13 ஆகஸ்ட் 2014

பாலஸ்தீனம் கண்ணீர் வரலாறு - பாகம் 2

 [இந்தக் கட்டுரை மலேசியா தினக்குரல் 04.08.2014 நாளிதழில் பிரசுரிக்கப் பட்டது.]

இரண்டாம் உலகப் போரில், பிரிட்டன் ரொம்பவுமே பாதிக்கப்பட்டுப் போனது. அந்தச் சமயத்தில் பிரிட்டனிடம், ஐம்பது அறுபது காலனிகள் (Colony) இருந்தன. அதாவது இந்தியா, மலாயா, பர்மா, கானா, கென்யா, மலாவி, உகாண்டா, பிஜி என்று பலப் பல  காலனி நாடுகள். 

எண்ணிப் பார்த்தால் 53 வருகிறது. போருக்குப் பிறகு, பிரிட்டனைப் பார்த்தால் மனசிற்கு கஷ்டமாக இருக்கும். வெளியே பார்த்த மாதிரி வீட்டையும் பார்த்து இருக்க வேண்டுமே என்று கதை கதையாய்ச் சொல்லிக் கண்ணீர் விட்டது.


எல்லாக் காலனி நாடுகளையும், சரியாகக் கவனிக்க முடியாத நிலைமை. உண்மைதானே. ஒரு மனைவியாக இருந்தால், உருப்படியாகச் சோறு போட்டு அழகு பார்த்து இருக்கலாம். 

கணக்குத் தெரியாமல் மன்மத ராகம் பாடினால் எப்படிங்க. சொல்லாமல் கொள்ளாமல் காசி இராமேஸ்வரத்திற்கு டிக்கெட் எடுப்பது தான் உத்தமம். என்னைக் கேட்டால் அதுதான் சுத்தமான புருஷ இலட்சணம். 


ஆக, எப்படியாவது இந்தக் காலணிகளை, மன்னிக்கவும் காலனிகளைக் கழற்றிப் போட்டால் நிம்மதி என்று பிரிட்டன் பெருமூச்சு விட்டது. ஒரு காலத்தில் அதன் காலனிகளை எல்லாம் அதன் காலணிகளாகத் தானே அந்த நாடு நினைத்தது. நடத்தியும் வந்தது. 

ஒரு நாட்டின் இயற்கை வளங்களை நன்றாகச் சுரண்டி எடுப்பது. எல்லாவற்றையும் உறிஞ்சி முடித்த பிறகு, சாவதானமாகச் சுதந்திரம் கொடுத்து சமாதானம் செய்வது. இல்லை என்று யாராவது சொல்ல முடியுமா. 


இந்தியாவை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த உலகத்திற்கே சோறு போடும் அளவிற்கு இயற்கை வளங்கள் நிறைந்த புனித பூமி. பரங்கித் தலையர்கள் வந்தார்கள். அவற்றை எல்லாம் சாக்கு மூட்டைகளில் கட்டி எடுத்துக் கொண்டு போனார்கள். வெறும் சக்கையைக் காட்டி இதுதான் சுதந்திரம் எடுத்துக்கோ என்று பை பை காட்டினார்கள். 

இப்போது பாருங்கள். கடலில் கலக்கும் மழை நீரைத் கொடுப்பதற்கே, கஞ்சத் தனம் பண்ணுகின்ற அரசியல் அழுக்குகள் மலிந்து விட்டன. ஒரு புண்ணிய பூமி வாய்விட்டு அழுகிறது.

கலகம் இல்லாமல் உலகம் இல்லை. 
சிந்தனைகள் இல்லாமல் சாதனைகள் இல்லை

தன்னுடைய குட்டி நாடுகளைக் கழற்றி விட்டால், அப்புறம் லண்டன் கஜானா காலியாகி விடுமே. இந்தக் காலனிகளில் இருந்துதானே கப்பல் கப்பலாய் வருமானம் வந்தது. ஆக, அப்படியும் ஒரு பயம் இருந்தது. 


அடுத்து, ஆசை யாரை விட்டது. இந்தச் சமயத்தில், மத்தியக் கிழக்கு நாடுகளில், பிரிட்டனின் கை கொஞ்சம் லேசாக ஓங்கியது. அங்கே இருந்து டீசல், பெட்ரோல் என்கிற கறுப்புத் தங்கம் வற்றாமல் கிடைத்தது. 

அதை வைத்துக் கொண்டு, பல நாடுகளுக்கு நாட்டாமையும் பார்த்தது. கலகம் இல்லாமல் உலகம் இல்லை. சிந்தனைகள் இல்லாமல் சாதனைகள் இல்லை என்பதே வெள்ளைக்காரர்களின் வேதாந்தம்.


உலக வல்லரசாக வேண்டும் என்பது அமெரிக்காவின் நீண்ட நாள் ஆசை, கனவு, இலட்சியம், இலக்கு, எதிர்பார்ப்பு எல்லாமே. உலகப் போலீஸ்காரர் பட்டத்தைத் தற்காக்க வேண்டும் என்பதுதான் தலையாய ஆசை. அந்த ஆசை 1900-களிலேயே வந்து விட்டது. அது ஒரு பக்கம் இருக்கட்டும்.

ஹிட்லர் செய்த யூதப் படுகொலைகளினால், உலகம் முழுவதும் யூதர்களுக்கு அனுதாப அலைகள் வீசத் தொடங்கிய நேரம். ஆரம்பத்தில் சில ஆயிரம் யூதர்கள் பாலஸ்தீனத்திற்குச் சென்று குடியேறினார்கள். 

இவர்கள் கிழக்கு ஐரோப்பாவைச் சேர்ந்த சோசலிச யூதர்கள். அவர்கள் சோசலிச யூதர்களாக இருந்ததால், சோவியத் ரஷ்யாவின் ஆதரவை எளிதாகப் பெற முடிந்தது. ஒன்றை மறந்துவிட வேண்டாம்.


அந்தக் காலக் கட்டத்தில் இஸ்ரேலின் நெருங்கிய நண்பனாக இருந்தது சோவியத் ரஷ்யா. அதுதான் ஆச்சரியத்திலும் ஆச்சரியமான தகவல். அப்போதும் சரி இப்போதும் சரி. பலருக்கு வியப்பை அளிக்கும் செய்தியும்கூட. இப்போது பாருங்கள். இஸ்ரேலுக்கும் ரஷ்யாவுக்கும் ஏழாம் பொருத்தம்.

மூன்றாம் உலக நாடுகளின் விடுதலைப் போராட்டங்கள்

இரண்டாவது உலகப் போரின் போது, ரஷ்யாவை ஸ்டாலின் ஆட்சி செய்தார். ஐரோப்பிய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக, மூன்றாம் உலக நாடுகள் விடுதலைப் போராட்டங்கள் செய்த காலக் கட்டம். அந்த நாடுகளை ரஷ்யா ஆதரித்தது. அதை அப்போதைக்கு ஸ்டாலின் கொள்கை என்றும் சொல்வார்கள்.


மத்திய கிழக்கில் பிரிட்டன், பிரான்சு போன்ற நாடுகள் அதிகாரம் செய்து வந்தது ரஷ்யாவுக்குப் பிடிக்கவில்லை. அவற்றுக்கு எதிராக வேறு ஒரு நாடு உருவாக வேண்டும் என்று ரஷ்யா விரும்பியது. 

அந்த நாட்டிற்கு ஆதரவு தர ரஷ்யா தயாராகவும் இருந்தது. அது இஸ்ரேல் நாடாக இருந்தால் நல்லது என்பது ஸ்டாலின் அண்டக் காகசக் கணிப்பு.

ஆக, யூதர்களைத் தனியாகக் குடியேற்றுவதற்கு ஓர் இடம் தேவைப் பட்டது. அந்த வகையில் இஸ்ரேலியர்கள் சம்பந்தப்பட்ட ஓர் இடம் இருக்கிறது என்றால் அது பாலஸ்தீனம்தான். 

ஆக, யூதர்கள் அங்கே போய் குடியேறலாம் என்று அமெரிக்காவும் இங்கிலாந்தும் திட்டம் போட்டன. ஐ.நா. என்கிற தலையாட்டி பொம்மையும் சரி என்று சொல்லி, தலையைத் தடவிக் கொண்டது. 

கானான் ஒரு பெரிய சாம்ராஜ்யம்

அதற்கு முன்னர், பாலஸ்தீனத்தின் வரலாற்றைக் கொஞ்சம் புரட்டிப் பார்க்க வேண்டும். 8000 ஆண்டுகளுக்கு முன்னர், யூத மதம் தோன்றியதாக யூதர்கள் சொல்கின்றனர்.


ஆனால், 10,000 ஆண்டுகளுக்கு முன்பே பாலஸ்தீனத்தில், மனிதர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. அகழாய்வுச் சான்றுகள் உள்ளன. இஸ்ரேல், பாலஸ்தீனம், லெபனான், ஜோர்டான், சிரியா போன்ற நாடுகளின் பழைய பழைய நாகரீகங்கள் அங்கேதான் தோன்றின.

அந்தச் சமயத்தில் கானான் எனும் ஒரு பெரிய சாம்ராஜ்யம், பாலஸ்தீனப் பகுதியில் இருந்து இருக்கிறது. அந்தச் சாம்ராஜ்யம் இப்போது இல்லை. அழிந்து விட்டது. 

அந்தக் கானான் சாம்ராஜ்யத்தின் வழித் தோன்றல்கள் தான், இப்போது இருக்கின்ற இந்த யூதர்கள். ராக்கெட் மேல் ராக்கெட்டைப் பாய்ச்சி லெபனான் நாட்டை அலங்கோலப் படுத்திக் கொண்டு இருக்கும் யூத வாரிசுகள்.


இங்கே ஓர் இடைச் செருகல். சொந்தக் கதை. சொல்லலாம் தானே. இப்ப சொல்லாமல் வேறு எப்ப சொல்வதாம். 1972-ஆம் ஆண்டு. தமிழ் மலர் நாளிதழில் நிருபராக வேலை செய்த சமயம். 

அப்போது, இஸ்ரேல் ஓர் அனைத்துலகக் கட்டுரைப் போட்டியை நடத்தியது. ஆங்கில மொழியில் தான். கானான் சாம்ராஜ்யத்தைப் பற்றி ஒரு வரலாற்றுக் கட்டுரையை எழுதி, அமெரிக்கத் தூதரகத்தின் மூலமாக அனுப்பி வைத்தேன். 

இரண்டாவது பரிசு கிடைத்தது. விருந்தினராக வரச் சொல்லி இஸ்ரேலிய அரசாங்கம் அழைப்பு அனுப்பியது. போக முடியவில்லை. இந்தப் பக்கம் அனுமதி கிடைக்கவில்லை. புரிந்து கொள்ளுங்கள். நாற்பது வருடங்களுக்கு முன்னால் நடந்த கதை.

காலப் போக்கில் கானானிய நாகரீகம் அழிந்தது

அப்படியே போய் இருந்தால் என்ன. பக்கத்தில் இருக்கிற எகிப்து நாட்டிற்குப் போய் இருக்கலாம். பாலைவனத்தில் ஒட்டகங்களை மேய்க்கிற வேலை கிடைத்து இருக்கும். கிளியோபாட்ரா மாதிரி, கழுதைப் பாலில் குளிக்கிற ஒரு பெண்ணைப் பார்த்து இருக்கலாம்.


அவளுக்கும் தமிழ்மொழியைக் கற்றுக் கொடுத்து இருக்கலாம். அவளும் எனக்கு உதவியாக இருந்து இருப்பாள். என்ன செய்வது. கழுதைப் பாலிலும் குளிக்க முடியவில்லை. ஒட்டகப் பாலையும் குடிக்க முடியவில்லை. கொடுத்து வைத்தது அவ்வளவுதான் என்று சொல்ல மாட்டேன். 

ஏன் தெரியுமா. அதே கிளியோபாட்ரா மாதிரி நல்ல ஓர் அழகிய கிளி, இப்போது வீட்டில் இருக்கிறது. அந்தக் கிளியின் பெயர் மனைவி.

இந்தப் பதிவைப் பற்றிய உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள். எனக்கும் உதவியாக இருக்கும்.  நன்றி.

12 ஆகஸ்ட் 2014

பாலஸ்தீனம் ஒரு கண்ணீர் வரலாறு - பாகம் 1

[இந்தக் கட்டுரை மலேசியா தினக்குரல் 03.08.2014 நாளிதழில் பிரசுரிக்கப் பட்டது.]

இரண்டாம் உலகப் போர் முடிந்த காலக் கட்டம். அணுகுண்டுகள் போட்டதால், ஜப்பான் நாட்டின் இடுப்பு எலும்பு உடைந்து போனது. எழுந்து நடக்க முடியவில்லை. படுத்தப் படுக்கையாய்க் கிடக்கிறது. 


ஆணவம் பேசி வந்த உலகப் போலீஸ்காரர் அமெரிக்காவிற்கு, பசிபிக் பெருங்கடலில் பயங்கரமான அடி. ஏற்கனவே, ஜப்பான் துவைத்துப் பிழிந்து காயப் போட்டு விட்டது. இந்த இலட்சணத்தில், அமெரிக்காவின் முகம் ஒரு பக்கமாய் வீங்கிப் போனது. 

பாவம் பிரிட்டன். அதற்கு உடம்பு முழுவதும் வெட்டுக் குத்துக் காயங்கள். பற்றாக்குறைக்கு பர்மா மலாயாக் காடுகளில் விழுந்து எழுந்த இரத்தக் காயங்கள். ’பிலாஸ்திரி’ போட இடமே இல்லை. மருந்து போட கூட காசு இல்லாமல், கஞ்சி மாவைத் தடவி, கட்டு மேல் கட்டுகளைப் போட்டு இருக்கிறது. 


அந்தப் பக்கம் பார்த்தால், ஜெர்மனிக்கு வரி வரியாகச் சாட்டைக் கோடுகள். நாஜி சின்னத்திற்கு நன்றாகவே கறுப்புச் சாயம். இத்தாலியின் பக்கம் திரும்பினால், பார்க்கவே பரிதாபமாக இருக்கிறது. முசோலினி விட்டுச் சென்ற கொஞ்ச நஞ்ச இட்லி மாவைப் பிசைந்து, ஒப்புக்கு ஒத்தடம் கொடுத்து இருக்கிறார்கள். 

ராகம் புரியவில்லை உள்ள சோகம் தெரியவில்லை

இந்தப் பக்கம் சீனாவைக் கேட்டால், சீனி வாங்கவே காசு இல்லையாம். இந்தியாவைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். விடுதலைப் போராட்டத்தில், ராகம் புரியவில்லை உள்ள சோகம் தெரியவில்லை என்று சன்னமாய் ஆபேரி ராகங்கள். அப்புறம் காந்தி தாத்தாவின் அதே பழைய கதிர் ஆடைப் போராட்டங்கள். 


ஆக, உலகின் அத்தனை நாடுகளுக்கும் உள் காயங்கள் வெளிக் காயங்கள். அதோடு உப்பு மிளகாய் சேர்த்த ரண வேதனைகள். அந்த வேதனைகளினால் வாய் ஓயாத புலம்பல்கள். இரண்டாம் உலகப் போரின் விளைவுகளை இப்படித்தான் என்னால் வர்ணிக்க முடிகிறது. 

இஸ்ரேலுக்கு எதிராக பாலஸ்தீனர்களின் போராட்டம்

சரி. இந்த மாதிரியான ஓர் இக்கட்டான நிலையில்தான், இஸ்ரேல் பாலஸ்தீனப் பிரச்சினையும் தலைகாட்டியது. இப்போதைய உலகில் தீர்க்கப் படாத பல பிரச்சினைகளில், இந்தப் பிரச்சினையும் ஒன்று. இஸ்ரேலியர்களுக்கும் பாலஸ்தீனர்களுக்கும் எப்படி இப்பேர்ப் பட்ட ஒரு தீராப் பகை வந்தது. அதை ஆராய்ந்து பார்ப்பதே இன்றைய இந்தக் கட்டுரை.


பாலஸ்தீன நாட்டில் ஜபாலியா என்கிற ஒரு நகரம். அங்கே இஸ்ரேலுக்கு எதிராக பாலஸ்தீனர்களின் போராட்டம். ஒரு பதாகையை ஏந்திக் கொண்டு, ஒரு நாற்பது வயது தாயார் ஊர்வலம் போகிறார். கூடவே அவருடைய இரு பிள்ளைகள். அவரிடம் ஓர் அமெரிக்கப் பத்திரிகையாளர் கேட்டார். 

’நீங்கள் சாலைகளில் நியாயம் கேட்டு போராட்டம் செய்கிறீர்கள். சரி. ஆனால், ஏன் உங்கள் சின்னஞ் சிறு பிள்ளைகளையும் உங்களோடு கூட்டிக் கொண்டு போகிறீர்கள். அவர்களுக்கு ஒன்றும் ஆகிவிடாதா?

எங்கள் பிள்ளைகள் எங்களோடு இறக்கட்டும்

அதற்கு அந்தத் தாயார் சொன்னார். ’வீட்டில் பிள்ளைகளை விட்டுச் சென்றால், திரும்பி வரும் போது அவர்கள் உயிரோடு இருப்பார்களா என்பது எங்களுக்கும் தெரியாது. உங்களுக்கும் தெரியாது. அதனால், மரணம் என்கிற ஒன்று வந்தால், அது எங்கள் கண் எதிரிலேயே நடந்து விட்டுப் போகட்டும். 


எங்கள் பிள்ளைகள் எங்களோடு இறக்கட்டும்’ என்று சொன்னார். ஆக, அந்த நிலையில் தான், இப்போது பாலஸ்தீனம் கண்ணீர் வடிக்கின்றது.

ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டிய கதை

ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டிய கதை, உங்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன். தெரியாதவர்கள் சிலர் இருப்பார்கள். பழமொழியைக் கொஞ்சம் விளக்கி விடுகிறேன். தமிழ்நாட்டில் மயிலாடுதுறையில் இருந்து சிதம்பரத்திற்குப் போகும் பாதையில் சீகாழி நகர் இருக்கிறது. சீர்காழி இல்லை. சீகாழி. 


அந்த நகரின் மையத்தில் கழுமலைக் கால்வாய் என்று ஒரு கால்வாய் ஓடுகிறது. கால்வாய் நீரின் ஓடும் வேகத்தில், ஒரு சிலை மேலே அடித்து வரப்பட்டது. அதைக் கரைக்கு கொண்டு வந்த சிலர், அருகில் இருந்த அம்மன் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்தனர். அந்தச் சிலை தான் பிடாரியம்மன் என்று அழைக்கப் படும் கழுமலையம்மன். பின்னாளில் பெயர் பெற்றது.

ஐரோப்பாவைக் கசக்கிப் பிழிந்தவர் ஹிட்லர்

புதிதாக வந்த பிடாரியம்மன், முன்பு இருந்த சப்தக் கன்னியர்களை ஒவ்வொருவராக வெளியேற்றியது. இது ஒரு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் உருவான ஒரு கிராமியக் கதை. அதை நினைவில் கொள்ளுங்கள். பின்னர், பிடாரியம்மன், அந்த ஆலயத்தை தன் வசப் படுத்திக் கொண்டது. 

அதனால், வெளியேறிய சப்தக் கன்னியர்கள் திரும்ப இந்த ஆலயத்திற்குள் வர முடியாமல் போனது. அந்தக் கன்னியர்கள் கொஞ்சம் தொலைவில் தனித் தனியே கோயில் கொண்டனர். ஆக, ஒண்ட வந்த இந்தப் பிடாரி ஊர் தெய்வங்களை எல்லாம் விரட்டி அடித்தது. 

ஒரு கோடியே பத்து இலட்சம் பேர் கொலை செய்யப் பட்டனர்

இப்படித் தான் அந்தக் கிராமியப் பழமொழியும் வந்தது. அதே மாதிரி தான் இப்போது பாலஸ்தீனத்திலும் நடந்து கொண்டு இருக்கிறது. 

இரண்டாம் உலகப் போர் நடந்து முடிந்த பிறகு, உலகில் பலப் பல மாற்றங்கள். ஐரோப்பாவைக் கசக்கிப் பிழிந்தவர் ஹிட்லர். அந்த மனிதர் உலகத்திலேயே இதுவரை நடக்காத ஒரு பெரிய இனப் படுகொலையையே அரங்கேற்றம் செய்தவர். 

1941-ஆம் ஆண்டில் இருந்து, 1945-ஆம் ஆண்டு வரையில் யூதர்கள், நாடோடிகள், ஸ்லேவியர்கள், கம்யூனிஸ்டுகள், ஓரினச் சேர்க்கையாளர்கள், மனநிலை பாதிக்கப் பட்டவர்கள் என்று ஒரு கோடியே பத்து இலட்சம் பேர் கொலை செய்யப் பட்டனர். 

இருபதாம் நூற்றாண்டின் மாபெரும் இனப் படுகொலை

இதில் 10 இலட்சம் குழந்தைகளையும் கணக்கில் சேர்க்க வேண்டும். ஐரோப்பாவில் இருந்த யூதர்களில் தொன்னூறு இலட்சம் பேர் ஒட்டு மொத்தமாகத் துடைத் தொழிக்கப் பட்டனர். இது மிகச் சரியான புள்ளி விவரங்கள். ஆக, அதுவே இருபதாம் நூற்றாண்டின் மாபெரும் இனப் படுகொலையாகும். 

உலக வரலாற்றில், ஜெங்கிஸ்கானுக்கு அடுத்த நிலையில் இருப்பது இந்த ஹிட்லர்தான். இடி அமின் என்கிற ஒரு நரவேட்டை நல்லையன் இருக்கிறார். அவரையும் மறந்துவிடக் கூடாது. ஹிட்லர் ஒரு சுத்த சைவம். ஆனால், அந்தச் சைவத்திற்குள் இப்பேர்ப்பட்ட ஓர் அரக்கத் தனமா? நம்ப முடியவில்லை. 

ஹிட்லரின் நெற்றிப் பொட்டைச் சீண்டிப் பார்த்த யூதர்கள்

காலம் காலமாய் யூத இனத்தின் மீது அவருக்கு இனம் காணாத வெறித் தனம். சின்ன வயதில் யூதர்களால் ஏற்பட்ட பாதிப்புகள். யூதர்களால் விரட்டி அடிக்கப்பட்ட வேதனைகள். யூதர்கள் பணத்தை ஐரோப்பிய ஏழைகளிடம் வட்டிக்கு விட்டு, அவர்களின் இரத்தத்தை உறிஞ்சிக் குடித்த வெறுப்புகள். தவிர, பார்க்கும் இடம் எல்லாம் யூதர்களே பணக்காரர்களாக இருந்த பொறாமை கலந்த வெறித் தனங்கள். 

1920-களில், மருத்துவர்கள், வழக்குரைஞர்கள் போன்ற தொழில்முறைத் துறைகள் அனைத்திலும், யூதர்களே கோலோச்சி முதலிடம் வகித்து வந்தனர். இவர்களை இப்படியே விட்டால், ஒட்டு மொத்த ஜெர்மனியையே விலை பேசி வாங்கி விடுவார்கள் என்கிற பயம் வேறு. அது ஹிட்லரின் நெற்றிப் பொட்டைச் சீண்டிப் பார்த்தது.

கல்வியிலும், அதிகாரத்திலும், சமயத்திலும்

அதையும் தாண்டிய நிலையில், கிறிஸ்துவர்களை யூதர்கள் தாழ்த்திய நிலையில் பார்த்தார்கள். பழகினார்கள். யூதர்கள் தங்களைத் தாங்களே நிறத்திலும், கல்வியிலும், அதிகாரத்திலும், சமயத்திலும் உயர்ந்தவர்கள் என்று தம்பட்டம் அடித்துக் கொண்டனர். 

இன்னும் ஒரு விஷயம். பொதுவாகவே, யூதர்களுக்கு ஆசைகள் அதிகம். பணத்தாசை தான். வஞ்சகம் பூசிய பேராசை என்றுகூட சொல்லலாம். எல்லாமே வேண்டும். ஆனால், தங்களுக்கு மட்டும்தான் வேண்டும் என்று நினைப்பவர்கள். அதைத் தானே இப்போதும் உலகம் முழுமையும் செய்து வருகிறார்கள்.

ஆரியர்களின் தலைவர் ஹிட்லருக்கு நிம்மதியான பெருமூச்சு

அடுத்து, ஹிட்லர் ஓர் ஆரியர். ஆக, ஆரியர்களுக்குக் கிடைக்க வேண்டிய எல்லா வாய்ப்புகளையும் யூதர்கள் தட்டிப் பறித்துக் கொண்டனர் என்பது ஜெர்மனியர்களின் அடக்க முடியாத ஆத்திரம். காலம் காலமாய்க் கடுகு பொரிந்தது. இரண்டாம் உலகப் போரில், பட்டாசு மாதிரி வெடித்தும் விட்டது. 

அதன் பின்னர் ஓர் இனம் முக்கால்வாசி அழித்து ஒழிக்கப் பட்டது தான், நரகத்தின் தலைவாசலாக அமைகின்றது. அதற்குப் பிறகுதான் ஆரியர்களின் தலைவர் ஹிட்லருக்கு நிம்மதியான பெருமூச்சு. ஓர் ஒட்டுமீசை நினைத்தது. கூட கட்டு மீசைகள் களையெடுப்பு செய்தன. அவ்வளவுதான். 

இரண்டாம் உலகப் போரில், பிரிட்டன் ரொம்பவுமே பாதிக்கப்பட்டுப் போனது. அந்தச் சமயத்தில் பிரிட்டனிடம், ஐம்பது அறுபது காலனிகள் (Colony) இருந்தன. அதாவது இந்தியா, மலாயா, பர்மா, கானா, கென்யா, மலாவி, உகாண்டா, பிஜி என்று பலப் பல  காலனி நாடுகள். எண்ணிப் பார்த்தால் 53 வருகிறது.

கணக்குத் தெரியாமல் மன்மத ராகம் பாடினால்

போருக்குப் பிறகு, பிரிட்டனைப் பார்த்தால் மனசிற்கு கஷ்டமாக இருக்கும். வெளியே பார்த்த மாதிரி வீட்டையும் பார்த்து இருக்க வேண்டுமே என்று கதை கதையாய்ச் சொல்லிக் கண்ணீர் விட்டது.

எல்லாக் காலனி நாடுகளையும், சரியாகக் கவனிக்க முடியாத நிலைமை. உண்மைதானே. ஒரு மனைவியாக இருந்தால், உருப்படியாகச் சோறு போட்டு அழகு பார்த்து இருக்கலாம். கணக்குத் தெரியாமல் மன்மத ராகம் பாடினால் எப்படிங்க. சொல்லாமல் கொள்ளாமல் காசி இராமேஸ்வரத்திற்கு டிக்கெட் எடுப்பது தான் உத்தமம். என்னைக் கேட்டால் அதுதான் சுத்தமான புருஷ இலட்சணம். 

10 ஆகஸ்ட் 2014

கணினியும் தமிழர்க் குழந்தைகளும்

திருமதி.விமலாதேவி, பெட்டாலிங் ஜெயா
கே: இப்போது உள்ள குழந்தைகள் கணினி மூலமாக தமிழில் நன்றாக 'டைப்' செய்கிறார்கள். பார்த்து இருக்கிறீர்களா?

ப: ஓ... நன்றாக. அண்மையில் ஒரு பத்து வயது சிறுமி தமிழில் தட்டச்சு செய்வதைப் பார்த்து ஆடிப் போய் விட்டேன். சிறுமியின் அப்பாதான் என்னை அழைத்தார். என் மகளை வந்து பாருங்கள், என் மகளை வந்து பாருங்கள் என்று சொல்லிக் கொண்டே இருப்பார்.


வேண்டுகோளத் தட்டிக் கழிக்க முடியவில்லை. அவருடைய வீட்டிற்குப் போனேன். மகளைக் கூப்பிட்டு என்னை அறிமுகம் செய்து வைத்தார். 

பிறகு கணினியைத் திறந்து விட்டு மகளைத் தட்டச்சு செய்யச் சொன்னார். நானும் அருகில் போய் நின்று, ‘எப்படிமா தமிழில் தட்டச்சு செய்கிறாய்’ என்று கேட்டேன்.

அதற்கு அவர், 'ரொம்ப ஈசி அங்கிள். பர்ஸ்ட் 'அல்ட்'டை தட்டணும். அப்புறம் பிரஸ் நம்பர் 2. தமிழ் வில் கம். இட் ஈஸி வெரி ஸி அங்கிள்' என்றார். 

எனக்கு உடல் எல்லாம் புல்லரித்துப் போய் விட்டது. இது போதும். காலா காலத்திற்கும், தமிழ் மொழிக்குச் சளிக்காய்ச்சல், மழைக் காய்ச்சல் எதுவும் வராது. மிளகு ரசம், நண்டு ரசம் எதையும் கேட்காது.

----------------------------------------------------------------------------------

ஆர்.ஜெயமோகன், சாலாக் திங்கி, சிப்பாங், சிலாங்கூர்.
கே: Folder என்பதைக் கோப்பு என்கிறோம். இதை மற்றவர் படிக்க முடியாதபடி அல்லது திறக்க முடியாதவாறு பாதுகாக்க முடியுமா?

ப: முடியும். நீங்கள் உருவாக்கிய ஒரு கோப்புக்கு Password எனும் சங்கேதச் சொல்லைக் கொடுத்து, அந்தக் கோப்பைப் பாதுகாக்க முடியும். அந்தக் கோப்பை மற்றவர்கள் திறந்து படிக்க முடியாது. கோப்பின் மீது வலது சொடுக்கு செய்து Properties என்பதைத் தேர்வு செய்யவும்.

அப்புறம் Sharing >> Make this Folder Private >> Apply >> Create Password >> Ok. அதன் பின்னர் அந்தக் கோப்பை மற்றவர் யாரும் பார்க்க முடியும். ஆனால், திறக்க முடியாது.

----------------------------------------------------------------------------------

ஆர்.சற்குணம், பாங்கி (SMS - குறும் செய்தி 15.05.2014)
கே: சார். கணினியைப் பற்றி நீங்கள் நிறைய தெரிந்து வைத்து இருக்கிறீர்கள். கண்டிப்பாக கணினித் துறையில் பட்டங்கள் வாங்கி இருக்க வேண்டுமே. உங்களை எப்படி மடக்கினேன் பார்த்தீர்களா.

ப: நீங்கள் சொல்கிற மாதிரி நிறைய பட்டங்களை வாங்கி வைத்து இருந்தேன். சமயங்களில் பேரப் பிள்ளைகள் வீட்டிற்கு வருவார்கள். சில பட்டங்களை எடுத்துப் பறக்க விட்டு விட்டார்கள்.

இன்னும் ஒன்று இரண்டு இருக்கிறது. பார்ப்போம். நன்றாகக் காற்று அடிக்கிற நேரத்தில், பேரப் பிள்ளைகளைக் கூப்பிட்டு, பறக்க விட்டுப் பார்க்கலாம் என்று இருக்கிறேன்.

புந்தோங் சந்தையில் புதுசாகப் பட்டங்கள் கிடைப்பது இல்லையாம். ஆக, நான் எப்படி மடக்கினேன் பார்த்தீர்களா. எல்லாம் சரி. மற்றவர்களுக்குப் பயன் படும் கேள்விகளாகக் கேளுங்களேன். நன்றாக இருக்கும் இல்லீங்களா.

----------------------------------------------------------------------------------

அர்ஜுனன் செல்வராஜா  arjunanselvaraja@ymail.com
கே: கணினியின் இயங்குதளத்தில் .exe என்றும் .cab என்றும் கோப்புகள் உள்ளன. இவற்றின் பயன் என்ன?

ப: .exe என்றால் executive கோப்பு என்பதின் சுருக்கம். இது ஒரு நிரலி. இதை இரண்டு முறை சொடுக்கு செய்தால், அந்த நிரலி விரிந்து இயங்கும். எல்லா நிரலிகளிலும் இந்தக் கோப்பு இயக்கம் இருக்கும். அடுத்து .cab என்றால் cabinet என்று பொருள். இது விண்டோஸ் இயங்கு தளத்தில் இருக்கும். இயங்கு தளம் என்றால் Operating System. 

இந்த .cab கோப்பு விண்டோஸ் இயங்குவதற்கு உதவி செய்யும். நீங்கள் ஏதாவது ஒரு நிரலியைக் கணினிக்குள் பதிப்பு செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்த நிரலியைப் பற்றி விண்டோஸ் இயங்கு தளம் படித்துத் தெரிந்து கொண்டு, அதை அப்படியே ஒரு கோப்பில் பதித்து வைக்கும்.

இந்த வகையான கோப்புகள் ரொம்பவும் முக்கியமானவை. அதை நீங்கள் திறக்க வேண்டாம். அதில் நாம் படித்துத் தெரிந்து கொள்ள எதுவும் இல்லை. படித்தாலும் உங்களுக்குப் புரியாது. முடிந்தால் அதைத் திறந்து பார்க்காமல் இருப்பதே நல்லது.

கணினி அழிவி

ஆர். முத்தழகன், கம்போங் சிமி, ஈப்போ, பேராக்

கே: ஒவ்வொரு கணினியிலும் Anti Virus போட்டிருக்க வேண்டுமா?

ப: வைரஸ் என்றால் கிருமி. கணினி வைரஸ் என்றால் கணினிக் கிருமி என்று பொருள். மனிதர்களைத் தாக்கும் கிருமி என்பது மனிதக் கிருமி. அதைப் போல கணினியைத் தாக்கும் கிருமிக்குப் பெயர் கணினிக் கிருமி. இருந்தாலும், கணினிக் கிருமி என்பது மனிதனைத் தாக்கும் மனிதக் கிருமி மாதிரி அல்ல. அப்படித்தான் பலரும் நினைக்கிறார்கள். அது தவறு. கணினிக் கிருமி என்பது வேறு. மனிதக் கிருமி என்பது வேறு.

மனிதர்களைத் தாக்கும் கிருமிக்கு உயிர் இருக்கிறது. ஆனால், கணினியைத் தாக்கும் கிருமிக்கு உயிர் இல்லை. கணினிக் கிருமி அல்லது கணினி வைரஸ் என்பது ஒரு வகையான சின்ன மென்பொருட்கள். அதாவது சின்ன ஒரு நிரலி. (Program) 

கணினி வைரஸ் கணினிக்குள் நுழைந்ததும் நாம் சேகரித்து வைத்து இருக்கும் செய்திகள், படங்கள், ஆவணங்கள், செயலிகள் போன்றவற்றைக் கொஞ்சம் கொஞ்சமாக நாசம் செய்துவிடும். அதனால் கணினிக் கிருமிக்கு தமிழில் கணினி அழிவி என்று பெயர் வைத்து இருக்கிறார்கள். ஆங்கிலத்தில் Anti Virus. ’ஏண்டி வைரஸ்’ என்று அழைப்பதை விட கணினி அழிவி என்று சுத்தமான தமிழில் அழைக்கலாமே.


அடுத்து, இந்தக் கணினி அழிவியைக் கணினிக்குள் வரவிடாமல் தடை செய்யும் ஒரு நிரலிக்குப் பெயர்தான் Anti Virus. தமிழில் நச்சுநிரல் தடுப்பி என்று அழைக்கலாம். அல்லது கணினிக் கிருமித் தடுப்பி என்றும் அழைக்கலாம். அந்தக் கணினி அழிவிகள் கணினிக்குள் போய் விட்டாலும் அவற்றை அழிக்கும் ஆற்றலும் அந்த நச்சுநிரல் தடுப்பிக்கு இருக்கிறது.
இந்த அழிவிகள் எப்படி உருவாக்கப் படுகின்றன என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். ஒரு கணினியைச் செயல் படுத்துவதற்கு செயலிகள் தேவை. அதாவது Programs.  இந்தச் செயலிகளை எழுதித் தயாரிக்கும் கணினி நிபுணர்களே, இந்தக் கணினி அழிவிகளையும் எழுதுகிறார்கள்.

தங்களுடைய திறமைகளைக் காட்ட வேண்டும் என்பதற்காக அப்படி செய்கிறார்கள். சிலர் விளையாட்டுக்காகவும் எழுதுவார்கள். அதனால் மற்றவர்களின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்கிறோம் என்பது அவர்களுக்கும் தெரியும். 

பக்கத்து வீட்டில் இருக்கும் பார்வதியைப் பார்க்க வேண்டும் என்பதற்காக, இந்த வீட்டு ஒல்லிப் பிச்சான், பட்டம் விடுவதை நீங்களும் பார்த்து இருக்கலாம். அந்த மாதிரிதான் இந்த கணினி விஷயத்திலும் நடக்கிறது.. மற்றவர்கள் புகழ வேண்டும் என்பதற்காக, கணினி அழிவியைத் தயாரித்து ஏற்றுமதி செய்கிறார்கள்.

எந்த நேரத்தில் அழிவிகள் உங்கள் கணினியைத் தாக்கும் என்று உங்களுக்கே தெரியாது. அதனால் உடனடியாக Anti Virus எனும் தடுப்பு நிரலியைக் கணினியில் பதித்துக் கொள்ளுங்கள். வெள்ளம் வருவதற்கு முன்பாக அணை போடுங்கள். AVG, Avast, Avira, Comodo, Kaspersky, Trend Micro, Panda, Eset, Ashampoo, Zone Alarm, BitDefender, McAfee போன்ற தடுப்பு நிரலிகள் இலவசமாகக் கிடைக்கின்றன. 

இந்தத் தடுப்பு நிரலிகளில் எது சிறந்தது என்று கேட்டால், எல்லாமே சிறந்தவைதான். முதலில் இலவசம் என்று சொல்வார்கள். அப்புறம் காசு கொடுத்து வாங்கச் சொல்லி நச்சரிப்பார்கள். அவற்றின் இணையத் தளங்களுக்குச் சென்று இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். என்னுடைய தேர்வு Avast. 

இந்தத் தடுப்பு நிரலிகளின் இணைய முகவரிகள் நீளமானவை. இங்கே எழுத முடியாது. அதனால், என்னுடைய வலைப்பதிவிற்குப் போய், அங்கு இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். எப்படி என்று தெரியும் தானே. ’கூகிள்’ தேடல் இயந்திரத்தில் ksmuthu என்று தட்டச்சு செய்தால் போதும். நிறைய தொடர்புகள் கிடைக்கும். ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்து என்னுடைய வலைப் பதிவிற்குச் செல்லுங்கள். அங்கே நேரடியான தொடர்புகள் உள்ளன.

06 ஆகஸ்ட் 2014

தாஜ் மகால் பயணம்

அண்மையில் (ஜூலை 2014) என் மனைவியும் அவருடைய தங்கையும் (என் மூத்த மைத்துனி) வட இந்தியா சுற்றுலா பயணம் போய் இருந்தார்கள். அப்போது பிடித்த சில படங்களைப் பதிவேற்றம் செய்கிறேன்.






இரண்டு வாரப் பயணத்திற்குப் பின் கொஞ்சம் இளைத்துப் போய் வீடு திரும்பினார்கள்.