24 மே 2017

ஆறிலும் சாவு நூறிலும் சாவு

இந்தப் பழமொழி அனைவருக்கும் தெரியும். ஆறிலும் சாவு வரும். நூறிலும் சாவு வரும் என்று அனைவரும் அடிக்கடி சொல்லிக் கொள்வோம். இந்தப் பழமொழியை இரு வகையாகப் பிரித்து பார்க்கலாம். ஆறு (6) என்பது ஓர் எண்.

அதே போல நூறு (100) என்பதும் ஓர் எண். அந்த வகையில் இறப்பு என்பது ஆறு வயதிலும் வரலாம் நூறு வயதிலும் வரலாம் என்று பொருள் படுகிறது.


அடுத்து இந்த ஆறு என்பதில் இன்னொரு நெருடல். நதி அல்லது அருவி என்பதையும் ஆறு என்று சொல்கிறோம். அப்படி என்றால் ஆற்றில்கூட இறப்பு வரலாம் என்று பொருள் படுகிறது. சரி தானே. உண்மையான பொருள் அது அல்ல.

இந்தப் பழமொழி மகாபாரதத்திற்குப் போகிறது. குருசேத்திரப் போர். கேள்விப் பட்டு இருப்பீர்கள். மகாபாரதத்தில் நடக்கும் ஒரு முக்கியமான நிகழ்ச்சி.

அத்தினாபுரம் அரியணைக்காகக் கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் இடையே குருச்சேத்திரம் என்கிற இடத்தில் நடைபெற்ற போர். கௌரவர்களும் பாண்டவர்களும் பங்காளிகள்.

18 நாட்கள் நடைபெற்ற இந்தப் போரின் இறுதியில் பாண்டவர்கள் வெற்றி பெற்றார்கள். சரி. அது மகாபாரதம். அது தொடர்பான விளக்கம்.


குருசேத்திரப் போருக்கு முன்னதாகக் குந்தி தேவி தன்னுடைய மூத்த மகன் கர்ணனைச் சந்திக்கிறாள். பாண்டவர்கள் ஐவருடன் சேர்ந்து கொண்டு கௌரவர்களை எதிர்த்துப் போர் செய்யச் சொல்கிறாள்.

அப்போது கர்ணன் கூறுகிறான்: நான் பாண்டவர் ஐவருடன் சேர்ந்து ஆறாவது ஆளாகப் போரிட்டாலும் சரி; கௌரவர்கள் நூறு பேருடன் சேர்ந்து நூற்று ஒருவராகப் போர் செய்தாலும் சரி; இறப்பது உறுதி. அது எனக்குத் தெரியும் .

ஆகவே ஆறிலும் சாவு அல்லது நூறிலும் சாவு. அபப்டி இருக்கும் போது எப்படி செத்தால் என்ன? செய்நன்றி கடனைக் கழிக்க என்னை வளர்த்து ஆளாக்கிய துரியோதனனிடமே சேர்ந்து உயிரை விடுகிறேன்' என்கிறான்.

இங்கே கர்ணன் கூறிய *ஆறிலும் சாவு நூறிலும் சாவு* எனும் முதுமொழிதான் பின்னர் காலத்தில் பழமொழியாக மாறியது.

குருசேத்திரப் போரைப் பற்றி வரலாற்று அறிஞர்கள் பற்பல கருத்துகளைச் சொல்கின்றனர். துவாரகை என்பது பழங்காலத்து நகர். கடலில் மூழ்கிய நகரம்.

அந்த நகரை ஆய்வு செய்த தொல்லியல் அறிஞர்கள், குருசேத்திரப் போர் கி.மு. 1500-ஆம் ஆண்டுகளில் நடைபெற்று இருக்கலாம் என்று  சொல்கின்றனர். போர் நடந்த இடம் இப்போது இந்தியா, ஹரியானா மாநிலத்தில் உள்ளது.

-மலாக்கா முத்துக்கிருஷ்ணன்
09.06.2020





கல் தோன்றா மன் தோன்றாக் காலத்தே

கல் தோன்றா மன் தோன்றாக் காலத்தே
வாளோடு முன் தோன்றிய மூத்த குடி


விளக்கம்: (கல்) கல்வி அறிவு தோன்றாத (மன்) மன்னராட்சி ஏற்படுவதற்கு முன்பாகவே வீரத்தோடு தோன்றிய முதல் இனம் தமிழினம். அதுவே இன்று கல் தோன்றா



மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன் தோன்றிய மூத்தகுடி என்று சொல்லப் படுகிறது.

கல்லும் மண்ணும் தோன்றாத காலத்திலேயே அதாவது பூமி உருவாவதற்கு முன்பே தமிழினம் உருவாகி விட்டதாக அர்த்தப் படுத்தப் படுகின்றது. தவறு.

அடியாத மாடு படியாது

விளக்கம்: மாட்டின் கால்களுக்கு லாடம் அடித்தால் தான் அதனால் உழுதல், இழுத்தல் போன்ற கடுமையான வேலைகளைச் செய்ய முடியும். 
 


அதற்காக அதைப் போட்டு அடிக்க வேண்டும் என்பது பொருள். அல்ல. அடி என்றதும் எல்லோரும் ரோத்தான் கம்பு குச்சிகளால் அடிப்பதையே கற்பனை செய்து கொள்கிறார்கள். 

தவறாக விமர்சனம் செய்கிறார்கள்.

23 மே 2017

ஜப்பானிய இளவரசி மாகோ

ஜப்பானின் மன்னர் அகிஹிட்டோவின் மூத்த பேத்தி இளவரசி மாகோ. இவருக்கு வயது  25. இவர் கல்லூரியில் படிக்கும் போது தன்னுடன் படித்தவருடன் காதல். 


அவரையே திருமணம் செய்ய முடிவு செய்தார். இதன் காரணமாக அவர் தன் இளவரசி பட்டத்தைத் தியாகம் செய்ய வேண்டி இருக்கிறது.

இளவரசியின் மாகோவின் காதலன் பெயர் கெய் குமுரோ. தோக்கியோவில் உள்ள கல்லூரியில் படிக்கும் போதே இருவரும் காதலித்து வந்துள்ளனர்.


இதைப் பற்றி இளவரசியார் தன் பெற்றோரிடம் தெரிவித்தார். அரச குடும்பத்தினரும் அவரின் காதலுக்குச் சம்மதம் தெரிவித்து விட்டனர்.

ஆனாலும் ஜப்பானிய அரசக் குடும்ப வழக்கப்படி அரச குடும்பத்துப் பெண்கள் அரச குடும்பத்தினரைத் தான் திருமணம் செய்ய வேண்டும். சாதாரண நபரைத் திருமணம் செய்ய முடியாது. அப்படிச் செய்தால் அரச பட்டத்தைத் துறக்க வேண்டும். மீறினால் அவரின் அரசப் பட்டம் பறிக்கப்படும்.


அதனால் இளவரசி மாகோ தன் காதலுக்காகத் தன் இளவரசி பட்டத்தைத் துறக்க முடிவு செய்துள்ளார். தன் காதலுக்காக தன் இளவரசி அரசப் பட்டத்தையே துறக்கிறார் என்றால் அவரின் காதலை என்னவென்று சொல்வது.

தற்போது ஜப்பானின் முக்கியச் செய்தி இந்த இளவரசியின் காதல் செய்திதான். வாழ்க அந்த இளவரசியாரின் காதல்.

22 மே 2017

ரஜினி முதல்வரானால்

'நான் அரசியலுக்கு வருவது ஆண்டவன் கையில் தான் இருக்கு' என அதே பல நூற்றாண்டுக் காலத்து டயலாக்கை மீண்டும் சொல்லிப் பரபரப்பாக்கி உள்ளார் ரஜினி. 



தலைவா வா; தலைமை ஏற்க வா, உங்களைத் தான் நம்புது இந்த பூமி; எங்களுக்கு இனி நல்ல வழி காமி' என இவ்வளவு நாள் கை காசு போட்டு போஸ்டர் அடித்து ஆடு, மாடுகளைச் சந்தோஷப்படுத்திக் கொண்டிருந்த அவரது ரசிகர்கள், இப்போதுதான் மகிழ்ச்சியை அனுபவித்திருக்கிறார்கள்.
 
எத்தனை நாளைக்கோ...? சூட்டோடு சூடாக சூப்பர் ஸ்டார் அரசியலில் குதித்து முதலமைச்சரும் ஆகிவிட்டால் என்னென்ன திட்டங்கள் கொண்டு வருவார் என கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டோம்...

*ஒரு பவுன் தங்ககாசு திட்டம்*

அவருடைய ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்க காசு கொடுத்தது நாம் தானே. அதனால், அந்த ஒரு பவுனை மறுபடியும் அவரவர் அக்கவுன்ட்டுக்கே போட்டுவிடும் திட்டத்துக்குப் பெயர் தான் `ஒரு பவுன் தங்கக்காசு திட்டம்'. இது அந்த 15 லட்ச ரூபாய் மாதிரி எப்ப வரும்? எப்படி வரும்?னு பயப்பட தேவையில்லை. வரவேண்டிய நேரத்தில் கரெக்டா வந்துடும்.

*அண்டா சட்டி' அருணாச்சலம் திட்டம்*

'அருணாச்சலம்' படத்தின்  `அதான்டா இதான்டா அருணாச்சலம் நாந்தான்டா...' பாடலில் அண்டாவை கவிழ்த்தி கறுப்பு பெயின்ட் அடித்திருப்பார்கள் அல்லவா. அது போன்ற ஒரு பல்வகைப் பயன் அண்டா ஒவ்வொரு குடும்பத்துக்கும் வழங்கப்படும்.

*மீசை வெச்ச குழந்தையப்பா திட்டம்*

பெற்றோர்கள் பேச்சைக் கேட்டு பொறியியல் படித்து, வேலை கிடைக்காமல் அதே பெற்றோர்களிடம் தண்டச் சோறு என திட்டு வாங்கி கொண்டிருக்கும் வேலையில்லாப் பட்டதாரிகளுக்கான திட்டம் இது. அத்தகைய வி.ஐ.பி-க்களின் சோகமான சூழலைக் கருத்தில் கொண்டு இந்த அரசு அவர்களை மீசை வெச்ச குழந்தைகளாகவே கணக்கில் எடுத்துக் கொள்ளும். இந்தச் சமூகத்தில் கைக்குழந்தைகள் அனுபவிக்கும் அத்தனைச் சலுகைகளையும் இவர்கள் அனுபவிக்கவும் அனுமதி அளிக்கப்படும்.

*அலுவலக அறைத் திட்டம்*

காவல் நிலையம் இல்லாத ஊர்களில் எல்லாம் குட்டிக் குட்டியாக 'ஆபிஸ் அறைகள் அமைக்கப்படும். ஊருக்குள் அடாவடி செய்யும் ரவுடிகள் அந்த அறைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டு, பிரி பிரி என பிரித்து அனுப்பப் படுவார்கள். இதற்காக, `பாட்ஷா' படத்தில் வரும் பஞ்சாப் சிங்கைப் போல் பஞ்சாபில் இருந்து பயில்வான்கள் இறக்குமதி செய்யப் படுவார்கள்.

*தனி வழி திட்டம்*

தமிழகத்துக்குள் புதுச்சாலைகள் பல‌ ஏற்படுத்தப்படும். மதுரையில் இருந்து சென்னைச் செல்வதற்குத் திண்டுக்கல், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர்  வழியாகச் சாலைகள் அமைக்கப்படும். தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலி செல்ல ராமநாதபுரம், விருதுநகர் வழியாகச் சாலைகள் அமைக்கப்படும்.

நன்றி: ஆனந்த விகடன்