23 செப்டம்பர் 2012

கணினியும் நீங்களும் - 23.09.2012

[இன்று 23.09.2012 மலேசியா தினக்குரல் ஞாயிறு மலரில் வெளியான கேள்விகள்.]

ஆர். நல்லைச்செல்வன், பத்துகேவ்ஸ், கோலாலம்பூர்
கே: Orkut என்றால் என்ன? அதில் சினிமா நடிகை திரிஷாவின் அம்மாவுக்கு பலர் தொல்லை கொடுத்து வருகிறார்களாம். அதைப்பற்றி இணையத்தில் இருப்பதாக என் கல்லூரியில் நண்பர்கள் பேசிக் கொள்கிறார்கள். என்ன சார் அது. ஒன்றும் புரிய வில்லை. புரியும்படி சொல்லுங்கள்.

 ப: Orkut  என்பது ஒரு சமூகச் சேவைத் தளம். பேஸ்புக் இருக்கிறதே, அதைப் போலஆர்க்குட்தளமும் ஒன்று. ஆர்க்குட்இந்தியாவில் மிகவும் பிரபலம். மலேசியாவில் ஆர்க்குட் பயன்படுத்துபவர்கள் குறைவு என்றுதான் சொல்ல வேண்டும். சரி. நடிகை திரிஷாவின் அம்மா விசயத்திற்கு வருகிறேன். இந்தக் கேள்விக்கு ஏற்கனவே, சில மாதங்களுக்கு முன்னால் பதில் கொடுத்து இருப்பதாக நினைவு

ஒருவருடைய தனிப்பட்ட வாழ்க்கையின் கஷ்ட நஷ்டங்களை விமர்சனம் செய்வது என்பது ஓர் ஆரோக்கியமான செயல் அல்ல. இருந்தாலும் இந்தக் கேள்வியைப் பிரசுரிப்பதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று இணைய அரட்டையால் ஏற்படும் நன்மைகள். அடுத்து அதனால் ஏற்படக்கூடிய தீமைகள். 

Chatting என்பதைத் தமிழில் இணைய அரட்டை அல்லது அரட்டையாடல் என்கிறோம். ஒருவரை ஒருவர் அறிமுகப் படுத்திக் கொள்ளும் உறவுப் பாலமாக சாட்டிங்மாறி விட்டது.

Facebook, Twitter, Orkut, Blogspot, Friendster, My Space, Bebo, Hi5, Xing  போன்றவை மிகப் பிரபலமான சமூகச் சேவைத் தளங்கள். கோடிக் கணக்கான பேர் கணக்குகளைத்  திறந்து உரையாடிக் கொண்டு இருக்கிறார்கள்.

திரிஷாவின் அம்மாவின் பெயர் உமா. இவருக்கு Facebook ல் மூன்று கணக்குகள் இருந்தன.  ஓய்வு நேரங்களில் அரட்டையாடல் செய்வது அவருடைய பொழுது போக்கு.  அம்மாவைப் போல திரிஷாவுக்கும் பேஸ்புக்கில் நான்கு கணக்குகள் இருந்தன.   இருவரும்  தாங்கள் யார் என்பதை மறைத்து  வைத்து இருந்தார்கள். அரட்டையாடல் நடக்கும் போது புனைப்பெயரில் அரட்டையாடுவார்கள். 

சினிமா உலகில் தன் மகளுக்கு நடிக்கக் கூடுதலான் வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்பதால், அதற்கான அடையாளங்களைத் தேடுவதில் உமா தீவிரமாக ஈடுபட்டிருந்தார். பிரபலமான இயக்குநர்கள், பிரபலமான தயாரிப்பாளர்களிடம் உரையாடல் மூலம் பேச்சு வார்த்தை நடந்து இருக்கிறது.  அதை ஒரு தாயாரின் நல்ல நியாயமான ஈடுபாடு என்று சொல்லலாம். மகள் நன்றாக இருக்க வேண்டும் என்று எந்தத் தாயார்தான் விரும்பமாட்டார். அது ஒரு சராசரித் தாயாரின் நேர்மையான அணுகுமுறை. 

இருந்தாலும் இந்த விசயம் எப்படியோ வெளி உலகத்தில் கசிந்து விட்டது. ரசிகர்கள் அவர்களின் தனிப்பட்ட நடைமுறைகளில் நுழைந்து, தேவையற்றதைப் பேசி, ஒழுங்கற்ற முறையில் நடந்து கொண்டு இருக்கிறார்கள். அதனால், தாய்க்கும் மகளுக்கும் மனக் கஷ்டம். பேஸ்புக்கில்தானே தொல்லை கொடுத்து வேதனைப் படுத்துகிறார்கள். பரவாயில்லை. ஆர்க்குட்டில் போய் உரையாடுவோம் என்று அங்கே போய் இருக்கிறார்கள். 

ஆர்குட்டில் பிரபலமானவர்கள் இருக்க மாட்டார்கள் என்ற துணிச்சலில் 'நான் உமா. நடிகை திரிஷாவின் அம்மா' என்று தன்னை அறிமுகம் செய்து இருக்கிறார். இது கொஞ்சம் ‘ஓவர்’தான். அதில் ஒருவன், தான் மும்பையைச் சேர்ந்த  ஒரு பெரிய ஒளிப்பதிவாளன் என்று அள்ளி விட்டு இருக்கிறான். 

அதை நம்பிய திரிஷாவின் தாயார், அரட்டை அடித்து கடைசியில் ஏமாந்து போனதுதான் மிச்சம். தன் குடும்ப உண்மைகளை வேறு கொஞ்சம் சொல்லி இருக்கிறார். அது அம்பலத்திற்கு வந்து விட்டது. தலை போகிற விஷயம் எதுவும் இல்லை. இருந்தாலும் திரிஷாவின் அம்மாவை ஏமாற்றிவிட்டேன் என்று அந்தச் சின்ன புத்தி, உலகம் பூராவும் சொல்லி பெருமைப் படுகிறதே!

இதில் இருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு விசயம் இருக்கிறது. Chatting எனும் அரட்டையாடல் செய்யும் போது ரொம்ப ரொம்ப எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 

குடும்ப ரகசியங்களைச் சொல்லவே கூடாது. சிரிக்கச் சிரிக்க உரையாடுங்கள். வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால், சந்தி சிரிக்கிற மாதிரி நிலைமை போய் விட வேண்டாம். உமாவை ஒரு நடிகையின் தாயாராகப் பார்க்காமல் உங்களுடைய தாயாராகப் பாருங்கள். அது போதும். தாய்மை எப்போதும் ஜெயிக்க வேண்டும்.

அது எல்லாம் சரி. உங்கள் கல்லூரியில் இணையக் கிசுகிசுகளைப் பற்றி ரொம்பவே பேசுவார்கள் போல இருக்கிறது. தப்பாக நினைக்க வேண்டாம். படிப்பை முதலில் பாருங்கள். அப்புறம் வேண்டும் என்றால் திரிஷாவைப் பெண் கேட்பது பற்றி, திரிஷாவின் அம்மாவிடமே கேட்டுப் பார்க்கிறேன்.

தேவா ஆனந்தன்,  அம்பாங் பெச்சா,  உலு சிலாங்கூர்
கே: சார், என்னுடைய G-Mail மின்னஞ்சல் மெதுவாக வேலை செய்கிறது? எப்படி பிரச்னையைத் தீர்ப்பது? மின்னஞ்சல் திறந்து படிப்பதற்குள், பாதி உயிர் போகிறது.

ப: இணையமும் சரி, அதில் இருக்கிற மின்னஞ்சலும் சரி. மெதுவாக திறக்கிறது என்றால் அதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. கணினியில் பிரச்னை இருக்கலாம். அல்லது நமக்கு இணையச் சேவையை வழங்கும் நிறுவனங்களிடமும் இருக்கலாம். இருந்தாலும், முக்கியமான சில காரணங்களைச் சொல்கிறேன். 

ஒரு தடவை எத்தனை மின்னஞ்சல்களைப் படிக்கப் போகிறீர்கள் என்பதை முதலில் முடிவு செய்யுங்கள். மின்னஞ்சல் பட்டியலை 50 லிருந்து 25 ஆகக் குறையுங்கள். அதற்கு இப்படி செய்ய வேண்டும். ஜிமெயில் மின்னஞ்சலின் உள்ளே போய் Settings >> General >> Maximum Page Size >> Show Conversations >> 25 என்று மாற்றம் செய்யுங்கள். அதன் பிறகு Settings >> Web Clips என்பதைச் சொடுக்குங்கள். அதில் Show my Web Clips above the Inbox என்று இருக்கும். அந்த இடத்தில் உள்ள பெட்டியில் இருக்கும் 'டிக்' அடையாளத்தை எடுத்து விடுங்கள். 

இன்னும் ஒன்று இருக்கிறது. Control Panel >> Internet Options >> Delete Cookies என்பதையும் Delete Files  என்பதையும் சொடுக்கி விடுங்கள். கணினியை அடைத்து விட்டு மறுபடித் தொடங்கிப் பாருங்கள். கண்டிப்பாக மின்னஞ்சல் வேகமாக வேலை செய்யும். இது மின்னஞ்சல் வேகமாக வேலை செய்வதற்கான வழிமுறை. 

சில சமயங்களில் நீங்கள் எங்கே வசிக்கிறீர்கள் என்பதைப் பொருத்தும் இணையச் சேவை அமைகிறது. நீங்கள் வசிக்கும் இடத்தில் ஒரே சமயத்தில் பல நூறு பேர் இணையத்தைப் பயன்படுத்தினால், இணையத்தின் வேகம் குறையும். இதற்கு வேறு வழி இல்லை. ஒருமுறை நள்ளிரவிற்கு மேல் இணையத்தைப் பயன்படுத்திப் பாருங்கள். 

வேகம் கூடவில்லை என்றால், உங்கள் கணினியில் பிரச்னை இருக்கிறது என்பதை உறுதிப் படுத்தலாம். http://www.nonags.com/freeware-wise-registry-cleaner_4132.html எனும் இணைய முகவரியில் கணினியைச் சுத்தப் படுத்தும் நல்ல ஒரு நிரலி இருக்கிறது. வதிவிறக்கம் செய்து பயன்படுத்திப் பாருங்கள். பிரச்னை என்றால் 012- 4347462 அல்லது 010-3913225 எனும் எண்களுக்கு அழைத்துப் பேசலாம்.

பாலாமணி சற்குணம், பூச்சோங் பெர்டானா,  கோலாலம்பூர்
கே: ஆங்கிலத்தில் Blog என்பதைத் தமிழில் 'வலை மனை' என்று சொல்வது சரியா? இல்லை 'வலைப் பூ' என்று சொல்வது சரியா? இந்த வலை மனை அமைக்க கட்டணம் கட்ட வேண்டுமா? நானும் ஒரு வலைமனை அமைக்க ஆசைப் படுகிறேன். எப்படி அமைப்பது? சொல்லிக் கொடுங்கள்.

ப: வலைமனை என்று சொல்வதே சரி. மனை என்றால் இல்லம் அல்லது வீடு. ஒரு மனையில் பல அறைகள் இருக்கும். அதே போல ஒரு வலை மனையில் பல பகுதிகள் இருக்கும். பல பக்கங்கள் இருக்கும். இந்தப் பக்கங்களை எல்லாம் தனித் தனியாக வேண்டும் என்றால் வலைப் பூ என்று சொல்லலாம். அதாவது ஒரு பக்கத்தை ஒரு பூ என்று அழைக்கலாம். 

வலை மனை நடத்துபவர்களை வலைப் பதிவர்கள் என்று சொல்கிறோம். Blog என்றால் என்ன. உங்கள் எண்ணங்களை மற்றவர்களுக்குத் தெரிய படுத்துவதே வலைமனை அமைப்பதின் நோக்கம். Web Log எனும் சொற்களில் இருக்கும் b என்ற எழுத்தையும் Log என்ற சொல்லையும் சேர்த்து Blog என்று உருவாக்கினார்கள். சரியா. 

வலை மனைகளை யார் வேண்டுமானாலும் அமைத்துக் கொள்ளலாம். அது முற்றிலும் இலவசம்.  இந்த வலை மனைகளைப் பற்றிய விவரங்களைத் தேடும் தேடல் இயந்திரம் இருக்கிறது. அதன் பெயர் Technorati.
 
உலக இணையத்தில் 50 மில்லியன் வலைமனைகள் உள்ளன. ஒரு விநாடிக்கு இரண்டு வலைமனைகள் புதிதாக உருவாக்கப் படுகின்றன. ஒரு நாளைக்கு 16 இலட்சம் பக்கங்கள் எழுதப் படுகின்றன. வலை மனை உருவாக்க ஆசைப் படுபவர்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள். அடுத்தவர் மனம் புண்படும் படி தயவு செய்து எழுத வேண்டாம். 

அரச நிந்தனைச் சொற்களைப் பயன் படுத்த வேண்டாம். https://blogspot.com எனும் இணையத் தளத்திற்குப் போய் பதிந்து கொள்ளுங்கள். தமிழிலும் எழுதலாம். அதற்கு unicode எழுத்துருகள் தேவைப் படும். http://software.nhm.in/products/writer எனும் இடத்தில் தமிழில் எழுதப் பயன்படும் தமிழ் நிரலி இருக்கிறது. கட்டணம் இல்லை. இலவசமாகக் கொடுக்கிறார்கள். பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். எப்படி எழுதுவது என்பதற்கு ஒரு கையேட்டையும் இலவசமாக வழங்குகிறார்கள். 

சகோதரியே, முதலில் சில தளங்களைப் பாருங்கள். படியுங்கள். அப்புறம் எழுதுங்கள். அண்மையில் http://tansrisomas.blogspot.com/ எனும் ஒரு வலைமனையை உருவாக்கி இருக்கிறேன். அந்தத் தளம், புதிதாக வலைமனை தொடங்க இருப்பவர்களுக்கு நல்ல ஒரு வழிகாட்டியாக அமையும் என்று நினைக்கிறேன்.

நரிக்குறவர்களின் நவரசங்கள்

[இந்தக் கட்டுரை 17.09.2012 மலேசியா தினக்குரல் நாளிதழில் பிரசுரமானது.]

தயவு செய்து உங்களுடைய படைப்புகளாக, எடுத்து எழுதி உரிமை கொண்டாடினால் அதைவிட வேதனையான விசயம் உலகத்தில் வேறு எதுவுமே இல்லை. பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக நூல் வெளியீடு கிடைக்கும்.


முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு, தமிழ்நாட்டில் இருந்து நரிக்குறவர்கள் கப்பலேறி மலேசியாவுக்கு வருவார்கள். கோலாலம்பூர்தான் அவர்களின் தலைவாசல். ஜாலான் மஸ்ஜீத் இந்தியா, பிரிக்பீட்ஸ், பத்துமலைப் பகுதிகளில் அவர்களைப் பார்க்கலாம். பாசிமணி, ஊசிகளை விற்பார்கள். பச்சைக் குத்துவார்கள். நாடி பார்த்து நோய்க் குறிகளைச் சொல்வார்கள்.

பின்னர் பேராக், மலாக்கா, கெடா பகுதிகளுக்குப் போவார்கள். மலேசியத் தோட்டப்புறங்களில் அவர்களின் நடமாட்டங்கள் அதிகமாகத் தெரிந்தன. மிஞ்சி மிஞ்சி போனால் இரண்டு மூன்று மாதங்கள், மலேசியாவில் தங்கி இருப்பார்கள். நாலு காசு பார்த்ததும் நாகரிகமாக, நாடு கடந்து தாயகம் போய்விடுவார்கள். இப்போது எல்லாம் அந்த அப்பழுக்கற்ற ஜீவன்களைப் பார்க்க முடிவது இல்லை. அவர்களும் அரசியல் அரிச்சுவடிகளில் சகாப்தமாகி விட்டார்கள்.

நரிக்குறவர்கள் என்று சொன்னதும் அவர்கள் விற்கும் நரிக்கொம்பு ஞாபகத்திற்கு வருகிறது. உண்மையிலேயே நரிக்கொம்பு என்ற ஒன்று இருக்கிறதா. தெரியவில்லை. மலேசியாவில் நரிகள் இருக்கின்றன. அவை மலைப் பிரதேசங்களில் வாழ்கின்றன. அங்கு வாழும் நரிகளுக்கு கொம்புகள் இருக்கின்றன என்று நண்பர்கள் சொன்னார்கள். அது எந்த அளவுக்கு உண்மை என்றும் தெரியவில்லை. அதைப் பற்றி ஒரு பெரிய ஆராய்ச்சியே செய்ய வேண்டி இருக்கும்.

நரிகளில் ராஜநரி என்று ஒரு வகை உண்டு. அவற்றுக்கு கொம்புகள் இருப்பதாகக் கேள்விப்பட்டேன். ஆனால், அவை உண்மையிலேயே கொம்புகள் இல்லை. தலையில் கொஞ்சமாகத் தசை வளர்ந்து இருக்கும். அதுதான் நரிக்கொம்பு. நடுநிசி அல்லது விடியல்காலையில் புடைத்துக் கொள்ளுமாம். காண்டாமிருகத்திற்கு கொம்பு இருப்பதைப் பார்த்து இருக்கலாம். உண்மையில் அது கொம்பு இல்லை. அது இறுகிப் போன தசை.

நரிக்கொம்பின் மூலமாக சிலருடைய வாழ்க்கையில் நம்பிக்கை ஏற்படுகிறது. நல்லது நடக்கும் என்கிற பிடிப்பும் உண்டாகிறது. நடக்கிறதோ இல்லையோ அது முக்கியம் இல்லை. நடக்கும் எனும் நம்பிக்கை இருக்கிறதே அதுதான் முக்கியம். அது ஒரு நேர்மறைத் தாக்கம். அதுவே நல்லதைச் செய்கின்றது.

இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் சிரிங்கேரி, தர்மசாலா புனித ஆலயங்களுக்கு போகின்ற வழியில் பெரிய பெரிய காடுகள் இருக்கும். சும்மா சொல்லக்கூடாது. நக்கசல்பாரிகள் உலாவுகின்ற மலைப் பிரதேசம். காட்டுப் பாதைகளின் ஓரங்களில்  நரிக்குறவர்கள் பரண்கள் அமைத்து இருப்பார்கள். வருகிறவர்கள் போகிறவர்களிடம், அற்புதமான வேலைப்பாடுகள் நிறைந்த பாசி மணிகளை விற்பார்கள். 2006, 2010ஆம் ஆண்டுகளில் நானும் என் மனைவியும் அங்கு போய் இருக்கிறோம். அவர்களைப் பார்த்துப் பேசியும் இருக்கிறோம். 

சரி. நரிக்குறவர்கள் யார்? தமிழ்மொழியைப் பேசும் அவர்கள் தமிழர்களா? அவர்கள் எங்கு இருந்து வந்தார்கள்? இவர்களைப் பற்றி "நரிக்குறவர் இனவரைவியல்" எனும் நூலை கரசூர் பத்மபாரதி என்பவர் எழுதி இருக்கிறார். 2004ஆம் ஆண்டு வெளிவந்தது. மரக்காணம் பாலா என்பவரும் ஓர் ஆவண நூலை எழுதி இருக்கிறார்.

இணையவசதி உள்ளவர்கள் http://ta.wikipedia.org/wiki/நரிக்குறவர் எனும் முகவரியில், மேலும் தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம்.

இலக்கியங்கள், கதைகள், பாடல்கள், சினிமாக்கள் என்று எல்லா வகையான ஊடகங்களிலும் நரிக்குறவர்களைப் பற்றித் தவறாகவே சொல்லி இருப்பார்கள். நரிக்குறவர்கள் என்னவோ வேற்று உலகத்தில் இருந்து வந்த மாதிரியும், அவர்கள் என்னவோ நம்ப வீட்டு ஐஸ்பெட்டியில் இருந்த அல்வாவைத் திருடித் தின்ற மாதிரியும் கதை கட்டி காவியம் பேசுவார்கள்.

அவர்களைத் திருடர்களாகவும், சபலபுத்தி உள்ளவர்களாகவும் சித்தரிப்பது மிகவும் தவறு. அவர்களும் நம்மைப் போல மனிதர்கள். அவர்களுக்கும் நம்மைப் போல ஆசாபாசங்கள் இருக்கும். அவர்களைப் பற்றிய சில நடைமுறை உண்மைகளைச் சொல்கிறேன்.

நரிக்குறவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழர்கள் என்பதை முதலில் சொல்லிவிடுகிறேன். நரிக்குறவர்களின் சமுக அமைப்பும், சமூகக் கட்டுபாடும் மற்றச் சமூகங்களில் இருந்து அவர்களைத் தனியாகப் பிரித்து வைத்து இருக்கின்றன. அவ்வளவுதான். அவர்களும் தனித்துப் போய்விட்டனர். மற்ற சமூகங்களுடன் அவர்கள் இணைவது இல்லை. ஒதுக்கி வைக்கப்பட்டனர் என்று சொன்னால்தான் சரியாக இருக்கும்.

தேர்தல் சமயத்தில் மட்டும் அரசியல்வாதிகள் இவர்களைத் தேடி வருவார்கள். இடுப்பில் தூக்கி வைத்து ஆடுவார்கள். மதிப்பும் மரியாதையும் மூட்டை மூட்டையாக வரும். சில நாட்களுக்கு ராஜ உபசரணைகள். வடிவேலு கணக்கில் குவார்ட்டர் வரும். புல்லு வரும். அவிச்ச முட்டை, அவிக்காத முட்டை எல்லாம் வரும். ஓட்டுப் போட்டதும் அவர்கள் மறக்கப்பட்ட மனிதர்கள். மாட்டு வண்டியில் விரட்டப்பட்ட நாடோடிகள்.

இங்கே மட்டும் என்னவாம். தேர்தல் வந்ததும் அரிசி, மாவு, சீனி, ரொட்டி, கிடைக்கிறதே என்று வரிசை பிடிக்கும் கலாசாரம் இருக்கத்தானே செய்கிறது. அந்த மாதிரிதான். அதில் அந்த 500 வெள்ளி பட்டியலில் என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள். நானும் வரிசையில் நின்று வாங்கி இருக்கிறேன். சும்மா ஒன்றும் இல்லை. பிள்ளையாய்ப் பிறந்து எத்தனையோ இலட்சம் வரியாய்க் கட்டி இருக்கிறேன். அதில் கொஞ்சம் திரும்பி வருகிறது. நாங்களும் வாங்குவோம் இல்ல. கதை எங்கேயோ போய்விட்டது. மன்னிக்கவும்.

நரிக்குறவர்களின் பூர்வீகம் வட இந்தியாவின் குஜாராத் மாநிலம். மராட்டிய மாவீரன் சிவாஜியின் படைப்பிரிவில் நரிக்குறவர்கள் முன்னணி வீரர்களாக இருந்தவர்கள். மொகலாயர்களின் படையெடுப்புகளினால் சிவாஜிக்குப் பல பின்னடைவுகள் ஏற்பட்டன. அதனால், சிவாஜியின் படையில் இருந்த அத்தனை வீரர்களும் மொகலாயர்களின் அடிமைகளாக்கப்பட்டனர். கடும் கொடுமைகள் தொடர்ந்தன.

மொகலாய மன்னன் அவுரங்கசிப், அவனுக்குப் பின் வந்த சிற்றசர்கள் மராட்டிய அடிமைகளுக்கு கடும் தண்டனைகளைக் கொடுத்தனர். அதில் இருந்து தப்பிக்க நரிக்குறவர்கள் காடுகளில் தஞ்சம் அடைந்தனர். அதற்கு முன் அவர்கள் நரிக்குறவர்கள் அல்ல. நல்ல போர்வீரர்கள். வெளியே நடமாடும் போது, எப்போதும் அடிமைகளுக்கான உடைகளை அணிந்து இருக்க வேண்டும். ஆக, அவர்கள் அணிந்து இருந்த உடைகள் அவர்களை அடிமைகளாக அடையாளம் காட்டின.

அதனால், அந்த உடைகளை அணியாமல் இலைத் தழைகளை உடுத்திக் கொண்டனர். காடுகளிலேயே வாழ்ந்தனர். இதில் ஒரு வேதனையான விஷயம் என்ன தெரியுமா. மொகலாய சாம்ராஜ்யம் மறைந்து போனதுகூட தெரியாமல், அந்த இலைத்தழை அடிமைகள் காடுகளிலேயே வாழ்ந்து வந்தனர். ஒரு இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர்தான் தமிழ்நாட்டில் வந்து குடியேறினார்கள். இப்போது மராத்தி கலந்த தமிழ் மொழியில் பேசுகிறார்கள்.

ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆட்சி செய்த போது, அவர்கள் காடுகளுக்கு வேட்டையாடச் செல்வது வழக்கம். அது அவர்களின் மேல்மட்ட பொழுதுபோக்கு. ஆங்கிலேயர்களுக்கு நரிக்குறவர்கள் உதவியாக இருந்து இருக்கிறார்கள். அந்தச் சமயத்தில் நரிக்குறவர்களின் வேட்டையாடும் திறமையைப் பார்த்து, ஆங்கிலேயத் துரைமார்கள் வியந்து போனார்கள்.

அவர்களுக்குத் துப்பாக்கிகளைக் கொடுத்து வேட்டையாடிப் பிழைக்கும் வழிகளையும் சொல்லித் தந்தார்கள். அதனால்தான் இன்றுவரை நரிக்குறவர்கள் துப்பாக்கியும் கையுமாக அலைவதைப் பார்க்க முடிகிறது. ஒரு சின்னச் செருகல். அந்தத் துப்பாக்கிகளும் இப்போது அரிசி பருப்புக்கு அரசியல்வாதிகளிடம் அடைக்கலம் போய் விட்டன. அது மட்டும் இல்லை. துப்பாக்கி உரிமங்களைப் புதுப்பிப்பதிலும் அரசாங்கம் ஏகப்பட்ட கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்துவிட்டது. இவ்வளவு காலமும் நரிகளை வேட்டையாடிப் பிழைத்து வந்த நரிக்குறவர்கள் இப்போது அரிசிக்கும் பருப்புக்கும் ஆலாய்ப் பறக்கின்றார்கள்.

தமிழகத்தில் வாழும் நரிக்குறவர்கள் நரியின் மாமிசத்தை விரும்பிச் சாப்பிடுவார்கள். அது அவர்களுக்குப் பிடித்தமான உணவு. நாட்டுக் கோழியைவிட நரி மாமிசம் எவ்வளவோ பரவாயில்லையாம். சண்டைக்கு வரவேண்டாம். நரிக்குறவர்கள் சொல்கிறார்கள். இரண்டுமே சுத்தமான அசைவங்கள். இதில் எது சுத்தமான அசைவம் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

நரியின் இறைச்சியை அவர்கள் விரும்பியதாலும், நரிக்கொம்புகளை விற்று வந்ததாலும் அவர்களுக்கு நரிக்குறவர் எனும் பெயர் நன்றாகவே ஒட்டிக் கொண்டது.

நரிக்குறவர்கள் பழமையான வாழ்க்கை முறையையும் மரபுகளையும் இன்றுவரை கடைபிடித்து வருகின்றார்கள். இவர்களின் திருமண முறை சற்றே வித்தியாசமானது. இவர்களின் திருமணத்தின் போது, சாராயம் தண்ணீராக ஓடும். அதனால் சண்டைகள், சச்சரவுகள் வரும். அதில் ஏகப்பட்ட அமர்க்களங்கள். அப்போதுதான் அது ஒரு முழுமையான திருமணமாகக் கருதப்படுகிறது. நரிக்குறவர்களின் சமூகத்தில் திருமணம் என்று வந்தால் மாப்பிள்ளைதான் பெண்ணுக்கு வரதட்சணை கொடுக்க வேண்டும். பெண்ணின் உறவுக்காரர்கள் அனைவருக்கும் துணிமணிகள் வாங்கித்தர வேண்டும். கல்யாணச் செலவுகளை மொத்தமாக  மணமகன் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தால் அதை ஓர் அதிர்ஷ்டமாகக் கொண்டாடுகிறார்கள். பெண் குழந்தையைக் குலத்தைக் காக்க வந்த குலக் கொழுந்தாகப் போற்றுகிறார்கள்.

அவர்களைப் பொருத்தவரை உபரியாகச் சம்பாதிக்க வேண்டும் என்கிற ஆசை பெரும்பாலும் கிடையாது. நன்றாக உழைக்க வேண்டும். நன்றாக மது அருந்த வேண்டும். இதில் ஆண் பெண் பாரபட்சம் இல்லை. முடிந்தவரை உல்லாசம் நிறைந்த கொண்டாட்டமான வாழ்க்கை நடத்த வேண்டும். உணவிற்கும் உறைவிடத்திற்குமான கவலைகள் அவர்களிடம் இல்லை. அவர்களுக்கான மாபெரும் கேளிக்கை தமிழ்ச்சினிமா. மூன்று காட்சிகளையும் படம் பார்க்கச் சொன்னால் சந்தோஷமாகப் பார்ப்பார்கள். அதிலும் எம்.ஜி.ஆர் படங்கள் என்றால் கொள்ளைப் பிரியம்.

நரிக்குறவர்களிடம் சாதி என்பதே இல்லை. ஆனால், இரண்டே  இரண்டு பிரிவுகள் மட்டும் இருக்கின்றன. ஒன்று ஆடு சாப்பிடுகிறவர்கள் பிரிவு. இன்னொன்று மாடு சாப்பிடுகிறவர்கள் பிரிவு.

ஆடு சாப்பிடுகிற பிரிவைச் சேர்ந்த ஒருவருக்கு, ஆடு சாப்பிடும் அதே பிரிவைச் சேர்ந்தவர் சகோதரர் முறை வரும். அதேபோல மாடு சாப்பிடுகிற பிரிவைச் சேர்ந்த ஒருவருக்கு மாடு சாப்பிடும் அதே பிரிவைச் சேர்ந்த ஒருவர் சகோதரர் முறை வரும்.

ஆகவே, ஒரே பிரிவிற்குள் இருப்பவர்கள் பெண் எடுப்பதும் இல்லை. பெண் கொடுப்பதும் இல்லை. எதிர் எதிர்ப் பிரிவுகளில்தான் மண உறவுமுறைகள். இன்னும் கொஞ்சம் விளக்கமாகச் சொல்லலாம். ஆடு சாப்பிடும் பிரிவைச் சேர்ந்த ஒரு பெண், மாடு சாப்பிடும் பிரிவைச் சேர்ந்த ஓர் ஆணைத்தான் திருமணம் செய்ய வேண்டும். அதே போல, மாடு சாப்பிடும் பிரிவைச் சேர்ந்த ஒரு பெண், ஆடு சாப்பிடும் பிரிவைச் சேர்ந்த ஓர் ஆணைத்தான் திருமணம் செய்ய வேண்டும்.  ஆடு சாப்பிடும் பிரிவைச் சேர்ந்த ஆண், இன்னோர் ஆடு சாப்பிடும் பிரிவைச் சேர்ந்த பெண்ணோடு பாலியல் உறவு வைத்துக் கொள்வது இல்லை. அதை அண்ணன் தங்கை உறவாக நினைக்கிறார்கள்.

இவர்களிடம் திருமண உறவுகளைத் தாண்டிய சுதந்திரமான பாலுறவுகள் பரவலாக உள்ளன. ஒருவருடைய மனைவியை மற்ற ஆண்கள் பகிர்ந்து கொள்ள முடியும். அதை அந்தப் பெண்ணின் கணவன் தவறாக எடுத்துக் கொள்வது இல்லை. ஏன் என்றால் அதே கணவன் வேறு திருமணமான பெண்களையும் பகிர்ந்து கொள்ள முடிகிறது. அதனால், இங்கே விட்டுக் கொடுத்து ஏற்றுக் கொள்ளும் சகிப்புத் தன்மை இருக்கிறது.

இந்த மாதிரியான பழக்கவழக்கத்தை நாம் ஏற்றுக்கொள்வது இல்லை. ஆனால், அது அவர்களுக்கு சமூக வழக்கமாகிவிட்டது. இன்னும் ஒரு விசயம். மாலை ஆறுமணிக்கு மேல் வீட்டிற்குத் திரும்பி வரும் பெண்ணை, சமூகத்தில் இருந்து விலக்கி வைத்துவிடுவார்கள். மற்ற பழங்குடிச் சமூகங்களைப் போல நரிக்குறவர்களும் இனத் தூய்மையைக் கட்டிக் காக்கின்றனர்.

குறவர் பெண்களுக்கு 13 அல்லது 14 வயதிலேயே திருமணம் ஆகிவிடுகிறது. ஆண்களுக்கு அதிகபட்ச வயது 16 அல்லது 18. பெரும்பாலும் பெரியவர்கள் பார்த்து திருமணம் செய்து வைக்கிறார்கள். காதலித்து திருமணம் செய்வதும் உண்டு. சரியான உறவுக்குள் காதலித்து இருந்தால் சமூகத்தில் சேர்த்துக் கொள்கிறார்கள். அதைத் தாண்டி ஒரே பிரிவுக்குள் திருமணம் செய்து கொண்டால் ஒதுக்கி வைத்து விடுகிறார்கள்.

முன்பு எல்லாம் குழந்தைகள் பிறக்கும் போதே திருமணத்தை நிச்சயித்துவிடுவது வழக்கம். பெண்ணுக்கு மூன்று வயதானதும் திருமணத்தை முடித்து, அந்தப் பெண்ணை மாப்பிள்ளை வீட்டுக்கு அழைத்துச் சென்று விடுவார்கள். உறவு விட்டுப்போகக் கூடாது என்பதற்காக நடந்த அது போன்ற பால்யத் திருமணங்கள் இப்போது இல்லை. குறைந்து விட்டது.

பெண் பார்க்கப் போகும் போது ’வெற்றிலைப் பாக்கு இருக்கா இல்லையா’ என்று கேட்க மாட்டார்கள். ’பிராந்தி இருக்கா’ என்றுதான் கேட்பார்கள். பிராந்தி அல்லது விஸ்கி கண்டிப்பாக இருக்க வேண்டும். பேச்சு வார்த்தை தொடங்குவதற்கு முன் எல்லாரும் நன்றாக சாப்பிட வேண்டும். அப்புறம்தான் கல்யாணப் பேச்சு.  மது அருந்துவதில் ஆண் பெண் பாரபட்சம் இல்லை. அவர்களைப் பொருத்த வரையில் நல்ல ஒரு கலாசாரம். இந்த இடத்தில் சமத்துவம் சம்மட்டியால் அடித்து தத்துவம் பேசுகின்றது.

பெண்ணுக்கு அழகு இருக்க வேண்டும். பாசிமணி கோர்க்கும் திறமை இருக்க வேண்டும். அதை விற்றுப் பணம் சேர்க்கும் அறிவும் இருக்க வேண்டும். அதேமாதிரி மாப்பிள்ளைக்கு வெள்ளி வெண்கலச் சாமான்கள் இருக்க வேண்டும். நன்றாக வேட்டையாடத் தெரிய வேண்டும். குறிப்பாக ஆண்கள் குடுமி வைத்து இருக்க வேண்டும். குடுமி இல்லாத ஆண்களுக்கு மவுசு இல்லை. என்ன செய்வது. இதை எல்லாம் பார்க்கும் போது நாமும் குடுமி வைத்துக் கொண்டு, கொஞ்சம் வெண்கலச் சாமான்களை இடுப்பில் கட்டிக் கொண்டு அந்தப் பக்கம் போகலாமே என்கிற ஆசை வருகிறது. ஆனால், முடியாது சாமி. பேரன் பேத்திகள் சும்மா விடுவார்களா?

பொதுவாக நரிக்குறவர்களிடம் பாலியல் பிரச்னைகள் இல்லை. அதற்குக் காரணம், போதுமான பாலுறவு இணக்கங்கள் அவர்களுக்குள் கிடைத்து விடுகிறது. ஒருவனுக்கு ஒருத்தி என்பது எல்லாம் காலாவதியான அத்தியாயங்கள். அதே போல அவர்கள் இடத்தில் விவாகரத்தும் குறைவு.

நரிக்குறவர் பெண்கள் நல்ல அழகிகளாக இருப்பார்கள். அவர்கள் மட்டும் கொஞ்சம் நல்ல நாகரீகமாக ஆடைகளை அணிந்து வெளியே நடமாடினால் போதும். சினிமா சீரியல் நாயகிகளுக்கும் பிரச்னை. குடும்பப் பெண்களுக்கும் பிரச்னை. மூன்றாம் உலகப்போர் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆக, சிலப்பதிகாரத்தைத் திருத்தி எழுத வேண்டியும் வரலாம்.

இன்னும் ஒரு விசயம். எந்த ஒரு குறவர் பெண்ணையும் அத்தனைச் சுலபத்தில் பாலியல் பலாத்காரம் செய்துவிட முடியாது, ஏன் என்றால் ஓர் ஆணுக்கு உள்ள பலம் ஒரு பெண்ணுக்கும் இருக்கிறது. ஒரு குறவர் பெண்ணையும் ஒரு குறவர் ஆணையும் சண்டை போட வைத்தால், ஒரு பெண் தான் ஜெயிப்பாள். அந்த அளவுக்கு பெண்களுக்கு பலம் இருக்கிறது. ஆக, கொஞ்சம் யோசித்துத்தான் அந்தப் பக்கம் தலையைக் காட்ட வேண்டும்.

அந்த அழகிகளைக் கல்யாணம் செய்து கொள்ள குறவர் அல்லாத ஆண்களுக்கும் ஆசைதான். வெளி ஆண்கள் குறத்திகளைக் கல்யாணம் செய்து கொள்ளவதில் கொஞ்சம் சிரமம் இருக்கிறது. அந்தப் பெண்கள் வெளியே நகர்ப்புறங்களுக்கு வருவது இல்லை. கல்யாணமான பெண்கள்தான் வெளியே வருவார்கள். அதுவும் ஆறுமணிக்குள் வீட்டிற்குத் திரும்பிப் போய்விட வேண்டும்.

நரிக்குறவர் பெண்ணைப் பிற சமூகத்தவர் திருமணம் செய்ய முடியும். அதில் தடை எதுவும் இல்லை. ஆனால் திருமணத்திற்குப் பிறகு அந்தப் பெண்ணையும் மாப்பிள்ளையையும் அவர்களுடைய சமூகத்திற்குள் சேர்த்துக் கொள்ளமாட்டார்கள். ஒதுக்கி வைத்துவிடுவார்கள்.

இவர்களைப் பற்றிய ஒரு சுவராசியமான செய்தி. எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்த காலத்தில் (1981-1983) பிற்பட்டவர்கள் பட்டியலில் இருந்து தங்களைப் பழங்குடியினர் பட்டியலுக்கு மாற்றவேண்டும் என்று ஊர்வலம் நடத்தி கோட்டைக்குச் சென்றார்கள். எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர்களான இவர்கள், அவரைப் பார்த்துவிட்ட மகிழ்ச்சியில், தங்கள் கோரிக்கைகளை மறந்துவிட்டு, அப்படியே ஊருக்குத் திரும்பிப் போய்விட்டார்கள். குறவர்களின் விசுவாசத்தைப் பார்த்து நெகிழ்ந்து போன எம்.ஜி.ஆர். குறவர் சமுதாயத்திற்கு நிறைய பொருள் உதவிகளைச் செய்தார். நிறைய பேர்களுக்கு கல்வி வசதிகளைச் செய்து கொடுத்தார். இன்றுவரை எம்.ஜி.ஆர். சின்னத்திற்குத்தான் நரிக்குறவர்களின் வாக்குகள் என்பது எழுதப்படாத சாசனமாக இருந்து வருகிறது.

21 செப்டம்பர் 2012

தாஜ் மகால் சரிந்து வருகிறது

[இந்தக் கட்டுரை 07.07.2012 மலேசியா தினக்குரல் நாளிதழில் பிரசுரமானது]
லக அதிசயங்களில் ஓர் உன்னதமான ஓவியம் தாஜ் மகால். வாழ்ந்த தலைமுறைகளுக்கு மகத்துவம் சொன்ன தத்துவம். வாழ்கின்ற தலைமுறைக்கு மகிமைகளைப் பேசும் சித்தாந்தம். ஆழமான அன்பையும் பாசத்தையும் அடையாளமாகக் காட்டும் ஓர் அழகுச் சின்னம். அப்பேர்ப்பட்ட ஓர் அழகு ஓவியம், இப்போது சரிந்து விழும் ஆபத்தில் சிக்கி நிற்கிறது. மனதை நிலைகுலையச் செய்யும் வேதனையான செய்தி.



இந்தியாவை ஆட்சி செய்த பேரரசுகளில் மொகலாயப் பேரரசு என்பது மறக்க முடியாத மாபெரும் அரசு. வரலாற்றுச் சுவடுகளில் பஞ்சரத்ன கீர்த்தனைகளை எழுதிச் சென்ற சாம்ராஜ்யம். அந்தச் சாம்ராஜ்யத்தின் ஐந்தாவது மன்னன் ஷா ஜகான். அவர் கட்டியதே இந்தத் தாஜ் மகால்.

அவருடைய இளம் மனைவி மும்தாஜ் மகால். இவர் 1631இல் தன்னுடைய பதினான்காவது குழந்தையைப் பெறும் போது இறந்து போனார். ஏற்கனவே ஏழு குழந்தைகள் இறந்து போயின. அவருடைய நினைவாக 22,000 பணியாட்களைக் கொண்டு தாஜ் மகால் கட்டப்பட்டது.  


1654 ஆம் ஆண்டு வரையில் கட்டுமானம் நடைபெற்றது. தவிர,  இக்கட்டிடப் பணியை வடிவமைத்த பலர் பின் நாள்களில் தாஜ் மகாலைப் போன்று வேறு ஒரு கட்டடத்தை உருவாக்கக் கூடாது என்பதற்காக அவர்களின் கைகள் துண்டிக்கப் பட்டதாகவும் சொல்லப் படுகிறது. அது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. அதுவும் ஒரு புரியாத புதிர்.

இந்தக் கட்டத்தில் அந்தக் காலத்தில் பிரபலமாக விளங்கிய ‘ஜீவியமா தெய்வீகக் காதல் சின்னமா… மொகலாய சாம்ராஜ்ய தீபமே - சிரித்த முகத்தோடு நினைவில் பொங்கும் ரூபமே… மும்தாஜே’ எனும் பாடல் நினைவிற்கு வருகிறது.



தாஜ் மகால் உலக அளவில் கோடிக் கோடியான மனிதர்களுக்கு தெரிந்த ஒரு வரலாற்றுக் காவியம். இது ஆக்ராவில் இருக்கிறது. இக்கட்டிடம் முழுவதும் சலவைக் கல் எனும் பளிங்குக் கற்களால் ஆனது.  

ஆக்ரா நகரில் யமுனை ஆற்றின் கரையில் இருக்கிறது. உலக அதிசயங்களின் பட்டியலில் தாஜ் மகாலும் சேர்க்கப்பட்டு உள்ளது. இந்தச் சலைவைக் கல் அதிசயத்தை பார்ப்பதற்கு ஆண்டு தோறும் 40 லட்சம் சுற்றுலாப் பயணிகள் ஆக்ராவிற்கு வருகின்றனர்.



சரி. 360 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த தாஜ் மகால், இன்னும் ஐந்து ஆண்டுகளில் இடிந்து விழும் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் கருத்துத் தெரிவித்து உள்ளனர். கட்டடத்தின் பல இடங்களில் விரிசல்கள் ஏற்பட்டு வருகின்றன.

தாஜ்மகால் நீண்டு நிலைத்து நிற்பதற்கு யமுனை நதி ஒரு முக்கிய காரணமாகும். ஆனால், அந்த நதி நாளுக்கு நாள் சாக்கடையாக மாறிவருகிறது. தொழிற்சாலைகள் பெருகி வருகின்றன. காடுகள் அழிக்கப் படுகின்றன. இந்தச் சுற்றுச்சூழல் மாசுபாடுகள் தாஜ் மகாலையே அழித்து விடும் என்று அவர்கள் எச்சரிக்கின்றனர்.



அத்துடன், தாஜ்மகாலின் அடிக்கட்டுமானம் வேறு தளர்ந்து வருகிறது. மிகவும் பலவீனமாக இருப்பதாகவும் விழிப்புணர்வு ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். சமாதியில் விரிசல்கள் ஏற்பட்டு வருவதாக கடந்த 2010ஆம் ஆண்டே கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் 4 தூபிகளும் ஆட்டம் கண்டு வருகின்றன.

உலகப்புகழ் மங்காது இருந்து வரும் காதலர்களின் இலட்சியச் சின்னமான இந்த தாஜ் மகால் அழியாமல் காப்பாற்றப்பட வேண்டும். உலக மக்கள் ஒன்று திரண்டு ஆதரவளிக்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அறைகூவல் விடுக்கின்றனர்.



’தாஜ்மகாலைக் காப்பாற்றுங்கள்’ எனும் விழிப்புணர்வு இயக்கத்தின் தலைவராக ராம் ஷங்கர் கதேரியா என்பவர் இருக்கிறார். இவர் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர். இன்னும் 3 முதல் 5 ஆண்டுகளில் தாஜ்மகால் இடிந்து விழும் அபாயம் உள்ளது என்று இந்திய அரசாங்கத்திடம் அறிக்கை சமப்பித்து உள்ளார்.

மேலும் கட்டிடக் கலையின் உன்னத வடிவமான இந்தத் தாஜ்மகாலின் பளபளப்பும் மறைந்து வருகிறது. இப்படியே சென்றால் நுழைவாயிலில் இருக்கும் தூபிகளும் சரிந்து விழும் அபாயம் உள்ளது என்கிறார்.



கடந்த 30 ஆண்டுகளாக அடிக்கட்டுமானத்தைப் பார்வையிட யாரையும் இந்திய அரசு அனுமதிக்கவில்லை, அனைத்தும் சிறப்பாக இருக்கிறது என்றால் அப்புறம் ஏன் யாரையும் அனுமதிப்பது இல்லை என்று நிபுணர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

தாஜ் மகாலுக்கு அருகில் மதுரா எண்ணெய்த் தொழில்சாலை இருக்கிறது. ஒரு நெடுஞ்சாலையும் இருக்கிறது. தொழில்சாலையில் இருந்து வெளியாகும் புகையும், வாகனங்களின் புகையும் தாஜ் மகாலை மஞ்சள் நிறமாக மாற்றி வருகின்றன.

அதனால், தாஜ் மகாலுக்கு அருகில் அரை மைல் தூரத்திற்கு வாகனங்கள் செல்லக்கூடாது என்று அண்மையில் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆக்ரா நகரின் சுற்றுப்பகுதிகளில் துளசிச் செடிகளை நடப் பட்டு வருகின்றன. இதுவரை முப்பது இலட்சம் செடிகள் நடப்பட்டுள்ளன. துளசிச் செடிகளுக்கு காற்றுத் தூய்மைக் கேட்டைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் உள்ளது.

தாஜ் மகாலைப் பற்றி மிகுந்த நிபுணத்துவம் பெற்ற வரலாற்று ஆசிரியர் ராநாத். அவர் சொல்கிறார். ‘யமுனை நதியின் ஓரத்தில் இருக்கிறது தாஜ்மகால். அந்த நதி இப்போது வற்றிக் கொண்டு வருகிறது. அதனால் இப்போது தாஜ்மகாலின் அடித்தளங்கள் ஆட்டம் கண்டு வருகின்றன’ என்கிறார்.

யமுனை நதி வறண்டு போனால் தாஜ்மகால் நீடிக்க வாய்ப்பில்லை என்று உறுதியாகக் கூறுகிறார். இந்தச் செய்தியைக் கேள்வி பட்டதும் மனதிற்கு வேதனையாக இருக்கிறது.

உடனடியாக சரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இல்லை என்றால் தாஜ்மகாலின் ஆயுள் வெகு விரைவில் ஒரு கேள்விக் குறியாகிவிடும். உலகம் ஓர் அதிசயத்தை இழந்துவிடும். எதிர்காலச் சந்தியினர் ஏடுகளில் மட்டுமே படிக்க முடியும்.