08 ஜனவரி 2022

கூலிம் டப்ளின் தோட்டத்தில் ஏழு டிவிசன்கள் ஏழு தமிழ்ப்பள்ளிகள்

தமிழ் மலர் -  08.01.2022

மலையூர் மலைநாட்டில் கடந்த 205 ஆண்டுகளாகத் தமிழ் மொழி கட்டிக் காக்கப்பட்டு வருகிறது. அந்தக் கால இடைவெளியில் பற்பல இடையூறுகள்; பற்பல சவால்கள்; பற்பல போராட்டாங்கள்.

தமிழ் மொழி மேலே எழுந்து வர முடியாமல் தடுக்கப் படுவதற்கு பற்பல திட்டங்கள் உருவாக்கப் பட்டன. அந்தத் திட்டங்களை அப்போது யார் கொண்டு வந்தார்கள்; இப்போது யார் கொண்டு வருகிறார்கள் என்பதற்கு விளக்கம் சொல்ல வேண்டியது காலத்தின் கட்டாயம்.


இப்படி படிப்படியாக வளர்ந்து வந்த மலாயா தமிழ்ப் பள்ளிகள் 1900-ஆம் ஆண்டுகளில் சில இடர்பாடுகளைச் சந்திக்க வேண்டி வந்தது. 1901-ஆம் ஆண்டில் கூட்டரசு மலாய் மாநிலங்களின் (Federated Malay States) கல்விக் கண்காணிப்பாளராகப் பதவி வகித்தவர் ஜே. டிரைவர். அப்போது மலாயாவில் பல்வேறு தாய் மொழிக் கல்வி முறை இருப்பதை அவர் விரும்பவில்லை.

தமிழர், சீனர் பிள்ளைகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கின்றன. அதனால் அவர்களுக்கு என்று தனியாகப் பள்ளிகள் தேவை இல்லை என்கிற ஒரு கருத்தை வெளியிட்டார்.
 
இந்தக் கட்டத்தில் சிலாங்கூர் மாநில ரெசிடெண்டாக டிரேச்சர் (W.H. Treacher) என்பவர் இருந்தார். இவர் தான் 1893-ஆம் ஆண்டு கிள்ளானில் இருக்கும் ஆங்கிலோ சைனீஸ் பள்ளியைத் தோற்றுவித்தவர்.


இவரும் தடாலடியாக ஒரு கட்டளை போட்டார். மலாய்ப் பள்ளிகளுக்கான கல்விச் செலவை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளும். அதைத் தவிர்த்து மற்றபடி மற்ற இனங்களின் தாய் மொழிக் கல்விச் செலவுக்கு அரசு பொறுப்பு ஏற்காது என்று கண்டிப்பாகச் சொன்னார். தமிழர் இனம் தடுமாறிப் போனது.

இருந்தாலும் இந்தக் கட்டத்தில் தமிழ்ப் பள்ளிகளைத் தற்காக்க ஒரு சட்டம் உதவிக்கு வந்தது. ஆங்கிலேயர்கள் உருவாக்கிய சட்டமே அவர்களுக்கு எதிராகத் திசை திரும்பியது.

அந்தக் காலத்தில் மலாயா ஆங்கிலேய அரசால் அமல்படுத்தப்பட்ட ஒரு சட்டம் இருந்தது. 1912-ஆம் ஆண்டு தொழிலாளர் சட்டம் (Labour ordinance). இந்தச் சட்டம் தான், தக்க தருணத்தில் தமிழ்ப் பள்ளிகளின் ஆபத்து அவசரத்திற்கு உதவி செய்தது. சரி.

1912-ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஒரு சட்டத்தை இயற்றி இருந்தார்கள். தோட்டத் தொழிலாளர்களின் நலத்தைப் பாதுகாக்கும் சட்டம். அந்த 1912-ஆம் ஆண்டுத் தொழிலாளர் சட்டத்தின் வழி, மலாயாவில் இருந்த ஒவ்வொரு தோட்ட நிர்வாகமும் கண்டிப்பாகத்  தமிழ்ப் பள்ளிகளை நிறுவ வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப் பட்டு இருந்தன.


ஒரு தோட்டத்தில் 7 வயதில் இருந்து 14 வயது வரையிலான பிள்ளைகள் 10 பேர் இருந்தால் போதும்; ஒரு பள்ளிக்கூடத்தைக் கட்ட வேண்டும் என்கிற சட்டம். அதனால் ஆங்கிலேய ஆளுநர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

அந்தக் கட்டத்தில் ஒவ்வொரு தோட்டத்திலும் பல பிரிவுகள் இருந்தன. அதாவது டிவிசன்கள். ஒவ்வொரு டிவிசனுக்கும் தனித்தனியாகப் ஒவ்வொரு பள்ளிக்கூடம் அமைக்கப் பட்டது. 1920-ஆம் ஆண்டில் மலாயாவில் 122 தமிழ்ப்பள்ளிகள் இருந்தன.

எடுத்துக்காட்டாக பேராக், தெலுகான்சன் நோவா ஸ்கோஷியா தோட்டம். ஐந்து டிவிசன்கள் இருந்தன. ஒவ்வொரு டிவிசனிலும் ஒரு தமிழ்ப்பள்ளி. ஐந்து டிவிசன்கள். ஐந்து தமிழ்ப்பள்ளிகள்.


கெடா கூலிம் டப்ளின் ரப்பர் தோட்டம். ஏழு டிவிசன்கள் இருந்தன. ஏழு டிவிசன்கள் ஏழு தமிழ்ப்பள்ளிகள். ஒவ்வொரு டிவிசனிலும் ஒரு தமிழ்ப்பள்ளி. அதே போல சிகாமட் சா ஆ ரப்பர் தோட்டம். ஏழு டிவிசன்கள் இருந்தன. ஏழு தமிழ்ப்பள்ளிகள்.

அந்தத் தொழிலாளர்ச் சட்டம் அப்போது அந்தக் காலத்தில் உருவாக்கப்பட்ட சட்டம். ஆங்கிலேயர்கள் உருவாக்கிய சட்டம். இன்னும் அமலில் உள்ளது.

உலகின் எந்த நாட்டில் தமிழர்கள் வாழ்ந்தாலும் அவர்கள் தமிழ்ப் பள்ளிகளின் உரிமைகளைக் காப்பாற்ற வேண்டும். தமிழ் மொழியின் உரிமைகளைக் காப்பாற்ற வேண்டும். தமிழின் நியதி அல்ல. தமிழர் இனத்தின் நியதி.


தமிழ் பள்ளிகளின் உரிமைகளைக் காப்பாற்றினால் தான், தமிழ் மொழியைக் காப்பாற்ற முடியும். தமிழ் மொழியின் ஆணி வேர் தமிழ்ப் பள்ளிகளின் சன்னிதானத்தில் தான் வேர் ஊன்றி உள்ளன. இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

அந்தத் தொழிலாளர் சட்டம் உதவிக்கு வந்ததால் 1925-ஆம் ஆண்டு வரை மலாயா நாட்டுத் தோட்டங்களில் 235 தமிழ்ப் பள்ளிகள் நிறுவப்பட்டன.

தோட்டப் புறங்களில் தோட்ட நிர்வாகங்களே தமிழ்ப் பள்ளிகளை நிறுவின. பட்டணங்களில் தனியார் நபர்கள்; பொது இயக்கங்கள் ஆகியோர் தமிழ்ப் பள்ளிகளை நிறுவினார்கள்.


காலனித்துவ ஆட்சியில் இருந்து மலாயா சுதந்திரம் அடைந்த போது பற்பல சட்டத் திருத்தங்களைச் செய்தார்கள். ஆனால் மேலே சொன்ன அந்தத் தொழிலாளர்  சட்டத்தில் மட்டும் மாற்றம் செய்யவில்லை. அதை அப்படியே விட்டு விட்டார்கள்.

1930-ஆம் ஆண்டு முதல் முறையாக தமிழ்ப் பள்ளிகளைக் கண்காணிக்க ஆய்நர் (Inspectorate of Tamil School) ஒருவர் நியமிக்கப் பட்டார். ஜி.ஆர். பில்வர்  என்பவர் பொறுப்பு வகித்தார். 1937-ஆம் ஆண்டில் சில குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்தன. ஆங்கிலேய அரசாங்கம் தமிழ்ப் பள்ளிகளுக்குச் சிறப்பு செயற்குழு ஒன்றை நிறுவியது.

இந்தச் செயற் குழுவின் பரிந்துரையின் கீழ் வருடத்திற்கு ஒரு மாணவருக்கு ஆறு டாலராக இருந்த நிதி ஒதுக்கீடு எட்டு டாலராக உயர்த்தப் பட்டது. அத்துடன் 1938-ஆம் ஆண்டு வரை 535 தமிழ்ப் பள்ளிகள் நாடு முழுவதும் நிறுவப்பட்டன. பெரிய ஒரு முன்னேற்றம்.


இப்படி வேகமாக வளர்ந்து வந்த தமிழ்ப் பள்ளிகளின் வளர்ச்சி இரண்டாம் உலக போரினால் தடைப் பட்டது. 1942-ஆம் ஆண்டு ஜப்பானியரின் ஆட்சிக் காலத்தில் பெரும் பாதிப்புக்கு உள்ளானது. பல தமிழ்ப் பள்ளிகள் மூடப் பட்டன. 644-ஆக இருந்த தமிழ்ப் பள்ளிகள் 1943-ஆம் ஆண்டில் 292-ஆக குறைந்து போயின.

இதனிடையே 1951-ஆம் ஆண்டில் ஆக்ஸ்பர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த எஸ்.ஜே. பர்னஸ் என்பவரின் தலைமையில் மலாயாவில் கல்வி ஆய்வு செய்யப் பட்டது. (Report of the Committee on Malay Education, Federation of Malaya).

அதன்படி ஓர் அறிக்கை வெளியிடப் பட்டது. அதன் பெயர் பார்ன்ஸ் அறிக்கை (Barnes Report). அந்த அறிக்கையில் மலாய் மொழி அல்லாத தாய் மொழிப் பள்ளிகளுக்கு முக்கியத்துவம் தரவேண்டிய அவசியம் இல்லை என கூறப்பட்டது. இதனைச் சீனச் சமூகமும் இந்தியச் சமூகமும் கடுமையாக எதிர்த்தன.


பார்ன்ஸ் அறிக்கைக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியச் சமூகத்தின் சார்பில் ஒரு கல்விக்குழு அமைக்கப் பட்டது.

அந்தக் குழுவில் ம.இ. கா. தலைவர் தேவாசர்; சைவப் பெரியார் இராமநாதன் செட்டியார், ஆதி நாகப்பன், தவத்திரு சுவாமி சத்தியானந்தா ஆகியோர் இடம் பெற்று இருந்தனர். இந்தக் கல்வி குழுவினர் பார்ன்ஸ் கல்வி அறிக்கைக்கு எதிராக இந்திய சமூகத்தின் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

பெர்னஸ் அறிக்கையில் இருக்கும் சிக்கல்களைக் களைய அப்போதைய கல்வி அமைச்சர் ரசாக் தலமையில் மேலும் ஒரு கல்வி குழு நியமிக்கப்பட்டது. அதுவே இப்போது பலராலும் அறியப்படும் ரசாக் திட்டம்.

இதை ரசாக் அறிக்கை (Razak Report) என்றும் அழைக்கலாம். மலாயா சுதந்திரம் அடைந்த போது கல்வி அமைச்சராக இருந்தவர் துன் அப்துல் ரசாக். இவர்தான் மலாயா கல்விக் கொள்கைத் தயாரிப்புக் குழுவிற்குத் தலைவராக இருந்தவர். அவருடைய பெயரே அந்தக் கல்வி அறிக்கைக்கு வைக்கப் பட்டது.

மலாயா கல்விக் கொள்கையில் ஒரு சீர்த்திருத்தைக் கொண்டு வர வேண்டும் எனும் நோக்கத்தின் அடிப்படையில் ரசாக் அறிக்கை தயாரிக்கப் பட்டது.

1957-ஆம் ஆண்டு கல்வி அரசாணை பிரிவு 3-க்குள் ரசாக் அறிக்கை ஒருங்கிணைக்கப் பட்டது. மலாயா கல்விக் கட்டமைப்பின் அடிப்படையாக அந்த ரசாக் அறிக்கை விளங்குகிறது. அதன் மூலம் சீன, தமிழ்ப் பள்ளிகள் தொடர்ந்து இயங்குவதற்கு அனுமதி வழங்கப் பட்டது.

சீன, தமிழ்ப் பள்ளிகள் தொடர்ந்து இயங்கும் விதி; 1957-ஆம் ஆண்டு கல்வி அரசாணை பிரிவு 3-க்குள் அடங்குகிறது. அதற்கு ரசாக் அறிக்கை வழிவகுத்துக் கொடுக்கிறது.

ரசாக் அறிக்கை வருவதற்கு முன்னர் இரு வேறு அறிக்கைகள் இருந்தன. முதலாவது பார்ன்ஸ் அறிக்கை (Barnes Report). இரண்டாவது பென் பூ அறிக்கை (Fenn-Wu Report).

இந்த இரு அறிக்கைகளில் பார்ன்ஸ் அறிக்கையைப் பெருவாரியான மலாய்க்காரர்கள் ஆதரித்தார்கள். பென் பூ அறிக்கையைச் சீனர்களும் இந்தியர்களும் ஆதரித்தார்கள். அங்கே இணக்கப் பிணக்குகள் தோன்றின. அதைச் சரி கட்டவே ரசாக் அறிக்கை தயாரிக்கப் பட்டது.

சுருக்கமாகச் சொன்னால் ரசாக் அறிக்கை என்பது ஒரு சமரசக் கல்வி அறிக்கை ஆகும். இரு தரப்புகளையும் சமரசப் படுத்தும் ஒரு திட்டம்.

ரசாக் அறிக்கை வழியாக மலாய், ஆங்கில, சீனம், தமிழ்ப் பள்ளிகள் தொடக்க நிலைப் பள்ளிகளாக இயங்க முடியும். மலாய், ஆங்கிலப் பள்ளிகள் இடைநிலைப் பள்ளிகளாக இயங்க முடியும். மலாய் மொழியைப் பயிற்று மொழியாகக் கொண்ட பள்ளிகள் தேசியப் பள்ளிகளாக அழைக்கப் பட்டன.

இதர ஆங்கில, சீனம், தமிழ்ப் பள்ளிகள் தேசிய மாதிரி பள்ளிகளாக அழைக்கப் பட்டன. அதுவே இன்னும் இந்த நாட்டின் கல்வி அமைவு முறையின் அடித்தளமாக இருந்து வருகிறது.

ஆக அந்த வகையில் 1996-ஆம் ஆண்டு கல்விச் சட்டம் 550-இன் கீழ் தேசிய மாதிரி பள்ளிகள் இயங்குவதற்கு உரிமை வழங்கப் பட்டது. தேசிய மாதிரி பள்ளிகள் என்றால் ஆங்கில, சீனம், தமிழ்ப் பள்ளிகள் ஆகும்.

இன்னும் ஒரு விசயம். எதிர்காலத்தில் இந்த மலைநாட்டில் நம் சந்ததியினரின் மொழிப் பயன்பாட்டு உரிமைகளையும் காப்பாற்ற வேண்டி இருக்கிறது. தமிழ் பள்ளிகளின் உரிமைகளைக் காப்பாற்றினால் மட்டுமே தமிழ் மொழியின் பயன்பாட்டு உரிமைகளைக் காப்பாற்ற முடியும். இல்லை என்றால் தமிழ் மொழி இனி மெல்லக் காணாமல் போகும்.

தமிழ் பள்ளிகளின் உரிமைகளை எந்தச் சூழ்நிலையிலும் அடகு வைக்க வேண்டாமே. அதே போல மொழியை அழித்து விட்டு; இனம் என்கிற ஓர் அடையாளத்தை அந்த இனம் தக்க வைத்துக் கொள்ள முடியாது. முடியவே முடியாது. ஆக மொழியை இழந்தவர்கள் என்றைக்கும் ஓர் இனமாக கருதப் படுவது இல்லை.

அந்த வகையில் மொழியும் இனமும் எப்போதுமே ஒன்றை ஒன்று சார்ந்து நிற்பவை. ஒன்று இல்லாமல் மற்றொன்று இல்லை.

தமிழ் மொழி மிகவும் தொன்மையான மொழி. உலகம் முழுவதும் தமிழர்கள் பரந்து விரிந்து வாழ்ந்தாலும் அவர்கள் தங்கள் தாய் மொழியைக் கட்டி காக்கும் மரபை மட்டும் விட்டுக் கொடுக்கவில்லை.  

எல்லா பள்ளிகளுக்கும் அரசாங்கத்தின் நிதியுதவி கிடைக்கப் பெற வேண்டும். எந்தப் பள்ளியாக இருந்தாலும் ஒரே ஒரு பொதுவான தேசியக் கல்வித் திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற வேண்டும். பகுதி உதவி பெற்ற பள்ளிகள் என்பது முழு உதவி பெற்ற பள்ளிகள் என்று மாற வேண்டும். அதுவே என்னுடைய எதிர்ப்பார்ப்பு.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
08.01.2022

சான்றுகள்:

1. A Short History of Tamil Schools in Malaya/ Malaysia - https://grfdt.com/PublicationDetails.aspx?Type=Articles&TabId=7051

2. Global Research Forum on Diaspora and Transnationalism (GRFDT) http://www.grfdt.com/PublicationDetails.aspx?Type=Articles&TabId=7051

3. List of All Primary Schools in Each States in Malaysia, as at 31 Dec 2017. http://myschoolchildren.com/list-of-all-primary-schools-in-malaysia/#.W7mWmCQzbIU

4. Malaya Labour Ordinance in 1912 - https://lib.iium.edu.my/mom/services/mom/document/getFile/U0IAjWSBy5KgLs0Z0pwyhERuNbbFdcBr20070109162203671


 

07 ஜனவரி 2022

மலேசியக் கல்விச் சட்டவிதி 21 (2)

தமிழ் மலர் - 07.01.20220

ஆங்கில நூலாசிரியர் ரோலன் பிராடல் (Sir Roland Braddell) என்பவர் ஒரு வாசகம் சொல்லிவிட்டுச் சென்று உள்ளார். அதை நினைவு படுத்துகிறேன்.

’மலாயா எனும் பச்சை மண்ணுக்கு முதல் நாகரிகத்தைக் கொண்டு வந்தவர்கள் இந்தியர்கள். அவர்களின் மொழியால் தான் அந்த மண் ஏற்றம் பெற்றது.’ இதைக் கேட்டதும் சிலருக்குப் பற்றிக் கொண்டு வரலாம். பிரச்சினை இல்லை. கொட்டாங்கச்சிக்கு அடியில் நெருப்பு பற்றாது.

உலகில் வாழும் ஒவ்வொரு மனிதரின் பிறப்பு உரிமை அவரின் தாய்மொழி. அதே போல உலகில் வாழும் ஒவ்வொரு தமிழரின் உயிர் உரிமை அவரின் தமிழ்மொழி. அந்த வகையில் தமிழர்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் அதுவே அவர்களின் தனிச் சிறப்பு உரிமை.

அந்த உரிமைக்கு உயிர் கொடுக்க இன்று வரை தமிழர்கள் போராடிக் கொண்டு தான் இருக்கிறார்கள். இங்கேயும் அங்கேயும் எங்கேயும் அந்த உரிமைப் போராட்டம் தொடர்கிறது.


ஒரு மொழி அழிந்தால் அந்த மொழி சார்ந்த இனம் அழிந்து விடும். தெரிந்த விசயம். ஓர் இனத்தை அழிக்க வேண்டும் என்றால் அந்த இனத்தின் மொழியை அழித்தால் போதும். அந்த இனம் காலப் போக்கில் சன்னம் சன்னமாய் அழிந்துவிடும்.

வரலாற்றைப் புரட்டிப் பாருங்கள். இந்த உலகில் எத்தனையோ மொழிகள் அழிந்து விட்டன. அந்த மொழியைச் சார்ந்த இனங்களும் அழிந்து விட்டன. மற்ற மேலாண்மை மொழிகளின் அதிகார ஆதிக்க வலிமையினால் பல ஆயிரம் சிறுபான்மை இனத்தவர்களின் மொழிகள் அழிக்கப்பட்டு விட்டன.

2019-ஆம் ஆண்டு கணக்குப்படி இந்த உலகில் 195 நாடுகள் இருக்கின்றன. அந்த நாடுகளில் 2000-ஆம் ஆண்டு வரையில் 7000 மொழிகள் இருந்தன. 2019-ஆம் ஆண்டு இறுதி வாக்கில் 6500 மொழிகள் மட்டுமே இருக்கின்றன.


2020-ஆம் ஆண்டில் அந்தமான் தீவில் மட்டும் மூன்று மொழிகள் அழிந்து போயின. அக்கா போ (Aka-Bo); அக்கா கோரா (Aka-Kora); ஆ பூசிக்கார் (A-Pucikwar) மொழிகள். இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். அசுர வேகத்தில் மொழிகள் அழிந்து கொண்டு போகின்றன.

ஒரு மொழியைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை குறையும் போது அந்த மொழியின் உயிர்த் தன்மைக்குச் சாவுமணி அடிக்கப் படுகிறது. அதை நினைவில் கொள்வோம். சரி. மலாயா தமிழர்களின் கதைக்கு வருவோம்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே தமிழர்கள் மலாயாவில் தடம் பதித்து விட்டார்கள். வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் நன்றாகவே தெரிய வரும். பெரும்பாலும் வணிகம் செய்யவே மலாயாவிற்கு வந்தார்கள். திரைகடல் ஓடி திரவியம் தேடு எனும் வாசகமே அந்தக் காலத்துத் தமிழர்களுக்குப் பொன் வாசகமாக விளங்கி இருக்கிறது.

அப்படி மலையூர் மலாயாவிற்கு வந்தவர்கள் பலர் பினாங்கு, கிள்ளான், மலாக்கா போன்ற துறைமுக நகரங்களில் நிரந்தரமாகத் தங்கி இருக்கிறார்கள். அங்கு வாழ்ந்த உள்ளூர்ப் பெண்களைத் திருமணம் செய்து கொண்டார்கள். அவர்களுக்குப் பிறந்த பிள்ளைகளுக்குத் தமிழ் மொழியைக் கற்றுத் தந்து இருக்கிறார்கள்.

454-ஆம் ஆண்டு இந்தோனேசியா போர்னியோவில் மகாராஜா குதுங்க அனுமார்த்த தேவவர்மன் (Maharaja Kudungga Anumerta Devavarman) என்பவர் ஆட்சி செய்தார்.

அவர் காலத்தில் இருந்து இந்தியர்களின் தென்கிழக்காசியப் புலம்பெயர்வுகள் தொடர்கின்றன. 1025-ஆம் ஆண்டில் இராஜேந்திர சோழன் கடாரத்தின் மீது படை எடுத்த போது சுமத்திரா தீவில் வாழ்ந்த தமிழர்களைக் கணக்கில் சேர்க்கவில்லை.


தோட்டப் புறங்களில் தமிழ்ப்பள்ளிகள் தொடங்கப்பட்ட காலக் கட்டத்தில் நகர்ப் புறங்களிலும் தமிழ்ப் பள்ளிகள் தொடங்கப் பட்டன. பெரும்பாலானவை தனியார் தமிழ்ப் பள்ளிகளாகும்.

1850-ஆம் ஆண்டு மலாக்காவில் முதல் ஆங்கிலேயத் தமிழ்ப்பள்ளி நிறுவப்பட்டது (Malacca Anglo-Tamil School). அதுவே நமது மலேசிய நாட்டின் முதல் முழுநேரத் தமிழ்ப்பள்ளி ஆகும். ஏற்கனவே 1816-ஆம் ஆண்டு பினாங்கில் தமிழ் வகுப்பு தொடங்கப் பட்டது (Penang Free School Tamil class 1816). அதை நினைவில் கொள்வோம்.


1900-ஆம் ஆண்டில் ஆங்கிலேய அரசின் முதல் முயற்சியாகப் பேராக், பாகான் செராயில் முதல் அரசினர் தமிழ்ப்பள்ளி நிறுவப்பட்டது. இதற்கு பிரேங்க் சுவெட்டன்காம் பொறுப்பு வகித்தார். 1905-ஆம் ஆண்டில் கோலாலம்பூர் செந்தூல் பகுதியில் தம்புசாமிப் பிள்ளை தமிழ்ப் பள்ளி தொடங்கப் பட்டது. இந்தப் பள்ளியை ராஜசூரியா என்பவர் தோற்றுவித்தார்.

1906-ஆம் ஆண்டில் மலாயாவில் 13 அரசாங்கத் தமிழ்ப் பள்ளிகளும் ஒரு கிறிஸ்துவத் தமிழ்ப் பள்ளியும் இயங்கி வந்தன.

1908-ஆம் ஆண்டு நிபோங் திபாலில் ஒரு தமிழ்ப்பள்ளி தொடங்கப் பட்டது. அதன் பெயர் சங்காட் தோட்டத் தமிழ்ப்பள்ளி. பினாங்கு மாநிலத்தைப் பொறுத்த வரையில் அதுதான் முதல் தமிழ்ப்பள்ளி.

1914-ஆம் ஆண்டு கோலாலம்பூர் பிரிக்பீல்ட்ஸ் சாலையில் விவேகானந்தா தமிழ்ப்பள்ளி தோற்றுவிக்கப் பட்டது. நிறுவியர் தம்புசாமி பிள்ளை.


1924-ஆம் ஆண்டு செந்தூல் கத்தோலிக்க திருச்சபை, செயிண்ட் ஜோசப் பெண்கள் தமிழ்ப் பள்ளியை நிறுவியது. 1925-ஆம் ஆண்டில் மலாயாவில் 235 தமிழ்ப் பள்ளிகள் இருந்தன.

1930-ஆம் ஆண்டு செந்தூல் இந்திய வாலிபர் சங்கத்தின் சார்பில் சரோஜினி தேவி தமிழ்ப் பள்ளி தோற்றுவிக்கப் பட்டது. இருந்தாலும் இந்தப் பள்ளி 1958-ஆம் ஆண்டு மூடப்பட்டது.  

1937-ஆம் ஆண்டு கோலாலம்பூர் பத்து சாலையில் சுவாமி ஆத்மராம் அவர்களின் முயற்சியில் அப்பர் தமிழ்ப்பள்ளி தோற்றுவிக்கப் பட்டது. அதே காலக் கட்டத்தில் அரசாங்கமும் சில தமிழ்ப் பள்ளிகளைக் கட்டிக் கொடுத்தது.

1913-ஆம் ஆண்டில் கிள்ளான் சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளி;

1919-ஆம் ஆண்டில் செந்தூல் தமிழ்ப்பள்ளி;

1924-ஆம் ஆண்டில் கோலாலம்பூர் சான் பெங் தமிழ்ப்பள்ளி;

1937-ஆம் ஆண்டில் பங்சார் தமிழ்ப்பள்ளி போன்றவை குறிப்பிடத் தக்கவை.

1938-ஆம் ஆண்டில் தமிழ்ப்பள்ளி ஆசிரியர் தேவையை நிவர்த்தி செய்ய தமிழ்ப் போதானா முறை வகுப்புகள் தொடங்கப் பட்டன.

1942-ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போர். மலாயாவில் பல தமிழ்ப் பள்ளிகள் மூடப் பட்டன. 644-ஆக இருந்த தமிழ்ப் பள்ளிகள் 1943-ஆம் ஆண்டில் 292-ஆக குறைந்து போயின.


இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் 1946-ஆம் ஆண்டு தமிழ் ஏழாம் வகுப்பு தொடங்கப் பட்டது. ஈராண்டுகளுக்கு ஒரு முறை தேர்வு. ஏழாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் தமிழாசிரியர்களாகச் சேர்த்துக் கொள்ளப் பட்டார்கள். 1957-ஆம் ஆண்டு நாடு சுதந்திரம் அடைந்ததும் ஏழாம் வகுப்பு நிறுத்தப் பட்டது.

1957-ஆம் ஆண்டு நாடு சுதந்திரம் அடைந்த போது புதிய கல்விச் சட்டம் கொண்டு வரப்பட்டது. அதில் சட்டவிதி 3-இன் படி எல்லா இனங்களின் மொழியும் பண்பாடும் காக்கப்பட வேண்டும் என்று வரையறுக்கப்பட்டது. ஆனால் அதன்படி நடைமுறையில் உள்ளதா என்பது ஒரு கேள்விக் குறியே. மலாய்ப் பள்ளிகள் மட்டுமே இந்த நாட்டில் தேசிய ஒற்றுமையைக் கொண்டு வர முடியும் என்பது சிலரின் எண்ணமாகும்.

மலேசியக் கல்விச் சட்டவிதி 21 (2). இந்தச் சட்டவிதி ஒரு வகையில் தமிழ் சீனப் பள்ளிகளுக்கு ஒரு மருட்டலாக இருந்தது. மன்னிக்கவும். உண்மையே அதுதான். கொஞ்ச காலம் அப்படி ஒரு நிலைமை இருந்தது. அதாவது அந்தச் சட்டவிதி 21 (2)-யின் கீழ் கல்வியமைச்சருக்குச் சில கூடுதலான அதிகாரங்கள் வழங்கப் பட்டு இருந்தன. அவர் விரும்பினால் ஒரு சீனம் அல்லது ஒரு தமிழ்மொழிப் பள்ளியைத் தேசிய மொழிப் பள்ளியாக மாற்றம் செய்ய முடியும்.

இந்தச் சட்டவிதி சற்றே சலசலப்பை ஏற்படுத்தியது. இருந்தாலும் 1996-ஆம் ஆண்டு அந்தச் சட்டவிதியில் திருத்தம் செய்யப் பட்டது. இந்த விசயம் ரொம்ப பேருக்குத் தெரியாது.

ஓர் அரசியல்வாதி அந்த மலேசியக் கல்விச் சட்டவிதி 21 (2) பற்றி பேசி இருக்கிறார். இந்த நாட்டில் உள்ள தமிழ் சீனப் பள்ளிகளைச் சட்டவிதி 21 (2)-யின் படி மூடிவிட வேண்டும் என பேசி இருக்கிறார். பெரும் சர்ச்சையை உருவாக்கிய செய்தி. ஏன் தெரியுங்களா? டத்தோ நஜீப் ரசாக் பிரதமர் பதவியில் இருந்த போது கல்விச் சட்டத்தின் சட்டவிதி 21 (2)-யிலும் திருத்தம் செய்யப் பட்டு விட்டது.


அந்த வகையில் கல்விச் சட்டம் 1966-இன் கீழ் சீன தமிழ்ப் பள்ளிகளின் நிகழ்நிலை உறுதி செய்யப்பட்டது. அதாவது அப்பள்ளிகளின் தகுதி மறு உறுதி செய்யப் பட்டது.

(Education Act 1961 amended during the era of Datuk Seri Najib Razak, whereby Section 21 (2) was abolished and the status of SJKC and SJKT were guaranteed under the Education Act 1996)

அப்படி இருக்கும் போது தமிழ் சீனப் பள்ளிகளை மூட வேண்டும் என  அரசியல்வாதிகள் சிலர் சொல்வது சரியன்று. அரசியல் பிரசாரத்தில் தமிழ் சீனப் பள்ளிகளைப் பகடைக் காய்களாகப் பயன்படுத்துவது தவறு. அதாவது சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்ட பின்னரும்  தமிழ் சீனப் பள்ளிகளைப் பிரசார ஆயுதமாகப் பயன்படுத்துவது தவறு என்பதே பொதுவான கருத்து.

(https://www.thestar.com.my/news/nation/2019/03/03/barisans-fate-to-be-discussed-this-week/)

நம் நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின்படி தேசியக் கல்வி அமைப்பின் கீழ் இயங்கும் எல்லாப் பள்ளிகளும் சமமாக நடத்தப்பட வேண்டும். அவற்றின் மேம்பாட்டிற்கும் வளர்ச்சிக்கும் வழங்கப்படும் அரசாங்க நிதி ஒதுக்கீட்டில் வேறுபாடுகள் இருக்கக் கூடாது. ஆனால் நடைமுறையில் அப்படி இல்லை என்பதே வேதனையான செய்தி. வேறுபாடுகள் நிலவுகின்றன. அதனால் தமிழ் சீனப் பள்ளிகள் பாதிக்கப் படுகின்றன.

இதில் தமிழ்ப்பள்ளிகள் அனுபவிக்கும் வேதனைகள் சொல்லில் வடிக்க முடியா. சீனப் பள்ளிகள் பரவாயில்லை. வசதிமிக்க சீனர்கள் நிதியுதவி செய்து வருகின்றார்கள். தமிழ்ப்பள்ளிகளின் இந்த வேதனையான நிலையைச் சீர் செய்வதற்கு 2010-ஆம் ஆண்டுகளில் தமிழ் அறவாரியம் களம் இறங்கியது. தேசியக் கல்வி ஆலோசனை மன்றத்தின் கவனத்திற்கு சில முன்மொழிதல்களைக் கொண்டு போனது.

அந்த முன்மொழிதல்கள் வருமாறு:

1. தேசியக் கல்விக் கொள்கையில் உட்பட்ட சீன தமிழ்ப் பள்ளிகள் எல்லாம் சமமாக நடத்தப்பட வேண்டும்.

2. அரசாங்கம் தாய்மொழிப் பள்ளிகளுக்கு வழங்கும் நிதி ஒதுக்கீட்டில் வேறுபாடுகள் இருக்கக் கூடாது.

3. தாய்மொழிப் பள்ளிகளுக்குத் தேவைப்படும் தகுதி பெற்ற ஆசிரியர்கள்; கட்டடங்கள்; ஆய்வுக்கூடங்கள்; நூலகங்கள்; வசதியான வகுப்பறைகள்; திடல்கள்; போன்றவை உடனடியாக வழங்கப்பட வேண்டும்.

4. எல்லா தமிழ்ப் பள்ளிகளிலும் பாலர் பள்ளிகள் அமைக்கப்பட வேண்டும்

5. தாய்மொழிப் பள்ளிகள் கட்டுவதற்கான நிலம்; கட்டடம் தொடர்பான பிரச்சினைகளுக்கு அரசாங்கம் பொறுப்பு ஏற்க வேண்டும்

6. இடைநிலைப் படிப்பை முடித்த பின்னர் பட்டப்படிப்பு செல்வதற்கான மெட்ரிகுலேசன், எஸ்.டி.பி.எம். தொடர்பான பிரச்சினைகள் நீக்கப்பட வேண்டும்.

7. தகுதி பெற்ற மாணவர்களுக்கு வேறுபாடு இல்லாமல் அரசாங்கப் பல்கலைக்கழகங்களில் இடம் அளிக்க வேண்டும்.

8. உபகாரச் சம்பளம் வழங்குவதில் வேறுபாடு இருக்கக் கூடாது. அனைத்தும் வெளிப்படையாக இருக்க வேண்டும்.

9. மாணவர்களைச் சிறுமைப் படுத்தும் நோக்கம் இருக்கக் கூடாது. இனவாதத்தைத் தூண்டி விடுவதாக அமையக் கூடாது.

10. ஆரம்பத் தமிழ்ப் பள்ளிகள் தேசிய மாதிரி பள்ளிகள் என்று இருப்பதை தேசியப் பள்ளிகள் என மாற்றம் செய்ய வேண்டும்.

இந்தப் பரிந்துரைகள் ஏட்டளவில் அப்படியே நிலுவையில் உள்ளன. எப்போது இந்தப் பரிந்துரைகளுக்கு தீர்வு கிடைக்கப் போகிறது. இதுவும் ஒரு மில்லியன் டாலர் கேள்வியே. மலேசிய நாடு பல்லினப் பண்பாட்டைக் கொண்டது. ஆகவே தமிழ்க் கல்வி வழியாகத் தமிழரின் பண்பாடு பேணப் படுவது அவசியமாகும். இது நியாயமான கோரிக்கை. தமிழ்ப் பள்ளிகளுக்கு அரசாங்கத்தின் முழுமையான உதவி கிடைப்பது இல்லை. இந்தக் குறையை அரசாங்கம் தீர்க்க வேண்டும்.

மலேசிய அரசியலமைப்புச் சட்டத்தின் வழி மலேசியத் தமிழர்கள் மலேசிய நாட்டின் அனைத்து உரிமைகளையும் பெற்ற குடிமக்கள். அந்த வகையில் தமிழ்க் குழந்தைகள் தமிழ் மொழிக் கல்வி பெறுவதற்குச் சட்டபூர்வமான உரிமை பெற்று உள்ளார்கள் என்பதே என்னுடைய கருத்து.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
07.01.2022

சான்றுகளும் குறிப்புகளும்:

1. Formal Tamil education in Malaya was mainly by Christian missionaries.

2. The first Tamil class was held in Penang Free School.

3. After 1870, Christian missionaries began establishing Tamil schools in Penang, Province Wellesley and Perak, to cater for the children of Indian workers in the sugar and gambiar plantations.

4. In Bagan Serai in Perak, the Christian missions established schools where there were many Tamils.



 

06 ஜனவரி 2022

மலேசியாவில் 527 தமிழ்ப்பள்ளிகள்; 80569 மாணவர்கள்; 8638 ஆசிரியர்கள்

1900-ஆம் ஆண்டுகளில் மலேசியத் தோட்டப் புறங்களில் வாழ்ந்த தமிழர்களின் வாழ்வியல் கூறுகள் துன்பம் நிறைந்தவை. துயரங்கள் நிறைந்த துயரியல் காவியங்கள். நாடு விட்டு நாடு கடந்து வந்ததால், தமிழர்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டன. தமிழர்களின் அடிப்படைத் தேவைகள் மறுக்கப்பட்டன.


தமிழர்த் தொழிலாளர்கள் தோட்டத்திற்குள் அடங்கி வாழ வேண்டும். வெளியே போகக் கூடாது. அவர்களின் பிள்ளைகளும் தோட்டத்தை விட்டு வெளியே நகரக் கூடாது. வெளியே போனால் தமிழர்களின் பட்டறிவும் பகுத்தறிவும் வளர்ச்சி பெறும்.

அப்புறம் பின்நாட்களில் வெள்ளைக்காரர்களுக்கு எதிராகப் போர்க் கொடி தூக்குவார்கள். இவை எல்லாம் காலனித்துவக் கடைச் சரக்குகளுக்குத் தெரியாமலா இருக்கும். நல்லா தெரிந்து நல்லா ‘பிளேன்’ போட்டுத்தான் காய்களை நகர்த்தி இருக்கிறார்கள்.

ஆக தோட்டத்திலேயே பள்ளிக்கூடங்களைக் கட்டிப் போட்டால் வெளியே போக மாட்டார்கள். ஆறாம் வகுப்பு அறிவு போதும். அதற்கு மேல் கூடுதலான படிப்பு அவசியம் இல்லை. இருந்தால் முதலாளிகளுக்கு ஆபத்து.


அதுதான் வெள்ளைக்காரர்களின் தலையாய நோக்கமாக இருந்தது. நரியை நனையாமல் குளிப்பாட்டும் கலையைக் கரைத்துக் குடித்தவர்களுக்குச் சொல்லியா தர வேண்டும்.

வெள்ளைக்காரர்களின் நோக்கம் எல்லாம் என்ன? மலாயாவில் ரப்பர் உற்பத்தியைப் பெருக்க வேண்டும். நாலு காசு பார்த்து நாற்பது காசாகப் பெருக்க வேண்டும். கல்லாவை நிரப்ப வேண்டும். நல்லபடியாக வீடு போய்ச் சேர வேண்டும். கிடைக்கிற கமிசனில் சுகமான வாழ்க்கையில் சொகுசாக வாழ வேண்டும்.

பொதுவாகவே அப்போது இருந்த பெரும்பாலான தமிழ்ப்பள்ளிகள், தமிழ் ஆசிரியர்களை உருவாக்கும் தொழிற்சாலைகளாகவே இயங்கி வந்தன. பெரும்பாலான தமிழாசிரியர்கள் வெள்ளைக்காரர்களின் எடுபிடிகளாகவே இருந்தார்கள். மன்னிக்கவும்.


உண்மையைத் தான் எழுதுகிறோம். அப்போதைய தமிழ் ஆசிரியர்களுக்கு ஆங்கிலம் சரியாகத் தெரியாது. அவர்களைச் சொல்லி குற்றம் இல்லை. அப்படிப்பட்டச் சூழ்நிலை. அதனால் மாணவர்களுக்கும் ஆங்கிலம் சொல்லித்தர இயலாமல் போய் விட்டது. தமிழ் மாணவர்களுக்கும் ஆங்கில அறிவு குறைந்தும் போனது.

தோட்டப் புறங்களில் தமிழ்ப்பள்ளிகள் தொடங்கப்பட்ட காலக் கட்டத்தில் நகர்ப் புறங்களிலும் தமிழ்ப் பள்ளிகள் தொடங்கப் பட்டன. பெரும்பாலானவை தனியார் தமிழ்ப் பள்ளிகளாகும்.

1905-ஆம் ஆண்டில் கோலாலம்பூர் செந்தூல் பகுதியில் தம்புசாமி பிள்ளை தமிழ்ப்பள்ளி தொடங்கப் பட்டது. இந்தப் பள்ளியைத் ராஜசூரியா என்பவர் தோற்றுவித்தார். தம்புசாமி பிள்ளையின் பெயர் வைக்கப்பட்டது.


1905-ஆம் ஆண்டில் மலாயாவில் 13 அரசாங்கத் தமிழ்ப்பள்ளிகளும் ஒரு கிறிஸ்துவத் தமிழ்ப்பள்ளியும் இயங்கி வந்தன. 1908-ஆம் ஆண்டு நிபோங் திபாலில் ஒரு தமிழ்ப்பள்ளி தொடங்கப் பட்டது. பினாங்கு மாநிலத்தைப் பொருத்த வரையில் அதுதான் முதல் தமிழ்ப்பள்ளி.

1914-ஆம் ஆண்டு கோலாலம்பூர் துன் சம்பந்தன் (பிரிக்பீல்ட்ஸ்) சாலையில் விவேகானந்தா தமிழ்ப்பள்ளி தோற்றுவிக்கப் பட்டது. 1930-ஆம் ஆண்டு செந்தூல் இந்திய வாலிபர் சங்கத்தின் சார்பில் சரோஜினி தேவி தமிழ்ப்பள்ளி தோற்றுவிக்கப் பட்டது. இருந்தாலும், 28 ஆண்டுகளுக்குப் பின்னர், 1958-ஆம் ஆண்டில் இந்தப் பள்ளி மூடப்பட்டது.

1937-ஆம் ஆண்டு  கோலாலம்பூர் பத்து சாலையில் சுவாமி ஆத்மராம் அவர்களின் முயற்சியில் அப்பர் தமிழ்ப்பள்ளி தோற்றுவிக்கப் பட்டது.

அதே காலக் கட்டத்தில் அரசாங்கமும் சில பள்ளிகளைக் கட்டிக் கொடுத்து இருக்கிறது. 1913-ஆம் ஆண்டில் கிள்ளான சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளி; 1919-ஆம் ஆண்டில் செந்தூல் தமிழ்ப்பள்ளி; 1924-ஆம் ஆண்டில் கோலாலம்பூர் சான் பெங் தமிழ்ப்பள்ளி; 1937-ஆம் ஆண்டில் பங்சார் தமிழ்ப்பள்ளி போன்றவை குறிப்பிடத் தக்கவை. அரசாங்கம் கட்டிக் கொடுத்த பள்ளிகள். மலாயாவில் தமிழ்ப்பள்ளிகளின் எண்ணிக்கை:


1920-ஆம் ஆண்டில் 122.
1925-ஆம் ஆண்டில் 235.
1930-ஆம் ஆண்டில் 333
1938-ஆம் ஆண்டில் 524.
1942-ஆம் ஆண்டில் 644
1943-ஆம் ஆண்டில் 292
1950-ஆம் ஆண்டில் 888
1960-ஆம் ஆண்டில் 662
2018-ஆம் ஆண்டில் 525
2021-ஆம் ஆண்டில் 527

2018-ஆம் ஆண்டு புள்ளிவிவரங்களின்படி மலேசியாவில் 525 தமிழ்ப்பள்ளிகள் இருந்தன. 2020-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மலேசியக் கல்வியமைச்சு வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி, மலேசியாவில் 527 தமிழ் தொடக்கப் பள்ளிகள் உள்ளன. அந்தப் பள்ளிகளில் 80,569 மாணவர்கள் கல்வி கற்கிறார்கள். ஆசிரியர்கள் 8,638 பேர்.

மலேசியத் தமிழ்ப்பள்ளிகள் மாணவர்களின் எண்ணிக்கை:

ஜனவரி 2018 - 81,488 மாணவர்கள்

ஏப்ரல் 2018 - 81,635 மாணவர்கள்

ஜனவரி 2019 - 81,321 மாணவர்கள்

மே 2019 - 81,447 மாணவர்கள்

ஜனவரி 2020 - 80,569 மாணவர்கள்

ஜூன் 2020 - 80,743 மாணவர்கள்

ஜூன் 2021 - 80,434 மாணவர்கள்


2020-ஆம் ஆண்டு மலேசியக் கல்வியமைச்சு வெளியிட்ட புள்ளி விவரங்கள்:

*ஜொகூர்* மாநிலத்தில் 70 தமிழ்ப் பள்ளிகள். 12,335 மாணவர்கள். 1,145 ஆசிரியர்கள்.

*கெடா* மாநிலத்தில் 60 தமிழ்ப் பள்ளிகள். 7,518 மாணவர்கள். 899 ஆசிரியர்கள்.

*கிளாந்தான்* மாநிலத்தில் 1 தமிழ்ப் பள்ளி. 36 மாணவர்கள். 9 ஆசிரியர்கள்.

*மலாக்கா* மாநிலத்தில் 21 தமிழ்ப் பள்ளிகள். 2,375 மாணவர்கள். 332 ஆசிரியர்கள்.

*நெகிரி செம்பிலான்* மாநிலத்தில் 61 தமிழ்ப் பள்ளிகள். 8,648 மாணவர்கள். 1097 ஆசிரியர்கள்.

*பகாங்* மாநிலத்தில் 37 தமிழ்ப் பள்ளிகள். 2,599 மாணவர்கள். 422 ஆசிரியர்கள்.

*பேராக்* மாநிலத்தில் 134 தமிழ்ப் பள்ளிகள். 11,645 மாணவர்கள். 1679 ஆசிரியர்கள்.

*பெர்லிஸ்* மாநிலத்தில் 1 தமிழ்ப் பள்ளி. 72 மாணவர்கள். 11 ஆசிரியர்கள்.

*பினாங்கு* மாநிலத்தில் 29 தமிழ்ப் பள்ளிகள். 5,397 மாணவர்கள். 554 ஆசிரியர்கள்.

*சிலாங்கூர்* மாநிலத்தில் 97 தமிழ்ப் பள்ளிகள். 26,506 மாணவர்கள். 2,155 ஆசிரியர்கள்.

*கோலாலம்பூர்* மாநகரத்தில் 15 தமிழ்ப் பள்ளிகள். 3,443 மாணவர்கள். 335 ஆசிரியர்கள்.

*திரங்கானு, சபா, சரவாக்* மாநிலங்களிலும்; *லாபுவான்; புத்திராஜெயா* கூட்டரசுப் பிரதேசங்களிலும் தற்போது தமிழ்ப்பள்ளிகள் இல்லை.


கல்விச் சட்டங்களின் பார்வையில் இதுவரையிலும் நான்கு திட்டங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன.

முதலாவது பார்ன்ஸ் அறிக்கை (Barnes Report).

இரண்டாவது பென் பூ அறிக்கை (Fenn-Wu Report).

மூன்றாவது ரசாக் அறிக்கை (Razak Report).

நான்காவது ரகுமான் தாலிப் அறிக்கை (Rahman Talib Report).

ரசாக் அறிக்கை வழியாக மலாய், ஆங்கில, சீனம், தமிழ்ப் பள்ளிகள் தொடக்க நிலைப் பள்ளிகளாக இயங்க முடியும். மலாய், ஆங்கிலப் பள்ளிகள் மட்டுமே இடைநிலைப் பள்ளிகளாக இயங்க முடியும். மலாய் மொழியைப் பயிற்று மொழியாகக் கொண்ட பள்ளிகள் தேசியப் பள்ளிகளாக அழைக்கப் பட வேண்டும்.

இதர ஆங்கில, சீனம், தமிழ்ப் பள்ளிகள் தேசிய மாதிரி பள்ளிகளாக அழைக்கப் பட்டன. அதுவே இன்னும் இந்த நாட்டின் கல்வி அமைவு முறையின் அடித்தளமாகவும் இருந்து வருகிறது. இயங்கி வருகிறது.

எல்லாப் பள்ளிகளுக்கும் அரசாங்கத்தின் நிதியுதவி கிடைக்கப் பெறும். எந்தப் பள்ளியாக இருந்தாலும் ஒரே ஒரு பொதுவான தேசியக் கல்வித் திட்டத்தின் கீழ் இயங்க வேண்டும்.


கல்வி தொடர்பில் சட்டத்தை இயற்றும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு மட்டுமே இருக்கிறது. முன்னாள் மலாயா தலைமை நீதிபதி தீர்ப்பு அளித்து இருக்கிறார். மகிழ்ச்சியான செய்தி. ஆக அந்த வகையில் 1996-ஆம் ஆண்டு கல்விச் சட்டம் 550-இன் கீழ் தேசிய மாதிரி பள்ளிகள் இயங்குவதற்கு உரிமை வழங்கப் பட்டது.

தேசிய மாதிரி பள்ளிகள் என்றால் ஆங்கில, சீனம், தமிழ்ப் பள்ளிகள் ஆகும். இங்கே ’மாதிரி’ எனும் சொல் வருவதைக் கவனியுங்கள். சரி. இந்த ரசாக் அறிக்கையில் ஓர் இறுதி குறிப்பு உள்ளது. அதையும் நீங்கள் கவனிக்க வேண்டும்.

ரசாக் அறிக்கை 1956-இன் பரிந்துரையில் சீன, தமிழ் தாய்மொழிப் பள்ளிகள் படிப்படியாக அகற்றப்பட வேண்டும் என்பது தான் இறுதி குறிப்பு ஆகும். இதில் ஒளிவு மறைவு தேவை இல்லை. ரசாக் அறிக்கையை முழுமையாகப் படித்துப் பாருங்கள். உண்மை தெரியும்.

முன்னாள் பிரதமர் நஜிப் 2012 செப்டம்பர் 11-ஆம் தேதி மலேசிய கல்வி பெருந்திட்டம் (2013 - 2015) எனும் ஒரு முன்னறிக்கையை வெளியிட்டார். பலருக்கும் தெரிந்த செய்தி.

அந்தத் திட்டம் மூலமாக நாட்டின் கல்வித் தரத்தை உலகத் தரத்திற்கு உயர்த்துவது; கல்வியின் வழி தேசிய ஒற்றுமையை வளர்ப்பது; இந்த இரு நோக்கங்களைக் கொண்டதாக அறிவிக்கப் பட்டது.

அந்தக் கல்வி பெருந் திட்ட முன்னறிக்கையில் ஒரு முக்கிய அம்சம். சீன, தமிழ்ப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவது குறித்து கவலை தெரிவிக்கப்பட்டு உள்ளது. பெருந்திட்ட அறிக்கையிலேயே சொல்லப்பட்டு இருக்கிறது. அதனால் அதைப் பற்றி எழுதுவதில் அச்சம் வேண்டாமே.

பெருந்திட்ட முன்னறிக்கை என்ன கூறுகிறது?

(Executive Summary E-7) - Range of schooling options are creating ethnically homogeneous environments.

2000-ஆம் ஆண்டில் சீனப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் 92 விழுக்காடு. தமிழ்ப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் 47 விழுக்காடு.

2011-ஆம் ஆண்டில் சீனப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் 96 விழுக்காடு. தமிழ்ப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் 56 விழுக்காடு.

இதில் தமிழ்ப் பள்ளிகளில் சேர்ந்த இந்திய மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் உயர்ந்து இருப்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இது தேசிய ஒற்றுமைக்குள் ஏற்ற இறக்கங்களைக் கொண்டு வரலாம். இந்த அடிப்படையில் தான், தாய்மொழிக் கல்வியை எதிர்ப்பவர்கள் சொல்லி வரலாம்.

இன்னும் ஒரு விசயம். தமிழ்ப்பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை உயர்ந்து வருவது தேச ஒற்றுமையைப் பாதிக்கலாம் என்பது அவர்களுக்குக் கவலை அளிக்கும் விசயமாகவும் இருக்கலாம். சரி.

பி.டி.என். (Biro Tata Negara) எனும் ஒரு தனிப்பட்ட துறையைப் பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள். இந்தத் துறை இன ஒற்றுமைக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் பயிற்சிகளை நடத்துவதாகப் புகார்கள் வந்தன.

இந்த பி.டி.என். பயிற்சியின் விளைவு தான் இந்திய, சீன மாணவர்கள் அவர்களுடைய ஆசிரியர்களால் பல்வேறு வகைகளில் இழிவுபடுத்தப் படுவதற்கு வழி வகுப்பதாக அரசல் புரசலானக் கசிவுகள்.

பி.டி.என். பயிற்சியின் விளைவுகளைச் சிலாங்கூர் மாநில அரசாங்கம் புரிந்து கொண்டது. அதானால் பி.டி.என். பயிற்சிகளில் அந்த மாநில அரசு பணியாளர்களும் சரி; பள்ளி, கல்லூரி மாணவர்களும் சரி; கலந்து கொள்வதற்கு தடை விதித்தது. இந்த விசயம் பலருக்கும் தெரியாதது.

ஆக இந்த நாட்டில் வாழும் தமிழர்களே தமிழ்ப் பள்ளிகள் வேண்டாம் என்று சொன்னாலும் அது நடக்காத காரியம். நாடாளுமன்றத்தில் மசோதா கொண்டு வரப்பட்டு சட்டமாக்கப் பட வேண்டும். அந்தச் சட்டத்தை மேலவை ஏற்க வேண்டும். இன்னும் பெரிய பெரிய வேலைகள் எல்லாம் இருக்கின்றன. சரிபட்டு வராது.

தாய்மொழிப் பள்ளிகளை அகற்றுவது என்பது அல்வா கேசரி கிண்டும் அடுக்களைச் சமாசாரம் அல்ல. சட்டம், சடங்கு, சம்பிரதாயம், சனாதனம், சான்று என்று எவ்வளவோ இருக்கின்றன.

ஆக மலேசிய அரசியலமைப்பை அனைவரும் மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். அப்போது தான் அரசியல் பார்வையில் சத்தியம் வெல்லும். மலேசிய அரசியலமைப்பை அவமதிப்பது ஒரு தேச நிந்தனையாகும்.

இந்தக் கட்டத்தில் இந்த நாட்டின் வளப்பத்திற்காக மலேசிய இந்தியர்கள் செய்த அர்ப்பணிப்புகளை நினைவு கூறுவது ஒரு புறம் இருக்கட்டும். தாய்மொழிப் பள்ளிகளைப் பற்றி மலேசிய அரசியல் அமைப்பில் என்ன சொல்லப் படுகிறது என்பதையும் கவனிக்க வேண்டும்.

தாய்மொழி என்பது மனிதர்களின் பிறப்பு உரிமை. தமிழ்மொழி என்பது தமிழர்களின் தாய் உரிமை. மலேசியத் தமிழர்களுக்கு அதுவே சிறப்பு உரிமை. அந்த உரிமைக்குப் போராட வேண்டியது என்னுடைய கடமை. அனைவரின் கடமை.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
06.01.2022

சான்றுகள்:

1. A Short History of Tamil Schools in Malaya/ Malaysia - https://grfdt.com/PublicationDetails.aspx?Type=Articles&TabId=7051

2. Global Research Forum on Diaspora and Transnationalism (GRFDT) http://www.grfdt.com/PublicationDetails.aspx?Type=Articles&TabId=7051

3. List of All Primary Schools in Each States in Malaysia, as at 31 Dec 2017. http://myschoolchildren.com/list-of-all-primary-schools-in-malaysia/#.W7mWmCQzbIU

4. Malaya Labour Ordinance in 1912 - https://lib.iium.edu.my/mom/services/mom/document/getFile/U0IAjWSBy5KgLs0Z0pwyhERuNbbFdcBr20070109162203671

5. First Tamil class was held in 1816 at the Penang Free School, founded by Reverend R.S. Hutchings, Colonial Chaplain of the Anglican Church. Formal Tamil schools were opened in the Straits Settlements by Christian missionary bodies in the first half of the 19th century.