22 மார்ச் 2023

மலேசியத் தமிழ்ப்பள்ளிகளில் இருமொழித் திட்டம் - 1

 தமிழ் மலர் - 22.03.2023 - பாகம்: 1

மலேசியாவில் ஆட்சிகள் மாறின. அரசாங்க நிர்வாகங்கள் மாறின. அரசியல்வாதிகளும் மாறினார்கள். அமைச்சர்களும் மாறினார்கள். ஆனால் அந்த மாற்றங்களினால் அரசாங்கத்தின் கொள்கைகள் மாறுமா? அரசாங்கத்தின் செயல் திட்டங்கள் மாறுமா? அரசாங்கத்தின் நடைமுறைச் செயல் திறன்கள் மாறுமா? நடைமுறைப் பண்புகள் மாறுமா? பழைய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட கல்வித் திட்டக் கொள்கைகள் மாறுமா?

மாறும் ஆனால் மாறாது என்று ஒரே வார்த்தையில் சொல்லி முடித்துக் கொள்ளலாம். அதில் எதை வேண்டும் என்றாலும் எப்படி வேண்டும் என்றாலும் எடுத்துக் கொள்ளுங்கள். பிரச்சினையே இல்லை.

மொகைதீன், இஸ்மாயில் சப்ரி அரசாங்கங்கள் ஆட்சிக்கு வந்ததும் பழைய அரசாங்கத்தின் சில பல பழைய திட்டங்களை அப்படியே தூக்கிக் கொண்டு போய் ஊறுகாய் போட்டு விட்டார்கள், அனைவரும் அறிவோம். தெரிந்த விசயம்.

இதில் ஒரு டிரில்லியன் கடனில் நாடே தடுமாறிக் கொண்டு நிற்கிறது. இதில் பெரிய பெரிய மெகா திட்டங்கள் ரொம்ப முக்கியமா. தேவை தானா என்று சொல்லி எத்தனையோ திட்டங்களைத் தற்காலிகமாகவும் நிரந்தரமாகவும் நிறுத்தி வைத்து விட்டார்கள். மகிழ்ச்சி. பிரச்சினை இப்போது அது இல்லை. நம்முடைய தமிழ்ப் பள்ளிக்கூடங்களைப் பற்றியது தான் பிரச்சினை.

புதிய அரசாங்கத்தின் இப்போதைய புதிய அணுகுமுறையினால் நம்முடைய மலேசியத் தமிழ்ப்பள்ளிகளில் இருமொழித் திட்ட முன்னெடுப்பு தொடருமா. அல்லது கைவிடப்படுமா. அதை அலசிப் பார்ப்பதே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.

பொதுவாக ஒரு நாட்டில் ஆட்சி மாறும் போது புதிதாக வரும் அரசாங்கம் பழைய அரசாங்கத்தின் வெளியுறவு கொள்கையிலும் சரி; கல்விக் கொள்கையிலும் சரி; கைவைக்க மாட்டார்கள். அது எழுதப் படாத சாசனம். பல நாடுகளில் அப்படித்தான் நடக்கிறது. நடந்தும் வருகிறது.

நம் நாட்டைப் பொருத்த வரையில் கல்விக் கொள்கைகள் இன மொழி அடிப்படையில் தான் இயங்கி வருகின்றன. சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து அப்படித்தான் நகர்ந்து வருகின்றன.

புதிதாக எந்த ஓர் அரசாங்கம் வந்தாலும் சரி; வரையறுக்கப்பட்ட பழைய அரசாங்கக் கொள்கைகளில் சிற்சில மாற்றங்களை மட்டுமே செய்வார்கள். பெரிதாக எதையும் செய்ய மாட்டார்கள். செய்யவும் முடியாது.

பக்காத்தான் அரசாங்கம் ஆட்சிக்கு வந்தால் 100 நாட்களில் அதைச் செய்வோம் இதைச் செய்வோம் என்று ஒரு சாதனைப் பட்டியலையே தயாரித்துக் காட்டினார்கள். செய்ய முடிந்ததா. முடியாதுங்க. பழைய அரசாங்கம் வாங்கிய கடனுக்கு வட்டிக் கட்டவே விழி பிதுங்கிப் போய் நின்றார்கள்.

வீட்டுக்குள் வந்து நுழைந்து பார்த்த பிறகுதான் தெரிகிறது ஊழல் பெருச்சாளிகள் பேரன் பேத்தி எடுத்த கண்கொள்ளா காட்சிகள். அந்த எலிகளை ஒவ்வொன்றாகப் பிடித்துக் கூண்டுக்குள் அடைக்கவே அவர்களுக்கு நேரம் இல்லை. இதில் சாதனையாவது சோதனையாவது. 2018 பாக்காத்தான் அரசாங்கத்திற்கு தலைக்குடைச்சல் தான் மிஞ்சிப் போனது. நல்லவேளை. இருபது காசு பெனடோல் மாத்திரைகள் உதவி செய்தன. ஒரு செருகல்.

2018-இல் பதவி ஏற்ற அமைச்சர்கள் அவர்களின் அலுவலகங்களுக்குப் போய் கோப்புகளைத் தூசு தட்டிப் பார்த்தால் மில்லியன் கணக்கில் காசு சுரண்டப்பட்டு இருப்பது தெரிய வந்தது. ஓர் அமைச்சு இல்லை. பெரும்பாலான அமைச்சுகளில் பெருவாரியான பணம் காணாமல் போய் இருக்கின்றன.

எப்படி ஏது என்று அலசிப் பார்ப்பதற்குள் 100 நாட்கள் முடிந்து விட்டன. அப்புறம் எப்படிங்க அவர்களின் வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியும். இப்போதைய அன்வார் அரசாங்கம் என்ன செய்யப் போகிறது என்பதைப் பொறுத்து இருந்து பார்ப்போம்.


புதிதாக வரும் அரசாங்கம் பெரும்பாலும் வெளியுறவு கொள்கையிலும் சரி; கல்விக் கொள்கையிலும் சரி; மாற்றங்கள் செய்ய மாட்டார்கள். அதற்குப் பதிலாகச் சின்னச் சின்னத் திருத்தங்களைச் செய்வார்கள்.

மலேசியத் தமிழ்ப்பள்ளிகளில் இருமொழித் திட்டம் பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள். இருமொழித் திட்டம் என்றால் டி.எல்.பி. (DLP) (Dual Language Programme). மலேசிய மொழியில் Program Dwi Bahasa. தமிழில் இருமொழிப் பாடத் திட்டம்.

இரு மொழித் திட்டம் (DLP) என்பது 'பகாசா மலேசியாவை மேம்படுத்துதல் மற்றும் ஆங்கிலத்தை வலுப்படுத்துதல்' எனும் கொள்கைக்கான அரசாங்கத்தின் முன்முயற்சியின் கீழ் ஒரு திட்டமாகும்.

(The Dual Language Programme (DLP) is a programme under the government's initiative to 'Empower Bahasa Malaysia and Strengthen English' policy)

மலேசியாவில் இரு மொழித் திட்டம் 2016-ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில தொடக்க நிலைப் பள்ளிகளிலும் மற்றும் இடைநிலைப் பள்ளிகளிலும் தொடங்கப்பட்டது.

முக்கிய நோக்கம்: அறிவியல், கணிதம், தகவல் தொடர்பு தொழில்நுட்பம் (Information Technology and Communication), மற்றும் வடிவமைப்பு தொழில்நுட்பம் (Design and Technology) ஆகிய பாடங்களில் ஆங்கிலம் அல்லது மலாய் மொழியைப் பயன்படுத்துவதால் ஆங்கிலப் புலமையை அதிகரிக்கலாம்; அத்துடன் மாணவர்களின் எதிர்கால வேலை வாய்ப்புகளை மேம்படுத்தலாம். இதுதான் அந்த தலையாய நோக்கம்.

அடுத்து, கணிதமும் அறிவியலும் முதலாம் ஆண்டிலும் நான்காம் ஆண்டிலும் அறிமுகப்படுத்தப்படும்.

1950-ஆம் ஆண்டுகளில் மலேசியத் தந்தை துங்கு அவர்கள் பிரதமராக இருந்த காலக் கட்டத்தில் மலாயா பல்கலைக் கழகத்தில் டாக்டர் இராம சுப்பையா என்பவர் தமிழ்மொழிப் பேராசிரியராக இருந்தார். இவரும் அப்போதே 60 ஆண்டுகளுக்கு முன்பே இப்படி இருமொழிச் செயல் திட்டத்தைக் கொண்டு வந்தார்.

அவர் கொண்டு வந்த அந்த இருமொழித் திட்டம் அப்போதைக்கு நல்ல ஒரு திட்டமாகத் தெரிந்தது. இல்லை என்று சொல்லவில்லை. தூர நோக்குச் சிந்தனையில் தமிழ்ப் பள்ளிகளைக் காப்பாற்ற வேண்டும் என்பதே அப்போதைக்கு அவரின் தலையாய நோக்கமாக இருந்தது.

அப்போதைக்கு நல்ல ஒரு தூரநோக்குச் சிந்தனை. அப்போதைக்கு வேறு ஒரு கோணத்தில் அவர் அதைப் பார்த்து இருக்கிறார். தப்பாகச் சொல்லவில்லை. இருந்தாலும் டாக்டர் இராம சுப்பையாவின் அந்தத் திட்டம், 1950-ஆம் ஆண்டுகளில் அப்படியே அமலாக்கம் செய்யப்பட்டு இருந்தால் இன்றையச் சூழ்நிலையில் தமிழ்ப் பள்ளிகளின் அடையாளம் தேய்ந்து போய் இருக்கலாம். நம்புங்கள்.

மலைநாட்டு தமிழினப் பதற்றத்தின் தடுமாற்றங்களைப் பார்க்க நேர்ந்து இருக்கலாம். ஒரு மொழியின் உயிர்ப் போராட்டத்தில் ஊஞ்சலாடும் ஒரு சமூகத்தின் வேதனைகளையும் பார்க்க வேண்டி வந்து இருக்கலாம்.

டாக்டர் இராம சுப்பையா சொன்ன வழியில் போய் இருந்தால் மலேசியத் தமிழர்களின் அடையாளம் சன்னமாய்த் தேய்ந்து போய் இருக்கலாம். 50 ஆண்டுகால இடைவெளியில் கண்டிப்பாக அது நடந்து இருக்கலாம். அந்தத் தாக்கத்தினால் தமிழர்களின் சமூக அமைப்புகளும் அடையாளம் தேய்ந்து ஒரு தொய்வு நிலையை அடைந்து இருக்கலாம்.

50 ஆண்டுகள் என்பது வளரும் நாடுகளில் பெரும் சமூக மாற்றங்களை ஏற்படுத்தும் ஒரு கால வரையறை. ஆக நாம் கண்மூடித்தனமாக எடுக்கும் எந்த ஒரு முடிவும் நாளைக்குப் பின்னாளில் நமக்கு மட்டும் அல்ல; நம் எதிர்காலச் சந்ததியினருக்கும் பாதகங்களை உருவாக்கலாம். சரிங்களா. அவசரப் படாமல் முடிவு எடுக்க வேண்டும்.

ஆக இந்த மாதிரி ஒரு நொய்மையான விவகாரத்தில் காலை எடுத்து வைத்து விட்டால் அப்புறம் பின் வாங்கவே முடியாது. சுருங்கச் சொன்னால் நம்முடைய தமிழ்ப் பள்ளியின் உரிமைகளை நாம் நிரந்தரமாக இழக்க வேண்டிய நிலை ஏற்படலாம் என்றுதான் சொல்ல வருகிறேன்.

என்னுடைய பணிவான வேண்டுகோள். என் கருத்தைச் சொல்ல எனக்கு உரிமை உள்ளது. அதே போல என் மொழிக்கு ஏற்படப் போகும் ஒரு தொய்வு நிலையை எடுத்துச் சொல்லவும் உரிமை உள்ளது.

நினைவில் கொள்வோம். முதலாவதாக நம் தமிழ் பள்ளிகளின் உரிமைகளைக் காப்பாற்ற வேண்டும். தமிழ் பள்ளிகளின் உரிமைகளை முதலில் காப்பாற்றினால் தான் பின்னர் தமிழ் மொழியையும் காப்பாற்ற முடியும். தமிழ் பள்ளிகளின் உரிமைகளைக் காப்பாற்றினால் தான் தமிழ் மொழியைக் காப்பாற்ற முடியும்.

அடுத்து எதிர்காலத்தில் நம் சந்ததியினரின் மொழிப் பயன்பாட்டு உரிமைகளையும் காப்பாற்ற வேண்டி இருக்கிறது. தமிழ் பள்ளிகளின் உரிமைகளைக் காப்பாற்றினால் மட்டுமே தமிழ் மொழியின் உரிமைகளைக் காப்பாற்ற முடியும். இல்லை என்றால் தமிழ் மொழி இனி மெல்ல மரிக்கும். தயவு செய்து தமிழ் பள்ளிகளின் உரிமைகளை எந்தச் சூழ்நிலையிலும் அடகு வைக்க வேண்டாமே.

தமிழ்ப் பள்ளிகளில் ஆங்கில மொழி, தேசிய மொழி ஆகிய இரு மொழிகளும் எப்போதும் போல தனிப் பாடங்களாக இருக்கட்டும். மற்றப் பாடங்கள் அனைத்தும் தமிழ் மொழி போதனா மொழியில் இருக்கட்டும்.

இந்த இரு மொழித் திட்டத்தினால் எதிர்காலத்தில் மொழிப் பள்ளிகள் பாதிக்கப்படலாம். தமிழ்ப் பள்ளிகள் மட்டும் அல்ல. தமிழாசிரியர்களின் எண்ணிக்கையும் கணிசமாகக் குறையும். விளக்கம் தருகிறேன். அதற்கு முன் இன்னும் ஒரு முக்கியமான விசயத்தையும் நீங்கள் கவனிக்க வேண்டும்.

இருமொழிப் பாடத் திட்டத்தில் கணிதம், அறிவியல் எனும் இரு பாடங்களைப் பற்றி மட்டுமே எல்லோருமே பேசிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அதில் உள்ள ஒரு மறைமுகமான நகர்வைப் பற்றி பலரும் கண்டு கொள்வதே இல்லை.

இப்போது தமிழ்ப் பள்ளிகளில் தமிழ் மொழியில் நடத்தப்படும் பொருளியல், தொழிநுட்பப் பாடங்களை இரு மொழித் திட்டத்தில் பெரும்பாலோர் சேர்ப்பதே இல்லை.

ஆக இரு மொழித் திட்டம் அமல்படுத்தப் பட்டால்… மன்னிக்கவும். ஏற்கனவே சில தமிழ்ப்பள்ளிகளில் அமல்படுத்தி விட்டார்கள். இரு மொழித் திட்டம் அமல்படுத்தப் பட்டால் பொருளியல், தொழில் நுட்பம் ஆகிய இரு பாடங்களையும் ஆங்கிலத்தில் நடத்தலாம் அல்லது மலாய் மொழியில் நடத்தலாம். தமிழ் மொழியில் நடத்த வேண்டும் என்கிற அவசியம் இல்லை. இது பள்ளியின் தலைமையாசிரியரைப் பொருத்த விசயம்.

அடுத்த விசயம்: மலாய், ஆங்கிலப் பாடங்களை வேறு மொழிகளில் போதிக்க முடியாது. தெரிந்த விசயம். அந்தப் பாடங்களை அந்த அந்த மொழிகளில் தான் போதிக்க வேண்டும். சரிங்களா. அதாவது மலாய் பாடத்தை மலாய் மொழியிலும் ஆங்கிலப் பாடத்தை ஆங்கில மொழியிலும் தான் போதிப்பார்கள். போதிக்க வேண்டும்.

ஆக இரு மொழித் திட்டம் அமல்படுத்தப் பட்டால் இந்த ஆங்கில, மலாய்ப் பாடங்களையும் சேர்த்து மொத்தம் ஆறு பாடங்களைத் தமிழ் மொழி அல்லாத மொழிகளில் அதாவது மற்ற மொழிகளில் போதிப்பார்கள். இது தான் நடைமுறை உண்மை. நடந்து வரும் உண்மை.

அப்படி என்றால் கணிதம், அறிவியல், நன்னெறி, ஓவியம், தொழிநுட்பம்,  ஆங்கிலம் ஆகிய ஐந்து பாடங்களையும் ஆங்கில மொழியில் அல்லது மலாய் மொழியில் போதிக்க வேண்டி வரும்.

மலாய்ப் பாடம் மலாய் மொழியில் போதிக்கப்படும். ஆக அந்த வகையில் மொத்தம் ஆறு பாடங்கள் மற்ற மொழிகளில் போதிக்கப் படும். அந்த ஆறு பாடங்களும் தமிழ் மொழியில் போதிக்கப் படாது.

இப்போது இருக்கிற 10 பாடங்களில் 6 பாடங்கள் மற்ற மொழிகளில் போதிக்கப் பட்டால் எஞ்சிய 4 பாடங்கள் மட்டுமே தமிழ் மொழியில் போதிக்கப்படும்.

அப்படி என்றால் இன்னும் 10 ஆண்டுகளில் இந்த இரு மொழித் திட்டத்தினால் 10 தமிழாசிரியர்கள் பணியாற்றும் பள்ளிகளில் 4 பேர் தான் தமிழாசிரியர்களாக இருப்பார்கள். மற்ற 6 ஆசிரியர்கள் இதர சீன, மலாய் ஆசிரியர்களாக இருப்பார்கள்.

ஆக அந்த 6 ஆசிரியர்கள் சீன, மலாய் ஆசிரியர்களாக இருக்கும் பட்சத்தில் அந்தத் தமிழ்ப் பள்ளியின் தலைமையாசிரியர் தமிழ்மொழி தெரிந்தவராகத் தான் இருக்க வேண்டும் என்பதும் அவசியம் இல்லை. மற்ற இனத்தவர் அந்தப் பள்ளியின் தலைமையாசிரியராகப் பதவிக்கு வரலாம்.

2018-ஆம் ஆண்டு மலேசியாவில் 47 தமிழ்ப் பள்ளிகளில் இருமொழிப் பாடத் திட்டம் அமலாக்கத்திற்கு வந்தது. அந்தத் தமிழ்ப் பள்ளிகளில் 6 பாடங்களைத் தமிழ் மொழி அல்லாத மற்ற மொழியில் படித்துக் கொடுத்தார்கள். இந்த நகர்வு எதிர்காலத்தில் நிச்சயமாக மொழிப் பள்ளிகளின் அடையாளத்தை இழக்கச் செய்யலாம்.

இருமொழிப் பாடத் திட்டத்தைச் சிலர் வரிந்து கட்டிக் கொண்டு ஆதரிக்கிறார்கள். எதிர்கால மலேசியத் தமிழர்கள் தங்களின் அடையாளத்தை இழக்கலாம் என்பது தெரியாமலா இருக்கும். மொழி இருந்தால் என்ன போனால் என்ன. நானும் என் குடும்பமும் நல்லா இருந்தால் போதும் என்று நினைப்பது சரியன்று.

2021-ஆம் ஆண்டில் மலேசியாவில் 1,302 சீனப்பள்ளிகள் இருந்தன. 495,386 மாணவர்கள் பயின்றார்கள். ஆனால் எந்த ஒரு சீனப் பள்ளியும் அந்த இருமொழித் திட்டத்திற்கு ஆதரவு வழங்கவில்லை. ஏன்? நீங்களே ஒரு முடிவு செய்யுங்கள்.

ஒரு மொழியின் ஆற்றலை மேம்படுத்த வேண்டும் என்றால் அந்த மொழியைக் கற்பிக்கும் நேரத்தைக் கூட்டலாம் அல்லது சிறப்புத் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை நியமிக்கலாம். இந்த முறைமைகளைத் தவிர்த்துவிட்டு மற்ற பாடங்களை ஆங்கிலத்திற்கு மாற்றுவது என்பது தேசிய மொழிக் கொள்கைக்குக் குந்தகம் விளைவிக்கலாம்; இது மலாய்க் கல்விமான்களின் மாற்றுக் கருத்துகள்.

(தொடரும்)

25 டிசம்பர் 2022

மேரி சாந்தி தைரியம்

(தமிழ் மலர் - 24.12.2022)

மலேசிய மனித உரிமை போராட்டவாதி. மலேசியாவில் குடும்ப வன்முறைச் சட்டம் இயற்றப் படுவதற்கு மூல காரணமாக இருந்தவர். அனைத்துலகப் பெண்ணுரிமைப் போராளி. ஐக்கிய நாட்டுச் சபையின் மனித உரிமை தலைமை அதிகாரி. அழகிய அறிவார்ந்த பெண்மணி. மலேசியத் தமிழ்ப் பெண்ணியவாதி. மேரி சாந்தி தைரியம். கைகூப்புகிறோம்.

மலேசியாவின் மகளிர் உதவி அமைப்பு (Women’s Aid Organisation (WAO) தோன்றுவதற்கும் முன்னோடியாக இருந்தவர். ஐக்கிய நாடுகள் சபையின் பாலினத்திற்கான சம உரிமைக் குழுவில் இருந்தவர். ஐக்கிய நாடுகள் சபையின் பெண்களுக்கு எதிரான பாகுபாட்டை ஒழிக்கும் குழுவிலும் (Committee on the Elimination of All Forms of Discrimination against Women) பணியாற்றியவர்.

மேரி சாந்தி தைரியம் (Mary Shanthi Dairiam). ஓர் அற்புதமான மலேசியச் சமூகச் சேவகி. மலேசியாவில் பலருக்கும் இவரைத் தெரியாது. வெளிச்சத்திற்குக் கொண்டு வர வேண்டியது நம் கடமையாகும்.

இப்படி உலகப் பெண்களுக்காகப் போராடிய பெண்கள்; போராடும் பெண்களை எல்லாம் மேலாதிக்கப் பெரும் தலைவர்கள் கண்டு கொள்ள மாட்டார்கள். இனவாதத்தில் மனவாதம் கலந்தால் மனிதவாதம் மறைந்து போகலாம். அந்த வகையில் இந்தப் பெண்மணியும் மறக்கப்பட்டு இருக்கலாம். ஒரு செருகல்.

தயிர் ரசம், மிளகு ரசம், பருப்பு சாம்பார் காணொலிகள் செய்து புகழ் பெறும் சோடா புட்டிகளுக்குத் தான் இன்றைய காலத்தில் மவுசு அதிகம். விளம்பரங்களும் அதிகம். அப்படிப் பட்டவர்களுக்குத் தான் அதிகம் வெளிச்சமும் கிடைக்கிறது. அசலுக்கு மவுசு குறைவு.

மேரி சாந்தி தைரியம். குடும்ப வன்முறைகளுக்கு எதிராக 1980-ஆம் ஆண்டுகளில் மலேசிய நாடாளுமன்ற வளாகத்தில் தொடர்ந்து பல மாதங்களுக்குப் பரப்புரைகள்; கண்டனக் குரல்கள் எழுப்பியவர். குடும்ப வன்முறை மசோதாவைச் சட்டமாக்குவதற்கு (Domestic Violence Act) போராட்டம் செய்து வெற்றியும் கண்டவர்.

அவரின் தொடர் பரப்புரைகளினால் தான் 1994-ஆம் ஆண்டு குடும்ப வன்முறைச் சட்டம் (Domestic Violence Act 1994) மலேசிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப் பட்டது. 2012-ஆம் ஆண்டில் அந்தச் சட்டம் மறுதிருத்தம் செய்யப் பட்டது. பின்னர் 2017-ஆம் ஆண்டு (Domestic Violence (Amendment) Act 2017) என்று மறுபடியும் திருத்தம் செய்யப்பட்டது.

ஒரு குடும்பத்தில் உள்ள ஒருவரைச் சும்மா கையை நீட்டி ஓர் அடி அடித்தாலே போதும். கையில் விலங்குடன் அந்தச் சட்டம் ஓடி வந்து எட்டிப் பார்க்கும். மேரி சாந்தி கொண்டு வந்த சட்டம்.

இது பெண்களுக்கு மட்டும் உதவும் சட்டம் அல்ல. ஆண்களுக்கும் உதவுகிறது. ஆண்களே நன்றாகக் கேட்டுக் கொள்ளுங்கள். கோபத்தில் மனைவி ஒரு கரண்டியை எடுத்து புருசன்காரன் மீது ஒரு வீசு வீசி... அது படாத இடத்தில் பட்டு...  ஒரு சின்ன சிராய்ப்புக் காயம் பட்டு... ரெண்டு சொட்டு இரத்தம் வந்து... அது போதுங்க.

‘வாராயோ தோழி வாராயோ’ என்று குடும்ப வன்முறைச் சட்டம் கதவைத் தட்டும். அப்புறம் அந்த ராணி லலிதாங்கி கம்பி எண்ண வேண்டி வரலாம். ஒரு குடும்பத்தில் உள்ள ஒரு பெண்ணின் மீது அல்லது ஓர் ஆணின் மீது வார்த்தைகளால் வன்முறை நிகழ்ந்தாலும் இந்தச் சட்டம் பாயும். சரிங்களா. சந்தோஷம் தானே.

குடும்ப வன்முறை என்றால் என்ன. ஒரு குடும்ப உறுப்பினர் இன்னும் ஒரு குடும்ப உறுப்பினர் மீது பயன்படுத்தும் உடல் அல்லது உளவியல் வன்முறைக்குத்தான் குடும்ப வன்முறை என்று பெயர். இது கணவன், மனைவி மீது அல்லது மனைவி, கணவன் மீது செலுத்தும் வன்முறையைப் பொதுவாகச் சுட்டுகின்றது.

அது யாராக இருந்தாலும் சரி; தன்னுடைய துணையைத் துன்புறுத்தல் பல வடிவங்களில் வெளிப்படலாம். அடித்தல், பயமுறுத்தல், பாலியல் வற்புறுத்தல், உளவியல் முறையில் வற்புறுத்தல், திருமண முறிவு என்று பயமுறுத்தல், குடும்பத்தை விட்டு வெளியேறி விடுவேன் என்று பயமுறுத்துதல் என்று பல வழிகளில் அது வெளிப்படலாம்.

கணவன் மனைவி என்று இல்லை. குடும்ப அமைப்பில் உள்ள ஆண் பெண் எவராக இருந்தாலும் இந்தக் குடும்ப வன்முறைச் சட்டம் மூலமாக நீதி கேட்கலாம்.

’நான் தாலி கட்டியவன். நான் சொன்னால் நீ கேட்கணும்டி’ என்று வறுபுறுத்துவது எல்லாம் தப்பு. மனைவியின் சம்மதம் இல்லாமல் ஒரு கணவன் தன் மனைவியைத் தொட்டாலே அது ஒரு வகையான வன்முறைதான். அது சட்டப்படி குற்றம். அதற்காக இதை வைத்துக் கொண்டு கணவனை ரொம்பவும் மிரட்ட வேண்டாம் பெண்களே.

புருசன்காரன் தானே என்று பெண்கள் பெரும்பாலும் பெரிது படுத்தாமல் விட்டுக் கொடுத்துப் போய் விடுவார்கள். பெண்களுக்கே உள்ள இயல்பான குணம். கணவனுக்கு விட்டுக்கொடுத்துப் போகும் குணம். இருந்தாலும் வற்புறுத்தலின் பேரில் விட்டுக் கொடுப்பதும் சட்டப்படி குற்றமாகும். இந்த இடத்தில் வற்புறுத்தல் வந்து நிற்கிறது. வற்புறுத்தல் என்பது ஒரு வகையில் பயமுறுத்துவது போலாகும்.

’நான் சொல்லி நீ கேட்கவில்லை. உனக்கு இனிமேல் ஒரு காசு தர மாட்டேன் போடி’ என்று சொல்வது குற்றம் அல்ல. ஆனால் அதைச் சொல்லி வறுபுறுத்தி அவளை இணங்க வைப்பது குற்றமாகும். புரியும் என்று நினைக்கிறேன்.

ஆக இந்தச் சண்டைச் சச்சரவுகளைத் தவிர்க்கச் சமாதானமாகப் பேசி விட்டுப் போகலாமே. ’இகோ’ தன்மையைத் தவிர்ப்பதால் என்ன குறைந்து விடப் போகிறது. ஆண்களுக்கு ஒரு ஐடியா… ஒரு பெண்ணைப் புகழ்ந்தால் போதுங்க. அம்புட்டுத்தான்…

’உலகத்திலேயே நீ தாண்டி அழகி. உன்னைத் தவிர வேறு எவளும் இல்லடி கண்ணே மணியே’ என்று இரண்டு வார்த்தை ஆசையாகப் பேசினால் போதுங்க. கதை முடிஞ்சது. மறுபேச்சு இல்லை. காலடியில் வந்து விழுந்து விடுவாள். அப்புறம் எதற்கு சண்டை; சச்சரவு; பசார் மாலாம் மீட்டிங் எல்லாம். மனைவியைப் புகழ்வதற்கு காசா பணமா? அன்பே, அமுதே, அழகே என்று அள்ளிவிட்டுப் போய்க் கொண்டே இருங்கள்.

அல்வா இனிப்பான பொருள். அதை ஒரேயடியாக ’லபக்’ என்று முழுங்குவதைக் காட்டிலும் கொஞ்சம் கொஞ்சமாய்ச் சாப்பிட்டுப் பாருங்கள். சுவையே வேறு. சமயங்களில் என்னுடைய கட்டுரைகளிலும் இடை இடையே ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்துகிறேன். அல்வா மாதிரி என்று நினைத்துக் கொள்ளுங்கள்.

மனைவியைப் புகழ்ந்து பேசி காரியத்தைச் சாதிப்பதை விட்டு விட்டு, அதிகாரத்தைப் பயன்படுத்துவதில் ஆண்கள் பலருக்கும் உடன்பாடு இல்லை. அதே சமயத்தில் புருசன்காரன் அமைதியாக அன்பாக இருக்கிறானே என்று புருசன்காரனை ஏறி மிதிப்பதும் உண்டு. நடக்கிற காரியம் தான். சான்றுகள் உள்ளன. சீரியல்கள் ஒன்றே போதும்.

எல்லாக் குடும்பங்களிலும் அல்ல. சில குடும்பங்களில் நடப்பது உண்டு. அப்படிப்பட்ட மனைவியை இரண்டு நாள்களுக்குக் கண்டு கொள்ள வேண்டாம். அவள் சமைத்ததைச் சாப்பிட வேண்டாம். மூன்றாவது நாள் அவளே இறங்கி வந்து விடுவாள்.

ஆக இப்படிப்பட்ட ஒரு குடும்ப வன்முறைச் சட்டம் கொண்டு வரப் படுவதற்கு அல்லும் பகலும் உழைத்த மேரி சாந்தி தைரியம் அம்மாவுக்குத் தாராளமாக ஒரு கைதட்டல் கொடுக்கலாமே. அதில் ஓரவஞ்சனை வேண்டாமே.

மேரி சாந்தி தைரியம், 1939-ஆம் ஆண்டு செப்டம்பர் 17-ஆம் தேதி பிறந்தவர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் படித்தவர் (முன்பு University of Madras). 1991-ஆம் ஆண்டு இங்கிலாந்து சுசேக்ஸ் பல்கலைக்கழகத்தில் (University of Sussex) மாஸ்டர்ஸ் பட்டம் செய்தவர். ஆங்கில மொழி ஆசிரியராகப் பணிபுரிந்தவர். இன்றும் அதே இளமைத் துடிப்புடன் மனித உரிமைப் போராட்டவாதியாகப் பயணித்துக் கொண்டு வருகிறார்.

ஐக்கிய நாட்டுச் சபையின் அறிவுரைஞராகவும் சேவை செய்து இருக்கிறார். அவருடைய மனித உரிமைச் சேவைகள் தொடர்ந்து பயணிக்க வாழ்த்துவோம்.

ஐ. நா. சபையின் பாலினத்திற்கான சம உரிமைக் குழு (UN's Gender Equality Task Force); பெண்களுக்கு எதிரான பாகுபாட்டை ஒழிக்கும் குழு போன்றவற்றில் பணியாற்றியவர்.

2010-ஆம் ஆண்டு இஸ்ரேல் நாட்டு காசா போரைப் பற்றிய ஆய்வறிக்கையைத் தயாரிக்க ஐக்கிய நாட்டுச் சபை மூன்று பேரை அங்கு அனுப்பி வைத்தது. அந்த மூவரில் மேரி சாந்தி தைரியம் அவர்களும் ஒருவர். இப்படி ஒரு பெரிய அமைதித் தூதுவராகப் பணியாற்றியவர்.

பெண்களுக்கு எதிரான அனைத்து விதமான பாகுபாடுகளையும் நீக்க ஒரு காப்பகம் தோற்றுவிக்கப்பட்டது. அது அனைத்துலகப் பெண்ணுரிமை காப்பகம். அந்தக் காப்பகத்தின் ஆசியப் பிரிவின் நிறுவனர்; தற்போதைய இயக்குனரும் இவரே. (International Women's Rights Action Watch - Asia Pacific)

இவர் பல பசிபிக் நாடுகளுக்கு பெண்ணுரிமை அறிவுரைஞராகவும் திகழ்கிறார். இவர் எழுதிய ’ஒரு பெண்ணின் சமத்துவ உரிமை: சிடாவின் வாக்குறுதி’ (A Woman’s Right To Equality: The Promise Of Cedaw) எனும் நூல் தாய்லாந்து பாங்காக் நகரில் பெண்ணுரிமை மாநாட்டில் (Beijing +20 conference) வெளியிடப் பட்டது.

இப்படிப்பட பெண்களை உலகத்திற்கு அறிமுகம் செய்ய வேண்டும். பெண்களுக்குப் பெருமை சேர்க்க வேண்டும். பெண்ணியத்திற்கு மரியாதை செய்ய வேண்டும். ரசம் அதிரசம் காணொலிகள் தயாரிக்கும் போலி விளம்பரப் பிரியர்களுக்கு அல்ல; சிறுபான்மை இனத்தைச் சிறுமைப் படுத்தும் சின்னக் கொசுறுகளுக்கு அல்ல.

உண்மையாக இந்த நாட்டை உருமாற்றியவர்களின் உயரத்தை ஏற்க முடியாமல் காழ்ப்புணர்ச்சியோடு பெண்டத்தாங், பெனும்பாங் என்று பிதற்றி, உளறிக் கொட்டும் அரை வேக்காடுகளுக்கு அல்ல. அதிரசம் பாரம்பரியச் சொத்து; ரசம் எங்க பாட்டி செஞ்ச பருப்பு சாம்பார் என்று சொல்லும் சோடா புட்டிகளைக் கண்டும் காணாமல் போய்விட வேண்டும்.

கங்கையில் குப்பையை எரிந்தால் கங்கையின் மவுசு குறைந்து விடாது. குப்பைக்குத்தான் மவுசு. அப்படித்தான் நாமும் இங்கே...

மேரி சாந்தி தைரியம் போன்ற இந்தியப் பெண்கள் நிறைய பேர் இங்கேயும் எங்கேயும் ஜொலிக்கின்றார்கள். இருந்தாலும் மேலாண்மையின் அதிகார ஆதிக்க அழுத்தங்களின் காரணமாகப் பலர் இன்னமும் இலை மறை காய்களாகவே மறைந்து போய் நிற்கின்றார்கள். இதையே காலத்தின் கொடுமை என்று பலரும் சொல்கின்றார்கள்.

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்
24.12.2022


சான்றுகள்:

1. Mary Shanthi Dairiam (Malaysia) (pdf). Office of the United Nations High Commissioner for Human Rights.

2. Mary Shanthi Dairiam - https://en.wikipedia.org/wiki/Mary_Shanthi_Dairiam

3. Malaysian human rights and women's rights advocate - http://www.dtp.unsw.edu.au/mdm-mary-shanthi-dairiam

4. A Woman’s Right To Equality: The Promise Of Cedaw - https://www.star2.com/people/2015/01/01/fighting-for-equality/

5. International Expert Leads High Level Anti-Discrimination Forum for Royal Government of Cambodia". UNIFEM.


19 டிசம்பர் 2022

மஞ்சோங் கணேசன் சண்முகம்

தமிழ் மலர் - 19.12.2022

உன்னதமான இலட்சியங்களில் உயர்வான இலக்கணங்கள்; உயர்வான கொள்கைகளில் உண்மையான நோக்கங்கள்; இனிதான நகர்வுகளில் புனிதமான பண்புகள்; சிங்காரச் சித்தியவானில் சிறப்புமிகுச் சேவைகள்; மஞ்சோங் மண்ணில் மகிமை பேசும் ஒரு மைந்தர்; வாழ்த்துகிறோம் சண்முகம் கணேசன்.


மலேசியத் தமிழர் இனத்திற்கு சேவை செய்யும் தமிழர்களை அடையாளம் காண வேண்டியது நம் கடமை. சமயம் பேசும் இமயத்தில் வாழ்ந்தாலும் சரி; சரித்திரம் பேசும் கங்கா நகரத்தில் வாழ்ந்தாலும் சரி; சாதனைகள் பார்க்கும் கடாரத்தில் வாழ்ந்தாலும் சரி; தமிழர்ச் சேவையாளர்களை உலகளாவிய நிலையில் போற்ற வேண்டியது தமிழர்களின் கடமை அல்ல.

காலத்தின் கட்டாயம். வாழ்கின்ற தமிழர்ச் சேவையாளர்களைத் தட்டிக் கொடுத்து ஊக்குவிப்போம். உற்சாகப் படுத்துவோம். ஆதரவளிப்போம். அரவணைப்போம்.

நம் இனத்தின் எதிர்காலத் தலைமுறைகளுக்காக; நம் பிள்ளைகளுக்காக; நம் பேரப் பிள்ளைகளுக்காக; இயன்ற வரையில் நல்லதைச் செய்து விட்டுச் செல்வோம். மலேசியத் தமிழர்களுக்கு நம்மால் இயன்ற நல்சேவைகளைச் செய்த பெருமையில் மனச் சாந்தி கொள்வோம்.


மஞ்சோங் கணேசன் சண்முகம்

நம் நாட்டில் தமிழர்கள் சிலர் நல்ல நல்ல சேவைகளைச் செய்து வருகின்றார்கள். சமூக நலம் கருதும் நல்ல சேவையாளர்களாகவும் பயணிக்கின்றார்கள்.

அந்த வகையில் தமிழ்ச் சேவையாளர் ஒருவரை அறிமுகம் செய்கிறேன். அவர்தான் மஞ்சோங் கணேசன் சண்முகம். இன்றும் அன்றும் இனிகூறும் சமூகப் பார்வைகளில் இனிதாய்ப் பயணிக்கும் தமிழ்ச் சேவகர். சுருங்கக் கூறின்...

தமிழோடு வாழ்கின்ற தனித்துவமான தமிழர். மூச்சு பேச்சு எல்லாம் தமிழ்; தமிழர்; தமிழர் இனம்; தமிழ்ச் சமூகம்; தமிழ்ப்பள்ளிகள்; தமிழர் அமைப்புகள்.


மலேசியாவில் தமிழர்கள் சார்ந்த சமூக நிகழ்வுகளின் தலையாய ஆர்வலர்களில் ஒருவராய்ப் பயணிக்கின்றார் சண்முகம் கணேசன். நல்ல ஓர் இனிமையான தமிழர். பலருக்கும் அறிமுகம் இல்லாத மனிதர்.

பேரா மாநிலத்தில் மஞ்சோங் மாவட்டம் என்றாலே கடலும் ஆறுகளும்; மலைத் தொடர்களும்; பச்சைக் காடுகளும்; பச்சைப் பசும் புல்வெளிக் கோடுகளும் படர்ந்து ஊர்ந்து பாயும் சுற்றுலாக் களஞ்சியம் என்று சொல்வார்கள். உண்மைதான். அப்பேர்ப்பட்ட பச்சை மண் மஞ்சோங். அந்த மஞ்சோங்கில் வாழும் தமிழர்கள் அனைவரும் மணி மணியான மைந்தர்கள். மகத்தான சாதனைகள் படைக்கும் இனிதான அழகிய தமிழ் மக்கள்.

தமிழ்ச் சேவையாளர் கணேசன் சண்முகம். இவரைப் பலருக்கும் தெரிய வாய்ப்பு இல்லை. தெரிந்து கொள்வோம். மஞ்சோங் சித்தியவான் தமிழர்களுக்கு கிடைத்த நல்ல ஒரு சேவையாளர். பெரிதுபடுத்திப் பேசவில்லை. தெரிந்து கொள்வதில் தவறும் இல்லை. சரி.


இன்றைய காலக் கட்டத்தில் உலகம் முழுவதும் வாழும் தமிழர்களில் பெரும்பாலோருக்கு பல்வேறான வாழ்வியல் நெருக்கடிகள்; தனிமனிதச் சோதனைகள். தமிழர்களின் வாழ்வுரிமை; தமிழர்களின் மொழி; தமிழர்களின் கலைப் பண்பாடு; இவற்றுக்குப் பற்பல நெருக்குத்தல்கள். ரௌத்திரம் பழக வேண்டிய காலச் சூழல்.

இருப்பினும் அந்த இடர்பாடுகளுக்கு எதிராகக் குரல் கொடுத்து வரும் மலேசியத் தமிழர்கள் பலர் உள்ளனர். அவர்களை நாம் என்றும் மறக்கவில்லை. பெயர்கள் வேண்டாம். நீண்டு போகும்.

அவர்களில் ஒருவர்தான் மஞ்சோங் கணேசன் சண்முகம். இவரைச் சித்தியவான் கணேசன் என்றும் அழைக்கலாம். அல்லது கேஷ்வுட் கணேசன் என்றும் அழைக்கலாம். அழகிற்கு அழகு சேர்த்தால் அழகிற்குத்தான் அழகு!


தமிழுக்காகப் போராடுவோம்; தமிழர் நலன் கருதும் நற்சேவைகளை முன்னெடுப்போம்; இவை தமிழர் உணர்வுகள் மேலோங்கும் ஒரு தமிழரின் உளப் பாங்கு. இதுவே கணேசன் சண்முகத்தின் சமூகப் பாங்கு.

மஞ்சோங் பகுதிகளில் பற்பல சமூக அமைப்புகளுக்கு உதவிகள் செய்வதில் கணேசன் சண்முகம் சார்ந்துள்ள சமூகச் சேவைத் தளங்கள் முன்மாதிரியாய்த் தனித்து நிற்கின்றன; தார்மீகம் பேசுகின்றன.

கணேசன் சண்முகம் 15 வயதிலேயே கேஸ்வுட் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கத்தின் செயலாளராகப் பரிணமித்தவர். சின்ன வயதில் பெரிய பொறுப்பு. இப்படித்தான் இவரின் கல்வி யாத்திரைகள் அவதானிக்கின்றன.


மஞ்சோங் மாவட்டத்தில் கம்போங் தெலுக், கம்போங் தெலாகா நெனாஸ் என இரு மலாய்க்கார மீன் பிடி கிராமங்கள் உள்ளன. அதே போல இந்தியர் சீனர்கள் வாழும் இடங்களாகக் கம்போங் சுங்கை பாசிர் மற்றும் கம்போங் சங்காட் ரெசாம் கிராமங்கள்.

நான்கு கிராமங்கள் அமைந்த அந்தப் பகுதியில் தான் கேஸ்வுட் தோட்டம் இருக்கிறது. மலாயா வரலாற்றில் தடம் பதிக்கும் மற்றும் ஒரு தமிழர்க் கூடம். அங்கே மலாய்க்காரர்கள், சீனர்கள், இந்தியர்கள் என மூவினத்தவரும் ஒன்றாய் வாழ்ந்தார்கள். இங்கு தான் கணேசனின் வாழ்க்கைப் பயணமும் தொடங்கியது. அவரின் பால்ய சிருங்காரங்களும் அங்கேதான் ஐக்கியமாகிப் போயின. அங்குதான் அவர் பிறந்தார்.


அப்பா சண்முகம் நாராயணசாமி; தோட்டத்தில் பால் மரம் சீவும் தொழிலாளி. அம்மா ரெங்கநாயகி அண்ணாமலை; தோட்டத்தில் அவருக்கும் சாதாரண வேலை. உடன் பிறந்தோர் ஓர் அண்ணன்; இரு அக்காள்கள்.

தோட்டத்து வாழ்க்கையில் கிராம மக்களோடு வாழ்ந்தது ஒரு வசந்த காலம். அவர்களுடன் பழகியது ஓர் இளவேனில் காலம். அவை அன்றைய ஏகாந்த வேளையில் மௌனங்கள் தேடிய ஆனந்த ராகங்களின் ஆலாபனைகள்.

சிறு வயது முதலே, அவரின் தாத்தா மற்றவர்களுக்கு உதவிகள் செய்ததை, தான தர்மங்கள் செய்ததைப் பார்த்து பார்த்து வளர்ந்தவர் கணேசன். அதேபோல் அப்பாவின் கொடுக்கும் இயல்பும், உதவும் மனப்பான்மையும் கணேசனைப் பெரிதும் ஈர்த்துள்ளன.

அவரின் அண்ணன் முனியாண்டி சண்முகம் (முன்னாள் தமிழ்ப்பள்ளி தலைமை ஆசிரியர்) அவர்களின் நல்பண்புக் கூறுகளையும்; பொது இயக்க ஈடுபாடுகளையும் ஆழமாய்க் கவனித்து வளர்ந்துள்ளார் கணேசன் சண்முகம்.


அண்ணனின் நல்ல பல குணங்களை அப்போதே தனக்குள் விதைத்துக் கொண்டார். அந்தப் பண்பு நலன்கள் தான் இன்றுவரை கணேசனைத் தொடர்கின்றன. மற்றவர்களுக்கு உதவுவதற்கு முன்னோடியாகவும் திகழ்கின்றன.

கணேசனின் தொடக்கக் கல்வி கேஸ்வுட் தோட்ட தமிழ்ப்பள்ளியில் தொடங்கியது. பிறகு ஆயர் தாவார் அம்புரோஸ் இடைநிலைப்பள்ளி; சித்தியவான் அமாட் போஸ்தாமாம் உயர்நிலைப் பள்ளியில் ஆறாம் படிவம்; பினாங்கு மலேசிய தேசியப் பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பு; அதன் பிறகு சிரம்பான் இராஜா மெலாவார் ஆசிரியர் பயிற்சி கழகத்தில் ஆசிரியர்ப் பயிற்சி.

முதன்முதலாக பெருவாஸ் தமிழ்ப்பள்ளியில் ஆசிரியர்த் தொழிலைத் தொடங்கினார். அடுத்து சித்தியவான் மகா கணேச வித்தியாசாலை; அடுத்து லுமுட், முக்கிம் புண்டுட் தமிழ்ப் பள்ளி; தற்பொழுது சுங்கை வாங்கி தோட்டத் தமிழ்ப்பள்ளியில் புறப்பாடப் பிரிவு துணைத் தலைமை ஆசிரியராய்ப் பணிபுரிகிறார்.


பிறந்தோம் வளர்ந்தோம் வாழ்ந்தோம் என்பது முக்கியம் அல்ல. வாழ்கின்ற காலக் கட்டத்தில் என்ன செய்தோம் என்பது தான் முக்கியம். அந்த வகையில், கடந்த காலங்களில் சில பல சமூகச் செயல்பாடுகளில் ஈடுபட்ட பெருமை இவரையும் இவரின் நண்பரகளையும் சாரும். தமிழர் சார்ந்த இலக்குகளில்; தமிழர் சார்ந்த முன்னெடுப்புகளில், இவரும் இவரின் நண்பர்களும் முன் நின்று உதவிகள் செய்து வருகின்றனர்.

மணிமணியான உதவியாளர்கள். முத்து முத்தான முதன்மைச் சேவையாளர்கள். அனைவரும் சேவைப் பயணங்களின் மறுபக்கங்கள். கணேசன் சண்முகத்தின் செயல்பாட்டு விளிம்பு விழுமியங்களைப் மஞ்சோங்கில் காணலாம். சித்தியவான், ஆயர் தாவார், புருவாஸ், லூமுட் வட்டாரங்களில் காணலாம். பங்கோர் தீவில் காணலாம். ஏன் பேராக் வரையிலும் நீடித்துப் போகிறது. இப்போதைய ஆசிரியர்ப் பணிக் காலத்திலும் இவரின் பொது வாழ்க்கைப் பணிகள் தொடர்ந்து பனிக்கின்றன.

* 1992-ஆம் ஆண்டில் ஆயார் தாவார் துன் சம்பந்தன் கிராம மணி மன்றச் செயலாளராகப் பொதுச் சேவைகள்;


* அன்றைய நாடாளுமன்ற உறுப்பினர் டான் ஸ்ரீ குமரனை அழைத்து, வட்டார போட்டி விளையாட்டுப் போட்டிகளை நடத்திய சுவடுகள்;

* ஆயார் தாவார் துன் சம்பந்தன் கிராமத்தில் குடியிருப்போர் சங்கம் அமைத்து  செயலாளராகப் பணியாற்றிய காலத்தில், புறநகர் மேம்பாட்டு அமைச்சு அதிகாரிகளைப் புத்ராஜெயாவில் நேரிடையாகச் சந்தித்துப் பேசி, மூன்று ஆண்டுகளில் கால்வாய், தார் சாலை அமைப்பதற்காக ஏறக்குறைய 8 லட்சம் வெள்ளி பெற்று தந்த நினைவுகள்;

* 2006-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மூன்று இளைஞர்களை நேரிடையாக கோலாலம்பூர் புக்கிட் அமானுக்கு அழைத்துச் சென்று காவல் துறையில் வேலை வாய்ப்புகளைப் பெற்றுத் தந்த நேரங்கள்;

* முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக் அவர்கள் பிரதமராக இருந்த சமயத்தில் மெட்ரிகுலேசனில் சிறப்பு அடைவுநிலைப் பெற்று; மருத்துவத் துறை கிடைக்காத நம் இன மாணவி ஒருவருக்காக, நேரடியாகப் பிரதமரைச் சந்தித்து; மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயில இடம் பெற்றுத் தந்த தடங்கள்;

* அடையாள அட்டை பிரச்சனைகள்; நம் இன இளைஞர்களுக்கு ஆசிரியர்ப் பயிற்சி கல்லூரிகளில் இடம் பெற்றுத் தருதல்; இயலாதவர்களுக்கு சமூக இலாகா, சொக்சோ போன்ற உதவிகளைப் பெற்றுத் தருதல்;


* செமாராக் இயக்கத்தை மஞ்சோங் மாவட்ட அளவில் தோற்றுவித்து; எண்ணற்ற தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு பி.எஸ்.என். சேமிப்பு கணக்குத் திறந்து கொடுத்து உதவியது;

* பல தொடக்கப் பள்ளி மாணவர்கள்; மற்றும் இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்கு தன்முனைப்பு பட்டறைகள் நடத்தியது; இவை மஞ்சோங் கணேசன் சண்முகத்தின் சேவைப் பட்டியலில் சேர்கின்றது.
காலத்தால் செய்த நன்றி சிறிது எனினும் ஞாலத்தின் மானப் பெரிது என்பது ஒரு முதுமொழி. காலம் அறிந்து; சமூகத்தின் நிலை அறிந்து; சேவை செய்பவர்களைத் தெய்வத்திற்குச் சமமாக ஒப்பிடுவது வழக்கம்.

தற்பொழுது:- 1. சித்தியவான் ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலய செயலாளர்; 2. மஞ்சோங் மாவட்டப் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை இயக்கச்  செயலவை உறுப்பினர்; 3. மலேசிய என் குடும்பம் (My Family) இயக்கச் செயலவை உறுப்பினர்; 4. டிண்டிங்ஸ் இந்தியர் சங்கச் செயலவை உறுப்பினர்; 5. கம்போங் சித்தியவான் ருக்குன் தெத்தாங்கா செயலவை உறுப்பினர்.

அத்துடன், அப்துல் கலாம் செயற்குழுவினர் ஏற்பாட்டில், கடந்த 5 ஆண்டுகளாக மஞ்சோங் மாவட்டத்தின் 15 தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்குக் கையடக்க தமிழ் மொழி, மலாய் மொழி, ஆங்கில மொழி வாசிப்பு நூல்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பட்டியல் சரளமாய் நீள்கிறது.

இவரும் இவரின் நண்பர்களும்; மஞ்சோங் மாவட்ட மாணவர்களுக்கும், உடல் ஊனமுற்றவர்கள் சிலர் பலருக்கும், தங்களின் கழகங்களின் வழியாக உதவிப் பொருட்களை வழங்கி பலரின் மனங்களில் நீங்காத இடங்களைப் பெற்று உள்ளார்கள். நினைவு கூர்வோம்.

கணேசன் சண்முகம் அவர்களின் சேவை மனப்பான்மை தொய்வின்றித் தொடர வேண்டும். தமிழ் உலகில் இவர் உயர்ந்த இடத்தை எட்ட வேண்டும். இவரின் அரிய சேவைகள் வெளி உலகிற்கு மென்மேலும் தெரிய வேண்டும்.

உள்ளார்ந்த நல்ல எண்ணங்கள். ஏழை எளியோர்க்கு வழிகாட்டும் நல்பணிகள், பிறர் வாழ வகை செய்யும் பெரும் முயற்சிகள். அவற்றில் சேவைக் கலசமாய்ப் பயணிக்கின்றார் கணேசன் சண்முகம். இவரைப் போன்ற சேவையாளர்களின் செயல்பாடுகள் நல்ல புண்ணியமான சேவைகள். இவரைப் போன்ற மாந்தர்கள் பலரால் தான் மழையும் பெய்கின்றது. பூமியும் செழிக்கின்றது. செய்த தர்மம் தலைகாக்கும். தக்க சமயத்தில் உயிர் காக்கும். இது நான்மறை தீர்ப்பு. வாழ்த்துகள்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
19.12.2022