22 ஏப்ரல் 2011

வீரப் பெண்மணி சிபில் கார்த்திகேசு

இணையக் கலைக் களஞ்சியமான விக்கிபீடியாவில் இந்த ஆய்வுப் புதினம் வெளிவந்துள்ளது. அதன் முகவரி: http://ta.wikipedia.org/wiki/சிபில்_கார்த்திகேசு


வீரத் தமிழ்ப் பெண்மணி சிபில் கார்த்திகேசு

சிபில் கார்த்திகேசு என்பவர் மலேசியாவில் மிகவும் புகழ்பெற்ற ஒரு வீரத் தமிழ்ப் பெண்மணி.பல நூறு சீனர்களின் உயிர்களைக் காப்பாறிய ஒரு வீர மங்கையாக அவரை மலேசியச் சீனர் சமுதாயம் கருதுகிறது.

இன்று வரை மலேசியச் சீனர் சமுகத்தினரால் தியாகி என்றும் போற்றிப் புகழப்
படுகிறார். சீனர்கள் பலர் இவருடைய பெயரைத் தங்கள் பிள்ளைகளுக்குச் சூட்டி அவருடைய தன்னலமற்றச் சேவையை அழகு பார்க்கின்றனர்.

சிபில் கார்த்திகேசுவின் முழுமையான பெயர் சிபில் டெலி. இவருடைய அப்பா ஓர் ஆங்கிலேயர். ஒரு தோட்ட நிர்வாகி. அம்மா ஒரு தமிழர். இருந்தாலும் சிபில் கார்த்திகேசு தன்னை ஒரு தமிழ்க் கிறிஸ்துவப் பெண்ணாகவே அடையாளம் காட்டிக் கொண்டார். அப்படியே வாழ்ந்தும் இருக்கிறார்.

1940ல் சிபில் கார்த்திகேசு இளமையாக இருக்கும் போது
சிபில் கார்த்திகேசு தேர்ச்சி பெற்ற ஒரு தாதி. சீன மொழியில் நன்கு சரளமாகப் பேசக் கூடியவர். இவர் இந்தோனேசியா சுமத்திராவில் இருக்கும் மேடானில் 1899 ஆம் ஆண்டு பிறந்தவர்.

1919 ஆம் ஆண்டு டாக்டர் ஏ.சி.கார்த்திகேசு என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணம் கோலாலம்பூர், புக்கிட் நானாஸ் செயிண்ட் ஜான் தேவாலயத்தில் நடந்தது.

ஆறுமுகம் கணபதி பிள்ளை என்பதன் சுருக்கமே ஏ.சி.கார்த்திகேசு ஆகும். இவர்
சிங்கப்பூர் காலாங் மருத்துவக் கல்லூரியில் படித்து 21 வயதிலேயே மருத்துவர் ஆனவர்.

1948ல் இங்கிலாந்தில் மருத்துவ சிகிச்சை பெறும் போது
பின்னர் இருவரும் சேர்ந்து ஈப்போ பிரவுஸ்டர் சாலையில் (ஜாலான் சுல்தான் இட்ரிஸ் ஷா) ஒரு சிறிய மருத்துவ விடுதியைத் திறந்து நடத்தி வந்தனர். அந்த மருத்துவ விடுதியில் கணவருக்கு மருத்துவப் பணி. சிபில் கார்த்திகேசுவிற்குத் தாதியர் பணி.

ஏறக்குறைய 15 ஆண்டுகள் அங்கே
தொழில் புரிந்தனர். டாக்டர் ஏ.சி.கார்த்திகேசு சீன சமூகத்தவரிடம் மிகவும் அன்பாகப் பழகினார். நல்ல மரியாதை கிடைத்தது. அதனால் ஈப்போ வாழ் சீனர்கள் அவரைச் செல்லமாக யூ லோய் டெ என்றும் அழைத்தனர்.

2011ல் இப்போதைய பாப்பான் பட்டணம்

1941 ஆம் ஆண்டு ஜப்பானியர்கள் மலாயா மீது படை எடுத்தனர். ஜப்பானியர்கள் ஈப்போ நகரைக் கைப்பற்றுவதற்கு முன்னர் கணவனும் மனைவியும் பாப்பான் எனும் சிறு நகருக்குப் புலம் பெயர்ந்தனர்.

அங்கே புதிதாக ஒரு மருத்துவ விடுதியைத் திறந்தனர். இந்தப் பாப்பான் சிறு நகரம் ஈப்போ மாநகரத்தில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. ஈயச் சுரங்கத் தொழிலுக்குப் பெயர் போனது. சீனர்கள் அதிகமாக வாழும் இடம்.

1940ல் டாக்டர் கார்த்திகேசு
ஜப்பானியர்கள் மலாயாவிற்கு வந்த சில காலத்தில் டாக்டர் கார்த்திகேசு மறுபடியும் ஈப்போவிற்கு வந்து விட்டார். பழைய ஈப்போ மருத்துவ விடுதியை மறுபடியும் திறந்து நடத்தினார்.

சிபில் கார்த்திகேசு பாப்பான் பட்டணத்திலேயே தங்கி பாப்பான் மருத்துவ விடுதியைப் பார்த்துக் கொண்டார். ஏழை
எளியவர்களுக்கு இலவசமாக மருத்துவம் செய்தார்.

1992ல் ஈப்போ பிரவுஸ்டர் சாலை 
ஜப்பானியர்கள் மலாயாவைக் கைப்பற்றிய பின்னர் கொடுங்கோல் ஆட்சி செய்தனர்.  மலாயா மக்களை ஆயிரக் கணக்கில் கொன்று குவித்தனர்.

இலட்சக் கணக்கான மக்களை சித்ரவதையும் செய்தனர். இவர்களில் அதிகம் பாதிக்கப் பட்டவர்கள் சீனர்கள் ஆகும். இந்தியர்களைப் பார்த்தால் ‘காந்தி.. காந்தி’ என்று சத்தம் போட்டு இரைந்து கைகளைத் தூக்கிச் செல்வார்கள்.

1941 ஆம் ஆண்டு மலாயாவில் ஜப்பானியர்களின் அட்டகாசம்
இருந்தாலும் சியாம் மரண இரயில் பாதை போடுவதற்காக பல்லாயிரம் இந்தியர்களை கொண்டு சென்று அங்கு அவர்களைப் பலிக்கடா ஆக்கியது வேறு ஒரு வரலாறு.

ஜப்பானிய ஆதிக்கத்தை எதிர்த்து மலாயாவில் சில பல கொரில்லா போராளிக் குழுக்கள் உருவாகின. அவற்றுள் ஒன்றுதான் Malayan People’s
Anti-Japanese Army (MPAJA) எனும் மலாயா மக்களின் ஜப்பானிய எதிர்ப்பு இராணுவம். இந்த இராணுவம் மலாயா நாடு முழுவதும் துளிர் விட்டிருந்தது.

1942ல் மலாயா மக்களின் ஜப்பானிய எதிர்ப்பு இராணுவம்
பேராக் மாநிலத்தில் சுங்கை சிப்புட், தஞ்சோங் மாலிம், சிலிம் ரிவர், பாப்பான், பூசிங், கோப்பேங் போன்ற இடங்களில் தீவிரமாகச் செயல் பட்டது.

இந்த மலாயா மக்களின் ஜப்பானிய எதிர்ப்பு இராணுவம் தான் பின்னாளில் மலாயாக் கம்னியூஸ்டு கட்சி என்று மாறியது. மலாயாவைக் கம்னியூஸ்டு  நாடாக மாற்ற பல திட்டங்கள் போட்டது.

ஜப்பானிய ஆதிக்க எதிர்ப்புப் போராளிகள் மறைந்து இருந்து ஜப்பானியர்களைத் தாக்கி வந்தனர். அந்த மாதிரியான தாக்குதலில் பாப்பான், பூசிங் இடங்களில் இருந்த பல போராளிகள் காயம் அடைந்தனர்.

1943ல் பாப்பானில் சிபில் கார்த்திகேசுவின் மருத்துவ விடுதி
காயம் அடைந்த போராளிகள் சிபில் கார்த்திகேசுவின் மருத்துவ விடுதிக்கு ரகசியமாகக் கொண்டு வரப் பட்டனர். மருத்துவ விடுதிக்கு பின்புறம் ஒரு காய்கறித் தோட்டம் இருந்தது.

மருத்துவ உதவிகள் தேவைப் பட்டு அந்தப் போராளிகளைக்
கொண்டு வரும் போது அந்தக் காய்கறித் தோட்டம் அவர்களுக்கு நல்ல ஒரு மறைவிடமாக அமைந்தும் போனது.


2011ல் மருத்துவ விடுதிக்குப் பின்னால் இருக்கும் காய்கறித் தோட்டம்
அந்தப் போராளிகளுக்கு சிபில் கார்த்திகேசு இலவசமாக மருத்துவம் செய்து அனுப்பி இருக்கிறார். சுற்று வட்டார சீனர்களின் அன்பையும் ஆதரவையும் பெற்றார்.

அதே நேரத்தில் தன்னுடைய விடுதியில் ஒரு சின்ன சிற்றலை வானொலியையும் சிபில் கார்த்திகேசு வைத்திருந்து இருக்கிறார். பி.பி.சி வானொலிச் செய்திகளை ரகசியமாகக் கேட்டு வந்தார்.
செய்திகளை பாப்பான் மக்களுக்கு ரகசியமாகத் தெரிவித்தும் வந்தார். 1943 ஆம் ஆண்டு வரை அவ்வாறு நடந்து வந்துள்ளது. சிபில் கார்த்திகேசு செய்தவை அனைத்தும் ஜப்பானியர்களுக்கு எதிரானச் செயல்கள்.

பாப்பான் பட்டன மக்கள் தான் அதிகமாகப் போராளிகளுக்கு உதவி செய்கின்றனர் என்பதை Kempetei எனும் ஜப்பானிய இராணுவப் போலீசார் அறிய வந்தனர். அதனால் பாப்பான் பட்டன மக்களைக் கைது செய்ய ஆரம்பித்தனர்.
1943ல் ஜப்பானிய இராணுவப் போலீசார்
அந்த வகையில் சிபில் கார்த்திகேசு 1943 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் கைது செய்யப் பட்டார்.அப்போது ஜப்பானியர்களின் போலீஸ் தலைமையகயகம்  ஈப்போவில் உள்ள செயிண்ட் மைக்கல் பள்ளியில் இருந்தது.

அங்கே விசாரணை எனும் பேரில் கேள்விகள் மேல் கேள்வி. போராளிகளின் பெயர்களைச் சொன்னால் போதும். விட்டு விடுகிறோம். மன்னித்து விடுகிறோம் என்று ஜப்பானியர்கள் கெஞ்சினர்.
சிபில் கார்த்திகேசு சித்ரவதை செய்யப் பட்ட பள்ளி - 2011ல் எடுத்த படம்
ஒன்றும் நடக்கவில்லை. சொன்னாமல் மட்டும் விட்டு விடுவார்களா. உண்மையைச் சொன்னால் எத்தனைக் குடும்பங்கள் பாதிக்கப் படும்.

ஒரு நாளைக்கு பத்து பேர் விகிதம் இரண்டு ஆண்டுகளுக்கு இலவசமாக மருத்துவம் பார்த்து இருக்கிறார். பேராக் வட்டாரத்தில் உள்ள ஏறக்குறைய 6000 போராளிகளுக்கு அவர் அவசர சிகிச்சை செய்து இருக்கிறார்.

ஒரு குடும்பத்தில் ஐந்து பேர் என்றால் 30,000 பேரின் உயிருக்கு ஆபத்து
என்பதை சிபில் கார்த்திகேசு உணர்ந்தார். தன் உயிர் போனாலும் பரவாயில்லை. உணமையைச் சொல்லாமல் எல்லாவிதச் சித்ரவதைகளையும் தாங்கிக் கொண்டார். மூன்று மாதங்களுக்குப் பிறகு பத்து காஜா சிறைச்சாலைக்கு அனுப்பப் பட்டார்.
1943லிருந்து 1945 வரை சிபில் கார்த்திகேசு சித்ரவதை செய்யப்பட்ட இடம்
அங்கேதான் சித்ரவதை எனும் பேரில் பெரிய பெரிய அநியாயங்கள் நடந்து இருக்கின்றன. தன்னுடைய சுயசரிதையில் இவை எல்லாவற்றையும் எழுதி இருக்கிறார். என்ன மாதிரியான அநியாயங்கள் என்று சொல்ல நமக்கு மனம் வரவில்லை. 

வெளிக்காயம் இல்லாத சித்ரவதைகள்.
தூங்க விடாமல் செய்தல்.

தண்ணீருக்குள் தலையை அழுத்திப் பிடித்து மூச்சு நின்று போகும் போது தலையை
வெளியே எடுத்தல்.

1943ல் ஜப்பானியர்கள் மலாயாவில் சித்ரவதை செய்யும் காட்சி
ஐஸ் கட்டியில் கட்டிப் போட்டு உட்கார வைத்தல்.

காலைக் கட்டித் தொங்க விடுதல்.

படுக்க வைத்து அவர் மீது ஐந்து பேர் ஏறி
மிதித்தல்.

பிறப்பு உறுப்பில் சவர்க்கார நீரைப் பாய்ச்சி மயக்கம் அடையச் செய்தல்.

இப்படி கணக்கு வழக்கு இல்லாத அநியாயங்கள்.

மிருகத் தனமாகச்
சித்ரவதைகள்.

ஈப்போவில் உள்ள செயிண்ட் மைக்கல் பள்ளி தான் ஜப்பானியர்களின் ஆட்சி காலத்தில் அவர்களின் தலைமை இடமாக இருந்தது. பல சீனச் சமூகத் தலைவர்களும் விசாரணை என்ற பெயரில் சிரச் சேதம் செய்யப் பட்டனர். அதனால் ஆவிகள் உலவுவதாக கூட இன்று வரை வதந்திகள் உலவுகின்றன.

1943 - 1945 வரை ஜப்பானிய சித்ரவதைக்கு ஆளான வில்லியம் பிள்ளை கார்த்திகேசு

சிபில் கார்த்திகேசுவைப் போல அவருடைய கணவர் டாக்டர் கார்த்திகேசுவையும் கட்டி வைத்து அடித்தனர். தனக்கு ஒன்றுமே தெரியாது என்று அவர் மறுத்து விட்டார். அவர்களுடைய மகன் வில்லியம் பிள்ளையையும் ஜப்பானியர்கள் விட்டு வைக்கவில்லை.

அவனையும் ஒரு மரத்தில் கட்டித்
தொங்க விட்டனர். சித்ரவதை செய்தனர். தாயாரின் முன்னாலேயே பயங்கரமான சித்ரவதைகள் செய்தனர்.
தவம் கார்த்திகேசு தன் ஆங்கிலேயக் கணவருடன்
கடைசியாக மகள் தவம் கார்த்திகேசுவையும் சிதரவதை செய்து இருக்கின்றனர். இவை அனைத்தையும் பார்த்தும் சிபில் கார்த்திகேசு மனம் தளரவில்லை. ஜப்பானியர்களுக்கு எதிராகப் போராட்டம் செய்து வந்த மலாயா ஜப்பானிய எதிர்ப்பு போராளிகளைக் கடைசி வரை காட்டிக் கொடுக்கவில்லை.

சார்ஜண்ட் எக்கியோ யோஷிமுரா என்பவன் தான் அவர்களைச் சித்ரவதை செய்வதில்
தலைவனாக இருந்தவன். ஏறக்குறைய இரண்டரை ஆண்டுகள் ஒரு குடும்பமே ஜப்பானியரின் சித்ரவதைக்கு உள்ளாகி இருக்கிறது.

சிபில் கார்த்திகேசுவைக் கொடுமை படுத்திய எக்கியோ யோஷிமுரா
இரண்டாம் உலகப் போர் ஒரு முடிவுக்கு வந்தது. ஜப்பானியர்களின் ஆட்சியும் தோல்வி கண்டது. 1945 ஆம் ஆண்டு ஜப்பானியர்கள் மலாயாவில் இருந்து வெளியேறினர். ஆங்கிலேயர்கள் வந்தனர். கேப்டன் டேவிட் மெக்பர்லேன் என்பவர் சிபில் கார்த்திகேசுவைத் தேடும் முயற்சியில் இறங்கினார்.

இரண்டாவது உலகப் போரில் சரண் அடையும் ஜப்பான்
அவர் பத்து காஜா சிறையில் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது. உடனடியாக அவர் பாப்பான் பட்டணத்திற்கு கொண்டு வரப் பட்டார். பாப்பான், பூசிங் நகர மக்கள் அனைவருமே திரண்டு நின்று அவரை வரவேற்றனர்.

பின்னர், ஆங்கிலேயர்கள் அவரை உடனடியாக இங்கிலாந்திற்கு விமானத்தின் மூலமாகக் கொண்டு சென்றனர். அங்கே அவருக்கு வாழ்நாள் மருத்துவம் வழங்கப் பட்டது. அப்போதுதான் சிபில் கார்த்திகேசு No Dram of Mercy எனும் தன் சுயசரிதையையும் எழுதினார். அவரால் எழுத முடியவில்லை. மற்றவர் துணை கொண்டு எழுதினார்.

சிபில் கார்த்திகேசு எழுதிய சுயசரிதை
அப்போது சிபில் கார்த்திகேசுவை ஆறாம் ஜார்ஜ் மன்னர் பார்க்க ஆசைப் பட்டார். அவர் பக்கிங்ஹாம் அரண்மனைக்குத் தள்ளு வண்டியில் கொண்டு வரப் பட்டார். இந்தச் சமயத்தில் தான் ஜப்பானின் ஹீரோஷிமா, நாகாசாக்கியில் அணுகுண்டுகள் போடப் பட்டன.

அங்கே சிபில் கார்த்திகேசுவிற்கு இங்கிலாந்தின் ஆக உயரிய விருதான கிங் ஜார்ஜ் வீர விருது வழங்கிக் கௌரவிக்கப் பட்டது. மலேசியாவில் இதுவரை வேறு எந்தப் பெண்ணும் கிங் ஜார்ஜ் வீர விருதை பெற்றது இல்லை என்பது இங்கே குறிப்பிடத் தக்கது. ஆங்கிலேய அரசின் சகல மரியாதைகள், மிகச் சிறப்பான மருத்துவச் சேவைகள் சிபில் கார்த்திகேசுவிற்கு வழங்கப் பட்டன.

கிங் ஜார்ஜ் விருது
இருந்தாலும் ஜப்பானிய சித்ரவதையினால் ஏற்பட்ட உள் உடல் வேதனைகளை மருத்துவர்களால் முழுமையாகத் தீர்க்க முடியவில்லை.

1948 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12 ஆம் தேதி தன்னுடைய 49வது வயதில் அவர் இறந்து போனார். அவருடைய உடல் ஸ்காட்லாந்து லானார்க் எனும் இடத்தில் புதைக்கப் பட்டது. பின்னர் அந்தப் பூதவுடல் லானார்க் சமாதியில் இருந்து 20.3.1949ல் தோண்டி எடுக்கப் பட்டு, பினாங்கிற்கு கப்பல் வழியாகக் கொண்டு வரப்பட்டது. ஓர் ஆங்கில எழுத்தாளர் இப்படி எழுதி இருக்கிறார்.

ஸ்காட்லாந்தில் உள்ள லானார்க மருத்துவமனை.
இங்கே தான் சிபில் கார்த்திகேசு இறந்தார்.
”Her remains having arrived from Scotland by a ship to Penang and then travelled home to Ipoh 141 Brewster Road. One of the largest funeral processions ever seen in Perak took place. Sybil the Ipoh Heroine was treated in royal style and 100,000 people of Perak and from all parts of the country turned out to say goodbye.Even people came from Thailand,Vietnam,Borneo and Indonesia.”

ஸ்காட்லாந்தில் இருந்து அவருடைய உடல் பினாங்கிற்கு கப்பல் வழியாகக் கொண்டு வரப் பட்டது. அங்கு இருந்து பின்னர் ஈப்போவில் உள்ள அவருடைய புருவ்ஸ்டர் சாலை இல்லத்திற்கு கொண்டு செல்லப் பட்டது. பேராக் மாநிலம் இதுவரை கண்டிராத மாபெரும் இறுதி ஊர்வலம் அன்று ஈப்போவில் நடை பெற்றது.

ஈப்போ கோனாலி சாலையில் இருக்கும்
சிபில் கார்த்திகேசுவின் கல்லறை
அவருடைய உடல் ஈப்போ செயிண்ட் மைக்கல் மாதா கோயில் அருகில் இருக்கும் இடுகாட்டிற்கு எடுத்துச் செல்லப் பட்டது.அதை கொனாலி சாலை கிறிஸ்துவ மயானம் என்று இப்போது அழைக்கிறார்கள்.

சிபில் கார்த்திகேசுவின் உடல் எடுத்துச் செல்லப் படும் போது ஈப்போ நகரத்தின் வழி நெடுகிலும் நின்று ஓர் இலட்சம் சீனர்கள், மலாய்க்காரர்கள், இந்தியர்கள் கண்ணீர் விட்டு மரியாதை செய்தனர். வெளியூர், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களையும் சேர்த்து அந்தக் கணக்குச் சொல்லப் படுகிறது.

சிபில் கார்த்திகேசுவினால் உயிர் தப்பியவர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை பல ஆயிரங்கள். ஆகவே அவ்வளவு பெரிய
மக்கள் கூட்டம் கூடியதில் வியப்பு ஒன்றும் இல்லை. இது நடந்தது 1949 ஆம் ஆண்டில்.

மலேசிய மண்ணிலும் சரி, பேராக் மாநிலத்திலும் சரி இன்றும் சீனர்களிடையே சிபில் கார்த்திகேசு மிகவும் பிரபலமாகப் பேசப் படுகிறார். சிபில் கார்த்திகேசுவின் பெயரை ஈப்போ மாநகரத்தில் உள்ள ஒரு முக்கிய சாலைக்கு வைத்து பெருமையும் செய்து இருக்கிறார்கள்.

சீனர்கள் பலர் தங்கள்
பிள்ளைகளுக்கு சிபில் என்று பெயர் வைத்து சிபில் கார்த்திகேசுவை நினைத்துப் பார்க்கிறார்கள். மலேசியத் தமிழர்களில் இப்போதைய இளைஞர்களுக்கு அவரைப் பற்றி தெரியாமல் இருக்கிறது.

அவர் வாழ்ந்து மறைந்த பாப்பான் பட்டணத்து இல்லம் ஓர் அருங்காட்சியகமாக இப்போது மாற்றப் பட்டுள்ளது. அவர் பயன்படுத்திய துணிமணிகள், பீங்கான் தட்டுகள், குவளைகள், படுக்கை விரிப்புகள், குடும்பப் படங்கள், அலுமினியப் பொருட்கள், மருந்துப் பெட்டிகள் அனைத்தும் சேகரிக்கப் பட்டு பத்திரமாகக் காட்சிக்கு வைக்கப் பட்டுள்ளன.

சீனா, தைவான், ஹாங்காங், வியட்நாம், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா போன்ற நாடுகளில் இருந்து வரும் சீனர்கள் அவருடைய சமாதிக்குச் சென்று மலர் வளையங்கள் சார்த்தி விட்டுச் செல்கின்றனர்.

ஒல்கா கார்த்திகேசு - சிபில் கார்த்திகேசுவின் மூத்த மகள்

சிபில் கார்த்திகேசுவிற்கு மூன்று பிள்ளைகள்:

1. வில்லியம் பிள்ளை (பிறப்பு 1918)
2. ஒல்கா கார்த்திகேசு (பிறப்பு 1921)
3. தவம் கார்த்திகேசு (பிறப்பு 1936)

கார்த்திகேசு தம்பதியினரின் முதல் மகன் மைக்கல் கார்த்திகேசு பிறந்த ஒரு சில மணி நேரத்தில் இறந்து போனார். அதனால் அவர்கள் வில்லியம் பிள்ளை எனும் சிறுவனை எடுத்து வளர்த்தனர். இவரும் ஜப்பானியர்களால் கைது செய்யப் பட்டார். அப்போது அவருக்கு 30 வயதிற்கும் கூடுதலாக இருக்கும். வில்லியம் பிள்ளை, கோப்பேங் சிறையில் சித்ரவதை செய்யப் பட்டார்.
சிபில் கார்த்திகேசுவின் கல்லறையில்
அதற்கு பிறகு அவர் தைப்பிங் சிறைச் சாலைக்கு அனுப்பப் பட்டார். மலாயாவில் இருந்து ஜப்பானியர்கள் வெளியானதும் இவரும் விடுவிக்கப் பட்டார். பின்னர், இவர் நிங் பாய்க் சூ எனும் ஈப்போ சீனப் பெண்ணை மணந்தார். இவரைப் பற்றிய மேல் விவரங்கள் கிடைக்கவில்லை.

பெற்றோர்களையும் அண்ணன் வில்லியம் பிள்ளையையும் ஜப்பானியர்கள் பிடித்துக் கொண்டு போனதும் தனது பாட்டியையும் கடைசி தங்கை தவம் கார்த்திகேசுவையும் பராமரிக்க வேண்டிய பொறுப்பு இரண்டாவது மகள் ஒல்கா கார்த்திகேசுவின் மீது விழுந்தது.

சிபில் கார்த்திகேசுவின் படுக்கை அறை
தவம் கார்த்திகேசுவிற்கு அப்போது ஏழு வயது. அந்தச் சிறுமியையும் ஜப்பானியர்கள் விட்டு வைக்கவில்லை. அவளையும் பிடித்துக் கொண்டு போய் சித்ரவதை செய்துள்ளனர். அந்த வேதனையையும் தாங்க வேண்டிய நிலைமை ஓல்காவிற்கு ஏற்பட்டது.

ஒல்கா கார்த்திகேசு இன்னும் ஈப்போவில்
வாழ்கிறார். இவருக்கு வயது 90. இவருக்கு ஈப்போ சீனர்களும் தமிழர்களும் அனைத்து உதவிகளையும் செய்து வருகின்றனர். (கடைசி தகவல்: 2009)

1952 ஆம் ஆண்டு சிபில் கார்த்திகேசுவின் கடைசி மகள் தவம் கார்த்திகேசுவிற்கு மருத்துவம் படிக்க இங்கிலாந்து அரசு நிதியுதவி செய்தது. அவர் லண்டன் சென்று இரண்டு ஆண்டுகள் படித்து விட்டு படிப்பை நிறுத்திக் கொண்டார். மூன்று ஆண்டுகள் ஊர் சுற்றி விட்டு 1957 ஆம் ஆண்டு மலேசியா திரும்பினார்.

பாப்பான் பட்டணத்தில் இருக்கும்
சிபில் கார்த்திகேசு அரும் காட்சியகம்
இங்கிலாந்தில் இருக்கும் போது அங்கேயே தவம் கார்த்திகேசு ஓர் ஆங்கிலேய வழக்கறிஞரைக் காதலித்துத் திருமணமும் செய்து கொண்டார். நாடு திரும்பிய தவம் கார்த்திகேசு தன் அக்காள் ஒல்கா கார்த்திகேசுவை இங்கிலாந்திற்கு வரும்படி அழைத்தார்.

ஒல்கா மறுத்து விட்டார். தன் தந்தை கார்த்திகேசுவின்
கடைசி காலம் வரை அவருடனே இருப்பேன் என்று பிடிவாதம் பிடித்தார். சொன்னபடி தன் தந்தையின் கடைசி கால்ம் வரை இருந்தார். 1972 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தன்னுடைய 81 வது வயதில் டாக்டர் கார்த்திகேசு காலமானார். இவருடைய உடல் ஈப்போ தம்பூன் எனும் இடத்தில் அடக்கம் செய்யப் பட்டுள்ளது

சிபில் கார்த்திகேசுவைப் பற்றிய
மற்றொரு நூல்

சிபில் கார்த்திகேசுவைப் பற்றிய நூல்கள்:

1.No Dram of Mercy, Neville Spearman, 1954; Oxford University Press.

2.Faces of Courage: A Revealing Historical Appreciation of Colonial Malaya's Legendary Kathigasu

Family by Norma Miraflor & Ian Ward

சிபில் கார்த்திகேசுவைப் பற்றிய ஒரு தொலைக்காட்சித் தொடர் நாடகத்தை 1997 ஆம் ஆண்டு சிங்கப்பூர் தொலைக்காட்சி நிலையம் ஒளிபரப்பு செய்தது.

பின்னர்
மலேசியாவின் அஸ்ட்ரோ தொலைக் காட்சி நிலையம் Apa Dosaku? எனும் தலைப்பில் 10 வாரங்களுக்கு சிபில் கார்த்திகேசு பற்றிய நாடகத் தொடரை ஒளிபரப்பு செய்தது.

Apa Dosaku தொலைக்காட்சி நாடகத் தொடர்

அண்மையில் அவர் வாழ்ந்த அந்த பாப்பான் நகரத்து வீட்டை நானும் சென்று பார்த்தேன். அப்போது ஐந்தாறு சீனர்கள் மௌனமாகக் கண்களை மூடிக் கொண்டு நின்றனர். அனைவரும் மிக மிக வயதானவர்கள்.

கண்களைக் குளமாக்கும் சிபில்
கார்த்திகேசுவின் பாப்பான் இல்லம்
அவர்களின் அத்தனை பேரின் கண்களில் இருந்து கண்ணீர் வடிவதைப் பார்த்தேன். அதைப் பார்த்த என் கண்களும் குளமாகிப் போயின. என் மனதில் ஓர் இறுக்கம். அவர் பயன் படுத்திய சில பொருட்களையும் தடவிப் பார்த்தேன். சிபில் கார்த்திகேசு அந்தப் பொருட்களில் இருந்து புன்னகை செய்து கொண்டு இருந்தார். இந்தக் கட்டுரையை எழுதும் போது என் மனம் ரொம்பவும் வலிக்கின்றது. சத்தம் போடாமல் அழவும் செய்கின்றது.

(இந்தக் கட்டுரை மலேசிய நண்பன் நாளிதழில் விரைவில் பிரசுரம் ஆகிறது)

21 ஏப்ரல் 2011

விக்கிபீடியாவில் எனது பங்களிப்புகள்

இணையக் கலைக் களஞ்சியமான விக்கிபீடியாவில் மலேசியாவைப் பற்றி சில கட்டுரைகளை எழுதியுள்ளேன். அவற்றின் விவரங்கள்:


http://ta.wikipedia.org/wiki/மலாக்கா

http://ta.wikipedia.org/wiki/நீல_உத்தமன்

http://ta.wikipedia.org/wiki/பேராக்

http://ta.wikipedia.org/wiki/ஈப்போ

http://ta.wikipedia.org/wiki/ஜாசின்


தயவு செய்து படித்து விட்டு உங்களுடைய கருத்துகளைத் தெரியப் படுத்துங்கள். வேறு எந்தத் தலைப்பில் எழுதலாம் என்பதையும் சொல்லுங்கள். மலேசியாவைப் பற்றியும் மலேசியத் தமிழர்களைப் பற்றியும் உலக மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதே நம்முடைய விருப்பம். நன்றி.

06 மார்ச் 2011

கணினியும் நீங்களும் - 90

அன்பு நெஞ்சங்களே, குடும்பப் படங்களைப் பதிப்பு செய்கிறேன். மற்ற பேரப் பிள்ளைகளின் படங்களை வெளியிட முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்.

Third grand daughter - Srilekha
 
First Grand Daughter - Harshitra

Second Grandson - Haresh

Fifth Grand daughter - Srinitha

(இன்னும் இரண்டு மூன்று வாரங்களுக்கு இந்தப் பகுதி வெளிவருவதில் சற்று சுணக்கம் ஏற்படலாம். ’மலேசிய நண்பன்’ திங்கள் கிழமைகளில் வெளிவரும் ‘மாணவர் சோலை’  பகுதியையும் தயாரித்து வ்ருகிறேன். அதனால் என்னுடைய கணினியில் பழைய Pagemaker ஐ பதிப்பிக்க வேண்டி வந்தது. ஆகவே Indo Word ஐ பயன் படுத்த வேண்டிய கட்டாய நிலைமையும் ஏற்பட்டது.  இரண்டுக்கும் இடையே சின்னச் சின்ன சிக்கல்கள். தவிர்க்க முயற்சி செய்து வருகிறேன்.  அது வரை பொறுத்துக் கொள்ளுங்கள்.)




குமாரி கமலாதேவி (குறும் செய்தி 22.02.2011)
கே: Facebook - பேஸ்புக் இணையத் தளத்தை இந்த ஆண்டு மார்ச் மாதம் 15ஆம் தேதி மூடப் போகிறார்களாமே. உண்மையா?

ப:
பேஸ்புக் என்பது ஒரு நட்பு ஊடகம். இந்த ஆண்டு ஜனவரி மாதம் வரை உலகம் முழுமையும் 700 மில்லியன் பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். அதன் சொத்து மதிப்பு 4100 கோடி மலேசிய ரிங்கிட். மறுபடியும் சொல்கிறேன். 4100 கோடி மலேசிய ரிங்கிட். 



அதாவது நம்முடைய வடக்கு-தெற்கு பிளஸ் நெடுஞ்சாலை இருக்கிறதே அதைப் போல நான்கு நெடுஞ்சாலைகளைப் கட்டி விடலாம். அதில் இருந்து ஒரு வருடத்திற்கு ஆயிரம் கோடி ரிங்கிட் வருமானம் வேறு வருகிறது.

மைக்ராசாப்ட் நிறுவனம் பல நூறு கோடிகளை முதலீடு செய்து இருக்கிறது. பல ஆயிரம் ஆயிரம் பேர் கோடிக் கோடியாக முதலீடு செய்து இருக்கிறார்கள். அதை நம்பி பல இலட்சம் குடும்பங்கள் வேறு வாழ்கின்றன.

உலகத்திலேயே அதிகமான வருமானம் கிடைக்கும் நிறுவனமாகவும் இருக்கிறது. பேஸ்புக் என்பது தங்க முட்டைகள் போடும் ஒரு வாத்து. அவ்வளவு சீக்கிரத்தில் கசாப்புக் கடைக்கு அனுப்ப மாட்டார்கள். உட்கார்ந்து இருக்கும் இடத்திலேயே பணம் வந்து கொட்டுகிறது. 



அதை வேண்டாம் என்று சொல்வதற்கு அவர்கள் என்ன பைத்தியமா. இது என்னுடைய கருத்து. அதை மூடப் போவதாக வெளியான செய்தியில் உண்மை இல்லை. அது வெறும் ஒரு வதந்தி. உலகம் இன்னும் இரண்டு ஆண்டுகளில் அழிந்து போகும் என்று ஒரு புரளி கிளம்பியதே. அந்த மாதிரி தான் இதுவும்.

இந்த பேஸ்புக் நட்பு ஊடகத்தை உருவாக்கியவர் மார்க் ஜூக்கர்பர்க். அமெரிக்காவில் உள்ள ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் படித்தவர். 2004ல் உருவாக்கினார்.

இந்த வலைத்தளத்தினால் பல சமுதாயச் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. அந்த மாதிரியான சமுதாயச் சிக்கல்களுக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று சில மாதங்களுக்கு முன்னால் சொன்னார்.

பேஸ்புக்கை மூடி விட வேண்டும் என்று அவர் சொல்லவே இல்லை. புரிகிறதா. அவர் மூடுவதாக இருந்தாலும் மற்றவர்கள் விட மாட்டார்கள்.

ஆக, கவலைப் பட வேண்டாம். இணையம் இருக்கும் வரையில் பேஸ்புக்கும் இருக்கும். பேஸ்புக் இருக்கும் வரையில் இணையமும் இருக்கும்.

அப்படியே பேஸ்புக்கை மூடுகிறார்கள் என்றால் அது ஓர் உலக மகா அதிசயமாகத் தான் இருக்கும். பல இளைஞர்களின் சாவுக்கு அவர்கள் காரணமாக இருக்க மாட்டார்கள்.

உதய்க்குமார் <uthayakumar15@gmail.com>
கே: பேஸ்புக்கை ஏன் எல்லோரும் விரும்புகிறார்கள்?

ப:
பேஸ்புக்கில் 13 வயதிற்கு மேற்பட்டவர்கள் யாரும் உறுப்பினர் ஆகலாம். ஆயிரக்கணக்கான வயோதிகர்களும் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இங்கிலாந்தைச் சேர்ந்த 102 வயது பாட்டி ஒருவர் பேஸ்புக்கில் உறுப்பினர் ஆகி சரித்திரம் படைத்தார். 



'The Social Network' எனும் பேஸ்புக் திரைப்படம் வேறு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தயாரிக்கப் பட்டது. சரி. உங்கள் கேள்விக்கு வருகிறேன்.

பேஸ்புக்கை ஏன் எல்லோரும் விரும்புகிறார்கள்? மனித உறவுகள் பலகீனம் அடைந்து வருகின்றன. மனிதர்கள் தீவுக் கூட்டங்களாக மாறி வருகிறார்கள். கடந்த காலத்தைப் போல குடும்பம் என்பது ஒரு வலுவான அமைப்பாக இப்போது இல்லை. அவசர உலகில் குடும்ப உறவுகள் சிதைந்து வருகின்றன.

அதனால், மனிதர்கள் தனித்து விடப் படுகிறார்கள். அவர்கள்  உறவுகளைத் தேடி அலைகிறார்கள். இப்போதைய நவீன காலத்து  மனிதர்கள் குடும்பப் பொறுப்புகளைத் தவிர்க்கப் பார்க்கின்றனர்.

அவற்றின் பயன்களை மட்டுமே அனுபவிக்க விரும்புகின்றனர். கல்யாணம் பண்ணாமலேயே கணவன் மனைவியாக வாழ்வது எளிமை என்கின்றனர்.

ஆக அத்தகைய மனிதர்களுக்கு பேஸ்புக் போன்ற நட்பு ஊடகங்கள் வரப்பிரசாதமாக அமைகின்றன. மேலும் Twitter, Orkut, Myspace, Mixi, LinkedIn, hi5, Flickr, Bebo போன்ற சமூக ஊடகங்களும் உள்ளன.

இந்தத் தளங்களில் உங்களுடைய உணர்வுகளை நினைத்த நேரத்தில் அப்படியே கொட்டலாம். புதிய நண்பர்களைத் தேடிக் கொள்ளலாம். அரட்டை அடிக்கலாம். புகைப்படங்களைப் பரிமாறிக் கொள்ளலாம்.

அவர்களிடம் அந்தரங்கச் செய்திகளைப் பகிர்ந்து கொள்ளலாம். ஆறுதலான செய்திகள் வரும். ஆவேசமான கருத்து களும் வரும். பிறந்த நாளை நாமே மறந்து போனாலும் அதை நினைவில் வைத்து வாழ்த்து சொல்லும் நண்பர்களும் இருக்கிறார்கள்.

பணம் மட்டும் எல்லா மகிழ்ச்சியையும் கொடுத்து விடும் என்பதை மாற்றி அமைத்தவை இந்தச் சமூகத் தளங்கள். அதனால் தான் சின்னவர்களில் இருந்து பெரியவர்கள் வரை பேஸ்புக்கிற்கு அடிமையாகிக் கொண்டு வருகிறார்கள். அமெரிக்காவில் 100ல் 41 பேர் பேஸ்புக் கணக்கு வைத்து இருக்கிறார்கள்.

மலேசியாவில் இளைஞர்கள் இடையே பேஸ்புக் பேய்க் காய்ச்சல் ரொம்ப வேகமாக அடிக்கிறது. கொஞ்ச காலமாக எனக்கும் அந்தக் காய்ச்சல். என்ன என்னவோ மருந்தை எல்லாம் சாப்பிடுகிறேன்.

உஹூம். முடியவில்லை. காய்ச்சல் நிற்பதாக இல்லை. அதற்கு காரணம். நேபாளத்தில் உள்ள பேஸ்புக் நண்பர். அவர் ஒரு 60 வயது விதவை. தப்பாக நினைக்க வேண்டாம். நாங்கள் எங்களுடைய பேரப் பிள்ளைகளைப் பற்றித் தான் பேசிக் கொள்கிறோம். வேறு ஒன்றும் இல்லை.


மு.கோமதி, தாமான் ரிஷா, ஈப்போ
கே: உலகில் எந்த எந்த நாடுகளில் பேஸ்புக் தடை செய்யப்பட்டுள்ளது?
ப:
சீனா, வியட்நாம், ஈரான், உஸ்பெக்கிஸ்தான், பாகிஸ்தான், சிரியா, வங்காள தேசம். சமய அரசியல் காரணங்களுக்காகத் தடை செய்யப் பட்டு உள்ளன. பேஸ்புக் தடை செய்யப் பட்டுள்ளது. 



எப்படித்தான் தடை செய்தாலும் மாற்று இணையத் தளங்களைக் கொண்டு பேஸ்புக்கைப் பார்க்க முடியும். உலகில் முக்கால் வாசி பகுதிகள் அழியக் கூடிய ஓர் இயற்கைப் பேரிடர் கொடுமை ஏற்பட்டாலும் இணையத்தை அழைக்க முடியாது.மலேசியாவில் பேஸ்புக்கைத் தடை செய்ய மாட்டார்கள்.

ஏனென்றால் அரசாங்கத்தின் சில செய்திகள் இந்த இணையத் தளத்தின் மூலமாக மக்களைப் போய்ச் சேர்கின்றன. ஆக, பேஸ்புக்கினால் சில கெடுதல்கள் இருந்தாலும் நன்மைகள்தான் அதிகம். 

செ.இராதாகிருஷ்ணன், தியாக துருகம், விழுப்புரம், தமிழ்நாடு
கே: அய்யா, ஐந்து வயதில் நடந்த ஒரு விபத்தில் என் இரு விழிப் பார்வையையும் இழந்தேன். பார்வையற்றோர் பள்ளியில் பயின்றேன். சென்னை லாயோலா கல்லூரியில் இளங்கலைப் பட்டத்தையும் தஞ்சை அரசக் கல்லூரியில் ஆசிரியர் பயிற்சியையும் பெற்றேன். பின்னர், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முது கலைப் பட்டம் படித்தேன். இப்போது ரிஷ’வந்தியம் அரசுப் பள்ளியில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றுகிறேன்.

உங்களுடைய கணினியும் நீங்களும் கணினித் தொடரை சமீபத்தில் இணையத்தில் படித்தேன். அறிவாந்த முறையிலும் அழகான தமிழிலும் விளக்கம் தருகிறீர்கள். நான் nvda, jaws எனும் நிரலிகளின் துணையுடன் கணினியையும் இணையத்தையும் இயக்கி வருகிறேன்.


இது என்னுடைய முதல் மின்னஞ்சல். அதனை nvda நிரலியைப் பயன்படுத்தித் தட்டச்சு செய்தேன். கணினித் தொடர்பான சந்தேகங்களை நிறைய உங்களிடம் கேட்க வேண்டும். உங்கள் அருள் மழையும் அறிவு மழையும் என் மீது பொழிய வேண்டும்.

ப:
அன்புச் சகோதரரே, உங்களுடைய கடிதத்தைப் படித்து மனம் கலங்கிப் போனேன். பார்வை இல்லை என்று நீங்கள் கவலையே பட வேண்டாம். 



ஆனால், பார் போற்றும் ஆற்றலும் திறமையும் உங்களுக்கு இருக்கிறதே. அவற்றைக் கொண்டு சாதனை செய்கிறீர்களே. பார்வையற்றவர்கள் படிக்க கேட்க, அவர்கள் சொல்லுவதை எழுத nvda, jaws நிரலிகள் உள்ளன. அவற்றை நீங்கள் பயன் படுத்துவதைக் கண்டு மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன்.

பார்வை உள்ள பல இலட்சம் பேருக்கு nvda, jaws நிரலிகளைப் பற்றித் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. NVDA என்றால் Non Visual Desktop Access. பார்வையற்றவர் கணினிப் பயன்பாடு என்று தமிழில் அழைக்கலாம்.

JAWS என்றால் இராட்சச சுறா அல்ல. இது ஒரு கணினி மென்பொருள். Job Access With Speech என்பதன் சுருக்கம். இந்த இரண்டும் இருந்தால் பார்வை இல்லாமல் இணையத்தைப் பயன்படுத்தலாம்.

ஓர் இணையப் பக்கத்திற்குப் போனதும் கணினித் திரையில் தெரியும் இணையப் பக்கங்களைப்  கணினி படிக்கத் தொடங்கும்.

அதற்குப் பதில் எழுத வேண்டும் என்று சொன்னால் கணினி உடனே  தட்டச்சு செய்யும். என்ன எழுத்தில் எவ்வளவு பெரிய எழுத்தில் என்று சொன்னால் போதும். அழகாகத் தட்டச்சு செய்து விடும்.

அப்புறம் அனுப்பு என்றால் யாருக்கு அனுப்ப வேண்டுமோ அவருக்கு மின்னஞ்சல் செய்து விடும். உங்களுடைய முதல் மின்னஞ்சலை எனக்கு அனுப்பி வைக்கிறீர்கள்.

அன்பு இராதாகிருஷ்ணன் அவர்களே, உங்களுடைய மின்னஞ்சலை இலட்சக்கணக்கான மலேசிய நண்பன் வாசகர்கள் படிக்கிறார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன். அவர்களின் சார்பில் உங்களுக்கு எங்களின் அன்பான வாழ்த்துகள்.

என்னுடன் பேச விரும்புவதாகச் சொன்னீர்கள். இணையத்தின் மூலமாகப் பேச முடியும். 'ஸ்கைப்' நிரலியை உங்களுக்காகத் திறந்து விட்டு இருக்கிறேன். எப்போது வேண்டும் என்றாலும் என்னுடன் பேசலாம். நீங்கள் நலமாக வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

27 பிப்ரவரி 2011

பரமேஸ்வரன் மலாக்காவைக் கண்டுபிடித்தாரா?

அண்மைய காலங்களில் பரமேஸ்வரா எனும் பெயர் மலேசிய வரலாற்றில் இரட்டடிப்பு செய்யப் படுவது அனைவரும் அறிந்த விஷயம். மலேசியப் பாட நூல்களில் இருந்தும் பரமேஸ்வரா காணாமல் போய் வருகிறார். கொட்டாங்கச்சிக்கு அடியில் ஒளிந்து கொண்டு உலகம் இருண்டு விட்டது என்று சில மலேசிய வரலாற்றுக் கத்துக்குட்டிகள் கத்துகின்றன.  தொண்டை கிழிய கத்தி விட்டுப் போகட்டும்.


பரமேஸ்வரா வரலாற்றில் மறைந்து விடக் கூடாது

ஆனால் உண்மையை மறைத்து எவ்வளவு காலத்திற்கு தான் வாழ முடியும். உலக மக்களை எத்தனை காலத்திற்குத் தான் ஏமாற்ற முடியும். சொல்லுங்கள். உருவாக்கி விட்டவன் ஒருவன். பெயரை வாங்கிக் கொள்வது வேறு ஒருவனா.


பரமேஸ்வரா எனும் பெயர் வரலாற்றில் இருந்து மறைந்து விடக் கூடாது. மறக்கப் படவும் கூடாது. அதற்காக விக்கிபீடியா இணையக் கலைக் களஞ்சியத்தில் அவரைப் பற்றிய ஒரு வரலாற்றையே எழுதி இருக்கிறேன். மேலும் சான்றுகளைத் தேடிக் கொண்டு இருக்கிறேன்.

விக்கிபீடியாவில் பரமேஸ்வரா

http://ta.wikipedia.org/wiki/பரமேசுவரா எனும் இடத்தில் முழு விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம். இந்த வலைப்பதிவில் பரமேஸ்வரா பற்றிய சில முக்கிய தகவல்களை மட்டும் பகிர்ந்து கொள்கிறேன். சரி. விஷயத்திற்கு வருகிறேன்.


மலாக்காவைக் கண்டுபிடித்தது பரமேஸ்வரன் என்பவரா. இல்லை ஸ்ரீ இஸ்கந்தார் ஷா என்பவரா. இல்லை சுல்கார்னாயின் ஷா எனும் அலெக்ஸாண்டரா? மலேசிய வரலாறுகளில் இந்தச் சர்ச்சை இன்னும் ஓடிக் கொண்டு இருக்கிறது.

அதற்கு தீர்வு காண இந்த ஆவணம் சரியாக அமையும் என்றும் நம்புகிறேன்.

பரமேஸ்வரன் எனும் சொல் சமஸ்கிருத மொழியில் இருந்து தருவிக்கப் பட்ட தமிழ்ச் சொல். பரமா எனும் சொல்லும் ஈசுவரன் எனும் சொல்லும் இணைந்து பெற்றதே பரமேசுவரன் எனும் சொல் ஆகும். இந்துக் கடவுளான சிவனுக்கு மற்றொரு பெயர் ஈசுவரன்.

பரமேஸ்வரனின் வாழ்க்கை வரலாறு

    *  1344 - ஸ்ரீ ராணா வீரா கர்மா எனும் சிங்கப்பூர் ராஜாவுக்கு மகனாகப் பிறந்தார்.

  * 1399 - தந்தையின் இறப்பிற்குப் பின் ஸ்ரீ மகாராஜா பரமேசுவரா எனும் பெயரில் சிங்கப்பூர் அரியணை ஏறினார்.

    * 1401 - சிங்கப்பூரில் இருந்து வெளியேற்றப் பட்டார்.

    * 1402 - மலாக்காவைத் தோற்றுவித்தார்.

    * 1405 - சீனாவிற்குச் சென்று மிங் அரசரின் ஆதரவைப் பெற்றார்.

   * 1409 - பாசாய் நாட்டின் இளவரசியைத் திருமணம் செய்து கொண்டார். சமயம் மாறினார். மலாக்கா ஒரு சுல்தான் ராஜ்யமாக மாறியது.

    * 1411 - சீனாவிற்கு மறுபடியும் சென்று மிங் அரசரிடம் பாதுகாப்பை நாடினார்.

    * 1414 - தன்னுடைய 69 அல்லது 70 ஆவது வயதில் காலமானார்.

மலாக்காவைக் கண்டுபிடித்தல்

ஜாவாவை ஆண்டு வந்த ஸ்ரீ விஜயா பேரரசின் செல்வாக்கு 14 ஆம் நூற்றாண்டில் படிப்படியாகக் குறையத் தொடங்கியது. மலாய்த் தீவுக் கூட்டங்களில் இருந்த சிற்றரசர்களின் அச்சுறுத்தல்களும் அதிகரித்து வந்தன.


ஸ்ரீ விஜயா எனும் பேரரசு ஜாவாத் தீவின் வரலாற்றில் மங்காதப் புகழைப் பெற்ற ஒரு மாபெரும் பேரரசு. சுற்று வட்ட அரசுகள் அனைத்தும் ஸ்ரீ விஜயா பேரரசிடம் திறை செலுத்தி வந்தன.

திறை என்றால் கப்பம். ஒரு பேரரசுக்கு மற்றொரு சிற்றரசு செலுத்தும் வரியைத் தான் கப்பம் என்பார்கள். அப்படி மற்ற சிற்றரசுகளிடம் இருந்து திறைகள் வாங்கிய ஸ்ரீ விஜயா பேரரசு, 1290 ஆம் ஆண்டில் ஜாவாவில் இருந்து விரட்டப் பட்டது.

அதன் பின்னர் ஜாவாவில் சிங்கசாரி எனும் ஒரு புதிய அரசு உருவானது.  அடுத்து ஸ்ரீ விஜயா பேரரசின் செல்வாக்கும் சன்னம் சன்னமாகக் குறையத் தொடங்கியது.  தொடர்ந்து சிங்கசாரி வலிமை வாய்ந்த பெரும் அரசாகவும் மாறியது.

ஸ்ரீ விஜயா பேரரசு

இந்த சிங்கசாரி அரசு, மஜாபாகிட் பேரரசின் வழித் தோன்றல் ஆகும். மலாயு எனும் இடத்தில் ஸ்ரீ விஜயா பேரரசின் அரண்மனை இருந்தது.

சிங்கசாரி அரசு கட்டிய கோட்டை
அந்த அரண்மனையைச் சிங்கசாரி அரசு தாக்கிய சம்பவங்கள் நிறைய  உள்ளன. மலாயு எனும் இடம் இப்போது ஜாம்பி என்று அழைக்கப் படுகின்றது. பின்னர் ஸ்ரீ விஜயா பேரரசு தன்னுடைய தலைநகரத்தைப் பலேம்பாங்கில் இருந்து மலாயுவிற்கு மாற்றியது.

இருப்பினும் பலேம்பாங் முக்கியமான அரச நகராகவே விளங்கி வந்தது. 14 ஆம் நூற்றாண்டில் பலேம்பாங் அரச நகரமும் மஜாபாகிட் பேரரசின் கரங்களில் வீழ்ந்தது. அத்துடன் மாபெரும் ஸ்ரீ விஜயா பேரரசின் 1000 ஆண்டுகள் ஆளுமைக்கு ஒரு முற்றுப் புள்ளியும் வைக்கப் பட்டது. ஒரு சகாப்தம் வீழ்ந்தது.

பலேம்பாங் தோற்கடிக்கப் பின்னர் ஸ்ரீ விஜயா அரசக் குடும்பத்தினர் பிந்தான் தீவில் அடைக்கலம் அடைந்தனர். அத்துடன் ஸ்ரீ விஜயா அரச குடும்பத்தினருடன் பல ஆயிரம் மக்களும் அந்தத் தீவில் தஞ்சம் அடைந்தனர்.

பலேம்பாங் சாம்ராஜய கல்வெட்டு
அடுத்தக் கட்டமாக பிந்தான் தீவில் தற்காலிகமாக ஸ்ரீ விஜயா ஓர் அரசாட்சியை உருவாக்கிக் கொண்டது. அதற்கு சாங் நீல உத்தமன் என்பவர் அரசர் ஆனார். இந்தக் காலக் கட்டத்தில் துமாசிக் எனும் சிங்கப்பூரைத் தெமாகி எனும் ஒரு சிற்றரசர் ஆண்டு வந்தார்.

சாங் நீல உத்தமன்
தெமாகியைச் சியாம் நாட்டு அரசு ஒரு சிற்றரசராக  ஏற்கனவே நியமனம் செய்து வைத்தது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். 1324ல் பிந்தான் தீவில் இருந்து வந்த சாங் நீல உத்தமன் திடீரென்று துமாசிக்கின் மீது தாக்குதல் நடத்தினார். அந்தத் தாக்குதலில் தெமாகி சிற்றரசர் கொல்லப் பட்டார்.

சாங் நீல உத்தமன்
இதனால் சாங் நீல உத்தமன் சியாம் அரசின் கோபத்திற்கும் உள்ளானார். பின்னர் சிங்கப்பூர் ஓர் ஊர் உருவாக்கப் பட்டது. ஓர் ஊர் தான். நகரம் அல்ல. அதை உருவாக்கியவர் சாங் நீல உத்தமன். அடுத்து வந்த 48 ஆண்டுகளுக்கு சிங்கப்பூர் அவருடைய கட்டுப்பாட்டில் இருந்தது. வளர்ச்சியும் பெற்றது.

1366ல் சீனாவில் இருந்து ஒரு சீனத் தூதர் சிங்கப்பூருக்கு வந்தார். அவர் சீன அரசரின் பிரதிநிதியாகும். அவர் சாங் நீல உத்தமனைச் சிங்கப்பூரின் அதிகாரப் பூர்வமான ஆட்சியாளராக ஏற்றுக் கொண்டார். சாங் நீல உத்தமனுக்கு Sri Maharaja Sang Utama Parameswara Batara Sri Tri Buana எனும் சிறப்புப் பெயரும் வழங்கப் பட்டது.

சாங் நீல உத்தமனுக்குப் பிறகு அவருடைய மகன் ஸ்ரீ பராக்கிரம வீர ராஜா என்பவர் சிங்கப்பூரின் ராஜாவாகப் பதவி ஏற்றார். இவர் 1372 லிருந்து 1386 வரை சிங்கப்பூரை ஆட்சி செய்தார்.

அந்தச் சமயத்தில் சிங்கப்பூரின் உள் ஆட்சியில் சில திருப்பங்கள் ஏற்பட்டன. குடும்பச் சச்சரவுகள் தான். அதனால் சாங் நீல உத்தமனின் பேரனாகிய ஸ்ரீ ராணா வீரா கர்மா என்பவர் சிங்கப்பூரின் ஆட்சிப் பதவி ஏற்க வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டது.

பரமேஸ்வராவின் வரலாற்றுப் பயணம்

இவர் சிங்கப்பூரை 13 ஆண்டுகள் ஆட்சி செய்தார். இந்தக் காலக் கட்டத்தில் சுமத்திராவில் இருந்த மஜாபாகித் அரசு திடீரென்று சிங்கப்பூரின் மீது தாக்குதல் நடத்தியது.

மஜாபாகித் சாம்ராஜ்யத்தின் சின்னம்
புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட சிங்கப்பூர் அரசு ஏற்கனவே மஜாபாகித்தின் மீது சில தாக்குதல்களையும் நடத்தியுள்ளது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். அந்தத் தாக்குதல்களுக்குப் பழி வாங்கும் படலமாக இந்த மஜாபாகித் அரசின் திடீர் தாக்குதலும் அமைந்தது.

ஸ்ரீ மகாராஜா பரமேஸ்வரா என்பவர் சாங் நீல உத்தமனின் கொள்ளுப் பேரன் ஆகும். இவர் மஜாபாகித்தின் தாக்குதலில் இருந்து தப்பிக்க நினைத்தார். அதனால் சிங்கப்பூரில் இருந்து வெளியேறினார்.

ஸ்ரீ மகாராஜா பரமேஸ்வரா தன்னுடன் சில நேர்மையான விசுவாசிகளையும் அழைத்துக் கொண்டு மலாயாவின் பெருநிலப் பகுதிக்குள் நுழைந்தார். மலேசியாவின் பழைய பெயர் மலாயா. மலாயாவின் வடக்குப் பக்கமாக முன்னேறி வரும் போது மூவார் எனும் இடத்தை அடைந்தார்.

நவீன மூவார் நகரம்
மூவார் பகுதியில் பியாவாக் பூசோக் (அழுகிப் போன உடும்பு) எனும் ஓர் இடம் இருக்கிறது. அதற்கு அருகாமையில் கோத்தா பூரோக் எனும் மற்றோர் இடமும் இருக்கிறது. இந்த இரு இடங்களில் ஏதாவது ஓர் இடத்தில் தன்னுடைய புதிய அரசை உருவாக்கலாம் என்று பரமேஸ்வரா தீர்மானித்தார்.

நன்கு ஆராய்ந்து பார்த்ததில் அந்த இடங்கள் இரண்டுமே பரமேஸ்வராவுக்குப் பிடிக்கவில்லை. ஒரு புதிய அரசு அமைக்க பொருத்தமாகவும் அமையவில்லை. ஆகவே அவர் தொடர்ந்து வட திசையை நோக்கிப் பயணத்தை மேற்கொண்டார்.

அப்படி போய்க் கொண்டிருக்கும் போது செனிங் ஊஜோங் எனும் இடத்தை அடைந்தார். இந்த செனிங் ஊஜோங் இப்போது சுங்கை ஊஜோங் என்று அழைக்கப் படுகிறது.

இந்த இடத்தில் இருந்து சற்று தள்ளி ஒரு மீன்பிடி கிராமம் தென்பட்டது. அந்தக் கிராமம் பெர்த்தாம் ஆற்றின் துறைமுகத்தில் இருந்தது. பெர்த்தாம் ஆறு இப்போது மலாக்கா ஆறு என்று அழைக்கப் படுகின்றது.

பழைய மலாக்கா நகரம்
அந்த மீன்பிடி கிராமம் தான் இப்போதைய மலாக்கா மாநகரம் உருவான இடம். இந்த இடத்தில் தான் ஒரு சருகுமான் ஒரு நாயை எட்டி உதைத்து ஆற்றில் தள்ளியது. நாய் மல்லாக்காக விழுததாலும் பரமேஸ்வரா சாய்ந்து ஓய்வு எடுத்த மரத்தின் பெயர் மலாக்கா எனும் பெயர் கொண்டதாலும் அந்த இடத்திற்கு மலாக்கா என்று பெயர் வந்தது.
சருகுமான் நாயை எட்டி உதைக்கும் ஒர் ஓவியம்

பரமேஸ்வராவின் திருமணம்

இந்தக் காலக் கட்டத்தில் வட சுமத்திராவில் பாசாய் எனும் ஓர் சிற்றரசு இருந்தது. இது கடல் கரையோரமாக இருந்தச் சிற்றரசு.

சுமத்திரா எனும் சொல் சமுத்திரம் எனும் சமஸ்கிருதச் சொல்லில் இருந்து வந்தது. இந்தப் பாசாய் சிற்றரசின் இளவரசியைப் பரமேஸ்வரா 1409 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்குப் பிறகு அவர் இஸ்லாமிய சமயத்தில் இணைந்தார். தன் பெயரை இஸ்கந்தார் ஷா என்றும் மாற்றிக் கொண்டார். ஷா என்பது ஓர் அரசரைக் குறிக்கும் பாரசீகச் சொல்.

மலாக்கா சுல்தான்கள்   ஆட்சி காலம்

பரமேஸ்வரா எனும் இஸ்கந்தார் ஷா     1400–1414

சுல்தான் மேகாட் இஸ்கந்தார் ஷா     1414–1424

சுல்தான் முகமது ஷா     1424–1444

சுல்தான் அபு ஷாகித்     1444–1446

சுல்தான் முஷபர் ஷா     1446–1459

சுல்தான் மன்சூர் ஷா     1459–1477

சுல்தான் அலாவுடின் ரியாட் ஷா     1477–1488

சுல்தான் முகமது ஷா     1488–1528

சமய மாற்றம்

பரமேஸ்வராவின் சமய மாற்றம் தெளிவற்ற நிலையில் இன்னும் இருந்து  வருகிறது. அவர் சமய மாற்றம் செய்து கொண்டார் என்பதற்குச் சரியான ஆதாரங்கள் இன்னும் கிடைக்கவில்லை.

சீனாவில் கிடைத்த காலக் கணிப்புக் குறிப்புகளின் படி பரமேஸ்வராவின் மகன் 1414ல் சீனாவிற்கு விஜயம் செய்து இருக்கிறார். தன்னுடைய தந்தையார் பரமேஸ்வரா இறந்து விட்டதாகச் சொல்லியும் இருக்கிறார்.

சீனாவின் மிங் பேரரசர் பரமேஸ்வராவின் மகனை மலாக்காவின் இரண்டாவது ஆளுநராக அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொண்டு உள்ளார். அந்தப் பரமேஸ்வராவின் மகன்தான் ஸ்ரீ ராம விக்ரமா என்று பின்னர் அழைக்கப் பட்டார்.

மிங் பேரரசின் வரலாற்று ஏடுகள்
அவரை பரமேஸ்வர ராஜா என்று மலாக்காவில் அழைக்கப் பட்டும் இருக்கிறார். அவருடைய குடி மக்கள் அவரை சுல்தான் ஸ்ரீ இஸ்கந்தர் சுல்கார்னாயின் ஷா என்றும் சுல்தான் மேகாட் இஸ்கந்தர் ஷா என்றும் அழைத்து உள்ளனர். இவர் மலாக்காவை 1414 லிருந்து 1424 வரை ஆட்சி செய்து உள்ளார்.
மலாக்காவிற்கு வந்த அரபு வணிகர்கள்

பரமேஸ்வரா இறப்பு

1414 ஆம் ஆண்டு பரமேஸ்வரா தன்னுடைய 70 ஆவது வயதில் காலமானார். அவருடய உடல் போர்டிக்சனுக்கு அருகில் இருக்கும் தஞ்சோங் துவான் எனும் இடத்தில் புதைக்கப் பட்டு இருக்கலாம் அல்லது சிங்கப்பூரில் உள்ள கென்னிங் கோட்டையில் புதைக்கப் பட்டு இருக்கலாம் என்று நம்பப் படுகிறது.  இதுவும் இன்னும் உறுதி படுத்தப் பட வில்லை. அதைப் பற்றி ஆய்வுகள் செய்து கொண்டு இருக்கிறேன்.

பரமேஸ்வரா புதைக்கப் பட்டிருக்கும் கென்னிங் குன்றில் உள்ள இடுகாடு
கென்னிங் கோட்டைக்கு அருகில் ஓர் இஸ்லாமிய இடுகாடு இன்னும் இருக்கிறது. பரமேஸ்வராவுக்குப் பின் அவருடைய மகன் மேகாட் இஸ்கந்தர் ஷா மலாக்காவை 1424 ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்தார்.

தொடர்ந்து வந்த ஆட்சியாளர்கள் மலாக்காவின் மூன்றாவது ஆட்சியாளர் ராஜா தெங்ஙா என்பவர். இவரை ராடின் தெங்ஙா என்றும் அழைத்தனர். இவருக்கு ஸ்ரீ மகாராஜா எனும் விருது வழங்கப் பட்டது.

இவர் இஸ்லாமிய சமயத்தைத் தழுவி முகமது ஷா எனும் விருதைப் பெற்றார். இவர் இந்திய முஸ்லிம் பெண்ணை மணந்து கொண்டதால் பெயர் மாற்றம் கண்டிருக்கலாம் என்று கல்வியாளகள் நம்புகின்றனர்.

அவர் இறந்த பிறகு அவருடைய மகனான ரோக்கான் இளவரசர் ராஜா இப்ராகிம் அரியணை ஏறினார்.

சமூகச் சச்சரவுகள்

ராஜா இப்ராகிம் ஆட்சி காலத்தில் நெருக்கடி நிலைமை ஏற்பட்டது. மலாக்காவில் வாழ்ந்த இந்திய முஸ்லீம் சமூகத்தினருக்கும் பாரம்பரிய இந்து மலாய்க்காரர்களுக்கும் இடையே சச்சரவு உண்டாகியது.

ராஜா இப்ராகிமிற்கு இஸ்லாமியப் பெயர் இருந்தும் அவர் புதிய சமயத்தைத் தழுவவில்லை என்பது ஒரு பெரும் குறைகூறல். அவர் ஸ்ரீ பரமேஸ்வரா தேவா ஷா பெயரில் ஆட்சி செய்தார் என்பது மற்றொரு குறைகூறல்.

அந்தச் சச்சரவுகளினால் அவரால் நல்ல முறையில் ஆட்சி செய்ய முடியவில்லை. அதனால் பதினேழு மாதங்கள் தான் ஆட்சி செய்ய முடிந்தது. பாவம் அவர். 1446ல் அவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப் பட்டார். அதன் பின்னர் ராஜா இப்ராகிமின் ஒன்று விட்டச் சகோதரர் ராஜா காசிம் பதவிக்கு வந்தார்.

ராஜா காசிம்
ராஜா காசிமின் தாயார் ஒரு தமிழ் முஸ்லிம் ஆவார். ராஜா காசிமின் பெயர் சுல்தான் முசபர் ஷா என்று மாற்றம் கண்டது. மலாக்கா சுல்தான்களின் ஆட்சியில் புதிய சகாப்தம் மலர்ந்தது. இந்தக் கட்டத்தில் இந்துக்களும் இந்து சமயமும் அதிகாரம் இல்லாமல் போயினர்.

பரமேஸ்வராவுக்குப் பின்

பரமேஸ்வரா எனும் ஒரு சாதாரண மனிதன் பகைவர்களிடம் இருந்து தப்பித்து ஓடி வந்தான். எங்கே போவது என்று தெரியாமல் புகலிடம் தேடி அலைந்தான்.

வலிமையற்றது வலிமையானதைத் தோல்வி அடையச் செய்ய முடியும் என்பதைக் கண்டு அறிந்தான். அதையே ஒரு நல்ல சகுனமானக் கருதி ஓர் இருப்பிடத்தை உருவாக்கினான்.

அந்தச் சாதாரண இருப்பிடமே பின் நாளில் ஆசிய வரலாற்றில் மகத்துவம் வாய்ந்த தனிப் பெரும் வரலாறாக மாறியது. செல்வாக்கு மிக்க சக்தியாகவும் மாறியது.

மலாக்காப் பேரரசு தென்கிழக்கு ஆசியத் தீவுக் கூட்டத்தின் தலைவிதியையே மாற்றியும் அமைத்தது. உலக மன்னர்கள் வியந்து மனப்பூர்வமாகப் பாராட்டினார்கள். அண்டை நாட்டு மன்னர்கள் ஆழ்ந்த மரியாதை கொடுத்தனர்.

மிங் அரண்மனையில்
மலாக்காவின் செல்வாக்கு அதிகாரமும் ஆதிக்க நிலைப்பாடும் தென்கிழக்கு ஆசியத் தீவுக் கூட்டத்தில் இஸ்லாமிய சமயம் பரவுவதற்குச் சாதகமாக அமைந்தன.

1447ல் கர்த்தா விஜயா என்பவர் மஜாபாகித்தின் அரசரானார். இந்தோசீனாவில் இருந்த சம்பா நாட்டின் இளவரசியான தாராவதியை மணந்தார்.

மனைவியின் அறிவுரையின் படி இஸ்லாமியச் சமயத்தில் இணைந்தார். கர்த்தா விஜயாவின் சகோதரர்களில் ஒருவரான சுனான் அம்பேல் என்பவர் ஜாவா சுராபாயாவில் இஸ்லாமியச் சமயம் பரவுவதற்கு மிகுந்த முயற்சிகளை எடுத்துக் கொண்டார்.

அந்தக் காலக் கட்டத்தில் பலேம்பாங் இஸ்லாத்திற்கு மாறியது. 1459ல் சுல்தான் மன்சூர் ஷா கெடா, பகாங் மீது தாக்குதல்கள் நடத்தினார். வெற்றியும் பெற்றார். பகாங் நிலப் பகுதி மலாக்காவின் ஆளுமையின் கீழ் வந்தது.

இந்தச் சமயத்தில் வேறு ஒரு நிகழ்ச்சியும் நடந்தது. 1470ல் சம்பாவில் ஏற்பட்ட படுகொலைகளில் இருந்து தப்பித்த 60,000 பேர் மலாக்காவில் தஞ்சம் அடைந்தனர்.

பரமேஸ்வராவின் வாணிக மையங்கள்

1400ஆம் ஆண்டுகளில் மலாக்கா பரமேஸ்வராவின் ஆட்சி காலத்தில் மலாக்கா மிகவும் புகழ் பெற்ற வாணிகத் துறைமுகமாக விளங்கியது. அங்கே 80 மொழிகள் பேசப் பட்டன என்பது எல்லாம் வரலாற்றுச் சான்றுகள்.

உலகின் பல்வேறு இடங்களில் இருந்து வணிகர்கள் மலாக்காவிற்கு வந்தனர். அந்த இடங்களின் விவரம் வருமாறு:

தமிழ் நாடு, கெய்ரோ, ஏடன், ஓர்முஸ். ரோமாபுரு, துருக்கி, குஜாராத், கோவா. மலாபார், ஓரிசா, ஸ்ரீ லங்கா. வங்காளம், சியாம், கெடா, பகாங்,

பட்டானி, கம்போடியா, சம்பா, கொச்சின், புருணை, லிங்கா, மினாங்கபாவ், பாசாய், மாலைத் தீவுகள்.

16 ஆம் நூற்றாண்டில் கீழைத் தேச நாடுகளில் மலாக்கா மிகவும் முக்கியமான துறைமுகமாக விளங்கியது. அதன் செல்வ வளப்பத்தைக் கண்டு தோம் பைரஸ் (Tom Pires) என்பவர் “யார் ஒருவர் மலாக்காவின் பிரபுவாக இருக்கின்றாரோ அவர் வெனிஸ் நகரின் கழுத்தின் மீது கை வைத்தது போல் ஆகும்” என்று சொன்னார். தோம் பைரஸ் ஒரு போர்த்துகீசிய வணிகர், எழுத்தாளர் ஆகும்.

தோம் பைரஸ்
இன்னும் மலாக்காவைப் பற்றிய வரலாற்றுச் சான்றுகளைத் தேடிக் கொண்டு இருக்கிறேன். கிடைத்ததும் எழுதுகிறேன்.