09 அக்டோபர் 2015

ஒளிச்சேர்க்கை

ஒளிச்சேர்க்கை அல்லது ஒளித்தொகுப்பு (Photosynthesis) என்பது தாவரங்கள், பாசிகள் மற்றும் சிலவகை பாக்டீரியாக்கள் போன்றவற்றில் நிகழும் ஒரு உயிர்வேதியியல் நிகழ்வு ஆகும். 

 

தாவரங்களின் எல்லா இலைகளிலும் ஓர் உணவுத் தொழிற்சாலை உள்ளது. இலைகளின் செல்களில் உள்ள பச்சையம் (குளோரோபில்) சூரிய ஒளியில் இருந்து பெறும் சூரியனின் ஆற்றலை, காற்றில் உள்ள கரியமில வாயு மற்றும் வேரில் இருந்து உறிஞ்சப் பட்டு இலையை அடையும் நீரின் நுண்துளிகளையும் (மாலிக்யூல்கள்) பயன்படுத்தி, சர்க்கரைச் சத்தாக மாற்றுகிறது. இதைத் தான் ஒளிச்சேர்க்கை என்கிறோம். 

சர்க்கரை அல்லது மாவுச்சத்தின் உபரிப் பொருளாக ஆக்சிஜன் (பிராண வாயு) என மாற்றம் காண்கிறது. இந்த உயிர்க்காற்று இலைகளின் அடிப்பகுதியில் உள்ள ஸ்டோமேட்டா செல்கள் வழியாக வெளியேற்றப்படுகிறது.

கூடவே நீரும் ஆவியாக வெளியேறுகிறது. அதனால் தான் நாம் வெயில் நேரத்தில் மரத்தடியில் ஒதுங்கும்போது புத்துணர்வு பெறுகிறோம். குளிர்ச்சியும்
பெறுகிறோம். 



இதே ஸ்டோமேட்டா செல்கள்தான் ஒளிச்சேர்க்கை நிகழாத சமயங்களில் அல்லது சூரியஒளி இல்லாத பகல் பொழுதிலும், இரவு நேரங்களிலும் ஏனைய உயிரினங்களைப் போல காற்றைச் சுவாசிக்கின்றன.

அதாவது காற்றிலுள்ள பிராண வாயுவை உள்வாங்கி கரியமில வாயுவை வெளியேற்றுகின்றன. அதனால் இரவு நேரங்களில் மரத்தடியில் இளைப்பாறும் போது புத்துணர்வு தோன்றாது.

அதாவது ஒளிச்சேர்க்கையின் மூலம் இந்த உயிரினங்கள் ஒளியின் ஆற்றலைப் பயன்டுத்திக் கொள்கின்றன.

தாவரங்களில் உள்ள பச்சையம் என்ற நிறமி பெரும்பாலும் இதற்கு உதவுகிறது. ஒளிச்சேர்க்கை வழியாகத் தாவரங்களும், பாசிகளும் கரியமில காற்றைக் கிரகித்து உயிர்க் காற்றை (அல்லது ஆக்சிசனைக்) கழிவுப் பொருளாக வெளிவிடுகின்றன.

ஒளிச்சேர்க்கையின் வழி சூரியனில் இருந்து பற்றப் படும் (பிடிக்கப் படும்) ஆற்றல் மிக மிகப் பெரியது. ஓர் ஆண்டிற்கு ஏறத்தாழ 100 டெரா வாட் (100,000,000,000,000 வாட்) மின் ஆற்றல் பிடிக்கப் படுவதாகக் கணக்கிட்டு இருக்கின்றார்கள். உலக முழுவதும் மக்கள் ஆண்டுதோறும் பயன்படுத்தும் மொத்த மின் ஆற்றலின் அளவைப் போல் ஏழு மடங்கு கூடுதல் ஆகும்.

இந்த ஒளிச்சேர்க்கையால் மரங்கள், செடிகள், கொடிகள், பாசிகள், பாக்டீரியாக்கள் போன்றவை 100,000,000,000 டன் கரியமிலக் காற்றைக் கிரகித்து உயிரகப் பொருளாக (biomass), மற்ற உயிர்ப் பொருட்களுக்கு மாற்றிக் கொடுக்கின்றன. கையெடுத்துக் கும்பிட வேண்டும். 

 புளிய மரமும் பேயும்

கொஞ்சம்கூடக் காற்றின் அசைவு இல்லாத சமயங்களில், பெரிய அடர்ந்த புளியமரம் போன்ற மரத்தடியில் உறங்கினால் உங்களைப் பேய் அடித்துக் கொல்லும் என்று பாமர மக்கள் இன்றும் நம்புகிறார்கள்.

                               அறிவியல் அடிப்படையிலான விளக்கம்

காற்று அசைவு இல்லாவிட்டாலும் இலைகள் சுவாசிக்கும் போது வெளியேறும் கரியமிலவாயு காற்றைவிடச் சற்று கனமானது. நாம் சுவாசிக்கும் காற்றில் கரியமில வாயு 0.5 விழுக்காடுதான் உள்ளது. 

ஆனால், இரவு நேரங்களில், அதுவும் காற்றின் சலனம் இல்லாவிட்டால் மரத்தடியில் கரியமிலவாயுவின் அளவு அதிகரிக்கும். அதனால் நமக்கு மூச்சு அடைக்கும். ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்ந்து இருப்பவர்களின் உயிரை எடுப்பது இந்தப் பேய்தான்.

      ஒவ்வொரு மரத்திலும் பொறியியல் கட்டிடக்கலை தொழில்நுட்பம்
ஆஸ்திரேலியா நாட்டில் வளரும் சில தைல மரங்கள் (யூக்கலிப்டஸ்) 300 அடி உயரம் வளரக் கூடியவை. அமெரிக்க கண்டத்தில் வளரும் சேக்கோவியா மரங்கள் 400 அடிக்கும் கூடுதலாக வளர்கின்றன. அவற்றை நாம் பார்த்தது இல்லை.

பெரிய புளியமரம் அல்லது வேப்ப மரம் அல்லது ஆல மரங்கள் 60-70 அடி உயரம் வரை வளர்கின்றன. 20-30 அடி தடிமன் கொண்ட அடிமரம். அவற்றில் இருந்து பிரிந்து செல்லும் கிளைகள், கொப்புகள். அவற்றில் வளரும் இலைகள், காய்க்கும் காய்கள், பழங்கள். இவை எல்லாம் 60-79 டன்களுக்கு மேல் எடை கொண்டவை. காற்றுக்கும் வளைந்து கொடுத்து அதே சமயம் உறுதியாகவும் நிற்பவை.

 http://siragu.com/wp-content/uploads/2013/10/puvi-veppamayamaathal-7.jpg
 
இந்த ஒட்டுமொத்த எடையையும், பூமிக்கு அடியில் இருக்கும் வேர்கள், ஒரு கட்டிடத்தின் அஸ்திவாரம் போல் தாங்கிக் கொள்கின்றன. அடிமரத்தில் இருந்து பிரியும் கிளைகள், கோப்புகள் எல்லாமே ஒரு ஜியோமிதி கணித அடிப்படையில் பிரிந்து செல்கின்றன. அதாவது கட்டிடக்கலை வல்லுநர் திட்டமிடுவது போல மரமும் ஒரு திட்டத்துடன்தான் கிளைகளைப் பரப்புகிறது.

அதே சமயம் இலைகளுக்குப் போதுமான அளவில் சூரிய ஒளி கிடைப்பதையும் உறுதி செய்து கொள்கிறது. அப்போதுதான் நாம் முன்பே குறிப்பிட்ட ஒளிச்சேர்க்கை உணவு தயாரிப்பு எல்லாமே நிகழ முடியும்.

 

06 அக்டோபர் 2015

திருக்குறள்

தமிழில் உள்ள நூல்களிலேயே சிறந்த நூல் திருக்குறள். இது மனித வாழ்வின் முக்கிய அங்கங்களாகிய அறம் அல்லது தர்மம், பொருள், இன்பம் எனும் காமம் ஆகியவற்றைப் பற்றி விளக்கும் காவியம். இந்த நூலை இயற்றியவர் திருவள்ளுவர். அனைவருக்கும் தெரியும். இந்தத் திருக்குறளைப்பற்றிய சில அரிய தகவல்...
  • திருக்குறளில் ‘தமிழ்‘ எனும் சொல் பயன்படுத்தப் படவில்லை
  • திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு - 1812
  • திருக்குறளின் முதல் பெயர்- முப்பால்
  • திருக்குறளில் உள்ள அதிகாரங்கள் - 133
  • திருக்குறள் அறத்துப் பாலில் உள்ள குறட் பாக்கள் - 380
  • திருக்குறள் பொருட் பாலில் உள்ள குறட் பாக்கள் - 700
  • திருக்குறள் காமத்துப் பாலில் உள்ள குறட் பாக்கள் - 250
  • திருக்குறளில் உள்ள மொத்த குறட் பாக்கள் - 1330
  • திருக்குறள் அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடிகிறது.
  • ஒவ்வொரு குறளும் இரண்டு அடிகளால், ஏழு சீர்களை கொண்டது.
  • திருக்குறளில் உள்ள சொற்கள் -  14,000
  • திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள்- 42,194
  • திருக்குறளில் தமிழ் எழுத்துக்கள் 247-இல், 37 எழுத்துக்கள் மட்டும் இடம் பெறவில்லை
  • திருக்குறளில் இடம் பெறும் இரு மலர்கள் - அனிச்சம், குவளை
  • திருக்குறளில் இடம் பெறும் ஒரே பழம் - நெருஞ்சிப்பழம்
  • திருக்குறளில் இடம் பெறும் ஒரே விதை - குன்றிமணி
  • திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து - ஒள
  • திருக்குறளில் இரு முறை வரும் ஒரே அதிகாரம் - குறிப்பறிதல்
  • திருக்குறளில் இடம் பெற்ற இரண்டு மரங்கள் - பனை, மூங்கில்
  • திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட (1705) ஒரெழுத்து - னி
  • திருக்குறளில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துக்கள் - ளீ,ங
  • திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர் - தஞ்சை ஞானப்பிரகாசர்
  • திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர் - மணக்குடவர்
  • திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் - ஜி.யு.போப்
  • திருக்குறளை உரை ஆசிரியர்களுள் 10-வது உரையாசிரியர் - பரிமேலழகர்
  • திருக்குறளில் இடம் பெறாத ஒரே எண் - ஒன்பது.
  • திருக்குறளில் கோடி என்ற சொல் ஏழு இடங்களில் இடம் பெற்று உள்ளது.
  • எழுபது கோடி என்ற சொல் ஒரே ஒரு குறளில் இடம் பெற்று உள்ளது.
  • ஏழு என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில் ஆளப்பட்டு உள்ளது.
  • திருக்குறள் இதுவரை 80 மொழிகளில் வெளிவந்துள்ளது.
  • திருக்குறளை ஆங்கிலத்தில் 40 பேர் மொழிபெயர்த்து உள்ளனர்
  • நரிக்குறவர்கள் பேசும் வக்போலி மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளது.

பெண் கொசுக்கள்

பெண்  கொசுக்களின் அட்டகாசம் தாங்க முடியவில்லை
***********************************************************

• சராசரி மனிதனின் விழிகள் 200 டிகிரி வரை திரும்பும்.
• தர்பூசணி, தட்டும் போது “ஹாலோ” சத்தம் வந்தால், காயாக உள்ளது என அர்த்தம்.
• 8 மாதம் வரை குழந்தைகள் அழும் போது கண்ணீர் வராது.
• சகாரா பாலைவனத்தில் பனி மழை... 1979 பிப்ரவரியில் பெய்தது. 
• திராட்சையை மைக்ரோ ஓவனில் சூடு படுத்தினால், பழம் வெடிக்கும்.
• கண்கள் தான் பிறந்ததில் இருந்து வளராமல் அப்படியே இருக்கும் ஒரே மனித உறுப்பு.
• எல்லாருடைய நாக்கு ரேகைகள், கை ரேகைகளைப் போல வேறு விதமாக இருக்கும்.  
• வெங்காயம் நறுக்கும் போது, சூயிங்கம் சாப்பிட்டால் கண்ணீர் வராது.
• புது பேனாவை எழுதக் கொடுத்தால், 97% மக்கள் தங்கள் பெயரை எழுதுவார்கள்.
• வெங்காயம், கொழுப்பை குறைக்கும்.
• கை கடிகார விளம்பரத்தில் காட்டப் படும் 10:10 புன்னகையைக் குறிக்கும்.
• நீல நிறம், மக்களை அமைதி படச் செய்யும்.
• லியானார் டா வின்சி ஒரே நேரத்தில் இரு கைகளாலும் எழுதுவார்.
• மறு கையால் வரையவும் செய்வார்.
• குழந்தைகள் பிறக்கும் போது மூட்டுகள் இல்லாமல் தான் பிறக்கின்றனர்.
• 2 - 6 வயதில் தான் மூட்டுகள் வளர்கின்றன.
• ஆண் கொசுக்கள் கடிக்காது. பெண் கொசுக்கள் தான் கடிக்கும்.  இரத்தம் குடிக்கும். ஆண் கொசுக்கள் பூக்களில் இருந்து மகரந்தத்தைத் தான் குடிக்கும்
• கொசுக்களிலும் பெண்கள் அட்டகாசம் தாங்க முடியவில்லை... போங்க மனசுக்கு கஷ்டமா இருக்கு...

விடியல் காலையில்


கடலில் ஒரு கப்பல் கவிழ்ந்தது. பயணித்தவர்கள் அனைவரும் காணாமல் போய் விட்டனர். அதில் ஒருவன் ஆள் அரவமற்ற ஒரு தீவுக்குள் வந்து சேர்ந்தான்.

அந்த மனிதன். தாவரங்களைச் சாப்பிடான். தட்டுத் தடுமாறி ஒரு குடிசையைக் கட்டிக் கொண்டான்.

சிக்கி முக்கிக் கற்களை உரசி நெருப்பை உண்டாக்கினான். சமையல் செய்தான்.

கடவுளுக்குத் தன் மேல் கொஞ்சமாவது கருணை இருக்கிறதே என்று மகிழ்ச்சி அடைந்தான்.

ஒருநாள் காய் கனிகள் பறிக்கச் சென்றான். திரும்பி வந்த போது அவனுடைய குடிசை பற்றி எரிந்து கொண்டு இருந்தது.

கடவுளே! உனக்கு கருணையே இல்லையா... அல்லது நீயே இல்லையா என்று கதறினான்.

சிறிது நேரத்தில் அவனைத் தேடி ஒரு கப்பல் வந்தது. அவனுக்கு ஆச்சரியம்!

நான் இங்கே இருப்பது உங்களுக்கு எப்படித் தெரியும் என்று கேட்டான்.

தீவில் இருந்து புகை வந்தது. அதைப் பார்த்து யாரோ அவசர அபய அழைப்பு அனுப்புகிறார்கள் என்று புரிந்து கொண்டோம் என்றார் கப்பலின் தலைவர்.

ஆக, இதில் இருந்து நாம் தெரிந்து கொள்ளும் ஓர் உண்மை என்ன தெரியுமா...

சோதனைகள் என்பது பெரும்பாலும் நம்மைக் காப்பாற்றுவதற்காகவே வருகின்றன.

அப்படி நினைக்க வேண்டும். அப்படி நினைத்துப் போய்க் கொண்டே இருக்க வேண்டும்.

இன்று விடியல் காலையில் தூக்கம் வராமல் ஒரு சிலர் அலைமோதி இருக்கலாம்.

அவர்களுக்கும் இந்தக் கதை போய்ச் சேர்கின்றது. அந்த அவர்களில் என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

புத்த காயா



புத்த காயா என்பது புத்தர் ஞானம் பெற்ற இடத்தில் அமைந்து உள்ள ஒரு புத்த கோயில் ஆகும்.

இந்தியாவில் உள்ள பீகார் மாநிலத்தின் தலை நகரமான பாட்னாவில் இருந்து 96 கிமீ (60 மைல்) தொலைவில் அமைந்து உள்ளது.

கோயிலுக்கு அருகே அதன் மேற்குப் புறத்தில், புனித போதி மரம் உள்ளது. பாளி நூல்கள் இந்த இடத்தை போதி மண்டா என்று குறிப்பிடுகின்றன.

2002 ஆம் ஆண்டில், யுனெஸ்கோ இந்தக் கோயிலை உலக பாரம்பரியக் களம் என அறிவித்தது.

கி.மு 530 ஆம் ஆண்டில், ஒரு துறவியாக அலைந்து திரிந்த புத்தர், இந்தியாவில் உள்ள காயா என்னும் நகருக்கு அருகில் உள்ள பல்கு ஆற்றங் கரைக்கு வந்தார்.

அங்கே அவர் அரச மரம் ஒன்றின் கீழ் அமர்ந்து தியானம் செய்தார். மூன்று பகல்களும், மூன்று இரவுகளும் கழிந்த பின்னர், சித்தார்த்தர் (கௌதம புத்தர்) ஞானம் பெற்றார்.

இவ்வாறு சித்தார்த்தர் ஞானம் பெற்ற இடத்தைக் குறிப்பதற்காக மகாபோதி கோயில் (புத்த காயா) அமைக்கப் பட்டது.

புத்தர் ஞானம் பெற்ற 250 ஆண்டுகளுக்குப் பின்னர், கி.மு 250 ஆம் ஆண்டில், பேரரசர் அசோகன் புத்த காயாவுக்குச் சென்றார். அங்கே ஒரு துறவி மடத்தையும் அமைத்தார்.

குப்தர் காலத்தைச் சேர்ந்த இந்தக் கோயில், செங்கற்களால் கட்டப்பட்டது. மிகப் பழமையான இந்தியக் கோயில்களில் இதுவும் ஒன்றாகும்.

16 ஆம் நூற்றாண்டில் புத்த காயாவுக்கு அருகில், சைவ சமயத்தைச் சேர்ந்த சங்கராச்சாரியார் மடமும் நிறுவப் பட்டது.

இந்தியாவுக்குச் சென்றால் இந்தப் புனிதமான இடத்திற்குச் சென்று வாருங்கள். மனம் அமைதி பெறும். கவலைகள் தீரும்.

2006ஆம் ஆண்டு அடியேன் இந்தக் கோயிலுக்குச் சென்று வழிபட்டு வந்து இருக்கிறேன்.