18 ஜூலை 2012

சுவிஸ் வங்கியில் கணக்கு திறக்க வேண்டுமா?


சுவிட்சர்லாந்து! ஐரோப்பாவின் ஆல்ப்ஸ் மலையின் சரிவில் இருக்கும் ஒரு சின்னக் குட்டி நாடு. அங்கே அழகு அழகான ஏரிகள்.  சாக்லெட்டுகள், கடிகாரங்கள், வாசனைத் திரவியங்கள், பனிச்சறுக்கு விளையாட்டுகள் போன்றவை அங்கே மிக மிகப் பிரபலம். அதை எல்லாம் தாண்டி நிற்பவை சுவிஸ் வங்கிகள்.

உலகிலேயே நம்பர் ஓன் ரகசிய வங்கிகளின் தாயகம் என்று சொல்லலாம். தப்பே இல்லை. நேர்மையான காரணங்களில் தொடங்கி, அடாவடித்தனமாகச் சேர்த்த பணம் வரை அங்கே கொட்டிக் குவிந்து கிடக்கின்றன. கழுத்தை வெட்டினாலும் காட்டிக் கொடுக்காத நேர்மை சுவிஸ் வங்கிகளிடம் இருக்கிறது. அங்கு  மட்டும்தான் இது நடக்கிறது என்று நான் சொல்ல வரவில்லை.

உலகில் பல்வேறு குட்டித் தீவுகள், பிரிட்டிஷ் காலனிகள், அமெரிக்க அரசின் ஆதரவு பெற்ற பசிபிக் பவளத் தீவுகள் போன்ற பல இடங்களில் இந்த மாதிரியான தொலைகடல் வங்கித் தொழில்கள் (Offshore Banking) பிரசித்தி பெற்றவை. இருந்தாலும், ரகசிய வங்கிப் பரிவர்த்தனைகளில் சுவிட்சர்லாந்து நாடுதான் நம்பர் ஓன்.

எப்படி இந்த ரகசிய வங்கிகள் உருவாகின என்பது ஒரு பெரிய கதை. சுருக்கமாகச் சொல்கிறேன். சுவிட்சர்லாந்து, 300 ஆண்டுகளாய் யாரோடும் சண்டைக்குப் போகாத நாடு. தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கிற நாடு. 


இரண்டாம் உலகப் போரின்போது, மொத்த ஐரோப்பாவும் திசைக்கு ஒரு நாடாய்த் தோள் தட்டி போர்க் கொடி தூக்கிய போது, வெளியே நின்று வேடிக்கை பார்த்த ஒரே நாடு இந்த சுவிட்சர்லாந்து.

1505-ஆம் ஆண்டில் இருந்து சுவிட்சர்லாந்து எந்த ஒரு நாட்டுடனும் போரில் ஈடுபடவில்லை. ஆக, அந்த நாட்டில் ஓர் உறுதியான அரசியல் நிலைப்பாடு இன்னமும் இருக்கிறது. அத்துடன் தன்னுடைய பணப் பரிமாற்றத்துக்கு தங்கத்தைப் பின்னணியாகக் கொண்டு இயங்குகிறது. அதனால், உலக அளவில் மிகவும் நிலையான மதிப்பைக் கொண்ட பணமாக சுவிஸ் பணம் கருதப்படுகிறது.



இணைய வங்கி முறை, சுலபமான முதலீட்டு முறை போன்றவை சிறப்பாக உள்ளன. நீங்கள் ஒரு கிரிமினலாக இல்லாத வரை சரி. பயப்பட வேண்டிய அவசியமே இல்லை. உங்களைப் பற்றிய  ரகசியங்கள் வெளியே கசியக் கூடிய வாய்ப்பே இல்லை. இந்தக் காரணங்களினால் உலகின் பல ஆயிரம் மோடி மஸ்தான்களுக்கு சுவிஸ் வங்கிகள் சொர்க்க பூமியாக விளங்குகிறது.

கருப்புப் பணத்தின் அடிப்படை என்னவென்று தெரியும்தானே. ஊழல், லஞ்சம், வரி ஏய்ப்பு, அடித்துப் பிடுங்குதல், ஏமாற்றுதல், சூழ்ச்சியால் திசை திருப்புதல் போன்றவை. இருந்தாலும் ஊழலும், வரி ஏய்ப்பும்தான் கறுப்புப் பணத்தின் சிவப்பு விதைகள் ஆகும்.



ஏமாற்றி சம்பாதித்த ஊழல் பணத்தை சொந்த நாட்டில் வைத்திருப்பது மிகவும் ஆபத்து. அதனால் அதனை ஒரு பாதுகாப்பான இடத்தில் பதுக்கி வைக்க நினைப்பார்கள். உள்நாட்டில் பதுக்கி வைக்கலாம். ஏதாவது பிரச்னை என்றால் அப்புறம் ஒரு காசு கைக்கு வராது.

ஆக, இருக்கிற  பணம் பத்திரமாய் இருக்க வேண்டும். பாதுகாப்பாகவும் ரகசியமாகவும் இருக்க வேண்டும். பணம் இருப்பது எதிரிகளுக்குத் தெரிந்தால் பணத்திற்கும் ஆபத்து. உயிருக்கும் ஆபத்து.

1713-இல் தொடங்குகிறது ரகசிய வங்கிகளின் கதை. அந்த வருடத்தில், Great Council of Genevaவில், ரகசிய வங்கி பரிவர்த்தனைகள் மற்றும் வாடிக்கையாளர்களின் விவரங்கள் மீதான உச்சக் கட்டப் பாதுகாப்புச் சட்டத்தை இயற்றினார்கள். அன்றைக்கு ஆரம்பித்ததுதான் சுவிஸ் வங்கிகளின் ராஜபோக வாழ்க்கை.


சுவிஸ் வங்கிகள் கொஞ்சம் கொஞ்சமாய்ப் பிரபலம் அடைந்தன. பிரபுக்கள், தனவந்தர்கள், அரச குடும்பத்தினர் என 18ஆம் நூற்றாண்டில் அந்தப் புகழ் பரவத் தொடங்கியது. 21ஆம் நூற்றாண்டில் நல்லவர்கள், கெட்டவர்கள், நாணயமான சர்வாதிகாரிகள், முக்காடு போடும் முதலாளிகள், மாபியாக்கள், போதை மருந்து கடத்துபவர்கள், ஊழல் அரசியல்வாதிகள், புரோக்கர்கள் என மாபெரும் மனித கூட்டமே சுவிஸ் வங்கிகளில் அடைக்கலம் ஆயின.

இரண்டாம் உலகப் போர் உச்சத்தில் இருந்த கட்டம்.  இட்லர் ஒவ்வொரு நாடாக சுவாகா பண்ணிக் கொண்டிருந்த நேரம். ஐரோப்பாவில் இருந்த யூதர்கள் தங்களுடைய வாழ்நாள் சேமிப்பை  எல்லாம் சுவிஸ் வங்கிகளில் போட்டு வைத்தார்கள். பார்த்தார் இட்லர். உடனடியாக ஜெர்மனியில் அதிரடியான ஒரு சட்டத்தை இயற்றினார்.



யார் யார் அந்நிய நாட்டில் பணத்தைச் சேர்த்து  வைத்து இருக்கிறார்களோ அவர்களுக்கு எல்லாம் கட்டாயமாக மரண தண்டனை என்று அறிவித்தார். அப்போது போர் உச்சக்கட்டத்தில் இருந்த நேரம். இந்தச் சட்டம் இயற்றப்பட்டதும் சுவிட்சர்லாந்து தங்களின் வங்கி ரகசியத்தைப் மேலும் இறுக்கிப் பிடித்து வாடிக்கையாளர்களுக்கு கூடுதலான பாதுகாப்புகளை வழங்கியது.

இந்த நேரத்தில்தான் சுவிஸ் வங்கிகள் யாருமே எதிர்பார்க்காத காரியத்தைச் செய்தன. ஜெர்மனியில் இருந்த நாஜிக்கள், அங்கே வாழ்ந்த யூதர்களின் ஆவணங்களை அழிக்கத் தொடங்கினார்கள். போரால் உலகமே சின்னா பின்னாமாகிக் கொண்டிருந்த காலக்கட்டம். 


அதனால், இரண்டாம் உலகப் போரில் கலந்து கொள்ளாத சுவிஸ் நாட்டில் பணமும், தங்கமும் கொட்டோ கொட்டென்று கொட்டியது. அந்த நேரம் பார்த்து யூதப் படுகொலையில் சாகடிக்கப்பட்ட யூதர்களின் பணத்தை எல்லாம் சுவிஸ் வங்கிகள் கபளீகரம் செய்தன. பட்டவர்த்தனமான மோசடி. இந்தக் குற்றச்சாட்டு இன்று வரை ஓடிக் கொண்டிருக்கிறது.

இத்தனைக்கும் காரணம் என்ன தெரியுமா? சுவிஸ் நாட்டின் பிராங்க் நாணயம். அந்நாட்டு நாணயம்  நிலையான தன்மை கொண்டது. உலகில் நிலையாய் இருக்கும் ஒரே கரன்சிசுவிஸ் பிராங்க்தான். எல்லாரும் நினைக்கிற மாதிரி அமெரிக்காவின் டாலரும் இல்லை. ஜப்பானின் யென் நாணயமும் இல்லை. 

அதுவும் இல்லாமல், வங்கியில் இருக்கும் பணத்திற்கு ஈடாக 40 விழுக்காடு தங்கமாய் வைத்திருக்கும் நாடும் சுவிஸ்தான். ஆக, பணத்துக்குப் பணம் இருக்கிறது. அது இல்லை என்றால் பாதுகாப்புக்கு தங்கம் இருக்கிறது. அப்புறம் என்ன. அதனால்தான் எல்லாரும் அங்கே ஆலாய்ப் பறக்கிறார்கள்.


சுவிஸ் வங்கிகளின் உலகப் பெருமை என்ன தெரியுமா. அவர்கள் பயன்படுத்தும் எண்களைக் கொண்ட கணக்குக்கள். இதை Numbered Accounts என்று சொல்வார்கள்.

பிலிப்பைன்ஸின் முன்னால் அதிபரின் மனைவி இமால்டா மார்கோஸ். இவர் வருமானத்திற்கு மீறிப் பணம் சேர்த்ததாகக் குற்றச்சாட்டு. ஏறக்குறைய 430 மில்லியன் டாலர்கள் சுவிஸ் வங்கிகளில் வைத்திருப்பதாக வதந்தி.

இந்தோனேசியாவின் முன்னால் அதிபர் சுகார்தோ. அவரைப் பற்றி தெரியும் தானே. சுவிஸ் வங்கியில் போட்டு வைக்க அவர் கொடுத்த பணம் சுவிஸ் நாட்டிற்குப் போகவில்லை. பாதை மாறி, பட்டி தொட்டி எல்லாம் சுற்றி வந்தது. கடைசியில் தமிழ்நாடு, கோயம்புத்தூரில் உள்ள ஒரு தொழில்சாலையில் வந்து தஞ்சம் அடைந்தது. இந்தச் செய்தி பலருக்குத் தெரியாது.


சில மாதங்களுக்கு முன் எகிப்தில் கரைந்து போன ஹோஸ்னி முபாரக்; என்னையும் பாருங்கள் என் அழகையும் பாருங்கள் என்று சொன்ன லிபியாவின் கடாபி போன்றவர்களுக்கு சுவிஸ் வங்கியில் கணக்கு இருந்தது. உலகம் அறிந்த விஷயம். ஆனால், அந்தப் பணம் என்ன ஆனது என்பது பரம ரகசியம்.

சுவிஸ் வங்கிகளில் எண்களைக் கொண்ட கணக்கு திறந்தால் அதில் உங்கள் பெயரோ, முகவரியோ இருக்காது. உங்களுடைய கணக்கு என்பது 34 இலக்க எண்களைக் கொண்டது. உங்களைப் பற்றிய தகவல்கள் படு ரகசியமாய் இருக்கும். உங்கள் கணக்கைத் தொடங்கும் அதிகாரி மற்றும் வங்கியின் உயர்நிலை அதிகாரிகளுக்கு மட்டுமே கணக்கு விவரங்கள் தெரியும். வங்கியில் வேறு யாருக்குமே தெரியாது.

எந்த நாட்டைச் சேர்ந்தவரும், சுவிஸ் வங்கியில் கணக்கு தொடங்கலாம். ஆனால், 18 வயது பூர்த்தி அடைந்து இருக்க வேண்டும். தற்போது 101 நாடுகளைச் சேர்ந்தவர்கள் சுவிஸ் வங்கியில் பணத்தைப் பதுக்கி வைத்து இருக்கிறார்கள். இந்தியாவைப் பற்றி சொல்ல வேண்டாம். கறுப்பு பணம் 230,373 கோடியாக இருந்தது.

சுவிஸ் வங்கியில் கணக்கு தொடங்க உங்களுக்கு ஆசையா. கவலைப்பட வேண்டாம். உங்களுடைய பாஸ்போர்ட் மட்டும் இருந்தால் போதும்.  தபால் மூலம் கணக்கு தொடங்கலாம். அப்படியும் முடியும். வங்கிக் கணக்கை ஆரம்பித்துக் கொடுக்கும் நிறுவனத்துக்கு பாஸ்போர்ட் நகலை அனுப்பினால் போதும். காதும் காதும் வைத்த மாதிரி கணக்கைத் திறந்து கொடுத்து விடுவார்கள்.

அதைத் தவிர உங்கள் பொருளாதாரப் பின்னணி மற்றும் பணம் வரும் பின்னணி பற்றிய ஆவணங்களையும் அளிக்க வேண்டும். நீங்கள் அளிக்கும் தகவல்கள் மிகவும் ரகசியமாக வைக்கப்படும். நேரில் சென்று கணக்கு தொடங்குவதாக இருந்தால், ஒரு மணி நேரத்தில் முடித்து விடலாம்.

வங்கிக் கணக்கு தொடங்கக் குறைந்தபட்ச வைப்புத் தொகை இவ்வளவு இருக்க வேண்டும் என்று எதுவும் இல்லை. 500 சுவிஸ் பிராங்க் இருந்தாலே வங்கிக் கணக்கைத் தொடங்கிவிடலாம். ஆனால், சில குறிப்பிட்ட வங்கிகள் மட்டும் தொகையைக் கொஞ்சம் அதிகமாக  எதிர்பார்க்கின்றன. குறைந்தபட்சம் 10 லட்சம் சுவிஸ் பிராங்க்.  அதாவது நம்ப மலேசிய பணத்துக்கு ஏறக்குறைய 35 இலட்சம் வரலாம்!

தபால் மூலம் கணக்கு தொடங்குவதாக இருந்தால், குறைந்தது 10 நாட்கள் பிடிக்கும். முதலில் வங்கிக் கணக்கு தொடங்க உதவும் நிறுவனத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். அப்புறம் அவர்கள் ஒப்புதல் வழங்க வேண்டும். பின்னர், அவர்கள் விண்ணப்பத்தைத் தபாலில் அனுப்பிவைப்பார்கள். அதில் நீங்கள் கையெழுத்திட வேண்டும். சரியான ஆவணங்களை இணைத்துக் கொடுக்க வேண்டும். அதன் பிறகு, வங்கி உங்களுடைய கணக்கை ஆரம்பிக்கும்.

கடன் அட்டையைப் பயன்படுத்தி பணத்தை வைப்புத் தொகை செய்யலாம். இதன் வழி பணத்தை யார் முதலீடு செய்து இருக்கிறார்கள் என்பதைக் கண்டறிய முடியாது. தவிர, பண அஞ்சல், சொந்தக் காசோலை முறைகளையும் பயன்படுத்தலாம்.

சுவிஸ் வங்கிக்கு எந்த நாட்டிலும் கிளைகள் இல்லைவாடிக்கையாளர் இறந்துவிட்டால், அவருடைய வாரிசுதாரருக்குப் பணம் கிடைக்கும். ஆனால், அவர்தான் வாரிசுதாரர் என்று நிரூபிப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. ஒருவர் இறந்துவிட்டால் அவருடைய வாரிசுதாரர் 10 ஆண்டுகளுக்குள் வந்து, தான் ஒரு சட்டபூர்வமான வாரிசு என்பதை நிரூபிக்க வேண்டும். இல்லை என்றால், பத்தாவது ஆண்டின் முடிவில் அந்தக் கணக்கு செயலற்றுப் போகும்! பணமும் அபேஸ்!

ஆனால், இந்தப் பிரச்னைகள் எல்லாம் வராமல் இருக்க, வாரிசுகளிடம் கணக்கு பற்றிய விவரத்தை முன்கூட்டியே  தெரிவிக்கும்படி சுவிஸ் வங்கிகள் சொல்கின்றன. அல்லது ஒட்டப்பட்ட ஓர் உறையில் எல்லா விவரங்களையும் எழுதி வைக்கும்படியும் அறிவுறுத்துகின்றன

சுவிஸ் வங்கியில் கணக்கு திறக்க உங்களுக்கும் ஆசை வந்திருக்க வேண்டுமே! உதவி தேவைப்பட்டால் என்னிடம் ஆலோசனை கேளுங்கள். ஆனால், என்ன கொஞ்சம் பணத்தை எனக்கு எழுதி வைத்தால் நன்றாக இருக்கும் என்று… நான் சொல்லவில்லை. உள்ளே இருக்கும் பாழாய்ப் போன மனித ஆசை சொல்கிறது.


09 ஜூலை 2012

இணையத்தை முடக்க போகும் நச்சுநிரலி

இன்று திங்கட் கிழமை 9 ஜூலை 2012 திகதியில், உலகின் பெரும்பாலான கணினிகள் இணையத்தைப் பயன்படுத்த முடியாத நிலைமை ஏற்படலாம்.



DNS Changer எனும் வைரஸ் இணையத்தை முடக்க போகிறது. அதனால் உங்கள் கணினியும் பாதிக்கப்படலாம். வைரஸ் என்றால் நச்சு நிரலி. இது ஓர் அதிர்ச்சியான செய்திதான். ஆகவே, உங்கள் கணினியைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்.  இந்த நச்சு நிரலியில் இருந்து எப்படி தப்பிக்கலாம் என்பதைச் சற்று விரிவாகச் சொல்கிறேன். உடனடியாகச் செயல்படுங்கள்.

DNS  என்றால் Domain Name System. ஓர் இணையத் தளத்தின் முகவரியைக் கணினிக்கு புரியும் வகையில் எண்களாக மாற்றிக் கொடுக்கும் ஒரு முறைமை. எடுத்துக்காட்டாக, www.facebook.com என கணினியில் தட்டச்சு செய்தால், அந்த இணைய முகவரியை  204.15.20.0 என்ற எண்களாகக் கணினிக்கு மாற்றித் தரும்.

இப்பொழுது உள்ள புதிய பிரச்னை என்னவென்றால் DNS Changer என்ற பெயரில் ஓர் ஆபத்தான நச்சு நிரலியை உருவாக்கி உள்ளனர். இந்த நச்சு நிரலி பரிமாறிக் கணினிகளில் நுழைந்து நாம் கொடுக்கும் இணைய முகவரியைப் போலியான முகவரியாக மாற்றுகிறது. பின்னர், உங்கள் கணினியைச் செயலிழக்கச் செய்கிறது.


மற்றும் போலி தளங்களை வர வழைத்து கணினியின் உள்ளே இருக்கும் முக்கிய ரகசியங்களையும் கடத்தல் செய்கிறது. இப்படிப்பட்ட ஒரு நச்சு நிரலி இருப்பதாகக் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கண்டு அறியப்பட்டது. இது வரை உலகம் முழுவதும் பல மில்லியன் கணினிகள் பாதிப்படைந்து உள்ளன.

அமெரிக்காவின் உளவு அமைப்பான FBI தான் இந்த நச்சு நிரலியைக்  கண்டு பிடித்தது. அமெரிக்காவில் இருக்கும் எப்.பி.ஐ. உளவு நிறுவனம் இதுவரை ஏழு பேரைக் கைது செய்துள்ளது. அதில் 6 பேர் எஸ்தானியா நாட்டை சேர்ந்தவர்கள். ஒருவர் ரஷ்யாவைச் சேர்ந்தவர்.

இந்த நச்சு நிரலிக்கு எதிராகத் தற்காலிக DNS பரிமாறிக் கணினிகளை நிறுவினார்கள். அதன் மூலம் ஏற்கனவே DNS Changer நச்சு நிரலியினால் பாதிக்கப்பட்ட கணினிகள், தொடர்ந்து இணைய சேவையைப் பெறுவதற்கு வழி செய்யப்பட்டது.

ஆனால், இந்தத் தற்காலிக DNS பரிமாறிக் கணினிகளின் செயல்பாடுகள் இன்று திங்கட் கிழமை 9 ஜூலை 2012 நிறுத்த பட விருக்கிறது.

ஆதலால், ஏற்கனவே DNS Changer நச்சு நிரலியினால் பாதிக்கப்பட்ட கணினிகள் தொடர்ந்து இணைய சேவைகளைப் பயன்படுத்த முடியாது. ஆகவே அந்த நச்சு நிரலியை இன்னும் நீக்காமல் இருக்கும் கணினிகள்  இன்று திங்கட் கிழமை முதல் பாதிக்கப்படும்.

உலகம் முழுவதும் சுமார் பல மில்லியன் கணினிகள் பாதிக்க படலாம் என கருதப்படுகிறது. உங்கள் கணினி பாதிக்கப்பட்டுள்ளதா என அறிய வேண்டுமானால்: www.dns-ok.us எனும் தளத்திற்குச்  சென்று பரிசோதித்துக் கொள்ளுங்கள். உங்கள் கணினி பாதிக்கப்பட்டு இருக்கிறதா என்பதை இந்த தளம் உடனே சொல்லி விடும்.

விண்டோஸ் XP, Vista, 7 கணினிகளுக்கு:

DNS Changer  நச்சுநிரலியை உங்கள் கணினியில் இருந்து நீக்குவதற்கு, அவிரா நிறுவனம் ஒரு புதிய மென்பொருளை உருவாக்கி உள்ளது. பதிவிறக்கம் செய்ய வேண்டிய முகவரி:http://www.avira.com/files/support/FAQ_KB_Download_Files/EN/AviraDNSRepairEN.exe 

குறைந்த கால அவகாசமே இருப்பதால் இந்தத் தகவலை அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்.

28 ஏப்ரல் 2012

மலேசியாவின் வீரப் பெண்மணி அம்பிகா சீனிவாசன்

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் பெர்சே 3.0 எனும் மாபெரும் மக்கள் பேரணி நடைபெற்றது.  அம்பிகா அவர்கள் தலைமை தாங்கினார். 




அதைப் பற்றிய மேல்  விவரங்கள்
http://www.themalaysianinsider.com/malaysia/article/ambiga-najib-cannot-ignore-massive-bersih-3.0-turnout/ 


28.04.2012

(இந்தக் கட்டுரையை எழுதும் போது பெர்சே 3.0 பேரணி கோலாலம்பூரில் நடைபெறுகிறது. அதில் கலந்து கொள்ளும் அனைத்து மலேசியத் தோழர்களுக்கும் சமர்ப்பணம்.)

உலக நாடுகளில் சிறந்த விளங்கும் துணிச்சல்
மிக்க பெண்மணிகளுக்கான அமெரிக்க விருது.
அருகில் ஹில்லரி கிளிண்டன், மிச்சல் ஒபாமா

யார் இந்த அம்பிகா சீனிவாசன்?

இவர் மலேசியாவின் மிக விநோதமான ஆளுமை படைத்த பெண்மணி. மரணவாசலில் வீர வசனம் பேசும் துணிச்சலான தமிழ்ப்பெண். மலேசிய வழக்கறிஞர்கள் மன்றத்தின் தலைவராக இருந்தவர். இப்போது உலகப் பெண்களுக்கு மத்தியில் சட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்ற ஓர் ஜீவ நாடி. மதச் சகிப்புத்தன்மையை மக்களின் மனதில் விதைத்து வருகின்றார். அவருடைய இந்தச் சேவைகள் அவரை உலகின் சிறந்த பெண்மணியாக அடையாளம் காட்டுகிறது.


விருது பெற்ற ஏனைய உலகப் பெண்மணிகள்
அம்பிகா சீனிவாசன், மலேசியாவில் ஒவ்வொருவரும் உச்சரிக்கும் ஒரு உன்னதமான மந்திரச் சொல். இவரின் பின்னால் இலட்சக்கணக்கான மக்கள் அலை அலையாய் திரண்டு நிற்கின்றனர். இவரைத் தெரியாதவர் மலேசியாவில் யாரும் இருக்க முடியாது.

மலேசிய நாட்டில் சுத்தமான பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று போராட்டம் செய்து வரும்
அம்பிகா அவர்கள் ஓர் அற்புதமான அழகிய பெண்மணி. ஆற்றல்மிக்க அறிவாளி. அரசாங்கத்தின் அச்சுறுத்தலைக் கண்டு கலங்காமல், தூய்மையான அரசாங்கத்திற்காகப் போராடி வருகிறார். பல முறை கைது செய்யப்பட்டார். இப்போது அவருடைய உயிருக்கே விலை பேசப்படுகிறது.



கடந்த ஆண்டு மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடந்தேறிய பெர்சே 2.0 பேரணிக்கு தலைமை வகித்து நடத்திய அம்பிகா சீனிவாசன் அவர்கள் யார் எனும் கேள்வி மலேசியா முழுவதும் பெரும் தாகத்தை ஏற்படுத்தி உள்ளது. அரசாங்கத் தொலைக்காட்சிகளில் ‘பெர்சே’வில் கலந்துகொள்ள கூடாது என பொதுமக்களுக்கு எச்சரிக்கைகளும் விளம்பரங்களும் தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகின்றன. அம்பிகா சீனிவாசனைச் சிறுமைப்படுத்தி பல குறுந்தகவல்கள் மலேசியா முழுமையும் பிரச்சாரம் செய்யப்படுகிறது.


பத்திரிகையாளர்களின் படயெடுப்பு

'இவர் ஒரு பயங்கரவாதி என்கின்ற ஓர் இந்துப் பெண்' என்று வகைப்படுத்தப் படுகிறது. 20,000 வழக்கறிஞர்களைக் கொண்ட மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் தலைவராக இருந்த டத்தோ அம்பிகா இப்போது கொச்சைப் படுத்தப்படுகிறார். வேதனையான விஷயம். அவருடைய பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலேயே கூட்டுச் சதித் திட்டங்கள் நடைபெற்று வருகிறது.
அம்பிகாவின் பின்னால் அவருடைய ஆதரவாளர்கள்

2009 ஆம் ஆண்டு டத்தோ அம்பிகாவுக்கும் மற்றும் உலக நாடுகளைச் சேர்ந்த எண்மருக்கும் சிறந்த துணிகரமிக்க பெண்மணிக்கான விருதுகள் அமெரிக்காவில் வழங்கப்பட்டன. அந்த விருது வழங்கும் நிகழ்வில்  ஹில்லரி கிலின்டன் டத்தோ அம்பிகாவைப் பற்றி இப்படி அடையாளப்படுத்தினார். “அம்பிகா மலேசியாவின் மிக விநோதமான ஆளுமை படைத்தவர். மலேசியச் சூழலில் அவருடைய வித்தியாசமான அடைவுகள் கவனிக்கத்தக்கவை. 

புதிய சட்ட சீர்த்திருத்தங்களையும் செயலாக்கங்களையும் உருவாக்கும் வல்லமை படைத்தவர். நிர்வாகத் திறமையிலும் நீதித்துறையிலும் புதிய மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு அம்பிகா தொடர்ந்து கடமையாற்றி வருவது மிகவும் பாராட்டத்தக்கது.

அம்பிகாவின் பெற்றோர்கள்
பெண்களுக்கு மத்தியில் சட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும், மதச் சகிப்புத்தன்மையை எல்லோர் மனதிலும் விதைப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். அவருடைய இந்தச் சேவைகள் அவரை உலகின் சிறந்த பெண்மணியாக அடையாளப்படுத்துகிறது. 

ஆகையால் அவரின் பங்களிப்புகளையும் சேவைகளையும் அங்கீகரிக்கும் வகையில் அவர் இந்த மேடையில் கௌரவிக்கப்படுகிறார்.”

காவலர்களால் கைது செய்ய்ப்படும் அம்பிகா
1975-இல் தலைமை சட்ட மாணவியாக புக்கிட் நானாஸ் இடைநிலைப்பள்ளியில் அம்பிகா சீனிவாசன் அவர்களின் பயணம் தொடங்கியது. ஜூலை 2011-இல் அம்பிகா சீனிவாசனுக்கு அல்மா மாட்டெர் பல்கலைக்கழத்தால் சட்டத்துறைக்கான டாக்டர் பட்டம் கொடுக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது. 

ஒரு வழக்கறிஞராக அம்பிகா அவர்கள் தனது உயரிய சேவையை வழங்கியதற்காகவும் 3 ஆண்டுகள் வழக்கறிஞர் மன்றத்தின் தலைவராகப் பணியாற்றியதற்காகவும் இந்த டாக்டர் விருது அவருக்கு வழங்கப்படுகிறது.

பெர்சே 3.0இன் குந்தியிருப்பு போராட்டச் சின்னம்

30 ஆண்டு காலம் வழக்கறிஞராகப் பணிப்புரிந்த அம்பிகா அவர்கள் வெவ்வேறு துறையிலும் சட்ட ஆலோசகராகச் சேவையாற்றிய அனுபவமுடையவர்.

அவர் வழக்கறிஞர் மன்றத்தின் தலைவராக இருந்தபோது, பல முஸ்லீம் மத அமைப்புகளையும் மீறி, ஷாரியா மற்றும் மத சுதந்திரம் உரிமைகள் தொடர்பான ஒரு கலந்துரையாடல் அரங்கத்தை ஏற்படுத்தியுள்ளார்.

பத்திரிகையாளர்களுக்கு பேட்டி. வெண் தாடியுடன் இருப்பவர்
மலேசியாவின் புகழ்பெற்ற மலாய் இலக்கியவாதி சமாட் சாயிட்

அம்பிகா சீனிவாசன் 2008 ஆம் ஆண்டில் மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் தலைவர் என்ற முறையில், உலக மனித உரிமை ஆணையத்துடன் இணைந்து ஒரு குழுவை உருவாக்கினார்.

அதன் பிறகு, 1988 ஆம் ஆண்டு சட்ட ஒழுங்கில் ஏற்பட்ட சிதைவையும் தேக்கத்தையும் ஆராய்ந்து அறிக்கை விடப்பட்டது. மேலும் அதிகார மீறல்களைத் தொடர்ந்து கவனித்து கண்டிக்கவும் இந்தக் குழு செயல்பட்டது.

2007இல் ஜூன் 15 முதல் 17 ஆம் திகதி வரை மலாக்கா நகரத்தில் மலேசிய வழக்கறிஞர் மாநாடு நடந்தேறியது. அதில் கலந்துகொள்ள வந்த மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் தலைவர் அம்பிகா அவர்களை நேர்காணல் செய்யப்பட்டது.

கேள்வி : மார்ச் 2007க்குப் பிறகு இந்த மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்ற உங்களின் அனுபவம் எப்படி இருக்கிறது?

அம்பிகா: வேறு எதுவும் தலைமை பொறுப்புக்கான தகுதிகளை உருவாக்கிவிட முடியாது. அதனை ஏற்றுக்கொண்ட பிறகே தலைமைத்துவத்தைப் பழகிக்கொள்ள முடியும் என நினைக்கிறேன். என் வாழ்வின் பெரும்பான்மையான பகுதியை அது பிடுங்கிக் கொண்டது எனத்தான் சொல்ல வேண்டும்.

இருப்பினும் இதை நான் ஒரு புகாராக முன்வைக்கவில்லை. மாறாக இந்தத் தலைமை பொறுப்பு எனக்கு அதிகமான சவால்களையே கொடுத்திருக்கிறது. சவால்களை விரும்பக்கூடிய ஒரு மனபோக்கு உடைய எனக்கு அது பிரமிப்பையே தருகிறது.

இந்தப் பொறுப்பில் இருந்த காலக்கட்டத்தில் எத்தனையோ வகையான பிரச்சனைகளை நான் சந்தித்துவிட்டேன். ஒவ்வொன்றும் வித்தியாசனமானவை. ஒரு பிரச்சனையைப் போல் இன்னொன்று இருப்பதில்லை. ஆகையால் வெகு விரைவிலேயே நான் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியதன் சந்தர்ப்பங்கள் உருவாகின.

கேள்வி : மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் தலைவராக உங்கள் பொழுதுகள் எப்படி இருக்கின்றன?

அம்பிகா: எந்த நேரத்திலும் எப்பொழுதும் அழைக்கப்படலாம். ஆகவே தயார்நிலையில் இருக்க வேண்டிய சூழல். நான் கொஞ்சம் கொஞ்சமாக இந்த வேலையைப் பழகிக்கொண்டிருப்பதால் எனக்கு இது ஒரு பயிற்சியாக இருக்கிறது. நான் அலுவலகத்தில் இருப்பதைவிட தொலைப்பேசியின் வாயிலாகத் தொடர்புக் கொண்டு சில வேலைகளை முடித்துக் கொடுப்பதுதான் அதிகமாக நடக்கிறது.

இதில் இன்னும் கூடுதலான விசயம், பத்திரிக்கை, மீடியாக்களுக்கு அறிக்கை கொடுப்பதுதான். அவ்வப்போது பிரச்சனைகள் சார்ந்து முக்கியமான தகவல்களையும் அறிக்கைகளையும் அவர்களுக்குக் கொடுத்தாக வேண்டும். மீடியாக்களும் நாங்கள் நேர்மையான தீர்க்கமான கருத்துகளையும் தகவல்களையும் சொல்வோம் என நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.

நாங்களும் அதைச் செய்வதில் முழுமையாகக் கடமைப்பட்டுள்ளோம். சட்டம் அல்லது சமூகம் சார்ந்த பிரச்சனைகள் எழும் போது, நீதியை நிலை நாட்ட குரல் எழுப்ப வேண்டிய கடப்பாடு நமக்கு இருக்கின்றது. இதைத் தவிர்த்து எனது பட்டறைகளுக்கும் மாநாடுகளுக்கும் உரைகளைத் தயார் செய்யும் பணியிலும் நான் ஈடுபட்டு வருகிறேன்.

இவற்றை எல்லாம் நிறைவாய்ச் செய்துவிட நீண்ட கால அவகாசம் தேவை. எனினும் இவற்றை எல்லாம் உரிய நேரத்தில் சரியாய்க் கையாளும் கலையை நான் அறிவேன்.

கேள்வி : செய்தியாளர்கள் சந்திப்புக் கூட்டத்தில் அறிக்கை விடுப்பதற்கும் உரைகளைத் தயார் செய்து கொடுப்பதற்கும் உங்களுக்கு யாராவது உதவி செய்கிறார்களா?

அம்பிகா: ஆமாம் செயலவைக் கூட்டத்தில் எனக்கு உதவுவதற்கு ஒரு சில முக்கியமானவர்கள் இருக்கிறார்கள். இருப்பினும் சில வேளைகளில் பிரச்சனைகள் குறித்தும் வழங்கப்படவிருக்கும் உரைகள் குறித்தும் ஆய்வுகள் செய்து சிந்திப்பதற்கு நான் நேரத்தைச் செலவிடுவேன்.

செய்தியாளர்கள் சந்திப்பிலும் நான் சுயமாகச் சிந்தித்து சில விசயங்களில் கருத்துரைப்பேன். அது என் வழக்கமும் கூட. எடுத்துக்காட்டாக லீனா ஜாய் வழக்கு நிலவரத்தில் இரு தரப்பு தீர்ப்புகளையும் ஆழ்ந்து படித்து ஆய்வு செய்த பிறகே செய்தியாளர் சந்திப்பில் எனது கருத்தை முன்வைத்தேன்.

கேள்வி : இந்தத் தவணையில், உங்களின் முதன்மையான நடவடிக்கைகள் என்ன?

அம்பிகா: எங்கள் ஆலோசனைக் குழு தொழிற்துறை மேம்பாட்டு அணுகுமுறையை மறுசீரமைப்புச் செய்யத் திட்டமிட்டுள்ளது. மேலும் நாங்கள் கட்டாயச் சட்டக் கல்வியை ஊக்குவித்து வருகிறோம். இதனைத் தவிர்த்து உறுப்பினர்களின் நலன் கருதியும் சிறந்த சேவையை வழங்கவும் எங்களின் அலுவலக நிர்வாகத்தை மேலும் நேர்த்தியாக்க முயற்சி செய்து உள்ளோம்.

எங்களின் மனித உரிமைக்கான செயற்குழு சில மனித உரிமை நிரல்களின் கீழ் செயல் படுத்துவதற்காக ஓர் அடிப்படை வரைவினை தயார் செய்து வருகின்றது. நடுநிலை சட்ட ஆணையமான IPCMC தொடர்பான, 1988 ஆம் ஆண்டு ஏற்பட்ட சட்ட நெருக்கடியை மறுபரிசீலனை செய்தல், உள்நாட்டு அரசாங்கத்தின் செயற்பாடுகளை மறுசீரமைப்புச் செய்தல் போன்ற மிக இன்றியமையாத விவகாரங்களின் மீதும் நாங்கள் கவனம் செழுத்தி வருகிறோம்.

இதன் தொடர்பாக அண்மையில் உள்நாட்டு அரசாங்கத்தைப் பற்றிய கருத்தாடல் நிகழ்த்திய மலாக்கா மாநில வழக்கறிஞர் மன்றத்தை நான் இவ்வேளையில் பெரிதும் பாராட்டுகிறேன். இதன் மூலம், இந்தத் தவணையில் நாங்கள் பல ஆக்ககரமான செயற்பாடுகளில் கவனம் செழுத்தி வருவதை நீங்கள் அறியலாம்.

கேள்வி : மலேசிய வழக்கறிஞர் மன்றம் சந்திக்கும் முதன்மையான சவால்கள் என்னவாக இருக்கின்றன?

அம்பிகா: ஒவ்வொரு வருடமும் வழக்கறிஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது. வழக்குகளின் எண்ணிக்கையும் இந்த வருடம் அதிகரித்துள்ளன.

மேலும் புதிய பிரச்சனைகள், புதிய சிக்கல்களை ஒட்டி அரசாங்கம் எங்களுடன் பேச்சு வார்த்தைக்கும் கலந்துரையாடல் அணுகுமுறைக்கும் எப்பொழுதும் தயாராக இருக்கிறது. ஆகையால் நாங்களும் சிறந்த சேவையை வழங்கவே முயற்சித்துக்கொண்டிருக்கிறோம்.

கேள்வி : வழக்கறிஞர் கழகத்தில் உள்ள சில உறுப்பினர்கள் அக்கழகத்தில் அதிகமாக அரசியல் பேசப்படுவதால் அதிலிருந்து விலகியே இருக்கின்றனர். இதை பற்றி உங்கள் கருத்து என்ன?

அம்பிகா: நிஜம் தான். வழக்கறிஞர் கழகம் விமர்சனத்திற்கு பேர் போனது.ஆகையால் அங்கே சில கடுமையான விமர்சனங்கள் இருப்பது உண்டு. அங்கே முன்வைக்கப்படும் அனைத்துமே விமர்சனத்தைக் கண்டிப்பாக எதிர்க்கொள்ள வேண்டி இருக்கும். கழகம் அரசியலாக்கப்படும் நோக்கம் பல உறுப்பினர்களை தொண்டு செய்வதிலிருந்து மெல்ல மெல்ல அகற்றி இருக்கிறது.

ஆனாலும் இந்த நிலை போக போக மாறி ஆக்ககரமான சூழலை கழகத்தில் உருவாக்கும் என எதிர்ப்பார்ப்போம். நாம் அனைவரும் தொண்டர்கள் என்றும் நம் உறுப்பினர்களுக்காக முடிந்த வரை சேவை செய்வோம் என்பதையும் மனதில் நிறுத்தி கொள்ள வேண்டும்.

இங்கே தியோடோர் ரூசெவெல்ட் சொன்னது நினைவுக்கு வருகிறது.

“...இவ்வுலகில் உண்மையாய் வேலை செய்பவரே நினைவால் எண்ணப்படுபவர், விமர்சிப்பவரல்ல…’ அதாவது அவர் செய்யும் வேலை முழுமை அடையாமலும் கடினமானதாக இருந்தாலும் கூட அவரே, தான் வேலை செய்பவராக கருதப்படுவார். அதை எப்படி செய்வது என்று சொல்பவரோ எழுதுபவரோ அல்ல.

ஒரு நாட்டின் வழக்கறிஞர் கழகத் தலைவராக இருக்கும் அம்பிகா சீனிவாசன் இன்று அரசாங்கத்துக்குச் சவால்விடும் மிகப்பெரிய சக்தியாக உருமாறியுள்ளார்.

7000 போலீஸ்காரர்களை அரசாங்கம் சாலையில் நிறுத்தி வைத்தது.
3 கண்ணீர் புகை பாய்ச்சும் நீர் வண்டிகள் தயார் நிலையில் நிற்கின்றன.
நூற்றுக்கணக்கான கண்ணீர் புகை குண்டுகள் காத்திருக்கின்றன.
5 ஹெலிகோப்டர்கள்...
நான்கு K9 நாய் போலீஸ் குழுக்கள்
8 சாலைகள் முற்றாக மூடபட்டன...
50க்கும் மேற்பட்ட சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் தடுப்புகள்...
பொது போக்குவரத்து வசதிகள் முடக்கப்பட்டன.

சரியாக 2.00 மணிக்கு மக்கள் கூட்டம் கூட்டமாகப் கோலாலம்பூர் மாநகரத்திற்குள் படை எடுக்கத் தொடங்கினர். அரசாங்கம், பல தடைகளையும் மிரட்டல்களையும் மக்களுக்கு விதித்தும் ‘சட்டவிரோதப் பேரணி’ என்று முத்திரை குத்தியிருந்தபோதும் அவற்றையும் மீறி ஏறக்குறைய 50,000 மக்கள் கோலாலம்பூரில் ஒன்று திரண்டனர்.

ஒவ்வொருவரும் அவரவர் வாகனத்தை 10 கிலோமீட்டர் தூரத்தில் நிறுத்தி வைத்துவிட்டு ஒன்றுகூடும் இடத்திற்கு நடந்தே வந்து பெர்சே பேரணியை வெற்றியடைய வைத்தனர்.

அம்பிகா சீனிவாசன் தலைமையில் நடந்த 2.0 இப்பேரணி எட்டு கோரிக்கைகளை நேர்மையான தேர்தலுக்கு அடிப்படையாகக் கோருகிறது. அவை :

1. விரைவில் அகலா கருப்பு மையைப் பயன்படுத்தவேண்டும்.
2. குறைந்த பட்சம் 21 நாட்கள் தேர்தல் பிரச்சாரத்திற்கு ஒதுக்க வேண்டும்
3. தூய்மையான வாக்களிப்பு முறை.
4. அஞ்சல் ஓட்டுகள் முறையைச் சீரமைப்பது.
5. நேர்மையான, சுதந்திரமான ஊடகச் செயல்பாடு.
6. பொதுமக்கள் விழிப்புணர்வை அதிகரிப்பது.
7. ஊழலை ஒழிப்பது.
8. கறைப்படிந்த அரசியலை நிறுத்துவது.

அம்பிகாவின் இந்தக் கோரிக்கைகளுக்கு மலேசியாவின் பல்வேறு இன மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. எதிர்ப்பு அரசியலின் ஆக்ககரமான தொடக்கமாகவே பெர்செ பேரணியின் வெற்றி கண்ணுக்குத் தெரிகிறது. இந்தக் கட்டுரையை எழுதும் போது பெர்சே 3.0 பேரணி கோலாலம்பூரில் நடைபெறுகிறது. உடல்நலக் கோளாறினால் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. ஆனால், என் மகன்கள் கலந்து கொள்கிறார்கள்.

நன்றி: http://www.vallinam.com.my/issue32/column2.html 
(வல்லினம் இணைய இதழில் கே.பாலமுருகன் அவர்கள் எழுதியதில் இருந்து தொகுக்கப்பட்டது.)

பிற இணைப்புகள்: