07 நவம்பர் 2011

மலேசிய நாடாளுமன்றத்தில் இந்தியர்கள்

மலேசிய நாடாளுமன்றம்
மலேசிய நாடாளுமன்றத்தில் 222 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் 15 பேர் இந்திய உறுப்பினர்கள். மலேசிய வரலாற்றில் முதல் முறையாக ஒரு தமிழர் மாநிலத்தின் துணை முதல்வராகப் பதவி ஏற்றுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரின் பெயரில் இணையப் பக்கங்கள் உள்ளன. அவற்றைச் சொடுக்கி மேல் விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம்.

கெடா மாநிலம்

மாண்புமிகு
என்.கோபாலகிருஷ்ணன்
பாடாங் செராய் - கெஅடிலான் மக்கள் நீதிக்கட்சி/சுயேட்சை

பினாங்கு மாநிலம்
மாண்புமிகு டாக்டர் ராமசாமி பழனிசாமி

பத்து காவான் - மக்கள் கூட்டணி (ஜ.செ.க).
பினாங்கு மாநிலத் துணை முதல்வர்.
மலேசிய வரலாற்றில் முதல் முறையாக ஒரு தமிழர் மாநிலத்தின் துணை முதல்வர்.

மாண்புமிகு கர்ப்பால் சிங்
புக்கிட் குலுகோர்
மக்கள் கூட்டணி (ஜ.செ.க)

பேராக் மாநிலம்
மாண்புமிகு டாக்டர் ஜெயகுமார் தேவராஜ்
சுங்கை சிப்புட்
மக்கள் கூட்டணி (மக்கள் நீதிக்கட்சி)

மாண்புமிகு எம்.குலசேகரன்
ஈப்போ பாராட்
மக்கள் கூட்டணி (ஜ.செ.க)
மலேசிய நாடாளுமன்ற எதிர்க் கட்சிகள் தலைவர்

மாண்புமிகு டத்தோ எம்.சரவணன்
தாப்பா - தேசிய முன்னணி (ம.இ.கா)
மலேசியக் கூட்டரசு நகர்ப்புறத் துணை அமைச்சர்

மாண்புமிகு மனோகரன் மலையாளம்
தெலுக் இந்தான்
மக்கள் கூட்டணி (ஜ.செ.க)

பகாங் மாநிலம்
மாண்புமிகு டத்தோ எஸ்.கே.தேவமணி

கேமரன் மலை - தேசிய முன்னணி (ம.இ.கா)
மலேசியப் பிரதமர் துறை துணை அமைச்சர்

சிலாங்கூர் மாநிலம்
மாண்புமிகு பி.கமலநாதன்

உலு சிலாங்கூர்
தேசிய முன்னணி (ம.இ.கா)

மாண்புமிகு கோபிந்த் சிங் டியோ
பூச்சோங் - மக்கள் கூட்டணி (ஜ.செ.க)

மாண்புமிகு சிவராசா ராசையா
சுபாங் - மக்கள் நீதிக்கட்சி (கெஅடிலான்)

மாண்புமிகு எஸ்.மாணிக்கவாசகம்
காப்பார் - மக்கள் நீதிக்கட்சி (கெஅடிலான்)

மாண்புமிகு சார்ல்ஸ் சாந்தியாகோ
கிள்ளான் - மக்கள் கூட்டணி (ஜ.செ.க)

நெகிரி செம்பிலான் மாநிலம்
மாண்புமிகு ஜான் பெர்னாண்டஸ்
சிரம்பான் - மக்கள் கூட்டணி (ஜ.செ.க)

ஜொகூர் மாநிலம்
மாண்புமிகு டத்தோ டாக்டர் சுப்பிரமணியம்

சிகாமட் - தேசிய முன்னணி (ம.இ.கா)
மலேசிய மனிதவள அமைச்சர்


06 நவம்பர் 2011

கணினியும் நீங்களும் – 120


மானுடப்பசி  maanudappasi@gmail.com
கே: மடியில் வைத்துப் பயன்படுத்துவதால் மடிக்கணினி என்று பெயர் வந்ததா? இல்லை மடித்து வைக்க முடிவதால் அதற்கு  மடிக்கணினி என்று பெயர் வந்ததா?

ப: ஐயா, மானுடப்பசி அவர்களே... எது எதுக்கோ பசி வரும் என்பார்கள். ஆனால், உங்களுக்கு மனுஷன் மேலேயே பசி வரும் போல இருக்கிறது. எதற்கும் கொஞ்சம் எச்சரிக்கையாகத் தான் இருக்கணும். சரி. விஷயத்திற்கு வருவோம்.  

நீங்கள் நம்புகிறீர்களோ இல்லையோ, போன வாரம் தான் ஈப்போ, உலு கிந்தா ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியின் விரிவுரையாளர் சிவநேசன் இதைப் பற்றி என்னிடம் பேசிக் கொண்டிருந்தார். அதே கேள்வியை நீங்களும் இப்போது கேட்கிறீர்கள். Laptop எனும் ஆங்கிலச் சொல்லில் இருந்து வந்தது தான் மடிக்கணினி எனும் தமிழ்ச் சொல்.

ஆங்கிலத்தில் Lap என்றால் வயிற்றுப் பகுதிக்கும் தொடைப் பகுதிக்கும் இடைப் பட்ட பகுதியைக் குறிக்கும் ஒரு சொல். Top என்றால் மேலே என்று பொருள். இரண்டையும் சேர்த்தால் மடிமேலே எனும் இருச் சொற்கள் இணைந்த ஒரு சொல் வருகின்றது.  ஆக, மடிமேலே என்று ஒரு கணினிக்குப் பெயர் வைத்தால் நன்றாக இருக்காது. மடிமேலே கணினி என்று சொன்னாலும் நன்றாக இருக்காது.

ஆக, அதைச் சுருக்கி மடிக்கணினி என்று பெயர் வைத்து விட்டார்கள். இங்கே நிலை மொழிக்கும் வரு மொழிக்கும் இடையே வலி மிகுவதைக் கவனிக்கவும்.

மடிக்கணினியின் திரையை மடக்கி மடிக்க முடிவதால் மடிக்கணினிக்கு மறைமுகமான வேறு ஓர் அர்த்தமும் கிடைத்து விடுகிறது. பழம் நழுவி பாலில் விழுந்த கதை தெரியும் தானே. அந்த மாதிரி தான் இங்கேயும்.

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலேயே இப்படி ஒரு கணினி வரப் போகிறது என்று தமிழ் மூதாதையர்களுக்குத் தெரிந்து இருக்கலாம் என்று நினைக்கிறேன். அதனால் தான் மடி எனும் சொல்லுக்கு இரண்டு அர்த்தங்களைச் சொல்லி விட்டுப் போய் இருக்கிறார்கள்.  தமிழர்களின் தீர்க்கதரிசனங்கள் சோடை போனதாகச் சரித்திரம் இல்லை. 

சின்னத்தம்பி மதிவாணன், லாவான் கூடா, கோப்பேங்
கே: சார், இது கணினி இணையம் சம்பந்தமான கேள்வி. கண்டிப்பாகப் பதில் அளிக்க வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன். அண்மைய காலங்களில் எனக்கு ஒரு விநோதமான் ஆசை வந்து இருக்கிறது. நான் 120 வயது வரை வாழ்ந்து கின்னஸ் புத்தகத்தில் சாதனை செய்ய விரும்புகிறேன். தயவு செய்து இணையத்தில் நல்ல ஒரு மருந்தைக் கண்டுபிடித்துச் சொல்லுங்கள். நான் உங்களை உயர்ந்த இடத்தில் வைத்துப் பார்க்கிறேன்.


ப: கேட்க நல்லாதான் இருக்கிறது. உயர்ந்த இடத்தில் வைத்துப் பார்ப்பது எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனால், நீங்கள் கேட்டு இருக்கும் கேள்வி இருக்கிறதே இதை எந்த இடத்தில் வைத்துப் பார்ப்பதாம்.  முதலில் அதைச் சொல்லுங்கள். யார் யாருக்கு என்ன என்ன ஆசைகள் எப்படி எப்படி எல்லாம் வருகின்றன பாருங்கள்!

இணையம் வந்ததும் போதும் சாமி. என்ன என்னவோ கேள்விகள். 120 வயது வரை வாழ மருந்து கேட்கிறீர்கள். வைகுண்டத்திற்கு குறுக்குப் பாதை கேட்கிறீர்கள். சத்தியாவான் சாவித்திரி காலத்தில் தோடு தொங்கட்டான் இருந்ததா என்று கேட்கிறீர்கள். தீபாவளி சமயத்தில் ஒரு கேள்வி வந்தது. இஞ்சி இடுபழகு என்பது இளசுகளுக்கா இல்லை பழசுகளுக்கா என்று ஒரு கேள்வி. பழசை எல்லாம் ஞாபகமூட்டி ஒரு வழி பண்ணி விடுவீர்கள் போல இருக்கிறது. என் நிலைமையையும் கொஞ்சம் யோசியுங்கள். உண்மையில் இவை எல்லாம் எனக்கு வந்த கேள்விகள். அதையும் மெனக்கெட்டு (மேனி கெட்டு) இணையத்தில் தேடச் சொல்கிறீர்கள். இன்னும் கொஞ்சம் விட்டால் ஆப்ரிக்கா அங்கோலாவில் இட்லி, தோசை, சட்னி, சாம்பார் கிடைக்குமா என்று கேட்டாலும் கேட்பீர்கள். வேண்டாம்... சாமி... ஆளை விடுங்கள்.

ஐயா சின்னத் தம்பி என்னை உங்களின் பெரிய தம்பியாக நினைத்துக் கொள்ளுங்கள். கோபித்துக் கொள்ள வேண்டாம். ஏன்யா இது உங்களுக்கே நியாயமா இருக்கிறதா? தயவு செய்து இனிமேல் எல்லாருக்கும் பயன்படும் படியான நல்ல கேள்வியாகக் கேளுங்கள். நிச்சயம் புண்ணிய பகவான் சந்தோஷப் படுவார். சரியா.

உங்கள் விஷயத்திற்கு வருகிறேன். நீங்கள் கேட்கிற அந்த மாதிரி ஒரு மருந்து உண்மையிலேயே இருக்கிறது என்று தெரிந்தால், முதலில் நான் சும்மா இருப்பேனா ஐயா சொல்லுங்கள்.  நான் தானே முதல் ஆளா பன்னீர் தட்டோடு போய் நிற்பேன்.  இருந்தாலும், உங்கள் ஆசையை நான் கெடுக்க விரும்பவில்லை.

இணையம் வழியாகத் தேடிப் பார்த்தேன். கடைசியாக ஒரு ரகசியமான தகவல். நீங்கள் கேட்கிற மருந்தை வட துருவத்தில் ‘பேசாமல் இரு என்கிற ஒரு பெங்குயின் பறவை வைத்து இருக்கிறதாம். அங்கே போய் கேட்டுப் பாருங்கள். இன்னும் ஒரு சேதி. வட துருவத்தில் 33 கோடி பெங்குயின்கள் இருக்கின்றன. இடம் தெரியாத இடத்தில் பெயர் தெரியாத பெண் பெங்குயினைத் தேடிப் போறீங்க. பத்திரம். எதுக்கும் வீட்டில சொல்லிட்டுப் போங்க!

ஸ்ரீ சதீஷ்  srisatish26@yahoo.com
கே: சயாம் மரண இரயில் பாதை சம்பந்தமாக ஆங்கிலத்தில் ஒரு நூல் தேவைப் படுகிறது. இலவசமாக எங்கே கிடைக்கும்? அந்த நூல் எல்லாருக்கும் பயன்படும் என்று நினைக்கிறேன்.


ப: சயாம் மரண இரயில் பாதை தொடர்பான ஆங்கில நூல் சில உள்ளன. அவற்றில் ஒரு நூல் இலவசமாகக் கிடைக்கிறது. கீழ்க்காணும் இடத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
http://www.filesonic.com/folder/8373321

30 அக்டோபர் 2011

கணினியும் நீங்களும் – 119

பிரீத்தி சந்தானம்  preetisanthnam@ymail.com
கே: இணையம் மூலமாக இலவச மென்பொருட்களை அதாவது நிரலிகளை நாம் இலவசமாகப் பதிவிறக்கம் செய்கிறோம். அப்படி பதிவிறக்கம் செய்யும் போது அந்த நிரலிகள் எந்த அளவுக்கு பாதுகாப்பானவை என்று தெரியவில்லை. அவை பாதுகாப்பானவை என்று எப்படி கண்டறிவது? உங்களுக்கு வாசகர்களின் சார்பில் தீபாவளி வாழ்த்துகளைச் சொல்லிக் கொள்கிறேன். இறைவன் அருள் புரிவானாக.

 

ப:
தங்களின் வாழ்த்துகளுக்கும் பிரார்த்தனைகளுக்கும் நன்றி. தீபாவளி வாழ்த்துகள் வழங்கிய அனைத்து வாசக நெஞ்சங்களுக்கும் நன்றிகள்.

இணையம் என்பது நம் வாழ்க்கையில் ஓர் இனிமையான தோழனாகி விட்டது. படங்கள், பாடல்கள், காணொளிகள் போன்றவற்றை இலவசமாக பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி மகிழ்ச்சி அடைய அந்த இனிமைப் பொக்கிஷம் உதவி செய்கின்றது.

ஆனால் இலவசமாகக் கிடைக்கும் பொருட்களினால் அந்தக் கணினி பாதிப்பு அடையும் வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன.  இதை நாம் மறந்து விடக் கூடாது. ஆகவே நாம் இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யும் போது நல்ல சில வழிமுறைகளைக் கையாள வேண்டும்.

  1. இலவசம் என்று தெரிந்ததும் கிடைக்கின்ற மென்பொருட்கள் எல்லாவற்றையும் நம் கணினியில் பதிப்பு செய்து பார்க்க வேண்டும் எனும் உந்துதலை முற்றிலும் தவிர்க்க வேண்டும். பதிவிறக்கம் செய்யப் படும் நிரலிகள் மிகவும் பயனுள்ளதாக இருந்தால் மட்டுமே அவற்றைக் கணினியில் நிறுவிக் கொள்ளுங்கள்.

  1. பதிவிறக்கம் செய்யப் படும் நிரலி அல்லது நிரலிகளால் ஒருமுறை மட்டும் தான் பயன் பெற முடியும் என்ற ஒரு நிலை இருந்தால் தயவு செய்து அந்த நிரலியைப் பதிவிறக்கம் செய்யவே வேண்டாம்.

  1. எந்த ஓர் இலவச நிரலியையும் அதனுடைய தயாரிப்பு இணையத் தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்வதைக் கண்டிப்பாகத் தவிர்த்து விடுங்கள். ஏனென்றால் தங்களின் நிரலியைப் பற்றி அவர்களே தரம் உயர்த்திப் பேசுவார்கள். ஆதலால் உண்மை நிலையை நம்மால் கண்டறிய முடியாது.

  1. இலவச நிரலிகளைத் தரம் பிரித்து அவற்றை முறையாக  தொகுத்து வழங்கும் தளங்களான cnet, brothersoft, majorgeek, softpedia, filehippo, tucows, pcworld போன்ற நம்பிக்கையான தளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்

  1. நம்பிக்கையான தளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்தாலும் மற்ற கணினிப் பயனர்களின் கணிப்பும் விமர்சனங்களும் எப்படி உள்ளன என்பதையும் கண்டறியுங்கள்.

  1. cnet, tucows, pcworld  போன்ற பிரபல தளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்யும் போது, தகுதி மதிப்பீடு (Product Ranking) 1 அல்லது 2 க்குள் இருக்கிறதா என்பதை உறுதிப் படுத்திக் கொள்ளுங்கள். மதிப்பீடு 3 ஆக இருந்தால் பரவாயில்லை. ஆனால், 4 அல்லது 5 க்குப் போனால் அந்த நிரலியைப் பதிவிறக்கம் செய்ய வேண்டாம்.

  1. ஒரு தளத்தில் இருந்து ஒரு நிரலியைப் பதிவிறக்கம் செய்யும் போது கடந்த காலங்களில் எத்தனை பேர் அதனைப் பதிவிறக்கம் செய்து இருக்கிறார்கள் என்பதையும் கவனியுங்கள். அதிகமானோர் பதிவிறக்கம் செய்து இருந்தால் அந்த மென்பொருள் அப்போதைய சமயத்தில் நன்றாக இருக்கிறது என்று பொருள்.  ஆக, அந்த நிரலியை தயக்கம் இல்லாமல் பதிவிறக்கம் செய்யலாம். எடுத்துக் காட்டாக AVG Anti-Virus Free Edition 2012 எனும் இலவச நச்சுக்கொல்லி நிரலி. இதை 17.10.2011 ஆம் தேதி இரவு 10.45 வரை 1,131,556 பேர் பதிவிறக்கம் செய்திருக்கிறார்கள். அதாவது 11 இலட்சம் பேர்.

  1. அடுத்து, கணினியில் ஒரு வேலையைச் செய்ய ஒன்றுக்கும் மேற்பட்ட நிரலிகளைக் கணினியில் வைத்து கொள்ள வேண்டாம். எடுத்துக்காட்டாக Video Players, PC Cleaners, Photo Editors, Downloaders. இவற்றில் ஒவ்வொன்றிலும் உங்களுக்கு பிடித்த ஒரே ஒரு நிரலியை மட்டும் கணினியில் வைத்து கொள்ளுங்கள். தேவையில்லாத மற்ற நிரலிகளை அப்புறப் படுத்தி விடுங்கள்.

இந்த வழிமுறைகளைப் பின்பற்றுங்கள். உங்கள் கணினி உங்கள் பேச்சைக் கேட்கும். இல்லை என்றால் மன்னியுங்கள்... அம்மி மிதிக்காது. அருந்ததி பார்க்காது. படுத்துத் தூங்கப் பாய் மட்டும் கேட்கும். புரியும் என்று நினைக்கிறேன்.

திருவாளர்.ஆக்சிஜன், லாபு, நெ.செ.
கே: கணினியை ஒரு தெய்வமாக நினைத்துக் கும்பிட வேண்டும் என்று உங்களுடைய வலைப்பதிவில் (15.9.2009 Word Press) எழுதி இருக்கிறீர்கள். இருந்தாலும் அது எனக்குச் சரியாகப் படவில்லை. மனிதன் கண்டுபிடித்த ஒரு சாதனத்தை எப்படி தெய்வமாக நினைத்துக் கும்பிடுவது  என்பது தான் புரியவில்லை. இது என் கருத்து.


ப: (சில காரணங்களுக்காக உங்களுடைய உண்மையான பெயர் வெளியிடப்பட வில்லை)
ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னால் வெளி நாட்டில் ஒரு தமிழ் இளைஞர் ஒரு நாய்க்கு தாலி கட்டி அதை தன் மனைவியாக்கிக் கொண்டார். பலர் அதைப் படித்தும் இருப்பார்கள். அது அவருக்குச் சரியாகப் பட்டது. செய்தார்.

யாருக்கு எது சரியாகப் படுகிறதோ அதை அவர்கள் செய்கிறார்கள். அவ்வளவு தான். அவர் எப்படி குடும்பம் நடத்துகிறார் என்பது அவருடைய தனிப்பட்ட விஷயம். அதில் சம்பந்தப் பட நமக்கு உரிமை இல்லை. சரியா. நம்ப கதைக்கு வருவோம்.

கலைமகளின் மறு வடிவமான பாட நூல்களையும், அச்சடித்த எழுத்துப் படிவங்களையும் நாம் தொட்டுக் கும்பிட வில்லையா. நீங்கள் கும்பிட்டு இருக்க மாட்டீர்கள். அதான் இந்தக் கேள்வியைக் கேட்டு இருக்கிறீர்கள்.

கல்லையும் புல்லையும் தெய்வமாக நினைத்துக் கும்பிடும் மனிதர்கள் வாழும் அதே மண்ணில் தான் நானும் வாழ்கின்றேன். கணினியை ஒரு  தெய்வமாக நினைக்கிறேன். அதனால் எதுவும் குறைஞ்சு விடப் போவதில்லை. என் கண்களுக்கு கணினி ஒரு தெய்வமாகத் தெரிகின்றது. அப்படியே இருந்து விட்டுப் போகட்டும்.

ஆறறிவு படைத்த மனிதனையே மிஞ்சிப் போகும் கணினி மனுக்குலத்திற்கு ஒரு ஜீவநாடி. எனக்கு தெய்வமாகப் படுகின்றது. ஆனால், ஆறறிவு இருந்தும் ஐந்தறிவில் மோப்பம் பிடிக்கும் ஒரு சில கண்களுக்கு கணினி ஒரு தெய்வமாகத் தெரியும் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. இது என் கருத்து.

27 அக்டோபர் 2011

மலேசியப் புகழ் ராம்லி இப்ராஹிம்

இந்தக் கட்டுரையை தமிழ் விக்கிப்பீடியாவில் எழுதி இருக்கிறேன். அங்கேயும் போய் நீங்கள் படிக்கலாம். அதன் முகவரி:
http://ta.wikipedia.org/wiki/ராம்லி_இப்ராஹிம்

ராம்லி இப்ராஹிம், மலேசியாவில் புகழ்பெற்ற பரத நாட்டியக் கலைஞர். இவர் ஒரு மலாய்க்காரர், இஸ்லாமிய சமயத்தவர். ஆனால், இவர் சமயம், மொழி, கலாசாரங்களைத் தாண்டிப் பயணிக்கும் கலைஞர். மலேசிய பரத நாட்டியக் கலை உலகில் ஒரு சகாப்தமாகப் பவனி வருகின்றார்.


இவருக்கு வயது 58. இவர் கடந்த முப்பது ஆண்டுகளாகக் கலைச் சேவைகளில் ஈடுபட்டு மலேசியாவில் நூற்றுக்கணக்கான பரதநாட்டிய நடன மணிகளை உருவாக்கியுள்ளார்.

சமய அடிப்படையில் இவருக்கு பல்வேறு கெடுபிடிகள் ஏற்பட்டன. அரசியல் ரீதியாக பல்வேறு நெருக்குதல்கள் கொடுக்கப் பட்டன.


சின்ன வயதில் ராம்லி
அவற்றை அனைத்தையும் தாண்டிச் சமாளித்து வருகின்றார். தற்சமயம், யுனெஸ்கோ என்று அழைக்கப் படும் ஐக்கிய நாடுகள் கல்வி அறிவியல் பண்பாட்டு வளர்ச்சிக் கழகத்தின் கலைத் தூதுவராகச் சேவை செய்து வருகின்றார். காசு பணத்திற்கு ஆசைப்படாத பரத நாட்டிய ஆர்வலர்.

ராம்லி இப்ராஹிம் 1953 ஆம் ஆண்டு மே மாதம் 20 ஆம் தேதி, மலேசியா, சிலாங்கூர், காஜாங்கில் பிறந்தார். அவருடைய தகப்பனார் சுமத்திராவின் ராவா எனும் இடத்தில் இருந்து மலேசியாவுக்குப் புலம் பெயர்ந்தவர்.

கெர்லிங் பாடல் போட்டி

அவருடைய தாயார் மலாக்காவில் உள்ள கிளேமாக் எனும் இடத்தைச் சேர்ந்த உள்ளூர்வாசி. அவரது குடும்பம் காஜாங்கில் இருந்து கோலாலம்பூருக்கு மாறி வந்தது. கோலாலம்பூர் மாநகரத்தில் இருக்கும் ஜாலான் துன் ரசாக்கில் ராம்லி இப்ராஹிம் வளர்ந்தார்.

பின்னர் பசார் சாலை மலாய்ப் பள்ளியிலும் கோக்ரேன் சாலை பள்ளியிலும் தொடக்க, இடைநிலைப் பள்ளிப் படிப்புகளைப் படித்து முடித்தார். பின்னர் அவர் 1969 ஆம் ஆண்டு அரச மலேசிய இராணுவக் கல்லூரிக்குத் தேர்வு செய்யப் பட்டார். அங்கு தன்னுடைய கல்வியைத் தொடர்ந்தார்.



இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவரை மலேசிய அரசாங்கம் மேற்கு ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகத்தில் படிக்க அனுப்பி வைத்தது. அங்கு அவர் இயந்திரவியல் துறையில் மேற்கல்வி பயின்றார்.

1975-இல் இயந்திரவியல் துறையில் பட்டம் பெற்றார். அடுத்த ஆண்டு ஆஸ்திரேலிய பெல்லே நடனக் கல்லூரியில் இணைந்து ‘பெல்லே’ நடனத்தையும் கற்றுக் கொண்டார்.



இயந்திரம் தொடர்பான இயந்திரவியல் துறையில் படித்துப் பட்டம் வாங்கிய அவருக்கு நாட்டியத் துறையில் தான் அதிகமான ஈர்ப்பும் கவர்ச்சியும் ஏற்பட்டன. அந்த ஈர்ப்பு தான் இறுதியில் அவருடைய வாழ்க்கைப் பயணத்தை மாற்றி அமைத்தது.

ஆஸ்திரேலிய பெல்லே நடனக் கல்லூரியில் பட்டம் பெற்றதும், அவரை உடனே சிட்னி நடன நிறுவனம் மேலும் பயிற்சி பெற தங்கள் கல்லூரிக்கு அழைத்தது.



சிட்னி நடனக் கழக வளாகத்தில் தான் ராம்லி இப்ராஹிம், இந்தியா, ஆந்திர பிரதேசத்தைச் சேர்ந்த பத்மஸ்ரீ ஆடையார் கே.லக்சுமண் எனும் நாட்டிய வித்துவானைச் சந்தித்தார்.

அதன் பின்னர், ராம்லி இப்ராஹிம் வாழ்க்கையில் பெரிய திருப்பு முனை ஏற்பட்டது. பரத நாட்டியத்தைத் தீவிரமாகக் கற்றுக் கொள்ளத் தொடங்கினார்.



1980 ஆம் ஆண்டு இந்தியா, ஒரிசாவில் உள்ள பூரி எனும் இடத்திற்குச் சென்று ஒடிசி நாட்டியத்தைக் கற்றுக் கொண்டார். ஒடிசி நாட்டியத்தில் ராம்லி இப்ராஹிமிற்கு அதிகமான ஈர்ப்பு ஏற்பட்டது.

இந்தக் கட்டத்தில் அவர், ஒடிசி நாட்டியப் பேரொளி பத்மஸ்ரீ இந்திராணி ரகுமானை அமெரிக்கா, நியூயார்க்கில் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. ஒடிசி நாட்டியத்தில் மேலும் கவர்ந்து இழுக்கப் பட்டார்.



இந்திராணி ரகுமான் 1952 ஆம் ஆண்டு இந்திய அழகியாகத் தேர்வு செய்யப் பட்டவர். இவர் மேற்கத்திய நாடுகளில் பரத நாட்டியம், குச்சிப்புடி, கதக்கலி, ஒடிசி போன்ற இந்திய பாரம்பரிய நடனங்களைப் பிரபலப் படுத்தியவர்.

மலேசியாவிற்குத் திரும்பியதும் ராம்லி இப்ராஹிமிற்கு மேலும் ஓர் அதிர்ஷ்டம் காத்து இருந்தது. மலேசியாவில் உள்ள ஆஸ்திரேலியத் தூதரகத்தின் நுண்கலையகம் அவருக்கு படிப்பு உதவித் தொகை வழங்கியது. ஒடிசி நாட்டியத்தை மேலும் கற்றுக் கொண்டு தேர்ச்சி பெற ஆர்வமூட்டியது.



ஆஸ்திரேலியத் தூதரகம் பல வகைகளில் தூதரக வகையிலான உதவிகளையும் செய்தது. அப்போது ஒரிசாவில் தேப பிரசாத் டாஸ்  எனும் நாட்டிய குரு ஒடிசி நடனப் பள்ளியை நடத்தி வந்தார்.

அங்கு சென்ற ராம்லி இப்ராஹிம் மேலும் கூடுதலாக ஒடிசி நடனத்தின் நுண்புலமைகளைத் தெரிந்து கொண்டார். அவரிடம் இருந்த இயற்கையான நாட்டிய ஆர்வம் மேலும் அவருடைய திறமைகளுக்கு மெருகூட்டியது. ஒடிசி நடனத்தில் பக்குவம் அடையச் செய்தது.



1983-இல் ராம்லி இப்ராஹிம் மலேசியாவிற்கு திரும்பினார். கோலாலம்பூரில் சுத்ரா நாட்டிய அரங்கத்தை உருவாக்கினார். தனது முதல் நாட்டிய படைப்பான Gerhana and Pandanglah! Lihatlah! எனும் நடன நிகழ்ச்சியைக் கோலாலம்பூரில் அரங்கேற்றம் செய்தார். அதன் பின்னர் அவருக்கு தொட்டது எல்லாம் ஏறுமுகம் தான். அவருடைய படைப்புகள்:

  •      சுத்ரா ராசா கனவுச் சாயல் நாட்டிய விழா (1984)
  •     குசுமஞ்சாலி (1987)
  •     சுத்ரா பெருவிழா (1990)
  •     அன்பு எனும் பெயரிலே (1991)
  •     ஹாரும் (Harum) சுத்ரா விழா (1993)
  •     ரெஸ்து (Restu) சுத்ரா விழா (1995)
  •     அன்னை இந்தியா (Mother India) சுத்ரா இந்தியப் பயணம் (1995)
  •     கெராக் ஆங்கின் (Gerak Angin) சுத்ரா விழா (2001)
  •     சுத்ரா பெருவிழா (2003)
  •     மேலும் பல வெளிநாட்டு விழாக்கள்

தொடர்ந்து வந்த காலக் கட்டங்களில் ராம்லி இப்ராஹிம் உள்ளூரிலும் வெளிநாடுகளிலும் பிரபலம் அடைந்தார். இந்தத் தருணத்தில் அவர் சில நடன வகுப்புகளையும் கோலாலம்பூர், சிங்கப்பூரில் நடத்தி வந்தார்.

1992 ஆம் ஆண்டு மலேசியப் புகழ் நாட்டியமணி சிவராஜா நடராஜன், சுத்ரா நாட்டிய அரங்கத்தின் அர்ப்பணிப்புகளில்
தன்னையும் ஐக்கியப் படுத்திக் கொண்டார்.

அடுத்த ஆண்டு, அதாவது 1993-இல் ஹாரும் திருவிழா எனும் நாட்டியத் திருவிழா கோலாலம்பூரில் மிக விமரிசையாக நடைபெற்றது. இந்தக் கட்டத்தில் சுத்ரா நாட்டிய அரங்கம் துரிதமான வளர்ச்சி கண்டு வந்தது.

1997 ஆம் ஆண்டு வாக்கில் ஆசிய நாடுகளின் சமரச உடன்படிக்கை மாநாடு புது டெல்லியில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ளுமாறு அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி ராம்லி இப்ராஹிமிற்கு அழைப்பு விடுத்தார்.

அந்த மாநாட்டில் ராம்லி இப்ராஹிம் கலந்து கொண்டு ஒடிசி நடனங்களைப் படைத்துச் சிறப்பு செய்தார்.


அதே ஆண்டு கோலாலம்பூர் சுத்ரா நாட்டிய அரங்கத்தின் பயிற்றுநர்கள் இந்தியப் பயணம் ஒன்றை மேற்கொண்டனர். ’அன்னை இந்தியா’ எனும் அடைமொழி வாசகங்களில் அந்த வட இந்திய சுற்றுப் பயணம் மேற்கொள்ளப் பட்டது. பல இடங்களில் நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பல இளம் வயதினர் பரதநாட்டியக் கலையில் ஈடுபட ஊக்குவிக்கப் பட்டனர்.

கால வரிசை
  •  2003 – உலகப் புகழ் கேமரன் மலை ‘போ’ தேயிலை நிறுவனத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருது.
  •  2003 – இந்திய சினிமா இயக்குநர் சுனில் மேஹ்ரா Sutra in India எனும் ஆவணப் படத்தைத் தயாரித்தார்.
  •  2004 – Ramli! Heart of Sutra எனும் ஒலி, ஒளி நாடா வெளியானது
  •  2005 – மலேசியக் கலாசார மாளிகையில் ஒடிசி நடன விழா.
  •  2006 – கனடா/ஐரோப்பிய ஒடிசி நடனச் சுற்றுலா. ஒரிசா மாநில அங்காராக் வாழ்நாள் சாதனையாளர் விருது.
  •  2007 – சுத்ரா அறநிறுவனம் தோற்றுவிக்கப் பட்டது
  •  2007 – மலேசிய ஆஸ்ட்ரோ ஒளிபரப்பு நிறுவனத்தின் நடனக் கலைவிழா
  •  2008– மலேசிய ஒடிசி நடனப் பெருவிழா/ நியூயார்க கார்னகி மண்டபத்தில் நடனவிழா.
  • 2009 – இந்தியா, சென்னை நாட்டியாஞ்சலி மன்றத்தின் நார்ட்டாகா விருது
  • 2010 – இந்தியா, புதுடெல்லியில் அனைத்துலக நடன விழா. இந்தியாவில் ஆறு வாரங்கள் நடனச் சுற்றுலா.

ராம்லி இப்ராஹிம் சாதனைகள்

  •     புல்பிரைட் புகழ்பெற்ற கலைஞர் (1999) விருது. (Fulbright Distinguished Artist Award)
  •   போ கேமரோனியன் வாழ்நாள் சாதனையாளர் (2003) விருது. (BOH Cameronian Malaysia 2003 Lifetime Achievement Award)
  •     ஜோஹான் செத்தியா மக்கோத்தா தேசிய அரச விருது (J.S.M.)
  •   ஒரிசா மாநில அங்காராக் வாழ்நாள் சாதனையாளர் (2006) விருது. (ANGARAG Orissa 2006 Lifetime Achievement Award)
  •    அனைத்துலக கலாசார வளர்ச்சிக் கழ்கங்களின் கூட்டமைப்பு வாழ்நாள் சாதனையாளர் (2009) விருது.
  •    சென்னை நாட்டியாஞ்சலி நார்ட்டாகா (2009) விருது. Natyanjali Trust/Purush Award, Chennai 2009
  •   அரச மலேசிய இராணுவக் கல்லூரி வாழ்நாள் சாதனையாளர் (2009) விருது. Putera Lifetime Achievement Award 2009 (RMC)

சுத்ரா ஒடிசி பயிற்றுநர்கள்

  •     தலைவர்: ராம்லி இப்ராஹிம்
  •     தலைமைப் பொறுப்பாளர்: சிவராஜா நடராஜன்

ஆசிரியர்கள்:

  •     குணா,
  •     ரதிமலர் கோவிந்தராஜு
  •     தான் மேய் மேய்
  •     நிஷா தேவி
  •     திவ்யா நாயர்
  •     கீத்திகா ஸ்ரீ
  •     கிவாஷினி
  •     நளினா நாயர்
  •     மிச்சல் சோங்
  •     திரிஷெர்னா
  •     செலஸ்டி தியுனிசான்

26 அக்டோபர் 2011

மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் எதிர்காலம்


இந்தக் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவில் எழுதப் பட்டுள்ளது. அதன் முகவரி: http://ta.wikipedia.org/wiki/மலேசிய_தமிழ்ப்பள்ளிகள்
பேராக் மாநிலத்தில் குரோ நகரில்
அமைந்துள்ள குரோ தமிழ்ப்பள்ளி

1957 ஆம் ஆண்டு மலாயா சுதந்திரம் அடைந்தது. 1963 ஆம் ஆண்டு சிங்கப்பூர், வட போர்னியோவைச் சார்ந்த சரவாக், சபா பெருநிலங்களைக் கொண்டு மலேசியா எனும் ஒரு புதிய நாடு உருவானது.

மலாயாவில்
1950களில் 888 தமிழ்ப்பள்ளிகள் இருந்தன. இப்போது 2011 ஆம் ஆண்டில் 523 தமிழ்ப்பள்ளிகள் தான் இருக்கின்றன. இந்தப் பள்ளிகளில் இன்னும் நான்கு பள்ளிகள் விரைவில் மூடப் படவிருக்கின்றன.


இடைப்பட்ட
54 ஆண்டு காலத்தில் மலேசியாவில் இருந்த 365 தமிழ்ப்பள்ளிகள் மூடப்பட்டு விட்டன. ஏன் மூடப்பட்டன என்பதின் பொதுவான கருத்துகள்.

# மலேசிய நாட்டின் நில மேம்பாட்டுத் திட்டங்கள்.

# மலேசியத் தமிழர்கள் தமிழ் மொழியை மறந்து வருகின்றனர்.
# தமிழர்கள் நகர்ப்புறங்களுக்கு குடி பெயர்ப்பு.

# அரசாங்கம் போதுமான ஆதரவு வழங்கவில்லை.

2010 ஆம் ஆண்டு புள்ளி விவரங்களின்படி மலேசிய இந்தியர்களில் 84 விழுக்காட்டினர் நகர்ப்புறம் அல்லது புறநகர்ப் பகுதிகளில் வாழ்கின்றனர். [http://aliran.com/archives/monthly/2002/5f.html]


வரலாறு


மலேசியாவில் வாழும் தமிழர்கள்
1800-1900 ஆம் ஆண்டுகளில் பிரித்தானிய காலனித்துவ ஆட்சியினரால் தமிழ்நாட்டில் இருந்து கொண்டு வரப் பட்டனர். அவர்கள் ஒப்பந்தக் கூலிகளாக உடலுழைப்பு வேலைகளில் அமர்த்தப் பட்டனர்.


ரப்பர் தோட்டங்களில் வேலை செய்தனர். காடு மேடுகளை வெட்டி சாலைகளை அமைத்தனர். மேடு பள்ளங்களைக் கட்டி ரப்பர் கன்றுகளை நட்டனர். 
http://www.yss98.com/03_service/2004/news /disp_ar.php?file=03040101-20040705-0101.htm


அவ்வாறு மலேசியாவிற்கு வந்த தமிழர்கள் அவர்கள் தங்கி இருந்த இடங்களில் கோயில்களை அமைத்தனர். அவர்களுடைய பிள்ளைகளுக்கு கல்வி அவசியம் என்பதை உணர்ந்தனர். முதலில் சிறிய கல்விக் குடில்களை அமைத்தனர்.

மலேசியாவில் முதல் தமிழ் வகுப்பு
1816 ஆம் ஆண்டு Penang Free School பள்ளியில் தொடங்கப் பட்டது.

http://www.penangstory.net.my/indian-content-paperthiruvarasu.htm


அப்போது அப்பள்ளியின் தலைவராக இருந்த ஆர்.ஹட்சின்ஸ் என்பவர் தொடக்கி வைத்தார். 1900-ஆம் ஆண்டுகளின் இறுதியில் நாட்டின் விவசாயம் மற்றும் தோட்டப்புற மேம்பாட்டின் காரணமாக தென் இந்தியர்களின் வருகை கூடியது. அதனால் தமிழ்ப்பள்ளிகளின் எண்ணிக்கையும் கூடியது.

புதிய தொழிலாளர் சட்டம்
1912


பிள்ளைகளின் எண்ணிக்கை அதிகரிக்கவே சிறிய கல்விக் குடில்களாக இருந்தவை பின்னர் பள்ளிக்கூடங்களாக மாறின.


1940 - 1950ஆம் ஆண்டுகளில் தோட்டத்திற்குத் தோட்டம் ஒரு தமிழ்ப் பள்ளிக்கூடம் வந்தது. சிறு நகரங்களில் வாழ்ந்த தமிழர்களும் தமிழ்ப் பள்ளிக்கூடங்களை உருவாக்கிக் கொண்டனர்.


1912- ஆம் ஆண்டு புதிய தொழிலாளர் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதன்படி ஒரு தோட்டத்தில் குறைந்தது 10 தமிழ்க் குழந்தைகள் பள்ளி செல்லும் வயதில் இருந்தால் அங்கு ஒரு பள்ளி கண்டிப்பாகக் கட்டப்பட வேண்டும் என்பது தான் அந்தத் தொழில் சட்டம்.

http://ccat.sas.upenn.edu/~haroldfs/messeas/maltamil/MALAYSIA.html


பெரும்பாலும் அவ்வாறு கட்டப்பட்ட பள்ளிகள் தோட்ட நிர்வாகத்தினரின் கீழ் செயல்பட்டு வந்தன. பல தோட்ட மேலாளர்களின் மெத்தனப் போக்கினால் தமிழ்ப்பள்ளிகளின் நிலைமை தடுமாறியது.


தமிழ்ப்பள்ளிகளுக்கு முறையான ஒரு பயிற்றுத் தன்மை இல்லாதது ஓர் அடிப்படைக் காரணம். அல்லது வேர்த் தனம் இல்லாத குறைபாடு என்றும் சொல்லலாம்.


அதன் பின்னர் வந்த மலாயா கல்விச் சட்டம் தமிழ்ப்பள்ளிகள் தோன்றுவதற்கு முழுமையான அடையாளங்களைத் தோற்றுவித்தது.


ஆக
, தமிழ்ப்பள்ளிகளுக்கு ஒரு சாதகமானச் சூழல்நிலை ஏற்பட்டது. இந்த மாற்றங்கள் நடந்தது 1930 - 1937 ஆண்டுகளில்.


அடிப்படை உரிமைகள் இழப்பு


மலாயாவில் வேலை இருக்கிறது என்று இந்த நாட்டிற்கு வந்த இந்தியர்களின் நிலைமை மிகவும் வேதனையானது. அவர்கள் சரியாக நடத்தப்படவில்லை அவர்கள் தங்களின் அடிப்படை உரிமைகளை இழந்த மாதிரியான ஒரு நிலைமையும் ஏற்பட்டது. அமெரிக்க அடிமைகளைப் போல நடத்தப் பட்டனர்.


1950களில் மலாயா வாழ் இந்தியர்களின் அடிப்படை உரிமைகள் மிகுந்த பாதிப்பு நிலை அடைந்தன. இந்தக் கட்டத்தில் இந்திய அரசாங்கம் தலையிட்டது. மலாயா வாழ் இந்தியர்களுக்காகக் குரல் கொடுத்தது.


மலாயா வாழ் இந்தியர்கள் என்பதில் தமிழர்கள் பெரும்பான்மையினராக இருந்தனர். அதன் விளைவாக தமிழ்ப் பள்ளிகளிக்கு அதிக மானியம் வழங்கப்பட்டது. தமிழ் ஆசிரியர்களுக்குச் சிறப்பு பயிற்சியும் வழங்கப்பட்டது.

ரசாக் அறிக்கை


1956 ஆம் ஆண்டு "ரசாக் அறிக்கை" ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்தது. அதற்கு முன்னர் தமிழ்ப் பள்ளிகள் தனியார் நிர்வாகத்தின் கீழ் இருந்து வந்தன. 
http://www.indianmalaysian.com/education.htm

1957 ஆம் ஆண்டு கல்விச் சட்டத்தின் வழி சிறுபான்மை இனத்தவரின் பள்ளிகள் "தேசிய மாதிரி" எனும் அடைமொழியோடு புதிய வடிவம் கண்டன.


சிறுபான்மை இனத்தவரின் பள்ளிகள் என்பதில் தமிழ்ப்பள்ளிகளும்
, சீனப்பள்ளிகளும் அடங்கும். 1950களில் மலேசியாவில் 900 தமிழ்ப்பள்ளிகள் இருந்தன என்பது ஓர் அதிசயமான செய்தி.


ஆனால் இப்பொழுது
2011 ஆம ஆண்டில் அந்தத் தமிழ்ப்பள்ளிகளின் எண்ணிக்கை 523 இருக்கிறது என்பது ஒரு மகா வேதனையான செய்தி.


ஒரு காலக் கட்டத்தில் மலேசிய இந்தியர்கள் தோட்டப் புறங்களையே நம்பி வாழ்ந்தார்கள். அப்போது அவர்களிடம் கல்வியறிவு குறைவாக இருந்தது. அதனால் அவர்களுடைய எசமானர்களை அவர்களால் எதிர்க்க முடியவில்லை.


தமிழ்நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட தமிழர்களை அடிமைகளாகப் பிரித்தானியர்கள் கருதினர்.


ஆனால்
, அடுத்து அடுத்து வந்த தலைமுறையினர் நகர்ப்புறத்தை நாடினர். படிப்பறிவைப் பெற்றனர். தோட்டப்புற மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்தும் போனது. நூற்றுக்கணக்கான தமிழ்ப்பள்ளிகள் மூடப்பட்டன.


கூட்டுத் தமிழ்ப்பள்ளி


மேலும் சில தோட்டங்களில் இருந்த தமிழ்ப்பள்ளிகளில் குறைவான எண்ணிக்கை கொண்ட மாணவர்களே இருந்தனர். அதைச் சரி படுத்த கூட்டுத் தமிழ்ப்பள்ளிகள் உருவாக்கப் பட்டன்.


மூன்று நான்கு தமிழ்ப்பள்ளிகளைக் கூட்டாக இணைத்து ஒரு மையப் பள்ளியை அமைப்பது தான் ஒரு கூட்டுத் தமிழ்ப்பள்ளி ஆகும்.
http://vivegamm.blogspot.com/2008/01/blog-post_14.html


இப்படியும் தமிழ்ப்பள்ளிகளின் எண்ணிக்கை குறைந்தது. இந்த மாதிரியான கூட்டுத் தமிழ்ப்பள்ளிகள் 1979 - 1980 -ஆம ஆண்டுகளில் மிகவும் பிரபலம் அடைந்தன.

கீழே வரும் புள்ளி விவரங்கள் மலேசியத் தமிழ்ப்பள்ளிகள் எப்படி சன்னம் சன்னமாகக் குறைந்து வந்தன என்பதைக் காட்டும். மலேசியத் தமிழ்ப்பள்ளிகள்
1957 ஆம் ஆண்டில் 888ல் இருந்து 2006 ஆம் ஆண்டுக்குள் 523 ஆகக் குறைக்கப் பட்டன.


ஒரே ஓர்
50 ஆண்டுகளில் 365 தமிழ்ப்பள்ளிகள் மூடப்பட்டன. அந்தக் கட்டத்தில் மலேசிய இந்தியர்களுக்கு உதவிகள் செய்தவர் அமரர் துன் சம்பந்தன். தமிழகத் தூய்மைச் செம்மல் காமராசரைப் போன்றவர்.


ஐந்தாம் தலைமுறை இந்தியர்கள்


துன் சம்பந்தன் மறைவு மலேசியர்களுக்கு மட்டும் அல்ல உலகத் தமிழர்களுக்கே மாபெரும் இழப்பு.
2006 ஆம் ஆண்டில் இருந்து மலேசியாவில் உள்ள தமிழர்களிடையே ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டது.


இதுவரையில் ஒரு தமிழ்ப்பள்ளியும் மூடப்படவில்லை. மலேசியாவின் ஐந்தாம் தலைமுறையினரிடம் ஒரு புது மாறுதல்கள் தோன்றி வருகின்றன.


மலேசியாவில் எந்த ஒரு தமிழ்ப்பள்ளியும் மூடப்படாமல் இருக்க முயற்சி செய்து வெற்றியும் பெற்று வருகின்றனர்.


ஒரு தமிழ்ப்பள்ளி மூடும் கட்டாயம் வந்தால் முதலில் அந்தப் பள்ளியின் கல்வி அனுமதிச் சான்றிதழ் அரசாங்கத்திடம் இருந்து பெறப் படுகிறது.


வேறு ஓர் இடத்தில் அல்லது மாநிலத்தில் நிலம் வாங்கப்படுகிறது. அரசாங்கப் பணத்தை இவர்கள் எதிர்பார்க்கவில்லை. பல இலட்சம் ரிஙகிட் செலவு செய்து நிலத்தை வாங்கிய பின்னர் பள்ளிக்கூடம் கட்டப் படுகிறது.