27 செப்டம்பர் 2017

நெருப்பு இல்லாமல் புகை வராது

ஒருவரின் கருத்து மற்றவருக்குப் பொருந்தி வராத கட்டத்தில் அந்தக் கருத்து ஒரு தப்பான கருத்து என்று ஒரு சிலர் முடிவு செய்கிறார்கள். அதே கருத்து அவருக்குப் பொருந்தி வரும் கட்டத்தில் அதுவே நல்ல கருத்தாக மாற்றம் பெறுகிறது. 

ஒருவரின் கருத்தைத் தவறாக எடுத்துக் கொள்வதும் அல்லது நல்லதாக எடுத்துக் கொள்வதும் அவரவர் மனநிலை, தெளிவாகச் சிந்திக்கும் நிலையைப் பொருத்த விசயங்கள்.

தப்பான கருத்து என்று முடிவு செய்வதற்கு முன்னர் ஏன் அந்தக் கருத்து நல்லதாக இருக்கக் கூடாது என்று கொஞ்சம் யோசித்துப் பார்க்க வேண்டும். அதில் உள்ள எதார்த்த உண்மைகள் தெரிய வரும். அதே அந்தத் தப்பான கருத்து நல்ல கருத்தாகத் தெரிய வரலாம்.

ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். நம்மிடம் குறை இல்லாமல் எப்போதுமே யாருமே நம் மீது வீணாகக் குறை சொல்ல மாட்டார்கள். ஏதோ ஒரு குறை இருக்க வேண்டும். அதை மறந்துவிட வேண்டாம்.

நம்முடைய செயல்பாடுகளில் நடைமுறைக் கோளாறுகள் இருந்தால் மட்டுமே மற்றவர்கள் கருத்துகள் சொல்வதற்கு வாய்ப்பு ஏற்படுகின்றன. அதை மறக்க வேண்டாம். நெருப்பு இல்லாமல் புகை வராது.

தொலை பேசியா - தொலைப்பேசியா

தொலைப்பேசி என்பதே சரியான சொல். தொலை + பேசி = தொலைப்பேசி. இங்கே வலி மிகும். 


தொலைக்காட்சி என்று சரியாகச் சொல்லும் நாம் தொலை பேசி என்று மட்டும் ஏன் பிழையாகச் சொல்கிறோம். புரியவில்லை. தொலை பேசி என்றால் பேசியைத் தொலைத்துவிடு என்று அல்லவா பொருள் படுகிறது.

தொலைவில் இருந்து காணக் கூடியது தொலைக்காட்சி. அப்படி என்றால் தொலைவில் இருந்து பேசக் கூடியது தொலைப்பேசி தானே? பின்னர் ஏன் பலர் தொலைபேசி எனும் சொல்லைப் பயன்படுத்துகிறார்கள்.

25 செப்டம்பர் 2017

பூஜாங் நடராஜா



 மலேசியாவில் உள்ள அனைத்து இந்தியர்களும் ஒன்று சேர்ந்து நன்றி சொல்ல வேண்டிய ஒரு மனிதர் மலேசியாவில் இருக்கிறார் என்றால் அவர்தான் டத்தோ வீ. நடராஜன். தன் வாழ்நாளின் பெரும் பகுதியைப் பூஜாங் பள்ளத்தாக்கின் இந்திய வரலாற்றை மீட்டு எடுப்பதில் அர்ப்பணம் செய்தவர். செய்தும் வருபவர்.

அவரின் ஆய்வுப் பணிகளின் பெருமைகள் ஒட்டு மொத்த மலேசியத் தமிழர்களுக்கும் போய்ச் சேர்கின்றது. அதையும் தாண்டிய நிலையில் ஒட்டு மொத்த மலேசிய இந்தியர்களையும் சார்கின்றது. தமிழர், தெலுங்கர், மலையாளிகள் அனைவருக்கும் அந்தப் பெருமை போய்ச் சேர்கின்றது. 



மலேசிய இந்தியர்களின் வரலாற்றுச் சின்னங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய நாட்டுச் சபையின் பாரம்பரியப் பாதுகாப்புக் கழகத்திற்கு கடிதம் மேல் கடிதம் எழுதியவர். 


ஐக்கிய நாட்டுச் சபையின் வரலாற்று ஆய்வாளர்களைக் கெடா மாநிலத்திற்குக் கொண்டு வந்தவரும் இவர் தான். கெடா மாநில அரசாங்கத்தைக் கையெழுத்துப் போட வைத்தவரும் இவர் தான். அவருடைய இந்த வரலாற்றுப் போராட்டத்தினால் அரசாங்கத்தின் கசப்பான பார்வைகளையும் எதிர்நோக்க வேண்டி வந்துள்ளது.

பூஜாங் பள்ளத்தாக்கின் வரலாற்றை மீட்டு எடுப்பது என்பது அவரைப் பொருத்த வரையில் அது ஒரு தனிமனித வரலாற்றுப் போராட்டம் அல்ல. அது அவரின் வாழ்நாள் வேட்கையின் வேங்கைத்தனம். சீறும் சிங்கத்தனம்.


அந்த ஆய்வின் முடிவே *சோழன் வென்ற கடாரம்* எனும் வரலாற்று ஆய்வு நூல். 20 ஆண்டுகள் ஆய்வுகள் செய்து எழுதி இருக்கிறார். மலேசியத் தமிழர்களுக்கு கிடைத்த ஒரு வரலாற்றுச் சுவடி. கைகூப்புகிறேன் டத்தோ நடராஜன் அவர்களே.

(சான்று:http://www.thestar.com.my/news/nation/2013/12/10/candi-lembah-bujang-destroying-history/ - Datuk V. Nadarajan, chairman of the Bujang Valley Study Circle non-governmental organisation.)

அவருடைய அந்த ஆய்வு நூல் பூஜாங் பள்ளத்தாக்கின் வரலாறு, அகழ்வாய்வியல் பற்றிய ஓர் ஆழமான பார்வை. மலேசியாவின் தேசியப் பாரம்பரியச் சொத்தான புராதன கெடாவின் வரலாற்றை இந்த நூல் விவரிக்கிறது. மலேசியாவில் வாழும் அனைத்துத் தமிழர்களின் இல்லங்களிலும் இருக்க வேண்டிய ஒரு வரலாற்றுக் களஞ்சியம்.


டத்தோ வீ. நடராஜன் என்பவர் மலாயா வரலாற்றில் ஒரு வல்லுநர்.  மலாயாப் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுப் பாடத்தைச் சிறப்புப் பாடமாகக் கற்று தேர்ச்சி பெற்றவர். 10 ஆண்டுகளுக்கும் மேலாக வரலாற்று ஆசிரியராகப் பணியாற்றியவர்.

கெடா சுங்கைப் பட்டாணி நகரில் பிறந்து வளர்ந்தவர். ஒரு சாமானிய மனிதராகவே காலத்தைக் கழிக்கின்றார். வஞ்சகம் இல்லாத மனசு.

மலேசியா இந்தியர்கள் கண்டு எடுத்த ஒரு மந்திரப் புன்னகைகளில் ஒருவர் பூஜாங் நடராஜா. இவர் நீண்ட நாட்கள் வாழ வேண்டும். நிறைய வரலாற்று ஆய்வுப் பணிகளைச் செய்ய வேண்டும். புதைந்து கிடக்கும் மலேசிய இந்தியர்களின் வரலாறுகளை மீட்டு எடுக்க வேண்டும். 


இவரின் ஆய்வுப் பணிகளுக்கு மலேசிய இந்தியர்கள் அனைவரும் துணையாக இருக்க வேண்டும் என்பதே என்னுடைய தாழ்மையான வேண்டுகோள். மலேசிய இந்தியர்கள் அனைவரும் இவருக்குக் கடமைப்பட்டு இருக்கிறார்கள்.

இவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கிக் கௌரவிப்பு செய்ய வேண்டும். நம் நாட்டு இந்தியத் தலைவர்கள் முன்னெடுத்துச் செய்ய வேண்டும் செய்வார்களா. இதுவும் ஒரு மில்லியன் டாலர் கேள்வியாக அமைந்துவிடக் கூடாது.