10 நவம்பர் 2010

கணினியும் நீங்களும் - பகுதி 74

(அன்புள்ள வாசகர்களே, அண்மையில் எனக்கு மாரடைப்பு ஏற்பட்டது. ஈப்போ மருத்துவமனையில் CCU பிரிவில்  ஒரு வாரம் அனுமதிக்கப் பட்டிருந்தேன். அதனால் சரிவர மேல் பதிவுகள் செய்ய முடியவில்லை. இப்போது உடல் நலம் தேறி வருகிறது.  மறுபடியும் பழைய நிலைக்கு வர சில நாட்கள் பிடிக்கலாம். பொறுத்துக் கொள்ளுங்கள்.)
ksmuthukrishnan@gmail.com

எஸ்.பி.பாலக்கிருஷ்ணன்  oum9100@yahoo.com.sg
கே: வலைத் திரட்டி என்றால் என்ன?
ப: இணையத்தில் இலட்சக் கணக்கான வலைப் பதிவுகள் உள்ளன. ஒவ்வொரு மொழியிலும் பல ஆயிரக் கணக்கான வலைப் பதிவுகள் உள்ளன. இந்த வலைப் பதிவுகளை எல்லாம் ஓர் இடத்தில் ஒன்று திரட்டி தொகுத்துத் தரும் இணையத் தளத்திற்குப் பெயர் தான் வலைத் திரட்டி.

தமிழில் பல திரட்டிகள் உள்ளன. தமிழ் மணம், தமிழிஷ், உலவு, தமிழ் 10, திரட்டி, இண்டிலி, தமிழ்ப் பூங்கா போன்றவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

சாம் ஜோசுவா sam.jo511@gmail.com
கே: பேராக் மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கம் எழுத்தாளர்களுக்காகக் கணினி பயிலரங்கம் நடத்தவிருப்பதாகக் கேள்வி பட்டோம். எத்தனை எழுத்தாளர்கள் கலந்து கொள்கிறார்கள்? கலந்து கொள்ள என்ன தகுதி தேவை?

ப:
மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள் கணினிப் பயன் பாட்டில் பின் தங்கி விடக் கூடாது. சிறந்து விளங்க வேண்டும் எனும் ஒரு தூர நோக்குச் சிந்தனை. 25.09.2010 - 26.09.2010 ஆகிய இரு தினங்களில் லூமுட் - தெலுக் பாத்தேக் கடல் கரை மையத்தில் பேராக் மாநிலத் தமிழ் எழுத்தாளர்களுக்குக் கணினிப் பயிலரங்கம் நடைபெறுகிறது.

மாண்புமிகு டத்தோ வீரசிங்கம் அதிகாரப் பூர்வமாகத் திறந்து வைக்கிறார்.

பேராக் மாநிலத்தைச் சேர்ந்த 60 தமிழ் எழுத்தாளர்களும் 40 உயர்நிலைப் பள்ளி மாணவர்களும் இந்தப் பயிலரங்கில் கலந்து கொள்கிறார்கள். கணினியில் தமிழை உள்ளீடு செய்வது; தமிழ் நிரலிகளைக் கணினிக்குள் நிறுவுவது; தமிழில் மின்னஞ்சல் அனுப்புவது; தமிழில் வலைப் பூக்கள் தயாரிப்பது போன்ற விவரங்கள் தமிழ் எழுத்தாளர்களுக்கு அறிமுகம் செய்யப் படுகின்றன.

மலேசியத் தமிழ் எழுத்தாளர்களின் வரலாற்றில் இது ஒரு முன்னோடித் திட்டம். கணினிச் சகாப்தத்தில் தமிழ் எழுத்தாளர்கள் முத்திரை பதிக்கும் ஒரு காலக் கட்டம்.

இந்த நிகழ்ச்சியில் பேராக் மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கம் தனக்கு என்று ஓர் இணையத் தளத்தையும் உருவாக்கிச் சாதனை படைக்கிறது.

இந்தப் பயிலரங்கத்திற்கு உயிரோட்டம் வழங்கி வரும் மூத்த எழுத்தாளர்கள் இராம.பெருமாள், சித.நாராயணன், திருமதி.கமலாட்சி ஆறுமுகம், ஜி.பி.செல்வம், மா.செ.மாயதேவன் ஆகியோருக்கு நம்முடைய பாராட்டுகள். வாழ்த்து கள்.
http://peraktamilwriters.blogspot.com

நவீனச் செல்வம், தாப்பா  (குறும் செய்தி 05.09.2010)
கே: இணையத்திலிருந்து காப்பி அடித்து கேள்விகளுக்குப் பதில் கொடுத்து நல்ல பேர் வாங்குவது  பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
ப:
சாயம் அடிக்கப் பயன் படுத்திய ஏணியை எட்டி உதைத்துச் சந்தோஷப் படுபவர்களைப் பற்றி நினைக்க நேரம் இல்லை.

கல்லூரி மாணவி, ஜொகூர் பாரு
கே: என்னுடைய கணினியில் நிறைய Virus எனும் அழிவிகள் நுழைந்து விட்டதாக நினைக்கிறேன். கணினி மெதுவாக வேலை செய்கிறது. கணினியை Format சுத்திகரிப்பு செய்ய வேண்டுமா?

ப: கணினி மெதுவாக வேலை செய்தால் வைரஸ்கள் கணினிக்குள் நுழைந்து விட்டன என்று சொல்வதிலும் நியாயம் இருக்கிறது. ஆனால், வைரஸ்களின் தாக்குதலினால் தான் ஒரு கணினி மெதுவாக வேலை செய்கிறது என்கிற ஒரு பொதுவான முடிவிற்கும் வந்துவிடக் கூடாது. மற்ற காரணங்களும் இருக்கின்றன. 

அதற்காகக் கணினியைச் சுத்திகரிப்பு செய்துதான் ஆக வேண்டும் எனும் அவசியம் இல்லை. Hard Disk என்பது கணினியின் உயிர்ப் பொருள்களில் ஒன்று. அந்த வன் தட்டை அடிக்கடி சுத்திகரிப்புச் செய்யக் கூடாது.

சுத்திகரிப்பு என்றால் Format. வன் தட்டின்  ஆயுள் காலத்தில் ஒரு பத்து தடவை வரை சுத்திகரிப்பு செய்யலாம். அதற்கு மேல் போகக்கூடாது.

அப்புறம் அதன் செயல் திறன் குறையும். இல்லாத பிரச்னைகளைக் கொடுக்கும். அவசியம் இல்லாமல் சுத்திகரிப்பு செய்யக்கூடாது. அப்படியே செய்தாலும் NTFS எனும் கோப்பு முறையில் செய்யுங்கள். FAT 32 முறையில் செய்யவே வேண்டாம்.

உங்கள் கணினி மெதுவாக வேலை செய்வதாகச் சொல்கிறீர்கள். தேவை இல்லாத ஆவணங்கள், விளையாட்டு நிரலிகள், படங்கள், பாடல்கள் இருந்தால் முடிந்த வரையில் குறைத்து விடுங்கள்.

ஒரு சிலரின் கணினிகளில் தேவை இல்லாத படங்கள், பாடல்கள் என்று மலை மலையாகக் குவிந்து கிடக்கும். குப்பைகளைச் சேர்த்து வைக்கும் குப்பைத் தொட்டியாகக் கணினியை  மாற்றக் கூடாது.

கணினி மனுக்குலத்திற்கு கிடைத்த ஓர் அரிய வரப் பிரசாதம். அதைத் தெய்வமாக நினைத்து மரியாதை செய்யுங்கள்.

கோமகள் சின்னசாமி lomakai_ko21@yahoo.com
கே: RSS என்கிறார்களே அப்படி என்றால் என்ன?
ப:
Rich Site Summary அல்லது Really Simple Syndication என்பதன் சுருக்கமே RSS. தமிழில் இதைச் செய்தி ஓடை என்று அழைக்கிறார்கள்.

இணையத்தில் உலா வரும் இலட்சக்கணக்கான வலைப் பதிவுகளில் நமக்குப் பிடித்தவை என்று ஒரு சில இருக்கலாம்.

இந்த வலைப் பதிவுகளின் செய்திகளைத் தொடர்ந்து படிக்கத் தான் இந்தச் செய்தி ஓடை முறையைப் பயன் படுத்துகிறார்கள்.

ஒரு வலைப் பதிவில் காணப் படும் செய்தி ஓடையில் பதிந்து கொண்டால் அந்த வலைப் பதிவில் இருந்து அறிவிப்புகள் வரும்.  அந்த அறிவிப்புகளின் வழி  செய்திகளைத் தடை இல்லாமல் படிக்கலாம்.

21 அக்டோபர் 2010

கணினியும் நீங்களும் - பகுதி 73




வித்யாவதி vithiyaa_7@yahoo.com
கே: ஒருங்குறி என்றால் என்ன? இதைப் பற்றி பலருக்கு தெரியவில்லை. தயவு செய்து விளக்கவும்.

ப:
உலகத்தில் மொத்தம் 42806 மொழிகள் உள்ளன. இவற்றுள் அதிகமாகப் பயன் படுத்தப்படும் மொழிகள் 226. இவற்றுள் தமிழ் மொழி 15 ஆவது இடத்தில் இருக்கிறது.

அதிகமானோர் பேசப் படும் இந்த மொழிகளில் பல இலட்சம் வகையான எழுத்துருகள் உருவாக்கப் பட்டு விட்டன. அதனால் கணினியில் அவற்றை எல்லாம் பயன் படுத்த முடியாத நிலைமை.

தமிழ் மொழிக்கு மட்டும் ஏறக்குறைய 600க்கும் மேற்பட்ட எழுத்துருகள் உள்ளன. இப்படியே விட்டால் நிலைமை மோசமாகி விடும். ஆக, ஒரு மொழிக்கு ஓர் ஒருங்குறி இருந்தால் போதும்.

எதிர்காலத்தில் கணினியின் பயன்பாடு சுலபமாகி விடும் என்று கணினி அறிஞர்கள் நினைத்தார்கள்.

ஒருங்குறி அல்லது Unicode என்றால் ஒரு மொழியின் எழுத்து வடிவங்களை உலகத்தில் உள்ள எல்லாக் கணினிகளும் தெரிந்து கொள்கின்ற ஓர் எளிய முறைப்பாடு. இதை ஆங்கிலத்தில் universal font encoding scheme என்று சொல்கிறார்கள்.

இந்த அனைத்துலக முறைப்பாட்டில் ஒவ்வொரு மொழிக்கும் 128 கட்டங்கள் ஒதுக்கப் பட்டுள்ளன. இந்தக் கட்டங்களை slot block என்று அழைக்கிறார்கள். 128 கட்டத்திகுள் ஒவ்வொரு மொழியும் அதன் எழுத்துருகளை அடக்க வேண்டும்.

அந்த வகையில் உலகத்தில் உள்ள எல்லா மொழிகளுக்கும் 65,500 கட்டங்கள் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளன. World Unicode Consortium எனும் உலக ஒருங்குறி ஒன்றியம் 198 மொழிகளில் ஒருங்குறிகளை உருவாக்கி இருக்கிறது.

இந்த ஒன்றியத்தின் தலைமையகம் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் இருக்கிறது. தமிழ் ஒருங்குறிக்கான வேலைகள் 1991ஆம் ஆண்டு தொடங்கியது. இன்னும் வேலைகள் நடக்கின்றன.

எதிர்காலத்தில் உலகமே இந்த ஒருங்குறியைத் தான் பயன் படுத்தப் போகிறது. உங்களுக்கு இஷ்டப் பட்ட எழுத்து களைப் பயன் படுத்த முடியாது. பயன் படுத்தினாலும் அவை ஒருங்குறி எழுத்து களாக இருக்க வேண்டும். அதனால் இப்பொழுது இருந்தே ஒருங்குறியைப் பயன் படுத்த முயற்சி செய்யுங்கள்.

முரசு அஞ்சல் ஒருங்குறியில் வேலை செய்யும் மிக அருமையான தமிழ் நிரலி. நிறையப் பயன் பாடுகள் உள்ளன. உலகின் தலையாயத் தமிழ் நிரலி என்று கூட சொல்லலாம்.

மலேசியக் கணினி வல்லுநர் திரு.முத்து நெடுமாறன் உருவாக்கியது. விலையும் மலிவு. நூறு ரிங்கிட். மலேசியப் பொருட்களுக்கு மலேசியர்கள் தான் முதலில் ஆதரவு தர வேண்டும்.

புவனேஸ்வரி <maya_asoka@yahoo.com.my>
கே: சார், என் வீட்டில் கொசு தொல்லை அதிகம். கணினியில் நிம்மதியாக வேலை செய்ய முடியவில்லை. கணினியைக் கொண்டு கொசுக்களை விரட்டி அடிக்க முடியும் என்று சொல்லி இருக்கிறீர்கள். எப்படி சார். இந்த உதவியைச் செய்தால் ஏழேழு ஜென்மத்திற்கும் உங்களை மறக்க மாட்டேன்.

ப: ஏழு ஜென்மம் எட்டு ஜென்மம் என்று எல்லாம் சொல்லி ரொம்பவும் புகழ வேண்டாம். ஏற்கனவே புகழை விரும்புகிறவன் என்று சொல்லி என்னைக் கஞ்சிக் காய்ச்சி இருக்கிறார்கள். இதில் நீங்கள் வேறு எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுகிறீர்கள். உதவி வேண்டும் என்றால் செய்கிறேன்.

http://download.cnet.com/Anti-Mosquito/3000-2056_4-75221053.html
எனும் இடத்தில் கொசுவை விரட்டும் நிரலி இருக்கிறது. பதிவிறக்கம் செய்து உங்கள் கணினியில் பதிப்பு செய்யுங்கள். Activate என்பதைச் சொடுக்குங்கள். அதன் பிறகு Hide என்பதைச் சொடுக்குங்கள்.

இந்த நிரலி மனிதர்களின் காது களுக்குக் கேட்காதச் சத்தத்தை வெளியாக்கும். ஆனால், கொசுக்கள், கரப்பான் பூச்சிகள், வண்டுகள், ஈசல்கள், எறும்புகள் போன்றவற்றிற்கு கேட்கும்.

அந்தச் சத்தத்தைக் கேட்டு அவை அலறி அடித்து ஓடும். கொசு தொல்லையும் குறையும். சந்தோஷம் தானே. கணினியை அடைத்ததும் கொசுக்கள் மறுபடியும் வரும். உங்கள் வசதி எப்படி? 


ஹரிஹரன்,  தாமான் மஷ்னா, புக்கிட் கெமுனிங்
கே: தமிழ்ப் பத்திரிகையில் தமிழுக்குத் தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.  ஆங்கிலச் சொற்களைப் அதிகமாகப் பயன் படுத்தி உங்கள் ஆங்கிலப் புலமையைக் காட்டுகிறீர்கள். புகழ்ச்சிக்கு அடிமை ஆக வேண்டாம்.

ப: எலி அம்மணமாக  ஓடுகிறது என்றால் அதற்குச் சட்டைச் சிலுவார் போடத் தெரியாது என்று அர்த்தம் இல்லை. மற்ற எலிகள் எல்லாம் பார்த்துப் புகழ வேண்டும். சர்டிபிகேட் கொடுக்க வேண்டும் என்பதற்காகவும் இல்லை.

அதற்குப் பொருத்தமான, சரியான  சட்டை கடையில் கிடைக்கவில்லை என்று தான் அர்த்தம். புரிகிறதா. பாவம் எலி. ஆளை விடுங்கடா சாமி என்று அஞ்சு கால் ஓட்டத்தில் ஓடுகிறது. அதைப் பார்த்து நீங்கள் என்னடா என்றால் எலி ஓட்டமாய்  ஓடி நோபல் பரிசை வாங்கப் பார்க்கிறது என்கிறீர்கள்.

ஓர் ஆங்கிலச் சொல்லுக்குப் பொருத்தமான தமிழ்ச் சொல் கிடைக்காத போது என்ன செய்வது. இருக்கிற ஆங்கிலச் சொல்லைப் பயன் படுத்திப் போய்க் கொண்டே இருக்க வேண்டியது தான். பேசுகிறவர்கள் எதையாவது பேசட்டும். நம்ப பாட்டுக்கு நம்ப வேலையைச் செய்வோம்.


பவாணி இந்திராணி சகோதரிகள், ராசா செயா, நெகிரி செம்பிலான்
கே: திருப்பதி சாமியார் உலகத்திலேயே பணக்காரச் சாமியார் என்கிறார்கள். புள்ளி விவரங்கள் கிடைக்குமா. உங்களுக்குத் தெரியாதது எதுவும் இருக்காது என்று அக்காவாகிய நான் சொல்கிறேன். இணையத்தில் அலசிப் பார்த்து ஒரு நல்ல பதிலைச் சொல்லுங்கள்.

ப: என் மீது ரொம்ப நம்பிக்கை. எப்போது நான் உங்களுக்குத் தம்பி ஆனேன். நீங்கள் எனக்கு அக்காவா. இல்லை இந்திராணி என்பவருக்கு அக்காவா?
நம்ப திருப்பதி சாமியார் இருக்கிறாரே இவர் உலகத்தில் நம்பர் ஒன் சாமியார் என்பது முற்றிலும் உண்மை. அவருடைய சொத்து மதிப்பு இரண்டு  இலட்சம் கோடியைத் தாண்டி விட்டது. எல்லாம் ரூபாய் கணக்கில் வருகின்றன.

அந்தச் சொத்தில் இருந்து வருடத்திற்கு வட்டி மட்டும் 300 கோடி கிடைக்கிறது. ஒரு நாளைக்கு மூன்று கிலோ தங்கம் காணிக்கையாக உண்டியலில் சேர்கிறது. வருடத்திற்கு ஒரு டன் தங்கம். ஒரு நாளைக்கு பத்து அண்டாக்களிலிருந்து இருபது அண்டாக்கள் வரை உண்டியல் பணம் வருகிறது.

ஓர் அண்டாவில் ஒன்றரைக் கோடி பணம் தேறும். திருப்பதி கோயிலின் தங்க நகைகளின் மதிப்பு மொத்தம் 18 டன்கள். அப்படி என்றால் அதை ஏற்றிச் செல்ல ஐந்து ஆறு லாரிகள் வேண்டும். அவற்றின் மதிப்பு 120 கோடியைத் தாண்டுகிறது.

பக்தர்கள் 25 ஆயிரம் கோடி மதிப்புள்ள நிலங்களைத் தானமாகத் திருப்பதிக்கு கொடுத்து இருக்கிறார்கள். மலேசியாவில் மட்டும் 12 ஏக்கர் நிலம் இருப்பதாகக் கேள்வி.

திருப்பதி கோயிலில் மொத்தம் 32 ஆயிரம் பேர் வேலை செய்கிறார்கள். அதை நம்பி ஒரு இலட்சம் குடும்பங்கள் உயிர் வாழ்கின்றன. ஒரு நாளைக்கு 15 ஆயிரம் கிலோ லட்டு செய்யப் படுகிறது.

முருகன் குப்புசாமி <murugank1520@yahoo.com>
கே: நான் ஓர் இடைநிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியர். இணையத்தில் NHM தமிழ் ஒருங்குறி எழுத்துகளைப் பதிவிறக்கம் செய்து கொள்ள முகவரியை முன்பு நம்முடைய நண்பனில் கொடுத்து இருந்தீர்கள். என் கணினியைச் சுத்திகரிப்பு செய்ததும் அது அழிந்து விட்டது. தயவு செய்து மறுபடியும் அந்த முகவரியைக் கொடுத்து உதவுங்கள்?

ப: தமிழில் தட்டச்சு செய்ய NHM நிரலி இலவசமாகக் கிடைக்கிறது. இந்த நிரலி Phonetics எனும் ஒலி முறைமையில்  வேலை செய்கிறது. நிரலியைப் பதிப்பது மிக மிகச் சுலபம். நிரலியைப் பதிவிறக்கம் செய்ய வேண்டிய இடம் http://software.nhm.in/products/writer

அந்த நிரலியை முதலில் உங்கள் கணினிக்குள் பதிப்பு செய்யுங்கள். பதிப்பு செய்யும் போது எந்த மொழி என்று கேட்கப் படும். அப்போது தமிழ் என்பதைத் தேர்வு செய்யுங்கள்.

பதிப்பு செய்யப் பட்டதும் ஒரு வெள்ளை மணியின் சின்னம் ஆகக் கீழே உள்ள பணிப் பட்டையில் தோன்றும். அந்த மணியை வலது சொடுக்கு செய்யுங்கள்.

அப்புறம் Start automatically when starting Windows என்பதைச் சொடுக்கி விடவும். கணினி தொடங்கும் போதே நிரலியும் தொடங்கும். அதன் பிறகு Language என்பதில் Tamil என்றும் Keyboard என்பதில் Phonetic என்றும் இருக்கும். அதை மட்டும் சொடுக்கி விடுங்கள். மற்றவை தேவை இல்லை.

தவறு நடந்து விட்டால் பயப் பட வேண்டாம். திருத்திக் கொள்ள முடியும். சின்னம் வெள்ளை நிறத்தில் இருக்கும் போது நீங்கள் தட்டச்சு செய்வது எல்லாம் ஆங்கிலத்தில் வரும்.

Alt பொத்தானையும் 2 பொத்தானையும் ஒரே நேரத்தில் அழுத்தினால் வெள்ளை நிறச் சின்னம் தங்க நிறத்திற்கு மாறும். அப்படி என்றால் தட்டச்சு தமிழுக்கு மாறிவிட்டது என்று அர்த்தம்.

கொஞ்ச நேரம் பயிற்சி செய்து பாருங்கள். கணினியை அடைத்து விட்டு மறுபடியும் திறந்து விடுங்கள். எல்லாம் சரியாக வந்து விடும். சின்னம் வெள்ளை நிறத்தில் இருந்தால் ஆங்கிலம். தங்க நிறத்தில் இருந்தால் தமிழ். இதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

12 செப்டம்பர் 2010

கணினியும் நீங்களும் - பகுதி 72

அன்புள்ள நெஞ்சங்களுக்கு,
கடந்த ஒரு மாத காலமாக  இந்தியச் சுற்றுலா. போன இடங்களில் இணைய வசதிகள் மிகவும் குறைவு. அதனால், புதிய தகவல்களைச் சேர்க்க முடியவில்லை. 19.10.2010 அன்றுதான் மலேசியா திரும்பினேன். இன்னும் சில தினங்களில் அனைத்தும் வழக்க நிலைக்குத் திரும்பும். அது வரை பொறுத்து அருளவும்.


(இந்தக் கேள்வி பதில் அங்கம் 12.09.2010 மலேசிய நண்பன் நாளிதழில் வெளிவந்தது)




சுப்பிரமணியம் தயா <thayas1978@gmail.com>
கே: குழந்தைகளுக்குக் கணினி அறிவைப் புகட்ட வேண்டும் என்று சொல்கிறீர்கள். அப்படி சொல்லித் தரும் போது சிலருக்குக் கணினியின்  விளையாட்டுகளில்  பைத்தியம் பிடித்துப் போகிறது. அதை விட்டு வெளியே வர மாட்டேன் என்கிறார்கள். கண்டித்தால் அடம் பிடித்து அழுகிறார்கள். அவர்கள் பள்ளி வேலைகளையும் அவசரம் அவசரமாகச் செய்கிறார்கள். என்ன செய்யலாம்?

ப:
இந்த மாதிரியான பாரதப் போர் பல வீடுகளில் நடக்கின்றது. 'போதும் நிறுத்து' என்றால் அசைய மாட்டார்கள். 'போதும்டா கண்ணா' என்று கெஞ்சினால் நகர மாட்டார்கள். 'கண் கெட்டுப் போகும்' என்று பயமுறுத்தினால் கண்களைத் கசக்குவார்கள். 'ரோத்தான் எடுக்கிறேன்' என்றால் பத்து வீட்டுக்கு கேட்கிற மாதிரி கத்துவார்கள்.

மொத்தத்தில் மூன்றாம் உலகப் போர் வரப் போகிற மாதிரியான  நிலைமை. இதற்கு என்ன செய்யலாம். ஒரு மௌனமான நாடகம் இருக்கிறது.

நீங்களாகவே போய்க் கணினியைத் திறந்து விடுங்கள். 'உன் இஷ்டம் போல விளையாடு' என்று அன்பாகச் சொல்லுங்கள். அப்புறம் அவர்களிடம் எதையும்  பேச வேண்டாம். முடிந்த வரைக்கும் கண்டு கொள்ளவே வேண்டாம்.

எவ்வளவு நேரம் விளயாட முடியுமோ விளையாடட்டும். அவர்கள் பாட்டிற்கு விட்டு விடுங்கள்.

ஆனால், சாப்பிடுவதற்கு ஏதாவது கேட்டால் எதையும் கொடுக்க வேண்டாம். குடிக்கத் தண்நீர் கேட்டாலும் கொடுக்க வேண்டாம். தெரியாதது மாதிரி இருந்து விடுங்கள்.

ஒரு கட்டத்தில் போதும் போதும் என்று அவர்களே கணினியை அடைக்க முயற்சி செய்வார்கள். அதற்கு நீங்கள் கணினியை அடைக்க வேண்டாம்.

கணினியை விட்டு எழுந்திருக்க விடவும் வேண்டாம்.  இன்னும் விளையாட வேண்டும் என்று சொல்லுங்கள்.

இந்த மாதிரி இரண்டு மூன்று தடவை செய்து பாருங்கள். போகப் போக நிலைமை உங்களுக்குச் சாதகமாக அமையும். என் நண்பர் தன் பேரன் பேத்திகளிடம் பயன் படுத்திய ஒரு புதுமையான விளையாட்டு இது. நன்றாகத் தான் வேலை செய்தது.

இருந்தாலும் பாருங்கள். பேரனைத் திருத்துகிறேன் என்று சொல்லிக் கடைசியில் பேரனும் தாத்தாவும் நெருக்கமானக் கூட்டாளி ஆகிப் போனார்கள்.

அப்புறம் விடிய விடிய இரண்டு பேரும் போட்டிப் போட்டு விளையாட ஆரம்பித்து விட்டார்கள். வீட்டுக்காரப் பெண்ணுக்கு அப்பாவைத் திருத்துவதா இல்லை மகனைத் திருத்துவதா என்கிற நிலைமை. மூச்சுத் திணறல் வந்து மோசமாகிப் போனதுதான் மிச்சம்.

கன்னியப்பன்  kanniappan@gmail.com
கே: Facebook எத்தனை மொழிகளில் வெளிவருகிறது?

ப:
Facebook என்பதை முகநூல் என்று சொல்கிறார்கள். வதனப் புத்தகம் என்று சொல்கிறார்காள். கடைசியாக வதன நூல் என்றும் அழைக்கத் தொடங்கி விட்டார்கள். எது எப்படியோ நாம் பேஸ்புக் என்றே அழைப்போம்.

தமிழில் எதையாவது சொல்லப் போய் அதற்கு யாராவது பல்லவி பாடுவார்கள். செம்மொழி மாநாடு நடத்திய தமிழ்ப் புலவர்கள் ஒரு சொல்லை உருவாக்கித் தரட்டும். சரி.

வீட்டுக்கு வரும் வந்தாளியைச் 'சாப்பிட்டீங்களா' என்று கேட்கும் பழக்கம் இருந்தது. இப்போது 'பேஸ்புக்கி'கில் கணக்கு இருக்கிறதா You Tube பார்த்தீர்களா என்று கேட்கின்ற காலத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். கல்யாணம் காட்சியிலிருந்து காது குத்து வரை இளைஞர்களிடையே இந்தப் பேச்சு தான்.

இதில் நம்முடைய பொறுமைகளைச் சோதிக்கும் பெருமைப் பேச்சுகள். பேஸ்புக் எனும் சமூக வலைத் தளம் 70 மொழிகளில் வெளி வருகிறது. 400 மில்லியன் பயனர்கள் உள்ளனர்.

இவ்வளவு பேரும் வேலை வெட்டி இல்லாமல் பேஸ்புக்கில் போய் வெட்டி முறிக்கிறார்கள் என்று தவறாக நினைக்க வேண்டாம். அப்படிப் பார்த்தால் என்னையும் அந்தப் பட்டியலில் சேர்க்க வேண்டி வரும்.

பயனர்கள் என்றால் Users. உலகத்திலேயே அதிகமான விசிறிகளைக் கொண்ட பிரபலம் நம்ப இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான். இவருக்கு 1,546,536 மொத்தம் விசிறிகள்.

சசி <djsasee@gmail.com>
கே: சார், என்னுடைய Internet Explorer எனும் இணைய உலவி சில சம்யங்களில் நிலைக் குத்திப் போகிறது. வேலை செய்ய மறுக்கிறது. இந்தப் பிரச்னையைத் தீர்க்க ஏதாவது எளிய முறை இருக்கிறதா?

ப:
ஓர் எளிய முறை இருக்கிறது. இந்த முறை நன்றாகவும் வேலை செய்கிறது. நான் சொல்கிற மாதிரி செய்யுங்கள்.

Control Panel >> Intert Options  >> Advanced  என்பதைச் சொடுக்கி உள்ளே போய்  Reset  >> Reset என்பதைச் சொடுக்கி விடுங்கள். வெளியே வாருங்கள்.

கணினியை அடைத்து விட்டு மறுபடியும் திறந்து பாருங்கள். பிரச்னை தீர்ந்து இருக்க வேண்டும். இன்னும் பிரச்னை இருக்கிறதா? பிரச்னை இருக்கிறது என்றால் வெளியே தான் பிரச்னை. கணினிக்கு உள்ளே இல்லை.

வேதநாயகம், கூலாய், ஜொகூர்
கே: என் கணினியில் உள்ள Files எனும் கோப்புகளுக்கு கடவுச் சொல் கொடுத்து பாது காக்க வேண்டும். அதற்கு ஏதாவது இலவசமாக நிரலி கிடைக்குமா?

ப:
அண்மையில் இணையத்தில் தேடல் செய்யும் போது ஒரு புதுமையான நிரலி கிடைத்தது. நம்முடைய கோப்புகளைக் கடவு சொல் கொடுத்து பாது காக்க உதவுகிறது.

கீழ்காணும் இடத்தில் கிடைக்கிறது. போய் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
http://download.cnet.com/SafeHouse-Explorer/3000-2092_4-75219687.html

11 செப்டம்பர் 2010

சுவர்ண பூமியின் சரித்திரப் பூக்கள்


(இந்தப் புதினம் 12.09.2010 மலேசிய நண்பன் நாளிதழில் வெளிவந்தது)
 

மரத்தில் இருந்து உதிரும் சண்பகப் பூக்கள் மண்ணுக்குச் சொந்தம். மண்ணில் இருந்து உதிரும் சரித்திரப் பூக்கள் மனிதனுக்குச் சொந்தம். சண்பகப் பூக்கள் தொலைந்து போன சண்பக மணங்களைத் தேடுகின்றன. சரித்திரப் பூக்கள் கலைந்து போன சரித்திரங்களைத் தேடுகின்றன. அந்தக் காவியங்களில் ஒன்றுதான் சுவர்ண பூமியின் சரித்திரப் பூக்கள்.பூஜாங் பள்ளத்தாக்கில் புதைந்து கிடக்கும் சொப்பனப் பூக்கள்.


ஒரு காலக் கட்டத்தில் தீபகற்ப மலேசியாவை ஒட்டு மொத்தமாகச் சுவர்ண பூமி என்று சொல்வார்கள். நல்ல ஒரு நெருக்கம். நல்ல ஓர் இறுக்கம்.

அந்தச் சுவர்ண பூமி என்கிறச் சொல் இருக்கிறதே அது தீபகற்ப மலேசியாவின் பெர்லிஸ், கெடா, வட பேராக் மாநிலப் பகுதிகளைக் குறிப்பிடும் ஒரு சரித்திரக் கலைச் சொல்.

தொப்புள் கொடி உறவுகள்

பல நூறு ஆண்டுகள் என்று சொல்லலாம். சுவர்ண பூமிக்கும் தமிழர்களுக்கும் இருந்த தொப்புள் கொடி உறவுகள் இன்னும் கூட அறுந்து போகவில்லை. அவை எல்லாம் மறைக்க முடியாத வரலாற்றுப் புதினங்கள்.

மகாபலிபுரத்தைக் கட்டிக் காத்தவன் பல்லவ ராஜா. அந்த ராஜா காலத்திற்கு முன்பு இருந்தே உறவுகள் தொடங்கி விட்டன. இன்னும் தொடர்ந்தும் வருகின்றன.

சுருங்கச் சொன்னால் விஜயாலய சோழன் என்பவர் தான் சோழ சாம்ராஜ்யத்திற்கு அஸ்திவாரம் போட்டவர். ஆக,  சோழப் பேரரசு தொடங்கிய காலத்தில் இருந்தே உறவுகள் தொடர்கின்றன.

மலேசியாவின் கெடா மாநிலத்தில் இருக்கும் பூஜாங் பள்ளத்தாக்கின் வரலாறு மிகவும் பழைமை வாய்ந்தது. பூஜாங் பள்ளத்தாக்கைக் கெடா மாநிலத்தின் புராதன அதிசயம் என்றும் வரலாற்று அறிஞர்கள் சொல்கிறார்கள்.

பூஜாங்  பள்ளத்தாக்கின் நாகரீகம் மேற்கு ஆசிய - இந்திய - சீன நாகரீகங்களுடன் தொடர்பு உடையது.

அது மட்டும் அல்ல. கம்போடியா, அராபியா, எகிப்து போன்ற நாடுகளுடன் வர்த்தகத் தொடர்புகள் இருந்து வந்துள்ளன. இருபது நூற்றாண்டுகளாக அந்த நாகரீகம் நீண்டு போகிறது.

அந்தக் காலக் கட்டத்தில் கடல் வழி வாணிபம் சிறந்து விளங்கி உள்ளது. வணிகச் செல்வங்கள்  நிறைந்து வழிந்துள்ளன.

நளினம் காட்டும் மெர்போக் நதி

தென்னிந்தியாவை ஆட்சி செய்த பாண்டிய, பல்லவ, சோழ மன்னர்களுக்கும் கடாரத்தை ஆட்சி செய்த மன்னர்களுக்கும் நல்ல சுமுகமான உறவுகள் நெடும் காலம் நீடித்து வந்துள்ளன.

இங்கே குனோங் ஜெராய் எனும் ஓர் உயரமான மலை இருக்கிறது. இதன் உயரம் 1230 மீட்டர். இந்த மலை கடல் கரையில் இருந்து மிகத் தொலைவில் இல்லை. அந்தக் காலங்களில் இந்த மலை கடலோடிகளூக்கு ஒரு கலங்கரை விளக்கமாக இருந்து வந்திருக்கிறது.

அந்த மலையின் அடிவாரத்தில் தான் பூஜாங் பள்ளத்தாக்கு பரந்து விரிந்து கிடக்கிறது. பூஜாங் பள்ளத்தாக்கின் பரப்பளவு 224 சதுர கிலோமீட்டர்கள்

ஆகும். பள்ளத்தாக்கின் வழியாக மெர்போக் நதியும் நளினம் காட்டுகிறது. பசுமை புரட்சி செய்கிறது.

கி.பி.1025 ஆம் ஆண்டில் இராஜேந்திர சோழன் தென் கிழக்கு ஆசிய நாடுகளின் மீது படை எடுத்த போது பூஜாங் பள்ளத்தாக்குப் பகுதி கடாரம் என்று அழைக்கப் பட்டது.

இந்தக் கடாரம் எனும் சொல்தான் காலப் போக்கில் கெடா என்று மருவியது.

பூஜாங் பள்ளத்தாக்கு ஒரு வியாபார மையமாகவும், ஆட்சி செய்யும் இடமாகவும் இருந்து இருக்கிறது. இராஜேந்திர சோழனின் ஆட்சி காலம் கி.பி.1012 லிருந்து கி.பி.1044 வரை.

பட்டினப்பாலையில் கடாரம்

இராஜேந்திர சோழனுக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலேயே தென்னிந்தியாவில் கரிகாற் பெருவளத்தான் சோழன் எனும் ஒரு வீரமிகு சோழ அரசர் இருந்தார்.

இந்தக்  கரிகாற் பெருவளத்தான் சோழன் ஆட்சி காலத்தில் தான் பட்டினப்பாலை எனும் சங்க இலக்கியக் காவியம் எழுதப்பட்டது.

பொருநராற்றுப் படையின் பாட்டுடைத் தலைவன் என்றும் இவருக்கு அடைமொழி உண்டு. பட்டினப்பாலை என்பது பத்துப் பாட்டு இலக்கிய நூல்களில் ஒன்று.

இந்தக் காவியத்தைப் பாடியவர் கடியலூர் உருத்திரங் கண்ணனார். பூம்புகார் நகரில் இருந்த ஏற்றுமதி இறக்குமதி பண்டகசாலையில் என்னென்ன பொருட்கள் வந்து சேர்கின்றன என்பதைப் புலவர் பாடலாகப் பாடுகிறார். அதில் வரும் ஒரு பகுதியின் வரிகளைப் படியுங்கள்.

நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்
காலின் வந்த கருங்கறி மூடையும்
வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்
குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்
தென்கடல் முத்தும் குணகடல் துகிரும்
கங்கை வாரியும் காவிரிப் பயனும்
ஈழத்து உணவும் காழகத்து ஆக்கமும்
அரியவும் பெரியவும் நெரிய ஈண்டி
வளம்தலை மயங்கிய நனந்தலை மறுகு

இதில் 'ஈழத்து உணவும் காழகத்து ஆக்கமும்' எனும் வரிகள் வருகின்றன. கடாரத்தின் பழைய சொல் காழகம். காழகத்தின் ஆக்கம் என்றால் கடார தேசத்தின் பொருட்கள் என்று அர்த்தம்.

அந்தக் காலத்தில் பூம்புகார் எப்படி பிரசித்தி பெற்ற நகராக இருந்ததோ அதே போல கடாரமும் சிறந்து விளங்கிய பெருமையைச் சேர்க்கிறது.

திருவாலங்காட்டுச் செப்பேடுகள்

இராஜேந்திர சோழன் தான் அயல் நாடுகளுக்குப் பெரும்படை எடுத்துச் சென்ற முதல் இந்திய மன்னன். கங்கை கொண்ட சோழன் என்றும் இவரை அழைப்பார்கள்.

கடாரத்தின் மீது சோழ மன்னன் படை எடுத்தான் என்று படித்து இருப்பீர்கள். திருவாலங்காட்டுச் செப்பேடுகளில் கடாரத்தை 'கடாஹ' என்று குறிப்பும் சொல்லப் படுகிறது.

இந்தக் காலக் கட்டத்தில் சுமத்திராவைச் சேர்ந்த ஸ்ரீவிஜயா சாம்ராஜ்யம்  பூஜாங் பள்ளத்தாக்கையும் ஆட்சி செய்து வந்தது. ஸ்ரீவிஜயா சாம்ராஜ்யம் சுமத்திராவின் பலேம்பாங்கில் தலைமையகம் இருந்தது.

அந்த ஸ்ரீவிஜயா சாம்ராஜ்யத்திற்கு சங்கிராம விஜயோத்துங்க வர்மன் என்பவர் அரசராக இருந்தார். இராஜேந்திர சோழனின் கடாரப் படையெடுப்பு நடந்தது 1025 ஆம் ஆண்டு.

இராஜேந்திர சோழன் கடாரத்தின் மீது படையெடுத்ததற்கு காரணம் என்ன. கடாரத்தின் ஆளுமை ஸ்ரீவிஜயா சாம்ராஜ்யத்தின் கீழ் இருந்ததே.

தமிழ் நாட்டுச் சோழர்களுக்கும் சுமத்திராவின் ஸ்ரீவிஜயா அரசர்களுக்கும் நல்ல நட்பு முறை உறவுகள் இருந்து வந்துள்ளதாகக் கல்வெட்டுகளில் ஆதாரங்கள் உள்ளன.

குலோத்துங்கச் சோழன்

அப்புறம் ஏன் இராஜேந்திர சோழன் படை எடுக்க வேண்டும். இதற்கு சரியான காரணம் தெரியவில்லை. இருந்தாலும் சீன அரசுக்கும் சோழ அரசுக்கும் இடையே இருந்த வணிகத்தைத் தடுக்கும் நோக்கம் ஸ்ரீவிஜய சாம்ராஜ்யத்திற்கு இருந்திருக்கலாம்.

இந்தப் படையெடுப்பின் மூலமாக ஸ்ரீவிஜயாவின் எந்த நிலப்பகுதியும் சோழ அரசுடன் சேர்க்கப் படவில்லை. விஜயதுங்கவர்மனே மீண்டும் ஸ்ரீவிஜயாவின் அரசனாகச் சோழர்களால் முடி சூட்டப் பட்டான்.

அதன் பின்னர் முதலாம் குலோத்துங்கச் சோழன் (கி.பி.1070 - கி.பி.1120) காலத்திலும் கடாரத்தின் மீது படையெடுப்பு நடந்துள்ளது. ஒரு சமரசத் தீர்வு காண்பதற்காக இந்த இரண்டாம் படையெடுப்பு நடந்தது என்று சொல்லப் படுகிறது.

பூஜாங் பள்ளத்தாக்கில் உள்ள கோவில்களின் காலக் கட்டம் நான்காம் நூற்றாண்டில் தொடங்கி 14 ஆம் நூற்றாண்டு வரை செல்கிறது. இந்துக் கோவில்களும் உள்ளன. புத்த விகாரங்களும் உள்ளன. இது வரை ஏறக்குறைய 50 கோவில்களைக் கணக்கிட்டு இருக்கிறார்கள்.


சிதைவு அடைந்த சிவலிங்கம்

பூஜாங் பள்ளத்தாக்கில் கண்டு எடுக்கப் பட்ட ஆலயங்களில் மிகப் பெரியது புக்கிட் பத்து பகாட் ஆலயம் ஆகும். Dr.Quaritch Wales எனும் ஆராய்ச்சியாளரால் 1936 ஆம் ஆண்டு கண்டு பிடிக்கப் பட்டது. இவருக்கு அடுத்து Alastar Lamp எனும் ஆராய்ச்சியாளர் அகழ் ஆய்வுகளை மேற்கொண்டார்.

சிதலம் அடைந்த ஆலயத்தின் முழுப் பகுதியையும் வெளியுலகத்திற்கு காட்டினார். இந்த ஆலயத்தில் இருந்து பல பகையான  சிலைகள், முத்து மணிகள் கண்டுபிடிக்கப் பட்டன.

இந்த ஆலயம் 7 ஆம் நூற்றாண்டில் கட்டப் பட்டிருக்கலாம் பூஜாங் நதிக்கு மேற்குப் பகுதியில் மெர்போக் நகரம் இருக்கிறது. இந்த நகரத்தின் அருகில் Kampung Bendang Dalam எனும் ஒரு கிராமம் இருக்கிறது. இந்தக் கிராமத்தில் 1960 ஆம் ஆண்டில் அகழ் ஆய்வின் போது ஓர் ஆலயம் கண்டு பிடிக்கப் பட்டது.

இறுகிப் போன பல்லவ இரகசியங்கள்

இந்த ஆலயத்தின் சுற்றுப் பகுதிகளில் சிவலிங்கம், சிதைவு அடைந்த žனக் கல்
பொருட்கள், சிற்பங்கள் கண்டு எடுக்கப் பட்டன.

இந்த ஆலயம் 12 ஆம் நூற்றாண்டு வாக்கில் கட்டப் பட்டு இருக்கலாம் என்று அகழ்வாராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.

சண்டி பெண்டியாட், சண்டி பெங்காலான் பூஜாங் என்று பல ஆலயங்கள் இங்கே உள்ளன. பூஜாங் பள்ளத்தாக்கில் இந்து சமயமும் புத்த சமயமும் மாறி மாறி வந்துள்ளன. காலக் கட்டங்களும் மாறி மாறி வருகின்றன.

கடார மண்ணின் இறுகிப் போன பல்லவ இரகசியங்கள் இன்னும் மறைந்து போய் கிடக்கின்றன. கடார மண்ணைப் பற்றி நம் நாட்டில் தமிழ் அறிஞர்கள் மிகப் பெரிய அளவில் ஆய்வுகள் செய்துள்ளனர்.

அந்த ஆய்வுகளை வெளி உலகிற்கு கொண்டு வர வேண்டும். பழம் பெரும் உண்மைகளைச் சொல்ல வேண்டும். உலகத் தமிழர்கள் அந்த அறிஞர்களை ஊழி ஊழி காலத்திற்கும் ஆராதனை செய்ய வேண்டும்.

(அறிஞர் நீலகண்ட சாஸ்திரி அவர்களின் வரலாற்று ஆவணங்களின்  ஆதாரங்களுடன் இந்தக் கட்டுரை எழுதப் பட்டது. இருப்பினும் வரலாற்றுத் துறை அறிஞர்களிடம் என்னுடைய  தாழ்மையான வேண்டுகோள். குறைகளைச் சுட்டிக் காட்டுங்கள். திருத்திக் கொள்கிறேன். நன்றி.) 

06 செப்டம்பர் 2010

கணினியும் நீங்களும் - பகுதி 71

(இந்தக் கேள்வி பதில் அங்கம் 05.09.2010 மலேசிய நண்பன் நாளிதழில் வெளிவந்தது)

அகிலன் merrickraja@yahoo.com
கே: Defragment எனும் சுத்திகரிப்புச் செய்வதால் கணினிக்கு என்ன பயன்?
விளக்கம் கொடுக்க முடியுமா?

ப:
கணினிக்குள் ஒரு நிரலியைப் பதிப்பு செய்கிறோம். அல்லது ஓர் ஆவணத்தைச் சேமித்து வைக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். கணினியின் வன் தட்டில் அந்த ஆவணங்கள் நிரந்தரமாகப் பதிவு செய்யப் படுகின்றன.

வன் தட்டு என்றால் Hard Disk. பதிவு செய்யப் படும் போது அந்த ஆவணங்கள் தொடர்ச்சியாகவும் சீராகவும் பதிவு செய்யப் படுவது இல்லை.

ஆவணங்கள் என்றால் Files, Folders அல்லது Documents. பதிப்பு நேரத்தை மிச்சப் படுத்த கணினியும் ஒரு குறுக்கு வழியைக் கடைபிடிக்கிறது.

வன் தட்டில் எந்த எந்த இடங்களில் அப்போது காலியான இடம் இருக்கிறதோ அங்கே தகவல்களைக் கொண்டு போய் அவசரம் அவசரமாகப் பதித்து வைக்கிறது.

வேலையைச் சீக்கிரமாக முடிக்க வேண்டும் என்பது கணினியின் செயல்பாடு. அது கணினிக்குள் உட்செலுத்தப் பட்ட  தாரக மந்திரம்.

பின்னர் நாம் அந்த ஆவணத்தை அல்லது நிரலியைப் பயன் படுத்தக் கேட்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். கணினி என்ன செய்கிறது தெரியுமா.

அதை எடுத்துக்கொடுக்க, பதிப்பு செய்த இடங்களில் அலைந்து திரிகிறது. தகவல்களை வலை போட்டுத்  தேடுகிறது.

அப்புறம் அவற்றை எல்லாம் ஒன்றாகச் சேர்க்கிறது.  நம்மிடம் கொண்டு வந்து காட்டுகிறது. நமக்கு என்னவோ பார்க்க ரொம்ப சிம்பிள். பாவம் கணினி, அதற்கு ரொம்ப சிரமம்.

தகவல்களைத் தேட கணினிக்கு  அதிக நேரமும் செலவாகிறது. இந்தப் போராட்டம் உள்ளே நடக்கும் போது கணினி மெதுவாக வேலை செய்வதாக நமக்கு ஒரு பிரமையும் தோன்றுகிறது.

முட்டைப் போட்ட வேதனை கோழிக்குத் தெரியும். மூட்டைத் தூக்கிய சோதனை முது குக்குத் தெரியும் என்பார்கள். அந்த மாதிரி அவரவர் அவஸ்தை அவர் அவருக்குத் தானே தெரியும்.

சரி. Defragment எனும் சுத்திகரிப்பு செய்கிறோம். உள்ளே என்ன நடக்கிறது தெரியுமா. உடைந்து போன ஆவணங்கள், நொறுங்கிப் போன செய்திகள், சிதறிப் போன தகவல்கள், சிதைந்து போன படங்கள் எல்லாம் சீராகச் சிறப்பாக அடுக்கப் படுகின்றன.

அப்புறம் வேடிக்கையைப் பாருங்களேன்.  தொண்டைத் தண்ணி காயந்து போன தொண்டனுக்கு தயிரும் மோரும் கிடைத்த மாதிரி மின்னல் வேகத்தில் வேலை நடக்கும். சுத்திகரிப்பு செய்வது எப்படி என்று நீங்கள் கேட்பது காதில் விழுகிறது.

கணினியின் முகப்புத் திரையில் My Computer எனும் சின்னம் இருக்கிறது. தெரியும் தானே. அதை வலது சொடுக்குச் செய்யுங்கள்.அதில் Manage என்பதைச் சொடுக்கினால் இடது பக்கம் Disk Defragmenter என்பது வரும்.

அதைச் சொடுக்குங்கள். வன் தட்டின் பிரிவுகள் தெரியும். அவற்றை ஒன்று ஒன்றாகச் சுத்திகரிப்புச் செய்யுங்கள். அவ்வளவுதான். சில சமயங்களில் அதிக நேரம் பிடிக்கலாம்.

வாரத்திற்கு ஒரு முறை சுத்திகரிப்புச் செய்யுங்கள். போதும். காலா காலத்திற்கும் கணினி உங்களைக் கை எடுத்துக் கும்பிடும்.

மாரியாயி <maari79@yahoo.com>
கே: சில பேராங்காடிகளில், புகழ் பெற்ற துணிக் கடைகளில் இரகசிய காமிரக்கள் நமக்குத் தெரியாமல் இருக்குமாம். நாம் உடை மாற்றும் போது நம்மைப் படம் பிடித்து வைத்துக் கொள்ளும் என்று கேள்வி பட்டேன். உண்மையா?

ப: எல்லாக் கடைகளிலும் இல்லை. ஆயிரத்தில் இலட்சத்தில் ஒன்று இரண்டு  இருக்கலாம். அதற்காக எல்லாரையும் ஒட்டு மொத்தமாகக் குறை சொல்லக் கூடாது. நம்முடைய இந்தியர்களின் கடைகளில் பெரும்பாலும் நல்ல நாணயமான ஊழியர்கள் பணி புரிகிறார்கள். வக்கிரப் புத்தி படைத்த சில சில்லறைகள் அங்கே இங்கே இருக்கத்தான் செய்கின்றன.

ஆடைகளை மாற்றிப் பார்க்கிறேன் என்று பெண்கள் சிலர் விலை உயர்ந்த உள்ளாடைகளை மாற்றிக் கொள்வது உண்டு. பணம் கட்டாமல் கம்பி நீட்டுவதும் உண்டு. அதைத் தவிர்க்க சில நிறுவனங்கள் இரகசியக் காமிராக்களைப் பொருத்தி வைத்து இருக்கின்றன.

பெண்கள் உடைகள் மாற்றுவதைக் காமிராவில் கவனிக்க வேண்டியது சில பெண் ஊழியர்களின் வேலை. காமிராவில் பதிவானது கணினியிலும் பதிவாகும் அல்லவா.

சரி. கணினியில் பதிவானதை அங்கே வேலை செய்யும் மற்ற ஆண்களும் அவர்களுடைய வசதியைப் போல பார்க்கலாம் இல்லையா. 

நீங்கள் ஆடை மாற்றும் அறைக்குள் நுழைய கதவைத் திறந்ததும் இரகசியக் காமிரா வேலை செய்ய ஆரம்பித்து விடும். நீங்கள் உடை மாற்றுவதை வீடியோ படம் எடுக்கும்.

அதன் பிறகு அந்த வீடியோ படங்கள் இணையத்தில் உலா வரலாம். உலகம் பூராவும் உள்ள கைப்பேசிகளுக்குள் தஞ்சம் போகலாம். அந்தக் கயவன் உங்களையே மிரட்டிப் பிணைப் பணம் கேட்டாலும் கேட்கலாம். சரி.

இரகசியக் காமிரா இருப்பதை கண்டு பிடிக்க ஒரு வழி இருக்கிறது. உடை மாற்றும் அறைக்குள் நுழைந்ததும் உங்கள் கைப்பேசியைக் கொண்டு யாரையாவது சும்மா அழைத்துப் பாருங்கள். அழைக்க முடிந்தால் சரி. அந்த அறையில் இரகசியக் காமிரா இல்லை என்று அர்த்தம்.

அழைக்க முடியா விட்டால் தெரிந்து கொள்ளுங்கள் காமிரா இருக்கிறது என்று. இந்த இரகசியக் காமிராவில் Fiber Optic எனும் ஒலி ஒளி நுண்ணிழைகள் உள்ளன. இவை கைப்பேசியின் ஒலி அலைகளை வெளியே போக விடாமல் தடுத்து விடும்.

நம்முடைய மனைவி, பிள்ளைகள், அக்கா, தங்கை, உற்றார் உறவினர் அனைவரிடமும் இந்த வழியைச் சொல்லிக் கொடுங்கள்.

பெண்மையைப் பாதுகாக்க வேண்டியது நம் அனைவரின் பொறுப்பு. இந்தக் காமிராக்கள் ரிங்கிட் 320 லிருந்து 1200 வரை சந்தையில் கிடைக்கின்றன.

ரேகா சுப்பிரமணியம், தஞ்சோங் மாலிம், பேராக்
கே: Bluetooth என்பதைக் கண்டுபிடித்தது யார்? அதன் பயன்பாடுகள் என்ன?

ப:
இண்டர்நெட் எனும் இணையம் என்பது ஒரு தொழில்நுட்பம். அதைப் போல Bluetooth என்பதும் ஒரு தொழிநுட்பம் தான். இதை 'எரிக்சன்' நிறுவனம் 2002 ஆம் ஆண்டில் கண்டுபிடித்தது.

சுழலி, தட்டச்சு, அச்சு இயந்திரம், கைப்பேசி, ஒலிப்பெருக்கி, மருத்துவச் சாதனங்கள், வாகனப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுச் சாதனங்கள், தொலைபேசிகள் போன்ற சாதனங்களைக் கணினியுடன் தொடர்பு கொள்ளச் செய்யும் தொழில்நுட்பமே Bluetooth.

தொடர்பு கொள்ளுதல் என்றால் கம்பி இல்லாமல் தொடர்புகளை ஏற்படுத்துதல். இந்த புளுடூட் தொழில்நுட்பம் நம்முடைய அன்றாடக் கணினி வாழ்க்கையை மிகவும் எளிமைப் படுத்துகிறது.

குறைந்த மின்சக்தியைப் பயன் படுத்துகின்றது. ஒரே சமயத்தில் எட்டு சாதனங்களுடன் தொடர்பு கொள்ளக் கூடியது. நூறு அடி தூரம் வரை செயல் ஆற்றல் கொண்டது.

சென்ற ஆண்டு புளுடூட் 3.0 புதிய வெளியீடு வந்தது. இதன் மூலம் வீட்டில் உள்ள மின்சார விளக்குகள், காற்றாடிகள், குளிர்சாதனங்களை இயக்க முடியும். இதைத் தமிழில் நீலப் பற்கள் என்று சொல்லலாம்.

இருந்தாலும் செலாயாங் வாசகர் சுப்ரீம் சூரியா கோபித்துக் கொள்வார். ஏற்கனவே Facebook என்பதைத் தமிழில் முகநூல் என்று அழைப்பது தவறு என்று குறை பட்டுக் கொண்டார். எதற்கும் அவர் கருத்தை எதிர்பார்ப்போம்.