26 ஜூலை 2017

வணக்கம் கூறும் தமிழர் இயல்பு

எப்போது மனிதன் பேசக் கற்றுக் கொண்டானோ அப்போது இருந்தே வணக்கம் சொல்லும் பழக்கம் அவனுடைய வாழ்க்கையில் இணைந்து நனைந்து கனிந்து விட்டது. 



வணக்கம் கூறுவது என்பது வாழ்வியல் இயல்பு. அது அவர்களின் வாழ்க்கையில் ஒன்றித்துப் போன அன்றாட இயல்பு.

உலகவாழ் மக்கள் அவர்களின் மொழிக்கும் அவர்களின் பண்பாட்டிற்கும் ஏற்றவாறு வணக்கம் சொல்லும் பழக்கத்தைப் பின்பற்றி வருகின்றனர். 

மலேசியாவில் நம் சகோதர மலாய் இன மக்கள் ஒருவரைக் காலையில் பார்த்ததும் ‘செலாமாட் பாகி’ (Selamat Pagi);  மதியத்தில் ’செலாமாட் தெங்கா ஹரி’ (Selamat Tengahari); இரவில் ‘செலாமாட் மாலாம்’ (Selamat Malam) என்று சொல்கின்றனர். 


அது அவர்களின் இயல்பு. அது அவர்களுக்கு உரிய மொழி, பண்பாட்டு அடிப்படைச் செயல். அதை அப்படியே தமிழிலில் பார்த்தால் ‘நலம் மிக்க காலை நேரம்’, ‘நலம் மிக்க நண்பகல் நேரம்,’ ‘நலம் மிக்க மாலை நேரம்’ என்று பொருள் படுகின்றன. சரி.

அந்தப் பக்கம் பார்த்தால் ஆங்கிலேயர்கள் ‘குட் மார்னிங்’ (Good morning), ‘குட் ஆப்டர்நூன்’ (Good afternoon), ‘குட் ஈவ்னிங்’ (Good evening) என்று சொல்கிறார்கள். அது ஆங்கிலேயர்களின் இயல்பு. சரி.

இருந்தாலும் இன்றைய நாளில் தமிழர்கள் வணக்கம் சொல்லும் பயன்பாட்டில் பிற இனத்தவர் பண்பாடு கலந்துவிட்டது. 



 காலையில் சந்திக்கும் போது ‘காலை வணக்கம்’; மாலையில் சந்திக்கும் போது ‘மாலை வணக்கம்’; இரவில் சந்திக்கும் போது ‘இரவு வணக்கம்’ எனச் சொல்லும் வழக்கத்தைத் தமிழர்கள் பின்பற்றி வருகின்றனர். தப்பு என்று சொல்லவில்லை. அது நம் பண்பாடு அல்ல என்று சொல்ல வருகிறேன்.

அதாவது காலத்தை முன் வைத்து வணக்கம் சொல்வது நம் தமிழர்களின் மரபு அல்லஎன்று சொல்ல வருகிறேன். அது ஆங்கிலேயர்களின் மரபு. தயவு செய்து தப்பாக நினைக்க வேண்டாம்.

வணக்கம் என்னும் சொல்லைத் தமிழர்களாகிய நாம் பண்பாட்டுக் கலப்பு இல்லாமல் பயன்படுத்த முயற்சி செய்ய வேண்டும். எல்லாக் காலத்திற்கும் பொருந்தி வரும் சொல்லாக ‘வணக்கம்’ அமைந்து இருக்கிறது.

மற்ற பண்பாடுகளுடன் கலந்துவிட்ட ‘காலை வணக்கம்’, ‘நண்பகல் வணக்கம்’, ‘மாலை வணக்கம்’ போன்ற சொல் தொடர்கள் தமிழர்களின் வாழ்வியல் பண்பாட்டிற்கு முரண் பட்டவையாக உள்ளன என்பது என் கருத்து. 
 



 ஆக வணக்கம் என்பதை வணக்கம் என்று சொல்வதே சாலப் பொருத்தம். சாலவும் சிறப்பு.

உடனடியாக மாற்றுங்கள் என்று சொல்லவில்லை. காலப் போக்கில் சன்னம் சன்னமாய் மாற்றிக் காட்டலாமே. யாரையும் வற்புறுத்தவில்லை. ஏன் என்றால் பழக்க தோஷம் என்னையும் விடவில்லை. 

சில வேளைகளில் நானும் காலை வணக்கம் கலந்த படச் செய்திகளைப் பகர்வதும் உண்டு. பகிர்வதும் உண்டு. சன்னம் சன்னமாய் மாற்றிக் காட்டுவோம்.

25 ஜூலை 2017

சசிகலா என்றும் நித்தியகலா

சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை. ஆனாலும் சிறையின் விதிமுறைகளைச் சசிகலா மீறி இருக்கிறார். இந்தச் சிறைமீறல் குற்றச்சாட்டுக்கள் உறுதிபடுத்தப் பட்டால் மேலும் பல ஆண்டுகள் கூடுதலாகச் சிறைத் தண்டனை கிடைக்கலாம். 
 

சசிகலாவைப் பொருத்த வரையில் கிடைத்தாலும் ஒன்றுதான் கிடைக்காமல் போனாலும் ஒன்றுதான்.

சிறையில் சசிகலாவுக்கு ஒதுக்கப் பட்டவை 5 அறைகள்; அங்கே அவருக்குக் கொடுக்கப்பட்ட இருந்த வி.ஐ.பி. வசதிகள்; நட்சத்திர ஓட்டல் வாழ்க்கை; அடுத்து பல கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்த விவகாரம் போன்ற அனைத்து விவரங்களும் கசியத் தொடங்கி விட்டன.



பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு உண்மையிலேயே நட்சத்திர ஓட்டல் போல் சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளன என்று பெங்களூரு சிறைத் துறை டி.ஐ.ஜி-யாக இருந்த ரூபா சொல்லப் போய் அதுவே கர்நாடக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பிக் கொண்டு இருக்கிறது. டி.ஐ.ஜி ரூபா சொல்கிறார்... சசிகலாவுக்கு...

தனி சமையல் அறை; 
ஓய்வு எடுக்க தனி அறை; 
படுப்பதற்கு ஓர் அறை; 
ஒரு வெற்று அறை;
சோபா இருக்கை சந்திப்பு அறை;  

இப்படி மொத்தம் அவருக்கு மட்டும் 5 அறைகள். இதற்காக 2 லிருந்து 5 கோடி ரூபாய் வரை பணம் கைமாறி இருக்கிறது.


சசிகலாவை மற்ற கைதிகள் நெருங்கவே முடியாதபடி அவருக்கு என்று தனிப்பட்ட அறை. வேறு யாரும் உள்ளே நுழைய முடியாத அளவிற்குத் தடுப்புப் சுவர் வேறு.

சிறையில் இருக்கும் சசிகலாவை அவரின் உறவினர்கள் அல்லது கட்சிக்காரர்கள் சந்திக்க வேண்டும் என்றால் அந்தச் சந்திப்புக் காட்சிகளை வீடியோ கேமரா கண்காணிப்பில் தான் நடக்க  வேண்டும்.

ஆனால் சசிகலாவுக்கு அப்படி அல்ல. அவருக்கு ஒதுக்கப்பட்டு இருந்த பார்வையாளர் அறையில் கேமரா வசதிகள் அகற்றப்பட்டு உள்ளன. 



வீட்டில் இருப்பது போலவே சசிகலா சகல வசதிகளுடன் சிறையில் இருக்கிறார் என்று பெங்களூரு பத்திரிகைகள் டி.ஐ.ஜி. ரூபாவை மேற்கோள் காட்டி பக்கம் பக்கமாக எழுதிக் குவிக்கின்றன.

இந்தக் குற்றச்சாட்டுகளைச் சிறைத் துறை டி.ஜி.பி. சத்யநாராயண ராவ் மறுத்துப் பேசினார்.

அவர் சொன்னார்: ''வி.வி.ஐ.பி. என்ற அடிப்படையில் பாதுகாப்பு விதிகள் சசிகலாவுக்குக் கடுமையாகப் பின்பற்றப்படுகின்றன. ரூபா சொல்வது போல சிறப்பு வசதிகள் எதுவும் செய்து கொடுக்கப்படவில்லை... என்கிறார் சத்தியம் தவறாத சத்யநாராயண ராவ்.

ஆனால் சசிகலாவுக்குச் சிறப்பு வசதிகள் செய்து கொடுத்து இருப்பது போல ஒரு வீடியோ வெளியாகி பரபரப்பை உருவாக்கி இருக்கிறது.



இந்த நிலையில் சசிகலாவை வேறு ஒரு சிறைக்கு மாற்ற வாய்ப்பு உள்ளதாகவும் கூறப் படுகிறது. அப்படி சிறை மாற்றப் பட்டால் தும்கூருவில் உள்ள மகளிர் சிறைக்குச் சசிகலாவை மாற்றலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

சசிகலாவுக்குச் சொகுசு வசதிகள் கிடைக்க கர்நாடகத்தை சேர்ந்த ஒருவர் உதவி இருப்பது தெரிய வந்துள்ளது. அவர் தும்கூருவைச் சேர்ந்தவர். அவர் ஆஸ்திரேலியாவில் தொழில் செய்து வருகிறார். அங்கு வெளிநாடு வாழ் இந்தியர்கள் அமைப்பை நடத்தி வருகிறார். 



இவர் அ.தி.மு.க.(அம்மா) அணியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரனுக்கு நெருக்கமானவர். இவர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை அதிகாரிகளுடன் தொடர்புகளை வைத்துக் கொண்டு சசிகலா, இளவரசி ஆகியோருக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுக்க உதவிகள் செய்து இருக்கிறார்.

அவர் மூலமாகச் சிறை அதிகாரிகளுக்குக் கோடிக் கணக்கான ரூபாய் பணம் லஞ்சமாக கைமாறி உள்ளது. சிறையில் வேலை செய்த சிலருக்கு மாதச் சம்பளத்தைப் போல் லஞ்சம் வழங்கப்பட்டதாகவும் சொல்லப் படுகிறது.

24 ஜூலை 2017

எண் கணித மேதை முத்தையா

வானொலி தொலைக்காட்சிப் புகழ் எண் கணித மேதை முத்தையா (Dr. Muthaya). இவரின் அசல் பெயர் தஜுடின் ஜமால் முகமட். (Thajhuteen Jamal Mohammad). வயது 58. 



தன்னுடைய எண் கணித ஆற்றலின் மூலமாகப் பலரின் எதிர்காலத்தை மாற்றி அமைக்க முடியும் என்று விளம்பரம் செய்தவர்.

தங்காக் நகரில் உள்ள ஒருவரிடம் 52,000 ரிங்கிட் ஏமாற்றி மோசடி செய்ததாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டு உள்ளது. 


கடந்த 20.07.2017-ஆம் தேதி குற்றம் சாட்டப்பட்டு தங்காக் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப் பட்டார். இவர் மீது மேலும் 13 மோசடிக் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

தன்னுடைய எதிர்காலத்தையே இவரால் நிர்ணயிக்க முடியவில்லையே. அப்படி இருக்கும் போது எப்படி இவர் மற்றவர்களின் எதிர்காலத்தை மாற்றி அமைக்க முடியும். வேதனையான விசயம்.

சான்று: 
https://m.utusan.com.my/berita/mahkamah/8216-tukang-tilik-8217-dituduh-salah-guna-rm52-000-1.505174