சாலை. அங்கே ஒரு சிம்ம சொப்பனமாய் சீறிப் பாய்ந்தது ஒரு சீர்த்திருத்தச் சாலை.

அரசியலமைப்பில் அத்தனைப் பேருமே சமம் என்றது அந்த அமைதிச்சாலை. அந்தச் சாலையின் பெயர் பட்டுச் சாலை. சுருங்கச் சொன்னால் அது ஓர் அரசியல் கலாசாலை. இன்னும் சொன்னால் மலேசிய வானில் மறைந்து நிற்கும் ஒரு பழம்பெரும் கலாசாலை. மலேசிய மண்ணில் அஞ்சாத சிங்கமாய்க் கர்ஜித்து மறைந்தவர்.  

இன்றைய தினத்தில் அவர் மறைந்து 22 ஆண்டுகள் ஆகின்றன. நினைத்துப் பார்க்கின்றோம்.

முன்பு மலேசிய நாடாளுமன்றத்தில் பட்டு என்பவர் பலருக்குச் சிம்ம சொப்பனமாய் விளங்கியவர். ஈப்போ சீனிவாசகம் சகோதரர்களுக்குப் பின்னர் மக்களவையில் சொல்லின் வில்லாய் வலம் வந்தவர். 




1970-களில் கோப்பேங் புலி. 1980-களில் ஈப்போ சிறுத்தை. 1990-களில் மெங்லெம்பு மீசைக்காரர். இப்படி அன்பாகச் செல்லமாக அழைக்கப் பட்டவர்.

அமரர் பி. பட்டு நாடறிந்த மூத்த அரசியல்வாதி. பன்மொழித் திறன் பெற்றவர். தமிழ், சீன, ஆங்கில மொழிகளில் சிறப்பாகப் பேசக் கூடியவர். ஜனநாயகச் செயல் கட்சியில் முக்கியத் தலைவராக வலம் வந்தவர்.

பேராக், மெங்லெம்பு தொகுதியின் மக்களவை உறுப்பினராகச் சேவை செய்தவர். மலேசிய இந்தியர்களின் உரிமைகளுக்காகப் போராடியவர்.

அரிதாய்க் கிடைத்த சீன மொழி ஆற்றலைப் பெரிதாய் வளர்த்துக் கொண்டார். கம்பீரத் தொனியில் கராராகப் பேசினார். மலேசியச் சீனர்களைத் தன் பக்கம் சுண்டி இழுத்துக் கொண்டார்.

சிம்மக் குரலோன் பட்டு எனும் சிறப்பையும் பெற்றார். அவருடைய மகள் தான் இப்போதைய மக்களவை உறுப்பினர் கஸ்தூரி ராணி பட்டு. பத்து காவான் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்.




அரசியலே உலகம் என்று வாழ்ந்தவர் அமரர் பி. பட்டு. ஆனால் அந்த அரசியலையும் தாண்டி ஒருவர் வந்து இருக்கிறார் என்றால் அவர் தான் பட்டுவின் மகள் கஸ்தூரி ராணி.

பட்டுவின் மொத்த ஒட்டு மொத்த சந்தோசத்திற்கும் கஸ்தூரிராணி தான் மூலப் பொருளாக விளங்கி வந்து நிற்கிறார்.

பிறந்த அந்த நாளில் இருந்து வளர்ந்த ஒவ்வொரு நொடியிலும் பட்டுவிற்குச் சந்தோசங்களை அள்ளிக் கொடுத்து இருக்கிறார் கஸ்தூரி ராணி பட்டு. 

பட்டு இப்படிச் சொல்கிறார்; என் மகளுக்குச் சாதாரணமாய்க் கொஞ்சம் சளி பிடித்தால் கூட இரவு முழுவதும் நான் தூங்க மாட்டேன். எனக்குத் தூக்கமே வராது. அவள் கூடவே இருப்பேன். அவள் இல்லாமல் நான் வெளியே செல்வது குறைவு. எனக்கும் அவளுக்கும் இருந்த பாசப் பிணைப்பு என் அரசியலே பொறாமை படும் அளவுக்கு தடுமாறிப் போனது.




பட்டுவே இப்படி ஒருமுறை சொல்லி இருக்கிறார்.  அது ஒரு தகப்பனுக்கும் ஒரு மகளுக்கும் உள்ள பந்த பாசம்.

ஆனால் மலேசிய நாடாளுமன்றத்தில் பலருக்குச் சிம்மச் சொப்பனமாக விளங்கிய பட்டுவின் வாரிசு ஒருநாள் அதே சிகரத்தில் காலடி எடுத்து வைப்பார் என்று பட்டுவே கற்பனை செய்து பார்த்து இருக்க மாட்டார். ஆனால் அதுதான் நடந்து இருக்கிறது.

அரிதிலும் அரிதான அந்த மாதிரியான காலக் கோடுகளைக் காண அவர் இப்போது இல்லை. பொல்லாத காலன் சொல்லாமல் கொள்ளாமல் அவரிடம் கால்ஷீட்டை வாங்கிக் கொண்டான்.

இருந்தாலும் பரவாயில்லை அன்பரே பட்டு; உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம். உங்கள் மகள் கஸ்தூரியை ஒவ்வொரு நாளும் பார்க்கிறோம். வாழ்த்துகிறோம். ஆராதிக்கிறோம்.

பட்டுவின் அரசியல் வாழ்க்கை கொஞ்சம் கசப்பானது. கொஞ்சம் காரமானது. அப்படியே ரொம்பவும் கரடுமுரடானது.

அரசியல் அரிச்சுவடிகளை ஆதாரங்களுடன் பார்த்தவர். அரசியல் சட்டச் சிக்கல்களின் முடிச்சுகளுக்கு எதார்த்தமானத் தீர்வுகளைக் கண்டவர். அவர் தான் தோழர் பட்டு. அப்போதைய பழசுகளில் பெரிசு. பட்டு என்கிற பெரிசு.

கொள்கை வாதத்தில் முரட்டுத்தனம். தன்மான வாதத்தில் அதீதப் பிடிவாதம். ஆனால் அருமையான மனசு. அழகான பேச்சு. அர்த்தமான மூச்சு. இப்போது இல்லை. வருந்துகிறோம்.

காட்டுக் கூச்சல்களுக்கு நடுவிலும் அழகான மேடைப் பேச்சுகள். சரியான நேரத்தில் சரியான வாசகங்கள். சமூகச் சிந்தனைகளைக் கிள்ளிப் பார்க்கும் அணுகுமுறைகள். அரசியல் வானில் நல்ல ஒரு பரிமாணம்.

1978-ஆம் ஆண்டு அரச மலேசிய கப்பல்படை ஸ்வீடன் நாட்டில் இருந்து 90 இலட்சம் ரிங்கிட்டிற்கு ஸ்பீக்கா (Missile - Spica - M - 4 ASM) எரிபடை குண்டுகளை வாங்கியது. 




அதில் சில பிரச்னைகள் உள்ளன என்று சொல்லப் போய் அதிகாரப்பூர்வ ரகசியச் சட்டம் 1972 (Official Secrets Act 1972); சட்டத்தின் கீழ் பட்டு கைது செய்யப் பட்டார்.

ஈப்போவில் இருக்கும் பேராக் மாநிலப் போலீஸ் தலைமையகத்தில் 18 மாதங்கள் 60 நாட்கள் தனிமைச் சிறை. அடுத்த 16 மாதங்களுக்குத் தைப்பிங் கமுந்திங் தடுப்புக் காவல் முகாமில் சிறைவாசம்
(சான்று: http://www.malaysiakini.com/news/348222)

துன் மகாதீர் மலேசியாவின் பிரதமராக இருந்த காலக் கட்டத்தில் நடந்தது. அப்போதைக்கு அனைவரையும் ஈர்த்த செய்தி.
(சான்று: http://www.freemalaysiatoday.com/category/highlight/2015/12/19/p-patto-an-unsung-hero/ - Patto was arrested, charged and convicted under the Official Secrets Act)

அதைப் போலவே 1987-இல் ஓப்பராசி லாலாங் (Operation Lalang) கைது நடவடிக்கை. அதில் பட்டு, கர்பால் சிங், லிம் குவான் எங், லாவ் டாக் கீ, வி.டேவிட் போன்றவர்கள் கைது செய்யப் பட்டனர்.

கமுந்திங் சிறையில் இரண்டு ஆண்டுகளுக்குத் தடுப்புக் காவலில் வைக்கப் பட்டனர். இரண்டாவது முறை கைது செய்யப்பட்டது பட்டுவின் வாழ்க்கையில் கசப்பான வேதனைகள்.   




பட்டுவின் வாழ்க்கை வரலாற்றைச் சுருக்கமாகச் சொல்லி விடுகிறேன்.  கோப்பேங் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். 1982 லிருந்து 1986 வரையில் ஈப்போ, மெங்லெம்பு தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர். 1986 லிருந்து 1990 வரையில் பினாங்கு பாகான் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர்.

1990-இல் சுங்கை சிப்புட் தொகுதியில் அதன் சிங்கமான சாமிவேலுவை எதிர்த்து நின்று 1763 வாக்குகளில் தோல்வி கண்டவர். அவருக்கு 12,664 வாக்குகளும் சாமிவேலுவிற்கு 14,427 வாக்குகளும் கிடைத்தன.

தேர்தல் முடிவின் போது பட்டுவைப் பார்த்து சாமிவேலு சொன்னது சிலரின் நினைவுகளுக்கு இப்போது வரலாம். ‘நீ ஜெயித்தால் நம் இந்தியர்களுக்கு ஒரு நாடாளுமன்ற இடம் மட்டும்தான் கிடைக்கும். ஆனால் நான் தோற்றுப் போனால் ஓர் அமைச்சர் பதவியே பறிபோய்விடும். திரும்பக் கிடைக்குமா. சந்தேகம்.’ சொன்னதில் உண்மை இருக்கிறது.

பட்டுவின் தோல்வியில் பல பிரச்சனைகள் இருந்தன என்றுகூட சொல்லப் படுகிறது.  எது எப்படியோ இப்போதைக்கு அது முக்கியம் இல்லை. ஏன் என்றால் அது ரொம்பவும் லேட்டாகிப் போன நியூஸ்.

1995 ஜூலை 12-ஆம் தேதி ஈப்போ மருத்துவமனையில் மாரடைப்பினால் பட்டு இறந்து போனார். அப்போது கஸ்தூரிராணிக்கு 16 வயது. 




பேராக் வாழ் மக்களுக்கு பட்டு  நிறைய உதவிகளைச் செய்து இருக்கிறார். அங்காடிக்காரர்கள், தொழிலாளர்கள், சாப்பாட்டுக் கடைக்காரர்கள், நகராண்மைக் கழக ஊழியர்கள்தான் அவருக்கு நெருங்கிய அன்றாட நண்பர்கள்.

பள்ளிப் பிள்ளைகளுக்கு கைச் செலவுகளுக்கு காசு கொடுக்கும் ஒரு நல்ல பழக்கமும் இவரிடம் இருந்து உள்ளது. இவரிடம் காசு இருக்கிறதோ இல்லையோ முக்கியம் இல்லை. பள்ளிப் பிள்ளைகளுக்கு காசு கொடுப்பதில் இவருக்கு ஓர் அலாதிப் பிரியம். அதற்குத் துணையாக இருந்தவர் கஸ்தூரி ராணி.

ஒரு சின்ன சம்பவம். அப்போது கஸ்தூரிராணிக்கு பதின்ம வயது. கஸ்தூரிராணி வாங்கிச் சாப்பிடுவதற்காக வைத்து இருந்த காசை அவரிடம் நைசாகப் பேசி வாங்கி புந்தோங் பள்ளிப் பிள்ளைகளுக்குச் ‘செண்டோல்’ வாங்கிக் கொடுத்தாராம். அங்குள்ள பெற்றோர்கள் இன்னும் சொல்கிறார்கள்.

அதாவது தன்னிடம் காசு இல்லாத போது மகளிடமே காசைக் கடனுக்கு வாங்கி தானம் செய்த சந்தோஷம் எத்தனை அரசியல்வாதிகளுக்கு கிடைக்கும். சொல்லுங்கள்.

காசு என்னவோ பெரிய தொகை இல்லை. இருந்தாலும் மனசு வேண்டுமே. ஒரு முறை இரண்டு முறை இல்லை. பலமுறைகள் அந்த மாதிரி நடந்து இருக்கிறது. கடன் வாங்கிய காசை கஸ்தூரி ராணியிடம் திருப்பிக் கொடுத்தாரா என்பது தெரியவில்லை. அதைக் கஸ்தூரியிடம்தான் கேட்க வேண்டும்.

இருந்தாலும் அப்பாவின் ஓய்வூதியப் பணத்தில் தானே கஸ்தூரி ராணி மலாயாப் பல்கலைக்கழகத்திற்குப் போய்ப் படித்து பட்டம் வாங்கினார்.




ஈப்போ நகராட்சி மன்றத்தின் தலைவர்களில் ஒருவராக பட்டு இருக்கும் போது இவர் நூற்றுக்கணக்கான இந்தியர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கி இருக்கிறார். அவரிடம் உதவி பெற்றவர்களில் சிலர் பட்டு என்று சொன்னதும் கண்கலங்கிப் போகிறார்கள்.

பல நூறு பேர்களுக்கு குடியுரிமைகளைப் பெற்றுத் தருவதில் பட்டு முன்னோடியாகத் திகழ்ந்துள்ளார். பட்டுவின் அலுவலகத்தில் யார் எப்பொழுது வேண்டும் என்றாலும் நுழைந்து உதவிகளைக் கேட்கலாம்.

பசி என்று வந்தால் கீழே இருந்த உணவகத்தில் சாப்பிட்டுவிட்டும் போகலாம். இவர் அடிக்கடி சொல்லும் வசனங்கள். ’மக்களுக்காகச் சேவை செய்யத் தான் அரசியலுக்கு வந்தேன். பணம் சம்பாதிக்க இல்லை.’

அவருடைய கனவுகள் இன்னும் உலர்ந்து போகவில்லை. உற்சாகங்களும் உறைந்து போகவில்லை. அவருக்குப் பதிலாக அவருடைய மகள் இப்போது வந்து இருக்கிறார்.

அரசியல் சுதந்திரத்திற்காக, மனித உரிமைகளுக்காக, சமயம், இனம், மொழி கடந்த சம உரிமைப் போராட்டவாதியாக, பண்பாளனாக, தோழனாக, மக்களின் தொண்டனாகப் பற்பல நிலைகளில் போராடியவர் பி.பட்டு. ஜ.செ.க.வின் அதிரடிப் பீரங்கி என்றும் புகழப் பட்டவர்.

பேராக் பாகான் செராயில் 10.12.1946-இல் ஓர் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். பட்டுவிற்குப் பத்து வயதாக இருக்கும் போது தந்தையார் காலமானார். அவருடைய தாத்தாவின் பார்வையில் வளர்ந்தார். ஆசிரியர் தொழிலை விட்டுவிட்டு 1971-ஆம் ஆண்டு அரசியலுக்கு வந்தார். இவருக்கு ஒரு மனைவி. பெயர் மேரி.

பண பலமோ, அதிகார பலமோ, ஆட்சி பலமோ பட்டுவை அசர வைக்கவில்லை. சிறைவாசம் கூட அவரை அடிபணிய வைக்கவில்லை.

அமரர் பட்டு ஆற்றிய அரிய சேவைகளுக்காக ஈப்போ சிலிபின் சாலைக்கு அவருடைய பெயரையே வைக்க வேண்டும் என்று பேராக் மாநிலத்தின் முன்னால் முதலமைச்சர் டத்தோ ஸ்ரீ முகமட் நிஜார் கருத்து தெரிவித்தார்.

நல்ல மனதில் நல்ல எண்ணங்கள். ஆனால் முடிவுகள் வேறு மாதிரியாக விஸ்வரூபங்கள் எடுத்தன. அவற்றை இங்கே எழுத முடியாது. மன்னிக்கவும்.

ஆனால் இப்படி வேண்டும் என்றால் கொஞ்சம் எழுதலாம். சகிப்புத் தன்மைகள் கரைந்து போய் கரை தட்டிய கடும் எதிர்ப்புகள். கடைசியில் பட்டுவின் குடும்பத்தினரே ’எதுவும் வேண்டாம். பட்டுவை நிம்மதியாகத் தூங்க விடுங்கள்’ என்று சொல்லும் அளவிற்கு நிலைமை மோசமாகிப் போனது. 



இருந்தாலும் காலத்தால் செய்த உதவி ஞாலத்திலும் பெரிது என்று சொல்லி பினாங்கில் பட்டுவின் பெயரில் ஒரு சாலைக்குப் பெயர் வைக்கப் பட்டது. பட்டவர்த்தில் ராஜா ஊடா எனும் சாலைக்கு ஜாலான் பி. பட்டு என்று பெயர் மாற்றம் செய்யப் பட்டது. முதலமைச்சர் லிம் குவான் இங்கிற்கு நன்றிகள்.

சமயங்களில் கோப்பெங் நகரின் லாவான் கூடா பகுதியில் உள்ள கோப்பிக் கடைகளுக்குச் செல்வார். திடீரென்று மேஜைகள் மீது ஏறி நின்று கொண்டு உணர்ச்சிப் பூர்வமாக உரையாற்றுவார்.

மனித உரிமை அத்துமீறல்கள் பற்றி ஆவேசமாகச் சாடுவார். அப்போது பொது மக்கள் சுற்றி நின்று ஆரவாரம் செய்வார்கள். அந்தக் காட்சிகளை நம்மால் மறக்க முடியாது.

ஜ.செ.க. கட்சியின் துணைப் பொதுச் செயலாளராகவும், ‘ராக்கெட்’ இதழின் ஆசிரியராகவும் இருந்தார். அதன் பின்னர் இரண்டு மாதங்கள் கழித்து அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்து போனார். அந்த இழப்பு அவருடைய குடும்பத்திற்கு அல்ல. நாட்டிற்கே பெரிய இழப்பாகும். இந்தியச் சமுதாயத்திற்கு மாபெரும் இழப்பாகும்.

அவருடைய ஈமச்சடங்கு செலவுகளில் பெரும் பகுதியை டத்தோ ஸ்ரீ உத்தாமா சாமிவேலு கவனித்துக் கொண்டார். அதை நாம் இங்கே நினைவுகூர வேண்டும்.

அவர்கள் இருவரும் அரசியல் எதிரிகளாக இருந்து இருக்கலாம். ஆனால், உணர்வுகள் என்று வரும்போது இந்தியர்களாக இருக்கும் பட்சத்தில் இந்திய உணர்வுகளுக்கு அடிமையாகிப் போகின்றார்கள். அந்த வகையில் டத்தோ ஸ்ரீயைப் பாராட்டித்தான் ஆக வேண்டும்.



பரந்து விரிந்து கிடக்கும் வரலாற்றுச் சுவடுகளில் வையகம் போற்றும் மனுக்குல மைந்தர்கள் வாழ்ந்து மறைகின்றார்கள். இறந்தும் இறவாமல் இறவாப் புகழுடன் உயிர்ப்பு பெற்ற ஆன்ம ஜீவநாடிகளாக உறைகின்றார்கள்.

அவர்களில் சிலர் வரலாற்றுச் சப்த சுவரங்களின் சொர்ண சகாப்தங்களாக மாறுகின்றார்கள். அந்தச் சகாப்த வேதங்களையும் தாண்டி நம்முடன் வாழ்ந்து கொண்டும் இருக்கின்றார்கள். அன்றும் இன்றும் மனித மனச் சங்கமங்களில் மந்திரப் புன்னகைகளை அள்ளித் தெளித்து ஆலாபனையும் செய்கின்றார்கள். 

பி. பட்டு. உண்மையிலேயே ஒரு மலேசிய மண்ணின் மைந்தன்! மலேசிய வரலாற்றில் ஓர் அவதாரப் புருஷன்! அவர் மறைந்து விட்டாலும் மனிதச் சுவடிகளில் இருந்து மறைக்க முடியாத மறுமலர்ச்சிக் களஞ்சியமாக வாழ்ந்து கொண்டு இருக்கின்றார். இன்றும் இனி என்றும் வாழ்ந்து கொண்டு இருப்பார். அவர் ஒரு சகாப்தம்!

11 ஜூலை 2017

இந்திய ராஜாக்களின் சோக வாழ்க்கை 1

இந்திய மண்ணில் ஆயிரக் கணக்கான ராஜாக்கள் பிறந்தார்கள். வாழ்ந்தார்கள். வீழ்ந்தார்கள். அது வரலாறு. அந்த ராஜாக்களின் ராஜ வாழ்க்கையில் மதுரசங்கள் ஆறாய்ப் பெருகி ஓடின. மாதுரசங்கள் தேனாய் உருகிப் பாய்ந்தன. 



விதம் விதமான வண்டுகள் பள்ளி கொள்ள வந்தன. மன்மத வீணைகளை மீட்டிப் பார்த்தன. கின்கிணிக் குண்டலினியைக் கிண்டிவிட்டுச் சாய்ந்தன. 

அதையும் தாண்டிய நிலையில் சில சின்னஞ்சிறு மொட்டுகள் பட்டுக்குள் சிக்காமல் தப்பிச் சென்றன. பல மொட்டுகள் சிறகொடிந்து போயின.

அவற்றில் சில தொட்டுக் கொள்ளும் ஊறுகாய்களாய் உறைந்து மறைந்து காணாமலும் போயின.

மன்னரின் ஒரே ஒரு பார்வை போதும். ஓராயிரம் ராணிகள் ஓடி வருவார்கள். பல்லாயிரம் சுகங்களுக்குப் பாய் விரித்துப் போடுவார்கள். 




அந்தர்ப்புரம் ஒரு கந்தர்வ லோகமாகிச் சிணுங்கி நிற்கும். மங்கிய வெளிச்சத்தின் மயக்கங்களில் சொர்க்கத்தின் தலைவாசலுக்கே வெட்கம் வந்து வெலவெலத்துப் போகும்.

இப்படித்தான் அந்தக் காலத்து ராஜாக்கள் வாழ்ந்தார்கள் என்று பலர் நினைக்கிறார்கள். நினைத்துக் கொண்டும் இருக்கிறார்கள். அது தப்புங்க.  பாவங்க அந்த ராஜாக்கள்.

அவர்கள் ஒவ்வொரு நாளும் செத்து செத்துப் பிழைத்தவர்கள். இந்த விசயம் ரொம்ப பேருக்குத் தெரியாதுங்க! அதைப் பற்றிய தான் இந்தக் கட்டுரை.

மகாராஜாக்களின் வாழ்க்கை வசந்தங்கள் வேதனைகள் (Maharaja The Lives Loves & Intrigues Of The Maharaja Of India - Paperback – 2008) என்பது ஒரு வரலாற்றுப் பதிப்பு. இந்திய எழுத்தாளர் திவான் ஜர்மானி தாஸ் (Diwan Jarmani Dass) எழுதி இருக்கிறார். 



இன்னும் ஒரு நூல் இருக்கிறது. அதன் பெயர் இந்தியாவின் மொகலாயர்களின் அந்தரங்க வாழ்க்கை. அதிலும் பற்பல ரகசியங்கள். தலை சுற்றி விட்டது. பேராசிரியர் ஆர். நாத் (R. Nath) என்பவர் எழுதி இருக்கிறார். இணையம் மூலமாக இலவசமாகப் படிக்கலாம்.
(சான்று: http://pdfbookdb.com/2017/private-life-of-the-mughals-of-india-pdf - Private Life Of The Mughals Of India)

இன்னும் சில நூல்கள் உள்ளன. மொகலாய மன்னர்களின் அந்தரங்க வாழ்க்கையை அக்குவேர் ஆணிவேராய் அலசிப் பார்க்கின்றன. எல்லாவற்றையும் படித்து முடிக்க எப்படியும் ஒரு சில வாரங்கள் பிடிக்கும். சரி.

இந்தியாவின் மொகலாயர்களின் அந்தரங்க வாழ்க்கை எனும் நூலைப் படித்த பிறகு வெகு நாட்களாய் எனக்குள் மறைந்து நின்ற மயக்கமும் சற்றே நீர்த்துப் போனது. உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.




ராஜ வாழ்க்கை என்பது காளிக் கோயிலில் பலிக்கடாவாகும் ஓர் ஆட்டுக் கடாவின் வாழ்க்கையைப் போன்றது. இப்படியும் சொல்லலாம்.

ஆசை ஆசையாய்ப் பார்த்து வளர்த்த ஆட்டுக் கடாவிற்கு மஞ்சள் பூசுவார்கள். பன்னீர் தெளிப்பார்கள். குங்குமம் வைப்பார்கள். சந்தனம் தடவுவார்கள். ரோசாப்பூ மாலை போடுவார்கள்.

அப்புறம் கத்தியைக் கழுத்தில் வைப்பார்கள். கொஞ்ச நேரத்தில் கூறு போட்ட ஆடுக்கடா சட்டியில் வெந்து கொண்டு இருக்கும். அதைச் சாப்பிட ஒரு படையே திரண்டு நிற்கும். பெருமூச்சு விட்டுக் கொள்ளுங்கள்.

ஆக அந்த மாதிரிதான் அந்தக் காலத்து ராஜாக்களும் வாழ்ந்து இருக்கிறார்கள். எந்த நேரத்திலும் கத்தி கழுத்திற்கு வரும் என்று பயந்து பயந்து வாழ வேண்டிய ஒரு திரிசங்கு நிலை. இதுதான் அந்தக் காலத்து ராஜாக்களின் ராஜ வாழ்க்கை. 




முக்கால் வாசி இந்திய நாட்டை ஒரே குடையின் கீழ் கொண்டு வந்த சக்கரவர்த்திகளுக்கும் கடைசி காலத்தில் ஒரு நல்ல அமைதியான சாவு கிடைக்கவில்லை என்பதுதான் வரலாற்று உண்மை.

காட்டிலே உயரமாக வளர்ந்துவிட்ட ஒரு மரத்தைப் பாருங்கள். மற்ற தாவரங்களில் இருந்து அது தனிமைப் பட்டு தனியாக நிற்கும்.

அதைப் பார்த்தால் என்னவோ விண்ணைத் தொடுவது போல பெருமையாகத் தெரியும். ஆனால் உணர்வுப் பூர்வமாகப் பார்த்தால் அது தனிமையில் வாடி நிற்பதுதான் தெரிய வரும்.

மேற்கத்திய நாட்டு அரசர்களை எடுத்துக் கொள்ளுங்கள். அவர்களின் அதீத ஆடம்பரமான வாழ்க்கையைப் பார்த்து இந்தக் காலத்து சாமான்ய மக்கள் நொந்து நலிந்து போவதும்  உண்டு.

இந்தியாவை ஆண்ட மொகலாய மன்னர்கள் ஒரு நல்ல காரியம் செய்து வைத்துவிட்டுப் போய் இருக்கிறார்கள். தூங்கி எழுந்ததில் இருந்து இரவில் சவ்வாது மேடையில் சிருங்காரப் பாடல்களைக் கேட்பது வரையிலும் எல்லா முக்கிய நிகழ்ச்சிகளையும் எழுதி வைத்துச் சென்று இருக்கிறார்கள்.

அவர்கள் ஒன்றும் எழுதவில்லை. எழுத அவர்களுக்கு எங்கே நேரம் இருக்கிறது. யாராவது ஒரு நம்பிக்கையான ஆளைக் கூப்பிட்டு குறிப்பு எடுக்கச் சொல்லி இருக்கலாம். 

அதுவே நாட்குறிப்பாகிப் பின்னர் காலத்தில் புத்தகமாக மாறிப் போய் இருக்கலாம். ராஜா புத்தகம் எழுதியதை நாம் என்ன பார்த்துக் கொண்டா இருந்தோம்.



அப்போதைய மன்னர்களுக்கு பயம் என்ற ஒன்று தான் சாகும் வரையிலும் தொற்றி அவர்களுக்கு உற்றத் தோழனாக வலம் வந்து இருக்கிறது.

ஆனால் அதை அவர்கள் வெளிக்காட்டிக் கொண்டது இல்லை. அதை அப்படியே மறைத்து மறைத்து அப்படியே மறைந்து போய் விட்டார்கள்.

நண்பர்களைப் பக்கத்தில் வைத்துக் கொள். எதிரிகளை மிகவும் பக்கத்தில் வைத்துக் கொள். இந்த இருவர் மீதும் கவனமாக இரு. இருவரில் யார் வேண்டுமானாலும் உன்னைக் கொல்லலாம்

என்று மன்னர்களுக்கு பீர்பால், இபுன் பாத்துத்தா போன்ற அறிவுரைஞர்கள் ஆலோசனை சொல்வார்களாம். அதுதான் சரித்திரத்திலும் நடந்து இருக்கிறது.

மொகலாய அரசர்களில் ஜகாங்கீர் (Jahangir - Mirza Nur-ud-din Beig Mohammad Khan Salim)  என்பவர் மிக முக்கியமானவர். இவர் தான் அக்பருக்கு மகன். ஷா ஜகானுக்குத் தந்தையார். 




சலீம் அனார்கலி காதல் கதை தெரியும் தானே. அமரக் காதல், ஆத்மீகக் காதல், இந்திரக் காதல், இனிதான காதல், இனிக்கும் காதல், இனிக்காத காதல், இம்சைக் காதல், இஞ்சிப்புளிக் புளிக்காதல் என்று இப்படி எத்தனையோ காதல்கள் இருக்கின்றன. பார்த்து இருக்கிறோம். கேட்டு இருக்கிறோம்.

அவற்றில் சலீம் அனார்கலி காதல் இருக்கிறதே அது இமயத்தின் சிகரத்தையே உரசிப் பார்த்த நல்ல ஒரு காந்தர்வக் காதல். சும்மா சொல்லக் கூடாது. அந்தக் காலத்திலேயே சொக்கமான தங்கத்தையும் விலை பேசிய காதல்.

என்னடா வரலாற்றுக் கட்டுரைகளை எழுதிக் கொண்டு இருந்தவன் திடீரென்று காதல் பக்கம் வந்து விட்டானே என்று நினைக்க வேண்டாம்.

ஆமாம் அன்றாடம் தயிர்ச் சாதம் சாப்பிட்டு சலித்துப் போய் கொஞ்சம் வெங்காயக் குழம்பு சாப்பிடலாமே என்கிற ஆசைதாங்க. அந்த மாதிரி தான். வேறு ஒன்றும் இல்லீங்க. தப்பாக நினைக்க வேண்டாம்.

அந்தச் சலீம் தான் இந்த ஜகாங்கீர். அந்த ஜகாங்கீர் தான் இந்தச் சலீம். அக்பரின் மூத்த மகன். பிஞ்சிலே பழுத்த சின்னப் பையன்.

அக்பரின் அந்தர்ப்புர நாயகிகளில் ஒருவரான அனார்கலியைக் காதலித்து அதனால் ஜகாங்கீருக்குப் பற்பல பிரச்சினைகள். அக்பருக்கும் பிரச்சினைகள்.

அனார்கலி போன பிறகு ஜகாங்கீர் நிறைய பெண்களைத் திருமணம் செய்து கொண்டார். அது வேறு கதை.
(சான்று: http://creative.sulekha.com/what-is-the-truth-about-anarkali_460884_blog - Akbar who was smitten by her beauty first and gave her the name “Anarkali”)

ஜகாங்கீர் அரசரான பின்னர் என்ன செய்தார் என்பதைப் பற்றித் தான் தெரிந்து கொள்ளப் போகிறோம். நான் ரெடி நீங்க ரெடியா.

ஜகாங்கீர் ஒரு நாளைக்கு காலையில் இருந்து இரவு படுக்கும் வரை என்ன என்ன செய்வார் என்பதைப் பார்ப்போம்.

அதிகாலை 4 மணிக்கு, கோழி கூவுவதற்கு முன்னாலேயே எழுந்து விடுவார். அவரை எழுப்பி விடுவதற்கு என்றே மன்னருக்குப் பிடித்த ஒரு ராணி இருந்தார்.

மன்னர் எந்த மனைவியோடு எந்த அறையில் தூங்கினாலும் சரி வழக்கமாக அவரை எழுப்பிவிடும் அதே ராணிதான் ஒவ்வொரு நாளும் எழுப்ப வேண்டும்.

அந்த ராணியின் முகத்தில் விழித்தால் தான் காரியங்கள் நல்லபடியாக நடக்கும் என்பது அவருடைய ஐதீகம். இன்னும் ஒன்று. 




அந்தக் காலத்து ராஜாவுக்கு எத்தனை மனைவிகள் என்று என்னிடம் கேட்க வேண்டாம். ஏன் என்றால் அது அவருக்கே தெரியாத தில்லாலங்கடி ரகசியம்.

ஆக அவரை எந்த மனைவி எழுப்பி விடுவார் என்று எல்லாம் பெரிய பெரிய ஆராய்ச்சி எல்லாம் செய்ய வேண்டாம்.

உங்களிடம் இருப்பதை ஆராய்ச்சி செய்து அதில் கிடைக்கிற மகிழ்ச்சியே பெரிய பாக்கியம் என்று நினைத்தாலே போதும்.  அதுவே பெரிய புண்ணியம்.

மன்னருக்கு முதல் வேலையாக நல்ல ஒரு குளியல். குளியல் தொட்டியில் பன்னீரை ஊற்றி நிறைத்து வைத்து இருப்பார்கள். மன்னருக்குப் பிடித்தமான ரோஜாப் பூக்கள் மிதக்கும்.

ஈரான், ஈராக்கில் இருந்து கொண்டு வரப்பட்ட அரிய வாசனைத் திரவியங்கள் கலந்து இருக்கும். குளியல் கூடத்தில் ஏறக்குறைய 12 வேலைக்காரர்கள் இருப்பார்கள்.

மன்னர் குளிப்பதற்கான தண்ணீரை முதல்நாள் ராத்திரியிலேயே பத்திரமாக ஒரு பாத்திரத்தில் எடுத்து அதற்கு முத்திரையிட்டு பாதுகாப்பாக வைத்து இருப்பார்கள்.

எல்லாம் உஷார் நிலை தான். யார் கொண்டது. எவனாவது எருக்கம் பூவை இடித்துப் போட்டு இருந்தால் என்ன செய்வதாம்.

வெதுவெதுப்பான நீரில் தான் மன்னர் குளிப்பார். சூடு எவ்வளவு இருக்கிறது என்பதைப் பரிசோதனை செய்வதற்காகவே தனியாக ஓர் ஆள். 

மன்னரின் உடலுக்கு சந்தனம், ஜவ்வாது, வாசனைத் தைலங்களைத் தேய்த்துவிட 16 பணிப் பெண்கள். ஓர் ஆள் பற்றாதா என்று நீங்கள் கேட்கலாம். என்ன செய்வது. ஒரு பெருமூச்சு விட்டுக் கொள்ளுங்கள்.

குளியல் சடங்கு ஒரு மணி நேரம் பிடிக்கும். அடுத்து அங்க ஆபரணங்கள், அடுக்கடுக்காய் அவரின் பார்வைக்காக வைக்கப்பட்டு இருக்கும். அவற்றில் எதை அணிந்து கொள்வது என்பதை மன்னர்தான் முடிவு செய்வார்.

ஆடை ஆபரணங்களை மன்னர் அணிந்ததும் அரண்மனை வளாகத்தில் ஒரு சின்ன தம்பட்ட ஒலி எழுப்பப் படும். மன்னர் தனது நாளைத் தொடக்கி விட்டார் என்பதற்கான அறிவிப்பு.

அதன் பிறகு அரண்மனை மருத்துவர் மன்னருக்கு நாடி பிடித்து பரிசோதனை செய்து பார்ப்பார். 

மன்னரின் வயிற்றுப் பிரச்னைகள், உடல் வெப்பம், நாக்கின் நிறத் தன்மை, சிறுநீரின் நிறம், உடல் தோலின் நிற மாற்றம், அடிப் பாதங்களின் மிருதுத் தன்மை, சுவாசம் விடுவதில் ஏற்படும் ஏற்றத் தாழ்வு போன்றவற்றை எல்லாம் ஆராய்ந்து அறிந்து மன்னரிடம் பரிந்துரைகள் செய்வார்.

என்ன என்ன உணவுகளைச் சாப்பிட வேண்டும், எந்தப் பழ ரசங்களைத் தவிர்க்க வேண்டும். மருத்துவர் பரிந்துரை செய்தாலும் மன்னர் தான் முடிவு எடுப்பார். அதன் பிறகு, இறை வழிபாடு.

ஒவ்வொரு நாளும் அறிவுரைகளை வழங்க ஒரு ஞானி அரண்மனையிலேயே தங்கி இருப்பார். அன்றைக்கான ஞான உரையை மன்னருக்குச் சொல்வார். மன்னர் அதைப் பணிவாகக் கேட்டுக் கொள்வார். 

அது முடிந்ததும் சிறப்புப் பூசைகள். சமயப் பெரியவர்கள் காத்து நிற்பார்கள். அவற்றை மன்னர் ஏற்றுக் கொள்வார்.

அதிகாலையில் சூரிய தரிசனம் மிக முக்கியம். பாபர், அக்பர் காலத்தில் இருந்தே அந்த வழக்கம் இருந்து வருகிறது. மக்களைச் சந்திப்பதற்கு சிறப்பாக அமைக்கப்பட்ட ஓர் உயர்ந்த தனி மாடத்தில் மன்னர் வந்து நிற்பார்.

மதிய உணவுதான் மன்னரின் பிரதான உணவு. அதைத் தயாரிப்பதற்கு 30 சமையல்காரர்கள். மன்னரின் மத்தியானச் சாப்பாட்டைத் தயாரிக்க உதவியாளர்கள் 200 பேர்.

ஒவ்வொரு ராணிக்கும் ஒவ்வொரு தனிப்பட்ட ஐட்டம். சுத்தச் சைவமான ராணிகளும் இருந்தார்கள். அவர்களுக்குப் போட்டியாக அசைவத்தில் பிறந்து அசைவத்திலேயே வளர்ந்த ராணிகளும் இருந்தார்கள். இதைப் பற்றி நாளைய கட்டுரையில் பார்ப்போம்.

(தொடரும்)

08 ஜூலை 2017

நித்தியானந்தா

ஒரு மனிதனை ஒரு நாய் கடித்து விட்டது என்றால் அது செய்தியா. இல்லீங்க. ஆனால் ஒரு நாயை ஒரு மனிதன் கடித்து விட்டான் என்றால் அதுதாங்க செய்தி. 


ஒரு மனைவியை அவளுடைய புருசன் உரிமையோடு ஏதோ அடித்து விட்டான் என்றால் அது செய்தி இல்லீங்க. 

ஆனால் அதே மனைவி அந்தப் புருசனை வாடா போடா மவனே என்று சொல்லி இழுத்துப் போட்டு நாலு மிதி மிதித்து இருந்தால் அதுதாங்க  செய்தி.

இங்கேதான் நித்தியானந்தா தடுமாறிப் போனார். என்ன போனார். போய் விட்டார். போதுங்களா. ரஞ்சிதா எனும் பெண் செய்தது ஒரு கோளாறு. சும்மா இருந்த சங்கைக் கெடுத்ததாக மீண்டும் ஒரு வரலாறு. தொடர்ந்து படியுங்கள்.

நித்தியானந்தா. நல்ல மனிதர். நாலும் தெரிந்த சின்னவர். ரொம்பவும் அவசரப் பட்டு விட்டார். இவரை எனக்குப் பிடிக்கும். என்ன காரனம் தெரியுமா. அவருடைய ஆன்மீக எழுத்துகள்.

மதுரை ஆதினத்தின் தலைவர் ஆவதற்கு நித்தியானந்தாவிற்கு தகுதி இல்லையா என்று சிலர் கேட்கலாம். அவருக்கு எல்லாத் தகுதிகளும் இருந்தன. இன்னும் இருக்கின்றன. இல்லை என்று சொல்லவில்லை.



ஆனால் என்றைக்கு அவர் ரஞ்சித மோகன ராகம் பாடினாரோ அன்றைக்கே அவருடைய அருமை பெருமைகள் எல்லாம் அடிபட்டு போய் விட்டன.

ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே என்று சும்மாவா சொன்னார்கள். என்ன செய்வது. ஏழரை நாட்டு அரசன் அவருக்கு தூது போய் இருக்கிறான். பாவம் அவர்.

குமுதம் வார இதழில் நிதர்சனமான உண்மைகளை எழுதியவர் இந்த நித்தியானந்தா. அவரைப் பற்றி கோடிக் கணக்கான தமிழர்களுக்குத் தெரியும். ஒரு கட்டத்தில் தெய்வமாகக்கூட போற்றினார்கள்.

ஆனால் ரஞ்சிதா – நித்தியானந்தாவின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு தொய்வு நிலை ஏற்பட்டது. அதுவே உலகத் தமிழர்களிடையே ஒரு சலசலப்பையும் ஏற்படுத்தியது.

நித்தியானந்தா ரஞ்சிதாவுடன் சேர்ந்து இருந்த படங்களை சன் டிவி ’இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக’ என்று சொல்லிச் சொல்லி விளம்பரம் செய்தது. 

முதல் முறையாக என்று போட்டுப் போட்டு அறுத்து எடுத்து விட்டது. தயவு செய்து சன் தொலைக்காட்சி கோபித்துக் கொள்ள வேண்டாம்.

ஒரு முறை அல்ல. இரு முறை அல்ல. பல நூறு முறைகள். ஏதோ வழக்கமான செய்தி தானே என்று பலர் நினைத்தார்கள். குடும்பம், குழந்தை குட்டிகளோடு சேர்ந்து அந்தப் படங்களையும் பார்த்தார்கள்.

அப்போது தான் தனிப்பட்ட ஒருவரின் விவகாரம் விகாரமாக மாறிப் போனது. பார்த்தவர்கள் முகம் சுழித்தார்கள். வேறு என்ன செய்ய முடியும். சொல்லுங்கள்,



அதன் பின்னர் நித்தியானந்தா உலக அளவில் பிரபலமாகிப் போனார். அது மட்டும் அல்ல. ‘பேஸ்புக்’ எனும் சமூக இணையத் தளத்தில் நித்தியானந்தாவைத் துவைத்துப் பிழிந்து காயப் போட்டு விட்டார்கள்.

காயப் போட்டாலும் பரவாயில்லை. அதையும் தாண்டிப் போய் விரசமான விமர்சனங்கள். ம்ம்ம்ம்…. என்ன செய்வது. அதனால் ஒரு கட்டத்தில் ரொம்ப பேர் அந்தப் பேஸ்புக் பக்கம் போவதையும் நிறுத்திக் கொண்டார்கள்.

இன்னும் ஒரு விசயம். வேலை இல்லாத வெட்டிப் பேச்சுகள். அப்புறம் அப்பா அம்மாவுக்கு சோறு போட முடியாத சில வாக்குப் போக்குகளை அங்கே ரொம்பவுமே பார்க்கலாம். ஆக கூட்டிக் கழித்துப் பார்த்தால் பெரிய பெரிய சோம்பேறிகளின் கூடாரமாகப் பேஸ்புக் மாறிக் கொண்டு வருகிறது. ரொம்ப சந்தோஷம்.

சமூகப் பார்வையில் இன்னும் ஒரு செருகல். ஏற்கனவே சீரியல்களைப் பார்த்து பார்த்துப் பல குடும்பங்கள் தட்டுத் தடுமாறிக் கொண்டு இருக்கின்றன. சீரியல் நாடகங்கள் நல்ல பொழுது போக்கு நிகழ்ச்சிகள் தான். இல்லை என்று சொல்லவில்லை. அதற்காக 24 மணி நேரமும் அதிலேயே மூழ்கிக் கிடக்க வேண்டுமா.

அதனால் குடும்பத்தைச் சரியாகப் பார்க்க முடியவில்லை. பிள்ளைகளைக் கவனிக்க நேரம் இல்லை. பெற்ற பிள்ளைகளின் எதிர்காலமே அடைமானத்தில் போய்க் கொண்டு இருக்கிறது.

எத்தனை மணிக்குப் பிள்ளை வீட்டை விட்டு வெளியே போனான். எத்தனை மணிக்கு வீட்டுக்கு வந்தான். யாரோடு போனான். அதை எல்லாம் தெரிந்து கொள்ள நேரமும் இல்லை. அக்கறையும் இல்லை.

வந்தாளே மொகராசி போனாளே மகராசி வருவாளா முகராசி என்று சீரியல்களைப் பார்த்துக் கொண்டே இருங்கள். ஒரு நாளைக்கு யாராவது ஒருவன் உங்கள் வீட்டுக் கதவைத் தட்டிச் சொல்லுவான். 



அண்ணே இது உங்க பையன் மாதிரி இல்ல இருக்கு. பேஸ்புக்குல வந்திருக்குங்க. பள்ளிக்கூடத்தில கேங்க் பைட் போட்டு இருக்கிறானாம்.

அப்புறம் அவரே மறுபடியும் கதவைத் தட்டி இது உங்க பொண்ணு மாதிரி இல்ல இருக்கு. பேஸ்புக்குல வந்திருக்கு. எவனையோ கட்டிப் பிடிச்சி முத்தம் கொடுத்து கிட்டு இருக்கா. ஸடேட்டஸ் அப்டேட் பண்ணி இருக்காள் என்று சொல்லுவான்.

அப்புறம் என்ன. பொண்டாட்டியைப் பார்த்து புருசன் கத்துவான். புருசனைப் பார்த்து பொண்டாட்டி கத்துவாள். சீரியல் எல்லாம் தோற்றுப் போகும்.

அந்தச் சண்டையை பதினெட்டு பட்டியும் டிக்கெட் வாங்காமல் பார்த்து ரசிக்கும். சில பலரின் வீடுகளில் இது தான் இப்போது நடக்கிற ஜிங்கு ஜிக்கா பேஸ்புக் ராமாயணங்கள். எங்கேயோ போய் விட்டேன். வயிற்றெரிச்சல். விடுங்கள். நம்ப நித்தி கதைக்கு வருவோம்.

ரஞ்சிதா வீடியோ காட்சிகள் அத்தனையும் பொய். கிராபிக்ஸ். வரைகலை மூலமாக ’மார்பிங்’ செய்யப் பட்டது என்று நித்தியானந்தா போராடிப் பார்த்தார்.

இந்தக் கட்டத்தில் ஹைதராபாத், புதுடில்லியில் இருக்கும் மத்திய அரசின் தடயவியல் ஆய்வகங்கள் அந்த வீடியோ காட்சிகளைத் துல்லியமாக ஆராய்ந்து பார்த்தன.

அவை உண்மையான வீடியோ காட்சிகள் தான் என்றும் வீடியோ காட்சிகளில் இருப்பது நித்தியானந்தாவும் ரஞ்சிதாவும்தான் என்றும் அறிக்கை கொடுத்தன. பெங்களூர் நீதிமன்றத்தில் உளவுத் துறைப் போலீசாரால் அந்த அறிக்கை தாக்கல் செய்யப் பட்டது.

சும்மா சொல்லக் கூடாது. அந்தச் சலசலப்பு இன்றும்கூட அடங்கவில்லை. ஆனால் அவர் மதுரை ஆதினத்தின் தலைவராகிப் போனது தான் பெரிய ஜில்லாலங்கடி பிரச்சினை. 



ஓர் ஆதினத்தின் தலைவராகும் தகுதி இவருக்கு இருக்கிறதா. இப்படி நான் கேட்கவில்லை. கோடிக் கணக்கான தமிழர்கள் கேட்டார்கள்.

மதுரை ஆதீனம் என்பது தமிழகத்தின் மிகத் தொன்மையான சைவ சமயத் திருமடங்களில் ஒன்றாகும். மதுரை நகரில் இருக்கிறது. 

ஏறக்குறைய 1500 ஆண்டுகளுக்கு முன்பு சைவ சமய நாயன்மார்களில் ஒருவரான திருஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப் பட்டது.

திருஞானசம்பந்தர் உருவாக்கிய மதுரை ஆதீன மடம், சைவ சித்தாத்தங்களை அடிப்படையாகக் கொண்டது. இன்றுவரை 292 பேர் பீடாதிபதிகளாக இருந்து உள்ளனர்.

292 ஆவதாக அருணகிரி என்பவர் இருந்தார். தனக்குப் பின்னர் அடுத்ததாக 293 வது பீடாதிபதியாக நித்தியானந்தாவை நியமித்தார்.

அத்துடன் நித்யனந்தாவிற்கு மதுரை ஆதீனம் 293-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ பரமஹம்ச ஸ்ரீ நித்யானந்த ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் என்னும் பட்டமும் வழங்கப் பட்டது.



மதுரை ஆதீன நிர்வாகத்தின் கீழ் உள்ள மற்ற ஆதீனத் தலைவர்கள் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மதுரை ஆதீன மடத்திற்கு 5 கோடி ரூபாய் நன்கொடை வழங்குவதாக வேறு நித்யானந்தா அறிவித்தார்.

அருணகிரி பணத்தை வாங்கிக் கொண்டு ஆதினத் தலைவர் பதவியை நித்தியானந்தாவிற்கு வழங்கியதாக ’விஸ்வ இந்து பரிசத்’ அமைப்பு எதிர்ப்பு தெரிவித்தது.

தவிர தமிழகத்தின் மற்ற திருமடங்களின் ஆதரவுடன் மதுரை ஆதீன மீட்புக் குழு என்று ஓர் அமைப்பு அமைக்கப் பட்டது. இந்தக் குழுவினர் ஆதீனத்தின் வாசல் முன்பு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்பாட்டங்கள் செய்தனர்.

தமிழகத்தில் செயல்படும் இந்துமத அமைப்புகளுக்கு அது ஒரு பெரிய மரண அடிச் செய்தி. அது முதல் அடி இல்லை. என்றாலும் முக்கியமான அடி. 

மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் அவர்கள் பட்ட அவஸ்தை இருக்கிறதே சொல்லில் மாளா. அதைப் புரிந்து கொள்ள இன்னும் பல பத்தாண்டுகள் பிடிக்கும்.

இவ்வளவு பிரச்சினைகளுக்கும் இடையில் நித்தியானந்தா ஒரு தொலைக்காட்சி அலைவரிசையைத் தொடங்கினார் என்பது தான் அப்போதைக்கு ஒரு கவுண்டமணியார் செய்தி. 



அந்த அலைவரிசையின் பெயர் ஆனந்தம். ஆன்மிகத் தகவல்கள் அடங்கியதாக அந்த அலைவரிசை அமைந்தது. 24 மணி நேர டிவி சேனல். அதற்கான உறுதிப் பத்திரமும் கிடைத்தது. இன்றும் போய்க் கொண்டு இருக்கிறது.

யார் இந்த நித்தியானந்தா? இவருடைய முழுப்பெயர் இராஜசேகர். 1978 ஜனவரி மாதம் முதல் தேதி தமிழ்நாட்டில் உள்ள திருவண்ணாமலையில் பிறந்தார்.

தன்னுடைய பன்னிரண்டாவது  வயதில் அருணாச்சல மலை அடிவாரத்தில் தியானம் செய்யத் தொடங்கினார். பதினேழாம் வயதில் வீட்டை விட்டு வெளியேறி  பரிவிராஜக  வாழ்க்கையினைத் தொடர்ந்தார்.

பின்னர் தியானபீடம் எனும் சேவை மையத்தை 2000 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் தேதி தொடங்கி வைத்தார்.

ரஞ்சிதாவுடன் இருந்த காணொளியை  2010, மார்ச் 2-இல் சன் தொலைக்காட்சி ஒளிபரப்பியது. இவரைப்  பற்றிய நிகழ்படம் வெளியானதும், இவர் ஆசிரமத்தை விட்டு வெளியேறி  தலைமறைவானார்.

இமாச்சல பிரதேசத்தில் உள்ள கோகலம் மாவட்டத்தில் கர்கி எனும் ஊரில் பதுங்கி இருப்பதாக செய்திகள் கசிந்தன. கர்நாடக காவல்துறை 2010 ஏப்ரல் 21 இல் கைது செய்தனர்.  

அப்போது அவரிடம் மூன்று இலட்ச ரூபாயும், இரண்டாயிரம் டாலர் பயண காசோலையும் இருந்தன.

நித்தியானந்தா ஆதீனத் தலைவர் ஆனார் என்பதுதான் பலரால் கிரகிக்க முடியாத விசயமாக இருந்தது. ஊடகங்கள் தொடங்கி பாமரர் வரை அழுது தொலைத்தார்கள்.



இப்போது என்ன ஆனது தெரியுங்களா. நித்தியானந்தா வேண்டாம் என்று சொல்லிய ரஞ்சித மலர் தெலுங்கு நடிகர் சஞ்சீவியின் ஆசைநாயகியாக வாழ்ந்து கொண்டு இருக்கின்றார். நல்ல நவரசக் கோலங்கள்.

ஆக ஓர் ஆண்மகனின் வாழ்விற்குப் பின்னால் ஒரு பெண் இருக்கிறாள். அவனுடைய தாழ்விற்குப் பின்னாலும் ஒரு பெண் நிற்கிறாள். அதே போல நித்தியானந்தாவின் வாழ்க்கையிலும் ஒரு பெண் இருந்தாள்.

மனுசனாகப் பிறந்த அத்தனைப் பேருக்கும் ஆசைகள் இருக்குங்க. இல்லை என்று யாரையாவது ஒருவரைச் சொல்லச் சொல்லுங்கள். பிடித்தமானவர் கன்னத்தில் ஆசையாக முத்தமிட்டால் போதுங்க. 

குடும்ப மகிழ்ச்சி இமயமலையில் இருந்து இறங்கி கீழே அன்னபூர்னா வரை சாய்ந்து நிற்கும். சாகும் வரை சாகடிக்கும் மனச் சாரல்கள். அது போதுங்க.

நித்தியானந்தா பிரம்மசரியத்தைக் கலைத்து விட்டு சாதாரண சாமான்ய நிலைக்கு திரும்பச் சொல்கிறார் ரஞ்சித மலர். திரும்புவாரா நித்தி. அப்படி ஒரு திருப்பம் ஏற்படுமா. வரவே வராது.

ஆண்கள் எல்லாரும் கடுக்காய் சாப்பிட வேண்டும் என்று அண்மையில் நித்தி ஆலோசனை சொல்லி இருக்கிறார்.  எது எப்படியோ. ஒன்று மட்டும் உண்மை. 

தலைப் பாகை கட்டி பிரியாணி சோறு சாப்பிட்டவர்களுக்கு நாசி லெமாக் ரொட்டி சானாய் சரிபட்டு வருமா. நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.