25 ஆகஸ்ட் 2012

கார்ப்பரேட் சாமிகளின் கலிகாலச் சாதனைகள்

[இந்தக் கட்டுரை 23.08.2012 ’தினக்குரல்’ மலேசிய நாளிதழில் பிரசுரிக்கப்பட்டது]

கமலஹாசனின் ஒரு வசனம். ”கடவுள் இல்லை என்று சொல்கிறவனை நம்பலாம். கடவுள் உண்டு என்று சொல்கிறவனை நம்பலாம். ஆனால், நான்தான் கடவுள் என்று எவன் ஒருவன் சொல்கிறனோ அவனை நம்பவே கூடாது”. இவை கற்பக விருட்சங்களாக வாழ்கின்ற தத்துவப் பாசுரங்கள். மனிதனில் எவனும் கடவுள் இல்லை. எந்த ஒரு மனிதன் தன்னை ஒரு கடவுள் என்று சொல்கிறானோ, அவன் மனிதனே இல்லை.



இப்போது கலியுகம் நடக்கிறது. அந்த யுகம் கண் சிமிட்டிய நேரம் சரி இல்லை என்று நினைக்கிறேன். நல்ல சாமியார் என்று பெயர் எடுத்தவர்கள் எல்லாம் இடம் தெரியாமல் போகின்றார்கள். கையை நீட்டச் சொல்லி, நாலு வார்த்தையில் நம்பிக்கை வளர்த்த சாமியார்கள் எல்லாம் காணாமல் போகின்றார்கள். கிளியும் கையுமாகத் திரிந்த கிளிச் சாமியார்கள் எங்கே போனார்கள் என்றும் தெரியவில்லை. அதையும் தாண்டி, சில நேர்மையான ஏழைச் சாமிகள் இருந்தார்கள். அவர்களும் ஆள் அட்ரஸ் இல்லாமல் போய்விட்டார்கள்.



இங்கே ஒன்றைத் தெளிவாகச் சொல்லி விடுகிறேன். சாமியார்கள் யாரையும் நாம் குறை சொல்லவில்லை. உண்மையான, நல்ல சாமியார்கள் இருக்கிறார்கள். நம்முடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். நாணயமாக ஆன்மீகச் சேவைகளைச் செய்து கொண்டும் இருக்கிறார்கள். அவர்களை நாம் மதிக்கிறோம். வாழ்த்துகிறோம்.

ஆனால், அந்தச் சாமியார் கூட்டத்திலேயே பசுத் தோல் போர்த்திய புலிகளும் இருக்கின்றன. மான்தோல் போர்த்திய முதலைகளும் இருக்கின்றன. அந்தக் கார்ப்பரேட் புலிகளும், அந்தக் கார்ப்பரேட் முதலைகளும் எத்தனைக் குடும்பங்களைக் கெடுத்துக் குட்டிச்சுவராக்கி இருக்கின்றன. எத்தனைப் பெண்களை நாசமாக்கி நடுத்தெருவில் விட்டு இருக்கின்றன. எத்தனை ஏழைகளின் வயிற்றில் அடித்து கருவை நசுக்கி இருக்கின்றன. எத்தனைக் குடும்பங்களைக் கெடுத்துக் கழிசடை ஆக்கி இருக்கின்றன. எத்தனைப் பேரைக் கொலை செய்து மாலைகள் போட்டு இருக்கின்றன. அந்த ஆதங்கம்தான் இந்தக் கட்டுரை.


கார்ப்பரேட் சாமியார்கள் பிரம்ம மந்திரங்களைப் பாடினார்கள். மன்னிக்கவும். பிரம்ம மந்திரங்கள் என்பது புனிதமானச் சொற்கள். இருந்தாலும் அதைப் பாடித்தானே கார்ப்பரேட் சாமியார்கள் கோடிக் கோடியாய்ச் சுருட்டினார்கள். கதைக்கு வருகிறேன். ரமண ரிஷியை உங்களுக்குத் தெரியும் தானே. ஒருநாள் அவர் கையில் இருந்த சில சில்லறைக் காசுகளைக் குளத்தில் தூக்கி எறிந்துவிட்டு தபசில் ஆழ்ந்து போனார். ‘காசும் பணமும் நகையும் ஆட்கொல்லி’ என்று சொன்னவர், கடைசி வரையில் காசைக் கையில் தொடவே இல்லை. அவரைப் பின்பற்றி இன்னொரு யோகி வாழ்ந்தார். ‘நான் ஒரு பிச்சைக்காரன். உனக்கும் எனக்கும் சேர்த்து ஆண்டவனிடம் பிச்சைக் கேட்கிறேன்’ என்றார். அவர் யோகி ராம் சுரத் குமார்.

ஆதி சங்கரர், அப்பைய தீட்சிதர், சட்டம்பி சுவாமிகள், இராமானுசர், ராகவேந்திர சுவாமிகள், ரமண மகரிஷி, பாம்பன் குமரகுருதாச சுவாமிகள், கண்ணையா யோகி, ஞானானந்தகிரி சுவாமிகள், யோகி ராம் சுரத் குமார், சித்பவானந்தர் போன்றவர்கள் தமிழகம் கண்ட சுத்த ஆன்மீகவாதிகள். அந்த ஆன்றோர்களின் பெயர்களைச் சொல்லி வந்தவர்கள்தான் இந்த ரஜ்னீஷ், பிரேமானந்தா, சந்திராசாமி, ராமன்ஸ்வாமிஜி, சதுர்வேதி, காமந்தக சாமியார், நித்தியானந்தா போன்ற சாமியார்கள். அதற்கு முன், கார்ப்பிரேட் என்றால் என்ன என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.


கார்ப்பிரேட் என்பது corporate எனும் ஆங்கிலச் சொல்லில் இருந்து வந்த ஒரு வாடிக்கைச் சொல். தமிழில் இது ஒரு வழக்குச் சொல்லாக மாறி வருகிறது. ஒரு நிறுவனத்தின் உச்ச மட்ட நிர்வாகத்தில் இருப்பவர்களைக்  கார்ப்பிரேட் என்று சொல்வார்கள். அவர்களுடைய எண்ணம், எழுத்து, எழுச்சி எல்லாமே பணத்தைச் சுற்றிச் சுற்றிதான் இருக்கும். அவர்களை மிஞ்சி எதுவும் நடக்க முடியாது. அவர்கள் எடுத்த முடிவுதான் இறுதி முடிவு. அதைத் தாண்டி எதுவும் இல்லை. அவர்கள் கிழித்த கோட்டை யாரும் தாண்டிப் போக மாட்டார்கள். அப்படிப்பட்ட அதிகாரம் உள்ளவர்களைத்தான்  கார்ப்பிரேட் அல்லது கார்ப்பரேட் தலைவர்கள் என்பார்கள்.


நித்தியானந்தா என்பவர் ஒரு கார்ப்பிரேட் சாமியார்தான். இல்லை என்று யாரும் மறுக்க முடியாது. நித்யானந்தர் தன்னை ஒரு பிரம்மச்சாரி, ஞானி, இந்திய ஞான மரபில் வந்தவர் என்று சொல்லிக் கொண்டார். ராமகிருஷ்ண பரமஹம்சர், ரமணர் போன்ற ஆன்மீகக் கர்த்தாக்களின் வாரிசு என்றும் சொல்லிக் கொண்டார். இப்படிச் சொல்லி இலட்சக்கணக்கான மக்களை நம்ப வைத்தார். அவரை நம்பி பல இளம் பெண்கள் சந்நியாச வாழ்வையும் மேற்கொண்டனர்.
சான்று: http://tamil.webdunia.com/newsworld/news/currentaffairs/1206/12/1120612015_1.htm

ஒரு சின்னக் கதை வருகிறது. ஒரு கணவனும், மனைவியும் நித்யானந்தரின் சீடர்கள். அவர்களுக்கு ஒரே ஒரு மகள். கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தாள். என்ன நடந்ததோ, ஏது நடந்ததோ தெரியவில்லை. ஒரு நாள் ‘எனக்கு அப்பாவும் வேண்டாம், அம்மாவும் வேண்டாம். எனக்கு நித்திதான் வேண்டும்’ என்று சொல்லி  அந்தப் பெண், நித்யானந்த ஆசிரமத்தில் துறவியாகச் சேர்ந்தாள். அதனால் அந்தக் குடும்பமே சிதைந்து போனது. அதைப் பற்றி அவரிடம் கேட்ட போது ‘போகட்டும்’ என்று சொன்னார் நித்யானந்தர். புத்தர் துறவியாக மாறவில்லையா என்று திருப்பிக் கேட்டாராம். சான்று: http://nakkheeran.in/Users/frmNews.aspx?N=77945


இந்தக் கட்டத்தில் எனக்குள் ஒரு கேள்வி. அந்தத் தெய்வ மகான் தன்னுடைய 29ஆவது வயதில் யசோதராவை  விட்டு விலகிச் சென்றார். லௌகிக வாழ்க்கையை மறுத்து துறவறம் பூண்டார். ஆனால், நித்யானந்தர் என்ன செய்தார். தன்னுடைய 32ஆவது வயதில் ரஞ்சிதாவை இல்லறத்தில் இணைத்துக் கொண்டார். துறவறத்தைத் துறந்து லௌகித்தில் லயித்துப் போனார்.
சான்று: http://www.manithan.com/news/20120517102697

நித்யானந்தரின் பக்த கோடிகள் எல்லாருமே ஏதோ மந்திரித்து விட்ட ஆட்டு மந்தைகளைப் போல அவர் பின்னால் சுற்றிக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களிடம் சுயமான சிந்தனை என்பதே இல்லை. நித்யானந்தர் எதைச் சொல்கிறாரோ அதைத்தான் இவர்களும் கண்களை மூடிக் கொண்டு நம்புகிறார்கள், செய்கிறார்கள்’ என்று ஒரு தமிழகத் தாளிகை குற்றம் சொல்கிறது. ஆனால், அதே தாளிகைதான் “ஆத்மாவை திற ஆனந்தம் பெருகட்டும்” எனும் தொடரை இரண்டு வருடங்களுக்கு கடுகு தாளிப்பு செய்தது. அதை உலக மக்கள் மறந்து இருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். அடுத்து வரும் துணுக்குகளைப் பாருங்கள்.


“சாமியாராம் சாமியார்… அதான் பார்த்தோமே முந்தா நாள் ராத்திரி. சின்னப் பையனா இருந்தாலும் எவ்வளவு கருத்தா பேசறான்னு பார்த்தா, அவன் சின்னபுத்தி சிரிப்பா சிரிச்சிடுச்சே… இனிமே சாமியார் கீமியார்னு எவனாச்சும் வந்தா அவன் மேல விழுற முதல் விளக்குமாறு நான் போடறதாத்தான் இருக்கும் பாத்துக்க…”
சான்று: http://www.envazhi.com/நித்யானந்தா-மீது-அப்படிய/

“இத பாருங்கடி… இனி சாமிய பாக்க கோயிலுக்குப் போறதோட நிறுத்திக்கணும்… சாமியாரை பாக்கப் போனா, இப்படித்தான் சந்தி சிரிச்சிப் போகும்…” என்று அந்தத் தாளிகையே நக்கல் செய்கிறது. வாழ்ந்தால் ஒரு பேச்சு. தாழ்ந்தால் ஒரு பேச்சு. நல்ல ஒரு ஜால்ரா.


உலகில் இரண்டு வகை சாமியார்கள் இருக்கிறார்கள் என்று சொல்வார்கள். ஒன்று பிடிபட்ட சாமியார். இன்னொன்று பிடிபடாத சாமியார். இதில் எந்தச் சாமியார் மரண அடி இல்லாமல் தப்பிக்கின்றாரோ, அந்தப் பக்கமாகச் சாய்வதற்கு ஒரு செம்மறியாட்டுக் கூட்டமே காத்து இருக்கும். இப்படி நான் சொல்லவில்லை. அமிழ்தா எனும் வலைப்பதிவில்  ’பிரேமானந்தா முதல் நித்யானந்தா வரை’ எனும் கட்டுரையில் எழுதப்பட்டு இருக்கிறது.
சான்று: http://amizhtha.wordpress.com/2010/03/10/பிரேமானந்தா-முதல்-நித்யா/.

ஒரு காலத்தில் வயிற்றுக்குக் கிடைத்தால் போதும் என்று சாமியார்கள் சிலர் பிழைப்பு நடத்திக் கொண்டு இருந்தார்கள். எதற்கும் அதிகமாக ஆசைப்படவில்லை. மறுபடியும் சொல்கிறேன். எல்லா சாமியார்களையும் குறை சொல்லவில்லை. இப்போதைக்கு மாட்டிக் கொண்டு இருப்பது கார்ப்பரேட் சாமியார்கள்தான். கார்ப்பரேட் அல்லாத சாமியார்கள் கவலைப்பட வேண்டியது இல்லை. சரி.

இப்போது நடப்பது என்ன. கார்ப்பரேட் சாமியார்களுக்கு ஆடம்பரமான விளம்பரங்கள். அவர்கள் நடக்கின்ற பாதையில் எல்லாம் பூமாலைகள். உடுத்துகின்ற காவி உடைகளில் எல்லாம் முழுக்க முழுக்க பன்னீர்ப் புஷ்பங்கள். சந்தனச் சவ்வாதுகள்.

காலையில் இந்தியா. மாலையில் மாலைத்தீவு. ராத்திரியில் அரபுகடல் அபிஷேகம். அவர்களின் கஜானாக்கள் கோடிக் கோடிகளில் நிறைகின்றன. தங்களுடைய உருவப்படங்களைக் கொடுத்து அதையே கடவுளாக நினைத்துப் பூஜிக்கச் சொல்கிறார்கள். சாமிகள் செய்ய முடியாததைச் சாமியார்கள் செய்ய முடியும் என்று பகதர்களையும் நம்ப வைக்கின்றனர். அது பெரிய பாவம். இப்போது தெரியாது.

யாரோ ஒருவருக்கு எப்போதோ ஒரு நல்லது நடந்து இருக்கும். அதை அவர் அடுத்தவரிடம் சொல்ல, அடுத்தவர் அதை மற்றவரிடம் சொல்ல, அது அப்படியே பரந்து விரிந்து பாய்மரக் கப்பலில் பயணம் செய்கிறது. இதை ஒரு Domino Effect என்றும் சொல்லலாம்.
சான்று: http://gilmaganesh.blogspot.com/2010/03/blog-post_3243.html

கடவுளை மிஞ்சி எதுவும் இல்லை. அவர் செய்யாததை எந்தச் சாமியாராலும் செய்ய முடியாது. ஆத்மாவை திற ஆனந்தம் பெருகட்டும்” என்று தொடர் எழுதிய ஓர் ஆன்மீகவாதி, ஆத்மா என்பது வெறும் உப்புமா என்று தன்னுடைய ரஞ்சித பாசத்தால் நிரூபித்து இருக்கிறார். அவருடைய எழுத்துகளுக்கும், செயலுக்கும் எத்தனை எத்தனை வேறுபாடுகள். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.

கார்ப்பிரேட் சாமியார்களின் தோற்றம் இருக்கிறதே அது ஒரு மாயை. அதற்கு அவர்களைச் சுற்றி பின்னப்பட்டு இருக்கும் அற்புதமான விளம்பர ஜோடனைதான் அதற்கு மூலகாரணம். இதை மனதில் நிறுத்திக் கொள்ளுங்கள். அதிகார மையங்கள், அரசியல்வாதிகள், தொழில் அதிபர்கள், சமூக சேவை அமைப்புகள், ஆன்மீக வகுப்புகள் எல்லாம் கலந்த ஒரு கூட்டாஞ்சோறுதான் இன்றைய கார்ப்பிரேட் சாமியார்கள்.
சான்று: http://everyonelovesvj.blogspot.com/2010_03_13_archive.html

இந்தக் கார்ப்பிரேட் சாமியார்களின் குரு யார் தெரியுமா? அவர்தான் தீரேந்திர பிரம்மச்சாரி. இந்திராகாந்தி பிரதமராக இருந்த போது தீரேந்திரரின் பயணம் தொடங்கியது. இந்திராகாந்திக்கு ஜெயபிரகாஷ் நாராயணன், ஜெகஜீவன் ராம் ஆகிய இருவரும் பக்கா எதிரிகள். இருந்தாலும் பிரம்மச்சாரியார் இரு தரப்பினருக்கும் நண்பர்களாக இருந்தார். தனக்கு வேண்டியதைச் சாணக்கியமாகச் சாதித்துக் கொண்டார். அந்தக் காலக் கட்டத்தில்தான் கார்ப்பிரேட் சாமியார்களின் மன்மத மந்திரங்களுக்கு அரிச்சுவடி எழுதப்பட்டது.

அதன் பின்னர் சந்திராசாமி வந்தார். இப்போது பெயர் போட்டுக் கொண்டு இருக்கும் கார்ப்பிரேட் சாமியார்களுக்கு அந்தச் சந்திராசாமிதான் நல்ல ஒரு ரோல் மோடல். இவர் நரசிம்ம ராவ், சந்திரசேகர் காலங்களில் கோடிக் கோடியாகப் பணம் சம்பாதித்தார். அடுத்து வந்த இந்திய அரசு இவர் மீது வழக்கு போட்டது. அவர் வெளிநாடுகளுக்குப் போக முடியாதவாறு அவரின் கடப்பிதழையும் முடக்கி வைத்தது. அது ஒரு பெரிய கதை. அப்புறம் ரஜ்னீஷ் வந்தார்.

இவர்  கொஞ்சம் வித்தியாசமானவர். சுதந்திரமான போக்கு கொண்டவர். இவரைச் ’செக்ஸ் குரு’ என்றும் சொல்வார்கள். இவர் ஒரு புரட்சிகரமான தத்துவத்தைக் கண்டுபிடித்தார். ‘செக்ஸ் என்பது சமாதி நிலைக்குச் செல்வதற்கான ஒரு படிக்கல். அதை ஆழ்ந்து அனுபவித்தால், அதில் இருந்து விடுதலை அடைவார்கள்.’

என்ன அபிரிதமான கண்டுபிடிப்பு. நோபல் பரிசு கொடுத்து இருக்கலாம். யாரும் சிபாரிசு செய்யவில்லை. இவர் அமெரிக்காவில் பெரிய பெரிய ஆசிரமங்களைக் கட்டினார். அவற்றை அமெரிக்க அரசு பறிமுதல் செயதது. அதுவும் ஒரு பெரிய நீண்ட கதை.

இந்தக் கட்டத்தில்தான் சாய்பாபா வந்தார். வெறும் கையில் விபூதி வரவழைப்பது. மோதிரத்தை வரவழைத்து பரிசாகக் கொடுப்பது. பார்வை இல்லாதவர்களுக்கு பார்வை கொடுப்பது. இவை அனைத்தும் சித்து வேலைகள் என்று லண்டன் பி.பி.சி.யும் நார்வே நாட்டு என்.ஆர்.கே. தொலைக்காட்சி நிலையமும் பிரபலப்படுத்தின. Seduced By Sai Baba எனும் நாடகம் சாய்பாபாவின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை.  
சான்று: http://en.wikipedia.org/wiki/Sathya_Sai_Baba#Criticism_and_controversy

தான் எடுத்து வளர்த்த சிறுமிகள் வயதுக்கு வந்ததும், அவர்களைத் தனது பாலியல் இச்சைகளுக்குப் பயன்படுத்திக் கொண்டார் பிரேமானந்தா. பாலியல் குற்றம், வெளிநாடுகளில் சொத்து குவித்தது, முதலீடு செய்தது, கொலைக்குற்றம் போன்ற பல குற்றங்களைப் புரிந்ததால் நீதிமன்றம் இவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை அளித்துச் சிறையில் தள்ளியது. 14 ஆண்டுகள் சிரையில் இருந்தார்.

சென்ற ஆண்டு பிப்ரவரி 21ஆம் தேதி சிறையிலேயே இறந்தும் போனார்.  ஜெயேந்திரர் மற்றும் விஜயேந்திரர் மீதான கொலை வழக்குகள் பாண்டிச்சேரியில் நடந்து வருகின்றன. கல்கி எனும் சாமியார் மீதும் ஏராளமான புகார்கள் இருக்கின்றன.
சான்று: http://ta.wikipedia.org/wiki/பிரேமானந்தா

ஆக, ரஜ்னீஷின் மெகா ஆசிரமங்கள், சந்திராசாமியின் அரசியல் அதிகாரப் பிடிகள், அடுத்து சாய்பாபாவின் சமூக நலச் சேவைகள். இந்த மூன்றையும் ஒன்றாகக் கூட்டிப் பாருங்கள். அதில் ஒரு கலவை வரும். அந்தக் கலவையில்தான் இன்றைய கார்ப்பரேட் சாமியார்கள் வந்து நிற்கிறார்கள்.
சில கார்ப்பரேட் சாமியார்கள் அரசியல் தரகர்களாகவும் இருக்கிறார்கள்.

சிலர் கூலிப்படைகளை வைத்து தொழில் செய்கிறார்கள். சிலர் கருப்புப் பண வங்கிகளாக இருக்கிறார்கள். சிலர் போதைப் பொருள் கடத்தல், பாலியல் தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். சான்று: திகுதிகு திகம்பர சாமிகள். ப.திருமாவேலன். 17.03.2010 ஆனந்த விகடன்.

படு மோசமான தொழில்களைக் காவி உடையில் கார்ப்பரேட் செய்கிறார்கள். முதலீடு இல்லாமல் வருவாய் ஈட்டும் ஒரு கருவியாக ஒரு சமயம் பயன்படுத்தப்படுகிறது. மக்கள் நம்பும்படி  பல்வேறு மாஜிக் மாய்மாலங்களைச் செய்து வருகிறார்கள். கோடிக் கோடிகளாகக் குவிக்கிறார்கள். இவர்கள் யாருக்கும் குற்றவாளிகளாகத் தெரிவதும் இல்லை,

தேவநாதன் எனும் சாமியாரின் கருவறை லீலைகள் பல ஆண்டுகாலம் தொடர்ந்த ஒன்று. ஜெயேந்திரனின் காமக் களியாட்டங்களுக்கு இருபது ஆண்டு கால வரலாறுகள் உள்ளன. இருந்தும் எப்படி மக்கள் ஏமாறுகிறார்கள்? எப்படி ஜெயேந்திரனால் மீண்டும் சர்வலோக குருவாக வலம் வர முடிகிறது?

ராமகிருஷ்ண பரமஹம்சர் சொல்கிறார். “கழுகு எவ்வளவு மேலே பறந்தாலும் அதன் பார்வை என்னவோ மண்ணில் அழுகிக் கிடக்கும் பிணம் மீது தான்” கார்ப்பரேட் சாமியார்கள் பெரிய பெரிய தத்துவங்களைப் பற்றி மேடையில் பேசலாம். ஆனால், கடைசியில் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் அவர்கள் சிற்றின்பப் பிரியர்களாக இருக்கலாம். அதை ஆராய்ந்து தெரிந்து கொள்ளாமல் அவர்களை ஆண்டவனாகப் பார்ப்பது பேதைமையிலும் பேதமை ஆகும்.

ஏமாற்றுபவர்கள் எங்கும், எல்லாக் காலங்களிலும் இருக்கவே செய்கிறார்கள். ஏமாந்து விடாமல் இருக்க மனிதன் இறைவன் அளித்த ஆறாவது அறிவைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதுவே என்னுடைய ஆசையும்கூட!

சாமியார்களை நம்புங்கள். ஆனால், அவர்களைக் கடவுளாக நினைக்க வேண்டாம். கடவுளாக நினைத்து அவர்களின் கால்களில் விழ வேண்டாம். தயவு செய்து அப்பா அம்மா காலில் விழுங்கள். அது கடவுள் காலில் விழுந்ததற்குச் சமம். உங்களுக்கு ஏழேழு ஜென்மங்களுக்குப் புண்ணியம் கிடைக்கும்.



22 ஆகஸ்ட் 2012

இந்தியா சீனா போர் வருமா?

(இந்தக் கட்டுரை 06.07.2012 மலேசியத் தினக்குரல் நாளிதழில் பிரசுரிக்கப்பட்டது)
ஒரு காட்டில் இரண்டு புலிகள். ஒன்று கறுப்பு. இன்னொன்று மஞ்சள். காலம் காலமாக இரண்டு புலிகளுக்கும்  நீயா நானா போட்டி. வாய்ச்சண்டை ஒரு நாள் பேய்ச்சண்டையாக மாறியது. சண்டை என்றால் அப்பேர்ப்பட்ட சண்டை. கறுப்பும் சரி, மஞ்சளும் சரி. இரண்டுக்குமே சமமான வலிமை. கடைசியில் இரண்டுக்கும் என்ன நடந்தது என்று வேதாளம் கேட்டது.


செத்துப் போயின என்று விக்கிரமாதித்தன் சொன்னான். வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிக் கொண்டது. ஆனால் பாருங்கள், அந்தக் கதை மாதிரி ஒரு கதை இருக்கிறது. நம்ப நாட்டுக்குப் பக்கத்தில் இரண்டு நாடுகள். ரொம்ப தூரத்தில் இல்லை. அவற்றுக்குள் நீயா நானா போட்டி.

அந்த இரண்டு நாடுகள் எது தெரியுமா? பக்கத்து பக்கத்தில் இருக்கும் அண்ணன் தம்பிகளாக இருக்கும் இந்தியாவும் சீனாவும்தான். என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? உண்மையே அதுதான். இந்த விஷயம் சிலருக்குத் தெரியும். பலருக்குத் தெரியாது. இன்னொரு விஷயம். யார் அண்ணன்; யார் தம்பி என்று மட்டும், தயவு செய்து கேட்க வேண்டாம். அது ஒரு பெரிய வில்லங்கமான கேள்வி.


அந்த அண்ணன் தம்பிகளுக்குள் இப்போது பயங்கரமான ஒரு பனிப்போர் நடந்து கொண்டு இருக்கிறது. அது மட்டும் உண்மை. இந்தியாவும் சீனாவும் மாபெரும் வல்லரசுகள். உலகின் இரு பெரும் இமயங்கள். இப்போதைக்கு இரு துருவங்கள். இரண்டும் மோதிக் கொள்ளும் என்பது அடிவானக் கீற்றுகளாக அதிகமாகத் தெரிகின்றன. நெஞ்சத்தை வருடும் வேதனையான செய்தி. இருந்தாலும் அந்த மாதிரியான ஒரு போர் வரவே கூடாது என்று நாம் வேண்டிக் கொள்வோம்.

இந்தியாவின் அருணாச்சலப் பகுதி வட மேற்கே இருக்கிறது. அங்கே இருக்கின்ற எல்லைப் பகுதியில் சீனா தனது படைகளைக் குவிக்கத் தொடங்கிவிட்டது. ஏற்கனவே மூன்று நான்கு டிவிஷன்கள் இருந்தன. இப்போது 35 டிவிஷன்கள். ஆக, 35 டிவிஷன்கள் என்றால்35 லட்சம் இராணுவ வீரர்கள். என்னதான் அங்கே நடக்கிறது? மனதைக் கொஞ்சம் தேற்றிக் கொண்டு படியுங்கள்.


இன்னும்  இரண்டு மூன்று ஆண்டுகளில் இந்தியா மீது சீனா போர் தொடுக்கக் கூடிய சாத்தியங்கள் அதிகமா உள்ளன. உலக அரசியல் வரலாற்று ஆய்வாளர்கள் அப்படி சொல்கின்றனர். மறுபடியும் வேண்டிக் கொள்வோம். அந்த மாதிரி ஒரு போர் வரவேகூடாது என்று வேண்டிக் கொள்வோம்.

சீனாவுக்கு பாகிஸ்தான் தானம் செய்த இந்திய மண்

இரகசியத்தைப் போட்டு உடைக்கிறேன். காஷ்மீரில் சீனா ஆக்கிரமித்து இருக்கும் இந்தியப் பகுதியின் பெயர் அக்சாய் சின்.

இது ஏறக்குறைய மலேசியாவில் கால் பகுதி இருக்கும். அதாவது 37,250 சதுர கிலோ மீட்டர்கள். அதுவும் பற்றாது என்று  இன்னும் கொஞ்சம் நிலத்தை சீனா, பாகிஸ்தானிடமிருந்து 1963ல் வாங்கிக் கொண்டது.


அப்புறம், சுதந்திரம் வாங்கிய கையோடு பாகிஸ்தான்  காஷ்மீரில் ஊடுருவியது. அது பழைய செய்தி. அப்படி அத்துமீறி நுழைந்த ஒரு சில வாரங்களிலேயே காஷ்மீரின் பெரும் பகுதியைப் பாகிஸ்தான் தன் ஆக்கிரமிப்பின் கீழ் கொண்டு வந்தது.

இந்தக் காலக் கட்டத்தில், சீனாவின் பாதுகாப்பு பாகிஸ்தானுக்கு மிகவும் அதிகமாகவே தேவைப் பட்டது. எந்த நேரத்திலும் இந்தியா தாக்குதல் நடத்தலாம் எனும் அச்சம் பாகிஸ்தானுக்கு இருந்தது. அதனால், நிலைமையைச் சரி கட்ட, அப்போது அதன் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்த 5120 சதுர கிலோமீட்டர் நிலப்பகுதியைப் பாகிஸ்தான் சீனாவுக்கு ’இந்தா எடுத்துக்கோ’ என்று தானமாக வழங்கியது.

அதாவது நம்முடைய நெகிரி செம்பிலான், மலாக்கா மாநிலங்களின் அளவுக்கு உள்ள நிலம். சீனாவுக்கு தாரை வார்க்கப் பட்டது. கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைக்கிற கதை உங்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன். அந்த மாதிரி தான் இங்கேயும் நடந்தது. அதன் மூலம் பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் இடையே ஒரு நல்ல நெருக்கமான உறவுப் பாலம் போடப்பட்டது.

ஆனால், பறி போன அந்த நிலங்களில் ஒரு பிடி மண்ணைக் கூட இந்தியாவால் இதுவரை இன்னும் திரும்பிப் பெற முடியவில்லை என்பது தான் வேதனையான செய்தி. அதுவே ஓர் உண்மையான  நிதர்சனமும் கூட! (சான்று: http://en.wikipedia.org/wiki/Aksai_Chin)

சரி. இந்த அக்சாய் சின் நிலப்பகுதிக்கு வருவோம். இந்த அக்சாய் சின் நிலம், காஷ்மீருக்கு வட கிழக்கே லடாக் பகுதியில் இருக்கிறது. 1834ல் இருந்து இது இந்தியாவுக்குச் சொந்தமாக இருந்து வந்தது. அப்பகுதி ஜம்மு காஷ்மீரின் ஒரு நிலப்பகுதி. 1963ல் சீனா திடீரென்று ஒரு தாக்குதலை நடத்தி அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டது. அதற்கும் காரணம் இருக்கிறது.

டாலாய் லாமா இந்தியாவில் தஞ்சம்

திபெத் நாடு சீனாவுக்கு அருகாமையில் உள்ள நாடு. 1959ல் அந்த நாட்டின் மீது சீனா தாக்குதல் நடத்திக் கைப்பற்றியது. அங்கு வாழ்ந்த இலட்சக்கணக்கான திபெத்தியர்கள் இந்தியாவில் அடைக்கலம் அடைந்தனர். திபெத் தலைவர் டாலய் லாமாவும் இந்தியாவில் தஞ்சம்.

அதனால் அத்திரம் அடைந்த சீனா, ஒரு சால்சாப்புக் காரணத்தைக் காட்டி லடாக் மீது படை எடுத்தது. அதன் விளைவு 1962ல் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே ஒரு பெரிய போர். அதில் சீனா கைப்பற்றிய இந்திய நிலம் தான் இந்த லடாக். ஆக, இந்த லடாக் தான் இப்போது அக்சாய் சின் என்று சீனாவால் அழைக்கப் படுகிறது. இது தான் நடந்த உண்மை.

இந்த நிலம் தனக்குச் சொந்தம் என்று சீனா தன் தலைமுடியை இறுக்கிப் பிடித்துக் கொள்கிறது. அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. அக்சாய் சின் எங்களுடைய பரம்பரைச் சொத்து என்று இந்தியா வரிந்து கட்டி மல்லுக்கு நிற்கிறது. உண்மையில் யாருக்குச் சொந்தம் என்பதில் ஒரு தீர்வு காண முடியாமல் ஐக்கிய நாட்டுச் சபையும் தவிக்கிறது. சரியா.

குதுப் மீனார் குத்துக்கல்

ஓர் இடைச் செருகல். 1950களில் பிரதமர் நேரு சீனத் தலைநகர் பெய்ஜிங்கிற்குச் சென்றார். சௌ என் லாய் டில்லிக்கு வந்தார். இரு பிரதமர்களும் கை குலுக்கிக் கொண்டனர். குசலம் விசாரித்தனர். பரிசுகளை மாற்றிக் கொண்டனர். அவர்கள் இரண்டு பேருமே போய்ச் சேர்ந்து விட்டனர். ஆனால், அக்சாய் சின் பிரச்னை மட்டும் இன்னும் அப்படியே குதுப் மீனார் குத்துக் கல்லாக நிற்கிறது. (சான்று: http://www.isn.ethz.ch/isn/Current-Affairs/ISN-Insights/)

சரி. இப்போதைய பயம் என்ன தெரியுமா? இந்தப் பனிப்போர் இறுதியில் ஓர் அணு ஆயுதப் போரில் முடிந்து விடுமோ என்று உலகமே பயந்து கொண்டு இருக்கிறது. ஏன் என்றால் இரு நாடுகளுமே அணுகுண்டுகளை வைத்திருக்கும் நாடுகள். இந்தியாவுக்கு பக்க பலமாக அமெரிக்கா, ரஷ்யா, இருக்கின்றன. பிரச்னை என்று வந்தால் சில ஐரோப்பிய நாடுகள் உதவிக்கு வரலாம். பிரான்ஸ் இரண்டாம் படசம். அங்கேயே இப்போது தலைக்கு மேல் வெள்ளம்.

சீனாவின் பக்கம் பாகிஸ்தான், வட கொரியா, ஆப்ரிக்க நாடுகள், ஐரோப்பிய நாடுகள், மத்திய லத்தீன் அமெரிக்க நாடுகள் இருக்கின்ற. சீனாவின் வேட்டியை இறுக்கிப் பிடித்து நிற்கின்றன. ஸ்ரீலங்கா ஜென்மா ஜென்மத்திற்கு ஜெக மோகன கூட்டாளியாகி விட்டது.

சீனா இப்போது வங்காள தேசம், மியன்மார், ஸ்ரீலங்கா, பாகிஸ்தான் ஆகிய நாட்டுத் துறைமுகங்களில் தனது போர்க் கப்பல்களை நிறுத்தி வைத்து வெள்ளோட்டம் பார்க்கிறது.

அதாவது இந்தியாவைச் சுற்றி நாலா பக்கமும் சீனாவிற்கு இலக்குகள் உள்ளன. இப்போது ஸ்ரீலங்கா கடல் பகுதியில் சீனக் கடல் படையைச் சேர்ந்த நீர்மூழ்கிக் கப்பல்கள் அடிக்கடி வருகின்றன. கேட்டால் மீன் பிடித்து பழகுகிறோம் என்று சொல்கின்றன.

அம்மா வீட்டில் கூட்டத் தெரியாதவள் மாமியார் வீட்டில் தோட்டம் போட்டாளாம். அந்த மாதிரி இருக்கிறது. சீனக் கப்பல்களுக்காக ஸ்ரீலங்காவில் ஒரு புதிய நவீனத் துறைமுகமே கட்டப் பட்டு வருகிறது. கட்டி முடிக்கப்பட்டிருக்கலாம். (சான்று: http://www.defence.pk/forums/china-defence/26043-chinese-naval-base-sri-lanka.html)

அண்மைய அதிர்ச்சிகள்

வெகு அண்மைய செய்தி. காஷ்மீர் பகுதிகளில் சீனாவும் பாகிஸ்தானும் சுமையுந்துகள் ஓடும் சாலைகளைப் பல நூறு கிலோமீட்டர்களுக்கு போட்டு வருகின்றன. அத்து மீறி நுழைந்த இந்திய மண்ணில், சீனா என்கிற நாடு சாலைகளை அமைத்துக் கொண்டு வருகிறது என்று சொன்னால்தான் எல்லாருக்கும் சரியாகப்  புரியும்.

அந்தச் சாலைகளில் ஆயுதங்கள் அனுப்பப் படுகின்றன. அந்த வழியாகத் தீவிரவாதிகளுக்குப் போர் முறை சாணக்கியங்களும் சொல்லித் தரப் படுகின்றன. (சான்று: http://christwire.org/2011/05/china-gives-pakistan-50-fighters-jets-makes-blood-pact/)

2010 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில், இந்தியாவின் அருணாசலப் பகுதியின் எல்லையில் சீனா தனது படைகளைக் குவிக்க ஆரம்பித்தது. ஏற்கனவே மூன்று டிவிஷன்கள். இப்போது 35 டிவிஷன்கள்.  கசப்பு மருந்தில் கசாயத்தைக் கரைப்பது மாதிரி இருக்கிறது.  

இதில் இன்னொரு வேடிக்கையான விஷயம் என்ன தெரியுமா? இந்தச் சீன வீரர்கள் அடிக்கடி எல்லையைத் தாண்டி இந்திய எல்லைக்குள் வருகின்றனர். இந்தியக் காற்றை இழுத்துவிட்டு, அப்புறம் அந்த மண்ணுக்கே சலாம் போட்டுவிட்டு போகின்றனர்.

இந்திய சீன அருணாச்சல எல்லைகளின் நீளம் 4050 கிலோமீட்டர்கள். அதாவது கோலாலம்பூரில் இருந்து சென்னைக்குப் போய் திரும்பி வருகிற தூரம். (சான்று: http://en.wikipedia.org/wiki/1987_Sino-Indian_skirmish)

இந்த எல்லைகளில் இராணுவத்திற்குத் தேவையான கட்டிடங்கள், மின்சார இணைப்புகள், இராணுவத் தளவாடக் கூடாரங்கள், இராட்சசத் தொலை நோக்கிகள், பதுங்கு குழிகள் உருவாக்கப் பட்டு வருகின்றன. அதுவும் அவசர அவசரமாக வேலைகள் நடக்கின்றன. ஏன்? எதற்காக? என்று தயவு செய்து கேட்க வேண்டாம். நீங்களே ஒரு முடிவிற்கு வாருங்கள்.

ஐம்பது அறுபது வருடங்களாக இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே எல்லைப் பிரச்னை என்பது ஒரு பங்காளிச் சண்டை.  ஒருவரை ஒருவர் முழுசாக நம்பாத பனிப் போர். அதைப் பார்த்தால், தமிழ்நாட்டில நடந்த கதை பரவாயில்லை என்று தோன்றுகிறது. அண்ணன் வீட்டுப் பூனை குறுக்கே போனதால், அந்த அண்ணனையே ஒரு தம்பி அடித்துக் கொன்றானாம். என்ன சொல்வது என்றே தெரியவில்லை.
(சான்று: http://www.lib.berkeley.edu/SSEAL/SouthAsia/kashmir.html)

இந்தியா மீது சீனா போர் தொடுக்கும் சாத்தியக் கூறுகள் மிகுதியாக உள்ளன என்று ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். தற்கு பல த்து காரணங்களைப் பட்டியல் போட்டுக் காட்டலாம்.  அந்தக் கணிப்புகள் அத்தனையுமே மிகச் சரியாக இருப்பது தான் நம்முடைய வயிற்றில் இப்போதைக்கு புளியைக் கரைத்து, கரிசலாம்கண்ணியை காயத்தில் தேய்க்கின்றன.

1911ல் சீனாவில் விவசாயிகளின் ஆதரவில் மாபெரும் புரட்சி நடைபெற்றது. அதை சீனப் புரட்சி என்று சொல்வார்கள். இதற்கு கலாசார புரட்சி என்றும் பெயரும் உண்டு. அந்தப் புரட்சிக்குத் தலைமை தாங்கியவர் மாவோ சி துங். அதன் பின்னர் 1990 ஆம் ஆண்டுகள் வரை விவசாயத்திற்கு சீனா முக்கியத்துவம் கொடுத்து வந்தது. கடந்த இருபது ஆண்டுகளாகக் கிராமப்புற வளர்ச்சியைப் பெரிதாக சீனா கண்டு கொள்ளவில்லை. நகர்ப்புறங்களை தொழில்மயம் ஆக்குவதில் மட்டுமே தீவிரம் காட்டியது.

சீனாவின் ஏற்றுமதி சரிந்து போகிறது

அதனால் சீனாவில் தொழில் புரட்சி உச்சநிலைக்குப் போனது. உலக  நாடுகளின் வணிகத்தில் சீனப் பொருள்கள் மலை மலையாகக் குவிக்கப் பட்டன.   மலிவான விலையில் சீனப் பொருள்கள் கிடைக்காத நாடே உலகில் இல்லை என்று சொல்லலாம். அப்பா அம்மாவைத் தவிர மற்ற எல்லாவற்றையும் ஏற்றுமதி செய்தார்கள்.  அந்த அளவிற்கு சீனாவின் ஏற்றுமதி அபரிமிதமாக வளர்ந்து போனது.

இப்போது இந்த 2010 களில் உலகப் பொருளாதாரம் சதுரங்கம் ஆடுகிறது. நாம் எல்லோரும் அறிந்த விஷயம். அதனால் உலகச் சந்தையில் சீனப் பொம்மைகளில் இருந்து மலிவான மின்சாரப் பொருட்கள் வரை தேங்கிக் கிடக்கின்றன. எந்தப் பொருளுமே விலை போகாத நிலைமை. சீனாவின் ஏற்றுமதி வர்த்தகம் அதல பாதாளத்திற்குச் சரிந்து போய் கிடக்கிறது. சீன நிதிச் சந்தையிலிருந்து கோடிக் கோடியான அந்நிய முதலீடுகள் மீட்டுக் கொள்ளப் பட்டன அல்லது முடங்கிக்  கிடக்கின்றன.

அதனால் சீனாவில் வேலையில்லாத் திண்டாட்டம் இப்போது தலை விரித்து ஆடுகிறது. அடுத்த பக்கம் பார்த்தால் கிராமப்புற விவசாயிகளின் கசப்புணர்வுகளின் கொந்தளிப்புகள் வஞ்சகம் இல்லாமல் கொப்பளிக்கின்றன. பல இடங்களில் போராட்டமாக வெடித்தும் வருகின்றன.

இனக் கலவரங்களும் புதிய புதிய முரண்பாடுகளை உருவாக்கி வருகின்றன.  மக்களின் மீது இருந்த அரசின் இரும்புப் பிடி சன்னம் சன்னமாகத் தேய்ந்து வருகிறது. கடந்த இரண்டு தலைமுறைகளில் அரசின் எந்த ஒரு முடிவையும் கேள்வி கேட்காமல் ஏற்றுக் கொண்டு வந்த சீன மக்கள் இப்போது முகம் சுழிக்க ஆரம்பித்து விட்டனர். அரசு நிர்வாகத்தை எதிர்த்துப் பேசவும் துணிந்து விட்டனர்.
(சான்று:http://www.bloomberg.com/news/2011-01-26/china-will-face-crisis-within-5-years)

மக்களின் இந்த அதிருப்திகளைச் சமாளிக்க முடியாமல் அரசாங்கம் தடுமாறுகிறது. மக்களின் கவனத்தைத் திசை திருப்ப வேண்டும். அதற்கு ஒரு பிள்ளையார் சுழி போட வேண்டும். ஆக, அந்தப் பிள்ளையார் சுழிதான் ஒரு புதிய போருக்கு மூல காரணம் ஆகும்.

சரி. அடுத்து இரண்டாவது காரணத்தில் பாகிஸ்தான் வந்து நிற்கிறது.  கடந்த காலங்களில் இந்தியாவின் உறுதிப் பாட்டைக் குலைக்க அதன் அண்டை நாடு எடுக்கும் ஒவ்வொரு முயற்சிக்கும்  சீனா  மறைமுகமான  ஆதரவை வழங்கி வந்துள்ளது.
தீவிரவாத முகாம்களை அமைப்பது. தீவிரவாதிகளுக்குப் பயிற்சி கொடுப்பது. அவர்களைக் காஷ்மீர் வழியாக  இந்திய எல்லைக்குள் ஊடுருவ வைப்பது.  வங்காள தேசம், நேபாளம் வழியாக தீவிரவாத இயக்கங்களை இந்தியாவுக்குள் நுழைய வைப்பது. அத்தனையும் இந்தியாவுக்கு தலைவலி தரும் தாங்க முடியாத வேதனைகள். அவற்றுக்கு எல்லாம் அந்த அண்டை நாடு நேரடிக் காரணமாக இருக்கலாம். ஆனால் சீனா இருக்கிறதே அதுதான் ஒரு மறைமுகக் காரணம்! இது உலகமே அறிந்த உண்மை.(சான்று: http://en.wikipedia.org/wiki/Mukti_Bahini)

அமெரிக்காவின் கழுகுப் பார்வை

அடுத்து, தாலிபான் அமைப்பு பாகிஸ்தானில் குழப்பத்தை ஏற்படுத்தி வருவதால் பாகிஸ்தானின் முழுக் கவனமும் தாலிபான் மீது குவிந்து இருக்கிறது. அமெரிக்காவும் தன் கழுகுப் பார்வையை அங்கே தான் வைத்து இருக்கிறது.  அதனால் இந்தியாவுக்கு எதிராக பெரிய அளவில் எதையும்  செய்ய முடியாத நிலையில் பாகிஸ்தான் இப்போது இருக்கிறது.

மூன்றாவது காரணமாக உலகப் போலீஸ்காரர்  அமெரிக்கா வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்னால் அமெரிக்காவும் இந்தியாவும் அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொண்டன. அப்புறம் இராணுவக் கூட்டுப் பயிற்சிகளில் வேறு ஈடுபட்டு வருகின்றன.  இருவரும் நகையும் சதையுமாக நெருங்கி வந்து விட்டார்கள்.

இது சீனாவின் கண்களை உறுத்துகிறது. சீனாவால் பொறுக்க முடியவில்லை. ஆசியாவின் நம்பர் ஓன் வல்லரசாக விளங்க சீனா ரொம்ப நாட்களாக ஆசைப் பட்டு வருகிறது. ஆக, சீனாவுக்குப் போட்டியாக இந்தியாவை உருவாக்குவது தான் அமெரிக்காவின் நோக்கமாக இருக்கலாம் என்ற ஒரு  சந்தேகம் சீனாவுக்கும் வந்துவிட்டது. அது பாகிஸ்தானுக்கும் பெரிய ஒரு குடைச்சலைக் கொடுத்து வருகிறது.

இந்த மாதிரியான ஒரு சூழ்நிலையில் சீன மக்களின் கவனத்தைத் திசை திருப்ப வேண்டும். சீனா மக்களிடம் தேச பக்தியைப் புதுப்பிக்க வேண்டும். சீனாதான் ஆசியாவின் சூப்பர் தாதாஎன்பதை நிரூபிக்க வேண்டும். ஆகவே, இந்தியாவின் மீது சீனா போர் தொடுக்க வேண்டும். அந்தப் போர் வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது என்று சொல்ல வருகிறேன்.

உங்களுக்கு ஒன்று தெரியுமா. வட கொரியாவிற்கு ஏவுகணைகளை ஏற்றுமதி செய்வதில் இருந்து அணு ஆயுத சோதனைகளுக்கு மறைமுக உதவிகளைச் செய்வது வரை சீனா தான் முதன்மை இடத்தை வகிக்கிறது.
(சான்று: http://www.cfr.org/china/china-north-korea-relationship/p11097)

சீனாவின் இந்த உதவிகளை அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பிய நாடுகள் போன்றவை கண்டித்து வருகின்றன. அந்த நாடுகளில் ஏதோ ஒன்றின் மீது சீனா போர் தொடுக்கலாம். ஆனால்,  உலகப் பொருளாதார மந்தநிலை நிலவும் இந்த நேரத்தில் அந்த நாடுகளைச் சீனா பகைத்துக் கொள்ள முடியாது. அப்படி போர் தொடுத்தால் சீனா மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப் படலாம்.  அதனால் சீனாவின் நிலைமை மேலும் மோசம் அடையும். அதையும் சீனா பார்க்கிறது.

சீனா இராணுவத்தைக் குவிக்கிறது

தன்னைவிட சற்று பலம் குறைந்த ஒரு நாட்டுடன் போர் தொடுக்கவே அதற்கு விருப்பம். அந்த வரிசையில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. அப்படி ஒரு போர் வந்தால் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள பெரும் பகுதியைச் சீனாவால் அபகரித்துக் கொள்ளும் வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன.

ஒருபுறம் சீனா தன்னுடைய இராணுவங்களைக் குவித்துக் கொண்டு இருக்கிறது. பல இலட்சம் வீரர்களை இந்திய எல்லையில் சீனா நிறுத்தி வைத்து இருக்கிறது. அதை மறந்து விட வேண்டாம். இன்னொரு புறம் பாகிஸ்தானும் இந்தியாவுடன் மல்லுக்கு நிற்கிறது.

பாகிஸ்தான் தன் இந்திய எல்லைப் பகுதியில் பதுங்கு குழிகளையும் கண்காணிப்பு கோபுரங்களையும் அதிகம் அதிகமாக அமைத்து கொண்டு வருகிறது. மும்பை தாக்குதலுக்குப் பிறகு இந்தக் கட்டுமானங்கள் மேலும் அதிகமாகி வருகின்றன. (சான்று: http://www.bharat-rakshak.com/SRR/Volume12/sahgal.html)

புதிதாக இன்னும் ஒரு பிரச்னை. அருணாச்சல மாநிலத்தில் 90 ஆயிரம் சதுர கிலோமீட்டர் நிலப் பகுதி  சீனாவின் நிலம் என்று சீனா இப்போது ஒரு புதிய கதையை உருவாக்கி இருக்கிறது. அதை இந்தியா ஆக்கிரமித்து வைத்திருக்கிறது என்றும் பிரசாரம் வேறு செய்து வருகிறது.

அந்த நிலப் பகுதியை தெற்கு திபெத்எனும் அடைமொழியுடன் சீனா அழைக்கிறது. சென்ற ஏப்ரல் மாதம் அருணாச்சல மாநிலத்தில் சில நீர்மின் திட்டங்களைச் செயல் படுத்த ஆசிய வளர்ச்சி வங்கியிடம் இந்தியா நிதியுதவி கேட்டது.

அது சர்ச்சைக்குரிய பகுதி. அது சீனாவின் இடம். அதில் இந்தியா எப்படி அணைக் கட்டுகளையும் மின் நிலையங்களையும் கட்ட முடியும்?’ என்று சீனா எதிர்க் கேள்வி கேட்டது.  அதனால் ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதியுதவி கிடைக்காமலே போனது என்பது வேதனைக்குரிய விஷயம்.

சீனாவின் கண்ணாமூச்சி விளையாட்டுகள்

இந்த அருணாச்சலப் பகுதியில் சீன இராணுவத்தினர் இந்திய எல்லைக்குள் அடிக்கடி விளையாட்டுத் தனமாக ஊடுருவல் செய்கின்றனர். அப்புறம் கொஞ்ச நேரத்தில் திரும்பிப் போய்விடுகின்றனர். இந்த மாதிரி கண்ணாமூச்சி விளையாட்டுகளும் அடிக்கடி நிகழ்கின்றன.

வரவு செலவு திட்டத்தில் இராணுவத்துக்கான ஒதுக்கீட்டை அதிகப்படுத்த இந்தியா முயற்சிக்கிறது என்று சீனா குற்றம் சாட்டி வருகிறது.

கைகலப்பிற்கான சாத்தியக் கூறுகள் நிறையவே இருக்கின்றன.  அசம்பாவிதம் எதுவும் நடக்கக் கூடாது என்று ஆண்டவனை வேண்டிக் கொள்வோம்.  எல்லா எதிர்ப்புகளையும் எதிர் கொள்ள இந்தியா இப்போது இருந்தே தயாராக இருக்க வேண்டும். இப்போதே இருந்தே அது தற்காப்பு பாதுகாப்பு கவசத்தில் கணிசமாக இறங்க வேண்டும்.

இந்த அரசியல் கணிப்புகள் கோடானு கோடி உலக மக்களின் துக்கத்தைக் கனக்கச் செய்கின்றன! தூக்கத்தை இழக்கச் செய்கின்றன! உலகத் தலைவர்களில் பலர் நான்கு மணி நேரம்தான் தூங்குகிறார்கள் என்பதற்கு இதுவும் ஒரு காரணம்.