06 ஜூலை 2021

சயாம் மரண பாதையில் மலாயாவுக்கு நஷ்டயீடு RM 270 பில்லியன்?

சயாம் மரண இரயில் பாதை உருவாக்கப்பட்ட போது மலாயாவைச் சேர்ந்த பல்லாயிரம் தமிழர்கள், சீனர்கள், மலாய்க்காரர்கள், இதர இனத்தவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளார்கள்.

பாதிக்கப்பட்ட அவர்களின் குடும்பங்களுக்கு ஜப்பானிய அரசாங்கம் 270 பில்லியன் போர் நஷ்டயீடு வழங்கியதாகவும், அந்தத் தொகை மர்மமாய்க் காணாமல் போய் விட்டதாகவும், ஊடகங்களில் பற்பல பதிவுகள்.

270 பில்லியன் நஷ்டயீடு வழங்கப் பட்டதாக முதன்முதலில் சொன்னவர் முன்னாள் பேராக் மந்திரி பெசார் நிஜார் ஜமாலுடீன்.

1967-ஆம் ஆண்டில் ஜப்பானும் மலேசியாவும் ஒரு போர் நஷ்டயீட்டு ஒப்பந்தம் செய்து கொண்டது. அதில் மலேசியாவுக்கு 270 பில்லியன் ரிங்கிட் போர் நஷ்டயீடு வழங்கப் பட்டதாக 2013-ஆம் ஆண்டில் அறிவித்தார்.


அவரின் கணக்குப்படி அப்படி அந்த நிதி வழங்கப்பட்டு இருந்தால் ஜப்பான் நாடு இந்நேரம் திவாலாகி இருக்கலாம் என்பது சிலரின் கருத்து. ஏன் என்றால் 270 பில்லியன் ரிங்கிட் என்பது சாதாரண காசு அல்ல. மலேசிய நாட்டின் ஆறு மாத மொத்த வருமானம்.

(The sum of RM207 billion as compensation agreed upon in 1967 between Japan and Malaysia would have bankrupted Japan. At the historical exchange rate the RM207 billion would have worth 24 billion Pound Sterling. At current exchange rate it is worth 42 billion Pound. A mind boggling figure.)

ஜப்பான் நாடு போர் இழப்பீடுகள் வழங்க வேண்டிய நாடுகளில் மலேசியா மட்டும் அல்ல. மேலும் பல நாடுகள் இருந்தன. ஏறக்குறைய 30 நாடுகள். 20,700 கோடி ரிங்கிட் தொகையை மலாயாவுக்கு மட்டும் வழங்க ஜப்பான் ஏற்றுக் கொண்டு இருக்குமா?

உண்மைத் தகவல் தெரியாமல் நாம் ஒரு முடிவிற்கு வரக் கூடாது. வாட்ஸ் அப் ஊடகத்திலும் பேஸ்புக் ஊடகத்திலும் வரும் தகவல்கள் எல்லாம் உண்மையும் அல்ல. பொய்யும் அல்ல.

(According to Article 14 of the Treaty of Peace with Japan (1951): "Japan should pay reparations to the Allied Powers for the damage and suffering caused by it during the war.) 


1950-ஆம் ஆண்டு அப்போதைய பிரிட்டிஷ் காலனித்துவ அரசாங்கம் ஜப்பானிடம் 67.25 மில்லியன் போர் நஷ்டயீடு கேட்டது. ஆனால் 1950-ஆம் ஆண்டில் கிடைத்த நஷ்டயீடு இவைதான்:

1. ஜப்பானின் தொழிற்சாலை ஆலைகள், இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களில் 5% விழுக்காடு (5% of Japan’s factory plants, machinery, and equipment)

2. ஜப்பானிய கடல் படையைச் சேர்ந்த 23 போர்க் கப்பல்கள் (23 fleets of Japanese warships)

மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு ஜப்பான் வழங்கிய போர் இழப்பீடுகளின் விளக்கம். அப்போதைய யென் நாணயத்தில் (in yen, at the time of payment) இழப்பீடு வழங்கப்பட்ட போது:

மைக்ரோனேசியா -  Micronesia - ஆண்டு 1950 - 18 billion yen donated (680 மில்லியன் ரிங்கிட்)

மியன்மார் - Myanmar - ஆண்டு 1963 - 50.4 billion yen (US$20 million 1954, 1963)
    
பிலிப்பைன்ஸ் - Philippines - ஆண்டு 1956 - (US$525 million/52.94 billion yen 1967)
    
இந்தோனேசியா - Indonesia - ஆண்டு 1958 - (541 மில்லியன் ரிங்கிட்) - (+63.7 billion yen credit write-off)
    
லாவோஸ் - Laos - ஆண்டு 1958 - 1 billion yen grant
    
கம்போடியா - Cambodia - ஆண்டு 1959 - 1.5 billion yen grant
    
வியட்நாம் - Vietnam - ஆண்டு 1960 - US$39 million (14.04 billion yen 1959)

கொரியா - Korea - ஆண்டு 1965 - 72 billion yen (US$300 million 1965)

மலேசியா - Malaysia - ஆண்டு 1967 - (25 million Malaysian dollars / 2.94 billion yen 1967)

தாய்லாந்து - Thailand - ஆண்டு 1967 - (5.4 billion yen 1955)
    
தைவான் - Taiwan - ஆண்டு 1967 - 58 billion yen
    
சிங்கப்பூர் - Singapore - 1967 - 2.9 billion yen grant
    
ஹாலந்து - Holland - 1956 - 3.6 billion yen compensation
    
சுவிட்சர்லாந்து - Switzerland - 1955 - 1.1 billion yen compensation
    
டென்மார்க் - Denmark - 1955 - 7.23 billion yen compensation
    
சுவீடன் - Sweden - 1958 - 5 billion yen compensation
    
ஸ்பெயின் - ($5.5 million 1957)

இழப்பீடுகளுக்கான கொடுப்பனவுகள் 1955-இல் தொடங்கி 23 ஆண்டுகள் நீடித்து, 1977-ஆம் ஆண்டில் முடிந்தது. இது தொடர்பாக (3 பாகங்கள்) முழுக் கட்டுரை தமிழ் மலர் நாளிதழில் விரைவில் வெளிவருகிறது.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
06.07.2021



சான்றுகள்:

1. PRESS RELEASE UNITED NATIONS COMPENSATION COMMISSION PAYS OUT US$270 MILLION" (PDF). United Nations Compensation Commission. 23 July 2019.

2. RESOLUTION 687 (1991)" (PDF). U.S. Department of the Treasury. 9 April 1991. Archived (PDF)

தகவல்கள்:

The United States signed the peace treaty with 49 nations in 1952 and concluded 54 bilateral agreements that included those with Burma (US$20 million 1954, 1963), South Korea (US$300 million 1965), Indonesia (US$223.08 million 1958), the Philippines (US$525 million/52.94 billion yen 1967), Malaysia (25 million Malaysian dollars/2.94 billion yen 1967), Thailand (5.4 billion yen 1955), Micronesia (1969), Laos (1958), Cambodia (1959), Mongolia (1977), Spain ($5.5 million 1957), Switzerland, the Netherlands ($10 million 1956), Sweden and Denmark.

 

பெண்களின் வளர்ச்சி இமயம் பார்க்கும் முதிர்ச்சி

இன்றையக் காலக் கட்டத்தில் பெண்களின் வளர்ச்சி இமயம் பார்க்கும் மலர்ச்சி அல்ல முதிர்ச்சி. ஆண்களுக்குச் சமமாக... மன்னிக்கவும்... ஆண்களை விட அதிகமாகவே முன்னேறியும் வருகின்றார்கள்.

பெண்கள் பல்துறைகளிலும் சிறந்து விளங்குகிறார்கள். கொடி கட்டிப் பறக்கின்றார்கள். பெருமையாக உள்ளது. பெண்களால் நாட்டிற்கும் பெருமை; வீட்டிற்கும் பெருமை.
 

அது மட்டும் அல்ல. பெண்களைப் பார்த்து ஆண்களே பொறாமைப் படும் அளவிற்கு ஒரு நவீன மயத்தில் வாழ்ந்து கொண்டும் போகிறார்கள். எனக்கும் கொஞ்சம் பொறாமை தான். மன்னிக்கவும். ரொம்பவும் இல்லை.

நாட்டை ஆட்சி செய்வதற்கு ஓர் அரசர் வேண்டும். அதைப் போல ஒரு வீட்டை ஆட்சி செய்வதற்கு ஒரு பெண் வேண்டும். இதை எவராலும் மறுக்க முடியாது. பெண்கள் இல்லாமல் பெயர் போடுவது ரொம்பவுமே சிரமம். இதை ஆண்கள் நினைத்துப் பார்க்க வேண்டும்.

ஆக... பெண் உரிமையைக் காப்போம். பெண்ணியத்தைக் காப்போம். பெண் இனத்தைப் போற்றுவோம். ஓர் ஆணின் வெற்றிக்குப் பின் ஒரு பெண் இருக்கிறாள் என்பதை மறக்காமல் இருந்தால் சரி.

அந்த வகையில் எந்த நாடு பெண்ணின் பெருமையை உயர்த்திப் பிடிக்கின்றதோ அந்த நாடு தான், உலகில் உயர்ந்த நாடு. மனிதத்தில் உச்சம் பார்க்கும் நாடு. நான்கு மனைவிகள் வேண்டும். 25 பிள்ளைகள் வேண்டும் என்பது எல்லாம் பெண்மையைச் சிறுமைப் படுத்தும் நகர்வாகும். பெண்ணாசைப் பிடித்து பெண்மையைச் சிறுமைப் படுத்தும் போக்கு. பெண்மையைச் சுய போகத்திற்குப் பயன்படுத்தும் அணுகுமுறை.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
06.07.2021

 

05 ஜூலை 2021

வாழிய வாழியவே சாரா கலைவாணி

தமிழ் மலர் - 05.07.2021

2018-ஆம் ஆண்டு வரையில் நிர்வாகத் துறை அதிகாரி. சில வணிக நிறுவனங்களுக்கு கருத்துரைஞர். சில பல அதிகாரிகளைச் சந்தித்து நிர்வாகத் துறை பற்றி விளக்கம் கொடுத்தவர். கை நிறைய சம்பளம். மனம் நிறைந்த வாழ்க்கை. இனிதான வாழ்க்கை. இனிதான பயணங்கள்.

2019-ஆம் ஆண்டு இறுதியில் அவருக்கு 29 வயது. வலிமிகு ஓர் அதிர்ச்சி. கால் முடக்குவாதம். நடக்க முடியாமல் போய் விட்டது. அவரைச் சுற்றி இருந்த சொந்த பந்தங்கள் காணாமல் போய் விட்டன. குடும்பத்தாரால் கைவிடப் பட்டார். தனிமை வாழ்க்கை. மிகவும் சிரமப்பட்டார். உதவி கிடைக்கவில்லை.


தங்கி இருக்கும் அறைக்கு வாடகைப் பணம் தர வேண்டும். நடக்க முடியாத நிலையிலும் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். மருந்துகள் வாங்க வேண்டும். அவற்றுக்குப் பணம் இல்லாமல் தவித்தார். இந்தக் கட்டத்தில் சில நல்ல உள்ளங்களும் இருந்தன. இயன்ற வரையில் பொருள் உதவி செய்தார்கள்.

கொஞ்சம் கொஞ்சமாகச் சேகரிக்கும் பணம் சிகிச்சைக்கும் மருந்துகளுக்குமே கரைந்து விடும். இதில் கூடுதலாக வீட்டு வாடகை. ஒவ்வொரு நாளைக்கும் உணவுப் பொருட்கள் வாங்க வேண்டும். அதற்கும் செலவு. இன்னொரு புறம் அன்றாடம் பயன்படுத்த வேண்டிய பொருட்களுக்கான செலவு.


அப்போது அவர் கோலாலம்பூர் அம்பாங் பகுதியில் தங்கி இருந்தார். அங்கு இருந்து பெட்டாலிங் ஜெயாவில் உள்ள மலாயா பல்கலைக்கழக மருத்துவமனை மையத்திற்குச் சென்று வர வேண்டும். வாரத்திற்கு இருமுறை சிகிச்சை. அதற்கான போக்குவரத்துச் செலவு.

அங்கே இங்கே இருந்து கிடைக்கும் கொஞ்ச நஞ்ச பணம் செலவானதும் சாப்பாட்டுக்கே வழி இல்லாமல் போகும் நிலை. கையில் காசு இல்லாமல் பல நாட்கள் பச்சைத் தண்ணீரைக் குடித்து வாழ்க்கையை நகர்த்தி இருக்கிறார். இதை அவரே சொல்லி இருக்கிறார்.

கடந்த ஈராண்டுகளில் கோவிட் காலத்தில் மிகவும் சிரமப் பட்டு இருக்கிறார். அந்தப் பக்கம் மருத்துவமனை; இந்தப் பக்கம் வீடு என்று அலைந்து திரிந்து இருக்கிறார். சிறுகச் சிறுகச் சேர்த்து வைத்த பணம் எல்லாம் போக்குவரத்திற்கும்; மருந்து வாங்குவதற்கும் செல்வழிந்து போனது.
மலேசிய பொது நல அமைச்சின் (Jabatan Kebajikan Masyarakat Malaysia) உதவி கேட்டு இருக்கிறார். இன்னும் கிடைக்கவில்லை. நிலுவையில் உள்ளது. 
 
கோலாலம்பூர் மலிவு வீட்டு உதவிக்கு விண்ணப்பித்து இருக்கிறார். முன்பு நிராகரிக்கப் பட்டது. அண்மையில் மறுபரிசீலனை செய்யப் படுவதாகத் தகவல். கிடைப்பதும் கிடைக்காததும் கிடைக்கும் வரையில் எவருக்கும் தெரியாத மர்மம்.


ஒரு நாள் பொழுது; கொஞ்சம் நிம்மதியுடன் பயணிக்க வீடு என்று ஓர் இடம் இல்லை. வீடு வேண்டாம். இளைப்பாறுவதற்கு; ஓய்வு எடுத்துக் கொள்வதற்கு; உறங்குவதற்கு ஓர் அறை இல்லையே. என்ன செய்வார்? பாவம்.

வாடகை கட்ட முடியாத நிலை. ஓர் இடத்தில் இருந்து இன்னோர் இடத்திற்கு விரட்டப்படும் நிலை. உடல் ரீதியாகவும் துன்புறுத்தப் பட்டு உள்ளார். ஒரு சிலர் இவரை அடித்தும் இருக்கிறார்கள். என்ன காரணமோ. வேதனையாக உள்ளது. சில தடவை உடல் ரீதியான வற்புறுத்தலுக்கும் உள்ளாகி உள்ளார்.

அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்று தவிக்கும் ஒரு கேள்விக் குறியான வாழ்க்கை. தவிர அவருக்கு மேலும் ஒரு நோய். தன் உடலை ஆளும் குறைநிலை (Borderline Personality Disorder).

உடல் ஆளுமைக் கோளாறு என்பது ஒரு மனநலக் கோளாறு ஆகும். உங்களைப் பற்றியும் மற்றவர்களைப் பற்றியும் நீங்கள் நினைக்கும் அல்லது உணரும் தன்மைகளைப் பாதிக்கும் நோய். அன்றாட எதார்த்த வாழ்க்கையைச் செயல் படுத்துவதில் பற்பல சிக்கல்களை ஏற்படுத்தும் நோய்.


இப்படி பற்பல சிக்கல்களில் பயணித்த; பயணிக்கும் ஓர் அழகிய பெண்மணியார்தான் சாரா கலைவாணி பூபாலன் (Sarah Kalaivani Pupalan). வயது 32.

அழகு அறிவு ஐஸ்வரியம் அத்தனைக்கும் அழகு சேர்த்த பெண்மணி. நடை ஒப்பனையில் வடிவழகி (மாடலிங்). மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நல்ல ஒரு பதவியில் வாழ்ந்து பார்த்தவர்.

மனித வாழ்க்கையில் எதுவும் எப்போதும் நடக்கலாம். உண்மைதானே. அந்த வகையில் கலைவாணிக்கும் சின்ன வயதில் பெரிய வேதனைகள்.  

கால் முடக்குவாதம் (Rheumatoid Arthritis Disorder); ஒரு நீண்டகால நோய். மூட்டுகளில் வீக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக விரல்கள், மணிகட்டு, கால்கள் மற்றும் கணுக்கால் ஆகியவற்றில் அசைவற்ற தன்மை ஏற்படலாம். இதன் விளைவாக உயிர் போகும் வலி வர்லாம்.


இதில் முடக்கு வாதம் (Rheumatoid arthritis) என்பது ஒரு வகையான் மூட்டு வீக்கம். சன்னம் சன்னமாய் அதிக வலியைக் கொடுக்கும். ஒருவரின் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு ஆற்றல் சரியாக வேலை செய்யவில்லை என்றால் மூட்டுகளின் புறணிக்குள் கிருமிகள் தாக்கும் போது இந்த நோய் ஏற்படுகிறது. இந்த நோய் ஆண்களைவிட பெண்களைத் தான் அதிகம் பாதிக்கிறது.

இந்தக் கட்டத்தில் எபிட் லியூ (Preacher Ustaz Ebit Lew) எனும் ஒரு சமய போதகர், அவரின் தன்னார்வ அமைப்பின் (Pertubuhan Kasih Umat Malaysia) மூலமாக உதவி செய்யத் தொடங்கினார். சாரா கலைவாணி ஏற்கனவே தங்கி இருந்த அம்பாங் அறையின் மாத வாடகை நிலுவைகள். அவை தீர்க்கப்பட ஏற்பாடுகள் செய்து இருக்கிறார்.

கோலாலம்பூர் அம்பாங் பகுதியில் வாடகை அறை கிடைப்பது சிரமமாக இருந்தது. வாடகையும் அதிகம். அதனால் பெட்டாலிங் ஜெயாவைச் சுற்றி வாடகைக்கு ஒரு அறையைத் தேடினார்கள். 


ஏன் என்றால் மலாயா பல்கலைக்கழக மருத்துவமனை மையம் அங்குதானே உள்ளது. போக்குவரத்துச் செலவு மிச்சப் படலாம். அந்த வகையில் ஓர் அறை கிடைத்து உள்ளது.

சாரா கலைவானியின் பிரச்சினை வெளியே தெரிய வந்ததும் பொதுமக்கள் உதவ முன்வந்துள்ளனர். 
 
அவருக்கான உடைகள்; உணவு போன்ற பிற அடிப்படைத் தேவைகளுக்கு உதவிகள் கிடைத்து வருகின்றன. அவரின் பொழுது போக்கிற்காக சமய போதகர் எபிட் லியூ ஒரு தொலைக்காட்சிப் பெட்டியை வாங்கி அன்பளிப்புச் செய்து உள்ளார். வாழ்க மனிதநேயம்.

எபிட் லியூ போன்றவர்கள் இந்த நாட்டிற்கும் இந்த மண்னிற்கும் மிகவும் தேவை! இனம், நிறம், மதம் பார்க்காமல் மனிதர்களுக்கு உதவும் மனிதநேயக் கரங்கள். அன்புடன் அடுத்த தலைமுறைகளை வார்க்கும் அன்பு வெளிச்சங்கள்.


சாரா கலைவாணிக்கு ஒரு வேலைக்கு ஏற்பாடு செய்தும் இருக்கிறார்கள். வீட்டில் இருந்தே வேலை செய்யலாம். வீடு இல்லை. அவருடைய அறையில் இருந்து ’ஆன் லைன்’ மூலமாக வேலை செய்வது. கோவிட் காலத்திற்குப் பிறகு அவர் அலுவலகத்திற்குச் சென்று வேலை செய்யலாம்.

மனித வாழ்க்கை என்பது நிரந்தரம் இல்லாதது. எந்த நேரத்தில் எது வேண்டும் என்றாலும் நடக்கலாம். அதனால் யாருக்கும் எந்தத் தீங்கும் நினைக்காமல் நல்ல எண்ணங்களுடன் வாழ்வோம். நிரந்தரம் இல்லாத இந்த உலகத்தில் எதன் மீதும்  ஆசை வைப்பதைத் தவிர்ப்போம். எதுவும் நிரந்தரம் இல்லை. இருக்கும் வரை மகிழ்ச்சியாக இருப்போம்.

செய்தி அறிந்து மனம் மிகவும் பாதித்து விட்டது. எப்படியாவது உதவி செய்ய வேண்டும். சாரா கலைவாணி பூபாலன் நம்முடன் இந்தக் கொரோனா கோவிட் காலத்தில் பயணிக்கும் பெண்மணியார்.

கோலாசிலாங்கூரைச் சேர்ந்த அன்பர் ராதா என்பவர் மலேசியம் புலனத்தில் ஒரு பதிவைப் பதிவு செய்து இருந்தார். மனதைப் புரட்டிப் போட்டது.


இது தான் மனித வாழ்க்கை. இவர் நன்றாக இருந்த காலத்தில் இவரைச் சுற்றிலும் சுற்றதார், நண்பர்கள். இவர் நலம் தவறியதால் காணாமல் போய் விட்டார்கள். பெற்றவர்கள், உடன் பிறந்தவர்களும் கூடவா இல்லை. மிக வேதனை.

கோவிட் காலத்தில் நலத்தோடு இருப்பவர்களே சிரமப் படும் போது, இவர் நிலையை நினைக்கும் போது மனம் அழுகிறது. இப்படி ஒரு நிலை இனி யாருக்கும் கொடுக்காதே இறைவா!

இவருக்கு உதவி செய்ய விரும்பும் அன்பர்கள் உதவி செய்யலாம். 


Sarah Pupalan
RHB Bank 16803800069368


மின்னஞ்சல்: sarahpupalaninsurvivalmood@yahoo.com

சான்றுகள்:

1. Ebit Lew offers much-needed shelter to homeless senior citizen and woman with disabilities - https://www.malaymail.com/news/life/2021/05/19/ebit-lew-offers-much-needed-shelter-to-homeless-senior-citizen-and-woman-wi/1975345

2. Preacher Ustaz Ebit Lew - https://www.facebook.com/ebitlewofficialpage/

3. Sarah Kalaivani Pupalan -
https://malaysiam-tamil.blogspot.com/2021/07/blog-post_26.html

4. https://gempak.com/intrend/segala-benda-tiada-yang-kebetulan-tak-sengaja-dan-sengaja-itu-semua-allah-dah-aturkan-pertemukan-ustaz-ebit-lew-50792

பின்னூட்டங்கள்

[10:54 am, 04/07/2021] Ganesan Ulu Tiram: வணக்கம் ஐயா. தங்களின் இக் கட்டுரை கண் கலங்க வைத்தது. மிக்க நன்றி. அவருக்கு நாம் என்ன செய்யலாம் சொல்லுங்க

[10:57 am, 04/07/2021] Ganesan Ulu Tiram: ரவாங்கில் ஒரு நண்பர் வீடு உள்ளது அவர் அங்கு தங்கி கொள்ளலாம். வாடகை வேண்டாம்

[10:57 am, 04/07/2021] Ganesan Ulu Tiram: முடிந்தால் கேட்டு சொல்லுங்கள் ஐயா

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: நல்ல மனம் வாழ்க. பெட்டாலிங் ஜெயாவில் ஓர் அறை பார்த்து கொடுக்கப்பட்டு உள்ளது. இவரைப் பற்றிய கட்டுரை நாளைய தமிழ் மலர் நாளிதழில் வெளிவருகிறது.